கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 27, 2025
பார்வையிட்டோர்: 4,825 
 
 

அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-11

அத்தியாயம் – 7

“கேட்டியா சேதிய. ஆஸ்பத்திரியில போய் நீ சுந்தரி புள்ளையப் பார்த்தீயா..? ஆம்பளப் புள்ள. செக்கச் செவேல்ன்னு அவனைப் போலவே இருக்கு…!” பத்துப் பேர்கள் கூடியிருக்கும் ஒரு கூட்டத்தில் ஒரு பெண் குசுகுசுத்தாள்.

“ஆளில்லா சமயத்துல அவுங்க சிரிக்கிறதும், குசுகுசுக்கிறதும்… கொட்டம் அதிகம். “

“நான் அப்பவே சந்தேகப் பட்டேன்.”

“புருசன் குடிகாரன். கவுந்தடிச்சிப் படுத்திருப்பான். ரெண்டு பேருக்கும் வசதியாய்ப் போயிடுச்சி.”

“அவனா தொட்டிருப்பானா..இல்லே இவளா இழுத்திருப்பாளாத் தெரியல.”

“என்ன எழவு கன்றாவியோ..?! யாருக்குத் தெரியும்..?” ஒரு தர்மபத்தினி தலையிலடித்துக் கொண்டாள்.

பெண்களுக்கு எப்போதுமே ஐம்புலன்களின் செயல்பாடுகள் ஆண்களை விட அதிகம். அடுத்த வீடு, எதிர் வீடு, அக்கம் பக்கம்தான் அவர்கள் கண், காதுகள் இருக்கும். ஒரு செய்திக்கு ஆயிரம் கை கால்கள் முளைத்திருக்கும். பார்க்காததைப் பார்த்தது போல் பேசுவார்கள். கேட்காததை கேட்டது போல் சொல்வார்கள். உண்மைக்கு அதிகம் பொய் பூச்சு பூசுவார்கள். கற்பனையாய் செய்தி சொல்வார்கள். ஒருத்தி நெருப்பு எடுத்து வந்து ஊரெல்லாம் பற்ற வைப்பாள்.

இந்தப் பழக்கம் கிராமத்தில் அதிகம். வானொலி, தொலைக்காட்சிப் பெட்டி எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.

பொதுவாக ஒரு ஆணும் பெண்ணும் பேசிக் கொண்டால் அவர்கள் பார்வையே வேறு.

“அவனா..? அவளை வைச்சிருக்கான் போல.” கூசாமல் சொல்வாள் ஒருத்தி.

“ஆமா… ஆமா நான் கூடப் பார்த்தேன்!” சொல்லி பொய்யை மெய்யாக்குவாள் வேறொருத்தி.

அவர்களுக்கு.. நாட்டு நடப்பு, கலை, இலக்கியம் எல்லாம் தெரியாது. கண் முன் நடக்கும் ஊர் சேதிதான் அவர்களுக்கு உலகளந்த செய்தி.

“கண்ணுசாமி என்னடி செய்யப் போறான்..? பொண்டாட்டிய வச்சு குடும்பம் நடத்தப் போறானா..? தம்பியோட துரத்தி விடப் போறானா..?”

“மான அவமானம் தூக்கு மாட்டித் தொங்குவான்!”

“அடக் கடவுளே..! இப்புடியும் நடக்குமா அநியாயம்..?”

“இவனுக்கு ஏது கலியாணம் காட்சி. எவள் கட்டிப்பாள்..?”

”சுந்தரி கொண்டவனைத் துரத்திட்டு கொழுந்தனைதான் வைச்சிக்கப் போறாள்..!”

காது கொடுத்து கேட்க முடியவில்லை.

கணேசனும் பயந்து கொண்டுதானிருந்தான்.

சுந்தரி மருத்துவமனையிலிருந்து குழந்தையோடு வீடு வரும் வரை கிணற்றில் போட்ட கல்லாக… புயலுக்கு முன் அமைதி போல கம்மென்றிருந்தான்.

வந்த பிறகுதான்…

“ஐயா! என் பொண்டாட்டி எனக்குத் துரோகம் பண்ணிப்புட்டா. கண் கண்ட சாட்சி பொறந்திருக்கும் புள்ள. எனக்கு இனி அவ தேவை இல்லே வாழ்வு, வழி தீருங்க…” நல்ல பிள்ளை மாதிரி பஞ்சாயத்தாரிடம் சொல்லி விட்டான்.

நாட்டாண்மை கூட்டத்தைக் கூட்டினார்.

சம்பந்தப்பட்டவர்களை சபைக்கு அழைத்தார்.

குற்றவாளிகளாய் எதிரும் புதிரும் கணவன் – மனைவி. கண்ணுசாமி – சுந்தரி.

“என்னம்மா..?” ஏறிட்டார்.

”புருசன் புருசனா இல்லே. புருசனா இருந்தவருக்குப் பெத்துக்கிட்டேன்..!” எல்லாவற்றையும் விலாவாரியாய்ச் சொன்னாள்.

பஞ்சாயத்து கண்ணுசாமியைப் பார்த்தார்.

“தப்பு மன்னிச்சிடுங்க. தண்டனை குடுங்க ஏத்துக்கிறேன். கெட்டுப் போன பொண்டாட்டி எனக்கு வேணாம்..!” சொன்னான்.

“என்னம்மா சொல்றே..?”

“நீங்க என்ன சொன்னாலும் நான் ஏத்துக்கிறேன்!”

பஞ்சாயத்து தன்னோடு அமர்ந்திருக்கும் துணை, இணை…. பஞ்சாயத்தார்களைப் பார்த்தார்.

“அவளைத் தொட்டவனுக்கே கட்டி வைச்சுடுங்க…” கூட்டத்தில் ஒரு குரல்.

“அது எப்படி முடியும்..? படிச்சவன். கலியாணம் காட்சி முடிக்காத சின்னவன். இவ மூணு புள்ள பெத்தவ..தொட்ட குத்தம் கட்டி வைக்க முடியுமா..?” இன்னொரு குரல்.

கூட்டத்தில் ஆளாளுக்குப் பேச… சிறு சலசலப்பு, கசகசப்பு.

“ஆளாளுக்கு அபிப்பிராயம் சொல்லாதீங்கப்பா!” எல்லார் வாய்களையும் அடைத்த பஞ்சாயத்து…

“கண்ணுசாமி குடிகாரனாகி குடும்பத்தை விட்டது தப்பு. புருசன் இப்படி ஆகிட்டானேன்னு கொழுந்தன் கிட்ட சுந்தரி தொடுப்பு வைச்சி புள்ளை பெத்ததும் தப்பு. ரெண்டு பேர் மேலும் தப்பு இருக்கிறதுனால பிரியதுதான் சரி.” என்றார்.

“புள்ளைங்க..?”

“குடிகாரனோடு இல்லாம பெத்தவள் கூடத்தான் இருக்கனும்.”

“வருமானம்…?”

“பிரிதல் ரெண்டு பேருக்கும் தண்டனை. கஷ்டப்படனும். வருமானம் என்கிற பேச்சுக்கே வேலை இல்லே.”

”கணேசன்..?”

“தம்பிக்கு ஐயாயிரம் தண்டனை. அண்ணன் வீட்டை அண்டாம தானாப் பொங்கி தானா சாப்பிடனும். பணத்தைக் கட்டலைன்னா ரெண்டாயிரம் கசையடி.!” தீர்ப்பைச் சொன்னார்.

ஐயாயிரம் ரூபாய்! – தினக் கூலி. அன்றாடம் காய்ச்சி. சேமிப்பு என்பது சிறிதும் இல்லை. எவ்வளவு பெரிய தொகை! பணத்திற்கு எங்கே போவான் கணேசன். தவறினால் ரெண்டாயிரம் கசையடி! நினைத்துப் பார்க்க நெஞ்சம் நடுங்கியது. உடல் வேர்த்து தொப்பறையாக நனைந்தது.

தானாடாவிட்டாலும் சதையாடும்! என்பது சரியான பழமொழி.

அண்ணன் தம்பிகளுக்குள் ஆயிரம்தான் வெட்டுப்பழி, குத்துப்பழி, சண்டை சச்சரவுகள், மனத்தாங்கல்கள் இருந்தாலும் அவர்களுக்குள் ஒருவரையும் ஊரில் அடி வாங்க விட மாட்டார்கள். மூன்றாவது மனிதன் எவனையும் தொட விடமாட்டார்கள். தொட்டால் தொலைந்தான் தாயோழி!

‘தலையெழுத்துடா..! குடும்ப மானம் காத்துல பறக்குது..!’ என்று முணுமுணுத்து….ஒன்றாக அமர்ந்திருந்த கணேசனின் மூத்த இரு அண்ணன்களும்,

“தம்பி பணத்தை நாங்க காட்டுறோம்!” – ஒரு சேர எழுந்து சொன்னார்கள்.

உடனே ஓடிப்போய் பணத்தை எடுத்து வந்து கட்டினார்கள்.

கண்ணுசாமிக்கு ஊருக்கு ஒதுக்குப் புறமாய் புறம்போக்கில் குடிசை போட்டு தங்க சொல்லி விட்டார்கள்.

கணேசன் கைதி போல பெரியண்ணன் வீட்டிற்கு வந்தான்.

அத்தியாயம் – 8

‘என்னென்ன நடந்து விட்டது!’ – கணேசன் இடிந்து போய் உட்கார்ந்தான். பல நாள் இவனுக்குச் சாப்பிடவே மனமில்லை.

சரியாக சாப்பிடவில்லை.

இவனின் நிலையைப் பார்த்த பெரிய அண்ணிக்கு புத்தி வேலை செய்தது.

“என்னங்க..!” தன் கணவனைத் தனியே அழைத்தாள்.

“என்ன..?”

“இந்தப் பையன்!…அதான் உங்க தம்பி. அவளையே நினைச்சி உருகுறான் போல. கடனோ உடனோ வாங்கி காலாகாலத்துல கலியாணம் பண்ணி வச்சாத்தான் தேறுவான்.” சொன்னாள்.

“நானும் அதான் நினைச்சேன். பொண்ணு யாரு குடுப்பா..?”

“ரெண்டாந்தாரம், மூணாந்தாரம்ன்னு கட்டிக்கிட்டுப் போறானுங்க. தம்பிக்குக் கிடைக்கும்!”

“அப்படி கொடுப்பானுங்க. கெட்டுப் போனவனுக்கு யாரும் கொடுக்கவும் மாட்டாங்க. எவளும் நம்பி கழுத்தை நீட்டவும் மாட்டாள்.”

ராமசாமி சொன்னது செல்லத்தாளுக்கு உரைத்தது.

‘யாரு குடுப்பா…?’ – யோசித்தாள்.

“உங்க மாமன் பொண்ணு இருக்காளே. கேட்டுப் பாருங்களேன்!” சொன்னாள்.

”எனக்கும் அவர்தான் மனசுல பட்டார். ஆனா… அவ படிச்சவ ஒத்துக்குவாளா..? மாமன்தான் ஒத்துக்குவாரா…?” தன் மனதில் பட்டதைச் சொன்னான்.

“வழி இல்லே கேட்டுத்தான் பார்க்கணும்…!”

“அவரை விட்டா நமக்கு வேற வழி இல்லே. “

“சரி கேட்டுப்போம். கணேசனை ஒரு வார்த்தைக் கேட்கலாமா..?”

“அவனை என்ன கேட்கிறது..? கட்டுடா தாலியைன்னா கட்டப் போறான்!”

“சரிதான். அவனுக்கும் இப்படி நடக்கிறதைத் தவிர வேறு வழி இல்லே.”

“நாம சொன்னதைக் கேட்கலைன்னா.. வேறு யாரு எடுத்துக் கட்டி செய்யப்போறா….? தின்ன ருசி. முடியாம இன்னும் எவ காலிலேயாவது விழப்போறான். இவனுக்கு யாரு வடிச்சிக் கொட்டிக்கிட்டு இருக்கப் போறா..?!”

‘பெண்கள் புத்தி எப்படி எப்படியெல்லாம் வேலை செய்கிறது..?’ கேட்ட கணேசனுக்கு மனசைப் பிசைந்தது.

மறுநாளே… அண்ணன் தம்பிகள் ராமசாமியும், ராமச்சந்திரனும் கிளம்பிவிட்டார்கள்.

‘ஏற்கனேவே இரண்டு. இப்போது ஒன்று. மொத்தம் மூன்று . சுந்தரி எப்படி கஷ்டப்படுகிறாளோ..?!’ கணேசனுக்குள் எப்போது பார்த்தாலும் உள்ளுக்குள் வருத்தம் உருண்டு கொண்டே இருந்தது.

‘காதும் காதும் வைத்தாற்போல் கலைத்திருந்தால் இவ்வளவு கஷ்டம் இல்லை!’ டவுன் ஓரத்துப் பெண். நாகரீக சாயல் படிந்த பெண். ஒரு வேலையும் தெரியாது. வயல் காட்டு வேலை ரொம்ப கஷ்டம்! குடிகார கணவனுக்காக அதையும் பொறுத்துக் கொண்டு…ச்சே!

“இது உடலும் உடலும் சேரும் வைபோகமில்லே கணேசு. மனமுவந்து கொடுக்கும் காணிக்கை. ராமனுக்கு குகன்… இந்தா மீனென்று அன்போடும் உள்ளம் உவகையோடும் கொடுத்தானே… அந்த மாதிரி காணிக்கை. அப்போ குகனிடம் மீன்தான் இருந்தது கொடுத்தான். என்கிட்ட இதுதான் இருக்கு கொடுக்கிறேன்!” என்னென்ன பேச்சுகள்.

அங்கே…

“என்ன நெனப்புலடா என் பொண்ணை வந்து கேட்குறீங்க..?” வெகுண்டெழுந்த தாய்மாமனை பயத்துடன் பார்த்தார்கள் ராமசாமியும், ராமச்சந்திரனும்.

“அண்ணியை வைச்சிருந்தானாம், ஆத்தாளை வைச்சிருந்தானாம்..! அப்படிப்பட்ட கூறுகெட்ட பயல்களுக்கெல்லாமாநான் பொண்ணைப் பெத்து வைச்சிருக்கேன்..?!” தாண்டி தோண்டியில் விழுந்தார்.

அண்ணன் தம்பிகள் வாயை இறுக மூடிக்கொண்டார்கள்.

“என் பொண்ணு பட்டப்படிப்பு படிச்சவள். உலகம் தெரிந்தவள். அவளிடம் போய்.. நீ இந்தப் பயலைக் கட்டிக்கோன்னு சொன்னா… பெத்த அப்பன்னுக்கூட பார்க்க மாட்டாள். ‘தூ’ன்னு துப்புவாள்.”

அவர் இன்னும் ஏதேதோ வாயில் வந்ததை எல்லாம் பேசினார்.

அண்ணனும் தம்பியும் எல்லாம் கேட்க வேண்டிய நேரமென்று பொறுமையாய் இருந்தார்கள்.

எப்போதுமே ஒருவர் கோபமாக இருந்தாலோ, பேசினாலோ இன்னொருத்தர் தழைந்து போவதுதான் நல்லது. எதிர்த்துப் பேசினால் ரகளையாகும், சண்டையாகும். இதை அண்ணன் தம்பிகள் இருவரும் தெரிந்து வைத்திருந்ததனால் பேசாமலிந்தார்கள். இப்படி இவர் கத்துவார் எளிதில் சமாதானமாக மாட்டார் என்று தெரிந்தே இருவரும் வந்ததினால் வாயை இறுக மூடி இருந்தார்கள்.

ஏறக்குறைய பத்து நிமிடங்கள் இடைவிடாமல் பேசி கத்தி விட்டு அமர்ந்தார் அவர்.

இன்னும் இரண்டு மூன்று நிமிடங்கள் இடைவெளி விட்டு…

“நீங்க சொன்னதெல்லாம் சரி. ஆனாலும் உங்களை விட்டா எங்களுக்கு வேற யாரு மாமா இருக்கா..? நீங்களே இப்படி பேசி துரத்திடீங்கன்னா அவனுக்கு வேற யார் பொண்ணு கொடுப்பா…?” ராமசாமி ரொம்ப நயந்து, பயந்து சொன்னான்.

“அவன் திருந்திட்டான் மாமா. இனி தப்பு தண்டாவுக்கெல்லாம் போகமாட்டான். அவன் அப்படி சத்தியம் செய்த பிறகுதான் நாங்க உங்களைத் தேடி வந்தோம்.” அடுத்து ராமச்சந்திரன் தன் பங்கிற்கு எடுத்துச் சொன்னான்.

“தப்பு செய்தவனுக்கு மன்னிப்பே கிடையாதா..? நீங்களே மன்னிக்கலைன்னா வேற யார் மன்னிப்பா…?”

”மாமா! இன்னைக்கு நீங்க மறுத்து… நாங்களும் வேற வழி இல்லாம வேற இடத்துல பொண்ணு எடுத்து… அவன் நல்லா வாழ்ந்தா… அட ! நாம ஒரு நல்ல வாய்ப்பை இழந்துட்டோமேன்னு வருத்தப் படுவீங்க. அது மட்டுமில்லே மாமா. அப்படி பொண்ணெடுத்தால் நம்ம உறவும் துண்டிச்சிடுமோன்னு பயந்துதான் உங்களிடம் வந்தோம்.”

“நீங்க கொடுக்க மாட்டீங்கன்னு முடிவெடுத்து நாங்க வேறெரு இடத்தில் பார்த்தால்…. நம்ம உறவு சனம், அக்கம் பக்கம் உள்ளவர்களும் ஏன்… உங்க உறவு என்னாச்சு..? கேட்பாங்க. நீங்களும்…. நம்மகிட்ட கேட்காம எப்படி இப்படி ஒரு முடிவெடுத்தானுங்கன்னு எங்க மேல கோபப்படுவீங்க. இப்படி எல்லாம் யோசிச்சுதான் நாங்க உங்ககிட்ட வந்தோம்.”

இப்படி இருவரும் மாறி மாறி பேச…

‘எப்படியும் நம்மகிட்ட பத்திக்கிட்டுப் போகணும்ன்னு பசங்க ஒரு முடிவோடுதான் வந்திருக்கானுங்க…’ மாமா சந்திரசேகரனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

அதே சமயம்…. தாய், தந்தை இல்லாமல் அனாதையாகிவிட்ட தன்னை தன் அக்காள் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வளர்த்தாள்…? அவருக்குள் ஓடியது.

இவர் பிறந்து பத்து வருடங்களிலேயே அடுத்ததடுத்து அப்பா, அம்மா பரலோகம் சென்றுவிட்டார்கள். பதினாறு வயது அக்காள் தான் தாயாய் சேயாய் இருந்து இவரை வளர்த்தாள்.

இதனாலேயே இவள் திருமணம் தடை பட்டுக் கொண்டே வந்தது.

“கலியாணமானாலும் என் தம்பி என்னோடுதான் இருப்பான். அவனுக்கு நான்தான் துணை. அவனுக்கு என்னைவிட்டா வேறு கதி இல்லே. எனக்கும் அவனை விட்டா வேறு துணை இல்லே. அவன் நல்ல படிப்பு படிச்சி, திருமணம் முடிக்கிறவரை என்னோடுதான் இருப்பான். நானும் புருசனோட வாழ ஆசைப்பட்டு அவனைப் பிரிய மாட்டேன். இதுக்கு சம்மதம்ன்னா நான் தாலி கட்டிக்க தயார். புடிச்ச ஆளைக் கட்டிக்க தயார். இந்த முடிவிலே மாற்றமில்லே.!” கராறாகச் சொல்லி விட்டாள்.

இவள் முடிவில் வந்தவர்களெல்லாம் பார்த்துப் பார்த்து விட்டுச் சென்று விட்டார்கள். அப்படித் தள்ளிப் போய் அவளுக்கு 32 வயதில் திருமணம்.

சந்திரசேகரனும் 30 வயதில் திருமணம் முடித்துதான் அக்கா குடும்பத்தை விட்டு வெளியே வந்தார்.

இப்படி வாழ்க்கையையே தனக்காகத் தள்ளி வைத்தவள் ‘பிள்ளை தவறிவிட்டான்!’ என்பதற்காகத் தள்ளி விடுதல் நியாயமா..? – அவருக்குள் ஓடியது.

என்றாலும் இது தானாக எடுக்கும் முடிவு கிடையாது ! என்று உணர்ந்து…

“எதுக்கும் என் பொண்ணை ஒரு வார்த்தைக் கேட்டுக்கிறேன். அவள் சம்மதம்ன்னா எனக்குச் சம்மதம். ஏன்னா… வாழப்போறவள் அவள். அவள் சம்மதம் இருந்தால்தான் வாழ்க்கையே ருசிக்கும். சரியாய் வாழ முடியும். வற்புறுத்தி முடிச்சா….அது ஏடாகூடமாகிப் போகும்!” என்றவர்…

“சாந்தி! அம்பிகா..!…” என்று குரல் கொடுத்து.. தன் மனைவி மகளை அழைத்தார்.

அவர்கள் வந்தார்கள்.

“நீங்க ரெண்டு பேரும் நாங்க பேசின பேச்சை எல்லாம் கேட்டிருப்பீங்க. அக்கா என்னைக் கஷ்டப்பட்டு வளர்த்தையும் மனசுல வைச்சு உங்க முடிவைச் சொல்லுங்க.?” சொன்னார்.

அம்பிகா அம்மாவைப் பார்த்தாள்.

அவளும் இவளைப் பார்த்தாள்.

அவர்கள் இருவரும் மவுன மொழிகளில் என்ன பேசிக்கொண்டார்களோத் தெரியாது.

“மாமா திருந்திடுவாராப்பா..?” அம்பிகா மெல்ல கேட்டாள்.

“திருந்தறதும், திருந்தாததும் பெண்கள் கையில தான்ம்மா இருக்கு. நல்லவனைத் தேர்ந்தெடுத்து திருமணம் முடிக்கிறோம். தாலிகட்டின பிறகு அவன் கெட்டவனானால் என்ன பண்ண முடியும்..? அதே மாதிரி கெட்டவன் திருமணத்துக்குப் பிறகு நல்லவனாகிறான்… எப்படி..? நான் திருமணத்துக்கு முன் கொஞ்சம் அப்படி இப்படி. உன் அம்மா வந்த பிறகு யோக்கியன். அம்மாவைக் கேட்டுப் பாரு. நீ துணிஞ்சி ஏத்துக்கிறதும் ஏத்துக்காததும் உன் கையில்தான் இருக்கு. எதையும் தாங்கிப்பேன்னா… சம்மதி. முடியாதுன்னு பயந்தால் விட்டுடு.” சொன்னார்.

அம்பிகா சம்மதித்தாள்.

வீட்டிற்கு வந்ததும் அண்ணன்கள் இருவரும் தம்பியை அழைத்தார்கள்.

“இதோ பாரடா. அம்பிகாவைப் பொண்ணு கேட்டுட்டு வந்துட்டோம். சம்மதிச்சுட்டாள். அவ படிச்சவள், நல்லவள். நீ நடந்ததை மறந்து அவளோடு ஒழுங்கு மரியாதையாய்க் குடித்தனம் பண்ணு. கூடப் பொறந்த பொறப்புக்காக நாங்க எதையும் தாங்கிக்கிட்டு இதுதான் செய்ய முடியும். நீதான் புத்திமதியாய் இருந்து நல்லவிதமா குடித்தனம் செய்யனும்.” சொன்னார்கள்.

கணேசன் வாயேத் திறக்கவில்லை.

ஒரு சுபயோக சுபதினத்தில் கணேசனுக்கும் அம்பிகாவிற்கும் ஒரு கோயிலில் எளிமையாகத் திருமணம் நடந்தது.

பூட்டிக் கிடந்த பூர்வீக வீட்டில் குடி வைக்கப்பட்டார்கள்.

இருவருமே நடந்ததை மறந்து சந்தோசமாக வாழ்க்கையைத் தொடங்கினார்கள்.

அம்பிகா வந்த நல்ல நேரமோ என்னவோ… திருமணம் முடிந்த ஒரு சில நாட்களிலேயே வேலை வாய்ப்பு அலுவகத்தில் பதிந்து வைத்திருந்த கணேசனுக்கு அதிர்ஷ்டவசமாக அரசாங்க வேலை கிடைத்து விட்டது. அதுவும் நான்கு கிலோ மீட்டர் தள்ளி உள்ள நகரத்தில் அலுவலகம்.

உடனே கிராமத்தை விட்டு அப்படியே நகரத்திற்குச் சென்று விட்டான்.

வாழ்க்கை நிமிர்ந்த இடத்தில் பிள்ளை இல்லாத குறை வைத்து விட்டது!


“இன்னுமா தூங்காம யோசனைப் பண்ணிக்கிட்டிருக்கீங்க.?” அருகில் அம்பிகா குரல் கேட்ட பிறகுதான் கணேசன் நனவுலகத்திற்கு வந்தான்.

நிமிர்ந்து அமர்ந்து அவளை மலங்க மலங்க பார்த்தான்.

“என்ன முடிவு எடுத்தீங்க..?”

“எது..?”

“குழந்தை..!”

“அது முடிஞ்சி போன விசயம் அம்பிகா..”

அம்பிகா என்ன நினைத்தாளோ தெரியாது. சட்டென்று அவன் அருகில் அமர்ந்தாள்..

”எனக்கு அந்த குழந்தை வேணும். உங்க குழந்தை வேணும்.. அதான் என் சொந்தக் குழந்தை..!” அவன் நெஞ்சில் படுத்து விம்மினாள்.

கணேசன் உடனே கண்களை மூடி யோசனையில் ஆழ்ந்தான். சிறிது நேரத்தில் ஒரு முடிவிற்கு வந்தான்.

நெஞ்சில் படுத்திருந்த அம்பிகாவைத் தொட்டு…

“சரி..!” மெல்ல சொன்னான்.

– தொடரும்…

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *