எழுத்தாளர் திசேரா, இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், திறனாய்வாளர் மற்றும் கதைஞர் ஆவார்.
முக்கிய சிறப்பம்சங்கள்:
படைப்புகள்: ஈழத்து இலக்கியச் சூழலில் நவீன சிறுகதை வடிவம் மற்றும் யதார்த்த கதைசொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை உருவாக்கியவர். இவரது ‘ஏவிவிடப்பட்ட கொலையாளி’ (2008) மற்றும் ‘வெள்ளைத்தோல் வீரர்கள்’ போன்ற படைப்புகள் பெரிதும் அறியப்பட்டவை.
பின்னணி: மாற்றுப் பாலினத்தவரின் (ஓரினச் சேர்க்கையாளர்கள்) மன உணர்வுகள், யுத்தத்தின் பின்னரான வலிகள், மற்றும் சமூக நீதி சார்ந்த கதைகளை ஆழமாக எழுதுவதில் வல்லவர்.
பங்களிப்பு: சிறுகதைகள் எழுதுவதோடு மட்டுமன்றி, இலக்கிய விமர்சனங்கள், வாசிப்பனுபவக் கட்டுரைகள் மற்றும் ‘எண்கள்’ போன்ற படைப்புகளையும் எழுதியுள்ளார்.
உள்நோக்கல் – திசேரா – கா மாத இதழ், ஆவணி 2005
ச.தியாகசேகரன் எனும் இயற்பெயர் கொண்டவர். கபாலபதி, வெள்ளைத் தோல்வீரர்கள் எனும் இரு சிறுகதைத் தொகுதிகளின் உரித்தாளியிவர். ஈழத்தின் புதுவகையான எழுத்து முறைமையைக் கொண்ட முக்கியமான படைப்பாளி. இவரின் ஒவ்வொரு சிறு கதைக்குமான களமும், வடிவமும் விரிந்து கொண்டே செல்லும், இவரின்தனித்துவமே. அதுதான்.
வழைமையான பேட்டி காணல் முறையில் இருந்து விலகி அவரே தனது படைப்புகள் பற்றி கூறிய கருத்துக்கள்.
அறிமுகம்
வாழ்வுதிணித்திருத்த தனிமையும், காலம் காட்டிய குரூரமும் என்னுள் புகைந்து கொண்டே இருந்தது. இயலாமை ஏற்படுத்திய விரக்தி, சாதிக்க வேண்டும் என்றவெறி, நிர்ப்பந்திக்கப்பட்ட தனிமை தேவைப்பாடாய் போனமை. இவைகளால் எழுந்த வாசிப்பு ஆர்வமும் – சிந்தனையும் என்னுள் இருந்த விரக்தியை எழுதத்தூண்டியது.
எழுத்து
பிரபலமாக வேண்டும் என்ற ஆரம்பகால உணர்வு வித்தியாசமாய் செய்யவேண்டுமென்ற தேடல். குறைந்த வாசிப்பில் நிறைய எழுதத் தூண்டியது. ஆரம்ப கவிதைமுயற்சி “போலச்செய்தல்” தன்மையை காட்டுகின்றது. என எனக்கு உணர்த்தப்பட்டதால் கவிதை தன்மையுடன் சிறுகதைக்குள் நுழைதல் நிகழ்கிறது. (21 வயதில்) பொருளாதார நிலைமை காலத்தை நகர்த்தியதால் 26 வயதிலேயே “கபாலபதி”யை கொண்டுவரமுடிந்தது.
என்னதான் எழுதினாலும் எனது எல்லைகளையும், சிந்தனையையும் தாண்டி கதைகள் தன்பாட்டிலேயே என்னைக் சென்றுகொண்டு இருக்கின்றது. என் நிலைப்பாட்டுள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கி கோணலாய் போனவை அதிகம் என்பதால் அதை அதன் பாட்டில் விடுவதே சரியாகப்பட்டது.
எதுவும் தராத திருப்தியை எழுத்துக்களும், வாசிப்பும் தருகின்றது. கபாலபதி – நம்தேசத்தின் சர்வதிகாரி, வெள்ளத்தோல் வீரர்கள் சர்வதேசத்தின் சர்வாதிகாரிகள், சிந்தனைகளின் ஆக்கிரமிப்பாளனும் கூட, இரண்டும் பூரண திருப்தியை தராத தொகுப்புக்களே (என்னளவில்) இதனாலேயே ஒவ்வொரு நாளிலும் புதிதாய் பிறக்க, எழுத நினைக்கின்றேன்.
என்னுள் எப்போதும் கோபம் ஆத்திரம் இருந்தது, இருக்கின்றது. போராட துணிந்த போது கையில் பேனை கிடைத்தது. என் வீட்டுள் கிடந்த புத்தகங்கள் வழிகாட்டின. (சகோதரனின்) நடந்து கொண்டே இருப்பேன், என்மூளை இயங்கும் வரை போராடிக்கொண்டே இருப்பேன். எழுதுகோல் இருக்கும் வரை (குறைந்தது வலது கையில் ஒரு விரலாவது இருக்கும் வரை) சிந்தனை செயற்படும் வரை கூட.
பலவேளைகளில் தோணுகிறது எழுதுவதால் தான் வாழ்கிறேனோ என்று, கனவுகளைப் போல நனவுள்படரும் மேகம் சிலவேளைகளில் பயம் காட்டுகிறது. எழுதுவதால்தான் சாகப்போகிறாய் என்று. எங்கு எதில்தான் இல்லை, வாழ்வு – மரணப் போராட்டம். மரணத்துடன் விளையாடுவதும், அதை நேசிப்பதும் – எழுதுவதும் அலாதியான இன்பத்தை தருகிறது.
அதனால் அதைகுறைத்து முழு மூச்சிலும் நுழையக் கூடியதாக தொடராய் சொல்வது உணர்வு சிந்தனை ஒருங்கு சேர செயற்பட இலகுவான வழியாகப்பட்டது. மற்றையது எனக்கான ஒரு மொழி நடை தேவைப்பட்டது. அது இப்போது பழையதாகி விட்டதாக படுவதால் புதியதாய் ஒன்று தேவை.
மற்றையபடி ஒவ்வொரு கதைக்கும் பல கிளைக்கதைகள் உண்டு. வாசிப்பவரை சார்ந்து அது இன்னமுமொரு தளத்துக்கு கொண்டு செல்லவேண்டும். என்ற அடிப்படை கருத்து என்னுள் உண்டு. வெறும் பொழுது போக்காகவன்றி உள்ளுணர்வில் சிந்தனையில் சில அதிர்வுகளை உண்டுபண்ண வேண்டும்.
வெள்ளைத்தோல் வீரர்கள் – ஆக்கிரமிப்பாளர்கள் நில,
மொழி, சிந்தனை, மத… சகலவற்றக்குமான
எதிர்வினைபற்றி
விளங்கவில்லை, புரியவில்லை. யாருடைய குறைபாடு சிந்தித்தேன், சிந்திக்கின்றேன். ஆனால் யாரும் விளங்கிக்கொள்ள கூடாது. என்பதற்காக எழுதுவதில்லை. ஒருபடைப்பு யாருக்குமே புரியப்படாமல் இருப்பதில்லை. எல்லோருக்குமே புரிய “பாட்டி வடைசுட்ட” கதை தான் சொல்லவேண்டும். இது தர்க்கமானாலும் எங்கோ ஒரு நியாயம் இருப்பதாய்ப்படுகின்றது.
நாம் போகவேண்டிய தூரம் அதிகமிருப்பதாக படுகிறது. வேகமாகவும் செல்ல வேண்டும். அடம்பிடிக்கும் குழந்தையையும் இழுத்துச் செல்ல வேண்டும்.
இன்னமும் சந்தேகம் நீள்கிறது. எதையும் கேள்விக்குட்படுத்துவது இயல்பு, சிறுபிள்ளை முதல் (அப்பா சலித்துக் கொண்ட, வாயை முடிய சந்தர்ப்பங்கள் பல) இலக்கியம் மக்களைச் சென்றடையவேண்டும்.
யார் மக்கள் ?
எழுத்தாகவா? செயற்பாடாகவா ?
கதைகளை துண்டுபிரசுரமாக்கி வழங்க வேண்டுமா?
அல்லது
அவர்கள் முன்சென்று கதைகளை கூற வேண்டுமா?
இலக்கியம் என்பது பிரசங்கமா?
படைப்புகள் வெறும் பொழுது போக்குக்கானதா?
சிந்திக்கச் செய்ய வேண்டிய அவசிய மில்லையா?
வாசிப்பில் மேலோட்டமான வாசிப்புக்குத் தான் இலக்கியமா ? கருத்தான்றி வாசித்தலுக்கு இல்லையா?
இவற்றைப்போல் இன்னும் பல…
ஆனால் ஒன்று இயந்திர வாழ்க்கை எங்களை சோம்பறிகளாக்கி விட்டதாய் படுகிறது. அறிவு மழுங்கடிக்கச் செய்யப்பட்டு விட்டன.
(என்னை வளர்த்துவிட்டதும், துணைநிற்பதும் பலர், நினைத்துக் கொள்கின்றேன்.)
திசேராவின் படைப்புலகும், படைப்புகளும் – செங்கதிர், வைகாசி 2010
மொழிவரதன்
‘திசேரா தியாகசேகரன் ஆரையம்பதியில் பிறந்தவர். மலையகத்தில் வளர்ந்தவர், படித்தவர். புழங்கியவர். மலையக சமூகவியலை உணர்ந்தவர். இவரின் தந்தை ஓர் ஆசிரியர். மலையகப் பகுதிகளில் கடமை புரிந்தவர். ஹோல்புறுக் பிரதேசம் இவரது தந்தைக்கு பரிச்சயமானது ஏனெனில்,
அவர் ஹோல்புறுக் தமிழ் மகா வித்தியாலயத்தில் உதவி அதிபராக கடமை புரிந்திருக்கிறார். தந்தை மாத்திரமல்ல இவரது மூத்த அண்ணனும் தனி யார் ‘டியூட்டரி? ஒன்றினை பசுமலையில் நடத்தியவர். அவரும் நாடகத் துறையில் ஈடுபாடுகொண்டிருந்த ஒருவர்.
திசேராவின் சின்ன அண்ணன் ச.மணிசேகரனும் ஓர் ஆசிரியரே. இவர் நியமனத்தால் விஞ்ஞான ஆசிரியரெனினும் ஈடுபாட்டால் இந்து/சைவசமய/ தமிழ் கற்பிக்கும் ஆர்வலர்.
ச.மணிசேகரனின் இலக்கிய ஆர்வம் எழுத்துத் துறை குறிப்பிடத்தக்கதே. ஹோல்புறுக் டயகம பிரதேச இலக்கிய முயற்சிகளில் அவரது பங்களிப்பு 1986 – 1992 காலப்பகுதிகளில் குறிப்பிடத்தக்கனவே. இயல் இலக்கிய வட்டம் மணிசேகரன் முயற்சியின் பிரதிபலிப்பு.
திசேரா, குழந்தை பாலா போன்றோர் உருவாக களமாக இருந்தது இயல் இலக்கிய வட்டமே. இப்பிரதேசத்தில் அதிபராக கொத்தணி அதிபராக கட மையிலிருந்த மொழிவரதன் எனும் மகாலிங்கம் போன்றோரை இணைத்துக் கொண்டு ‘இயல்’ இலக்கிய வட்டம் ‘இயல்’எனும் இலக்கியச் சஞ்சிகையை இலக் ஹோல்புறூக் பஸார், அக்கரப்பத்தனை எனும் விலாசத்திலிருந்து வெளியிட்டது.
இந்தப்பின்னணியில் உருவாகியவர்தான் ‘திசேரா’ எனும் படைப்பாளி. ஹோல்புறூக் பிரதேசம் அல்லது ஆகராஸ் எனும் டயகம பிரதேசம் பல இலக்கிய வாதிகளை படைப்பாளிகளை உள்வாங்கிய பிரதேசம் எனலாம். அல்லது உரு வாக்கிய பிரதேசம் எனலாம்.
மன்றாசியில் பிறந்து வளர்ந்த கவிஞர்/ கல்விமான் சு.முரளிதரன் குறிப்பிடத் தக்கவர். அகளங்கள் தர்மராஜா, பசுமலையோகன் எனும் பெயரில் எழுதிய கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் யோகராஜா, எழுத்தாளர் மு.சிவலிங்கம், மொழிவரதன் எனும் மகாலிங்கம் போன்றோர் இப்பிரதேசத்தை ஏதோ ஒரு வகையில் இலக்கியவளத்தால் போஷித்தவர்கள். இந்தப் பின்புலத்தில் திசேரா இயல்கலை வட்டத்தில் இயங்கியவர்.
1996 ஆம் ஆண்டளவில் பிரதேச இலக்கிய கர்த்தாக்களை பாராட்டும் நிகழ்வு ஒன்றினை ஹோல்புறூக் த.மவியில் அதன் அதிபர் மகாலிங்கம் அவர்கள் அங்கு அன்று கடமைபுரிந்து கொண்டிருந்த சமணிசேரனின் ஒத்துழைப்புடன் செய்திருந்தார்.
சாரல்நாடன், குறிஞ்சி தென்னவன், சு.முரளிதரன், மு.சிவலிங்கம், மல்லிகை சி.குமார் போன்றோர் பாராட்டப்பட்டனர். காலம் செல்லச்செல்ல இயல் இலக்கிய வட்டம் அதன் செயற்பாட்டை இழந்திருந்தது. இதன் தொடர்ச்சியாக அதன் குழந்தையாக “மூங்கில் கலை இலக்கிய வட்டம்” பிறந்தது.
குழந்தை பாலா எனும் K.பாலக்கிருஷ்ணனின் முயற்சியின் தோற்றமே மூங்கில் கலைவட்டம். தி.ஞானசேகரனின் ‘லயத்துச் சிறைகள்’ மொழிவரதனின் ‘மேகமலைகளின் ராகங்கள்’ (சிறுகதைத் தொகுப்பு). ‘ஒரு நாடும் மூன்று நண்பர்களும் (குறுநாவல் தொகுதி), சிவனு மனோகரனின் ‘ஒருமணல் வீடும் சில எருமை மாடுகளும்’ (சிறுகதைத்தொகுதி) போன்ற நூல்களையும் திசேராவின் ‘ஏவிவிடப்பட்ட கொலையாளி’ (குறுநாவல்) போன்ற படைப்புக்களை இப் பிரதேசத்தில் அறிமுகம் செய்தது. ‘ஆகராஸ் கலை இலக்கிய வட்டம்’ மொழி வரதனின் தலைமையில் 1989ம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டாலும் அது காத்திரமான வேலைகளை செய்யவில்லை அதற்குப் பல காரணங்கள் இருந்தன. இந்தப் பின்னணியில் ‘ஆக்ராஸ்’ பிரதேசம் திசேராவை மாத்திரமல்ல மேலும் பலரை அறிமுகம் செய்துள்ளது, உருவாக்கியுள்ளது.
கிளாஸ்கோ அருண் சிவஞானம், குமரன் நடராஜா, குமரன் மகேஸ்வரி, ஷீலா மாணிக்கம், அழகு கனகராஜ், டயகம கணபதி, டயகம காளிதாசன் போன்ற பல புதிய இளம் படைப்பாளிகளை அறிமுகம் செய்து வருகின்றது. திசேரா இந்தப் பின்புலத்தில் வந்த ஒருவரே. கணித ஆசிரியரான திசேராவின் எழுத்து முயற்சிகள் விரிவாக ஆராயப்பட வேண்டியவையே.
சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, விமர்சனம், நாடகப் பிரதி, நாடகம் எனப் பல துறைகளிலும் தனது கை வண்ணத்தைக் காட்டி வருபவர் எனில் பிழையில்லை. பாரம்பரியமான கதை ‘சொல்லலிருந்து விடுபட்டு உமா வரதராஜன், கோணங்கி போன்றோரின் பாங்கில் ஆரம்பம், உச்சம், முடிவு என்று ஏதுமில்லாது கதையை நகர்த்திச் செல்லும் திசேராவின் ‘வெள்ளைத் தோல் வீரர்கள்’ (சிறுகதைத் தொகுதி), ‘கபாலபதி’ (சிறுகதைத் தொகுதி) போன்றவை களைவிட ‘ஏவி விடப்பட்ட கொலையாளி’ (நாவல்) வேறுபட்டுள்ளது என்பது குறிப்பிடப்படவேண்டிய ஒன்றாகும்.
கதையில்லா கதையாக மாறுபட்ட கதைசொல்லும் பாங்காகி வெள்ளைத் தோலில் தொடங்கிய ‘திசேரா’ ஒரு விவரணக் கதையாக ‘ஏவி விடப்பட்ட கொலையாளி’யை உலவவிட்டுள்ளார் எனலாம்.
மிக நெருக்கமும், இறுக்கமும், ஆழமும் கொண்ட அவரது எழுத்துப் போக்கு இக்குறுநாவலில் சற்றே இறங்கி இலகுபடுத்தப்பட்டுள்ளதை அவ தானிக்கலாம். கலை உணர்வு, கலாபூர்வமான கதை நகர்த்தல் அவரது பாணி ‘கபாலபதி’ அவரது கதைகளின் மையம் எனலாம்.
வட கிழக்குப் பிரச்சினைகள், யுத்தம், யுத்த சீரழிவுகள், சீரழிந்த “பேய் அரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” – வெளிப்பாடு அவரது ‘கபாலபதி’ எனில் பிழையில்லை.
பாலியல் வல்லுறவு, மனிதம் செத்த மயான வாழ்வு, நீதிமகள் தலைகுனிந்த நிலை, அகதிகள் வாழ்வு, காக்கிச்சட்டைகளின் அட்டகாசம் என்பனவற்றை ‘மாண்டான் சரிதம்’ பறைசாற்றும்.
கபாலபதி மிகச் சிறப்பாகவே யுத்தம் பற்றி கூறுகிறது. கதைகளை வாசித்துச் செல்லும்போது வட கிழக்கு பிரச்சினைகளின் கெடுபிடிகள் தெரிகிறது ன்றாலும் கதையை வாசித்து விளங்கிட ஒரு ‘பரிச்சயம்’ தேவைப்படுகிறது. திசேராவின் பாணி ஒரே முறையில் முழுமையாக விளங்கிட இயலுமா என்பது ஆரம்ப வாசிப்பாளர்களுக்கு ஒரு வினாவாகவே இருக்கும்.
ஆனால், ‘ஏவிவிடப்பட்ட கொலையாளி சுனாமியின் அவலத்தை அப்படியே அம்பலப்படுத்தும் ஒரு வரலாற்றுத் தகவல் பொக்கிஷமாகும். சுனாமி அனர்த்தத்தின் அருட்டலில் முகிழ்த்த ஒரு குறுநாவல் இதுவாகும்.
நேரில் அதைக் கண்டவர்கள், நேரில் அதில் பாதிப்புற்றோர் இன்றும் அச்சம்பவத்தை (2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் நாள்) மறக்கவில்லை.
நெஞ்சைப் பிழியும் நிகழ்வுகளின் கலவையே சுனாமி அனர்த்தம். மனிதன் ஒரு மகத்தான படைப்பு என கார்ள்மாக்ஸ் கூறினார். என்றாலும் சுனாமி மனித னின் பல்வேறு முகங்களை தோலுரித்தது என்பதே அதன் மற்றொரு கோணமாகும். ‘பார்த்தசாரதியின்’ கங்கை இன்னும் வற்றிவிடவில்லை என்பது போல் மனிதர்களும் வாழ்கிறார்கள் என்பதே யதார்த்தமாகும்.
பாம்பு மாநாடு (கல்லடி பாலத்தடியில் பாம்புகள் கூடியது ஒரு உண்மை நிகழ்வாகும்). பரதேசி வந்தது (இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக கூறினார்கள்), வல்லுறவு (இப்படி நிகழ்ந்தது உண்மையே). விரல்களும் காதுகளும் (இது நிகழ்ந்த ஒன்றே) மேற்குறிப்பிட்ட விடயங்கள் சுனாமி அனர்த்தத்துடன் பின்னிப் பிணைந்துள்ளவையாகும்.
சுனாமி அனர்த்தத்தினை மையமாகக் கொண்டெழுந்த கதையே இந் நாவல். எனினும் பாரம்பரியமான கதாபாத்திரங்கள் முனைப்பு பெறவில்லை அதே வேளை அனர்த்தத்தின் ஒரு விபரணப்பின்னணியே முன்னிலைப்படுத்தப்பட் டுள்ளது. கதாபாத்திரங்கள் ஊடாக கதை நகரவில்லையெனினும் கூட நடந்த நிகழ்வுகளின் அருட்டுணர்வுகள் நாவலில் இழையோடி வருகின்றன. கொடுங் கோன்மை மிக்க அனர்த்த விளைவுகள் அவரது – திசேராவின் எழுத்துக்களில் மிக நன்றாகவே பளிச்சிடுகின்றன. “வீட்டுச் சுவரைச்சாய்த்து பலரை நசித்தன, பனை மரங்களை வீட்டுக்குள் கொண்டுவந்தன, மலசல கூடங்களை தலை கீழாக்கிப் போட்டன” போன்ற அவரது விபரிப்பு சுனாமியின் கோர தாண்டவத்தை கண்முன் கொணர முயல்கிறது.
“பிணங்கள் வைக்கக்கூட இடமில்லாமல் போனது. ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கப்பட்டன. பிணங்களிலிருந்து எழுந்த நெடி மூக்கை உறுத்தியது. தன் குடும்பத்தில் ஒருவரையாவது பார்த்துவிடும் – பிணமாகவேனும் – எண்ணத்து டன் வந்த ஒருத்தி வயிறு குமட்ட வாந்தி எடுத்தாள்… போன்றன உயிர்ப்பான எழுத்து வன்மையை காட்டுகின்றது.
ஊர்கள், கிராமங்கள் அழிக்கப்பட்டுக்கிடந்தன – “மணலால் மூடுண்டு இருந்த கிராமத்தின் பாதியை அவர்களே தோண்டி ஆராய்ந்தார்கள்” என்ற வாக் கியம் அழியுண்ட நாவற்குடாவை கண்முன் கொணர்கிறது. குறியீடாகவும், பூடகமாகவும் கதைகூறும் திசேராவின் உத்தி ‘ஏவிவிடப்பட்ட கொலை யாளி’யிலும் பிரதிபலிக்கிறது. அவர் சொல்லும் சந்தனக்காடு, மினியின் கதை, நுரைக்கடிதம், முதலை மாநாடு போன்றனவற்றை மேற்குறிப்பிட்ட விடயங்களுக்கு உதாரணமாக குறிப்பிடலாம்.
‘முதலைகளெல்லாம் பதுங்கி தங்கள் நிழலை தாங்களே தின்று ஊருக்குள் நகரத் தொடங்கின.
இது எழுதிமுடிக்கையில் வயிறும், கன்னமும் பருத்து இறக்கை முளைத்துப் பறந்து திரிந்த முதலைகள் மட்டுந்தான் தென்பட்டன.
இப்போது குழந்தை முதலைகள் கூட பிறக்கும்போதே இறக்கையுடன் பிறக்கின்றன.
அவைகளுக்கே சகல தலமைப்பதவிகளையும் ஒப்படைப்பதென ஆலோசனை நடத்தப்பட்டது.
‘திசேரா’ இவ்வாறு பூடகமாக கதைகூறும் பாங்கு அவருக்கே உரியது.
‘ஏவி விடப்பட்ட கொலையாளி’யின் புத்தக அமைப்பு கைக்கு எடுத்து வாசிக்க சுகமாகவுள்ளது. இறுக்கமான நூலினால் கட்டப்பட்டு தெளிவான எழுத்துப் பதிப்புக்களுடன் வெளிவந்துள்ளமையை குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். கச்சித மான புத்தக வடிவமைப்பு நேர்த்தியான உள்ளடக்கம் நன்று. என்னுரை, முன்னுரை ஏதும் பெரிதாக இல்லையெனினும் கடைசி பக்கத்தில் திசேராவின் ஒருசில வரிகள் உள்ளன. சித்திரங்கள் ஒரு பிளஸ்பொயின்ட் எனில் அது மிகையல்ல. மிக அருமையான சித்திரக்கீறல்கள் சித்திர ஆசிரியர்களினாலும் பாராட்டப்பட்டுள்ளன.
திசேரா கிழக்கு மாகாணத்தின் மண்ணில் பிறந்தமையால் அந்தக் கடற்பரப்பின் வாசத்தை இரத்தத்தோடு உணர்ந்தவர். அந்த மீனவர்களின் வியர்வை, ஏழ்மை, ஏக்கம்,கனவுகள் அபிலாஷைகளை உள் வாங்கியவர். ஆரையம்பதி போன்ற கடல்வாழ் மக்கள் கூட்டத்தின் நம்பிக்கைகளை உணர்ந்தவர். அவர் ஒரு கணித ஆசிரியராதலால் இலக்கியத்தை புதிய திசையில் நகர்த்தத் துடிப்பவர். அவர் எழுத்து மேலும் மக்கள் இலக்கியம் சார் படைப்புலமாக மலர வேண்டும் என்பதே மக்கள் இலக்கியம் பற்றிப் பேசும், எழுதும் எழுத்தாளனின் வேண்டு கோளாக இருக்க முடியும்.
மிகப்பரந்த உலகில், மிகப் பரந்த இலக்கியத் தடத்தில் ‘என்.ஆத்மா’ போன்றோர்களின் வழிகாட்டலில் சமூகம் சார்ந்த படைப்புக்கள் மேலும் உயிர்த்தெழ வேண்டுமென விழைகிறேன்.
சில குறிப்புகள் – வெள்ளைத்தோல் வீரர்கள். ஆகஸ்ட் 2004
எஸ்.கே.விக்னேஸ்வரன்
மூன்றாவது மனிதன் இதழின் ஆசிரியரும் நண்பருமான எம். பௌஸர் அவர்கள், திசேராவிற்கு இத் தொகுதிக்கான முன்னுரையை எழுதுமாறு என்னிடம் கேட்டபோது, எனக்கு ஒரு வகையில் திகைப்பாகவும் இன்னொரு வகையில் வியப்பாகவும் இருந்தது. திசேராவின் கதைகளை அவ்வப்போது பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். ஏற்கனவே வெளிவந்திருந்த அவரது தொகுப்பொன்றையும் வாசித்திருக்கிறேன். ஒரு சில சிறுகதைகள், தொகுப்புக்கள் தொடர்பான விமர்சனங்களை, அறிமுகக் குறிப்புக்களை எழுதி இருக்கிறேன் என்கிற தகுதி ஒருவருக்கு முன்னுரை எழுதப் போதுமா என்ற திகைப்பை எனக்கு ஏற்படுத்தியது. கூடவே திசேராவின் நூலுக்கு என்னிடம் முன்னுரை கேட்டதற்கான காரணம் என்ன என்ற வியப்பும் ஏற்பட்டது.
நண்பர் பெளசரிடம் காரணத்தைக் கேட்டேன்.
‘அதுதான் திசேராவினதும், எனதும் விருப்பம்’ என்றார் அவர். இதற்கு என்ன பதில் சொல்ல?
மறுக்கமுடியாமல் ஒப்புக் கொண்டேன்.
ஒப்புக் கொண்டு விட்டாலும், தொகுதியைப் படித்து முடித்தபின் அது பற்றி என்ன எழுதுவதென்று முடிவு செய்வது மிகவும் சிரமமாக இருந்தது. தொகுப்பில் அடங்கியுள்ள பன்னிரு கதைகளைப் பற்றியுமான எனது அபிப்பிராயங்களைச் சொல்வதா? ஈழத் தமிழ்ச் சிறுகதைகளின் மத்தியில் திசேராவின் கதைகளுக்கு இருக்கக்கூடிய இடம்பற்றிப் பேசுவதா? அல்லது திசேரா என்ற படைப்பாளியின் படைப்புலகம் என்ன என்று கூறுவதா? என்ற என்னுடைய கேள்விகளுக்கு உடனடியாக என்னால் முடிவுக்கு வர முடியவில்லை.
நூலின் முன்னுரையிலேயே அதிலுள்ள படைப்புகள் தொடர்பான எமது அபிப்பிராயங்களைத் தெரிவிப்பது நூலை வாசிக்கப்போகும் வாசகர்களுக்கு தேவையற்ற முற்சாய்வை ஏற்படுத்துவதாக அமையும் என்பது எனது பொதுவான அபிப்பிராயம். வாசகர்கள் சுயமாக தாமே தமது சொந்த அனுபவத்தை பெறுவதும், விமர்சகர்கள் சுயாதீனமாக நூலை விமர்சிப்பதும் முக்கியம் என்று கருதும் ஒரு நூலின் முன்னுரை, ஒரு போதும் இத்தகைய விமர்சனங்களை, அபிப்பிராயங்களை கொண்டிருக்கக் கூடாது என்பது என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயமாக இருந்து வருகிறது. எனவே அதைத் தவிர்த்து விடுவதென்று முடிவு செய்தேன்.
ஈழத் தமிழ் சிறுகதை இலக்கியத்துள் திசேராவின் கதைகளுக்குண்டான இடம் பற்றிப் பேசுவது கூட ஒருவகையில் மேற்கூறிய முற்சாய்வை ஏற்படுத்தி விடும் என்பதுடன், அது சற்றுக் காலத்திற்கு முந்திய முயற்சியும் கூட என்று தோன்றியது. இது அவரது இரண்டாவது தொகுப்பே என்பதுடன், அவர் இன்னும் பல சிறுகதைகளையும் படைக்கும் பணியில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு இளம் படைப்பாளியும் கூட. இதுவரைவெளிவந்துள்ள தனது படைப்புகள் மூலமாக அவர் தனக்கென ஒரு இடத்தை நிச்சயமாக பிடித்துள்ளார் என்றபோதும், அவரது இடம்பற்றிய ஒரு குறிப்பாக முன்னுரை அமைவது பொருத்தமான ஒன்றல்ல என்று எனக்குத் தோன்றியது.
படைப்பாளியான திசேரா அவர்களை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு படைப்பாளி என்ற அளவுக்கும், சரிநிகரில் சிறுகதைகள் எழுதியவர் என்பதற்கும் மேலாக, உண்மையில் அவர் பற்றி அதிகமாக எனக்கு எதுவும் தெரியாது. சரியாகச் சொல்வதென்றால் அவரது கதைகளுடன் எனக்கிருக்கும் பரிச்சயமளவுக்கு அவருடன் நேரடிப் பரிச்சயம் இருந்ததில்லை. ஓரிரு சந்தர்ப்பங்களில் ஓரிரு வார்த்தைகள் பேசிக்கொண்டதோடு சரி. அதுவும் இலக்கியம் சம்பந்தப்பட்ட உரையாடலாக இருந்ததில்லை.
ஆகவே, சுருக்கமாக அவரது இத்தொகுப்பிலுள்ள கதைகள் மூலமாக வெளிப்படுகிற அவரது படைப்புலகம் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்வது மட்டுமே பொருத்தப்பாடுடையதாக இருக்கும் என்று கருதுகிறேன்.
திசேராவின் படைப்புலகம் எத்தகைய தன்மையை வெளிப்படுத்துகிறது? தன்னைச் சூழவுள்ள உலகு பற்றி, நிகழ்வுகள் பற்றி அதன் இயக்கம் தன்னுள் ஏற்படுத்தும் பாதிப்பு பற்றியெல்லாம் அது எத்தகைய எதிர்வினைகளை ஆற்றுகிறது? அந்த எதிர்வினைகளை அது வெளிப்படுத்தும் முறைமை என்ன? அந்தப் படைப்புலகில் படைப்பாளி தன்னை எவ்விடத்தில் நிறுத்தி வைத்திருக்கின்றார்? என்ற கேள்விகளுக்கான விடைகளைத் தேட முற்படுவது திசேரா என்ற படைப்பாளியை இனங்காண எமக்கு உதவும் என்று கருதுகிறேன்.
திசேரா, தான் வாழும் சூழலின் அனைத்து நிகழ்வுகளாலும் பாதிக்கப்படுகின்ற எல்லோரையும் போன்ற ஒரு நிஜ மனிதராக முதலில் தன்னை இனங்காட்டிக் கொள்கிறார். அச்சம், கோபம், வெறுப்பு, விரக்தி, ஆற்றாமை, நம்பிக்கை என்று மிக இயல்பான மனித உணர்வுகள் அவரது எதிர்வினைகளாக வெளிப்படுகின்றன. இந்த எல்லா உணர்வுகளூடாகவும் அவரிடம் விடுதலை உணர்வும், மனிதநேயமும் அடிநாதமாக நின்று செயற்படுகின்றன.
கோட்பாடுகளுக்கும் சமூக நீதி நியாயங்களுக்கும் கட்டுப்பட மறுக்கின்ற எதிர்ப்புணர்வும் விடுதலை வேட்கையும் அவருக்கே உரிய பாணியில் மேற்சொன்ன உணர்வுகளாக வெளிப்படுகின்றன. அவருக்கே உரிய கோட்பாடுகளும், கருத்துக்களும் எப்படி இருப்பினும் வாழ்வு பற்றிய நம்பிக்கையை அவர் உறுதியாகப் பற்றி நிற்கின்றார். மரணத்தை வரவேற்கின்ற போதிலும் கூட என்பதை அவரது உலகுள் புகுந்து உலவும்போது தெளிவாகக் காணலாம்.
‘முன் கிடந்த கல்லை உதைத்து… நடந்து கொண்டிருந்தேன். … அது என் வழியும் கூட’ (ள் என்பதால்)
‘வாழ்க்கை குரூரமானதென மறுபடி மறுபடி நிரூபிக்கப்பட்டாலும் வாழ்வின் மீதான காதலை யாராலும் உதறி விட முடிவதில்லை’ (சாவு கொண்ட நாள்)
‘மரம் செத்துப்போன மகிழ்ச்சியில் மரம் இருந்த இடத்தை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்த போது அண்ணன் தோளில் கைபோட்டு அழைத்துப்போனான். (இறக்கை விரித்த மரம்)
நிஜத்துள் எங்கேயும் இப்படித் தீப்பற்றிக் கொண்டால் சந்தோஷமாய் இருக்கும். நனவாக்கப்படவேண்டிய தேவையாய் தோன்றிய உணர்வுடன்… (ஒளிப் பொட்டின் விரிவு)
நம்பிக்கைகள் வாழ்வின் குரூரத்தனங்களாலும், அவமானங்களாலும் கேள்விக்குறிகளாக்கப்பட்டாலும் ஆத்மாவினுள் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு அணுவிலேனும் எதிர்பார்ப்பு மிச்சமிருந்துகொண்டே இருக்கிற… (மறைந்துபோன உருக்கள்)
இப்படி கதைகள் ஒவ்வொன்றிலும் அடையாளங்களைக் காணலாம். யுத்தக் கொடுமை, அதிகாரத்துவத்தின் பலமும் அது தன்னை நியாயப்படுத்தும் விதமும் ஆழமான கிண்டல், விரக்தி மற்றும் கோபம் கலந்த உணர்வுகளுடன் வெளிப்படுகையில் அவரது மனிதநேயம், விடுதலை பற்றிய உணர்வுகள் தெளிவாக மேலெழுகின்றன. சிங்கக் குட்டிகளின் சொர்க்கம், உணவு முறை குறித்த அறிக்கையும் பற்களின் பிரச்சினையும், கண்ணியத்தின் காவலர்கள், கறுப்பு மரணம் போன்ற கதைகளில் இவற்றை நேரடியாகக் காணலாம்.
அவரது படைப்புலகம் புலக்காட்சிகள், நிகழ்ச்சி அனுபவங்கள் என்பவற்றில் சாரத்தை சிந்தனைத் தளத்தில் வைத்து ஆராயும் தன்மையையும், அத் தளத்தினூடே உணர்வுகளை வெளிப்படுத்தும் இயல்பையும் கொண்டதாக அமைகிறது. வரலாறு, அறிவியல், பட்டறிவு எல்லாவற்றினதும் சாரமாக தொகுக்கப்பட்ட சிந்தனைக் கீற்றுக்களில் பின்னப்பட்டவையாக இந்த உணர்வுகள் வெளிப்படுகின்றன.
இதனால் அவரது கதைகளில் பல புதிய உத்தி முறைகளினூடாகச் சொல்லப்படும் முறையில் படைக்கப்பட்டுள்ளன. வெள்ளைத் தோல் வீரர்கள், சிங்கக் குட்டிகளின் சொர்க்கம், கறுப்பு மரணம், மூன்று மரணங்கள் பற்றிய முற்குறிப்பு ஏன் முகமறியும் மனிதன் கதைகள் எல்லாம் இந்தத் தன்மையாகவே அமைகின்றன. இக்கதைகளின் குறியீட்டுத் தன்மையும் சொல்லப்படும் முறையும் புதிய சோதனை முயற்சிகள் என்ற அளவில் கவனிப்புக்கும் முக்கியத்துவத்திற்கும் உரியவையாகின்றன. அவை சொல்லப்படும் முறையினூடாக சிறுகதைகளின் வெளிப்பாட்டு முறையினை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் செல்லும் அவரது இந்த முயற்சி பாராட்டப்படவேண்டியது.
அதேவேளை இந்த முயற்சி, கத்தியில் நடப்பது போன்ற மிகவும் ஆபத்தான ஒரு முயற்சி என்பதை படைப்பாளிகள் கவனத்தில் எடுத்தாக வேண்டும். சிறிய கவனக்குறைவும் மிக எளிமையான ஒரு உருவகக் கதைக்கு உரிய ஸ்தானத்திற்கு சிறுகதையை வீழ்த்தி விடும். திசேராவின் இந்த முயற்சியின் பலம், பலவீனத்தை ஆராயும் பொறுப்பை வாசகர்களும் விமர்சகர்களும் எடுத்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்.
திசேராவின் மொழி மிகவும் இறுக்கமும், ஆழமும் வாய்ந்தது. மெல்லிய எள்ளலுடன் கவனமாக செப்பனிடப்பட்ட தன்மையைக் கொண்டது. வரிகளுக்கிடையிலும் அர்த்தங்களை தாங்கி நிற்கும் சிறப்பினைக் கொண்ட நடை அவருக்கு கைவந்துள்ளது. மூன்று மரணங்கள் பற்றிய முற்குறிப்பு அவரது இந்த செட்டான நடைக்கு உதாரணமான ஒரு கதை என்று சொல்லலாம்.
சமூக கட்டுப்பாடுகள், சமூக நியாயங்களின் போலித்தனத்தை காக்கும் விதத்தில், சமூகமும் அதிகார மையங்களும் செயற்படும் விதத்தை எரிச்சலும் எள்ளலுமாக சாடுகின்ற அவரது உணர்வு, ஒடுக்கு முறைக்கும் பொய்மைக்கும் எதிராகக் கோபம் கொள்ளும் அவரது இதயம், மானிட விடுதலைக்காக ஏங்கும் அவரது பார்வை என்பவற்றூடாக சமூக விழிப்புணர்வும், அக்கறையும், பொறுப்புணர்வும் தனது சிந்தனைக்கு நேர்மையானவருமான ஒரு படைப்பாளியாக தனது படைப்புலகினூடாக வெளிப்பட்டு நிற்கிறார் திசேரா.
அவரது பார்வையில் சமூக நியதிகள் மீதான அதிருப்தியும் கேள்விகளும் அவற்றின் மீதான எதிர்ப்புணர்வும் மிகத் தெளிவாக வெளிப்படுகின்றன. ஒரு படைப்பாளிக்குரிய அடிப்படையான எல்லா அம்சங்களையும் கொண்ட ஒருவராக அவர் நம்முன் நிற்கின்றார். இந்த எதிர்ப்புணர்வும், வாழ்வின் மீதான அவரது நம்பிக்கையும் அவருக்கு வாழ்வின் அந்தப் போக்குக் குறித்த தீவிர தேடலை ஊக்குவிக்கும் என்றும், அது அவரது வாழ்வு தொடர்பான பார்வையை முழுமையாக்கும் என்றும் நம்பலாம்.
ஈழத் தமிழ் இலக்கிய உலகு இன்னொரு படைப்பாற்றல் மிக்க ஒரு படைப்பாளியை உருவாக்கி விட்டுள்ளதற்காக நிச்சயம் பெருமைப்படலாம். அவரிடம் உள்ளார்ந்துள்ள படைப்பாற்றல் எமக்கு மேலும் பல நல்ல படைப்புக்களை வழங்குமென நம்புகின்றேன்.
மூன்றாவது மனிதன் பதிப்பகம்’ இந்த நூலை வெளியிடுவதன் மூலம் தனது தொடர்ச்சியான தமிழிலக்கியப் பணியில் இன்னுமொரு முக்கிய பங்களிப்பை ஆற்றியுள்ளது என்பதையும் நான் குறிப்பிட்டாகவேண்டும்.
இறுதியாக, தனது நூலுக்கு முன்னுரை எழுதுமாறு என்னை அழைத்தமைக்காக நூலாசிரியர் திசேராவிற்கும், நண்பர் பௌசருக்கும் எனது நன்றிகளைக் கூறிக் கொள்கின்றேன்.
நன்றி அன்பின்,
எஸ்.கே.விக்னேஸ்வரன்.
12-07-2004.
வத்தளை.
– வெள்ளைத்தோல் வீரர்கள் (சிறுகதைகளின் தொகுப்பு), முதற்பதிப்பு: 26 ஆகஸ்ட் -2004, மூன்றாவது மனிதன் பதிப்பகம், இலங்கை.