கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2024
பார்வையிட்டோர்: 1,195 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

‘பூததயை, மிருதுத்தன்மை, சகிப்பு, வெகுளாமை, நன்றி மறவாமை ஆகி யன கூட அகிம்சையின் பிற உருவங்களே….‘ 

அகிம்ஸையைப் பற்றிக் காலம் காலம் காலமாக மகான்கள் நடத்திவரும் பரிசோதனைகளின் பயனாகத் தான், உணவு சம்பந்தமாகவும் இந்து தர்மம் உலகிற்கு அகிம்ஸை நெறியை அளிக்கக்கூடியதாக இருக்கின்றது. அத்துடன், முற்காலத்தவர்களைப் பார்க்கிலும் திருந்திய அகிம்ஸை உணவு விதிமுறைகளை அமைத்துக் கொள்வதும் சாத்தியமாகின்றது. பூததயை, மிருதுத்தன்மை, சகிப்பு, வெகுளாமை, நன்றி மறவாமை ஆகியனகூட அகிம்ஸை யின் பிற உருவங்களே. வேதகாலத்தில் முனிவர்கள் புலால் அருந்தினார்கள் என்பதை வாசிக்கும்பொழுது நமக்கு அதிர்ச்சி ஏற்படுகின்றது. ஒருதடவை வால்மீகியின் ஆசிர மத்திற்கு வசிட்ட முனிவர் வந்திருந்தார். அவருக்கு விருந்து வைப்பதற்காகப் பசுக்கன்று ஒன்று கொல்லப் பட்டது. புலால் மறுப்பினைச் சர்வசாதாரண நெறியாக ஒழுகும் நமக்கு அம்முனிவர்களுடைய செயல் காட்டு மிராண்டித் தனஞ் சார்ந்ததாகவும் தோன்றுகின்றது. இன்று, சைவ உணவு என்ற எண்ணத்தில் மிருகங்களின் பாலைக் குஷியாக அருந்துகின்றோம். இது மட்டும் மிலேச்சத் தனஞ் சார்ந்தது இல்லையா? ஓராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றப் போகும் சந்ததியினர், ‘நமது முன் னோர்கள் பால் அருந்தினார்களாமே….அவர்கள் எத்தகைய காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தார்கள் என நம்மை ஏளனஞ் செய்வார்களேன்றே எனக்குத் தோன்றுகின்றது. எனவே, அகிம்ஸாவாதிகள் பாலுணவை மறுக்கக் கடவர்… எனப் போதித்துக் கொண்டிருந்தார் சத்திய சோதனை என்ற உலைக்களத்தில் புடம்போட்டெடுக்கப்பட்ட அகிம்ஸாவாதி. 

பால் ஹிம்ஸை வழியில் பெறப்பட்ட உணவா?‘ எனக் கேட்டான் அடுத்த வேளை கிடைக்கக்கூடிய பாலின் சுவையிலே புலன் குத்தி நின்ற ஒருவன். 

‘ஆம். நம்முடைய உணவைப் பிற பிராணிகளுடைய முலைகளிலே ஆண்டவன் ஒளித்து வைத்திருப்பான் என்று நினைக்கின்றீர்களா? …. பிறிதொரு குட்டிக்கு அதன் உணவை மறுத்து, நமது உணவாக்குதல் எவ்வாறு அஹிம்ஸை சார்ந்ததாக இருக்கும்?’ என அகிம்ஸாவாதி கேட்டார். 

‘போதும், உமது விளக்கம்,நீர் தாய்ப்பால் குடித்து வளர்ந்ததில்லையா?’ என மறித்தான் ஊன்தின்னி ஒருவன். 

‘குடித்தேன்; வளர்ந்தேன். என்தாயின் பால் வேதனை என்ற ஹிம்ஸையைத் தணிப்பதற்காகவும் அருந்தப்பட்ட தாகையால், அஃது அகிம்ஸை வழியில் பெறப்பட்டதே. மேலும், இயற்கையில் அது வேறு மிருகக் குட்டிகளுக்குப் படைக்கப்படாததினால், இந்த மிருகம் அதனைச் சுவைத்ததில் அதர்மம் எங்கே புகுந்தது?’ என அகிம்ஸாவாதி சாந்தமாகக் கேட்டார்!

– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.

எஸ்.பொன்னுத்துரை எஸ்பொ என அறியப்படும் ச.பொன்னுத்துரை (24 மே 1932 - 26 நவம்பர் 2014) ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1989 முதல் புலம் பெயர்ந்து ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் வாழ்ந்து வந்தார். சென்னையில் மித்ர என்ற பதிப்பகத்தை நிறுவி அதன் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டிருந்தார். பொன்னுத்துரையின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *