ஒப்பனை




(இந்திய விடுதலைப் போராட்டக் காலப் பின்னணியில் பின்னப்பட்ட புனைகதை)

1940 ஆம் ஆண்டு தை மாதத்தின் முதல் முகூர்த்த நாள். திங்கட் கிழமை. தெருக்கள் தோறும் தோகை விரிக்கும் மயில்களின் நடமாட்டத்தைக் கண்டு மகிழ்ந்தேன் என்று வெளிநாட்டுப் பயணி மார்க்கோ போலோவால் போற்றப்பட்ட , அருளாளர்கள் வாழ்ந்த பூமியான திருமயிலையின் வடக்கு மாட வீதியில் அமைந்து இருந்த கற்பகாம்பாள் கல்யாண மண்டபம் , கல்யாண களையுடன் காட்சி அளித்தது. குதிரை வண்டிகளிலும் மாட்டு வண்டிகளிலும் சுற்றத்தாரும் நண்பர்களும் வந்து இறங்கிக் கொண்டிருந்தனர். மண்டபத்தின் வாசலில் பட்டுப் பாவாடை சட்டை அணிந்த சிற்றாடை சுட்டி நிலாக்களான சிறுமிகள் தட்டாமாலை சுற்றி விளையாடி தங்கள் உடையைத் தாமரை போல் வைத்துக் காட்டி மகிழ்ந்தனர். எடுப்பான தாவணி பாவாடை அணிந்த பதின் பருவ சிறுமிகளும் இளைஞியரும் இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். கட்டிளங்காளை இளைஞர்கள் , இளம் பெண்களை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டு தங்களுக்குள் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தனர். சிறுவர்கள் , இளைஞர்களைச் சுற்றி நின்று அவர்கள் பேசுவதை ரசித்துக் கொண்டிருந்தனர்.
மண்டபத்திற்குள்ளே போவோம். அங்கே மணமேடையில் அமர்ந்து இருந்த மணமகன் திருநிறைச் செல்வன் ராஜசேகரனும் திருநிறைச் செல்வி ஜானு என்கிற ஜானகியும் மணக்கோலத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். மணமகனின் தந்தை சதாசிவமும் தாய் சுலோச்சனாவும் சற்றே பதற்றத்துடன் காணப்பட்டனர். அவர்களும் மணமேடையில் ஓரத்தில் நின்று கொண்டிருந்தனர். சதாசிவத்தின் சம்பந்தி ஜானுவின் அப்பா தீனதயாளன் , முகூர்த்த வேளை நெருங்கும் போது ஆளைக் காணோமே என்பதுதான் சதாசிவத்திற்கும் அவரது மனைவியாருக்கும் கவலை . சம்பந்தி தீனதயாளன் வேறு யாருமல்ல . சதாசிவத்தின் மைத்துனர் தான். வைஷ்ணவ பிள்ளைமார் ஆன தீனதயாளன் , சிவபக்தரான சதாசிவம் தமது தங்கையை பெண் கேட்டு வந்து நின்ற போது , அவரது நல்ல குணத்தை அறிந்து அவருக்கு தங்கையை மணமுடித்துக் கொடுத்தார். இருபது ஆண்டுகள் கழித்து அவரது புதல்வி , இவர்களின் புதல்வன் ராஜசேகரனைக் கரம் பிடிக்கிறாள் இன்று.
அந்தணர்கள் மந்திரம் ஓதிக் கொண்டிருக்க , நாதஸ்வர வித்வான்களின் மங்கள இசை சத்திரத்தின் கூடத்தை நிரப்பிக் கொண்டிருக்க , தரையில் விரிக்கப்பட்டிருந்த ஜமக்காளத்தில் அமர்ந்திருந்த ஆண்களும் பெண்களும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். வெளியே லேசாக தூறல் தொடங்கியதும் இளவட்டங்களும் சிறுவர் சிறுமியரும் உள்ளே வந்தனர்.
திடுமென கண்களில் கோபம் பொங்க , வேட்டி அணிந்து அங்கவஸ்திரத்தை மேலே போர்த்திக் கொண்டிருக்கும் கனமான உடல்வாகு கொண்ட அகஸ்தியர் உயரம் கொண்டவர் உள்ளே வந்தார். அவர் கையில் சுதேசமித்திரன் நாளிதழ் . அவர்தான் தீனதயாளன்.
‘ ஐயா சதாசிவம் ‘ அவரது குரல் கம்பீரமாய் அந்த சத்திரத்தின் கூடத்தில் ஒலித்தது. குழுமி இருந்தோரின் பேச்சொலி நின்றது. மந்திர ஒலிகள் நின்றது. மங்கள இசையும் நின்றது.
சதாசிவமும் அவரது மனைவியும் அவர் அருகில் வந்து நின்றனர்.
தீனதயாளன் பேசினார் –
‘என் மகள் அத்தானைத் தான் மணப்பேன் என்று ஒற்றைக் காலில் நின்றதால்தான் இந்த கல்யாணத்திற்கு சம்மதித்தேன். சுதேசமித்திரனில் நேற்று கைதான ராஜ துரோக கைதிகளில் என் தங்கை மகனின் பெயர் இருக்கிறது. மருமகன் உள்ளே போய் விட்டான் என்றால் இவன் யார்? அவன் ஜாடையில் இருக்கும் உன் சொந்தக் காரனை என் மகள் தலையில் கட்டுகிறீரா? அம்மா தங்கை நீயும் இந்த நாடகத்தில் உடந்தையா?‘
சதாசிவத்திற்கும் சுலோச்சனாவுக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை. இருவரும் கூடத்தில் ஓர் ஓரத்தில் நின்றிருந்த சக்கரபாணியிடம் கண்களால் கெஞ்சினர் . உயரமான , ஒல்லியான தேகம் மழித்த முகம் கொண்ட நடுத்தர வயது சக்கரபாணி , தீனதயாளனனின் காரியஸ்தர். சக்கரபாணி தமது முதலாளி அருகில் வந்தார். ‘ பிள்ளைவாள் ‘ என்று சன்னமான குரலில் விளித்தார். ‘ நீர் என் வியாபாரத்தைப் பார்த்துக் கொள்ளும் காரியஸ்தராக இருக்கலாம். அதற்காக இதில் நீர் மூக்கை நூழைக்காதீர் ‘ என்று கடிந்தார் தீனதயாளன். சக்கரபாணி தமது உயரமான உடலைக் குறுக்கிக் கொண்டு ‘ எஜமான் ‘ என்று தீனதயாளனின் காதுகளில் மட்டும் விழும்படி ஏதோ சொன்னார்.
தீனதயாளனின் முகம் மலர்ந்தது. ‘ இதை என்னிடம் பக்குவமாக சொல்லி இருக்கலாமே ‘என்று சக்கரபாணியிடம் பேசிய தீனதயாளன் , சபையினரைப் பார்த்துப் பேசினார் ‘ அது என் மருமகன் இல்லை. மயிலையில் உள்ள இதே பேர் உள்ள வேற பிள்ளையாண்டான்… ஆகட்டும்… மேலே ஆகட்டும்’ என்றார். அந்தணர்கள் மந்திரங்களைத் தொடர்ந்தனர். நாதஸ்வர வித்வான்கள் , கெட்டி மேளம் முழங்கினர். அந்தணர்களின் தலைகளிலும் மணமக்களின் தலைகளிலும் வந்திருந்த வயதில் பெரியவர்களின் கரங்களிலிருந்து அட்சதைகள் விழ மணமகன் ராஜசேகரன் , ஜானுவின் கழுத்தில் திருமாங்கல்யம் புனைந்தான். தாலிக்குப் பிறகான சடங்குகள் நடந்து கொண்டிருக்க , சதாசிவம் , மீண்டும் சம்பந்தி தீனதயாளனைத் தேடினார்.
அவர், மண்டபத்திற்கு வெளியே இருந்த குதிரை வண்டியில் ஏறி அமர்ந்து இருப்பதைப் பார்த்தார். வண்டிக்குப் பின்னால் சக்கரபாணி நின்று கொண்டிருந்தார். சதாசிவம் , பணிவுடன் ‘மைத்துனரே கல்யாண போஜனம் புசிக்காமல் ‘ என்று இழுத்தார். தீனதயாளன் சக்கரபாணியிடம் ‘ சக்கர , நான் பேசினால் என் குரல் ஊருக்கே கேட்கும் . நீர் சொல்லும் சொல்லி விட்டு வண்டியில் ஏறும் ‘ என்றார்.
சக்கரபாணி சதாசிவத்திடம் பேசினார் ‘சுவாமி..நேற்று ராஜசேகரனின் திருமணம் தடைபடக் கூடாது என்பதற்காக , உமது தம்பியார் நாடக நடிகர் சுகுமாரன் , தலையில் கருப்பு சாயம் பூசி , இளைஞன் போல் ஒப்பனை செய்து ராஜசேகரனாக கைதாகி இருக்கிறார் என்ற தகவல் கேட்டு பிள்ளைவாள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். அவருக்குத் தெரிந்த பிரமுகர்களைப் பார்த்து மகளின் திருமணத்திற்காக கைதாகி இருக்கும் உமது இளவலை வெளியே கொண்டு வந்த பின்னர் ஆகாரம் என்று பிள்ளைவாள் முடிவு எடுத்துள்ளார்.’ கூறியபடியே வண்டியில் ஏறி அமர்ந்தார் சக்கரபாணி. குதிரை வண்டி வேகமாக நகர்ந்தது. நகர்ந்து விட்ட வண்டியைப் பார்த்து கை கூப்பினார் சதாசிவம்.
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |