என் இறுதிச் சடங்கில் நான் சந்தித்த நபர்






அந்த இரண்டு மாடி வீட்டின் முன்பு ஒரு பாடையில் டாக்டர் கதிர்வேலின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. நண்பர்களின் உடைந்த குரல்களும், உறவினர்களின் நனைந்த கண்களும் அந்த இடத்தை நிரப்பியிருந்தன. ஆங்காங்கே மெல்லிய கிசுகிசுப்புகள்.
ஒரு ஓரத்தில் நின்று கொண்டு அங்கு நடக்கும் இறுதிச் சடங்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த டாக்டர் கதிர்வேல் சிரமப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டார். காலப்பயணம் செய்து, எதிர்காலத்திற்குச் சென்று தன் சொந்த இறுதிச் சடங்கில் தானே கலந்து கொள்வதிலிருந்த அபத்தத்தை நினைத்தால் சிரிப்பு வரத்தானே செய்யும்?
அரசாங்கம் காலப்பயணிகளை தங்கள் சொந்த இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள அனுமதிப்பதில்லை. அதனால்தான் அவருக்கு போலி அடையாள அட்டையும், கருப்பு கண்ணாடியும், போலி மீசையும் தேவையாயிருந்தது. இறந்து போன டாக்டர் மாதிரியே இந்த ஆசாமி இருக்கிறாரே என்று யாரும் சந்தேகப்படாமல் இருந்ததற்கு அது தான் காரணம்.
இது வரை யாரும் என்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லை தான். ஆனால் யார் அந்த நபர்? என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்?
கதிர்வேலின் மேல் கண் பதித்திருந்த அந்த அந்நியருக்கு ஒரு ஐம்பது வயதிருக்கும். கம்பெனி CEOகள் போல ட்ரிம்மாக நீல நிற சூட் அணிந்திருந்தார். முகம் பரிச்சியமாக இருந்தது. இதழ்களில் ஒரு குறும்புப் புன்னகை. கீழே குறுந்தாடி.
அடடா, அவர் என்னை நோக்கி வருகிறாரே! அரசாங்க அதிகாரியா அவர்? இப்போது என்ன செய்வது?
அருகில் நெருங்கிய அந்த குறுந்தாடி அந்நியர் கதிர்வேலின் கையைப் பற்றி அழுத்தமாக குலுக்கினார். “ஹலோ, நீங்கள் டாக்டர் தானே? டாக்டர் கதிர்வேல்?”
எதிர்பாராத விதமாக மாட்டிக் கொண்ட கதிர்வேல் தடுமாறினார் . “என்… என்ன சொல்கிறீர்கள்?”
அந்த அந்நியர் சிரித்தார். “நண்பரே, நான் பார்த்தில் மிகவும் மோசமான மாறுவேடம் உங்களுடையது தான். நீங்கள் அரசாங்கத்தை ஏமாற்றலாம். ஆனால் என்னை ஏமாற்ற முடியாது.”
“நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றே எனக்குப் புரியவில்லை.” கதிர்வேலுக்கு அவ்வளவு சீக்கிரம் தோல்வியை ஒப்புக் கொள்ள விருப்பமில்லை .
“டாக்டர். நீங்கள் கால இந்திரத்தில் இருபது ஆண்டுகள் பயணம் செய்து உங்கள் சொந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்திருக்கிறீர்கள்,” என்ற அந்நியரின் முகத்தில் சிரிப்பு நிரந்திரமாக குடியிருந்தது. “நான் சொன்னது தவறா?”
சில நொடிகள் அந்த அந்நியரை உற்றுப் பார்த்த கதிர்வேல் வேறு வழியின்றி உண்மையை ஒப்புக் கொண்டார். “நீங்கள் சொன்னது சரியே. சட்டப்படி நான் செய்தது குற்றம் தான். ஆனால் என்ன செய்வது? நான் இறந்த பிறகு என் குடும்பத்தாரும் நண்பர்களும் என்னைப் பற்றி என்ன சொல்வார்கள், அவர்களின் வாழ்க்கையில் நான் என்ன தாக்கத்தை ஏற்படுத்தினேன் என்று தெரிந்து கொள்ள மிகவும் விரும்பினேன்.”
“அந்த ஆர்வத்தைத் தீர்க்க சட்டத்தையும் மீறத் துணிந்து விட்டீர்கள்… அதுவும் இப்படி ஒரு மோசமான மாறு வேடத்தில்! இதற்காக ரொம்பவும் சிரமப்பட்டீர்களா?”
திடீரென்று கதிர்வேலுக்கு அந்த நபர் அந்நியராகத் தெரியவில்லை. பல வருடம் பழகிய நெருங்கிய நண்பரைப் போல இருந்தது அவரின் பேச்சும் முகபாவமும். கண்டிப்பாக அவர் ஒரு அரசாங்க அதிகாரியில்லை.
“சிரமமெல்லாம் படவில்லை. சொல்லப் போனால் மாறு வேடமிட்டது இந்த முயற்சியில் ஒரு எளிதான பகுதி,” என்று சொல்லிப் புன் முறுவலித்தார் கதிர்வேல்.
“அப்படியானால் கடினமான பகுதி எது?”
கதிர்வேல் பெருமூச்சு விட்டார். “என் இறுதிச் சடங்கின் தேதியைக் கண்டுபிடிப்பது. அதைக் கண்டுபிடிக்க நான் எதிர்காலத்திற்கு பல முறை பயணம் செய்ய வேண்டியிருந்தது. நிறைய செலவானது.”
“உண்மை தான்,” என்ற அந்த அந்நியர் சில நொடிகள் மௌனமானார்.
“ஆமாம், டாக்டரை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கதிர்வேல் பாடையிலிருந்த உயிரற்ற உடலைக் காட்டிக் கேட்டார். “நான் என் வாழ்க்கையில் இதுவரை உங்களைச் சந்தித்ததே இல்லை. நீங்கள் டாக்டரின் பிற்கால நண்பரா?”
அந்த அந்நியர் முருகனின் கண்களை ஆழமாகப் பார்த்தார். “என்னை அடையாளம் தெரியவில்லையா, டாக்டர்?”
“உங்கள் முகம் கொஞ்சம் பரிச்சயமாக இருக்கிறது… ஆனால் சரியாக அடையாளம் தெரியவில்லை,” என்ற கதிர்வேல் தடுமாறினார்.
“எப்படி அடையாளம் தெரியும்? என் மாறுவேடத்திற்கு நான் ஒரு நிபுணரிடம் அல்லவா சென்றேன்,” என்று புன்னகைத்தார் அந்த அந்நியர்.
“அதாவது… அதாவது… மை காட்!” என்று கத்திய கதிர்வேலின் கண்களில் ஆச்சரியம் விரிந்தது.
“ஆமாம். நான் நீங்கள் தான். உங்களை விட பத்து ஆண்டுகள் வயதானவன்,” என்றார் அந்த அந்நியர் அமைதியாக.
![]() |
பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான். அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க... |