ஓடிக்கொண்டே இரு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 12, 2024
பார்வையிட்டோர்: 1,000 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆகவே சாலை ஓரமாய், மரங்களின் நிழல்கீழ் நடந்து போய் போய்க்கொண்டேயிருக்கையில் ஓடும் ஜலவாஸனை எட்டி, தாகம் புரண்டெழுந்து, திடீரெனத் தாகம் தாங்க முடியாமல், தண்ணீர் திக்கு நோக்கி நடந்து கரையடைந் ததும், தோள்மூட்டை (உலகத்தில் அவன் உடமை அனைத்தும் அதில் அடங்கியதோடு சரி) யைக் கீழேயிறக்கி, தானும் அதனருகே இறங்கினாற்போல் உட்கார்ந்து, காலை நீட்டி, உட்கார்ந்த இடத்திலேயே புற்றரையில் கரையின் சரிவோடு சாய்ந்து முகம் வானை அண்ணாந்ததும் – 

“அம்மாடி!” 

நிர்ச்சல வானம்; நீல பராபரம். இதுமாதிரி நெற்றி வேர்வையைப் பரிவுடன் காற்று ஒற்றும் ருசி அனுபவிச்சாத் தான் தெரியும். வருடக்கணக்கில் பாம்பு காத்தையே உட் கொண்டு வாளுதாமே! அந்த வித்தை நமக்கும் வசப் பட்டால் நாள், ஒரு கண்டமா ஓட்ட வேணாம். ஒருநாள் பிச்சை, ஒருநாள் திருடு – ஹும் – நாய் துரத்தி, ஆள் விரட்டி, போலிஸ் உதை – அதென்ன அப்பிடி அடி வவுத்தில் குத்தறான்? குடலே சரிஞ்சுபோச்சு. உள்ளே கடியாரம் இப்பவே என்ன ஆச்சோ என்ன கண்டது? எல்லாம் இந்த வவுறு; மானங்கெட்ட வவுறு! 

வேலை கிடைத்தால்தானே கூலி எனக்கென்ன வேலை தெரியும்? எடுபிடி சுமை தூக்கலாம். முன்னாலே எவன் என்னை வெச்சுக்குவான்? 

நான் முழுத் திருடா? ஆத்தாளே அறியும். வெய்யிலில் வாசலில் ஏதேனும் தின்ற பண்டம் முறத்தில் வெச்சிருந்தா அதான் உளுத்த நாத்தம் வவுத்தைக் குமட்டுதே! பசிக் கொடுமை ஒரு அள்ளு வாயில் போட்டுக்கிட்டு ஓடுவேன் அம்புட்டுத்தான். இல்லே எந்த வீட்டு பொம்புள்ளையானும் அவள் அவசரத்துக்குக் கடையில் ஏதாச்சும் வாங்கி வரச் சொன்னா… ஒரு பச்சைமிளகா, கறிவேப்பிலை, கொத்த மல்லி, தேங்காபத்தே அந்தச் சில்லரையோடு கம்பி நீட்டறது உண்டுதான். ஆனால் அந்த அதிஸ்டம் தினமே கைகூடுமா? தினமே நேர்ந்தால் அது எப்படி அதிஸ்டமாவும்? 

பூ மலந்தாப்போல், காலும் கையும் தளற விரிச்சுப் போட்டு, வாய் லேசாத் துறந்து, கண்ணை மூடி, காத்தை மெல்ல மெல்ல அருந்திக் கைகளுவிட்டு – என்ன பேத்தறேன், காத்தைத் துன்னத் தெரிஞ்சா என்னாத்துக்குக் கை களு வணும்? வாயைக்கூடக் கொப்புளிக்க வேணாம். அப்புறம் மூட்டையென்ன முடிச்சென்ன? கையையும் காலையும் வீசி நடந்துகிட்டேயிருக்க வேண்டியதுதான். சிரிப்பு வந்தது. 

கிழித்த நாராய்க் கிடந்தான். தலைமாட்டில் ஏதோ சல சல – என்னவாச்சும் இருக்கலாம், என்னவாச்சும் இருந்துட்டுப் போவட்டும். இப்போ அங்கம் கொஞ்சம் அசைஞ் சாலும், இந்தச் சொகம் கலைஞ்சு போயிடும். 

புல் ஒன்றைப் பிடுங்கிக் கடித்தான் தித்திப்பு. உருவினால் ஒரு முழ உசரம் நிக்கிதே! 

புல்லின் சாறு தாகத்தை நினைப்பூட்டிற்று. 

தண்ணீரில் இறங்கிக் குனிந்து, இருகைகளிலும் அள்ளி யும் ஆச்சு. எங்கோ தொலை தூரத்திலிருந்து நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு சப்தத்தை,அதன் நுட்ப நிலையிலேயே செவி நரம்பு எடுத்துவிட்டது. குடல் குலுங்கிற்று. ஏற் கெனவே உதை நொந்த குடல். அள்ளிய ஜலத்தை அப் படியே சிதறிவிட்டு கரையேற முயன்றான். இருமுறை சறுக்கிவிட்டது. எந்த வேரோ முண்டித் தடுக்கிற்று. சமயத்தில் மோசம் பண்ணவே பூமிக்கடியில் ஓடிவருது. இறங்கின இடம் வேறு. இப்போ கரையேறத் தவிக்கிற இடம் வேறே. ஒரு வழியா ஏறி, மூட்டையைத் தேடிப் பிடிச்சுத் தோளில் மாட்டுவதற்குள், நாலு கால் பாய்ச்சலில் ஓடிவந்து லொள் லொள்’ அவனைச் சூழ்ந்துகொண்டது. எப்பிடித் திரும்பினாலும் அங்கு ஒரு ளொள் முளைத்தது. தப்ப வழி யில்லை. புதர் மறைப்பிலிருந்து வரதைப் பார்த்தா, குட்டிக் குரைப்பாத்தான் தெரியுது. 

நாய் என்றாலே அவனுக்குத் தனி நடுக்கம். ஒரு சமயம் வேணாம், வேணாம்! இந்தச் சமயத்தில் நினைக்கக்கூட வேணாம். நினைச்சாலே பிடுங்கின இடத்தில் கண்ட சதை சுறீலிட்டது. மாதமாயும் ரணம் ஆறவில்லை. குதறிப் போச்சு. தர்ம ஆஸ்பத்திரிக்காரனுக்கு அலுத்துப் போச்சு. 

ஆத்தா! வெறி பிடிச்ச மாதிரி குரைக்குதே 

‘ஜிம்e! ஜிம்மீ! ஷட்அப்!’ 

‘ஜிம்மீ! டௌன் ஐ ஸே!’ 

இளநீராட்டம். அவ்வளவு இனிப்பு குளுகுளு குழந்தைக் குரல். 

ஜிம்மி படிப்படியாக ஓய்ந்தது. உடனே அடங்கிவிட் டால் அதன் சூரத்தனம் என்ன ஆவது? 

உடனே எதிர்ப்புறமாய் எதையோ துரத்தும் பாவனை யில் அதன் குரைப்பு நாலு கால் பாய்ச்சலில் ஓடி,எட்ட எட்ட ஓய்ந்தது. 

அவனுக்கு மூச்சு திரும்பிற்று. 

தன்னின்று எறிந்த பெருமூச்சின் பிம்பமாய் வாடை பாய்ந்தது. அதன் கிச்சிகிச்சில் புற்கள் அனைத்தும் தலை யாட்டித் தனித்தனியாகச் சிரித்தன. 

அவனுக்காக. 

“என்ன சின்னதுரை? இந்த இடம் உங்களதா? ரோட் ன்னு தப்பா நினைச்சி சொந்த நிலத்துலே நுளைஞ்சிட்டேனா?” 

“என் பேர் சின்னதுரையில்ல. சுரேஷ்.” 

“சுரேஷ்? பணக்காரப் பேருதான்!” 

“ஏன் கண் உனக்கு ஒரு மாதிரியாயிருக்கு?” 

“என்ன மாதிரி?’ கண்ணைக் கசக்கிக்கொண்டான்.

“தேய்க்காதே! தேய்க்காதே!” பையன் கத்தினான் *பயமாயிருக்கு.” 

“என்ன பயம்?” 

“ரெண்டு கண்ணிலேயும் வெள்ளையா என்னவோ ஆடை மிதக்கிறது.” 

சுரேஷ் அருவருப்பில் இறுகக் கண்ணை மூடிக்கொண்டான். 

“ஓ, அதுவா? பூ.” 

“பூவா! அதென்ன கண்ணுலேகூட பூக்குமா என்ன செடியில்தான் பூக்கும்.” 

“அப்பிடியெல்லாம் கேட்கக்கூடாது. ஆத்தா கோவிசுக்குவா.” 

“ஆத்தா ? அது யாரு ஆத்தா?” 

“அதெல்லாம் உனக்கேன்? வேணாம் சின்னதுரை” கெஞ்சினான். 

“என் பேர் சின்னதுரையில்லை. சுரேஷ். உன் பேர் என்ன?” 

“கண்ணாயிரம்.” 

சுரேஷுக்குச் சிரிப்பு. ஒரேயடியாச் சிரிப்பு. 

“ஏன் சிரிக்கிறே துரை?” 

“இருக்கிற ரெண்டு கண்ணே சரியில்லே, கண் ஆயிரமாம்!” 

“உஷ்… தவடையிலே போட்டுக்க” தான் போட்டுக் கொண்டான். “ஆத்தா வீசிடுவா, கோவம் வந்துட்டா.” 

“ஆத்தா யாரு?” 

“உனக்குத் தெரியாது” தெரிய வேணாம். 

“உனக்குக் கண் தெரியுமோ?” 

“என் ஆத்தா என்னை வவுத்துல சுமக்கையிலேயே அவ மேலே ஆத்தா சுமையா இறங்கிட்டா. பூத்த கண்ணோடு தான் குளந்தெ விளுந்தது. உடம்பெல்லாம் கண். அப்பவே குளுந்திட்டிருந்தால் இந்த அவதியெல்லாம் ஏன்? ஆனா அவள் சித்தம் இப்பிடி. இப்பிடியும் ஒரு புறான்னு அவள் கையாலே அந்தரத்தில் வீசியெறிஞ்சுட்டா. நானும் பறந்துட்டுத்தானிருக்கேன்.” 

“நீ சொல்றது ஒண்ணுமே புரியல்லே!” 

“குழந்தை!” 

“என்னைக் குழந்தென்னாதே!” சீற்றத்துடன் பையன் கத்தினான். 

“அப்போ நீ என்ன தாத்தாவா?” 

“அப்போ நீ என்ன தாத்தாவா?” கண்ணாயிரம் சௌகரியமாய்ப் புல்லில் சாய்ந்துகொண்டான். புல் மெத்தையின் ஸொகுஸில் ஒரு மதமதப்பு. ஒரு புல்லைப் பிடுங்கி மெல்ல ஆரம்பித்தான். 

“நான் தாத்தா இல்லே” 

“ஏன் வெறி பிடிச்சு சுத்தறே? இப்போ என்ன ஆயிடுச்சு?” 

“என்னை எல்லாரும் குழந்தை குழந்தைன்னு அடக்கறா.” பையன் குரலில் கண்ணீர் துளும்பிற்று. 

“எதிலும் சேத்துக்க மாட்டேன்கறா. ஸுரேஷ்”, பெரியவா பேசிண்டிருக்கோம். மாடிக்குப் போ’-”அப்பா அதட்றா. ஓய்ற காலத்துலே நான் ஒண்ணைப் பெத்துட்டுப் படற பாடு’ன்னு அம்மா அலுத்துக்கறா. “ஸுரேஷ், நானும் ஸுரேஷும் பேசறதை – அது இன்னொண்ணு ஸுரேஷ் – ஒட்டுக்கேட்டு ஒண்ணுக்கு மூணா அப்பாகிட்டே கோழி மூட்டிக் கொடுக்கவா? என்ன வேடிக்கை பாக்கறே?” அக்கா விரட்டறா; எதிர்வீட்டுப் பக்கத்து வீட்டுப் பசங்க எந்த விளையாட்டிலும் சேத்துக்க மாட்டேங்கறாங்க. எனக்கு இன்னும் நாலு வயசு போகணுமாம். அண்ணாதான் சிகரெட் பிடிக்கறது எனக்குத் தெரியாதுன்னு நெனச்சுண் டிருக்கான். எனக்குத் தெரிஞ்சால்தான் என்னன்னு நெனச் சுண்டிருக்கான். நான் இன்னும் அப்பாகிட்டே சொல்லல்லே – என்னை ஒரு ஆளா மதிக்கல்லே.” 

“அடி சக்கை, நீ பெரிய ஆளுதான், பாப்பா!” 

ஸுரேஷுக்கு மண்டையுள் தளைத்தது.”ஜிம்மீ! ஏ ஜிம்மி!” 

கண்ணாயிரம் அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்தான்.. “வேணாம் சின்னதுரை வேணாம்!” 

ஸுரேஷுக்குச் சிரிப்பு. ஒரே சிரிப்பு. “சும்மா சுமா ஒள்ளாட்டிக்கு. ஜிம்மி இப்போதைக்கு வராது. எங்கே தொலைஞ்சதோ?” 

கண்ணாயிரத்துக்குத் தைரியம் கொடுக்கவில்லை. இந்தப் பணம் படைச்சவங்களையே நம்பறதுக்கில்லை, இவன் கொளந்தை. ஆனால் இவன் வந்த வழி என்ன பாடு படுத்தறான். காத்தோ கண்ணைச் சொருவுது. குதிரை மாதிரி ஒரு தடவையாட்டியும் புரண்டெழுந்தாத்தான் வசப்படும். ஆனால் இது ; கண் அசரவிடாது போலிருக்குதே ! 

ஆனால் இருவருமே சொல்லி வைத்தாற்போல் சற்று நேரம் அடங்கினர். 

இதுவரை நின்றுகொண்டிருந்த இடத்தில் ஸுரேஷ் அப்படியே குந்திட்டு உட்கார்ந்து முழங்காலைக் கட்டிக் கொண்டான். 

இடத்தின் அமைதி இருவரையும் தன் தம்பூரில் இழைத்துக் கொண்டது. 

என்னைப் பார், என்னைக் கேள் என்கிற மாதிரி. 

கண் உள்ளவர் என்னைப் பார்க்கட்டும். 

கண் இல்லாதவர் என்னைக் கேட்கட்டும். 

அதுவும் இல்லாதவர் அவர்மேல் நான் படர்வதில், என் தழுவலில் என்னை உணரட்டும்- என்கிற மாதிரி 

என் வேர், கண், மூக்கு, செவி, பாஷை இன்னும் எது எதையோ தாண்டி ஓடுகிறது. 

அதனால் எல்லோரும் என் குழந்தைகள் என்கிற மாதிரி.

என் குழந்தைகளா! சற்று நேரம் சும்மாயிருந்து பாருங் கள் இதுதான் என் பாஷை, உங்களுக்கும் புரிந்த பாஷை என்கிற மாதிரி. 

அவர்களை வாய் பொத்தியது எது என்று அறியாமலே இருவரும் மெளனமாயிருந்தனர். 

காற்று என்ன ஷோக்காய்க் கிளம்புது! காற்றும் ஒரு தோழன்தான். எப்படிக் கண் இமையிலே கன்னத்துலே உடல் ரோமத்துலே, மண்டை மயிர்க்காலுக்குள்ளே புகுந்து விளையாடுது! கிச்சாங்கிளுகிளு குஸுமாங்கனி பஹ துல்லா – என்னமோ இப்படி உளறத் தோணுது. நெஞ்சிலே கன்னுக்குட்டி துள்ளுது. 

“ஏய் அதோ பச்சைக்கிளி ரெண்டு! உன் தலைக்கு மேலே மரத்துலே, கிளையிலே…” 

பச்சையாம் சிவப்பாம் ஊதாவாம் என்னென்னவோ சொல்றாங்க. என்னத்தைக் கண்டேன்? மூக்கு முகந்து, கையால் தொட்டறிஞ்சது, மத்தது ஒண்ணும் அறியேன். இவன்கிட்டே சொன்னா இவன் என்ன புரிஞ்சுக்குவான்? 

“- எங்கப்பாகிட்ட நிஜத் துப்பாக்கியிருக்கு, தெரியு மோன்னோ? அதைச் சுவத்திலே மாட்டியிருக்கு. அவர் ரூமுக்குள்ளே யாரும் போகக்கூடாது. எப்பவும் பூட்டி யிருக்கும். நான் மிஸ்சிஃப் பண்ணுவேனாம்.’ 

“உங்க அப்பாரு யாரு?” 

“அஸிஸ்டென்ட் போலீஸ் கமிஷனர்.” 

”ஐயையோ!’’ 

“நீ ஏன் பயப்படறே? நீ திருடனா?” 

நீங்கள் ஆளை அடிக்கத் தப்பு பண்ணியாவணுமா என்ன? போலீஸ் இன்னாலே நாய் துரத்துது. குடல் துடிக்குது. 

”கண்ணாயிரம் பயப்படாதே. நீ திருடனில்லேன்னு டாடிகிட்டே சொல்றேன். 

‘“டாடி?” 

“அப்பா.” 

அவனுக்கு மனம் நெகிழ்ந்தது. 

“சின்னதுரை, கிட்டே வாயேன்.” 

ஸுரேஷ் சற்று கிட்ட நகர்ந்தான். 

“சின்னதுரை உன்னைத் தொடலாமா?” 

பையனுக்கு மூக்குத்தண்டு சுருங்கிற்று. “நீ டர்ட்டியா இருக்கே-2′ 

“அப்படின்னா?” 

“அழுக்கு.” 

“செ ஒரு நாளும் கிடையாது. நான் தினம் குளிக்கறேன். துணியைத் தோச்சுக் கட்டறேன். ஒரு நாள் தவறாமல் லைஃப்பாய் நீ வேணும்னா பார். என் உடம்புலே அழுக்கு இருக்குதா பார்!” பொத்தான்களை அவிழ்த்து சொக்காயைத் திறந்தான். 

ஸுரேஷுக்கு வியப்பாயிருந்தது. 

“அதென்ன தழும்பு தழும்பா, சுழி சுழியா?-” 

“ஓ?” அவசரமாக இழுத்து மூடிக்கொண்டான். தான் “அது ஆத்தா கொடுத்த ஆயிரம் கண்.” 

“அதெல்லாம் முழிக்குமோ?'” 

“நான் என்ன இந்திரனா? நீ எப்படி நினைக்கிறியோ அப்பிடி வெச்சுக்க சின்னதுரை-” 

“ஊங்?” 

சட்டென்று அவன் மேல் பாய்ந்து அவனைக் கட்டித் தழுவிக்கொண்டான். அம்மாடி, மெத்து மெத்துனு என்ன சொகம். என்ன சொகம்! 

“என்னை விடு! என்னை விடு!” பையன் திமிறினான். ஆலிங்கனம் இறுகிற்று. பையன் திணறினான். திடீரென பயம் கவிந்தது. சட்டென்று விட்டான். 

“யூடர்ட்டி பெக்கர்! வா, வா. என் டாடிகிட்டே சொல்றேன்!’ பையன் அழ ஆரம்பித்தான். 

“என்ன குழந்தையாட்டம் அளுவறே, சூரப்புலின்னு சொல்லிக்கறே! ஆத்தாகிட்ட முலை உண்ண நெனப்பு வந்திடுச்சா? உன் டாடி கரடி – இங்கே எங்கேடா இருக்கு?” 

“இங்கேதான் நாங்கள் பிக்னிக் வந்திருக்கோம். 433 ஐஸ்கிரீம் வாங்கிண்டு வரப்போனான். இப்போ வந்திருப் பான். அப்பாவைக் கரடி என்கிறே? இப்பவே உன்னை இழுத்துண்டு வரச்சொல்றேன்!” 

அழுதுகொண்டே ஓடினான். 

கண்ணாயிரம் அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்தான்.

“சின்னதுரை! சின்னதுரை!” 

”வா! வா!” 

“வா! வா!” 

“வா! வா!” 

கண்ணாயிரம் பதறிப் பதறித் தேடியெடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டான். ஓடினான். கல்லோ, வேரோ, புல்லோ, எதுவோ தடுக்கிற்று. ஒரு வழியாக விழாமல் சமாளிக்கும் தத்தளிப்பில் முகமும் கைகளும் தரையோடு ஒட்டின. புல் செழிப்பின் மறைவில் அந்த நிலையில் அவன் விழுந்தடித்து ஓடுகையில், வேட்டைக்குத் தப்பி ஓடும் நாலு கால் பிராணியாய்த் தோன்றினான். 

ஓடு! ஓடு! ஓடிக்கொண்டேயிரு!

– உத்தராயணம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஜூலை 1992, வானதி பதிப்பகம், சென்னை.

லா.ச.ரா லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *