கண் சிமிட்டும் வானவில்
கதையாசிரியர்: இரஜகை நிலவன்
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு:
கிரைம்
கதைப்பதிவு: March 25, 2026
பார்வையிட்டோர்: 154
அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4
அத்தியாயம் 1 – மயிலின் இறகின் நிறமாக…

நரேன், சன்னல் வழியாக வெளியே எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தான். சன்னல் கம்பியில் வந்தமர்ந்த, புறா தலையை இங்குமங்கும் அசைத்து பார்த்துக்கொண்டிருந்தது. ஊரே வெறிச்சோடிக்கிடக்க ,நரேன் அந்தப் புறாவின் அசைவுகளை
ஆச்சர்யாமாக பார்த்துக்கொடிருந்தான். அலகு மெல்லிய வளைவுடன் அந்த மூக்கின் அருகில் ஒரு சின்ன வெள்ளைப் புள்ளியில் ஆரம்பித்து பின்னால் மெல்லிய சாம்பல் நிறத்தில் இரு கண்களையும் தொட்டது.
மெதுவாக நடந்து அருகில் கிடந்த தானியங்களை கொத்திக் கொண்டிருந்தது. புறா. அதன் கழுத்துப் பகுதியில் சாம்பல் நிறம் கொஞ்சம் அடர்ந்துபின்னால் மயிலின் இறகின் நிறமாக மாறி இளஞ்சூரியனின் கதிர்களில் அழகாக பிரதிபலித்தது. அதன் தலை முன்னும் பின்னும் அசைய அதன் இறகுகள் அங்குமிங்கும் அசைந்து மிகவும் ஆச்சரியமாகவும் அழகாகவும் இருந்தது.
கையில் டீ குவளையுடன் வந்த வசந்தன் “என்ன நரேன், வெறுமனே புறாவை இரசிப்பதில் நின்றுவிட்டாய்.. நான் நேற்றுகேட்டது என்னாயிற்று” ?என்றான் இன்னொரு டீ குவளையை அவனிம் கொடுத்தவாறு.
புறாவின் அசைவுகளில் லயித்துப் போயிருந்த நரேன், கையிலே டீ கோப்பையினை வாங்கிக் கொண்டு , ” என்ன வசந்த் , வந்த காரியம் அவ்வளவு எளிதில் மறந்துபோகிற விசயமா?..”
டீயை சுவைத்துக் கொண்டே ”சொல்லு. நாம் இந்த களக்காடு பகுதிக்கு வந்து கொரோனாவுக்கு மூலிகை மூலம் மருந்து கண்டு பிடிக்கலாம் என்று தானே வந்தோம். உனக்கு ஒன்று தெரியுமா..இந்த களக்காடு ஒரு காலத்தில் கள்ளர்கள் காடு என்று இருந்தாம். அப்புறம் மருவிப் போய் களக்காடு என்று ஆகிவிட்டதாம். ஆமாம்..எங்கே.. இங்கே படுத்திருந்த பிரபுவைக் காணோம்“ என்றான் வசந்த்.
”அவர் காலையிலே எழும்பி வாக்கிங் போயாச்சு..” என்றான் நரேன்.
“விளையாடுறியா. .ஊரே வெளியே போகக்கூடாது என்று வீட்டுக்குள்ளே அடங்கிக்கெடக்கு ..இவரு வாக்கிங்போனாரா?.. “
வசந்த் சிரித்தான். “ அதெல்லாம் அவர் பார்த்துப்பார். சும்மா இந்த காம்பவுண்டுக்குள்ளே தான் எங்கேயாவது நடந்துகொண்டிருப்பார்… சொல்லு .. அவர் கிட்டே விசயத்தை சொல்லணுமா வேண்டாமா?…” நரேன். கேட்டான்.
”வந்து ரெண்டு நாள் தானே ஆவுது.. போகட்டும் பார்க்கலாம்..” என்றான் வசந்த்
“கிழிச்சே..வந்தமா காரியத்தை முடிச்சமாண்ணி இல்லாம.. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க போறாராம்.. ..” கொஞ்சம் கோபப்பட்டான் நரேன்..
“டேய் அரசாங்கத்திலேயிருந்து சம்பளம் தந்து நம்மள மருந்து கண்டு பிடிக்க அனுப்பி வச்சிருக்காங்க ..அத மொதல்ல ஞாபகம் வச்சிக்க.. நீ பாட்டுக்கு வந்த உடனே…”
”என்னடா வந்த உடனே…சும்மா பூச்சை புடிச்சிக்காட்டாதே.. ” நரேன் கத்தினான்.
உள்ளே வந்த பிரபு,” என்னப்பா..என்ன விசயம். .ஏன் இப்படி கத்தறே.?.” என்றார் வியப்பாக..
தான் செய்த தவறை உணர்ந்த நரேன் , “ அது வந்து சார்.. “ என்று வழிவதற்குள்,
“ சும்மா குடும்பக் கதை பேசிக்கிட்டிருந்தோம் சார்” என்றான் வசந்த்.
“அது சரி ..நான் நேற்று சொன்னேனே..அந்த சித்தர் பாடலைப் பார்த்தீர்களா? அதற்கு ஏதாவது அர்த்தம் தெரிந்ததா?…. அந்தப் பாட்டிலே தான் அவர் இந்தக் கொரோனாவுக்கு மருந்து எழுதி வச்சிருக்கார்.. அந்த வரிய நாம் சரியா புரிஞ்சுகிட்டோமிண்ணா.. அப்புறம் காட்டிலே எறங்கி செடியைத் தேடிப் போயிறலாம்…” என்றார் பிரபு..
“அதப் பற்றித்தான் நேற்று இராத்திரி அலசிக்கொண்டிருந்தோம் சார்” என்றான் நரேன்.
“கிழிச்சீங்க.. ஏன் தம்பி பொய் சொல்றீங்க.. நேற்று இராத்திரி முழுவதும் தண்ணி அடிச்சிக்கிட்டு..தேவையில்லாத வேலையெல்லாம் செய்துகிட்டிருக்கீங்க..வந்து நாலு நாளாச்சு..இந்த அரசு விருந்தினர் மாளிகையிலே சும்மா கொட்டம் அடிக்க வரல்லேங்கறதை நல்லா புரிஞ்சிக்கிடுங்க..”
இருவரும் அமைதியாக கைகளில் டீ கோப்பைகளுடனின்று கொண்டிருந்தனர்..
“ சரி .. போய் குளிச்சி முடிச்சிட்டு வேலையினைப் பாருங்க.. ஆமா எனக்கு டீ எடுத்துட்டு வரலையா கண்ணன்..” என்று பிரபு கேட்க, “அங்கே பிளாஸ்கிலே வச்சிருக்கான் சார்” என்றான் நரேன்..
”அந்த வாட்ச்மேன் கண்ணன் வந்தா வரச் சொல்லுங்க..அவன் தானே உங்களுக்கு தண்ணி வாங்கித் தந்தது..?” என்று கடிந்தவாறு உள்ளே சென்றார்.
நரேனும் வசந்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே உள்ளே சென்றனர். இருவரும் குளித்து விட்டு புறப்பட்டு ஆபீஸ் அறைக்கு வந்த போது பிரபு கூகிளில் எதையோ தேடிக்கொண்டிருந்தார்.
“வாங்க.. கண்ணன் டிபன் வாங்கி வச்சிருக்கான். சீக்கிரம் சாப்பிட்டு விட்டு வேலையை ஆரம்பிங்க..அந்த சித்தர் பாடலை கொஞ்சம் ஆழமா படிச்சி பாருங்க..கொரோனாவுக்கு எந்த மூலிகை மூலம் மருந்து கிடைக்கும்ணு பாருங்க…”என்றார்.
இருவரும் பார்சலிலிருந்த பூரியை ருசி பார்த்து விட்டு.. டீ அருந்தினர்.
“சார். நேற்றே நான் சொன்னது ஞாபகம் இருக்கா ..நாம் வந்த அந்த நடை பாதையில் ஒரு செடி வித்தியாசம இருந்ததை சொன்னேனே… கொஞ்சம் அந்த செடியை பார்க்கலாமா? என்றான் நரேன்.
”ஆங்…..நேற்று நீ சொன்னத மறந்தே போனேன்..ஒண்ணு பண்ணு.. நீ போய் அந்த செடியின் ஒருகொப்பை அத்துட்டுவா…:” என்றார் பிரபு “ ரெண்டு பேருமே போய்ட்டு வாரோமே…” என்றான் வசந்த்
”சரி …சரி ..சீக்கிரம் வாருங்கள்..” என்றார் பிரபு
நரேனும் வசந்தும் வெளியே வந்து சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு, நடந்தனர்.
’இதுக்காடா இவ்வளவு ப்ளான் போட்டு இங்கே வந்தோம்” சலித்துக் கொண்டான் நரேன்.
“ எல்லாத்துக்கும் அவசரப் படுகிறாய்… உன்ன என்ன செய்றது?.. கொஞ்சம் பொறுமையாய் இரு…” என்றான் வசந்த்
“சரி.. உன் ப்ளான் தான் என்னது? அதையாவது சொல்லித் தொலை” திரும்பவும் சலித்துக் கொண்டான் நரேன்.
”டேய் நாம் இங்கே புதையலைத் தேடி வந்திருக்கிறோம் என்பது நம்மள தவிர யாருக்கும் தெரியாமல் இருப்பது தான் நமக்கு நல்லது.. குறிப்பா.. அந்தப் பிரபுவிற்கு … நாளைக்கு அந்த சித்தர் பாடலிலிருந்து மூலிகையினை கண்டு புடிச்சாச்சுண்ணு சொல்லிக்கிட்டு அந்த கண்ணனையையும் கூப்பிட்டுட்டு காட்டுக்குள்ளே கிளம்பிற வேண்டியதுதான்..” சொன்ன வசந்தின் கண்களில் வேகம் தெரிந்தது.
”அதுவும் சரி தான் “என்றான் நரேன். காட்டிலே எந்த இடம் என்பதை நீதெரிந்துகொண்டாயா? இல்லை … கவிதாவின் போனுக்காக காத்திருக்கின்றாயா?… கவிதா நேற்று போன் பண்ணும் போது கூட அவ்வளவு தெளிவா எந்த பதிலும் சொன்னா மாதிரி தெரியலியே…” என்று தொடர்ந்தான் நரேன்.
பார்க்கலாம் ..எதற்கும் அவசரப்படாதே..“ என்றவாறு ஒருசெடியின் கிளையை முறித்துக் கொண்டு கிளம்பினான் வசந்த்.
அத்தியாயம் 2 – கொரோனாவுக்கான மூலிகை
அது, அழகாக இங்குமங்கும் சுற்றிக் கொண்டிருந்து, கொஞ்சம் ஆச்சரியாமாகவும் , அதிசயமாகமாகவும் தோன்றியது நரேனுக்கு..
” என்ன இன்றைக்கும் புறா ஆராய்ச்சியா ?“ சிரித்துக் கொண்டே வெளியே எட்டிப்பார்த்தான் வசந்தன்.
“பார்.. அது அங்கேயும் இங்கேயுமாக..நடப்பதும்… கழுத்தையும் முன்னே பின்னே அசைத்துக்கொண்டே பறக்க முயல்வதும்… சே… இவ்வளவு அழகான விசயங்களை நாம் இவ்வளவு நாளும் இரசிக்காம இருந்த்திருக்கிறோமே.. ஆச்சரியமாகத்தான் இருக்கிறது..“ அந்த புறா இங்குமங்கும் நடப்பதை பார்த்துக்கொண்டே வர்ணித்தான் நரேன்.
“ ஏய் நரேன், எவ்வளவு விசயங்கள் கிடக்கின்றன. அதை விட்டு விட்டு என்ன செய்து கொண்டிருக்கிறாய்? கவிதா ஏதாவது பேசினாளா?” வசந்த் படுக்கையிலிருந்து எழுந்தான்
“ தூங்கு மூஞ்சி… முதல்ல எழும்பி குளிச்சி முடிச்சுட்டு வா..” என்றான்நரேன்.
” டேய் இன்றைக்கு புரொபசருக்கு…..அதாண்டா..பிரபுவிற்கு என்ன பதில் சொல்லப் போகிறாய்…?” என்றான் தொடர்ந்து….
”அது தான் நேற்றே முடிவு பண்ணிய விசயம் தானே”…வசந்த், நரேனின் கண்களைப் பார்த்து.. “சரி.. காலையிலே நெய்லியிடம் போனிலே என்ன சொல்லிக் கொண்டிருந்தாய்…”நரேன்…எழுந்து கண்ணன் வருகிறானா என்று எட்டிப்பார்த்தான்.
”என்ன கண்ணனைத் தானே தேடுகிறாய்.. எல்லாம் நேற்றே சொல்லியாச்சி.. அவன் டீ கூட டிபனும் மத்தியான சாப்பாட்டையும் எடுத்துட்டு வந்துடுவான். பிரபு சார் தான் நம்ம சொன்னத நம்பின மாதிரி தெரியல..
ம்… நரேன்… காலையிலே நெய்லி ஒரு அருமையான விசயம் சொன்னாள்… கவிதா அனுப்பிய வரைப்படத்திலே இருக்கின்ற
மாதிரிதான் புதையல் இருக்கிற இடம் இருக்கவேண்டும்.. அத்தோட அந்த கொரோனாவுக்கான மூலிகையும் அந்த ஏரியாவுலேதான் இருக்ககூடும் என்றுசொன்னாள்.”
” இங்கிலாந்திலேயிருந்து அவ தேடிக்கண்டு பிடிச்சி சொல்லிக்கிட்டிருக்கா டேய் … அவஎங்கே … எப்படித் தேடுறா?” என்றான் நரேன்
”ஏதோ அவ சொன்ன அனுமானத்திலேதான் தேட ஆரம்பிச்சிருக்கோம்..பாக்கலாம்.. ஆமா கவிதா என்ன சொன்னாள்” என்று கேட்டான் வசந்த்.
”ரெண்டு பேரும் லவ் பண்ணிக்கிட்டு … அரசாங்கத்துக்கு தெரியாம புதையலப்பற்றி பேசிக்கிட்டிருக்கோம்… சரி நெய்லி சொன்னதை கவனமாக குறிச்சிக்க… புரொபசர் வந்ததும் மெதுவாக கிளம்ப ஆரம்பிக்கணும்.” என்றான் நரேன்.
பிரபு வந்தவுடன், “ ரொம்பவே வேக்க ஆர்ம்பிச்சிடுச்சு.. வசந்த்… கண்ணன் வந்தவுடன் நீங்க காட்டுக்குள்ளே கிளம்ப ஆரம்பிச்சிடுங்க..
எதுவரைக்கும்வண்டியிலே போகமுடியுமோ அதுவரைக்கும் வண்டியிலேயே போங்க.. அப்புறம் வண்டியை விட்டுட்டு நடந்துருங்க.. இடம் எங்கே தெரியுமில்லையா..டிரைவர் தீபக்கை கூட்டிட்டுப் போறீங்களா எப்படி்?….. அவர் கேட்டதும் “வேண்டாம் சார். நாங்களே வண்டி ஓட்டிக்கொள்கிறோம்… எதற்கும்..நம்ம கண்ணனை துணைக்கு வச்சிக்கிடறோம்..” என்றான் வசந்த்.
“அதுசரி … லோக்கல் ஆள் ஒண்ணு இருந்தா வசதியா இருக்கும். .எவ்வளவு தூரம் இருக்கும் என்று பார்த்தீர்களா“ என்றார் பிரபு.
“அது..நம்ம வண்டி போற தூரம் நாலு கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.. அதுக்கப்புறம் ஏரக்குறைய அஞ்சு கிலோ மீட்டர் நடக்க வேண்டியதிருக்கும்.. அங்கே கொடிய மிருகங்கள் இருக்கலாம் என்று கண்ணன் சொன்னான்” என்றான் வசந்த்.
“ சரி .. சரி… கவனமாக போங்க..கையிலே கத்தி வச்சிக்கிடுங்க,…என் கை துப்பாக்கியையும் தர்ரேன். தேவைக்கு வச்சிக்கிடுங்க.. ” என்றார் பிரபு.
”ரொம்ப நன்றி சார்..” என்றான் நரேன்.
“ஏதோ கொஞ்சம் வேலை செய்கிற மாதிரி தெரியுது… பார்ப்போம்.. எனக்கு எவ்வளவு பிரசர் போட்டிக்கிட்ட்ருக்கங்க.. தெரியுமா?” ”சீக்கிரம் கெளம்புங்க.. நான் தீபக்கிடம் சொல்லி மத்தியான சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணிக்கிறேன்.” உள்ளே சென்றார்.
“வசந்த்..நீ அந்த கம்ப்யூட்டரிலேயிருந்து நெய்லி அனுப்பின வரை படத்தை ப்ரிண்ட் போட்டுக்கொள்…நான் சார் கிட்டேயிருந்து துப்பாக்கியை வாங்கிட்டு வர்றேன்..” என்றவாறு உள்ளே சென்றான்.
”துப்பாக்கியெல்லாம் தேவையா? “ எச்சரித்தான் வசந்த்..
“கையிலே இருக்கட்டுமே..” என்றான் நரேன்.
”சரி உன் விருப்பம்..”
“நாம் காட்டுக்குள்ளே புதுசா போகிறோம்… ஜாக்கிரதையாக இருக்கிறது நல்லதில்லையா..”
கண்ணன் கீழேயிருந்து கையசைக்க.. “ வசந்த். .இவனுக்கு நம்ம விசயம் எதுவும் தெரியுமா..?“ என்று கேட்டான் நரேன்
“இவன் ஒருத்தன். .நல்லா தெரிஞ்சுக்க… நம்ம நால் பேர்தான் இந்த பிளானிலே இருக்கோம்.. நான் ப்ரிண்ட் எடுத்கிட்டு கீழே போறேன்.. சீக்கிரம் புறப்பட்டு வா..” என்று உள்ளே நுழைந்தான்.
கையிலே பிரிண்ட் போட்டு எடுத்துக் கொண்ட காகிதங்களோடு வசந்த் வெளியே வர … நரேனும் சேர்ந்து கொண்டான்.
எல்லோரும் வண்டியில் ஏறியவுடன் கண்ணன், “எந்தப்பக்கமாக போக வேண்டும்” என்று கேட்டான்.
“நேரே போய்க்கிட்டே இரு. நான் சொல்ற திருப்பிலே லெப்டிலே திரும்பிப் போகலாம்…..” என்ற வசந்த், “ நரேன், ஒண்ணு கவனிச்சியா! பிரபு…ஏதோ சந்தேகப்படுகிறது மாதிரி தோணுது…” என்றான் முணுமுணுப்பாக
வழியில் ஒரு போலீஸ் படை நின்று வண்டியை வழி மறித்தது.
– தொடரும்…
– தொடர்கதையாய் வெளி வந்த புதினம், மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற வெளியீடு.
![]() |
பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க... |
