கதையும் கல்யாணமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 13, 2025
பார்வையிட்டோர்: 254 
 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கருநீலக் கடலைக் கிழித்துக் கொண்டு கப்பல், ‘எஸ்.எஸ். ரமோலா’ வந்து கொண்டிருந்தது. கரேன்களின் தாக்குதலும், கலகக்காரர்களின் தாக்குதலும் அதிகமாகி அன்றாட வாழ்க்கைக்குப் பெருத்த இடையூறு உண்டாக்கிவிட்ட சமயத்தில், இவ்வளவு காலமாக பர்மாவே பிறந்த நாடென்றிருந்த பல இந்தியக் குடும்பங்கள் பரபரப்புடன் கப்பலேறின. சொத்துச் சுதந்தரத்தை உதறித் தள்ளிவிட்டு விலை மதிக்க முடியாத உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி வந்தன. 

அசைந்தாடும் கப்பலின் மேல் தட்டில் அங்கும் இங்குமாக உட்கார்ந்து பெசிக் கொண்டிருந்தனர் சிலர். வானத்தே பிறைச் சந்திரன் கம்பீரமாகக் காட்சியளித்தான். ‘மினுக் மினுக்’கென்று மின்னும் நட்சத்திரங்களை அண்ணாந்து பார்த்த வண்ணமாகப் படுத்திருந்தான் வடிவேலு. அவனருகே முழங்காலைக் கட்டிக் கொண்டு எங்கோ யோசனையில் இருந்தான் மாரிசாமி. கடலலைகளைத் தொட்டுத் தவழ்ந்த மெல்லிய காற்று இவர்களையும் தொட்டுத் தழுவிச் சென்ற வண்ணம் அவர் களுடைய பழைய சிந்தனைகளைக் கிளறி விட்டுக் கொண்டிருந்தது. 

“பதினைஞ்சு வருஷம் எவ்வளவோ சீக்கிரமா ஓடிப் போயிட்டாப்பல இருக்கு…” என்றான் அண்ணாந்து பார்த்தவாறு வடிவேலு. அவர்களுடைய இதயத் திரையில் பழைய சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மாறி மாறி விழுந்தன. 

”ஏன் ஓடாது? பதினைஞ்சு வருஷமில்லை; நூறு வருஷம்கூட ஓடிடும். எல்லாம் இந்த மனசைப் பொறுத்துதான் இருக்கிறது. ஓர் இடம் பிடிச்சுப் போயிடிச்சுன்னா அந்த இடத்துக்கு வர்றதுக்கு முந்திய நிலையும், அதற்குப் பிந்திய நினைப்பும் கணக்கெடுக்கும்போது ரொம்ப நாளாகி இருந்தாலும் காணும்போது மிகக் குறைவாக இருப்பதாகவே நோன்றும்” என்றான் மாரிசாமி. இப்பொழுது அவன் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தான். 

”ஆமாம் மாரி.. நீ நல்லாப் பேசறே… நீ கூட… இந்தியாவிலேர்ந்து வந்தவன்தானா… நான் என்ன நெனைச்சிருந்தேன் தெரியுமா? 

மாவிலே பொறந்து பர்மாவிலேயே வளர்ந்த நீயே பர்மாவை விட்டு வரும்போது நான் மட்டும் வர்றதிலே ஒண்ணும் ஆச்சர்யமில்லைன்னு எண்ணினேன்.நீயும் நம்ப பக்கத்திலேர்ந்து போனவன்தானா?!! என்றான் வடிவேலு. 

“ஆமாம், ஆமாம்; எல்லாரும் இந்தியாவிலேர்ந்து போனவங்கதான், வயிற்றுப் பிழைப்புக்காகப் போனவங்க மாதிரி நான் இங்கே ஜீவளம் நடத்த வரவில்லை. கால வித்தியாசம் இங்கே கொண்டு தள்ளியது அதனால் இந்த வாழ்க்கை வெறுத்துப் போகவில்லை. கல்யாணம் காட்சி – உற்றார் உறவினரெல்லாம் இல்லாமல் நிம்மதியாக இவ்வளவு காலத்தையும் தள்ளிவிட்டேன்…” என்றான் மாரிசாமி. அவன் குரலில் அழுத்தம் நிறைந்திருந்தது. 

வடிவேலு எழுந்து உட்கார்ந்து கொண்டான். ”ஓ… அப்படிச் சொல்லு… நம்ப வர்க்கம்தான் நீயும்… மனுஷனுக்கு ஒவ்வொரு சமயம் வருகிற கோபம் எவ்வளவு காரியங்களை மாற்றி விடுகிறது தெரியுமா? என்சிற்றப்பன் எனக்கு சொத்து இல்லைன்னார்… ‘சொத்து வேண்டாம், நீயும் வேண்டாம்’ என்று உதறித் தள்ளி, துண்டை உதறித் தோளிலே போட்டுக் கொண்டு கிளம்பியவன்தான் நான்” என்றான் வடிவேலு அவன் உணர்ச்சிப் பொங்கச் சம்பவங்களை ஒரு விநாடியில் கற்பவை செய்து கொண்டு கூறிவிட்டான். 

“ஹூம்…” என்று பெருமூச்சு விட்டான் மாரிசாமி. 

“சொத்து, சுதந்திரம் என்று போராடினாயப்பா நீ… எனக்கு அந்தக் கவலையெல்லாம் இல்லை… நான் என் சொந்தத் தகப்பனை விட்டு, ஊரை விட்டு, உற்றாரை விட்டு வந்த கதையே வேறு…” என்றான் அவன் கண்களில் தளும்பிய கண்ணீர் அந்த மங்கிய நிலவொளியில் அசல் முகத்தைப் போன்று ஜ்வலித்தது. வடிவேலு இன்னும் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டான். 


“செந்துறையில் இறங்கி மூணு கல்லு ஆற்றங்கரையோரமாப் போனா அழகுப்பட்டி கிராமம் இருக்கிறது. அழகுப்பட்டி சாமி முதலின்னா அந்த வட்டாரங்களிலே தெரியாதவர்களே கிடையாது. நாங்கள் மூன்று பேர்தான். அவர் சொத்து அனைத்துக்கும் சுகமநுபவிக்கத் தயாராக இருந்தோம். என் அண்ணனும், என்தங்கையும், நானும் அந்தக் கிராமத்திலேயே மதிப்பாக வளர்ந்தோம். 

என் தங்கை மேலே எனக்கு உசிரு. ‘நல்லம்மா நல்லம்மா’ என்று அவளிடம் பிரியமாய் இருப்பேன். 

நல்லம்மா பேருக்கேற்ற குணசாலி. அழகுங்கூட. என் அண்ணனுக்கு இதெல்லாம் கவலையில்லை. அவருக்குக் கல்யாணம் ஆனவுடன் அவர், மாமனார் வீட்டோடேயே போய் விட்டார். 

நானோ ‘துடுக்குக்காரன்’ என்றும் ‘மாங்குடி முண்டன்’ என்றும் பெயரெடுத்தேன். எதிலும் ஓர் அலட்சிய சுபாவமிருந்தது. இளமை வேகத்தில் உடலில் ஓடும் ரத்தம் துடுக்குத் தனத்தையும், தைரியத்தையும் வளர்த்தது. என்னுடைய முறுக்கிவிட்ட மீசையைப் பார்க்கும் என் அப்பாகூட, ‘டேய் வஸ்தாது மாதிரி இதெல்லாம் என்னடா கேவலம் ! அடக்க ஒடுக்கமாய் இரு’ என்பார். 

வீட்டின் கொல்லைக் கதவைத் திறந்தால் கூப்பிடு தூரத்தில் காலி ஓடிக் கொண்டிருப்பது தெரியும். வெள்ளம் வரும் சமயம் வீட்டு கொல்லைக் கதவை மோதிச் செல்லும். 

அன்று அந்தி மறையும் சமயம். நல்லம்மா இடுப்பில் குடத்துடல் முத்தையனுடன்பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். நல்லம்மாவின் துணிச்சலைப் பற்றி வியந்து சிறிது கோபம் வந்தாலும் உடனே தளர்ந்து விட்டது. நான் கண்டு கொள்வதாகவே இல்லை. நல்லம்மாவின் மனசு எனக்கு நன்றாகப் புரிந்து விட்டது. 

இந்தச் சமயத்தில்தான் பென்ஷன் வாங்கிக் கொண்டு, பாஸ்சர முதலியாரின் குடும்பம் பட்டணத்திலிருந்து வந்து சேர்ந்தது. அந்த விடுமுறையின்போது அவரது அக்கா மகன் சுந்தரமும் வந்திருந்தான். பட்டணத்துப் பிள்ளை; நாசூக்கான உடை; களையான முகம்; இருந் தாலும் ஏறிப் போயிருந்த அந்த மண்டைக் கர்வம். நான் ஒரு நிமிஷத்தில் அவனைப் பற்றித் திட்டமாக அறிய முடிவு செய்துவிட்டது. 

பாஸ்கர முதலியாரும், அப்பாவும் திண்ணையிலே நேரம் போவது தெரியாம பேசிக் கொண்டிருப்பார்கள். நாலடியார் முதல் நாங்குனேரி பெருமாள் கோயில் ஸ்தல புராணம் வரை எத்தனையோ பேசித் தள்ளுவார்கள். இப்படி வளர்ந்த உறவுதான் நல்லம்மாவுக்குச் சுந்தரத்தைக் கல்யாணம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற திடமான முடிவுக்குக் கொண்டு வந்தது அப்பாவை. லட்சணமான பையன் என்று முணுமுணுத்தது அப்பாவின் வாய். 

“இப்போ எத்தனாவது படிக்கிறான் பையன்?” என்றார் அப்பா. 

“இப்போ பத்தாவது படிக்கிறான். படிச்சு முடிச்சு மேலே பி.ஏ. வரை படிக்க வெச்சிடுவேன். எனக்கென்ன குழந்தையா குட்டியா? எனக்கு மட்டும் பொண்ணு இருந்தால் நம்ப சுந்தரத்தை விட்டா வேறு பையனுக்குக் கட்டிக் கொடுப்பேன்? என் பிள்ளை மாதிரி இப்போது என் சொத்தெல்லாம் இவனுக்குத்தானே?” என்று ஒரு வார்த்தைக்கு ஒன்பது வார்த்தைகள் பேசினார். அத்துடன் அவரது வீ பிரதாபங்களைப் பற்றிய பேச்சும் நடந்தது. 

சுந்தரத்துக்குக் கல்யாணம் செய்து கொடுப்பது எனக்குக் கட்டோடு பிடிக்கவேயில்லை. என் தங்கையின் உள்ளம் எனக்குத் தெரியாதர் அவள் விரும்பும் முத்தையனையும் எனக்குத் தெரியாதா? தங்கமான பிள்ளை. அவனுக்கு என்ன குறைச்சல்? இந்த இரண்டெழுத்து இங்கின் தெரயாது. அவ்வளவுதான். இந்தத் தறுதலைப் பிள்ளை மாதிரி சிகரெ குடிக்கத் தெரியாது. அவனும்தான் கிராப் வச்சிண்டிருந்தான். மெல்லி அரும்பு மீசையும், இரண்டு பாறைகள் வைத்தது போன்ற அகன்று உருண்டு திரண்ட மார்பும், அந்த மார்பை ஒட்டிப் போடப்பட்டு மெல்லிய மல்ஜிப்பாவும் என் தங்கையின் ‘கணவன்’ மேல் எனக்குள்ள மதிப்பை அதிகப்படுத்தின. 

வேண்டாத புருஷனிடம் வாழ்க்கைப்பட்டு வேதனையோடு வாழ்நாளைக்கழிப்பதைவிட, பல வேதனைக்குட்பட்டு விரும்பியவளை மணந்து சுகமாகக் காலங்கழிக்கக்கூடாதா? என் கண்ணெதிரே எவ் செல்லத் தங்கையை அந்தப் பட்டணத்தானுக்கு – அந்தக்கிறுக்கனுக்குக் கொடுக்க விடுவேனா? 

கண்ணீரும் கம்பலையுமாக நல்லம்மா மனம்விட்டு, “அண்ணா! நீயாவது இதற்கு ஒரு வழி செய்யக் கூடாதா?” என்று கேட்டு எலி ஆசைத் தீயில் இன்னும் ஆர்வ எண்ணெயை வார்த்தபிறகு என் மனம் சும்மாயிருக்குமா? அப்பாவிடம் எவ்வளவோ எடுத்துச் சொன்னேன்! பலனில்லை. கல்யாணப் பந்தற்கால் நாட்டப்பட்டது. நானும் ஓடியா எல்லா வேலைகளும் செய்தேன். முத்தையன் அந்த ஊரிலேயே இல்லை மதுரைக்குப் போய் விட்டான். 

மாப்பிள்ளை அழைக்கும் நாள். இந்தப் பட்டணத்தான் செஞ்சது இந்தப் புது வழக்கம். அன்று காலையில் அப்பா பிரமாதத் திட்டமிட்டிருந் தார். சாமி ஊர்வலத்துக்கு வருவது போன்ற கியாஸ் விளக்குகள். நாவோ பல்லை நறநறவென்று கடித்துக் கொண்டேன். ‘இந்தக் கல்யாணத்தை நடக்கவிடாமல் செய்யாவிடில் நான் மாரிசாமி இல்லை’ என்று சபதமிட்டேன். இந்தப் பட்டணத்துப் பிள்ளையின் கர்வத்தை ஒடுக்கி அனுப்ப வேண்டும் என்ற வைரித்தனம் என் மனத்தில் திடமாக வைரம் பாய்ந்து விட்டது. மேளக்காரன் கன ஜோராக வாசித்துக் கொண்டு வந்தான். 

ஊரே திரண்டு கூடியிருந்தது. என் ஆட்களும் சமயத்தை எதிர் பார்த்திருந்தனர். ஒருவரையும் அடையாளம் தெரியாதபடி செய்திருந்தேன். ஊர்வலத்தைக் கலைத்து மாப்பிள்ளையைத் தூக்கிக் கொண்டு போய் விடுவது; இல்லாவிடில் அவனுக்கு அந்த ரோட்டுத் நாரால் நன்றாக மீசை, தாடி போட்டுவிடுவது என்று திட்டமிட்டேன். 

கோயிலிருந்து கிளம்பி மெல் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது சாரெட்டு. இந்த அழகில் சுந்தரம் கார் வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தானாம்; துடைப்பக்கட்டை! 

அங்கேயோ ஒவ்வொரு விநாடியும் தன் தலையெழுத்தை எண்ணி விம்மிக் கொண்டிருந்தான் தங்கை நல்லம்மாள். 

ஊர்வலம் குறிப்பிட்ட இருட்டான திருப்பத்தில் திரும்பும்போது குபீரென நம் கறுப்பு முகமூடிக்காரர்கள் பாய்ந்தனர். ஒரே குழப்பம். அதிலே நான் செய்த பெரிய தவறு ஒன்று. மாப்பிள்ளைப் பையனை நானே போய் அவன் மூக்கைப் பிடித்து ஆட்டி, ‘சிகரெட் பிடிக்கும் நாயே இந்தா சுருட்டு’ என்று புகையிலைச் சுருளைத் திணித்தேன். இதனால் ஊர்வலத்தில் கலாட்டா செய்தது நானென்று தெரிந்துவிட்டது. 

இந்தப் பெருத்த குழப்பம் பெரும் பரபரப்பை மூட்டி விட்டது. சுந்தரம் நிச்சயம் இனி இந்த ஊரில் இருக்க முடியாது என்று சொல்லி விட்டானாம். பாஸ்கர முதலியார் குழப்பம் செய்தவன் நான் என்றறிந்ததும் என் பெயரில் உடனே போலீஸில் புகார் கொடுத்து விட்டார். நான் இரவு அங்கு தங்கியிருந்தால்தானே! 

காலையில் எழுந்து ஊர்ப்பக்கமாக வந்து கொண்டிருந்தேன். என் வீட்டு வாசலில் போலீஸ் கூட்டம். என்னைக் கைது செய்து அழைத்துப் போனார்கள். ஆ! அந்தப் பாஸ்கர முதலியார் உறுமிய உறுமல்! 

கோர்ட்டிலே அன்றே – மாஜிஸ்டிரேட் முன்பு கம்பீரமாகப் பேசினேன் பாரு! இன்னமும் நன்றாக நினைவில் இருக்கிறது அது. ‘பிடிக்காதவனுக்குப் பெண்ணைக் கல்யாணம் கட்டிக் கொடுக்கும் அநியாயத்தைத் தீர்க்க அப்படிச் செய்தேன்’ என்றேன். 

25 ரூபாய் அபராதம் போடப்பட்டது. பூ! 25 ரூபாயில்லை; 2500 ரூபாய் ஆனாலும் செலுத்த மாட்டேனா? சபதமல்லவா நிறைவேறியது! 

வீட்டுக்குள் நுழைந்தேன். தகப்பனார் ‘ஜிவுஜிவு’க்கும் முகத்துடன் காத்துக் கொண்டிருந்தார். என் அண்ணன் உட்கார்ந்திருந்தான். தங்கை நல்லம்மா நின்று கொண்டிருந்தாள். 

“ஏ… கோடாரிக் காம்பே… என்னதுக்கடா என் வயிற்றிலே பிறந்தே?” என்று என்னென்னவோ கர்ஜித்தார். 

நான் இன்னும் உரத்த குரலில் பேசினேன். ‘அப்பா… என்னைத் கோடாரிக் காம்பென்றோ, வேறு என்ன வேணுமோ பேசுங்கள். அருமைத் தங்கையை ஆபத்திலிருந்து தப்ப வைத்தேன். அவள் வாழ்நாள் முழுதும் படப்போகும் துன்பத்திலிருந்து தப்ப வைத்தேன் அவள் விரும்பிய முத்தையனை உடனே மணக்க ஏற்பாடு செய்யுங்கள்! என்றேன். உடனே, ‘முத்தையன் மதுரையில் இருக்கிறான்… தந்து அடியுங்கள்’ என்றும் கூறினேன். 

‘பொய்… பொய்… எனக்கு ஒருத்தர் மேலும் பிரியம் இல்லை’ என்று விம்மினாள் நல்லம்மாள். 

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. தலை சுழன்றது. அதே சமயம் எ அண்ணன் குபீரென என்மீது பாய்ந்து என் முகத்திலும், முதுகிலும் ‘பட்பட்’ என்று தாக்கினான். என் கிழத் தகப்பனாரும், ‘சண்டாளன்று கௌரவத்தைக் குலைத்த கழுதை’ என்று காலால் எட்டி எட்டி உதைத்தார். 

‘வெடுக்’கென்று எழுந்தேன். நான் அருமையாகக் கருதிய என் தங்கையை நோக்கினேன். அவள் தலை குனிந்திருந்தாள். 

‘அடி… கள்ளி! இப்படியா மாறினாய்? உன் நன்மைக்காக எப்பேர்ர் பட்ட காரியம் செய்தேன். நீ வாழ்நாள் முழுதும் சுகமாக இருக்க எனக்கு வரும் ஆபத்தையும் பொருட்படுத்தவில்லையே… இப்பொழுது நீ யார் மேலும் அன்பு இல்லை என்கிறாயே’ எனப் படபடப்புடன் பேசிக் கொண்டே போனேன். 

என் அண்ணன் மறுபடியும் கோபக் குரலில், ‘போடாகழுதை! பெரிய சீர்திருத்தக்காரன்! ஆபத்தைக் காத்தானாம். வீட்டை விட்டு ஓடிப் போ கழுதை. ஊர் காரி உமிழ்கிறது. இதனால் ஒரு பெண்ணில் வாழ்க்கையையே கெடுத்தாய்… ஜாக்கிரதை!’ என்று கழுத்தைப் பிடித்து ஒரு நெம்பு நெம்பினார். 

அப்போது வைத்த வைராக்கியம்தான்; ஊரிலிருந்து சென்னை வந்தேன். 

ஒரு லுங்கிக் கடையில் சிறு வேலை கிடைத்தது. மறு வாரமே பர் போகும் பாக்கியம் கிடைத்தது. பர்மா சென்று சேர்ந்தேன். அப்பொழுது எனக்கிருந்த நிலையை இப்பொழுது நினைக்கும்போது உடல் சிலிர்க்கிறது. ஊரை வெறுத்தேன்; உற்றாரை வெறுத்தேன். 

ஒரு கணப் எல்லாரையுமே வெறுத்து விடக்கூடிய வெறுப்பு உணர்ச்சி பொழுதில் அந்தக் களங்கமற்ற என் உள்ளத்தில் – யாருக்கும் தீங்கு நினையா என் உள்ளத்தில் – வந்து புகுந்துவிட்டது. 

பர்மா வாழ்க்கை மிகவும் நன்றாகத்தானிருந்தது. ஒரு கடிதம் கூட நான் ஊராருக்கும், உற்றாருக்கும் போடவில்லை. இந்த யுத்தம் வந்ததே, அப்பொழுதுகூட அசைந்தேனா நான்? பர்மாவிலேயே இடம் மாறிக் கொண்டிருந்தேனே தவிர, பயந்து இந்தியா திரும்பவில்லை. 

ஆனாலும் காலம் மனிதனை ஒரே நிலையில் இருக்கச் செய்வதில்லை. கடந்த ஆறு மாதங்களாகவே, என் மனதே சரியாயில்லை என்று சொல்லியிருந்தேனே! ஏன் என்று எனக்கே புரியவில்லை. 

என்னதான் நல்லம்மா தனக்கு யார் மேலும் பிரியமில்லை என்று சொல்லிவிட்டாலும் அப்பாவும் அண்ணனும் என்னை அடித்து விரட்டி விட்டாலும் பதினோரு வருஷமாய்ப் பிரிந்த பாசம் என்னைஇப்பொழுது தான் அழுத்தத் தொடங்கியது. 

அப்பா இருக்கிறாரோ, போயிட்டாரோ? பழைய சம்பவங்களை நினைக்கும்போதே கதை மாதிரிதான் இருக்கு. நல்லம்மா என்ன ஆனாளோ… என நினைக்கும்போது அவள் கல்யாணத்துக்காக நான் பாடுபட்டது வெறும் வீண்தானா என்ற எண்ணம் இப்பொழுது தோன்றி வேதனையை வளர்த்து என் நினைவை அழகுப்பட்டிக்கு அழைத்துச் செல்கிறது. இன்னும் நான்கு நாள்தான்…” என்று கூறி முடித்தான் மாரிசாமி. 


கண்கலங்கியிருந்த வடிவேலுவின் முகம் இப்பொழுது மாறி யிருந்தது. ஏதோ சொல்ல வாயெடுத்தான். 

”மாரியண்ணே! கதைன்னு சொல்லி நெஞ்சு உருக்கற சம்பவத்தைச் சொன்னீங்க. இப்போ இந்த அலை கடலைப் போல உங்க நெஞ்சு தவிக்கிறது எனக்குத் தெரியும். நீங்க இந்தச் சம்பவத்தைச் சொன்ன பிறகு நான் பிற்பாடு சில சொல்லி முடிச்சுடறேன் அண்ணே! 

நீங்க பர்மாவுக்கு கண்காணாமே போயிட்டீங்க. ஒரு பொருள் இல்லாது இருக்கும்பொழுதுதான் அதைப் பற்றிய நினைவு வருகிறது. நீங்க போனப்புறம் உங்க வீட்டிலே எல்லாரும் உங்களையே நினைக்கத் தொடங்கினாங்க. 

பாஸ்கர முதலியாரே ஒரு நாளைக்கு உங்கள் அப்பாவிடம் வந்தார். நல்லம்மாவை எப்படியாவது முத்தையனுக்கே கல்யாணம் செய்து வைத்து விட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்தப் பையன் சுந்தரம் ஏற்கெனவே நல்லம்மாவைக் கட்டிக்க மாட்டேன் என்று பிடிவாதம பிடித்தானாம். இவர்களாகவே அவனைப் பலவந்தப் படுத்தி இருக்கிறார்கள். 

நல்லம்மாவுக்கு முத்தையன் பேரில் ஆசையென்பதை ஒரு நாளும் மறைக்க முடியாது. அது உங்கள் தகப்பனாருக்கும் தெரியும். அன்று கல்யாண கலாட்டா ஆனவுடன் அவளை இவர்கள் பயமுறுத்தி முத்தையன் மீது ஆசையென்பதை வெளியில் தெரியப்படுத்தினா வெட்டிப் போட்டுடுவேன் என்றார்களாம்… அதனால்தான் ‘எனக்கு யார் மீதும் ஆசையில்லை’ என்று அவள் கூறினாளாம். அப்பொழுது அவள் இதயம் வெடித்துவிடும் போலிருந்ததாம். 

முத்தையன் – நல்லம்மா திருமணம் மிகவும் ஜோராக நடந்தது; எல்லாரும் உன்னைத்தான் நினைத்துக் கொண்டார்கள். உன் துணிவை அப்பொழுது போற்றிப் பயன் என்ன? 

கல்யாணமாகி மூன்று வருஷம் கழிச்சு உங்கப்பா தவறிட்டார். முத்தையனும் மதுரைக்குப் போய்ச் சேர்ந்தான். இரண்டு குழந்தைகள், 

நீங்க கதை சொல்ல ஆரம்பிச்சபோது முதலில் இது ஏதாவது பொழுது போக்கு கதையாயிருக்கும்னு நினைச்சேன். ஆனால், எட்டு வருஷங்களுக்கு முன் முத்தையன் சொன்னதும் இதுவும் ஒத்துப் போன போது எனக்கே ஒரு படபடப்பு உண்டாச்சு. 

முத்தையன் வீட்டுக்கு எதிர்வீட்டிலிருக்கும்போது, நாங்கள் ரொம்பவும் பழகிப் போனோம். உங்க தங்கச்சியையும் நன்றாகத் தொம்’ என்றான் வடிவேலு. 

அவன் முகத்தில் புதுத் தெளிவு தோன்றியிருந்தது. 

“ஆ… நல்லம்மாவுக்கும் முத்தையனுக்கும் கல்யாணமாகி விட்டதா?” என ஆச்சர்யத்தால் கூவினான் மாரிசாமி. அவன் முகத்தில் அவனுடைய இலட்சிய வெற்றியின் பிரதிபலிப்பு ஒரு கணம் தோன்றி மறைந்தது. 

‘எஸ்.எஸ். ரமோலா’ கப்பல் நடுக்கடலில் சென்று கொண்டிருந்தது. 

– 1949 

– செவ்வந்திப்பூ சிங்காரி, கலைமாமணி விக்கிரமன் எழுதிய சமூகச் சிறுகதைகள், தொகுதி-1, முதல் பதிப்பு: 2010, யாழினி பதிப்பகம், சென்னை.

விக்கிரமன் கலைமாமணி விக்கிரமன் (மார்ச் 19, 1928 - டிசம்பர் 1, 2015) நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார். 54 ஆண்டுகள் தொடர்ந்து "அமுதசுரபி" மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றியபின் இலக்கியப் பீடம் மாத இதழின் ஆசிரியரானார். இவர் வரலாற்றுப் புதின ஆசிரியருமாவார். முதலில், வேம்பு என்ற புனைப்பெயரில் எழுதத் தொடங்கி, பின்னர், விக்கிரமன் என்று மாற்றிக் கொண்டார். ஆக்கங்கள் உதயசந்திரன்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *