காதலில்லா காதல்…!
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: December 16, 2025
பார்வையிட்டோர்: 7,958
(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4
அத்தியாயம் – 1

சியாமளாவிற்குத் தனித்து உட்கார்ந்திருப்பது இம்சையாக இருந்தது. புத்தகம் விரித்துப் படிக்கவும் பிடிக்கவில்லை.
எதிரே அலைகடல். திரளான மக்கள். வயது வித்தியாசமின்றி ஆண்களும் பெண்களும் நடமாடுகிறார்கள். குழந்தைகள் ஓடி விளையாடு பாப்பா.!
காதலர்கள் சோடி சோடியாய் கை கோர்த்து அலைகிறார்கள், அமர்ந்திருக்கிறார்கள், கடலை போடுகிறார்கள். ஒட்டி உட்கார்ந்து சில்மிசம் செய்கிறார்கள். கடற்கரையில் அவர்கள் மட்டுமே இருப்பதாக நினைக்கிறார்கள். இவள் மட்டும் தனித்து அமர்ந்திருப்பதில் ஏகப்பட்ட சிக்கல்கள்
“அட! பாப்பாக்கு ஆள் வரலை. “
“ஐயோ பாவம். “
போகிற போக்கில் இளைஞர்கள் நக்கல் இடைச் சொருகல்கள்.
அவர்கள் மட்டுமில்லாமல் எல்லாருக்குமே வயசுப் பெண் கடற்கரையில் தனியே அமர்ந்திருந்தால் நக்கல், நையாண்டி வரத்தான் செய்யும். கண்ணோட்டம் ஒருமாதியாகச் செல்லும்.
சியாமளா வயசு 20. சிவந்த நிறம். சுருள் முடி. அழகான அகலக்கண்கள். அம்சமான உடல்வாகு. பெரிய பூ போட்ட பூனம். காற்றில் மறைக்கும் முடியை கையால் அழுத்திக் கொண்டு தூரப் பார்த்தாள்.
அவனைக் காணோம் !
‘ஏன்…. என்னாச்சு இவருக்கு. இப்படி அழும்பு செய்கிறார்!?’ – சியாமளா தலையைத் திருப்பிக் கடலைப் பார்த்தாள்.
அலை ஓயாது அடித்துக் கொண்டிருந்தது. காற்று மென்மையாய் வீசிக்கொண்டிருந்தது.
இவள் காதலில் விழுந்தது பெரிய கதை.
நட்ராஜ் நான்கு நாட்கள் இவளை வட்டமடித்து, பின் கொஞ்சமாய் சிரித்து, எதிர்ப்பில்லை என்றதும் துணிந்து எதிர்பாராத விதமாய் இவள் முன் சரக்கென்று மோட்டார் சைக்கிளை நிறுத்த, இவள் மிரள… “ஒரு நிமிசம் மேடம்! இதுல என் மனசிருக்கு. உடைகிறதும், உடைக்காதததும் உங்க விருப்பம்!” – மடித்த காகிதத்தை நீட்டினான்.
இந்த எதிர்பாராத நடவடிக்கையால் இவளுக்குள் சட்டென்று கைகால்களில் வெடவடப்பு. மனதில் திடீர் திகில், திகைப்பு, அச்சம், நடுக்கம்! வாங்குவதா கூடாதா என்று உதறல்.
அதற்கு மேல் நட்ராஜிக்கும் நிற்கப் பயம். கடித்தைக் கீழே போட்டுவிட்டு பறந்தான். தூரத்தில் இரண்டு ஆண்கள் வந்தார்கள். இந்த நடப்பைக் கவனித்து வந்தார்கள். எடுக்கவில்லை என்றால்…
‘என்னம்மா! பையன் இடக்கு முடக்குப் பண்றானா?’ அநாவசியமாய் மூக்கை நுழைப்பார்கள்.
குனிந்து எடுத்தால்… வயசு பிள்ளைகள் காதல். சகஜம் என்று கண்டு கொள்ளாமல் போவார்கள்.
பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பது இவர்கள் பிரச்சனை. பிடித்தால் காதல், பிடிக்காவிட்டால்… ‘மன்னிக்கவும் பிடிக்கவில்லை! தொடர வேண்டாம்!’ எச்சரிக்கை..! வேலை முடிந்தது.
சியாமளா சடக்கென்று குனிந்து எடுத்து தோளில் தொங்கும் பைக்குள் திணித்து நடந்தாள். ஆனாலும் செய்கையின் பாதிப்பு இவளுக்கு வேர்த்தது. இதயம்…. திக் திக் தாளம்.
‘ச்சே ! வேண்டாம்! தூரப்போய் எறிந்து விட்டு இதிலிருந்து விடுதலை பெறலாம்?’ என்று மனசுக்குள் சின்ன யோசனை குமிழிட்டது.
‘இதுல என் மனசிருக்கு. உடைக்கிறதும் உடைக்காததும் உங்க விருப்பம்..!’ அந்த கண்ணியமான பேச்சு, வார்த்தை, நடவடிக்கைகள் அவன் மீது ஒரு மதிப்பு, மரியாதையை வரவழைத்து.
‘இருக்கட்டும்!’ – நடந்தாள்.
‘வீட்டில் ஹேண்ட் பேக்கை யாராவது துழாவினால்?!’ – நினைவு வர… அதை எடுத்து புத்தகத்தின் நடுவில் சொருகிக் கொண்டு நடந்தாள். வீடு போய் மனசு கனத்தது. எடுத்துப் படிக்கவும் விருப்பமில்லை. இயல்பாக இருக்கவும் முடியவில்லை.
“என்னடி ஒரு மாதிரியா உம்முன்னு இருக்கே?” அம்மா கேட்டே விட்டாள்.
“தலைவலி!” பொய் சொன்னாள்.
இரவு தூக்கம் பிடிக்கவில்லை. எப்படியோ தூங்கினாள்.
காலை அலுவலகம் செல்கையில் நடராஜ் இவளுக்காக காத்திருந்து, அருகில் வந்ததும் இணையாக…. அடுத்தவர்களுக்குச் சந்தேகம் வராதவாறு இயல்பாய் நடப்பதுபோல் நடந்து…
“படிச்சீங்களா?” முணுமுணுத்தான்.
“இ…இல்லே!” இவளும் அவனைப் பார்த்து திரும்பி பதில் சொல்லாமல் அவனைப் போலவே நடந்து நடித்தாள்.
“ஏன்?”
“பிடிக்கலை.”
“என்னையா?”
“கா….காதலை….”
“ஏன்…?”
சொல்லத் தெரியவில்லை.
“ஏதாவது காதல் தோல்வி, கசப்பா?”
இவள் சடக்கென்று முறைத்தாள்.
:இல்லே!” – சொன்னாள்.
“யாரையாவது காதலிக்கிறீங்களா?”
“இல்லே.”
“நான் சாதாரண குமாஸ்தா. எழுத்தர் வேலை.”
“எனக்கு உங்க சுயசரிதை தேவை இல்லே.”
“பரவாயில்லே. சோல்றேன். எனக்கு அம்மா, அப்பா, தம்பி, தங்கை இருக்காங்க.”
“…”
“தகுதி இல்லாதவன்னு நெனைக்கிறீங்களா?”
“…”
“நான் அசைவம். நீங்க பிராமின் சைவம். ஒத்துவராது யோசனையா?”
‘இவனுக்கு எப்படி நம் சாதி தெரியும்?’ – இவளுக்குள் சின்ன துணுக் படக் கேள்வி!
“எனக்கும் சைவம் பிடிக்கும், மாறிக்கிறேன்.”
“ஏதாவது பேசு, பதில் சொல்லு சியாமளா?”
பெயர் தெரிந்திருக்கிறான்! இவன் நம் கண்ணில் பட்டது நான்கு நாட்கள். இல்லை நாம் கவனித்தது நான்கு நாட்கள். அதற்கு முதலிலிருந்தே தன்னை வட்டமிட்டிருக்கிறான். பெயர், சாதி எல்லாவற்றையும் விசாரித்திருக்கிறான். ஏன் சாதகத்தையேக் கையில் வைத்திருப்பான் போல. ‘விசாரித்திருப்பானோ!?…’
“அதோ அந்தப் பெண் யார், எங்கே போறாங்க?” தன் தெருவிலேயே கைகாட்டி கேட்டிருக்கலாம்.
“ஏன் தம்பி?”
“சு….சும்மா தெரிஞ்சிக்கிறதுக்கு.”
“காதலிக்க ஆசைப்பட்டாலும் சொல்றேன்” – என்று பெரிசோ சிறிசோ சிரித்துக் கொண்டே சொல்லி இருக்கும்!
“டீ சியாமளா!” – எவளாவது கடைத்தெரு, பேருந்து நிறுத்தத்தில் தன் பெயர் சொல்லி கூவி இருக்கலாம்.
சாதி? – அம்மா மடிசார் கட்டி இருப்பதைப் பார்த்திருக்கலாம்!
“சொல்லுங்க சியாமளா?”
நினைவு துண்டிக்கப்பட்டது.
“என் அம்மா அப்பா ஒத்துக்க மாட்டாங்க.” – சொன்னாள்.
“அவுங்களா வாழப்போறாங்க?”
“பெத்தவங்களுக்கு மதிப்பு கொடுக்கனும்.”
பேருந்து நிறுத்தம் நெருங்க… அவன் பேச்சை நிறுத்தி… அவள் யாரோ தான் யாரோ என்பது போல் விலகினான்.
சியாமளா அலுவலகம் சென்று வேலையிலமர்ந்தும் நட்ராஜ் முகம், பேச்சு, நடவடிக்கை மீண்டும் மீண்டும் வந்து உறுத்தியது. பேக்கைத் திறந்து புத்தகத்திலிருந்து எடுத்து மேசைக்கு அடியில் வைத்து படித்தாள்.
“அழகு, அடக்கம் கொண்ட சியாமளாவிற்கு. நான் உன்னைக் காதலிக்கிறேன். உன் உள்ளம் அறிய விரும்புகிறேன். உடைக்க மாட்டாய் என்றும் நம்புகிறேன்! நட்ராஜ்.” – சப்பை விசயம்!
‘காதலிக்கலாமா?’ என்று அன்றைக்குத் தயங்கித் தயங்கி, பயந்து பயந்து ஆரம்பித்தக் காதல் இன்று…?
கையைத் திருப்பிக் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி 6.25.
நட்ராஜ் இந்நேரம் வந்திருக்க வேண்டும். வரவில்லை! வேலை பளு, வழியில் ஏதாவது கோளாறா? ‘காத்திருப்பதில் ஒரு சுகம். ஆர்வமும், ஆசையுமாக இருப்பதில் அலாதி இன்பம்.’ போதும்! திருமணம் முடிக்க வேண்டும்.
அம்மா அப்பா ஒத்துக்கொள்ள மாட்டார்கள். சாதி, மதம், ஆச்சாரமென்று துடிப்பார்கள்.
காலம் மாற பெற்றவர்கள் மாறவே இல்லை. இன்னும் சாதி, மதம், அந்தஸ்த்து, மான அவமானமென்று அவர்கள் பிடிப்பு இருந்து கொண்டே இருக்கிறது. இதில் ஏழை, பணக்காரன், படிப்பு, பாமரனென்று இல்லை. எல்லாம் ஒரே ரகம்.
அம்மா அப்பா டாக்டர்கள். மருத்துவப் படிப்பு முடிக்கும் பெண்ணுக்குக் காதல். தங்கள் விருப்பு, வெறுப்பு, எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டாள் என்கிற ஒரே காரணத்திற்காக…. மணந்தவனைக் கடத்தி கொன்று…..இருவருமே இன்றைக்குச் சிறையில் களி. இதில் என்ன கௌரவம், வீரம் தெரியவில்லை. அகப்படவே மாட்டோம் என்கிற அசாத்திய துணிச்சலில் இன்றைக்கும் எப்படி, கொலை கொள்ளைகள் நடக்கிறது ?! இவர்கள் என்ன நோக்கத்தில் கடத்தி கொன்றிருப்பார்கள். தெரியவேத் தெரியாது.
விதவையானப் பெண்ணை மனசு மாற்றி மறுமணத்திற்கு ஒத்துக்கொள்ள வைக்கலாம் என்றா?
“சாதி என்ன சாதி. சியாம்! அரசியல்வாதிகள் சுயநலம், வாய்ஜாலம் மாய்மாலம். தாங்கள் ஓட்டுகள் வாங்கி… பதவி, அதிகாரத்தைக் கைப்பற்றி சொகுசாய் வாழவேண்டும். இதற்காக ஒட்டு மொத்த அரசியல்வாதிகளும் கூடி, போராடி சாதி கணக்கெடுப்புவரை கொண்டு வந்து வாழ வைத்து விட்டார்கள்.
மெல்ல மெல்ல… காதல்களினால் செத்த சாதிகளை அவர்கள் உயிர்ப்பித்து விட்டார்கள். சாதி இரண்டொழிய வேறில்லை.! என்பதில் அரசாங்கம் சரியாக இருந்தால் சாதிகள் எப்போதோ மறைந்து மண்ணோடு மண்ணாகப் போயிருக்கும். அதை விடுத்து சாதிக்காக சங்கம், கட்சி, சலுகைகள் என்று சுயநல அரசியல்வாதிகளின் சதிக்குள் சறுக்கி விட்டதால் செத்த சாதிகள் பிழைத்து, புதுசுகள் முளைத்து…. மக்களுக்குள்ளே மக்கள் மாறி விட்டார்கள். சாதி விட்டு சாதி திருமணம் செய்து கொண்ட எந்த தம்பதிகள் மனுசர்களில்லாமல் மிருகங்களைப் பெற்றிருக்கிறார்கள். அல்லது கலப்பாய், கலவையாய் வேறொன்று பெற்றிருக்கிறார்கள்?! இதை நினைத்தாவது மக்கள் திருந்தவேண்டும். ” நட்ராஜ் சொல்வார்.
நட்ராஜ் அழகாவர் மட்டுமில்லை அன்பானவர். அதோடு அறிவு அதிகம். உலக நடப்பு, சாதி, மதம், அரசியல் எல்லாம் அத்துப்படி.
குணத்தில் தங்கம். ஒரே ஒரு குறை கஞ்சத்தனம். அதுவும் பெரிய குறை இல்லை. காலத்தின் கட்டாயம். கட்டு செட்டாய் இருக்க செட்டாய் இருக்க வேண்டிய அவசியம். கஞ்சத்தனமென்பது எந்த அவசியம், அத்தியாவசத்திற்கும் கையைச் சுருக்குவது. இவர் அப்படி இல்லை.
‘இன்னும் காணவில்லை!’ – சியாமளா கவலைப்பட்டு மீண்டும் மணியைப் பார்த்தாள்.கைபேசியில் தொடர்பு கொள்ளலாமா யோசித்தாள். வண்டி ஓட்டிக்கொண்டு வந்தால்….’தொடர்பு சரி இல்லை. அது விபத்துக்கு வழி.’ எண்ணம்… வர விட்டாள்.
யாரோ ஒரு ஜீன்ஸ் இவள் ஓரமாகச் சென்றான். போய்த் திரும்பி அப்படி இப்படி சுற்றினான். இவள் கண்ணில் பட்டான். அடுத்து பத்தடி நின்று அடிக்கண்ணால் பார்த்தான்.
இவன் தன்னைக் தவறான கண்ணோட்டம் ‘பலாளனவள்!’ நினைப்பில் பார்க்கிறான்! புரிய… மனசுக்குள் சின்ன பயப்பந்து வந்தது. ஆனாலும் இவள் திடுக்கிவில்லை.
பயம் எதிரிக்குத் தெரிந்தால் அது அவனுக்குத் துணிவு என்பது இவளுக்கு நன்றாகத் தெரியும். ஆகையால் அவனைத் பார்ப்பதைத் தவிர்த்து தலையைத் திருப்பிக் கொண்டாள்.
எங்கும் இது சகஜம். ஒரு பெண் சிறிது நேரம் தனித்து அமர்ந்திருந்தால் ஆண்கள் பார்வையின் அர்த்தம் வேறு.
அவள் யாருக்காக உட்கார்ந்திருக்காள், எவருக்காக இருக்கிறாள், மனக்கஷ்டமா, இவளுக்கும் நமக்கும் சம்பந்தமில்லை! – என்று விலகிப்போகும் எண்ணமே ஆண்கள் மனதில் இல்லை
பெண் தனி வரவு, தனி அமர்வு என்றாலே உடன் தப்புக்கணக்குத்தான்!
பெண் அப்படி இல்லை. எவன் எப்படி இருந்தாலும் அவனைப் பற்றி எந்த நினைப்பும் இல்லாமல் செல்வாள்.
சியாமளா செருப்பைக் கழற்றி மண்ணைத் தட்டி திரும்பிப் பார்த்தாள். அவனோடு இன்னும் நான்கு இளைஞர்கள் இப்போது புதிதாக சேர்ந்திருந்தார்கள்.
“பட்சி தனியாத்தானிருக்கு.”
“ஒரு மாதிரியாத்தான் தெரியுது.”
“படிஞ்சிடும்டா.”
“திரும்பிப் பார்க்குது.”
“செருப்பைக் கழட்டி கையில வைச்சிருக்கு. நெருப்பா?”
“வேணாம்டா.”
“பார்த்துடலாம்.! ” – சொன்னவன் முன்னால் வர… அடுத்தவர்கள் தொடர…
அத்தியாயம் – 2
அவர்களுக்குப் பின் நட்ராஜ் வந்தான்.
சியாமளா முகத்தில் திடீர் பிரகாசம் வர…. நெருங்கியவர்கள் பயந்து பின்னால் திரும்பிப்பார்த்தார்கள். ஆள் வருவதைப் பார்த்ததும் நழுவி அகன்றார்கள்.
‘ஏன் நிக்க வேண்டியதுதானே! நெருங்க வேண்டியதுதானே!’ இவளுக்குள் சிரிப்பு வந்தது.
நட்ராஜ் நடையில் தொய்விருந்தது. அவன் தொந்தி மணலிலும் வேகமாக நடப்பான். இவள்தான் திணறுவாள். அதுபோல முகத்தில் அலுவலக வேலை பளு, களைப்புத் தெரியாது, இருக்காது.
“நீங்க மட்டும் எப்படி இப்படி பிரகாசமா வர்றீங்க ?” இவளே அவனைக் கேட்பாள்.
“அது பரம ரகசியம்!”
“என்ன பெரிய பொல்லாத பரமரகசியம். பிகு! வர்றதுக்கு முன்னாடி பொம்பளைப் போல் பாத்ரூம் போய் முகம் அலம்பி பவுடர் போட்டுத் திரும்புவீங்க.”
“தெரியுதுல்லே. அப்புறம் என்ன கேள்வி?”
“என்ன பதில் வரும் என்கிற ஆசைதான். இந்த மேக்கப் அலங்காரம் எப்போதுமா, எனக்காக மட்டுமா?”
“எப்போதும்தான். எவளாவது மாட்டனும் என்கிறதுக்காக ஆரம்பிச்சது.”
“இப்போதுதான் மாட்டியாச்சே!”
“அடுத்தவளும் பார்க்கனுமில்லே!”
“அடிசெருப்பால..”
“வேணாம் தாயே! இது உனக்கு சமமாய் நான் இருக்க.”
“ஓகோ…!”
“ஏன் டல்லா வர்றீங்க?” அருகில் வந்தவனைக் கேட்டாள்.
“ஒன்னுமில்லே சியாம்!” கொஞ்சம் தள்ளி அமர்ந்தான்.
புதிதாய் ஒரு இடைவெளி முளைத்ததைக் கவனித்தாள்.
“அலுவலகத்துல அதிக வேலையா?”
“இன்னைக்கு நான் விடுப்பு”
“ஏன்ன்..?!”
“ஒரு சின்ன பிரச்சனை.”
“என்ன?”
பதில்லை. தலை குனிந்தான். மணலில் ஏதோ கிறுக்கினான்.
“நீ நம்மைப் பத்தி என்ன நெனைக்கிறே?” – மெல்ல கேட்டான்.
“புரியலை !?”
“இந்த காதலர்கள் விட்டுக்கொடுப்பைப் பற்றி உன் அபிப்பிராயம்?”
‘சரிதான். பிரச்சனை!’ – இவளுக்குள் தெரிந்தது.
“அது அவுங்கவுங்க சொந்த விசயம், சூழ்நிலை.”
“தப்பா, சரியா?”
“பிரச்சனை என்னன்னு சொல்லுங்க?”
“நாம நண்பர்களாய்ப் பிரிய வேண்டிய கட்டாயம்.”
“நட்ராஜ்!”
“அதிர்ச்சி வேணாம் சியாம். ஒரு சிக்கல்! என் அத்தைப் பெண் ஒருத்தி. உடல் ஊனம். அஞ்சு வயசுல இளம்பிள்ளைவாதம். ஒரு கால் சூம்பி உதவாமல் போயிடுச்சி. நொண்டி, நொண்டி நடப்பாள். அது ஒதுங்கிடும்ன்னு நெனைச்சேன். இப்போ என் தலையைத் தாக்குது.”
“இப்படி ஒரு அத்தைப் பெண் இருக்காள்ன்னு நீங்க சொல்லவே இல்லையே!?”
“அத்தை, மாமா பணக்காரங்க சியாமளா. நான் சம்மதிக்கமாட்டேன்னு வெளியில் வரன் பார்த்தாங்க. ஏதுவும் அமையலை, ஒதுக்கல்ன்னதும்… இப்போ தாய்மாமன்தான் கட்டி பொண்ணுக்கு வாழ்வு கொடுக்கனும்ன்னு காலையில திடீர்ன்னு வந்து பிடியாய் நிக்கிறாங்க. அதான் அலுவலகத்துக்கு விடுப்பு. உனக்கும் கைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் சொல்ல முடியாத தவிப்பு.”
“நிசம்தான் சொல்றீங்களா?”
“சத்தியம் ! உண்மை!”
“நீங்க நம்பளைப் பத்திச் சொல்லலையா?”
“சொன்னேன். நீயும் நானும் வேலைப் பார்க்கிறோம். மாதச் சம்பளம். கண்ணியமாய் இருப்போம்ன்னு விலாவாரியாய்ச் சொன்னேன்.”
“அதுக்கு என்ன சொன்னாங்க?”
“சியாமளா குறை இல்லாத நல்ல பெண். நொண்டி, முடம், கூன், குருடு, செவிடு, மாற்றுத் திறனாளி கிடையாது. அவளுக்கு ஆயிரம் வரன்கள் வரும். அதிலும் சம்பாதிக்கும் பெண். அவளை உன்னைவிட அழகு, அந்தஸ்த்து . ஆட்கள் அள்ளிப் போவாங்க. ஆனா… என் பெண் அப்படி முடியுமா?
தம்பி! உன் அழகுக்கு நீ யாரையாவது காதலிப்பே, மறுப்பே, தொல்லைக் கொடுக்கக் கூடாது, சங்கடம் வேணாம்ன்னு நெனைச்சு… வெளி இடம் பார்த்தோம். பலனில்லே. பணம் பல்லை இளிக்குது. எல்லாரும் ஒதுக்கிட்டாங்க. இனி வெளியில் பார்க்க எங்களுக்குத் தெம்பும் இல்லே. மனசும் இல்லே. உன்னை விட்டால் எங்களுக்கு வேற வழியும் இல்லே. நீ மறுத்தால் எங்க பெண்ணுக்கு வாழ்வும் இல்லே. ஆட்சேபனை இல்லேன்னா நாங்களே உன் காதலியிடம் பேசிப் பார்க்கிறோம்! கிளம்பினாங்க. நான் வேணாம் சொல்லி தடுத்துட்டேன்”. நிறுத்தினான்.
“நீங்க என்ன நினைக்கிறீங்க?”
“எனக்கு ஒன்னும் தோணலை. அவுங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை. அதே சமயம் காதலுக்குத் துரோகமான்னு மனசுக்குள் வலியாய் இருக்கு.” கமறினான்.
சியாமளாவிற்கு நட்ராஜ் மன வலி தெரிந்தது.
“கஷ்டம்ன்னு வந்தா ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுக்கிறது நல்லது. முடியாத நிலையிலும் புருசன் தாசி வீட்டுக்குப் போகனும்ன்னு ஆசைப்பட்டான். நளாயினி தன்னால முடிஞ்சும் அவனைத் தூக்கிப் போய் அந்த வீட்டில் விட்டு அவன் ஆசையைத் நிறைவேத்தினாள்.
என் நண்பன் ஒருத்தன் முருகேசு! காதலிச்சான். இதே பிரச்சனை! இங்கே பெண். அங்கே அத்தை மகன் ஆண். அவன் மாற்றுத் திறனாளி. முருகேசும் காதலியும் ஒருத்தருக்கொருத்தர் பேசி சந்தோசமாய் பிரிஞ்சாங்க. இருவரும் வேற வேற திருமணம் முடித்து இன்னும் குடும்ப நண்பர்களாய் போய்வர இருந்து சந்தோசமாய் இருக்காங்க.” நிறுத்தினான்.
பேச்சில்… சியாமளாவிற்கு அவன் மாறிவிட்டான் தெரிந்தது.
‘அது மாற்றுத்திறனாளி என்கிற உருகலா, பணத்தைப் பார்த்தப் பாதிப்பு அல்லது எல்லோரின் வற்புருத்தலா!?’ – புரியவில்லை
‘இப்போது என்ன செய்ய?’ அவளே அவளுக்குள் கேள்வி கேட்டாள்.
“நாம கொஞ்சம் யோசிப்போமா?!” கேட்டாள்.
“வேணாம் சியாம். காலையிலேர்ந்தே நான் யோசனையில் குழம்பி நொந்துட்டேன். உனக்கும் அந்த அவஸ்த்தை வேணாம். நாம நல்ல நண்பர்களாய்ப் பிரியலாம். என்னை மன்னிச்சுடு.” – அதற்கு மேல் அடுத்தவார்த்தை பேசாமல் எழுந்து விடுவிடுவென்று திரும்பிக்கூடப் பார்க்காமல் சென்றான்.
நட்ராஜ் கூட்டத்தில் மறைந்து கலையும் மட்டும் சியாமளா அவன் முதுகை வெறித்தாள்.
மெல்ல யாரோத் தொட திடுக்கிட்டுத் திரும்பினாள்.
பால்ய தோழி நந்தினி. ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்றாகப் படித்தவர்கள். ஒரு சாக்லெட்டை இரண்டாக உடைத்து பப்பாதியாகச் சாப்பிட்டவர்கள். உடைக்க முடியாதவைகளைக் காக்காய்க் கடி கடித்துச் சுவைத்தவர்கள். வாழ்க்கை சக்கரம். இவர்கள் இப்போது வேறுவேறு திசைகளிலிருந்தாலும் சமயம் கிடைத்தால் சந்தித்துக் கொள்வார்கள். உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல் பேசிக்கொள்வார்கள்.
நந்தினிக்கு ‘ அ விலிருந்து ஃ’ வரை அத்துப்படி. பழைய விசயங்களிலிருந்து புதுவிசயங்கள்வரை விரல் நுனி. அறிவாளி, புத்திசாலி. யாரையும் சரியாய் எடைபோடும் திறமைசாலி!
“என்ன மேடம் அசந்துட்டீங்க…?! நான் நந்தினி. உன் தோழி. பேச்சே வரலை. மறந்துட்டீங்களா? இல்லே… இப்போ உலகத்துல இல்லையா?” அவள் பாட்டுக்குக் கேட்டாள்.
சியாமளா சகஜ நிலைக்குத் திரும்பினாள்.
“போன ஆள் யார்?” கேட்டு அருகில் அமர்ந்தாள்.
சியாமளா துணுக்குற்று தோழியை வெறித்தாள்.
“நாங்க நாலைஞ்சு பேராய் வந்தோம். நாங்க வரும்போது அவர் உட்கார்ந்து பேசிக்கிட்டிருந்தார். தொந்தரவு கூடாதுன்னு பின்னால் அமர்ந்தோம். காதலனா?
“…”
“பயப்படாதே ! எல்லாரும் என்னைவிட்டுப் போயாச்சு. நான் உன்னிடம் பேசி வர்றேன்னு அவர்களை விலக்கிட்டேன். சொல்லு… காதலா ?”
“ம்ம்…”
“இவனை விட்டா வேற ஆளே உனக்குக் கிடைக்கலையா?”
நந்தினிக்குப் பக்கென்றது.
“படா கஞ்சன்! ரெண்டு பேரும் ஹோட்டலுக்குப் போயிருக்கீங்களா…? காசையே எடுக்க மாட்டான்!” என்றாள்.
சரியாகச் சொல்கிறாள். நடராஜ் சாமானியத்தில் ஹோட்டலுக்கோ, சினிமா போன்ற பணம் செலவழியும் பிற இடங்களுக்கோ லேசில் வரமாட்டான். அப்படியே வற்புருத்தலுக்காக வந்தாலும் காசு பணம் கொடுப்பதாக எடுப்பது போல் பாவலா செய்வானேத் தவிர பெயராது. அதற்குள் இவள் எடுத்துக் கொடுத்து விட்டு ஆள் சங்கடத்தைத் தீர்த்து அவமானத்தைக் காப்பாற்றி வந்து விடுவாள். அது மட்டுமல்லாமல் கடற்கரையில் பிசாத்துக்காசு சுண்டலுக்குக்கூட பைசா பெயர்வது கஷ்டம்!
“ஏங்க இப்படி?” இவளே ஒரு நாள் கேட்டாள்.
“நான் பணத்துக்காக கஷ்டப்பட்டவன் சியாம். சின்ன வயசிலேர்ந்தே வீட்ல கஷ்டம். அப்பா விவசாயி. தினம் வருமானம்தான் உலைக்கொதிப்பு. ஒரு சில மிராசுகளைத் தவிர கிராமத்தில் விவசாய கூலி குடும்பங்கள் மொத்தமும் அப்படித்தான். பத்து ரூபாய் கைமாத்து கஷ்டம். நூறு என்பது பெரிசு. இப்போ இதெல்லாம் கொஞ்சம் மாறி இருக்கு.”
“எனக்குக் கீழ் அஞ்சு தங்கச்சிங்க. பெரிய குடும்பம். நான் அப்போ ஆறாம் வகுப்பு படிச்சிக்கிட்டிருந்தேன். அப்பா ஒரு மாசம் உடம்புக்கு முடியாம படுத்துட்டார். என்ன நோய் எனக்குத் தெரியலை. வருமான மில்லாததினால அம்மா நடவு நட்டு கஞ்சி ஊத்தினாங்க. கிராமத்தில் ஆணைவிட பெண்ணுக்குச் சம்பளம் குறைவு. அம்மா சம்பாத்தியம் புள்ளைங்க கால் வயிறு அரை வயிறு நனைச்சுது. அப்போதான் எனக்கு வறுமைன்னா என்ன, பசி எப்படின்னு… அனுபவத்தால் உணர்ந்தேன். பள்ளிக்கூட விடுப்பு நாட்களில் நானும் வயல் வேலைக்குச் சென்றேன். பையனென்றால் அரைக் கூலி. எனக்கு வேலை தெரியாததினால் முதலாளி மனசு வைச்சு கொடுக்கிறதுதான் கூலி. ஒரு ரூபாய் சம்பாதிக்க இவ்வளவு கஷ்டமா? அதுதான் எனக்குக் காசு மேல பாசம் வந்த காரணம்.”
“நான் மத்தவங்க பார்வைக்குக் கஞ்சனாய் இருக்கலாம். ஆனா என்னைப் பொறுத்தவரை அப்படி இல்லே. அதிக விலை கொடுத்து வாங்கினால்தான் தரம் என்கிற போக்கு கிடையாது. குறைவில் தரம் தேடுபவன் நான். வீண் செலவு, ஆடம்பரம் இல்லாதவன். வாழ்க்கையில் அடி படிப்பினைக் கொடுக்கும் சியாம். எனக்குப் பணமே பாசம் அதுவே நேசம் கிடையாது. நானும் மத்தவங்க போல் நிறைவாத்தானே இருக்கேன். குறை இருந்தால் சொல்லு…” சொன்னான்.
சிக்கனம் தவறு இல்லை உணர்ந்தாள்.
“நட்ராஜைப் பத்தி உனக்கு எப்படித் தெரியும் நந்தினி?”
“ஆள் ஜாதகம் சரித்திரமே எனக்கு அத்துப்படி”
“எப்படி?”
“கிராமத்தில் என் அத்தை வீட்டுக்கும் அடுத்த வீடு இவர் வீடு. விடுப்பில் போகும் போது பழக்கம். சின்ன வயதில் சேர்ந்து விளையாடினேன். வயசு ஆக ஆக…. ஒதுங்கியாச்சு. வறுமைப் பிடி கொஞ்சம் கஞ்சத்தனம். இப்போ என் வீட்டுக்கும் பக்கத்துலதான் குடும்பம் வாடகைக்குக் குடி இருக்கு.”
“குடும்பம் எப்படி நந்தினி…?”
“உனக்குத் தெரியாதா?”
“தெரியாது!”
“எத்தினி நாளாய்க் காதல்?”
“ஒரு வருசமா.”
“அம்மா சுண்டல்?” எதிரில் சிறுவன் இடைவெட்டினான்.
“போப்பா அந்தாண்ட. பேசிக்கிட்டிருக்கோம். நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் உண்மையாய்க் காதலிக்கிறீங்களா?”
“ஏன்?”
“காதலிக்கலைன்னா ஒரு உண்மைச் சொல்றேன்.”
“காதலிச்சா சொல்லமாட்டியா?”
“சொல்லித்தான் ஆகனும்..!”
“சொல்லு?”
“இவர் பணத்துக்கு ஆசைப்பட்டு ஒரு மாற்றுத் திறனாளியை திருமணம் முடிக்கிறார். இன்னைக்கு மதியம் நிச்சயம் முடிஞ்சுது.”
“அத்தை மகள்ன்னு சொன்னார்.”
“அதையும் சொல்லியாச்சா? யோக்கியம்தான். ஆனா பொய்! அத்தை மகள், மாமன் மகள் இல்லே. பிறத்தி! வீட்டிலேயே பாக்கு வெத்திலை மாத்தியாச்சு. பக்கத்து வீடு என்கிறதுனால என் அம்மா அப்பா கலந்து வந்ததினால விசயம் வெளிச்சம்.”
சியாமளாவிற்குத் தலை சுழன்றது . விபரீதம் புரிந்தது.
“நீ…. பொ.. பொய் சொல்லலையே நந்தினி?”
“வீட்டுக்கு வர்றீயா உண்மையை நிரூபிக்கிறேன்…!”
“வேணாம். நம்பறேன்.”
“இப்போ என்ன சொல்லிப் போனார்?”
“அத்தை மகள் மாற்றுத்திறனாளி. வழி இல்லாம தலையில் விடியுது மறந்துடு, மன்னிச்சிடு சொல்லிப் போறார். நிச்சயம் சொல்லலை.”
“விட்டது சனி விடு. எதையாவது இழந்தியா?”
“இல்லே.”
“இழந்தாலும் பரவாயில்லே. அதைப் பெரிசா நினைக்காதே!”
“நந்தினி!”
“சொல்லு?”
“நான் அந்த ஆளுக்கு எதிரியாய் எதையாவது செய்தாகனும்.”
“தற்கொலையா?”
“ச்சே ச்சே!”
“பின்னே?”
“காதல், நம்பிக்கைத் துரோகத்துக்கு ஏதாவது செய்யனும்ன்னு மனசு துடியாய்த் துடிக்குது.”
“திருமணத்தை நிறுத்தப் போறீயா?”
“பெண் பாவம். வேணாம்.”
“வேற…?”
“தப்புக்குத் தண்டனையாய் எதையாவது செய்யனும்.”
“எதையும் யோசனை செய்து செய். யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது. அதே சமயம் நீயும் சிக்கல், கஷ்டத்தில் மாட்டிக் கொள்ளக் கூடாது.”
“நந்தினி! என் பாதிப்பு…. நீ நட்ராஜைச் சந்திச்சு எதையும் பேசவேணாம். எதிர்ல பார்த்தாலும் சாதாரணமாய் முகச்சுளிப்பு, வருத்தம்கூட காண்பிக்க வேணாம்.” கூறி சியாமளா எழுந்து வேகமாக நடந்தாள்.
‘இவள் என்ன செய்யப் போகிறாள்?’ – நந்தினி அவள் முதுகை வெறித்தாள்.
– தொடரும்…
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
