கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 3, 2025
பார்வையிட்டோர்: 61 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முடியுமா? இந்த மனநிலை யிலே கதை எழுத முடியுமா? இப்படி யொரு சூழலிலா? சாத்தியமா? நடக்குமா? இயலக்கூடிய விஷயமா? 

கதையே எழுத முடியுமான்னு யோசிக்கிற நெலையில… ரெண்டு கதை கேட்டுக் கடிதம். கையில் அந்த வெள்ளைத்தாள். டைப் அடிக்கப்பட்ட கடிதம். ‘ரெண்டு கதைகளா’ என்று நினைத்த கணத்தி லேயே என்னுள்ளிருந்து வெடித்து உதிர்கிற கசந்த சிரிப்பு. என்னை நானே பரிகசித்துக்கொள்கிற மாதிரி. என் நிலைமைக்கு நானே பரிதாபப் பட்டுக் கொள்கிற மாதிரி ஒரு கசந்த சிரிப்பு. 

“என்னப்பா” என்று என் மகனைக் கேட்க வைக்கிறது, அந்தக் கசந்த சிரிப்பில் கசிந்த வேதனை. ப்ளஸ் டூ பரீட்சை எழுத முடியாமல் போன மூத்த மகள். 

“ரெண்டு கதை வேணுமாம்… கடிதம் வந்துருக்கு.”

“செம்மலருக்கு வேற அனுப்பணும்லே?” 

“ஆமா.. அவுகளுக்கு ஒண்ணுவேணும்.”

“எழுதுங்கப்பா…” 

அவள் உதடு மட்டுமே சொல்கிறது. ஒப்புக்குச் சொல்கிறது. அவள் மனசுக்குத் தெரியும். என்னால் எழுத இயலாது என்று. 

என் இயலாமையை அவளும் அறிந்துவிட்டாள் என்று உணர்ந்த கணத்தில் எனக்குள் கவிகிற விரக்தி. என்னைக் கவிழ்க்கிற அவநம்பிக்கை. உள்ளுக்குள் ரம்பமாய் அறுக்கிற வெட்க வேதனை. 

“என்னத்தை எழுத?” 

இயலாமையின் பலவீனமும், வெறுப்பும் கலந்த உச்சத்தில் நான். கையிலிருக்கும் வெள்ளைத் தாளையே வெறிக்கிறேன். ஏதோ புரியாத மொழியில் எழுதப்பட்டிருப்பதைப் பார்ப்பதைப் போல… புரிய முயலாத வெறுமையோடு. நோக்கின்றி நோக்குகிறேன். 

மனசே சரியில்லை. ரொம்பக் குழப்பமாக இருக்கிறது. மனசுக் குள் எல்லாக் கணங்களிலும் நச்சரிக்கிற கவலைகள். வேலி முள் சொருகின மாதிரியான நிரந்தர ரணம். நொம்பலமான நினைவுகள். 

கடிதத்தை உறையில் போட்டு அசிரத்தையாகப் போட்டேன். தரையில் படுத்திருக்கிற பிள்ளைகள். வெறும் துணியை விரித்துப் படுத்திருக்கிறார்கள். கண் முழிக்க முடியவில்லை. துவண்ட துணிக் கந்தல்களாகப் பிள்ளைகள். அவர்கள் உடம் பெல்லாம் வைசூரிக் கொப்பளங்கள். கண்பட்டை, நெற்றி, கன்னம் கழுத்தடி, திரேகம் பூராவும் அம்மையின் கண்கள். மீனா, ராச அன்னத்திற்காவது பரவாயில்லை. 

அதிலும் மகன், வெண்மணி, அவன் மீது ஏராளம். அரிசியை அள்ளியிறைத்த மாதிரி அடர்த்தியாக அம்மையின் கண்கள். நாக்கில் உதட்டில் உள்ளங்கை எல்லாம். கண் இமைகளிலும் ‘கண்கள்’. பார்த்தாலே என் உடம்பு பதறுகிறது. மனசு கூசி நடுங்குகிறது. டென்த் பரீட்சை எழுதி முடித்திருக்கிறவன். கெட்டிக்காரன். கவிதைகள் கூட எழுதுவான். சுயமானவன். சில கவிதைகள் கூட இலக்கிய இதழ்களில் பிரசுரமாகியிருக்கின்றன. 

அப்பேற்பட்டவன் கண் திறக்க முடியாமல் நனைந்த துணியாகக் கிடப்பதைப் பார்க்கிற போது படுக்கவும் முடியாமல், புரளவும் முடியாமல், நேராக உட்காரவும் முடியாமல் அவன் தவிக்கிற தவிப்பையும், திணறலையும் மனசால் உணர்கிற போது. ஒரு தகப்பன் மனசு என்னமாய்த் துடிக்கிறது ! வெட்டுப்பட்ட சதைச்சிதறலாய் ரத்தம் கசிகிற ரணத்தில் மனசு துடிக்க… அதிலிருந்து கதையா ? கதை எழுதுகிற மன அமைதியா ? மனநிதானமா? குவிமையமாகிற உணர்வா? உணர்வின் குழைவா ? நிறம் மாறும் ரசாயனமா ? நடக்கிற கதையா ? ஹே ! 

மார்ச் மாசத்திலிருந்தே ஆரம்பித்துவிட்ட துன்பங்கள். நச்சரிப்பான கவலைகள். மனசுக்குள் நிரந்தர நமைச்சல், எத்தனை பெருமூச்சுகளை விட்டாலும் அடங்காத நமைச்சல். 

மார்ச் மாசமே துரதிருஷ்டத்தின் அவலக் கூச்சலாகத்தான் கண் விழித்தது. ஓடியாடி, வீட்டு வேலை முழுவதையும் செய்து… ஒரு கப்பலின் மாலுமி போலத் திகழ்ந்தவள் என் மனைவி. திடுதிப்பென்று மயக்கம் போட்டு விழுந்தாள். வீடே பதறியது. பிள்ளைகள் கதறியழுதனர். 

“அம்மா… அம்மா.. “என்று கலங்கினர். வீடு முழுக்கப் பதற்றம். எனக்கும் நடுக்கம். 

தெரு அல்லோல கல்லோலப்பட்டது. உறவுக்காரர்கள் ஓடி வந்தனர். டி.வி.எஸ். 50களில் ஏற்றி டவுனுக்குப் பறந்து… ஆஸ்பத்திரியில் விழுந்து… மனசுகள் கலங்கித் தவித்து… சகஜமாக… 

அப்புறமும்… மயக்கம் வந்துவிடுமோ என்ற திகில், நிரந்தரமாக. 

மூத்த மகள் வைகறை. இத்தனை அமளியிலும் +2 பரீட்சைக்கு விழுந்து விழுந்து படித்தாள். ராவிலும் பகலிலுமாய் படிப்பு. 12ந் தேதி பரீட்சை. எட்டாம் தேதியில் அவள் முகத்தில் தெரிந்த முத்து. வைசூரியின் ‘முத்து.’ மனசுக்குள் தீவைத்த மாதிரியிருந்தது. 

‘முத்து தானா.. முத்துதானா…’ என்று நப்பாசையோடு ஆராய்ச்சி. 

‘முத்தே தான் என்ற இடி.’ 

எனக்குள் கனவுகள் உடைந்து நொறுங்கி உதிர்கிற ரணம். இவளை டாக்டருக்குப் படிக்க வைக்கணும் என்ற கனா. அதற்காகவே இந்த ஆண்டு முழுவதும் ட்யூஷன் மூலம் அவளைத் தயாரித்தது. நுழைவுத் தேர்வு ஃபாரத்திற்கு இப்போதே அலைந்த அலைச்சல். 

எல்லாம் போச்சு. சுக்குநூறாயிருச்சு. கதையே கந்தலாயிருச்சு. சிற்பம் புழுதியாயிருச்சு. என்ன செய்ய? 

“மாரியாத்தா விளையாண்டுட்டா…” என்கிற பெண்கள். முகமெல்லாம் அம்மை முத்துகள். மகளின் தோற்றமே விகாரமாகி… அயற்சியும் சோர்வுமாய் துவண்ட காகிதமாகி… 

இந்த நிலையிலும் தேர்வு எழுதிவிட முடியுமா? ஒரு நப்பாசை. அதற்கான பேயலைச்சல். நாய் படாத பாடு. தலைமையாசிரியரைப் பார்த்து… கல்வியதிகாரிகளைத் தேடிக் கண்டடைந்து… பேசி… 

எல்லாம் வீண். எழுதும் நிலையில் அவள் உடம்பு இல்லை. உக்ரமாகிவிட்ட அம்மை. எழுந்து உட்காரக்கூட முடியாத நிலைமை. 

இழப்பின் கன பரிமாணத்தை உணர்ந்த என் வேதனை. யாரிடம் சொல்லியழ? என்ன சொல்லியழ? துரதிருஷ்டத்திற்கு யார் மருந்து தருவார்? 

இதில் வீட்டுப் பெண்கள் வருத்தப்படக்கூடாது என்று சொல்கிற கண்டிஷன். 

“ஆத்தா எறங்கிட்டா. அவ இஷ்டம் போலிருந்துட்டு, ஆசைதீர விளையாடிட்டுப் போகட்டும். ஆத்தா வந்துட்டா… ஆனந்தம்தான். யாரும் வருத்தப்படக் கூடாது. ஆத்தா… கோவிச்சுக்குவா…” 

ஒருபக்கம் இது உண்மைதான். பங்குனி, சித்திரை கோடையில் மட்டுமே வருகிற வைசூரி, மாரி(மழை)யாத்தா விளையாட்டுதான். வராமல் கண்ணாமூச்சி காட்டுகிற மாரியாத்தா. வெக்கை. மண்ணின் கொதிப்பு. வைசூரி முத்துகளாகத் தோலில் வெடிக்கிற அதன் கோபம். 

வீடெல்லாம் வேப்பிலைகள். தாளிதமில்லாத பத்தியச் சாப்பாடு எல்லோருக்கும். காலையும் மாலையும் வைகறைக்கு அம்மன் காப்புவிழுங்கித் தண்ணீர் குடிக்கிறாள். 

பரீட்சை கடந்து போகிற ரணம். எனக்குள் ஏமாற்ற வலி. ஏக்க வேதனை. ஒரு வருஷம் போகிறதே… படிப்பின் தொடர் சங்கிலி அறுபடுகிறதே என்கிற பயம். 

“என்ன செய்ய? தாங்கித்தான் ஆகணும். தலைச்சுமையா? அடுத்தவர் தலைக்கு மாற்றிக்கொள்ள. நோய், துரதிருஷ்டம். அவரவர்தான் அனுபவித்தாகணும். வேற வழி ?” 

பதிமூன்று நாள் ரணம், எனக்குள். 

அவளுக்குத் தலைக்குத் தண்ணீர் ஊற்றி… எழுப்பிய ரெண்டாவது நாளில் தம்பி மகன் இளவேனிலுக்கு வைசூரி. அப்புறம் என் மகள் தென்றலுக்கு. அவளுக்கும் முத்துகள். அம்மை முத்துகள். 

“என்னடா இது, பெரிய கொடுமையாப் போச்சே” என்று புலம்பினேன். 

இன்னும் மூன்று பிள்ளைகள். நான், மனைவி, தம்பி, தம்பி மனைவி, இவர்களுக்காச்சும் வைசூரி வராமல் தடுத்தாகணும் என்கிற வேட்கை. 

எட்டு மைல் தள்ளியிருக்கிறது கிராம நல மருந்தகம். ஓடினேன். அவநம்பிக்கை தெரிவிக்கிற அதிகாரிகள். 

“அம்மையை ஒழிச்சாச்சுன்னு கவர்மெண்ட் டிக்ளர் பண்ணியாச்சே… அம்மைப்பால் வைக்கிற டிபார்ட் மெண்டையே கலைச்சாச்சே…” என்கிறார்கள். 

அம்மையை ஒழித்துவிட்டார்களா? எங்கே? ஃபைலிலா? இதென்ன கொடுமை? அம்மையை ஒழித்து விட்டதாக அரசு முடிவு செய்தால்… என் வீடு அரசின் கணக்கில் இல்லையா? அம்மை விழுந்த என் குழந்தைகள் அரசின் ஜெனனப் பதிவில் இல்லையா? 

கடைசியில் – 

அம்மைப்பால் இல்லவே இல்லை என்று சாதித்து விட்டார்கள். இங்கு மட்டுமல்ல… எங்குமே இல்லையாம். தனியார் மருத்துக்கடைகளில் கிடைக்குமா? பணம் தந்து பெற்றுக்கொள்கிறேன்… என்றும் கேட்டுப் பார்த்தேன். எங்குமே கிடைக்காதாம்! 

என்னாடா…யிது, கூத்து ? 20-ஆம் நூற்றாண்டு விஞ்ஞானம் என்னாயிற்று? எய்ட்ஸ் எனும் ஈனத்தின் முன்னால் கைபிசைந்து, தலைகுனிந்து நிற்கிற விஞ்ஞானம். அம்மைக்கு முன்னாலும் கையாலாகாத பலவீனத்தில் வீரியமிழந்து விழுந்து கிடக்கிறதா? அரசின் ஃபைல் புரட்சி, விஞ்ஞானத்தின் காலை ஒடித்து, சின்ன அம்மையின் காலடியில் முடக்கிப் போட்டு விட்டதா? பரவும் தன்மையுள்ள இந்த நோயைக் கட்டுப் படுத்துகிற பொறுப்பிலிருந்து அரசு நழுவிக் கொண்டதா? நோயின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறார்களா? 

டாக்டர்களிடம் ஓடினேன். 

மாத்திரை மருந்து எதுவும் கிடையாது. இருந்தாலும் பிரயோசனம் ஆகாது. ஒதுங்கியிருக்கிறது மூலமா மட்டும்தான் தவிர்க்க முடியும். வேற வழியே கிடையாது. 

புகலற்றுப் போனேன். இன்று போய் நாளைவா என்கிற ராமனின் விளிம்பு நிலைப் பெருந்தன்மைகூட எனக்கு எதிர்ப்படவில்லை. நிராயுதபாணியாகிப் போன நிலையிலும் மூர்த்தண்யமாகத் தாக்கப்படுகிற கொடூரம். ராட்சஸம். 

வெந்து நொந்து போனேன். நொந்து நூலாகிப் போய் விட்டேன். 

உள்ளுக்குள் உடைந்து போனேன். ஆணி வேர் அறுபட்ட மரமாய் நான். ஒப்புக்கொண்டிருந்த கூட்டங்களுக்குப் போக மனமில்லை. மனசில் சுரத்தில்லை. 

வருகிற கடிதங்களுக்குப் பதில் எழுத மனமில்லை. மிகப் பெரிய மனிதர்களின் பாராட்டுக் கடிதங்களுக்குக்கூட சந்தோஷப்பட மனசில் தெம்பில்லை. 

எப்படித் சந்தோஷப்பட? நனைந்த காகிதத்தில் பேனாவினால் எப்படி எழுத முடியும்? துவண்ட மனசில் எந்தக் காகிதம் மகிழ்ச்சியை உருவாக்கிவிட முடியும்? 

தென்றலுக்கு முத்து இறங்கி… கைபடாத தண்ணீரை வெங்கலப் பானையில் பிடித்து, வேப்பிலைகள் போட்டு ஏறு வெயில், இறங்கு வெயில் எல்லா வெயிலுக்கும் வெளியே வைத்து… சாயங்காலம் இறங்கு பொழுதில் தலைக்குத் தண்ணீர் ஊற்றிவிட்டார்கள். 

நாலே நாலு நாள்தான். மூன்றாம் தண்ணீர் ஊற்றுவதற்குள். 

பொன் மீனா முகத்தில் முத்து. வெண்மணி உடம்பில் முத்து. இதோ… ராச அன்னமும், ஏககாலத்தில் மூவருக்கும். அதிலும்… வெண்மணிக்கு ரொம்ப. இடைவிடாமல் முத்துகள். தட்டைப் பயறு மாதிரி முத்துக்கள். புரளமுடியவில்லை. படுக்க முடியவில்லை. உட்கார்ந்திருக்கவும் முடியவில்லை. காந்தல் வேறு. பாவம்… அவன் தத்தளிக்கிற தத்தளிப்பு. அவன் கண்ணில் மிதக்கும் அச்ச உணர்வு. மிரட்சி . அயற்சி சோர்வு. 

எனக்குப் பார்க்கவே சகிக்கவில்லை. மனசு கிடந்து அதிர்கிறது. நடுங்கி நடுங்கிக் குளிர்கிறது. 

பார்க்காமல்… தெருவில் போய் நிற்கலாம் என்றால்… தெருநிறைய சாதித் தகராறு. எல்லா மனிதர்கள் கண்களிலும் புகலற்ற பீதி, கிலி உணர்வு. என்னாகுமோ, ஏதாகுமோ… என்கிற பதைப்பு. பேச்சு பூராவும் வெக்கை. கோடை வெக்கை. மனசுகளில் வெடிக்கும் அம்மைக் கொப்புளங்களாக சாதி உணர்ச்சி. உஷ்ண உணர்ச்சி. 

கிராமத்துக்கு பஸ் வரத்து நிறுத்தப்பட்டு பன்னிரண்டு நாட்களாகி விட்டது. வெட்டும் குத்தும், வதந்தியும் அலறலுமாய் நாட்கள். வன்முறையாளர்கள் கையில் மாவட்டத்தையே ஒப்படைத்துவிட்டு… இத்தனை நாளாய் வேடிக்கை பார்க்கிற பொறுப்பான நிர்வாகம். 

தெருவுக்குப் போக முடியவில்லை. எங்குமே சவக்களை. மயான நெடி. கறுத்த முகங்களில் அப்பிக் கிடக்கும் அச்ச இருட்டு. என்னத்தைப் பேச? எவரிடம் பேச? எப்படிப் பேச? 

அங்கே வெட்டு… இங்கே சாவு… அங்கே பிரேதம் என்று அலறலான பீதி. வதந்தி கொஞ்சம் நிஜம். 

பிரசவத்துக்கு அவஸ்தைப்படும் பெண்ணை நகரத்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போக முடியவில்லை. கோயில் குளத்துக்கு, கல்யாணம் காட்சிக்குப் போக முடியவில்லை. போனவர்கள் திரும்பவில்லை. இருக்கிறார்களா, செத்தார்களா என்று இங்குள்ளவர்களுக்கு மிரட்சி. பயம். கவலை. 

இதில் போய் எப்படிப் பேச? என்ன நிம்மதியில் பேச? ரோம் நகரம் தீப்பற்றி எரியும் போது, நீரோ மன்னன் மலர்க் கண் காட்.சியை ரசிக்க முடியும். என்னால் முடியவில்லை. இதயம் இருக்கிறது. அதில் ஈரமிருக்கிறது. கவலை இருக்கிறது. என் சகமனிதர்களின் வேதனை கண்டு கலங்குகிற கலை மனசு இருக்கிறது. 

இந்தக் கவலையில் நான் எப்படி உட்கார்ந்து… ஒரு மனசாகக் கதை எழுத? உணர்வுகளைக் குவித்து எப்படி எழுத? என்ன சிந்திப்பது? எங்கிருந்து வரும் நிம்மதி? 

மதிப்புரை கேட்டு வந்திருந்த நாவல்கள் இரண்டும்… திறக்கப்படாமல் கிடக்கின்றன. என் பக்கத்தில் ஒரு பேடு. கிளிப்பில் கற்றையாகக் காகிதம். அதில் முதல் பக்கத்தில்- 

193 என்று பக்க எண் இடப்பட்டிருந்தது. அதன் இடது மூலையில் 30 என்று எண்ணிட்டு அதைச் சுற்றிய வட்டக் கோடு. 193-ஆம் பக்கத்தில் துவங்குகிற 30வது அத்தியாயம். 

தூசி படிந்து கிடந்தது. நாள்ப்பட்ட நீர்த் துளிக் கறைகள். 

இது ஒரு கட்டுரை நூல். பெரிய புத்தகம். அதற்கான தயாரிப்பு. தொடர் அறுந்து போய்க் கிடக்கிறது. ரெண்டு மாசமாய். 

என்னாச்சு? எனக்குள் வற்றிப் போச்சா? கதை ஊற்று அடைபட்டுப் போச்சா? இனி எழுதவே முடியாதா, என்னால்? 

சூழலின் கைதியாகச் சுருண்டு கிடக்கிறேனா? பலவீனமுற்று வீழ்ச்சியுற்று, சூழலின் அடிமையாகி விட்டேனா? சூழலின் இறுக்கத்தால் சூறையாடப்பட்டு… அந்தரத்துக் காற்று வெளியில் மிதக்கும் துரும்பாகிப் போனேனா? 

சூழலின் வரம்பை உடைத்து, சூழலைப்புதுப்பிப்பவன் தானே, மனிதன் ! சூழலின் வரம்புக்குட்பட்டு வாழும் மிருகங்களிலிருந்து மனிதனை வேறுபடுத்துவதே… இந்த மீறல் தானே! சூழலை மாற்றும் வல்லமைதானே! சூழலை எதிர்த்துப் போரிடுகிற ஆற்றல் தானே… மானுட ஆற்றல்? 

அதை நான் தொலைத்துவிட்டேனா? உடைந்து நொறுங்கிப் போனேனா? நொறுங்கி நொ(ய்)த்தவிடாகிப் போனேனா? சோர்ந்து துவண்டு விட்டேனா…? 

எனக்குள் ஆயாசப் பெருமூச்சு. மகனைப்பார்க்கிறேன். அவன் முகமெல்லாம் அம்மை முத்துகள். கையில் உள்ளங்கையில், கால்களில், பிருஷ்டத்தில் முதுகில் எல்லா இடத்திலும் முத்துகள். நீக்கமற நிறைந்திருந்த முத்துகள். 

எனக்குள் பயப் படபடப்பு. நரம்புகளில் பரவுகிற பயக்கூச்சம். அச்சப் புல்லரிப்பு. 

அவனும் பயப்படுகிறான். 

சோகமாய் சிரிக்கிறான். சிரிக்க முயல்கிறான். முடியவில்லை. 

“என்னப்பா…?” என்கிறான். எனக்கு ஆறுதல் சொல்ல விரும்புகிற கண்கள். 

“என்னடா…?” 

“தலகாணிக்கு அடியிலே ஒரு கவிதை எழுதி வைச்சிருக்கேன்…” 

“ஏண்டா… இந்த நெலையிலே எதுக்கு எழுதுற? ஏன் ஸ்ட்ரெயின் பண்றே?” அன்புக் கண்டிப்பு. 

“சும்மாதா…” 

“என்ன… சும்மாதான்?” 

“நாலு வரிதாப்பா. படிச்சுப் பாருங்க…” 

“எனக்குள் என்னைத் தேடினேன் 
காலைக் கவ்வும் முதலைக் குணம்,
ஆளைக் கொல்லும் புலிக்குணம்
ஏய்த்துப் பிழைக்கும் நரிக்குணம் 
எல்லாம் இருந்தன. 
எங்கே மனிதம்? 
இந்தக் கேள்வியின் 
ஏக்கத்தில் புதைந்து கிடந்தது
என் மனிதம்.” 
-பொ.வெண்மணி. 

“அற்புதம்டா.” 

நிஜமாகவே பாராட்டினேன். மனப்பிரமிப்பின் அசல் வெளிப்பாடாய் என் பாராட்டு. அவனது கோணல் மாணலான பேனா எழுத்துகளையே திரும்பத் திரும்பப் பார்க்கிறேன். 

இந்தக் கவிதை, எனக்குள் வேறொரு பரிமாணத்தில். பளீரென்று வெட்டி மின்னுகிற புது மின்னலாய். 

இந்தக் கேள்வியின் 

ஏக்கத்தில் புதைந்து கிடந்தது. 

என் மனிதம். 

எழுத முடியலியே என்கிற ஏக்கத்தில் – மன அழுத்தத்தில் தான் என் கதைகள் புதைந்து கிடக்கின்றனவா? இனம் புரியாத இந்தக் கவலைக்குள்தான் என் கதை ஊற்றுகளா? 

இந்த மின்னலே எனக்குள் வெளிச்சமாக ஊற்றுகள் உடைத்துக்கொண்டு பீறிட கரையைப் புதுப்பிக்கும் நதியாக நடை போட… 

எந்தக் கருவை எழுத? 

இதுவா பிரச்னை? இப்போதைய என் மனநிலையையே எழுத வேண்டியது தானே. 

எழுதத் துவங்கிவிட்டேன், என் கதையை. 

– 08.06.97, கல்கி.

– என் கனா (சிறுகதைகள்), முதற் பதிப்பு: அக்டோபர் 1999, வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல்.

மேலாண்மை பொன்னுச்சாமி மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *