எழுதாத எழுத்தாளன் எழிலன்!
கதையாசிரியர்: பொ.சண்முகநாதன்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: September 4, 2026
பார்வையிட்டோர்: 18
(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“எழுதுவதென்பது அப்படி ஒன்றும் பாரதூர மான காரியமில்லை. நாலு புத்தகத்தை வாசித்துவிட்டு, அதிலை ஒரு நுள்ளு, இதிலை ஒரு கிள்ளு, அடுத்ததிலை ஓர் அள்ளு இப்படியாக எடுத்தெடுத்து எழுதிவிட்டுக் கையெழுத்தைப் போடவேண்டியதுதான், எழுத்தாளனாகிவிடலாம்.
இப்படியில்லாவிட்டால் அவன் பேசுவது, இவன் பேசுவது, அங்கை நடப்பது, இங்கை நடப்பது இப்படியான சம்பவங்களையெல்லாம் செருகி கதை கட்டுவது பெரியகாரியமோ?
சுருக்கமாகச் சொல்லுவதாயிருந்தால் சைக்கிள் கடை மணியத்தின் வேலையைப் போலத்தான் இந்த எழுத்தாளர்களின் வேலையும்! அவனும் ஊர் ஊராகத் திரிந்து ஒரு ‘பார்’ எடுத்திட்டால் போதும். பிறகு அங்கை ஒரு சில்லு, இங்கை ஒரு சில்லு, அடுத்தவீட் டிலை ஒரு “மட்காட்,’ எதிர் வீட்டிலை ஒரு ‘செயின் கவர்’ இப்படியாகச் சேர்த்து ஒரு சைக்கிள் செய்துவிடுவான்.
இது தெரியாமல் இந்த எழுத்தாளர்கள் எல் லாரும் தலைகால் தெரியாமல் திரிவதும், அவர்களை யெல்லாம் கடவுளைக் கண்டதுமாதிரிப் போற்றித் திரி வதும் அர்த்தமற்றது.
இன்னும் சிலர் ‘பேப்பரிலை’ எழுதினால்தான் எழுத்தாளன் என்று சொல்லுகிறார்கள். இது சரியான முட்டாள்தனம். நானும் அந்தக்காலத்தில் ஏராளமாக எழுதியிருக்கிறேன். ஆனால் ஒன்றுகூடப் பேப்பரிலை வரவில்லை; பேப்பருக்கு அனுப்பியதுமில்லை. அப்படி யானால் என்னை எழுத்தாளன் இல்லையென்றா சொல்லுவது?
எழுத்தாளர்களுக்கெல்லாம் பத்திரிகை அலு வலகங்களில் பழக்கமான ஒருவரேனும் இருப்பார். அவரின்றி ஓர் அணுவும் அசையாது. எங்களுக்கும் அப்படி யாராவது இருந்தால் நாங்களும்தான் ஏராளமாக எழுதலாம்.
அங்கை பாருங்கோ அவையளும் ‘எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான். படித்தவன் பாட்டைக்கெடுத் தான்’ என்பதுபோல் ஏதேதோ பத்திரிகைகளில் எல்லாம் எழுதுகிறவையாம். எழுதட்டும், ஆனால் நான் பேசிறதை எல்லாம் கேட்டுவிட்டு அதையும்கூட எழு திப்போடுவினம் என்றுதான் பயமாயிருக்கு.”
மேற்படி சத்தான வார்த்தைகளையெல்லாம் தனது முத்தான வாயால் அடிக்கடி உதிர்த்துவிடுபவன் தான் எழிலன். அவன் எங்களூர் நூல்நிலையத்தின் பொறுப்பாளன். நூல்நிலையத்தில் யாராவது எழுத்தா ளனும் இருந்து வேறு பலரும் கூடியிருந்தால் இப்படி யான வசனங்களை அவிழ்த்துவிடுவான்.
எழிலன் நூல்நிலையத்தின் பொறுப்பாளனே தவிர அவ்வளவாக நூலறிவு நிரம்பியவனல்ல. அவன் எழுதுவது ஒரு திறமை என்பதையோ, எழுத்தாளன் என்பவன் ஓர் உயர்ந்த பிறவி என்பதையோ இலேசில் ஒப்புக்கொள்ளமாட்டான். தன்னால் முடியாத ஒரு கலை – தன்னால் நுழையமுடியாத ஒரு துறை எப்பொழு தும் ‘மகா மட்டமானதே’ என்பது அவனது எண்ணம்.
இரண்டொரு எழுத்தாளர்கள் அந்த நூல்நிலை யத்தில் அடிக்கடி புத்தகங்கள் எடுப்பதை வைத்துக் கொண்டு எழுத்தாளர்கள் புத்தகங்களைப் பார்த்துத் தான் எழுதுகிறார்கள் என்றும் தனது நூல்நிலையமும் தானும் இல்லாவிட்டால் அந்த எழுத்தாளர்கள் எழுதவே முடியாது என்றும் உண்மையாகவே எழிலன் எண்ணிக்கொண்டிருக்கிறான்.
பத்திரிகையில் எழுதுவதற்குத் தகுதி தேவை யில்லை; எப்படியும் எழுதலாம்; எதையும் எழுதலாம். ஆனால் அது பிரசுரமாவதற்குப் பத்திரிகை அலுவலகங்களில் பழக்கமான யாராவது ஒருவரேனும் இருந்தே ஆகவேண்டும் என்பதும் எழிலனின் எண்ணம்.
முடிவாக எழிலன் “உண்மையான எழுத்தாள னென்றால் அவன் எழுதமாட்டான். இப்படியாக யோசித்தபடிதான் இருப்பான். எப்போதாவதுதான் எழுதுவான். அதையும் பத்திரிகை ஒன்றுக்கும் அனுப்ப மாட்டான்” என்று நிமிர்ந்து கைகட்டியவாறு சொல்லுவான்.
தன்னால் முடியாத ஒன்று மற்றவர்களால் முடி வதைப் பொறுக்கமாட்டாத எழிலனிடம் நூல்களிலி ருந்து எடுத்து எழுதுவது திருட்டென்றும், திருடி எழுதி னால் கண்டுபிடிக்கப்பட்டு அவமானப்படவேண்டும். என்றும், நீ ஏதாவது கதை, கட்டுரை எழுதித் தா எப்படி இருக்கிறது பார்ப்போம் என்றும், யாராவது கூறினால் அதற்கெல்லாம்கூட விதண்டாவாதமான பதில்கள் சொல்லுவான்.
நேற்றைய தினம் இந்த எழுதாத எழுத்தாளன் பலர் மத்தியில் வலிந்து கதைக்கப்போய் சரியாக மாட்டிக்கொண்டான்.
நூல்நிலையத்தில் நான் ‘திருவாசகம்’ என்ற நூலை எடுத்துக்கொண்டு வெளியே வந்ததும், “திருவாசகம் போகிறது. இனி இதிலிருந்து கதை கட்டுரைகள் எல்லாம் தயாரிப்பார்” என்றான் எழிலன்.
உடனே அங்குநின்ற பலர் “சிறுகதைகளும் நகைச்சுவைக் கட்டுரைகளும்தானே அவர் எழுதிவரு கிறார். சிறுகதைகளும் நகைச்சுவைக் கட்டுரைகளும் திருவாசகத்திலிருந்து எப்படி எடுத்து எழுதுவதாம்? அப்படித்தான் எடுத்து எழுதினாலும் போயும் போயும் பொலீஸ் நிலையத்தில் களவெடுத்த கதையாகவல்லவா முடியும்” என்று எழிலனுடன் காரசாரமான விவாதம் தொடங்கிவிட்டனர்.
இறுதியில் எழிலன் தனது தோல்வியைத் தற் காலிகமாக ஒப்புக்கொண்டான். “ஏதோ எழுதுங்கோ. எழுதுவதில் குறை ஒன்றுமில்லை. படிப்படியாகத்தான் வளரவேண்டும். முதலில் அறையில் ஆடித்தான் பிறகு அம்பலத்தில் ஆடவேண்டும்” என்றான்.
– கொழும்புப் பெண் (நகைச்சுவைக் கட்டுரைகள்), முதற் பதிப்பு: செப் 1965, கலைச்செல்வி பதிப்பகம், சுன்னாகம்.
![]() |
எழுத்தாளர் பொ.சண்முகநாதன் (போனாச்சானா) இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளரும், நகைச்சுவை இலக்கிய முன்னோடிகளில் ஒருவரும் ஆவார். 'போனாச்சானா' என்ற பெயரிலும் எழுதியுள்ளார். வீரகேசரி' மூலம் 1961ல் எழுத்துலகில் நுழைந்த நகைச்சுவை எழுத்தாளர் திரு.பொ.சண்முகநாதன் அவர்கள் ஏனைய ஈழத்துப் பத்திரிகைகளான 'ஈழநாடு', 'கலைச்செல்வி', 'கலைவாணி, 'சங்கப்பலகை', 'சுதந்திரன்', 'செய்தி', 'தமிழ்முரசு', தினகரன்', 'புதினம்', 'விடுதலைப் பரணி, விவேகி', 'ராதா' ஆகியவைகளிலும் எழுதியுள்ளார். இவர் நகைச் சுவைக்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
தின பலன்
எம்.பாலமுரளி
September 6, 2026
கொழும்புப் பெண்
பொ.சண்முகநாதன்
September 4, 2026
கொழும்புப் பெண் வேண்டாம்!
பொ.சண்முகநாதன்
September 4, 2026
