ஏழாம் பொருத்தம்…
கதையாசிரியர்: யுவராஜ் சம்பத்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: April 21, 2026
பார்வையிட்டோர்: 131

“ஏன் இப்படி பூமிக்கும் வானத்துக்கும் குதிக்கிறீங்க? என்ன ஆச்சு? ஏதாவது காணாததைக் கண்டீர்களா?” என்றபடியே மாதவனின் படுக்கை அறைக்குள் நுழைந்தாள் அமிர்தவல்லி.
மாதவன் கையில் ஒரு பெரிய கடிதத்துடனும்,மற்றொரு கையால் மார்பைப் பிடித்தபடியும் படுக்கையில் அமர்ந்திருந்தான். இரண்டு நாள் சிரைக்கப்படாத தாடி, ஆங்காங்கே தெரியும் நரை, சரிந்து விழுந்திருந்த கண் கண்ணாடி இவை எல்லாம் அவன் ஏதோ ஒரு பெரிய துயரத்தில் இருக்கிறான் என்பதைச் சொல்லாமல் சொல்லியது அமிர்தவல்லிக்கு.
மாதவனின் வங்கி வேலை சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு பெரிய நிகழ்வு நடந்திருக்கும் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த அமிர்தவல்லி, “என்ன, வழக்கம் போல டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்களா? அதனால் என்ன? அரசாங்க உத்தியோகம் என்றால் டிரான்ஸ்பர் உண்டுதானே! இதற்குப் போய் உங்களுடைய வழக்கமான சோக நாடகத்தை அரங்கேற்றப் போகிறீர்களா?” என்று விவரம் தெரியாமல் வினவினாள்.
“ஐயோ, அப்படி இல்லடி! நம்ம குடும்ப மரியாதை எல்லாம் காற்றில் பறந்து போகப்போகுது. இப்படி பண்ணிட்டாளே! நான் நினைச்சுக்கூடப் பார்க்கலையே. யாராவது அக்கம் பக்கத்து வீடுகளில் விஷயம் தெரிஞ்சா என் நிலைமை என்ன ஆகும்? ஐயோ, மோசம் போயிட்டேனே!” என்றபடியே, சமாதானம் செய்ய முயலும் அம்மாவை பார்த்து அலறும் ஒரு குழந்தையைப் போல, அலறினான் மாதவன்.
சென்னையில் உள்ள ஒரு பிரபல வங்கியில் பணியாற்றும் மேலாளர் அவர். படித்தது என்னவோ ஆங்கில வழியில் என்றாலும், தமிழ்மீதும் கொஞ்சம் காதல் கொண்டவர். சில நேரங்களில் தனக்குத் தோன்றுவதைத் தமிழில் ஒரு டைரி குறிப்பாக எழுதி வைத்துக்கொள்வார். அப்படிப்பட்ட குறிப்புகளை வைத்துப் பல்வேறு குழுக்களில் தனக்குத் தமிழில் பாண்டித்தியம் உள்ளது என்பதைப் பறைசாற்றுபவர். அடிக்கடி அவர் சொல்லும் வார்த்தை, “அதிகம் படித்தால் அறிவு வளராது” என்பது. அது ஏன் என்பது யாருக்கும் தெரியாது. “கண்டது கற்றவன் பண்டிதன் ஆவான்” என்பதுதான் பழமொழி. ஆனால் இவருக்கு மட்டும் அதிகம் படித்ததனால் பல நேரங்களில் குழப்பங்கள் ஏற்படுவது உண்டு.
இது எல்லாம் தெரிந்து வைத்திருந்த அமிர்தவல்லி, இந்தக் கூச்சலுக்கு பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அமிர்தவல்லி மீண்டும் பேசத் தொடங்கினாள்.
“ஐயையோ, சத்தம் போடாதீங்க. பக்கத்து வீட்டுக்காரங்க உண்மையிலேயே நீங்க போடுற சத்தம் கேட்டுத்தான் வந்து, என்ன ஏதுன்னு விசாரிக்கப் போறாங்க. கொஞ்சம் அமைதியா இருங்க. அந்த லெட்டரை இங்க கொஞ்சம் கொடுங்க. நான் படிச்சுப் பார்த்துட்டு அப்புறம் பேசுவோம். ஒரு காபி குடிக்கிறீங்களா? கொஞ்சம் மனசு சாந்தியாகட்டும்” என்றவாறே மாதவனின் கையில் இருந்த கடிதத்தைப் பறித்துக்கொண்டு காபி போடுவதற்குச் சமையலறைக்குள் நுழைந்தாள்.
அமிர்தவல்லியும் மாதவனுக்கு இணையாகப் படித்தவள். அவளும் ஒரு வங்கியில் உதவியாளராகப் பணியாற்றுவதால், தனக்கும் கொஞ்சம் சிந்திக்கும் திறமை உண்டு என்பதை நிரூபிக்க அடிக்கடி இந்த மாதிரி ஆலோசனை சொல்வது வழக்கம். ‘வித்யாகர்வம்’ வேற என்ன சொல்ல?
காபியை மாதவனின் கையில் கொடுத்தாள் அமிர்தவல்லி. “இப்ப என்ன நடந்துப்போச்சு? நடக்காதது நடந்த மாதிரி! நம்ம வீட்டுல மட்டும் தான் நடக்குற மாதிரி பேசுறீங்க. அவ என்ன எழுதி இருக்கா?”
“நான் என் நண்பர்களுடன் மூன்று நாள் உல்லாசப் பயணம் போகிறேன். இது ஒரு ஆன்மீகம் மற்றும் யோகா சம்பந்தப்பட்ட சுற்றுப்பயணம் என்பதால் என்னுடைய கைபேசியை எடுத்துக்கொண்டு செல்ல மாட்டேன். என்னுடன் என்னுடைய பழைய நண்பர்கள் சிலரும் வருகிறார்கள். ஆகவே மூன்று நாட்களுக்கு அல்லது அதற்கு மேலான நாட்களுக்கு என்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம். நேரில் சொல்ல முடியாததற்கு வருந்துகிறேன்.
இப்படிக்கு, உங்கள் செல்ல மகள், ரமா.”
“இதில் என்ன பெரிய வித்தியாசத்தைக் கண்டீங்க?”
“இல்லடி, அதுல வேற ஏதோ ஒரு விஷயம் இருக்குது. இல்லன்னா அவ என்கிட்ட சொல்லாம போவாளா? எனக்கு என்னவோ சந்தேகமாகத்தான் இருக்கிறது. நீ உன் புள்ளையை வளர்த்த வளர்ப்பு சரி இல்லை. இல்லைன்னா ஒரே மக, என் கண்ணுக்குள்ளேயே வச்சுப் பொத்திப் பொத்தி வளர்த்த மக, என்கிட்ட சொல்லாம போவாளா? எல்லாம் என் தலையெழுத்து, கிருஷ்ணா!” என்றபடியே காபியைக் குடிக்க ஆரம்பித்தான்.
அமிர்தவல்லியின் காபியின் மீது அவனுக்கு ஒரு மோகம் உண்டு. அமிர்தவல்லிக்கும் அவரிடம் ஏதாவது காரியம் சாதிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி அவர் காபி குடிக்கும்போது பேச்சு கொடுப்பதுதான்.
இதைச் சமாதானப்படுத்தி விடலாம் என்று நினைத்த அமிர்தவல்லி, வேறு என்னென்ன வழிகள் இருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தாள். “நம்ம குழந்தை தப்பு பண்ணாது. நீங்கதான் ரொம்ப அலட்டிக்கிறீங்க. போய் குளிச்சிட்டு ஆபீஸ் போற வேலையைப் பாருங்க. நான் அவ பிரெண்ட்ஸ்க்கு போன் பண்ணி என்ன விஷயம் என்று கேட்கிறேன். கிளம்புங்க” என்றபடியே காலியான காபி டம்ளரை வாங்கிக்கொண்டு சமையலறைக்குள் மீண்டும் நுழைந்தாள் அமிர்தவல்லி.
ஆனால் அமிர்தவல்லிக்கும் ஏதோ நடக்கிறது என்ற சந்தேகம் இருந்தது. ரமா தஞ்சாவூரில் NIFTEM-இல், பி.டெக் உணவு பதப்படுத்துதல் பட்டப்படிப்பு படித்த, இப்போது பெங்களூரில் பணிபுரியும் பெண். இவர்களின் ஒரே மகள். சுயசிந்தனை உள்ள, துடுக்கான பெண் என்று மற்றவர்களால் அறியப்படுபவள்.
“அமிர்தா, இந்தக் கவர்ல பத்து ஜாதகம் பயோடேட்டாவோட இருக்குது. நாம இன்னும் விளம்பரம் கொடுக்கல. அதனால முதல்ல இந்த பயோடேட்டாவைப் பார்த்துட்டு, அதுல ஏதாவது செலக்ட் பண்ணலாம். எதற்கும் ரமாவிடம் ஒரு வார்த்தை கேட்டுட்டு அவளோடையும் டிஸ்கஸ் பண்ணிக்கோ,” என்று சொல்லிக்கொண்டே அமிர்தவல்லியின் கையில் ஒரு பெரிய கவரைக் கொடுத்தான் மாதவன்.
அமிர்தவல்லி அதைப் பெற்றுக்கொண்டு பூஜை அறைக்குள் விரைந்தாள். ரமாவும் அமிர்தவல்லியும் சேர்ந்து அந்தக் கவர்களைப் பிரித்தனர். ரமா ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டே அவற்றை அடுக்கி கொடுத்தாள். அம்மாவும் மகளும் ஒவ்வொரு மாப்பிள்ளை பற்றியும் ஓரிரு நிமிடங்கள் விவாதித்துக்கொண்டனர்.
ரமாவும் தனக்குப் பிடித்திருந்த சிலரின் விபர குறிப்புகளை கைபேசியில் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டாள்.
அமிர்தவல்லிக்கும் இது மிகவும் பிடித்திருந்தது. இப்பொழுதெல்லாம் குழந்தைகளிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டால், பின்னாளில் அவர்களுக்குள் ஏதாவது மனத்தாங்கல் வந்தாலும், “இது நாம எடுத்த முடிவு” என்று எண்ணித் தாங்களாகவே பேசித் தீர்த்துக்கொள்வார்கள். தேவையில்லாமல் பெற்றோர்களின் தலை இதில் உருளாது. அந்த எண்ணமே அமிர்தவல்லிக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மாதவனுக்கு முழு உடன்பாடு இருந்ததில்லை. இருந்தாலும் அம்மாக்கள் மகள்களிடமும், மகள்கள் அம்மாக்களிடமும் பேசும் மொழி அலாதியானது. அன்பும் நேசமும் நிறைந்தது. அந்த மொழியை மற்றவர்கள் முழுவதுமாகப் புரிந்துகொள்வது எப்போதும் எளிதல்ல.
பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு மாப்பிள்ளை வீட்டின் கலாச்சாரம், மரபு, வழிபாடு போன்ற விஷயங்களையும் கலந்து ஆலோசித்தனர். ஆனாலும் ஏதோ ஒரு சில காரணங்களால் எந்த ஒரு மாப்பிள்ளையும் தங்கள் மகளுக்குச் சரி வராது என்று மாதவன் முடிவு செய்தார். அமிர்தவல்லிக்கும் ரமாவுக்கும் அது சற்று ஏமாற்றமாகவே இருந்தது. மாதவனின் சில கருத்துக்கள் ரமாவின் மனதைக் காயப்படுத்தின. அமைதியான குளத்தில் சிறு கல் எறிந்தது போல, அந்த வார்த்தைகள் அவளின் மனதில் அதிர்வலைகளை எழுப்பின.
ராஜபாளையம். மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களை ஒட்டியுள்ள ஒரு பெரிய நகரம். தமிழ்நாட்டில் பருத்தி, பஞ்சு, ஜவுளித் தொழில்களுக்குச் சிறப்பான பங்களிப்பை வழங்கும் ஊர். அங்கிருக்கும் ஒரு பெரிய ஸ்பின்னிங் மில்லில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் ராஜேந்திரன் ராஜா. அவருடைய மனைவி லலிதா. அங்குள்ள பெரும்பாலான மக்கள் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட வைஷ்ணவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள். ராஜபாளையத்திலிருந்து தென்காசி ஒரு மணி நேரப் பயணம்தான்.
ஒரு மாலை நேரம். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ராஜேந்திரன் ராஜா முன் வராந்தாவில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தார். அருகில் அமர்ந்திருந்த லலிதாவிடம் அவர் மெதுவாகப் பேசத் தொடங்கினார்.
“லலிதா… நமக்கு இருக்கிறது ஒரே பையன். அவன் ஆசைப்பட்டபடியே ஐஐடியில் படிக்க வச்சாச்சு. அதற்கும் மேலாக இன்னும் படிச்சிருக்கான். அவன் ஒரு முடிவு எடுத்தால் சரியாகத்தான் இருக்கும்,” என்றார். சிறிது நேரம் யோசித்துவிட்டு மீண்டும் சொன்னார்: “எதற்கும் நாம் ஒருமுறை அந்தப் பெண்ணை… அவளுக்குத் தெரியாமல் பார்த்துவிட்டு வந்து விடலாமா?”
லலிதா மெதுவாகச் சிரித்தாள். “அதுதான் நல்லது. குழந்தைகளின் மனசு என்ன நினைக்கிறதோ அதை முதலில் புரிஞ்சுக்கணும். போய் பார்த்து வாருங்கள்,” என்றாள். அந்தச் சம்மதம் கிடைத்தவுடன் ராஜேந்திரன் ராஜா மனதில் ஒரு தீர்மானம் உறுதியாகிப்போனது.
ரமா சுற்றுப்பயணத்தில் எடுத்த சில புகைப்படங்களை வீட்டிற்கு அனுப்பியிருந்தாள். அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த அமிர்தவல்லிக்குச் சில முகங்கள் பரிச்சயமாகத் தோன்றினாலும், இரண்டு முகங்கள் மட்டும் வேறுபட்டதாகத் தெரிந்தது.
அதைப் பற்றி ரமாவிடம் கேட்டபோது, அவள் விளக்கம் அளித்தாள். அவர்களில் ஒருவர் ராமசுப்பிரமணியன், எம்.டெக், எம்.பி.ஏ படித்த பொறியாளர். எல் & டி (L&T) நிறுவனத்தில் மும்பையில் பணிபுரிபவர். சொந்த ஊர் ராஜபாளையம். இன்னொருவர் டாக்டர் குப்புராஜ், ரமாவுடன் தங்கியிருக்கும் அவளுடைய தோழியின் அண்ணன்.
இந்தத் தகவல் அமிர்தவல்லிக்குக் கவலை அளிக்கவில்லை என்றாலும், இவர்களுக்கும் தன் மகளுக்கும் என்ன தொடர்பு இருக்கலாம் என்று அவள் மனதில் யோசனை எழ ஆரம்பித்தது. இதைப் பற்றித் தன் கணவன் மாதவனிடம் எப்படிச் சொல்லுவது என்பதும் அவளுக்கு ஒரு குழப்பமாக இருந்தது.
எத்தனை ரகசியங்களை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், எத்தனை அலைகளை அள்ளி வீசிய பிறகும் அதே இடத்தில் மௌனமாக நின்றுகொண்டிருக்கும் கடலைப் பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு நல்ல குடும்பப் பெண்ணான அமிர்தவல்லிக்கு அந்த மௌனத்தின் மொழி தெரிந்திருந்தது. மகள் மௌனத்தின் வழியாக அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
அமிர்தவல்லி , ஒரு நாள் , மலை வேலையில், மாதவன் காபி டம்ளருடன் அமர்ந்திருந்தபோது அவன் காதில் மெல்ல இந்த விஷயத்தை போட்டாள் . மாதவன் முகம் வாடிப்போனது. இருவரும் நீண்ட நேரம் இதை பற்றி விவாதித்தார்கள் . ராமா உறுதியாக இருப்பதாக அமிர்தவல்லி சொன்னாள் . ராமாவிடவும் மாதவன் பேசினான் .
இந்த விஷயத்தில் மாதவனுக்கும் ரமாவுக்கும் ஏழாம் பொருத்தம் போல இருப்பதாக அமிர்தவல்லி உணர்ந்தாள். ஜாதகத்தில் ஏழாம் பொருத்தம் நன்றாக இருந்தால், கணவன் மனைவி இருவரும் மிகவும் அன்யோன்யமாக வாழ்வார்கள். அப்படியிருக்க, எப்போதும் முரண்பட்டுக்கொண்டிருக்கும் இருவரைப் பார்த்து “இவர்களுக்கு ஏழாம் பொருத்தம்!” என்று ஏன் சொல்லத் தொடங்கினார்கள்?
தோழி கனிமொழி ரமாவின் வருத்தத்தில் பங்கு கொண்டாள். “ஒரு தடவை அவனை நேரில் சந்தித்துப் பேசிப் பாரு ரமா. எல்லாரைப் பற்றியும் பிறர் சொல்லுவது வேறு… நாமே பார்த்துப் புரிந்துகொள்வது வேறு,” என்று கனிமொழி மெதுவாகச் சொன்னாள்.
முதலில் ரமாவிற்குத் தயக்கம் இருந்தது. இறுதியில் ராமசுப்பிரமணியனைச் சந்தித்துப் பேச வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள். வீட்டில் அம்மாவிடம் “தோழிகளுடன் இரண்டு நாட்கள் சிறிய உல்லாசப் பயணம் போகிறேன்,” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.
நகரத்தின் அமைதியான ஒரு சிற்றுண்டிச் சாலையில் (Cafe) முதல் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. ரமா உள்ளே வந்தபோது, ஜன்னலருகில் அமர்ந்திருந்த ராமசுப்பிரமணியன் எழுந்து நின்றான். “வணக்கம் ரமா…” என்று சிறிது வெகுளியுடன் சொன்னான்.
முதல் சில நிமிடங்கள் பேச்சுத் தடுமாறினாலும், பின்னர் மெதுவாக உரையாடல் தொடங்கியது. வேலை, குடும்பம், படிப்பு எனப் பல விஷயங்கள் பேசப்பட்டன. ராமசுப்பிரமணியனின் அமைதியான பேச்சும் தெளிவான சிந்தனையும் ரமாவின் மனதில் நல்ல எண்ணத்தை ஏற்படுத்தியது. இருவருக்கும் பொதுவாக இருந்த தமிழின் மீது கொண்ட காதல், அந்தச் சந்திப்பை மட்டும் அல்ல; அவர்களின் எதிர்காலத்தையும் சிறகு விரித்துப் பறக்கச் செய்தது.
ஒரு வர இறுதி நாளில் ரமாவும் மாதவனும் இதை பற்றி பேசி ஒரு முடிவெடுக்க அமர்ந்தார்கள். ரமாதான் முதலில் மௌனத்தை உடைத்தாள். “அப்பா… நீங்க ஒரு கவிதை சொன்னீங்க. ஞாபகம் இருக்கா? அதை நான் சொல்லட்டுமா?” என்று மாதவன் எழுதிய கவிதையை ரமா மெதுவாகச் சொல்லத் தொடங்கினாள்.
“பார்த்துப் போ” எனச் சொல்ல
ஒரு குரல் இருந்தால்
பயணங்கள் கவிதையாகும்.
திரும்பிப் பார்க்கையில்
ஒரு புன்னகை இருந்தால்
தூரங்கள் பாரமாகாது.
ஆனால்
பூட்டிய கதவைத் தானே திறந்து
இருளை வரவேற்கும் வீட்டில்
தனிமை ஒரு சாபம்;
கடிகாரச் சத்தமும்
மரண ஓலமே…
கவிதை முடிந்ததும் ரமா சிரித்துக்கொண்டு சொன்னாள்: “ஏம்பா… எழுதும்போது மட்டும் உங்களுக்கு இவ்வளவு ஆத்மாத்மா எழுத வருமா? இப்போ நான் ஒரு பயணம் போகணும் என்று சொன்னால், உங்களுக்கு ஏன் இவ்வளவு ஆக்ரோஷம்? கவலைப்படுவதை விட்டுவிட்டு, நான் திரும்பி வரும் நாளை எண்ணிக் காத்திருங்கள் அப்பா… நான் உங்களுடைய ரமாதான்”.
அதைக்கேட்டதும் மாதவன் ஒரு கணம் வியந்து , நிலை குலைந்து சிலேகித்தான். “அமிர்தா… ஒரு காபி கொடு…” என்று அவர் சொன்ன ஒரு சொல்லிலேயே அவர் மன மகிழ்ச்சி வெளிப்பட்டது.
திருமணம் சிறப்பாகச் சங்கரநாராயணர் கோவிலில் நடந்தது. இங்கு ஒரே தெய்வத்தில் சிவபெருமான் மற்றும் விஷ்ணு இணைந்த வடிவமாகச் சங்கரநாராயணர் இருக்கிறார். அதனால் சைவ மரபும் வைஷ்ணவ மரபும் ஒன்றாக இணைந்த சின்னம் அது.
“அரியும் அரனும் ஒன்னு. அறியாதவன் வாயில் மண்ணு” என்று ராமசுப்பிரமணியன் ரமாவின் காதில் அவளுக்கு மட்டுமே கேட்கும்படி சொன்னான்.
தொடர்புள்ள சிறுகதைகள்
உனக்கும் எனக்கும்
பானுமதி வெங்கடேஸ்வரன்
April 21, 2026
ஒரு சனிக்கிழமை காலையில்
நிர்மலா ராகவன்
April 21, 2026
என் உயிரே… மயூரி..!
ஜூனியர் தேஜ்
April 21, 2026