கண்ணான கண்ணே!
கதையாசிரியர்: லங்காநாதர்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 26, 2025
பார்வையிட்டோர்: 204

கண்ணை முழிச்சு வெளிச்சத்தைப் பார்க்க கஸ்டமாயிருந்தது கூசியது சாரதாவுக்கு.
வீட்டுக்கார அம்மாவிடம் சொன்னாள், இப்ப மூணு நாளாத்தான் இப்பிடி இருக்கும்மா.
ஆமாண்டி நானுந்தான் பார்க்கிறன் உன் முகமே சரியில்ல.
பல வருடங்களாக வீட்டில் வேலை செய்யும் சாரதா மேல் அந்தம்மாவுக்கு ரொம்பப் பாசம். அப்பிடி ஒரு வேலைக்காரி.
கண்ணெரிவு கூச்சம் இதெல்லாம் வைச்சுக்கொண்டிருக்கக் கூடாது, நாளைக்கே டாக்டரைப் போய்ப் பார்க்க வேணும் என்ற கையோடு டாக்டருக்கு call பண்ணி appointment வைத்தாள் வீட்டுக்காரம்மா.
எதுக்கும்மா…? இது சாரதா.
டாக்டர் what’s up பண்ணினார். vitamins எழுதியிருந்தார். மூன்று நாளுக்கு மூன்று நேரமும் எடுத்து விட்டு நான்காம் நாள் வரச்சொன்னார்.
வியாழன் போகவேணும், சொல்லிக் கொண்டே மருந்துக்கடைக்கு புறப்பட்டாள் வீட்டம்மா.
தன்னை கண்ணுக்கு கண்ணாகப் பார்த்துக்கொள்ளும் சாரதாவின் கண்ணல்லவா?
அவளது earphoneக்குள் சித் ஶ்ரீராம் படிக்கொண்டிருந்தார்,
விண்ணோடும் மண்ணோடும் ஆடும்
ஒரு ஊஞ்சல் மனதோரம்
கண்பட்டு நூல்விட்டுப் போகும்
என
ஏதோ பயம் கூடும்…
வியாழன் அன்று சாரதாவை முதல் ஆளாக கூப்பிட்டார் டாக்டர்.
சாரதாவோடு அந்தம்மாவும் roomக்குள் போனார்கள்.
கண்களை விரல்களால் விரித்து torch அடித்தார். கலங்கிக் கண்ணீர் விட்டாள்.
கதிரையைச் சுழற்றி மறுபக்கம் திருப்பி விட்டு தூரம் நின்று saturday என்று small lettersல் எழுதப்பட்டிருந்த பலகையைக் காட்டினார், படி என்றார்.
தெரியல்ல சார்.
பலகையை சுழற்றி மறுபக்கத்தில் SATURDAY என்று capital lettersல் காட்டிக் கொண்டே இப்ப தெரியுதா? என்றார்.
இப்பவும் தெரியல்ல சார்.
பலகையை வைத்து விட்டு மேசைக்கு வந்து துண்டுச் சீட்டு எழுதினார். அது eye specialist டாக்டருக்கு.
சில மருந்துகளும் எழுதினார் இது சாரதாவுக்கு.
நாளை காலையே போய்ப் பாருங்க என்றார்.
துண்டுச் சூட்டுகளை வாங்கிக் கொண்டு புறப்பட்டார்கள்.
சந்திக்கு வந்து பஸ் எடுத்தார்கள், சீற்றிறில் உட்கார்ந்து சிறிது நேரத்தில் முன்சீற்றின் முதுகில் இருந்த திருக்குறளை அம்மாவுக்கும் கேட்கும் படி சாரதா கொஞ்சம் சத்தமாக வாசித்தாள்.
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
திருத்தமாகவே வாசித்தாள்
ஏண்டி…? டாக்டர் சொல்லும் போது தெரியேல்ல. இப்ப தெரியுது?
என்னம்மமா நீங்க? இது தமிழிலதான எழுதியிருக்கு.
அடிப்…பாவி….உனக்கு englishதான் தெரியேல்லயா..?
வாய் பிளந்தாள் அம்மா, கண்ணாடிக்குள் இருந்த கண்களை அகல விரித்தபடியே.