எனக்கெனவே… நீ… கிடைத்தாய்!
கதையாசிரியர்: ஆர்.மணிமாலா
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தேவி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 31, 2026
பார்வையிட்டோர்: 181
(2011ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18
அத்தியாயம் – 16

ரகுபதியும், மலர்விழியும், குலசேகரனின் எதிரில் அமர்ந்திருந்தனர். வாசுகி கையில் தட்டுடன் நின்றிருந்தாள்.
“காபி ரொம்ப நல்லாயிருக்கு… சுஜாதா போட்டாளா?” ரகுபதி ரசித்துக் குடித்தபடி கேட்டார்.
“இல்லே சம்மந்தி… உங்கப் பொண்ணு விமலா போட்டதுதான்!” என்றாள் வாசுகி.
“பரவாயில்லையே… அவ இந்தளவுக்கு போடறாளே!”.
“என்ன அப்படி சொல்லிட்டீங்க? அவ எல்லாமே நல்லா சமைக்கிறாளே…!”
“சுனந்தாகூட மாஞ்சு… மாஞ்சு அவ அம்மாக்கிட்டே கேட்டு கேட்டு சமைக்கக் கத்துக்கறா!”
“ஆமாங்க…எவ்வளவுதான் படிச்சிருந்தாலும் புகுந்த வீட்ல…வாய்க்கும், வயித்துக்கும் பதமா சமைக்கக் கத்துக்கறதும் நல்லதுதானே? சுனந்தாவுக்கு வரன் பார்க்க ஆரம்பிச்சிட்டீங்களா சம்மந்தி?” டம்ளரை மனைவியிடம் நீட்டியபடி கேட்டார் குலசேகரன்.
“நிறைய வருது. அவளுக்கு உங்க வீட்ல வாக்கப் படணும்னு ஆசை! விமலா எல்லாம் சொன்னா. வாஸ்தவம் தானே? தேவாவுக்கு ஈடுபாடு இல்லேன்னா அதைப் பத்தி பேசறதே அழகில்லையே! சுனந்தா கொஞ்சம் முரண்டுப் பிடிக்கிறா. சின்னப்பிள்ளை தானே? போகப் போக சரியாய்டும். ஆமா.. எங்கே வாண்டுங்கள்லாம் காணோம்?” ரகுபதியின் குரலில் சிறிது வருத்தம் தென்பட்டது.
”உங்க பேரப்பிள்ளைங்கதானே? இன்னைக்கு ஸ்கூல்ல ஏதோ ‘ஆனுவல் டே’யாம்! போயிருக்காங்க.
சனிக்கிழமையும் அதுவுமா பிள்ளைங்க இல்லாம வீடு வெறிச்சுன்னு இருக்கு. சாயந்திரம் வந்துடுவாங்க.. இருந்து பார்த்துட்டுப் போங்க….”
“இல்லே சம்மந்தி, இன்னைக்கு திருச்சிப் போறோம்… மருமகளோட வீட்டுக்கு பத்திரிகை வைக்கணும்… நிறைய உறவுக்காரங்க வீட்டுக்குப் போக வேண்டி இருக்கு… அவசியம் வந்திடணும் சம்மந்தி… இந்தாங்க…”
பெரிய தட்டில் பூ, பழம், வெற்றிலை பாக்கு இனிப்புடன் பத்திரிகை வைத்து நீட்டினர்.
“நாங்க வராம எப்படி? குடுத்து வச்சிருக்கணுமே… கண்டிப்பா வந்து கலந்துக்கறோம்…” என்றபடி தம்பதி சமேதராய் வாங்கிக் கொண்டனர்.
”சுனந்தா எங்கே?”
“தேவாகிட்டே பேசிட்டிருக்கா…”
“அப்ப நாங்க கிளம்பறோம் சம்மந்தி…”
அவர்கள் சென்றபின் ரைஸ் மில் தொழிலாளிகள் பற்றிப் பேசுவதற்வாக தந்தையின் அறைக்கு வந்தான் தேவா.
யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்த குலசேகரன். “சரி.. அப்படியே முடிச்சிடுங்க… வச்சிடறேன்” என்று செல்லை அணைத்து சோபாவில் போட்டு விட்டு “வா.. தேவா…” என்றார்.
“அப்பா ரைஸ்மில் லேபர்ஸ்…”
பேசிக் கொண்டிருக்கும் போதே கையமர்த்தினார்.
“தெரியும்ப்பா… அந்த பிரச்சனை பத்தி விஜயகுமாரும், மேனேஜரும் பேசிட்டாங்க! அதை அவங்க பார்த்துக்கட்டும். நீ பிரீயா இருப்பா. அடுத்து லேப்பா..” என்றபடி டேபிள் மீது இருந்த திருமணப் பத்திரிகையை எடுத்தான்.
சஷ்டியப்ப பூர்த்தி விழா என்று குறிப்பிட்டு கீழே மணமக்கள் பெய ராக ரகுபதி, மலர்விழி என்றிருந்தது.
நெற்றியைச் சுருக்கிய மகனைப் பார்த்து “நம்ம விமலாவோட அப்பாவுக்கு அறுபதாம் கல்யாணமாம். பத்திரிகை வச்சாங்க… அன்னைக்குன்னு வேறெந்த கமிட்மென்ட்டும் வச்சுக்காதே.. குடும்பத்தோட கலந்துக்கறோம்….”
“சரிப்பா… இது.. இந்த மாதிரி ஏம்ப்பா உங்களுக்குப் பண்ணலே? நல்ல விஷயமாச்சே?”
“சரிதான் ஆனா, பிஸினஸ் அதுஇதுன்னு ஓடினதுல இதெல்லாம் தோணலே.. ஆச்சு… அறுபத்தாறு வயசு முடிஞ்சாச்சு. பெத்தவங்களுக்கு இதைப் பண்ணனும்னு பிள்ளைங்களுக்குதாம்பா தோனணும்..” என்றார் சிறு ஏக்கமும், வருத்தமுமாக.
“ஸாரிப்பா… எனக்கு இதெல்லாம் சரியாத் தெரியாது. நானும் ஷூட்டிங், ஷூட்டிங்னு கடமையை தவறிட்டேன்!”
“அட.. நீ சின்னப்புள்ள! உனக்கென்னத் தெரியும்? உனக்கு மூத்தவங்க யோசிக்க வேண்டிய விஷயம் இது. சரி.. அவங்களும் மில்லு, ஆபீஸ்னு அலையறாங்க அவங்களை சொல்லியும் குத்தமில்லை, அதை விடு… உனக்கு ஏகப்பட்ட அலையன்ஸ் வந்திருக்கு தேவா…. போட்டோஸ் இருக்கு பார்க்கறியா?”
“இ.. இல்லேப்பா… நீங்களே பார்த்து முடிவு பண்ணுங்க!” அவசரமும், தடுமாற்றமும் வந்தது வார்த்தை. சில கணங்கள் மகனை உற்றுப் பார்த்தவருக்குப் புரிய, பயல் குழப்பமாய் இருக்கிறான் சிறு கவலை அவரை ஆட் கொண்டது.
கொல்லைப்புறத்தில் வாழைஇலை அறுப்பதற்காக வந்தாள் கமலி. கிணற்றோரமாய்… குரல் தாழ்த்தி யாரிடமோ செல்போனில் பேசிக் கொண்டிருந்தாள் சிந்து.
”சரி…. செலவைப் பத்தி கவலைப்படவேணாம். நான் சொன்ன மாதிரி அழகா அடிச்சுக் குடுக்கணும். ரெண்டு நாள்ல எனக்கு இன்விடேஷன் கிடைச்சாகணும் ஓக்கே…ம்”
அவள் பேசியதில் சில வார்த்தைகள் கமலியின் காதில் விழுந்தாலும் தூக்கிவாரிப் போட வைத்தது.
“இன்விடேஷனா? எதுக்கு?”
வாய்வரை வந்த கேள்வியை சிந்துவின் முகம் பார்த்து விழுங்கிக் கொண்டாள்.
வழக்கத்திற்கு மாறாக அவள் முகத்தில் குடிக் கொண்டிருந்த உற்சாகம். எதையோ மறைக்கும் கள்ளத்தனம்.
இரண்டு மூன்று நாட்களாய்.. தனியே குசுகுசுவென அடிக்கடி போனில் பேசிக் கொண்டிருப்பதை கமலி கவனிக்கத் தவறவில்லை. குழப்பமும் பயமுமாய் வளைய வந்தாள் கமலி. அடுத்தடுத்து வந்த நாட்களில் சிந்து பரபரப்பாய் இயங்கினாள்.
அன்று…. பலகார வகையறாக்களோடு வேனில் ஏறிச் சென்ற பத்தாவது நிமிடம் ஒரு இளைஞன் பேக் செய்யப்பட்ட பண்டலோடு வீட்டிற்கு வந்தான். பெல் ஒலிக்கும் சப்தம் கேட்டு வாசலுக்கு வந்தாள் கமலி.
“யாருப்பா வேணும்?”
“இங்கே சிந்துங்கறது…?”
“இந்த வீடு தான்.. என்ன விஷயம்?”
“அவங்க இல்லீங்களா?”
“வெளியே போயிருக்காங்க.. நான் அவங்கம்மா தான்…. என்ன விஷயம்?”
“அப்ப சரி… நான் திருமலை பிரின்டிங் பிரஸ்லேருந்து வர்றேன். உங் கப் பொண்ணு கல்யாண இன்விடேஷன் பிரின்ட் பண்ணக் குடுத்திருந்தாங்க. இன்னைக்கு ஈவ்னிங் வந்து வாங்கிக்கறதா சொல்லியிருந்தாங்க. பத்திரிகை ரெடியாயிடுச்சு. லேட் பண்ண வேணாம்னு வீட்டுக்கே குடுத்துட்டு வரச் சொல்லி கொடுத்தனுப்பினார் முதலாளி… இந்தாங்க!” கமலிக்கு தலை கிறுகிறுவென சுற்றியது.
அத்தியாயம் – 17
அட்டைப் பெட்டியுடன் உள்ளேச் சென்றவளுக்கு.. பெரிய பூகம்பம் வருவதற்கான அறிகுறித் தோன்றியது.
கல்யாண இன்விடேஷன்னா.. திருட்டுத்தனமா கல்யாணம் பண்ணிக்கப் போகிறாளா! ஐயோ… கடவுளே.. என்னாகப் போகுதோ… அவருக்குத் தெரிஞ்சா…
கொலையே விழுமே….
யாரை பண்ணிக்கப் போகிறாள்? அன்று எவனோ ஊர்பேர் தெரியாத ஒருத்தன் வீடேறி வந்து பொண்ணுக் கேட்டானே? அவனையா? இதயம் படபடவென துடிக்க.. தாங்கமாட்டாத ஆத்திரத்தோடு அட்டைப் பெட்டியை பிரிக்க முற்பட்டாள்.
வாசலில் “கமலி” என்றழைத்தபடி உள்ளே வந்துக் கொண்டிருந்தார் விஸ்வநாதன்.
“இதோ…வர்றேங்க..” பதைப்புடன் அந்த அட்டைப்பெட்டியை மறைக்க…. அறையின் ஓரமாய் சுவரோடு பதிக்கப்பட்டிருந்த மரபீரோவைத் திறந்தாள். அதை இப்போது… வித்யாவிற்கு பிறகு சிந்து பயன்படுத்தி வந்தாள்.
பெட்டியை உள்ளே வைத்தவள்…. இரண்டு மூன்று புது துணிக்கவரைப் பார்த்து திகைத்தாள். சட்டென எடுத்துப் பார்த்தவளுக்கு ஒரு கணம் இயக்கமே நின்றுப் போனது.
பட்டுப்புடவை, வேட்டி, சட்டை என திருமணத்திற்கு தேவையான உடைகள்!
“கிராதகி”
“கமலீ..” அதட்டலாய் கத்தினார்.
“வ… வந்துட்டேங்க!” பீரோகதவை மூடிவிட்டு ஒட்டமும், நடை யுமாய் வந்தாள்.
கணவரின் நிலையைப் பார்த்து பயந்தாள்.
மீசை துடிக்க, கண்கள் அனல் கக்க, மூக்கு விடைக்க நின்றிருந்தார்.
டேபிள் மீது மூடி வைத்திருந்த சொம்புத் தண்ணீரை எப்போதும் போல் நீட்டினாள்.
அதை வாங்கி ஆத்திரத்துடன் வீசி எறிந்தார். சொம்பு தண்ணீரின் கனம் தாங்காமல் நசுங்கி, உருண்டோடியது.
“கொதிச்சுப் போய் வந்திருக்கேன். தண்ணி குடுத்து அணைக்கப் பார்க்கறியா? அந்த சனியன் எங்கே?”
“யா…யாருங்க?”
“என்னை வாட்டி வதைக்கிறது ஒரே சனியன் தானே? எங்கே அவ?”
”கடைக்குப் போய்ட்டா..ஏங்க?”
‘ஒருவேளை இந்த கல்யாண விஷயம் தெரிஞ்சிருக்குமோ? நாமும் சொல்லிடலாமா?’
“வரட்டும்..வரட்டும்.. தெரிஞ்சவங்களுக்கு சொல்லி அனுப்பு. இந்த வீட்ல ஒரு சாவு விழப்போவுதுன்னு….”
”ஐயோ… என்னாச்சுங்க?”
”அப்பவே கலைக்கச் சொன்னேன்! முடியலேன்னு பெத்துக்கிட்டே. பெத்தப்பிறகாவது கோழியை திருகற மாதிரி கழுத்தைத் திருகி சாகடிச்சிருக்கலாம். அதையும் செய்யலே. பெரிசா வசனம் பேசிட்டு நானே வச்சுக் காப்பாத்திக்கறேன்னு தூக்கிட்டுப் போனா உன் அம்மா. சனியன் அவங்களையும் முழுங்கிட்டு மறுபடி இங்கேயே வந்துடுச்சு.
இப்ப அந்த ஓடுகாலி என்னப் பண்ணியிருக்காத் தெரியுமா? நேத்து ஆர்த்தி நகை கடையில அரை பவுன்ல தாலி வாங்கியிருக்கா. தெரிஞ்ச வங்க ஒருத்தர் பார்த்து சொன்னாங்க. உன் பொண்ணுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆயிடுச்சா? சொல்லவேயில்லேன்னு கேட்டப்ப.. உயிரேப் போய் டுச்சு. எவ்ளோ தைரியம்? கமுக்கமா தன் கல்யாணத்தை தானே நடக்கிற திமிர் சம்பாதிக்கிற ஆணவம்! இதோ பார்… இனி அவ இங்கே இருக்கக் கூடாது”
இதற்கு மேலேயும் மூடி மறைக்க விரும்பாமல் “ஆமாங்க பீரோவுல பட்டுப்புடவையும், வேட்டி, சட்டையும் பார்த்தேங்க. பிரஸ்லேர்ந்து இப்பதான் இன்விடேஷன் கூட வந்தது…”
”என்னது? அதையெல்லாம் எடுத்துட்டு வா!”
அடுத்த சில கணங்கள் களேபரமானது. வெடித்த எரிமலையாய் வெறுப்பை கக்கி கண்கள் சிவந்தார் விஸ்வநாதன்.
பட்டு சேலையும், வேட்டியும் அவரை எகத்தாளமாய் பார்த்து சிரித்தன.
“அன்று அவ்வளவு சொல்லியும் கேட்காமல் ரகசியமாய் திருமணம் செஞ்சுக்கிற அளவுக்கு நெஞ்சழுத்தமா? விடுவேனா? இன்னைக்கு என் கையால தான் அவளுக்கு சாவு!”
இரையை பார்த்து ஓடிவந்த கோழியைப் போல் அந்த நேரத்தில் தானே வந்து மாட்டினாள் சிந்து. பிரஸ்காரர் வீட்டிற்கு இன்விடேஷன் கொடுத்தனுப்பி விட்டதாக போன் பண்ணியதும்… கடவுளே… அம்மா அதைப் பிரிச்சுப் பார்க்காமல் இருக்கணும் என்று வேண்டிக் கொண்டே வந்தாள்.
ஆனால் அவள் வேண்டுதலை கடவுள் காது கொடுத்து கேட்க வில்லை.
ஹாலில் உறுமலுடன் அப்பாவும், விசும்பலுடன் அம்மாவும், கசங்கிய பட்டுப்புடவையும் இருந்ததை பார்த்ததுமே… படியேறிய கால்களில் பலம் குறைந்து…. வேகம் தடைப்பட்டது.
அவளைப் பார்த்ததும் தான் தாமதம், பாய்ந்து வந்த விஸ்வநாதன் அவள் தலைமுடியைத் கொத்தாய் பற்றி சுவற்றில் மோதினார்.
வலியில் அலறி கீழே விழுந்தவளை ஆணியில் மாட்டியிருந்த பெல்ட்டை எடுத்து விளாசினார்.
“ஐயோ.. அப்பா.. அப்பா வலிக்குதுப்பா”
“சனியனே.. செத்துப்போ! என் பணம் செல்வாக்கு எல்லாமே உன்னால போச்சு. இப்ப என் கவுரவத்தையும் வீதிக்கு கொண்டு வந்து சந்தி சிரிக்க வைக்க திட்டம் போடறியா? எவ்ளோ திமிர் இருந்தா…” கை வலிக்க வலிக்க விளாசினார்.
உடம்பெங்கும் ரத்தக்கோடுகளால் துடித்தாள்.
“வலிக்குதுப்பா… முடியலேப்பா.. நான் என்னப்பா தப்பு பண்ணி னேன்?” கண்ணீர் வழிய அழுதபடி கேட்டாள்.
“இத்தனையும் பண்ணிட்டு, என்ன தப்புப் பண்ணினேன்னா கேக்கறே? உன்னை உயிரோட விடறதே தப்பில்லையா?”
“சாகடிங்க.. சந்தோஷமா செத்துப்போறேன். ஆனா, நான் என்ன தப்புப் பண்ணேன்னு சொல்லிட்டு சாகடிங்க!”
“இதெல்லாம் என்ன?” பட்டுப்புடவை வேட்டியை எடுத்து முகத்தில் வீசினார்.
“கல்யாணத்துக்காக எடுத்தது!”
“அப்புறம் என்ன தப்புப் பண்ணேன்னு கேக்கறே?”
“இப்பவும் அதையேதாம்பா கேக்கறேன்”
“கல்யாணம்னு சொன்னேன். யாருக்குன்னு சொன்னேனா?”
“ரகசியமா கல்யாணம் பண்ணிக்கறவங்க பத்திரிகை எல்லாம் அடிச்சாப்பா கல்யாணம் பண்ணுவாங்க?”
“பிரிச்சுப்பாருங்க” ரத்தம் தோய்ந்த கைகளுடன் பண்டலைப் பிரித்து ஒரு பத்திரிகையை எடுத்து நீட்டினாள்.
மணிவிழா!
விஸ்வநாதன்- கமலி.
பெயர் கண்ணில் அறைய …. விழியகல, நெற்றி சுருங்கப் பார்த்தார்.
“ஆமாம்ப்பா! அன்னைக்கு உங்க அறுபதாம் கல்யாண ஆசையை அம்மாக்கிட்ட வெளிப்படுத்தினதை கேட்டப்பவே முடிவு செஞ்சேன். எப்படியாவது இதை நிறைவேத்தணும்னு. நீங்க என்னை வெறுத்தாலும் நான் உங்களை ரொம்ப நேசிக்கறேன்ப்பா! இது அன்பு மட்டுமல்ல… பெத்தபுள்ளையா… என்னோட கடமையும் கூட! பெத்தவங்களோட மனசை குளிரவைக்கணும். நான் அறிஞ்சோ, அறியாமலோ உங்களை நெருப்புல வாட்டிட்டேன்ப்பா! அதுக்குப் பிராயச்சித்தமா இதை செய்ய ஆசைப்படறேன். அறுபதாம் கல்யாணம் எத்தனைப் பேருக்கு வாய்க்கும் ? அதை நடத்தற உரிமையை மட்டும் எனக்கு குடுங்கப்பா.. பிளீஸ்… மறுத்துடாதீங்க!”
“இந்த இன்விடேஷன்ல கூட அண்ணன் பேரும், அக்கா பேரும் தான் போட்டிருந்தேன். என் பேர் போட்டுக்கலேப்பா! எனக்கு உங்க மனசுல மட்டும் கொஞ்சம் இடம் குடுங்கப்பா…. அது மட்டும் போதும்!” சிந்து கைகூப்பி உடல் குலுங்க அழ….
விஸ்வநாதனின் மனதை எதுவோ அறுக்கிறது. அது.. சிந்துவைப் பற்றி சிலந்தி வலையாய் பின்னப்பட்ட வெறுப்பு வலை.
அத்தியாயம் – 18
மணவறையில் அமர்ந்திருந்த விஸ்வநாதன் பக்கத்திலிருந்த மனைவியை ஏறிட்டுப் பார்க்க, பட்டுப் புடவையும் மாலையும் மஞ்சள் மின்னும் முகமுமாக… சந்தோஷத்தை மீறிய சங்கடம் அவரைப் போலவே அவள் முகத்திலும் பாவி இருந்தது. தனியாளாய் சிந்து அத்தனை வேலைகளையும் செய்து முடித்து.. முக்கியமான உறவுக்காரர்களை வாடகைக்கு பஸ் வைத்து அழைத்து.. இதோ… திருவிடைமருதூர் கோவிலில் அறுபதாம் கல்யாணம்.
பாஸ்கரும், சாமுத்ரிகாவும் உறவுக்காரர்களை நலம் விசாரித்து வலம் வர.. வாந்தியும், மயக்கமுமாய் மசக்கையாய் இருந்த வித்யா…. ஒரு ஓரமாய் அமர்ந்து விட்டாள்.
ஐயர்..மறந்துப்போன பொருட்களை ஒவ்வொன்றாய் சொல்ல…. சளைக்காமல் கடைக்குச் செல்வதும் வருவதுமாய் இருந்தாள் சிந்து. அவளைப் பார்க்க, பார்க்க, கன்னத்தில் பளாரென்று அடிப்பது போல் வலித்தது.
“அஞ்சு இளநீர் வேணும்!” ஐயர் கேட்டார்.
“இதோ ரெண்டே நிமிஷத்துல வாங்கிட்டு வந்திடறேங்க….” சிந்து மறுபடியும் கோவில் வாசல் நோக்கி நகர்ந்தாள்.
சற்று தள்ளி பிரகாரத்தில் ஒரு பெண்மணி. அழுதுக்கொண்டிருந்த ஏழு வயது பேத்தியை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.
அப்போது … அவள் கொண்டையிலிருந்து கதம்ப பூ கீழே விழுந்தது. கவனித்த சிந்து அதை எடுத்து “அம்மா.. அம்மா உங்களைத்தான்’ என்றழைத்தாள்.
திரும்பினாள் வாசுகி.
“என்னையா?’’
“ஆமாம்! உங்கள் பூ.. கீழே விழுந்துவிட்டது!”
“ஓ… நன்றியம்மா!” பூவை வாங்கிக் கொண்டு புன்னகை பூத்தாள்.
“பாப்பா.. ஏன் அழறா?”
“ஐஸ்கிரீம் வேணும்னு அடம் பிடிக்கிறாம்மா”
“குட்டிக்கு ஐஸ்கிரீம் வேணுமா? வாங்கி வரட்டுமா? வெளியே கடைக்குதாம்மா போறேன். வாங்கிட்டு வர்றேன்”
“உனக்கெதுக்கும்மா சிரமம்… நான் வேற….”
“எனக்கு எந்த சிரமமும் இல்லேம்மா! வயசானவங்க.. நீங்க எங்கே தேடிப்போய் வாங்குவீங்க… அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்…” சொன்னபடியே இளநீர் பையை வலதுகைகளிலும் ஐஸ்கிரீம் கப்பை இடது கையிலும் சுமந்தபடி ஏழே நிமிடத்தில் வந்தாள் சிந்து.
“…ம்மா.. இந்தா ஐஸ்கிரீம்!”
குழந்தை வாங்கிக் கொண்டு மலர்ந்த முகத்துடன் ஓட… வாசுகி பர்ஸை எடுத்தார்.
“எவ்வளவு ஆச்சும்மா?”
“என்னம்மா நீங்க? அதெல்லாம் வேணாம். அதோ அந்த பிரகாரத்துல எங்க அப்பா அம்மாவுக்கு அறுபதாம் கல்யாணம் நடக்குது. நீங்களும் வந்து கலந்துக்கிட்டா ரொம்ப சந்தோஷப்படுவேன்!'”
வாசுகி அவளையே ஆச்சர்யமாய் பார்த்தாள்.
‘என்ன லட்சணமான முகம், பொறுப்பான பேச்சு. மரியாதையான நடவடிக்கை? இவள் மருமகளாக கிடைக்க எந்த மாமியாருக்கு வாய்ச்சிருக்கோ?’
“நேரமாச்சு… நான் வரட்டுமாம்மா?”
“போய் வாம்மா! நானும் இங்கே ஒரு சஷ்டி… பூர்த்தியில கலந்துக்கத்தான் வந்தேன். முடிஞ்சதும் உங்க வீட்டு விழாவுக்கு வர்றேன்!” வாசுகியும் விடை பெற்றாள்.
“எங்கேம்மா போய்ட்டே.. அப்பா தேடறார் பார்..” தேவா அம்மாவின் எதிரில் வந்து நின்றான். “வர்ஷினிக்குட்டி இதுவேணும். அது வேணும்னு கேட்டு அடம்பிடிச்சா…”
”சரி.. நீ போம்மா.. அவளை நான் பார்த்துக்கறேன்..”
அம்மாநகர….வர்ஷினி ஓடி வந்து அவன் கையைப் பற்றிக் கொண்டாள்.
“மாமா.. எனக்கு இன்டர் ஜாய் வேணும்!”
“கல்யாணம் முடியட்டும்.. அப்புறப் வாங்கித்தர்றேன்”
“எனக்கு இப்பவே வேணும்!” சிணுங்க ஆரம்பித்தாள். அவளின் பிடிவாதம் அவனுக்கும் தெரியுமே!
“சரியான தினிப் பண்டாரம்.. வா!” அழைத்துக் கொண்டு வெளியேறினான்.
“நேரமாச்சு பார்.. சாந்தினி.. உன் புருஷன் எங்கேம்மா?” என்றபடி குலசேகரன் வர…. “இங்கே தாம்பா இருந்தார்” என்று தேடிக் கொண்டு நகர…. “ஒரு இடத்துக்கு வந்தா… ஒரே இடமா இருக்கத் தெரியாதா?” என்று வேகமாய் திரும்ப.. யார் மீதோ மோதி.. ணங்கெனதட்டு உருளும் சப்தமும், மேலெல்லாம் பூக்கள் விழுந்த அதிர்ச்சியுமாகப் பார்த்தார்.
அதே அதிர்ச்சியும், மருட்சியுமாய் நின்றிருந்த அந்த இளம் பெண்ணின் முகம்.. அவரை புன்னகைக்க வைத்தது.
“ஸாரிங்க.. தெரியாம மோதிட்டேன். அடிபட்ருச்சா?”
“பொறு…. பொறு! மோதினது நான்தான். இதோ… பூவெல்லாம் சிதறிக்கிடக்கு… என்னாலதானே..?”
“இல்லீங்க. நான் அவசரமா ஓடி வந்தேன்.. அதனால தான்…”
”சிந்து… இங்கே என்னப் பண்றே? ஐயர் உதிரிப்பூ கேட்டாரே…” சாமுத்ரிகா அழைத்தபடி வர… “இதோ தர்றேன் அண்ணி” என்று வேகமாய் நகர்ந்து விட்டாள்.
சாமுத்ரிகா, குலசேகரனைப் பார்த்து வியந்தாள்.
“அங்கிள் நீங்க எங்கே இங்கே?”
“என் சம்மந்திக்கு சஷ்டியப்த பூர்த்தி.. அதோ அங்கே நடந்துட்டி ருக்கு… ஆமா நீ எங்கே இப்படி?”
“அதே சஷ்டியப்த பூர்த்திக்குத்தான். என் மாமனார், மாமியாருக்கு நீங்களும் வாங்க அங்கிள்!”
“இங்கே முடிச்சிட்டு வர்றேன். பரவாயில்லையே…. நீயும், உன் புருஷனும் பிஸியான டாக்டர்ஸ். இருந்தும் இதையெல்லாம் எடுத்துப் பண்றதுக்கு நேரமும், மனசும் வேணும்!”
சாமுத்ரிகா சங்கடமாய் நெளிந்தாள்.
“ஆக்சுவலா… நாங்க பண்ணியிருக்கணும்.. ஆனா.. அந்த எண்ணமே தோணல….”
“பின்னே?”
“இப்ப ஒரு பொண்ணுப் போனாளே…”
“மா!”
“அவ என் நாத்தனார்தான். பேரு சிந்து! அவ தனியாளா நின்னு நடத்தற கல்யாணம் இது!”
“நிஜமாவா?”
“ஆனா. ரொம்ப பாவப்பட்ட பொண்ணு அவ…” என்றபடி அவள் கருவிலிருந்தே உதாசீனப்படுத்தப்பட்டது முதல் சொல்லி முடித்தாள். வாய்பிளக்க கேட்டவருக்கு கண்கள் கசிந்தன.
‘எப்பேர்ப்பட்ட பெண்? இத்தனை உதாசீனங்களையும், துயரங்களை யும் சுமக்க எப்படி முடிகிறது? இந்த காலத்தில் எத்தனைப் பெண்களுக்கு பொறுமை இருக்கிறது? சொந்தமாய் தொழில் நடத்தி, சொந்த வீட்டிலேயே அந்நியப்பட்டு, ஆனால் தன் கடமையுணர்ந்து பெற்றவர்களின் மனம் குளிர்விக்க…. ஆண்பிள்ளைக்குக் கூட மனசு வராதே! இப்படிப் பட்ட பெண் தேவாவுக்கு மனைவியாய் வாய்த்தால் எப்படி இருக்கும்? தேவா நான் சொன்னால் மறுக்கப் போவதில்லை!’
தன் எண்ணத்தை மெல்ல சாமுத்ரிதாவிடம் சொன்னார். உண்மையி லேயே அவ்வளவு சந்தோஷப்பட்டாள்.
“சிந்து ரொம்ப நல்லப் பெண் அங்கிள். இந்தக் கல்யாணம் நடந்தா.. ரொம்ப சந்தோஷப்படுவேன்”
“இங்கேயே பேசி முடிச்சிடலாம்..”
நேரமாக சாமுத்ரிகா இங்கேயும், குலசேகரன் அங்கேயும் சென்றுவிட்டனர்.
குலசேகரன் சம்மந்தியின் திருமணம் முடிந்ததும் மனைவியுடன் ஆசீர்வாதம் வாங்கினார். தொடர்ந்து சம்பிரதாய வைபவங்கள் நடந்தன குலசேகரன் மனைவியை தனியே அழைத்து வந்தார். “வாசுகி… இங்கே ஒரு பொண்ணைப் பார்த்தேன். நம்ம சாமுத்ரிகா இருக்காளே… அதான் சாந்தினியோட புகுந்த வீட்டு சொந்தம்”
“ஓ. டாக்டரா இருக்காளே…”
”அவளேதான். அவளோட நாத்தனாராம். நம்ம தேவாவுக்கு சரியா இருப்பா….”
வாசுகியின் முகம் மாறியது.
“அவளோட புருஷன் வீடு நடுத்தரக்குடும்பம்னு….”
“அதுக்கென்ன இப்ப? பொண்ணு தங்கம்! அதானே வேணும்! முதல்ல பாரு…”
இங்கேயும், அங்கேயும் பட்டாம்பூச்சியாய் ஓடிக் கொண்டிருந்தவளை சுட்டிக் காட்டினார்.
வாசுகியின் நெஞ்சம் சந்தோஷத்தில் ஏறி இறங்கியது.
“இவளா?”
“எப்படி?” மனைவியை ஏறிட்டார்.
“மனசுக்கு நிறைவா இருக்கா….”
“அதுபோதும் வாசுகி” என்றவர் சிந்து அறியாமல் தன் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவராய் கூப்பிட்டு அவளைக் காட்ட.. அத்தனை பேருக்கும் பிடித்திருந்தது. விமலா உள்பட சுனந்தாவிற்கு மட்டும் காட்டவில்லை.
“தேவா எங்கே ரஞ்சன்?”
“மதிய லஞ்சுக்கு ஏற்பாடு செய்யறேன்னு ஹோட்டல் வரை போயி ருக்கான்ப்பா”
அதன்பின் மனைவி, மகன்கள், மருமகள்களுடன் விஸ்வநாதன் திருமணத்திற்குச் சென்றனர்.
அங்கும் திருமணம் நடந்து முடிந்து விட்டிருந்தது. சிந்து வாசுகியைப் பார்த்து விட்டு அருகில் ஓடி வந்தாள்.
“வாங்கம்மா!”
குலசேகரன் மனைவியை வியப்பாய் நோக்க… “அதை அப்புறம் சொல்றேன்” என்றாள் மெல்லிய குரலில்.. குறும்பு மின்ன.
சாமுத்ரிகா ஆரவாரத்துடன் வரவேற்று மாமனார், மாமியாரிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தாள். அவரின் அந்துஸ்து கருதி பிரம்மிப்புடன் எழ முற்பட்டார் விஸ்வநாதன்.
“அட எந்திரிக்காதீங்க மாப்பிள்ளை!” என்று தோள் பற்றி அழுத்தி சிநேகமுடன் சிரித்தார்.
அவரின் பேச்சும் அணுகுமுறையும் விஸ்வநாதனைக் கவர்ந்தது. உறவு, பிஸினஸ் என்று பேச்சு ஓடியபின். மெல்ல விஷயத்திற்கு வந்தார். சாமுத்ரிகாவிற்கு ஜாடை காட்ட… அவள் மாமனார் அருகே குனிந்து காதில் சொன்னாள்.
“நம்ம சிந்துவை அவங்க குடும்பத்துல எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சாம். அவங்க கடைசிப் பிள்ளைக்கு சிந்துவை பெண் கேக்கறாங்க மாமா?” என்றாள்.
ஒரு கணம் எதுவும் புரியவில்லை விஸ்வநாதனுக்கு சற்றுத்தள்ளி.. பொருட்களை பையில் அமுக்கிக் கொண்டிருந்த சிந்துவைப் பார்த்தார். தேனீப்போல் சுழன்று சுழன்று வேலை செய்த விதம். கண்களில் பெற்றவர்களின் ஒரு புன்னகைக்காக தவமிருக்கும் ஏக்கம்.
அவள் எனக்கு மகளாய் பிறந்ததைத் தவிர என்ன தவறு செய்து விட்டாள்? ‘ஜோஸியக்காரன்’ என்ன இவளின் தலைவிதியை மோசமாய் எழுதி விட்டான்? எச்சரிக்கையும், புத்திசாலித்தானமுமின்றி நான் செயல் பட்ட விதம் என் தொழிலை கவிழ்த்துவிட்டது. அதற்காக.. இவளின் இருபது வருட வாழ்க்கையை கனக்க செய்துவிட்டேனே! நான் விஷமாய் வெறுத்தும்… இதோ.. பெரும்பாலான பெற்றவர்களின் ஆசையை.. பலர் வாழ்க்கையில நிறைவேறாமலே கடந்து விட்ட ஆசையை.. ஆண்மகன் போல் எடுத்து செய்து மகிழ்விக்க… எவ்வளவு அன்பிருக்க வேண்டும்? இதுவரை இவளுக்கென்று எதையும் வாங்கிக் கொடுத்ததில்லை. மற்ற பிள்ளைகளுக்கு தின்பண்டம் வாங்கித் தந்து இவளை பார்க்க வைத்து ஒதுக்கி வைத்த மோசமான அப்பா நான்!
ஆனால் என் மீது எப்படி வந்தது பாசம்? என் வாழ்க்கைக்கே குறையாய் நினைத்த உயிர்தான்.. இன்று ஒரு குறையுமில்லாமல் அறுபதாம் கல்யாணத்தை நடத்தியிருக்கிறது. வெட்கத்தோடு.. பெற்றவனாய்… லட்சண்மாய் அவள் திருமணம் பற்றி யோசித்திருக்க வேண்டும். ரெண்டு குழந்தைகளை கரையேற்றியதோடு என் கடமை முடிந்தது என்று நினைத்து விட்டேனே!
வீடு தேடி வந்த அந்த தேவா பையனையும் மோசமாய் பேசி அனுப்பினேனே! கண்ணியமாய்தானே நடந்துக் கொண்டான்? பாஸ்கர் காதலை ஏற்ற என்னால்… ஏன் இவள் விஷயத்தில் மட்டும் மோசமாய் நடந்தேன்? நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று மணிவிழா அழைப்பிதழில் தன் பெயரைக் கூட போட்டுக் கொள்ளவில்லை என்றால்… அவள் இதயத்தை எந்தளவு உடைத்திருப்பேன்? இதோ… நினைத்தே பார்க்க முடியாத வாழ்க்கை அவளின் நடவடிக்கைக்காக தேடி வந்திருக்கிறது. இனியாவது அவள் அமோகமாய் வாழ வேண்டும். கண்களில் நீர் திரையிட்டது. கணவனின் மனவோட்டத்தைப் புரிந்துக் கொண்ட கமலியும் கண்ணீர் உகுத்தாள்.
“மாமா..” சாமுத்ரிகா மறுபடி அழைத்தாள்.
“ம். சொல்லும்மா!”
“நீங்கதான் மாமா.. சொல்லணும்!”
“என் பொண்ணு சிந்துவுக்கு பிடிச்சிருந்தா எனக்கும் சம்மதம்!”
அந்த வார்த்தையைக் கேட்டு, சாமுத்ரிகா, பாஸ்கர், கமலி அத்தனை பேரும் ஆச்சர்யப்பட்டனர்.
சிந்துவை என் மகள் என்று கூறிவிட்டாரே!
அடுத்து நடந்தது இன்னும் ஆச்சரியம்.
இது எதுவும் அறியாமல்… பொருட்களை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தாள் சிந்து.
விஸ்வநாதன் அழைத்தார்.
“சிந்து”
ஒரு கணம் திடுக்கிட்டவள்.. பிரமை என எண்ணி மறுபடி வேலையில் மூழ்க..
“அம்மாடி சிந்து “என்றார் விலுக்கென திரும்பினாள்.
இரண்டு கைகளையும் நீட்டி ‘வா’வென அழைக்க…. நடப்பதை நம்பவே முடியாத சிந்து… நெஞ்சம் படபடக்க அப்பாவிடம் சென்றாள்.
“அ..அப்பா… என்னையா.. என்னையா பேர் சொல்லி கூப்பிட்டீங்க?”
“உன்னைத்தான்டா…”
“அப்பா!” நெகிழ்ச்சியில் கண்கலங்க.. அவர்காலில் விழுந்தாள்.
“அமோகமா இருப்பே தாயி.. இந்த அப்பாவை மன்னிச்சிட்டேன்னு சொல்லு!”
“ஐயோ…அப்பா!”
சாமுத்ரிகாதான் சூழ்நிலையை உணர்த்தி, “மாமா… இங்கே இதைப் பேச வேண்டாம். கல்யாண விஷயம் மட்டும் கேளுங்க..”
“என்ன விஷயம் அண்ணி?”
கமலி மகளின் கன்னத்தை வருடியபடி, “இதோ, இவங்களோட மகனுக்கு உன்னை கல்யாணம் பேச வந்திருக்காங்க… உனக்கு பிடிச்சிருந்தா சம்மதம்னு அப்பா சொல்லிட்டார். உன் விருப்பம் என்னம்மா?”
“எனக்குன்னு எந்த தனிப்பட்ட விருப்பமும் இல்லேம்மா! நான் எப் பவும் உங்கப் பொண்ணு. உங்களுக்கு பிடிச்சிருந்தா மட்டும் போதும்! அப்பா சொன்னா என்ன வேணும்னாலும் செய்வேன்.”
“அப்புறமென்னங்க…. எங்க வீட்டுப் பொண்ணு சம்மதிச்சிட்டா. உங்க பையனை கூப்பிடுங்க. பொண்ணும், பையனும் பார்த்துக்கட்டும். ஆமா…எங்கே உங்க பிள்ளை? கண்ணிலேயே படலையே!” என்றாள் சாமுத்ரிகா.
“ஹோட்டலுக்கு போனான். இன்னும் காணோம்.”
“அதோ….வந்துட்டான்.” என்ற வாசுகி மகனை நோக்கி ஓட..சிந்து தலைகவிழ்ந்து கொண்டாள்.
மகளின் கையை பற்றி அன்புடன் தடவிக் கொடுக்க, உலகமே மறந்த நிலையில் இருந்தாள் சிந்து.
வாசுகியோடு சுஜாதா, விமலா, சாந்தினி எல்லோரும் சென்று தேவாவை வழிமறித்து விஷயத்தைக் கூறினர்.
“உங்க இஷ்டம்ப்பா!” என்று அன்று அப்பாவிடம் கூறிவிட்டானே ஒழிய.. அவனால் வேறொரு பெண்ணுடன் திருமணம் என்பதை உள்ளம் சகித்துக் கொள்ள மறுத்தது. இதென்ன புது வம்பு? என்பது போல் திணறினான்.
”என்னம்மா இது…திடீர்னு யாரையோ பார்த்து முடிவு பண்ணிட்டேன்னு சொல்றது நல்லாவா இருக்கு?”
“பொண்ணு நல்லாருக்கா தேவா”
“அதுக்காக…?”
:அப்பா வாக்கு குடுத்துட்டார்ப்பா…”
“அதெப்படிம்மா… என்னைக் கேக்காம…”
அதற்குள்… மணமேடையை அடைந்துவிட்டனர். குலசேகரன் மகனின் அருகில் வந்தார்.
“இதாம்ப்பா பொண்ணு… பார்த்துட்டு சொல்லு..!”
தேவா ஏறிட்டான். சிந்துவும் மெல்ல அவனை நோக்க…. இருவருக்கும் மிகப்பெரிய இனிய அதிர்ச்சி.கூடவே விஸ்வநாதனுக்கும்!
”நான் உங்க பிள்ளைப்பா.. வாக்கு என்ன வாக்கு… பாக்கு வெத்தலையே மாத்திக்குங்க.. உங்களுக்குப் பிடிச்சிருந்தா போதும்ப்பா” என்று அவசரமாகக் கூற… சுஜாதா, “தோடா.. எவ்ளோ நல்லப்பிள்ளை நீ!” என்று குறும்புடன் சிரிக்க….
தேவாவைப் பார்த்தபடி… “தம்பி நீங்க…” என்று பேச துவங்கிய விஸ்வநாதனின் காலில் விழுவதுபோல் காதில் கிசுகிசுத்தான் தேவா.
“சார்…போட்டுக் குடுத்துடாதீங்க”
“மாமான்னு சொல்லுப்பா!”
“என்ன…என்னவாம்?” என்றார் குலசேகரன்.
“உங்கப் பொண்ணுக்கு சம்மதமான்னு கேட்டார்” என்று சமாளித்தார்.
“அதைகேக்கத்தான் நான் இருக்கேனே.. ஏம்மா… என் பையனை உனக்கு பிடிச்சிருக்கா?”
“ம்” என்ற ஒற்றைச் சொல்லில் தலை கவிழ்ந்திருந்த சிந்துவின் நாணச்சிரிப்பில் கோடிப்பூக்கள் ஒளிந்திருந்தது.
சற்றுத்தள்ளி இன்னொரு வயதான ஜோடிக்கு திருமணம். மேளமும் நாதஸ்வரமும் முழங்க…
தேவாவும், சிந்துவும் யாரும் அறியாமல் பார்த்துக் கொள்ள…உடல் நரம்புகள் வீணைமீட்டின. சில அட்சதைகள் அவர்கள் மேல் வந்து விழுந்தன.
(முற்றும்)
– எனக்கெனவே… நீ… கிடைத்தாய்! (நாவல்), தேவியின் கண்மணி, ஏப்ரல்-15, 2011.
தொடர்புள்ள சிறுகதைகள்
மாதுரியம்
சந்திரா மனோகரன்
August 31, 2026
கனவுகளை விதைத்தல்
திசேரா
August 31, 2026
காற்றில் கரைந்தாயே என் தேவதையே…
காஞ்சி.தங்கமணி
August 31, 2026