கானநாதனும் அவனது அமைச்சர்களும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள் நாடகம்
கதைப்பதிவு: July 22, 2026
பார்வையிட்டோர்: 88 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1956ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாடக பாத்திரங்கள்:
கானநாதன் – ஓர் அரசன்
ஆஸ்வீதன், அபேரன் – அவனது அமைச்சர்கள் 

முதற் காட்சி

இடம் – தென் மண்டபத்தில் கடற் கரையோரம். அலை வீசிக் கொண்டிருக்கிறது. 

கா. மந்திரிகளே! எல்லா அரசர்களைவிட நான்தான் பெரிய வன் என்று என்னிடம் நீங்கள் பன்முறை கூறியது உண்மைதானா? 

அ. உண்மைதான் அரசே! எல்லா அரசர்களைவிட தாம் தான் மிகவும் பெரியவர். 

ஆ. நாங்கள் எல்லாம் உமது அடிமைகள் – உங்கள் பாததூளியைச் சிரசால் வகிக்கிறோம். 

அ. நாங்கள் மாத்திரமல்ல, அப்பு தேயு வாயு முதலிய ஐம்பெரும் பூதங்களும் உமது அடிமைகளே, பிருத்வியாகிய உலகமெல்லாம் உமக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது; வருண பகவானான சமுத்திரம் உமது ஆக்கினைக் குட்பட்டிருக்கிறது. 

கா. ஆரவாரத்துடன் தன் அலைகளை மோதுகின்ற இந்த சமுத்திரமும் என் ஆக்கினைக் குட்பட்டிருக்கிறதா? இந்த பயங்கரமான அப்பு நான் கட்டளையிட்டால் அமைதி யுடனிருக்குமா? 

அ. ஆம், கடலும் உம்முடையதே! உம்முடைய கப்பல்களை யெல்லாம் தன் மார்பகத்தில் தாங்கும்படியாக சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது. உமது பகைவர்களைத் தன் ஆரவாரத்தால் பயப்படுத்துகிறது. ஆயினும் உம்மைத் தன் அரசனாக மதிக்கிறது. 

கா. அலை வருகிறதா இங்கு? 

ஆ. ஆம் அரசே! அதோ எழும்புகிறது பாருங்கள். 

கா. ஆனால் ஒரு நாற்காலியை இங்கு கொண்டுவாருங்கள் – இவ்விடத்தில் போடுங்கள் அதை. 

அ. இங்கு – அலை படுகிற இடத்திலா – எம் இறையே? 

கா. ஆம்,சரியாக இங்குதான் வையுங்கள். 

(அவர்கள் அப்படியே செய்கின்றனர்.) 

ஆ. [ஒரு புறமாக] இவர் என்ன செய்யப் போகிறாரோ தெரியவில்லை! 

அ. [ஒரு புறமாக] நாம் சொல்வதை நம்பும்படியாக அவ்வளவு முட்டாள் அல்ல இவர்! 

கா. ஓ! சக்தி வாய்ந்த சாகரமே! நீ என்னுடைய பிரஜை என்னுடைய மந்திரிகள் அவ்வாறு கூறுகின்றனர் ஆகவே என் ஆக்கினைக் குட்பட்டுக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டியது உன் கடமை. ஆகையால் இதோ என் செங்கோலை உயர்த்தி நீ பின்னிட்டுப் போகும்படியாக உனக்குக் கட்டளை இடுகிறேன். உயர்ந்து எழும் அலைகளே! பின் வாங்குங்கள்! உங்கள் அரசனும் எஜமானனுமான என் பாதங்களை, உமது கண்ணீரால் நனைக்காதீர்கள்! 

ஆ. [ஒரு புறமாக] அரசராகிய இவரது ஆக்கினையைக் கொஞ்சமும் அது சட்டை செய்யுமென்று நான் நினைக்கவில்லை.

அ. [ஒரு புறமாக] அதோ பார் ஒரு பெரிய அலை வருகிறது! 

ஆ. [ஒரு புறமாக] இந்த அலை அரசரது நாற்காலி யருகில் வந்துவிடும் – நாம் இங்கிருத்தல் மூடத்தனமாகும், நமது உடம்பெல்லாம் உப்பு நீரால் நனைந்துவிடும். 

(அலையானது அவர்கள் மீது மோதுகிறது.) 

கா. உம்! – ஏனையா மந்திரிகளே! ஆர்கலியானது என் ஆக்கினைப்படி அடங்கி நடக்கிறதா? அது என் பிரஜையானால் – மிகுந்த ராஜத்துரோகியான பிரஜையா யிருக்கிறது! இதோ பாருங்கள் – எப்படி உயர எழும்பி. கோபத்துடன் தன் நுரையையும் உப்பு ஜலத்தையும் என்மீது வீசுகிறது, அரசனென்றும் பாராமல் அவமரியாதையுடன் – முகமன் கூறும் மடையர்களே! உங்கள் பொய்யான வார்த்தைகளால் நான் மோசம் போவேன் என்று எண்ணினீர்களா? உங்கள் முகஸ்துதியை முற்றிலும் நம்பினேன் என்று மதித்தீர்களா? இப்பொழுதாவது தெரிந்து கொள்ளுங்கள். இந்த சாகரமானது ஒப்புயர்வற்ற ஒருவருக்குத்தான் கீழ்ப்படிந்து நடக்கும். அவர் தான் திரிலோகங்களுக்கும் நாதன் – அரசர்களுக் கெல்லாம் அரசன்! சக்ரவர்த்திகளுக் கெல்லாம் சக்கரவர்த்தி! அவர் ஒருவர் தான் சமுத்திரத்தைப் பார்த்து ‘இவ்வளவு தூரம்தான் நீ போகக்கூடும் – இதற்குமேல் போகக் கூடாது, கர்வம் பிடித்த உனது அலைகள் இதைக் கடந்து செல்லலாகாது!’ என்று கூற சக்தியுடையவர். அரசன் என்பவன் ஒரு மனிதனே! அற்ப மனிதன்? புழுவிற்குச் சமானம்! ஆகவே அற்ப புழுவொன்று, அகிலத்தையும் சிருஷ்டித்து அடக்கி யாளும், அரனார் சக்தியை தான் உடையதாக எண்ணி, ஐம்பெரும் பூதங்கள் தன் ஆக்கினைக்கு உட்படும் என்று நினைக்கலாமா? – இதோ இந்த கிரீடத்தை எடுத்துக் கொண்டு போங்கள் – இதை நான் அணிய மாட்டேன். உலகிலுள்ள அரசர்களெல்லாம், இந்த என் அனுபவத்தைக் கொண்டு கர்வமின்றி கீழ்ப்படிந்திருப்பார்களாக! நீங்கள் பட்ட அவமானத்தினால் மந்திரிகளெல்லாம் உண்மையை அறிவார்களாக. 

காட்சி முடிகிறது. 

நாடகம் முற்றிற்று.

– ஒன்பது குட்டி நாடகங்கள், முதற்பதிப்பு: 1956, நாடகப் பேராசிரியர் ப.சம்பந்த முதலியார், பி.ஏ. பி. எல் அவர்களால் இயற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *