காதல் வேலை!
கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: November 20, 2025
பார்வையிட்டோர்: 103

தன்னுடன் ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் முகி, வேலைக்கு வந்த முதல் நாளிலிருந்தே தன்னுடன் நெருக்கம் காட்டுவதாலும், தன்னைப்பார்த்து முகம் மலர அடிக்கடி புன்னகைத்ததாலும் இனம் புரியாத மகிழ்ச்சியில் திளைத்தான் நிகன்.
‘இப்படியொரு பெண்ணுக்காகத்தானே இத்தனை காலம் காத்திருந்தேன். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இவளை நான் பிரிய மாட்டேன்’ என மனதில் எண்ணியதால் வேலையில் கவனம் செலுத்த இயலாமல் தவித்தான்.
“கேண்டீன் போயி சாப்பிடனம். காலைல வீட்ல சாப்பிடாம வந்துட்டேன். என் கூட வர முடியுமா?” இனிமையான குரலில் தனிமையாக பேச அழைத்தவளை ஆச்சர்யமாக ஏறிட்டவன், “தாராளமா போகலாம்” என்றான்.
உடனே தனது லேப்டாப்பை அணைத்து மூடி வைத்ததும் அவள் பின்னே எழுந்து சென்றான்.
தனக்காக பொங்கல், வடை ஆர்டர் செய்தவள் “உங்களுக்கு…?” என்றாள்.
“எனக்கு ஃகாபி போதும்” என்றவன் அவளையே விழுங்கி விடுவதுபோல் பார்த்தபடி ஃகாபியை சுவைத்ததால் வெட்கப்படுபவள் போல் தலை குனிந்தாள்.
‘பொண்ணுங்களையே இது வரைக்கும் பார்க்காத மாதிரி பார்க்கிறானே….? சரியான வெகுளி. நம் காதல் வலையில் தலை குப்புற கவிழ்ந்து விட்டான்’ என தான் நினைத்தது நிறைவேறிய மகிழ்ச்சியில் பூரித்து மகிழ்ந்தாள்.
“நிறைய பெண்களை பார்த்திருக்கேன். உங்களை மாதிரி நிறைந்த அழகான பெண்ணை பார்த்ததில்லை” என்றான்.
“அவ்வளவு அழகாவா இருக்கேன்…?” கேட்டவளது கால்கள் அவளையறியாமல் நிலத்தில் கோலம் போட்டன.
கொசு வந்து அவளைக்கடித்து ரத்தம் குடித்து விட்டு பறந்த பின்பே கடித்ததின் வலி தெரிந்ததால் “ஹா…” என சொல்லிக்கொண்டே கடித்த இடத்தில் தடித்ததால் தேய்த்தாள்.
“கொசு, கடிக்கும் போது நமக்கு வலிக்காததால் கடித்து விட்டு எளிதாக தப்பிச்சென்று விடுகிறது. எறும்பு கடிக்கும் போதே வலி. அதனால் நம்மால் நசுக்கப்பட்டு சாகிறது. கொசு, தான் உயிர் வாழ ரத்தம் குடிக்கிறது சரி. எறும்பு எதற்காகக்கடிக்கிறது?” கேட்டான்.
“ஒரு வேளை நம்மை எதிரியென புரிந்திருக்கலாம். பாதுகாப்பு கருதி கடிக்கலாம். கொசு தேடி வந்து ரத்தம் குடிக்கிறது. எறும்பு தனது இடத்துக்கு தேடி வருவேரையே கடிக்கிறது. தேடிப்போய் ஆதாயத்துக்காக யாரையும் கடிப்பதில்லை…. கொசு பெண்கள் மாதிரி….” என்றவளை ஆச்சர்யமாக ஏறிட்டான்.
“அப்படின்னா….?”
“காதலிக்கிற பெண்கள் பக்கத்திலிருக்கும் போது சந்தோசமாதான் இருக்கும். விலகி போனப்புறம்தான் வலிக்கும் அது போல் தான்” என்று சொன்னாள் கண் சிமிட்டியபடி. அவளது கண் சிமிட்டலில் ஒரு நொடி கரைந்தே போனான்.
‘முகி அழகி மட்டுமில்லை அறிவாளியும் கூட’ என்பதைப்புரிந்து வியந்தான்.
“நீங்க மிகப்பெரிய அறிவாளி. அழகு சிறப்பு. அறிவு அதை விட சிறப்பு. அழகோடு அறிவு சேர்ந்திருப்பது சிறப்பிலும் சிறப்பு” கை கோர்த்தபடி பேசிக்கொண்டே அலுவலகத்துக்குள் நுழைந்தனர்.
கேண்டீனில் முகியுடன் இருந்த போது நேரம் போனதே தெரியவில்லை. அவளது ஸ்பரிசம் படும்போது உலகே வசமானதாக உணர்ந்தான். ‘இதுதான் சிறந்த காதல். தெய்வீகக்காதல்’ என தனக்குத்தானே நினைத்தபடி வேலையில் மூழ்கினான்.
நாட்கள் ஓடிக்கொண்டிருந்ததே தவிர தனது மனதிலிருக்கும் காதலை அவளிடம் வெளிப்படையாகச்சொல்ல முடியாமல் தவித்தான்.
நிகன் முகியை காதலிக்கும் நிலைக்கு அவளது நடவடிக்கை இருந்தது. அவளாக காதலை சொல்லாமல், அவனாக சொல்லுமாறு அவனை முகஸ்துதியாலேயே வளைத்துப்போட்டிருந்தாள்.
‘அவளுடனான பழக்கம் நட்பாகவே முடிந்து விடுமோ?’ எனும் பயம் மனதில் தோன்ற இன்று தைரியமாக காதலைச்சொல்லி விட வேண்டும் எனும் முடிவுடன் அலுவலகம் சென்றான் நிகன்.
முகி அலுவலகத்தில் அவளது இருக்கையில் சோகமாக அமர்ந்திருந்தாள். கண்களில் கண்ணீர் துளி விழத்தயாராக இருந்தது. நிகனைக்கண்டதும் கண்ணீர் தெறித்து விழுந்தது.
“உங்க கூட தனியா பேசனம். வெளில வர முடியுமா? ” என்று அவள் கேட்டவுடன் எப்போதும் போல் இப்போதும் மறுக்காமல் தலையாட்டினான்.
‘உன்னுடன் தனியாக பேசத்தானே தயாராகி வந்தேன்’ என மனதில் நினைத்தபடி அவளுடன் சென்றான். மரத்தடிக்கு சென்றவள் அவனை நேசமாகப்பார்த்தாள். ஒரு பெண்ணின் கண்களை நேருக்கு நேர் இதுவரை நிகன் தைரியமாகப்பார்த்ததில்லை.
இப்போது முற்றிலுமாக அவளிடம் சரணாகதியடைந்து விட்டான். அது முற்றிலும் அவளை நம்ப வைத்திருந்தது. அவள் பேசுவதே வேத வாக்கானது. அது வேசமாகத்தெரியாததால் நேசமாக “சொல்லு முகி. என்ன பிரச்சினை? ஏன் சோகமா இருக்கே? எதற்காக அழறே?” என்றான்.
கேட்டவனின் கைகளை அவள் இறுக்கமாகப்பற்றினாள். முதலாக ஒரு பெண்ணின் கை தனது கையை இறுக்கமாக பற்றியது இது முதல் முறை என்பதால் நிகனது உடல் நடுங்கியது.
“உடனே பைவ் லேக்ஸ் தேவைப்படுது. என்ன பண்ணறது? யாரைக்கேக்கிறதுனன்னு தெரியலை. என்னோட சிஸ்டரோட ஹஸ்பெண்ட ஒரு பிரச்சினைல வேலைல இருந்து சஸ்பெண்ட் பண்ணிட்டாங்களாம். பணம் கொடுத்தா தான் திரும்ப வேலை கிடைக்கும். பணம் கொடுக்கலேன்னா செத்துப்போயிருவேன்னு நேத்தைக்கு இருந்து அப்பாவ என்னோட அக்கா மிரட்டிட்டு இருக்கா. அப்பாவே ஒரு ஹார்ட் பேசண்ட். போன மாசந்தான் ஹார்ட் சர்ஜரி பண்ணியிருக்கு” கண்ணீர் கரை புரண்டு ஓடியது.
“சிறிதும் யோசிக்காமல் இன்னைக்கு சாயங்காலம் நீ சொல்லற இடத்துக்கு கொண்டு வந்து கொடுக்கறேன். நீ கவலைப்படாம வேலையப்பாரு” என நிகன் சொன்ன அடுத்த நொடி அவனை இழுத்தணைத்து முத்தமழை பொழிந்தாள் முகி.
அன்று மாலை வேளை மெரீனா கடற்கரையில் சந்திப்பதாக சொன்ன இடத்துக்கு பணத்துடன் வந்திருந்தான் நிகன். அவனைப்பார்த்ததும் அவளது முகம் ரோஜாமலர் போல மலர்ந்தது. பணத்தை அவனிடமிருந்து பிடுங்குவது போல் பதட்டத்துடன் வாங்கியவள், ஒரு முத்தத்தை அவனது கன்னத்தில் பதித்தவாறு அருகில் வந்து நின்ற பைக்கில் லாவகமாக ஏறி ஓட்டிவந்த வாலிபனை இறுக அணைத்தபடி முகி அமர்ந்ததும் கண்களிலிருந்து ஒரு நொடியில் மாயமாய் மறைந்தனர்.
மறு நாள் அலுவலகத்துக்கு சென்ற போது முகியை காணாமல் அவனது கண்கள் கவலையில் தேடின.
“என்ன மச்சான். முகிய தேடறியா? ” என கேட்ட சக அலுவலக ஊழியரும் நண்பனுமான குகனிடம் “ம்” என்றான் ஒற்றை வரியில்.
“அவ நேத்தைக்கே வேலைய ரிசைன் பண்ணிட்டா” கேட்டு அதிர்ந்தான் நிகன்.
“அவ உன்கிட்ட பணம் ஏதாவது கேட்டு வாங்கினாளா?”
“ம்…”
“எவ்ளோ…?”
“பைவ் லேக்ஸ்”
“பைவ் லேக்ஸா…? என்னடா மச்சா… அவளோட ஹிஸ்ரி தெரியுமாடா உனக்கு? ஆயிரம், ரெண்டாயிரம் கொடுக்கவே அட்ரஸ் கேக்கிற காலத்துல ஒரு மாசம் கூட முழுசா வேலைக்கு வராதவள நம்பி எப்படிடா இவ்ளோ பெரிய அமௌண்டக்கொடுத்தே…? அவ உன்ன மட்டும் மொட்டை அடிக்கலே…. சரண், சாமி, ஜோசப், ராகவ் எல்லாரோடையும் நெருக்கமா பழகி, லவ் பண்ணறதா சொல்லி பணம் புடுங்கியிருக்கா… அதோட அவ வேலைக்கு வாரதே சம்பளத்துக்காக இல்லே .வேலை செய்யறவங்களோட பழகி பணம் புடுங்கிறது தான். அதைக்காதல் வேலைன்னு சொன்னா சரியா இருக்கும். இதுக்கு தீவிரவாதிகள் மாதிரி ஒரு நெட்வொர்க்கே இருக்குன்னு சொல்லறாங்க. ‘முத்தத்தைக் கொடுத்திரு, மொத்தத்தையும் எடுத்திரு’ இது தான் அவங்களோட தாரக மந்திரம். பணம் மட்டுமில்ல. ஏமாந்தா கிட்னியக்கூட எடுத்திருவாங்க” குகன் சொல்லச்சொல்ல நிகனுக்கு மயக்கமாக வந்தது.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |
