கருணைக் கொலை
கதையாசிரியர்: சூசை எட்வேட்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: July 11, 2026
பார்வையிட்டோர்: 142
(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அப்பா நீட்டி நிமிர்ந்து படுத்துக் கிடந்தார் கட்டிலில், கை காலில் அசைவில்லை, அசைக்கவும் முடியாது! மரணப்படுக்கையில் கிடப்பவர் போல் ஆடாமல் அசையாமல் மரக் கட்டை போல் கிடந்தார்! கழுத்துக்கு மேல் பகுதியும் அப்படித்தான் அசைவற்று போயிற்று! ஆடி அசைய முடியாது. எப்படி யெல்லாம் ஆடி ஓடி வாயாடி கையாடியாய் திரிந்தவர். அவருக்கு இப்படியொரு நிலமையா! பார்க்க பரிதாபம் தான்!
ஆனாலும் புலன் எல்லாம் நன்றாக இருக்கும்! முக்கியமாக நாக்கு பழுதில்லாமல் வேலை செய்யும்!
“அடியேய்… ரஞ்சி! எங்கடி போனாய்! எளிய நாயே! எனக்கு பக்கத்தில் இருக்க உனக்கென்னடி பஞ்சி அதுக்குள்ள ஓடி ஒளிகிறாள், மாப்பிள பிடிக்கப் போயிற்றாள் கசவஞ்சி!” அம்மாவைத்தான் அழைத்தார் அவர் மனைவியை கூப்பிடுவது இப்படித்தான்! எங்களுக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து இவர் கண்விழிக்கும் போதே இந்த வீறாப்பு வசனங்களோடே தான் வாழ்கையை ஆரம்பிப்பார்!
மனிதருக்கு எல்லா உறுப்புகளிலும் புலன்களிலும் வருத்தம் வரும், கெட்டு போகும். ஆனால் இந்த நாக்கில் மட்டும் ஒருவருத்தமும் வராது! அது வயதானாலும் வருத்தமானாலும் நன்றாக வேலை செய்யும்! ஆராற்கேடு நாவாற் கேடு என்பது அவருக்குத்தான் மிகவும் பொருந்தும். நாவினாலே எங்களை மட்டுமல்ல, சொந்த பந்தங்களை அயலை எல்லாம் பகைத்துக் கொண்டார்!
அப்பா ஆர்ப்பரித்து அழைத்ததும் அம்மா சமைத்துக் கொண்டு கொண்டு இருந்தவ பாதியிலே விட்டுப் போட்டு விழுந்தடித்துக் கொண்டு அப்பாவின் அறைக்குள் ஓடினாரி போகும் போது “நித்தியா அடுப்படிய கவனி குழம்பு அடுப்பில” என்று சொல்லிக் கொண்டே போனார். நான் ஆசிரியர் நியமனம் பெற்றவள். பிள்ளைகளின் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தேன். நான் அப்படியே விட்டுவிட்டு அடுப்படிக்குக் நுழையும் போது குழம்பு கொதித்துக் குழம்பிக் கொண்டிருந்தது! ஆற்றி ஆறுதலாக்கி வைத்தேன்.
நான் தான் குடும்பத்தில் மூத்தவள். ஏதோ இயலுமானவரை படித்து இந்த ஆசிரியை பணியையாவது பெற்றுக் கொண்டேன். எனது முயற்சியால் என் குடும்பத்தை முன்னேற்றலாம் கெளரவமாக வாழ வைக்கலாம் என்றால், இந்த அப்பாதான் காலை வாரிவிடுபவாராக இருக்கிறார்!
அப்பாவை நான் அதிகமாக அணுகுவதே இல்லை! அவருடைய போக்கு முற்றாக எனக்குப் பிடிப்பதில்லை! அருவருப்பையே காட்டும்! மற்றச்சகோதரர்களுக்கு பிடித்ததோ இல்லையோ எதையும் வெளிப்படையாக காட்டிக்கொள்ளுவதில்லை!.
அம்மா போகும் போது படுக்கையில் சலம் விட்டுக் கிடந்தார்! அம்மா போய் அப்புறப்படுத்தி, சுத்தப்படுத்தி அவரை தடவிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தி தலைமாட்டில் இருந்து வருடிக் கொண்டிருந்தார். இல்லை சீப்பால் விறாண்டிக் கொண்டிருந்தார். தலை முழுக்க சொடுகுக் கடி தாங்க முடியாமல் கத்துவார், அம்மா சீப்பாலே விறாண்டிக் கொடுப்பார். உடம்பிலே எந்தப் பக்கத்தில் சிறு கடி ஏற்பட்டாலும் தாங்கிக் கொள்ள முடியாது அவரால். ஒரு சிறு விரலைத்தாணும் சிறிதாக வேணும் அசைக்க முடியாதே! இப்படித்தான் ஆர்ப்பரித்து அலறுவார். தான் சொன்னபடி தனக்கு திருப்தியாகச் செய்யாவிட்டால், வந்தது வில்லங்கம்! வாயில் வந்ததை எல்லாம் விட்டெறிவார்! தூஷண வார்த்தைகளை கொட்டுவார்! கைகால் இயங்கும் நிலையில் என்றால் கேட்கவே வேண்டாம். வீட்டுச் சாமான்களும் உடையும் அம்மாவின் மண்டையும் உடையும்! இரத்தக் காயங்களாகும்!
அம்மாவுக்கு அடுத்தபடியாக தங்கை தான் அப்பாவை கவனிப்பவள். அவளும் தைப்பவள். எனது முயற்சியால் தான் அவளுக்கு தையல் இயந்திரம் கிடைத்தது. நல்லாகத்தைப்பாள். வேலை தேடி வரும். பொறுப்பெடுத்த வேலைகளைச் செய்ய விடாமல் அப்பா நச்சரித்து, தீய வார்த்தைகளை உச்சரித்து கரைச்சலைக் கொடுத்துக் கொண்டே இருப்பார்.
இவருக்கு ஏன் இந்த நிலையானது? எல்லாம் இவரே தேடிக் கொண்ட வினைப் பயன்! பெட்டி கட்டி, ஈருளியில் ஓடி ஊருக்குள்ள மீன் வியாபாரம் செய்பவர். இலாபமோ நட்டமோ ஒவ்வொரு நாளும் நிறைய வெறியில் வருவார்! கறிக்கு புளிகள்,
சாமான் மட்டும் வாங்கி வருவார்! கொண்டு வரும் கறிவகைகளை நன்றாக பொரித்து அவித்து அவருக்குத்தான் படைக்க வேண்டும்! அம்மா அவருக்கேற்ற மாதிரி எல்லாம் பக்குவமாக இதம் பதமாகச் செய்து வைப்பா. அவர் திண்டு மிச்சம்தான் நமக்கு. நல்லாயிருக்கு என்று ஒருநாளும் சொல்லமாட்டார். ஆனால் ஒருமுறை கை பிசகாக உப்போ புளியோ கூடியோ குறைந்தோ பிழைத்துவிட்டால் போதும், எடுத்ததால் எறிவார்!. தூஷண வார்த்தைகளை கொட்டுவார்! இது தான் பரிசாக கிடைக்கும்! அம்மா மெளனமாக அழுவது எனக்கு மட்டும் தான் தெரியும்! உண்மையில் அம்மாவின் இடத்தில் நானிருந்தால் இவரை என்றோ விவாகரத்துச் செய்திருப்பேன்.
சில நாட்களில் நிறை வெறியில் எங்கேயும் விழுந்து கிடப்பார்! யாராவது வந்து சொல்லுவார்கள். தம்பி தான் வேலையால வந்த களையோடு. அவன் ‘கராச்’ வேலைக்குப் போகிறவன், அவரை தேடிப் போய் ஏற்றிக் கொண்டு வந்து தூக்கிக் கிடத்துவான்! கெட்ட வார்த்தைகளால் அலட்டிக் கொண்டிருப்பார். சுருட்டு, பீடி, கஞ்சா என்று என்னென்னமோவெல் லாம் பற்றவைத்து ஊதித்தள்ளுவார்! வாயில் எதை யாவது வைத்துக் கொண்டோ விட்டுக் கொண்டோ இருப்பார். எல்லாக் கெட்ட பழக்கங் களும் ஏன் கெட்ட குணங்களும் அவருக்கே சொந்தம்!
“வாழும் வளரும் பிள்ளைகள் இருக்கிற இடத்தில இப்படி செய்யாதீங்க, வீட்டுக்கு வடிவில்ல” என்று அம்மா சொன்னால் போதும் பூ. தூ.. என்று தூஷண வார்த்தைகள் தான் பரிசாகக் கிடைக்கும்! சிலவேளை காயப்படவும் நேரும்!
வீட்டிலேயே கசிப்பு போத்தலை வேண்டி வைத்து ஊத்தி ஊத்திக் குடிப்பார்! வாயில் வந்ததை எல்லாம் உளறிக் கொட்டுவார், ஆபாச பாடல்களை பாடுவார்! “நல்லாக குடிக்கலாம், எவ்வளவும் குடிக்கலாம் ஆனா வெறும் வயிறோட இருக்கக் கூடாது. உடனே சாப்பிட வேணும் நல்லாச் சாப்பிட வேணும் ஒண்டும் செய்யாது” என்பார். சொன்னது போல செயலிலும் இறங்விடுவார். அம்மா பிள்ளை களுக்கென்று ஒதுக்கி வைத்த முட்டை, இறைச்சிப் பொரியல் கரியல் எல்லாவற்யையும் ஒன்றாக போட்டு பிரட்டி எடுத்து தின்று விட்டுப் போவார்! “வாழும் வளரும் பிள்ளைகள் தின்கிற குடிக்கிற வயசில நல்லது கடியதுகள் இந்த மனுஷன் தின்ன விடுவது இல்ல, வாழ விடுகுது இல்ல.” என்று அம்மா புறுபுறுத்துக் கொண்டிருப்பார்!
“என்னத்தக் கண்டதும், திண்டது குடிச்சதும் தான் கண்டது இந்த வசனத்தை உச்சரிப்பார் எரிச்சலூட்டுவார். ஒரு கவிதை வரி ஒன்று படித்தேன். “பைத்தியகாரனும் குடிகாரனும் ஒன்றே அவர்க்கு வைத்தியமனையும் ஒன்றாதல் நன்றே” அப்பாவின் நடத்தையை அவதானித் தால் ஒரு மன நோயாளி போலத்தான் நடந்து கொள்கிறார்.
வீட்டுக்கு யாராவது வந்தால் வாருங்கோ என்று வரவேற்கமாட்டார். அந்த உபசரிப்பெல்லாம் நாங்கள் தான் செய்து கதைத்துக் கொண்டிருக்கும் போது, கதையிலே நுாலுக்குள்ள பிழை பிடித்து தன் பிரசங்கத்தை ஆரம்பித்து விடுவார்! அடுத்தவர் கதையைக் கேட்கவும் மாட்டார். கதைக்கவிடவும் மாட்டார், சத்தம் போட்டு பேசுவார். வீடே எடுபடும், தனது கதைக்கு மறுப்புரையே இருக்கக் கூடாது அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற தோரணையில் அதிகாரமாகப் பேசுவார்! தான் பெரிய அறிவாளி என்று பேரெடுக்க இப்படி படாத பாடுபடுவார்! என்னோடு படிப்பிக்கும் ஆசிரியர்கள். என் மாணவர்கள், சினேகிதிகள் என் வீடு தேடி வருவது அறவே எனக்குப் பிடிப்பதில்லை! இவரால் எனதும் குடும்பத்தினதும் மானம் மரியாதை எல்லாம் போய்க் கொண்டிருக்கிறது!
ஒரு நாள் என் சக ஆசிரிய சினேகிதிகள் என்னோடு கதைத்துக் கொண்டிருந்தார்கள். உல்லாசமாகச் சிரித்து பேசிக் கொண்டிருக்கும் போது, இவர் கள்ளுக் கோப்பையோடு பாடிக் கொண்டே வந்தார்! “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு” இந்தப்பாட்டு நான் தான் கண்ண தாசனுக்கு எழுதிக் கொடுத்த நான். பாரதியாரும் குடித்தார். பாரதிதாசனும் குடித்தார். கண்ணதாசனும் குடித்தார். நானும் குடிக்கிறன். குடிச்சா தான் மூளை நல்லா வேல செய்யும் அறிவாளியா வரலாம், நீங்களும் குடியுங்கோ என்று சொல்லி கொண்டே குளிர்பானக் குவளைக்குள் கள்ளை ஊற்றிவிட்டார்! வந்தவர்கள் இதையும் ஒரு நகைசுவையாக எடுத்து மேலும் சிரித்தார்கள்! சரளா ரீச்சர் தான் என் சங்கடமான நிலையை மன வேதனையை உணர்ந்து ஆறுதல் வார்த்தை கூறினா. “நீர் யோசிக்காதேயும் நித்தியா, வீட்டுக்கு வீடு வாசல்படி தான், இப்படி ஆக்கள் எத்தனையோ வீடுகள்ள இருக்கிறாங் கள், எங்கட வீட்டிலயும் இப்பிடித்தான் ஒண்டு கிடக்குது, வீட்டு மானத்தையே கப்பலேத்துது! “குடியில்லாமல் இருக்கேலாதவன் ஒரு மன நோயாளிதான்!” என்றார்.
அவ சொன்னது நுாற்றுக்கு நுாறு சரி! அப்பாவின் நடவடிக்கைகளைப் பார்த்தால் அவர் ஒரு மனநோயாளி என்றே விளங்கும்! அயலவர்களோ உறவினர்களோ வந்தால் இவர் கண்ணில் படாமல் பின் வழியாக வந்து கதைக்க வேண்டியதை கதைத்து அலுவலை முடித்துக் கொண்டு போய்விடுவார்கள்! இவர் கண்ணில் பட்டால் போதும் அவர்கள் பாடு திண்டாட்டம் தான்! அவர்கள் அந்தரங்க இரகசியங்களை பகிரங்கப்படுத்தி அவமானப் படுத்திவிடுவார்! வருபவர் மதிப்பு மரியாதை யானவராய் தெரிந்தால் போதும், எரிச்சல் பொறாமைக்குணம் வந்து விடும்! அவர்களை மட்டந்தட்டி விடுவார். இப்படியான மனப் போக்குக்கு அடிப்படை காரணம் எனக்கு மட்டும் விளங்கும்! அப்பா செய்த மிக பழிபாதக மான பாவச் செயல் ஒன்று இருக்கிறது! அது மிகச் சில அயல் உறவுகளுக்கு மட்டும் தான் தெரியும்! அவர்களுக்குத் தெரிந்த அந்த அந்தரங்க பழியான காரியம், அவர்கள் பார்வை யாலேயே தன்னை தாழ்வாக எண்ணமுன்னம், முந்திக் கொண்டு தான் அவர்களை தாழ்த்தி இழிந்து பழித்து பேசி அவர்களையும் தன்னோடு சமபடுத்தி விடநினைக்கிறார்! நான் கொஞ்சம் மனோதத்துவம் படித்தவள், குறை பாடுகளால் தாழ்வுமனப்பான்மை கொண்டோர் இப்படித் தான் மற்றவர்களை முன்னுக்கு வருபவர்களை இழிவுபடுத்தி பேசிக் கொண்டே இருப்பர்! இதுவும் ஒருவகை மனநோய்தான்! மனோ வியாதிகள் பலவகை, அதிலே இது ஒருவகை!
இதை நான் விட்டிலே சொன்னால் எனக்குத்தான் பைத்தியகாரப் பட்டம் சூட்டுவார்கள்! மனோ வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தால் குடியை மறக்கவும் வைத்தியம் பார்ப்பார்கள். குடியால் ஏற்பட்ட மனோவியாதி தீரும் என்றால் கேளர்கள்! அப்பாவுக்குப் பைத்தியமா அவர் என்ன தெருவில் திரியுற பைத்தியங்கள் மாதிரியா இருக்கிறார்! அவரென்ன கூடக்குடிக்கிறார், கூடக் கதைக்கிறார் குழப்படி எல்லாம் வீட்டோடதான். நீ என்ன அவரப் பைத்தியக்காரனாக்கி விசராஸ்பத் திரிக்கு அனுப்பு எண்டு நிக்கிறாய்! அங்க போனால் எங்கட மானம் மரியாதையெல்லாம் என்ன ஆகும்”
இவர்களுக்குத் தெரிந்த பைத்தியம். தெருவிலே பரட்டைத் தலையோடு கந்தல் உடையோடு கூய் காய் என்று கத்திக்கொண்டு திரிபவர்கள்தாம்! வெளிச்சத்துக்கு வராத வீட்டவர் களால் உணர்ந்தும் அறியப்படாத பைத்தியங்கள் வைத்தியமின்றி ஆயுள் பரியந்தம் கிடந்து உத்தரிப்பைக் கொடுத்து வருகின்றன! அவர்களில் அப்பாவும் ஒருவர்!
மனநோய் வைத்தியசாலைக்கு ஒருக்கா போனாலே மானம் போய்விடுமாம்! வீட்டுக் குள்ளேயே கிடந்து குடும்பமானத்தையே போக் காட்டிக் கொண்டிருப் பதை, ஆயுள் கால தண்டனையாக உத்தரித்துக் கொண்டிருப்பதற்கு சம்மதிக்கிறார்களே! வாழ்க்கையில் துன்பத்தையே மனமுவந்து ஏற்கும் பிறவிகளில் அம்மாவும் ஒருவர்! மற்றவர்களை துன்பப்படுத்துவதே வாழ்க்கை என்று வாழும் பிறவிகளில் அப்பாவும் ஒருவர் எனக்கோ வயதுக்கு வந்துவிட்டது! தங்கைக்கும் தான்! திருமணத்தைக் கட்டலாம் என்றால், அப்பாவை விட்டு எங்கேயாவது போகலாம் என்றால் பெண் கேட்டு ஒருவரும் எட்டியும் பார்க்கிறார்கள் இல்லை! அம்மாவும் இரண்டொரு இடங்களில் கதையை விட்டுப் பார்த்தா தட்டிக் கழித்து விட்டார்கள்! இப்படி ஒரு அப்பா இருக்கும் வீட்டில் யார்தான் வருவார்!
அப்பாவின் துர்நடத்தைகளால் படிப்படியாக அருவருப்படைந்து கொண்டு வந்த எனக்கு பெருவெறுப்பு ஏற்பட்டது, வீட்டுக்கு அண்மையில் சமீபத்தில் நடந்த அந்த சம்பவம் தான்! அந்தப் பயங்கரத்தை நினைத்தாலே இப்பவும் திகில் தான்!….
எங்கள் வீட்டுக்கு அடுத்தவளவில் ஒரு தகர வீட்டில் வாடகைக்கு இருந்தது ஒரு குடும்பம், வீட்டு உரிமையாளர்கள் இவர்களை வாடகைக்கு இருத்திவிட்டு இந்தியாவுக்கு படகேறி போய் விட்டார்கள். இந்தக் குடும்பத் தலைவன் இரவில் காவல் வேலை பார்ப்பவர். மாலை ஆறுமணிக்கு நகர்புறம் போனார் என்றால் காலை எட்டு மணியாகும் வீடுவர, அந்த வீட்டுப் பெண் தனியே இருந்து கசிப்பு விற்பவள்! பகலிலே இல்லை, இரவிலே தான் தன் தொழிலை ஆரம்பிப்பாள்! ஆண்கள் கூடியிருந்தும் குடிப்பார்கள், வந்து வந்தும் போவார்கள். பாடிக்களிப்பார்கள் தன்னை விட்டால் அறிவாளி இல்லை என்பதுபோல அட்டகாசமாக பேசுவார்கள், வாய்த்தர்க்கம் முற்றி சச்சரவும் முற்றும்! எல்லாவற்றையும் தனியே நின்று சமாளித்து விடுவாள், கெட்டிக்காரி! மிகவும் கண்டிப்பானவள்!
பக்கத்தில் நடக்கும் இந்த வியாபாரம் அப்பாவுக்கு பெரிய வாய்ப்பாயிற்று, கைக் கெட்டிய சொர்க்கமாயிற்று! நல்லாகக் கசிப்பிலே மூழ்குவார்! நடக்கேலாமல் விழுந்தெழும்பி வந்து மனிதனிடம் இருக்கக்கூடாத இழிகுணங் களை எல்லாம் காட்டி நிற்பார்! தொலைக் காட்சியில் நல்ல நிகழ்ச்சிகளை பார்க்க செய்திகளைக் கேட்க விட மாட்டார்! என்ர கதையை கேள் என்பார். தனது கதையைக் கேட்டு தனக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்ற தோரணையில் நடந்து கொள்வார். தன்னிடம் இருந்த காசை எல்லாம் குடித்து முடித்துப் போட்டு, அம்மாவுக்கு ஆக்கினை கொடுப்பார். பிள்ளைகள் உழைக்கிறதெல்லாம் உனக்கா சொந்தம் எனக்குப் பங்கில்லையா? என்று வாதாடுவார்.
“பிள்ளைகள் உழைக்கத் துவங்கின பிறகு உன்ர கை ஓங்கிற்று என்னை, என்ன மதிக்க மாட்டாய் என்ன!” என்று கேட்டு அட்டகாசம் பண்ணுவார்! அம்மா எங்க சேர்த்து ஒளிச்சு வைத்தாலும் ஆராய்ந்து துருவித் துருவி தேடி கண்டு பிடித்து விடுவார்! கைக்குக் கிடைக்கா விட்டால், கைக்கெட்டியதை எல்லாம் போட்டுடைப்பார்.
கசிப்பு விற்பவளிடம் ஒவ்வொரு இரவும் போயிருந்து குடித்து அட்டகாசமாகப் பேசி சிரித்து மகிழ்வார்! மற்றவர்கள் போன பின்னும், இவர் மட்டும் அந்தப்பெண்ணோடு தனித்திருந்து குடித்து குசு குசு மந்திரம் பேசிக்கொண்டிருப்பார்! அம்மா தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருப்பா! சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்துக் கொண்டிருப்பா!
இப்படி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் போது தான் அந்தப் பயங்கரம் அன்று நடந்து விட்டது…!
இவர் தவறான உறவுக்கு அவளைக் கேட்டிருக் கிறார்! அவள் மறுத்திருக்கிறாள்! இவர் சேலையைப் பிடித்து இழுத்து சேட்டை விடத் தொடங்கியிருக்கிறார்! அவள் ஆர்ப்பரித்து குரல் எழுப்பி திட்டித் தீர்த்திருக்கிறாள்! ஏமாற்றத்தால் ஆத்திரப்பட்ட இவர் போதை வெறியில் முன்னால் எரிந்து கொண்டிருந்த மண்ணெண்ணை போத்தல் விளக்கை அவள் மீது விட்டெறிந்தார்! அவளைத் தீ பற்றிக் கொண்டது!!
அவள் தீயிலே கருகி மாண்டு போனாள்!!
அவள் எழுப்பிய அவலக்குரல் ஈனக்குரலாகி அடங்கு மட்டும் யாரும் கிட்டவும் போகவில்லை! சாமத்தில் நடந்தது. இருட்டோடு இரட்டிப்புச் செய்யப்பட்டு விட்டது!
அம்மா மட்டும் தான் நேரில் கண்ட சாட்சி! கண்களை இறுக்கி மூடிக்கொண்டு ஒன்றுந் தெரியாதது போல் நடித்து புருஷனைக் காப்பாற்றி விட்டா!அப்பா கொல்லைப் பக்கமாகப் போய் பற்றைக்குள் விழுந்து படுத்துக் கொண்டார்! பேந்தப்பேந்த முழித்துக் கொண்டு கிடந்தார் இரவிரவாக! நாட்பட இந்த விஷயம் மெல்ல கசியலாயிற்று! அம்மா தெரிந்தவர்கள் காலில் விழுந்து கெஞ்சி ஆபத்தில் நின்று அப்பாவைக் காப்பாற்றிவிட்டா! அண்டை அயலோடு அப்பாவைத் தவிர நாங்கள் எல்லோரும் நல்லமாதிரி! அதனால் காப்பாற்றப்பட்டோம்! அவன்தான் குடிகாரன் குடிகேடன் விசரன்! அதுகள் நல்லதுகள்’ என்ற அபிப்பிராயத்தால் எல்லோரும் காப்பாற்றப்பட்டோம்!
இந்த அசம்பாவிதத்திற்குப் பிறகுதான் அப்பா மேலும் மனநோயாளியாக நடமாடலானார்! ‘நான் மட்டுமா பிழை விட்டவன்? எல்லோருமே குற்றமிழைத்தவர்கள் தான்’ என்ற தோரணையில் நடந்து கொள்ளலானார். யாரைக் கண்டாலும் அவர்கள் வீட்டு அந்தரங்கங்களை அவிழ்த்து விட்டு குறை பேசி இழிவுபடுத்தி விடுவார்! தன்னைத்தானே உயர்வாகப் பேசி, தன்னை உயர்த்து வதற்காக மற்றவர்களை தாழ்த்தி வாயில் வந்ததை எல்லாம் உளறிக்கொட்டி குழறுபடி பண்ணி மனக் கோளாறைக் காட்டி நிற்பார்! இது ஒரு விதமான மனநோய் தான் என்பதில் சந்தேகமில்லை!
தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வார்களே அது நடந்து விட்டது! அவருக்கு தண்டனை கிடைத்து விட்டது! நிறைவெறியில் ஈருளியில் இருட்டு நேரம் வந்து கொண்டிருந்தார். அது ஒரு மயான வீதி பள்ளக்கிடங்கில் பாடுகேடாக விழுந்து போனார்!
வெகுநேரமாகியும் அப்பா வராததால் நாம் யோசித்துக் கொண்டிருந்த போது தான் தெரிந்தவர் ஒருவர் விஷயத்தைக் கூறினார்! விழுந்து காயப்பட்டு பாட்டறியக் கிடக்கிறாராம்!
தம்பிதான் தான் வேலை செய்யும் முதலாளியின் உந்துருளியை எடுத்துக் கொண்டு போனான்! வீட்டிலே ஒரே அல்லோல கல்லோலம்! தம்பி ஒரு சினேகிதனின் உதவியோடு ஏற்றிக் கொண்டு வந்து விட்டிலே சொல்லிப் போட்டு வவுனியா அரசாங்க ஆஸ்பத்திரியில் அனுமதித்தான்! அவசர கிசிச்சைப் பிரிவிலேயே ஒருவாரம் வைத்திருந் தார்கள்! நல்லாக இரத்தம் போய்விட்டது! பின் மண்டையிலே தான் பாரிய காயம்! பதினைந்து இழை போட்டது! பிடரி நரம் பொன்று அறுந்து விட்டது! என்றார்கள் மூச்சை மட்டும் விட்டுக் கொண்டு மூச்சுப் பேச்சின்றி செத்த பிணம் போல் கிடந்தார்!
மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியமனையில் இருந்து கொழும்புக்கு அனுப்பினார்கள்! அங்கும் விசேட நரம்பியல் நிபுணர் வந்து சத்திர சிகிச்சை எல்லாம் செய்து பார்த்தார். பலனில்லை, பல மாதங்கள் தலைநகரில் கிடந்தது தான் மிச்சம்!அம்மாவும் தம்பியும் தான் அலைந்து களைத்தார்கள்! வைத்தியசாலை வளாகத்தில் கூட அதிக நேரம் நிற்க அனுமதிக்கிறார்கள் இல்லை! வந்து விசாரிப்பார்கள் சோதிப்பார்கள் தம்பியை கொண்டு போக எத்தனிப்பார்கள். இந்தக் கரைச்சல்களால் தம்பியை இடை மறித்து அம்மா தான் அடிக்கடி போய் வருவா. விடுதிகளிலே புதிதாக வருபவர்களை தங்க இடம் கொடுக்கிறார்கள் இல்லை! போன அன்றே பார்த்து அலுவல்களை முடித்துக் கொண்டு உடன் திரும்பி விட வேண்டும்!
இப்படி பல மாதங்களாக அம்மா அலைந்தும், அப்பா கிடந்தும் பிரயோசன மில்லை! திரும்ப வவுனியாவுக்கு அனுப்பி வீட்ட கொண்டு வந்து கிடத்தியிருக்கிறார்கள்!
இப்போது எல்லா உறுப்புகளும் படுத்து விட்டது. இயங்க மறுத்து விட்டது! நாக்கு மட்டும் தான் முன்னரை விட நன்றாக வேலை செய்கிறது! அதொன்றின் உதவியால்த்தான் தன் வேலைகளை எல்லாம் சாதித்துக் கொள்கிறார்! உடலின் எந்தப்பக்கத்திலாவது சிறு கடி ஏற்பட்டால் காணும் சொறிவதற்கு அம்மாவைக் கூப்பிடுவார்!
சொறிவதற்கு மட்டுமா தொட்டது பட்டதுகள் எல்லாவற்றுக்கும் அழைப்பாணை விடுப்பார்! போக சற்று பிந்தினால் போதும், தனக்கேற்ற மாதிரி சேவகம் புரியாவிட்டால் காணும் தூஷண வார்த்தைகளை எறிகணையாய் விட்டெறிவார்! காதிலே நாராசம் பாயும்! இந்தக் கெட்ட வார்த்தை களைக் கேட்டுக் கொண்டிருப்பது தான் மனதை வதை செய்யும்! வீட்டை விட்டு ஓடி கிணற்றுக்குள் விழுவோமா என்றிருக்கும்! பழைய சினிமாப் பாடலொன்றுதான் ஞாபகம் வரும், ‘உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது? நிலைகெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்குத்தான் அது…
அம்மாவுக்கு இதுவெல்லாம் கேட்டுக் கேட்டு சூடு சொரணை அற்றுப் போய் விட்டது! அல்லது அம்மாவை பொறுத்தவரையில் முன்னர் போல் எடுத்ததால் எறிந்தோ, அடித்தோ காயப்படுத் தாமல், வாய்ப்பேச்சோடு மட்டுப் படுத்தப்பட்டதால் பெரும் ஆறுதல் என்று நினைக்கிறாவோ தெரியாது!
ஆனால் அவவின் நடவடிக்கைகளைப் பார்த்தால் அப்படியாகத் தெரியவில்லை. விழுந்து விழுந்து பரிவோடு அக்கறையோடு கவனிப்பதைப் பார்த்தால் வேறு வேறு வைத்திய முறைகளையும் விசாரிப்பதைப் பார்த்தால் அவரை எப்படியும் எழுப்பி ஓடி ஆட விட்டு, பழைபடி அடி வாங்க முதுகைக் கொடுக்க விருப்பம் தெரிவிப்பது போலிருக்கும்! தான் அடிவாங்கினாலும் உதை வாங்கி னாலும் பரவாயில்லை புருஷன் மற்ற ஆண்கள் போல நடமாடவேண்டும் என்ற வீணவா அவவுக்கு! இந்த நவ நாகரீக உலகில், இருமினாலே விவாகரத்துக் கோரும் காலத்தில் இப்படியும் ஒரு பத்தினிப் பெண்ணா! அம்மா இரகசியமாக கடவுள் படத்துக்கு முன்னால் நின்று கண்ணீர் மல்க வேண்டுதல் செய்வா தன் கணவனுக்கு சுகம் வர வேண்டும் என்று!
அம்மா அடுப்படியையும் கவனிக்க வேண்டும். அப்பாவையும் பரிபாலிக்க வேண்டும்! அம்மாவுக்கு உதவிக்கரம் தங்கைதான். அவள் தையல் வேலையும் தடங்கலாகும். பொறுப்பெடுத்த வேலைகளை வேளைக்கே செய்து கொடுக்க முடியாமல் தடுமாறுவாள்! சினப்படுவாள்! நான் வீட்டில் நிற்கும் நேரம் குறைவு. நின்றாலும் கிட்டப் போக மாட்டேன். தூரத்தில் நின்று அவதானித்துக் கொள்வேன்! மற்றபடி வீட்டுக்கு உதவியானவற்றை நிறைவேற்றுவேன். அவ்வளவு தான்!
அப்பா ஒரு மனச்சாட்சி இல்லாத வருத்தக் காரன்! இவ்வளவு பக்குவமாக பார்த்தெடுத்தும் சிறிது பிசகிவிட்டால் போதும், உப்புப்புளி கூடிக்குறைந்தால் காணும், வாயிலிருந்து பீராங்கி வேட்டுக்கள் வெடிக்கும்!
வெளிமுற்றத்துக்கு கட்டிலோடு தூக்கிக் கொண்டு வந்து கிடத்தி சுடுநீரில் குளிப்பாட்டி கழுவித்துடைத்து சுத்தப்படுத்தி, தோய்த்த உடுப்புகளைப் போட்டு பக்குவமாக உள்ளே கொண்டு வந்து கிடத்தி சாப்பாட்டை ஊட்டிவிட ஆயத்தப்படுத்தும் போது மலங் கழித்து வைத்திருப்பார்! எப்படி இருக்கும்! ‘அவர்களுக்கு என்ன வேலை. இதையெல்லாம் செய்யத்தானே படைக்கப்பட்டி ருக்கிறார்கள் இவர்கள்’ என்ற எண்ணம் அவருக்கு கொஞ்சம் கூட மனச்சாட்சியில்லாத வருத்தக் காரன்! எனக்கு எரிச்சல் எரிச்சலாக வரும்! ஆனால் அம்மாவின் முகத்தில் இளநகை தான் வரும்! அப்பாவின் மனப்பான்மையை அம்மாவும் மனம் கொள்கிறார்! பெண்ணாகப் பிறந்தால் ஒருவனுக்கு வாழ்க்கைப் பட்டால் அடிவாங்கினாலும் அடிமையாகி சேவகம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறாரோ, தாய்க்குப் பின் தாரம்தான் தாயாகிவிட வேண்டும் என்று எண்ணுகிறாரோ! இதையொரு தியாக வாழ்க்கையென்று அவவும் சொல்ல வில்லை, அப்பாவும் ஏற்கவில்லை! நானும் இப்படியொரு பெண்ணியலை விரும்பவில்லை! பெண்ணென்றால் இப்படித் தான் வாழ வேண்டுமா? கணவனுக்காக சகலதையும் அர்ப்பணிக்க வேண்டுமா! பெண்ணுக் கென்று ஒரு வாழ்க்கை இல்லையா!
அம்மா அப்பாவின் தலைமாட்டில் இருந்து தலையை வருடிக் கொடுத்துக் கொண்டிருப்பா, கடிக்கும் இடமெல்லாம் தடவிக் கொடுப்பா. உணவூட்டி விடுவா, தண்ணீர் பருக்கிவிடுவா, அம்மா, சுருட்டை அவர் வாயிலே வைத்து பற்றவைத்து விடுவா, அவர் புகை விடும் போது வெளியால எடுப்பா மீண்டும் வைப்பா, அடிக்கடி சாராயம் பருக்கி வாய் துடைத்து விடுவா! பக்கத்தில் இருந்து அவரின் அலட்டல் புலம்பல்களை எல்லாம் கேட்டு இரசிப்பா ! பெண்ணுக்கு இப்பபடியொரு வாழ்க்கை தேவைதானா!
அப்பாவுக்கென்ன இப்படியொரு மனைவி கிடைத்திருக் கிறாள்! அவர் பாக்கியசாலி! ஆனால் இதை உணரும் மனம் அவருக்கில்லை! கிடந்த கிடையில் சகல சம்போகங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்! கொடுத்து வைத்தவர்தான்! நிஜம் மன்னருக்குக் கூட இந்தளவு சுகபோகம் கிடைத்திருக்காது. அம்மாவுக்கென்ன கணவனின் சுகத்துக்காக எதையும் செய்வார்! நளாயினி போல அர்த்த ஜாமத்தில் குஸ்டரோகியான கணவனை கூடையிலே தூக்கிச் சுமந்து கொண்டு போய் விபச்சார விடுதியில் விட்டு, வெளியிலே காவல் இருக்கவும், முடியுமானால் கணவனின் இன்பம் நீடிப்பதற்காக ஊருக்கு தெரியாமலிருக்க, சூரியனை உதிக்காமல் மூடி மறைக்கவும் சம்மதம்தான்!
தம்பி வேலையால் வரும் போது ஒரு அரைப் போத்தலோடு தினசரிவருவான்! ஒரு நாள் வெறும் கையோடு வந்தாலும் வீட்டில் ஒருவரும் இருந்த பாடில்லை! கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி வீட்டையே நாலாக்கி, அயலையும் கூட்டி எம்மை நாயாக்கி அவமானமாக்கி விடுவார்!
ஒரு நாள் தம்பியின் நடவடிக்கையிலும் வித்தியாச மாயிருந்தது! பேசும் போது வாயிலே சாராயம் மணந்தது! அப்பாவுக்கு வாங்கிக் கொண்டு வருவதில் தானும் வாய் நனைத்திருக் கிறான்! வீட்டில் நாங்கள் எல்லோரும் கண்டித்தோம். அம்மா கண்ணீர் விட்டு அழுதா!
அப்பாவை வருத்தம் பார்க்க தெரிந்த வர்கள், உறவினர்கள் வருவார்கள். தூர நின்று பார்த்து அனுதாபந்தெரிவித்து விட்டுப் போவார்கள். போகும் போது அவன் செய்த அநியாயத்துக்குத் தான் இப்படிக் கிடந்து உத்தரிக்கிறான் என்று குசுகுசுப்பது எமக்குத் தெரியும்!
தம்பியின் வருமானம் அப்பாவின் போதைத் தேவைகளோடு சரி! மேலும் அவனும் குடிகாரனாக கேடுகெட்டவனாக மாறப்பார்க்கிறான்!
தம்பி கெட்டது போல தங்கையின் தொழிலும் பட்டுப்போய்க் கொண்டிருக்கிறது பாழாய்ப்போன அப்பாவால்! எங்கள் இருவருக்கும் அவர் இருக்கம் வரைக்கும் திருமணமே நடக்காது!
அம்மா ஒரு கேடுகெட்ட வாழ்க்கைக்கு தன்னையும் குடும்பத்தையும் அவரோடு சேர்ந்து ஆட்படுத்தி அநியாயப்படுத்திக் கொண்டிருக்கிறா! எல்லோரையும் அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறா!
அப்பாவைச் சுகப்படுத்த படாத பாடுபடுகிறா! அவர் சுகப்பட்டு எமக்கெல்லாம் புதுவாழ்வா கிடைக்கப்போகிறது! மேலும் மேலும் கஸ்டத்தையும் அலங்கோலத்தையும் அவமானத்தையுமா விலை கொடுத்து வாங்க வேண்டும்.
அப்பா இப்படியே கிடந்தாலும் ஆபத்து. சுகப்பட்டாலும் அதிக ஆபத்து! குடும்பத்தில் எல்லோரையும் ஆபத்தில் இருந்து காப்பாற்ற ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.
– ஜூலை 2010, ஜீவநதி இதழ் 22.
தொடர்புள்ள சிறுகதைகள்
வசந்தம் வந்து போய்விட்டது
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
July 11, 2026
புனிதமெனும் பொய்!
மா.சித்திவினாயகம்
July 11, 2026
ஊன்றுகோல்
அல்போன்ஸ் மோசஸ்
July 11, 2026