உரை





(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘உறுப்புகளுக் கிடையில் வேறுபாடு இல்லாவிட்டால், அவற்றின் முழுத் தொகுதியிலே எவ்வாறு வேறுபாடு ஏற்படும்?…… ஒன்றேகுலமாகும்காலம் அண்மிக்கின்றது….’

அவனுடைய உதடுகள் ‘சம்போ சங்கர மகாதேவா….’ என அடிக்கொரு தடவை உச்சரித்தபோதிலும், விழிகளிலே அசாதாரண சினமும் விரக்கியும் இழையோடி யிருப்பதைத் தேவி அவதானித்தாள். நாரதனுடைய அத்தகைய பாவம் கலகம் ஒன்றின் முன்னோடி என்பதை அவள் அறிவாள். எனினும், எதையும் அவதானிக்காதவளைப்போல், ‘திரிலோக சஞ்சாரி, என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறாரோ?’ என்ற வினாவைத் தொடுத்து, சினத்திற்குத் தூபமிட்டாள்.
‘பூலோகம் கெட்டுச் சீரழிந்து கொண்டே போகின்றது. அங்கு போவதென்றாலும் வெட்கமாகவும், வெறுப்பாகவும் இருக்கின்றது’ என நாரதன் அலுத்துக் கொண்டான்.
‘உன் தலையீடு இன்றியே, மானிடர் தாமாகவே கலகங்களைக் கற்பித்துச் சண்டையிட்டுக் கொள்கிறார்களென்ற மனத்தாங்கலா?” எனத் தேவி எளனஞ் சிந்தக் கேட்டாள்.
‘அச்சண்டைகளினால் மனிதப் பூண்டே அழிந்து விட்டாற்கூடச் சேமம் என்று தோன்றுகின்றது. இங்கு ஏளனமும் சிரிப்பும் சிந்தி விளையாடுகின்றது. பூலோகத்திற்குப் போய்ப் பார்த்தாலல்லவோ உண்மை தெரியும்? விஞ்ஞான வளர்ச்சி – மருத்துவப் புதுமை எனக்கூறி ஓர் உடலிலுள்ள இரத்தத்தைப் பிறிதொரு உடலுக்குள் பாய்ச்சினார்கள், சிறுசிறு உறுப்புகளையும். விழிகளையும், குண்டிக்காய்களையும் அறுவை வைத்தியம் மூலம் ஓர் உடலிலிருந்து இன்னோர் உயிருக்கு மாற்றினார்கள்….’ இன்னும் சில ஆண்டுகளில் மனித உடலுக்குத் தேவையான சகல புதிய உபரி உறுப்புகளும் கடைகளிற் பெறக் கூடியதாக இருக்கும்’ என விஞ்ஞானி ஒருவன் வருங்காலத்தைப் பற்றி அகம்பாவத்துடன் ஆருடம் கூறுகிறான். உம்பரூராருக்கு இன்னும் அவமானம் நிகழ இருக்கிறதா?’ என நாரதன் கேட்டான். தேவியின் சினம் மறைந்தது. நசனிலே கோபம் பற்றிப் படர்ந்தது.
அவ்வேளையில் ஈசனும் அவ்விடம் வந்து சேர்ந்தான்.
‘நித்தியராம், சருவவியாபகராம், அநாதிமலமுத்தராம்…. லிங்கத்தின் பக்கலில் நிற்க ஓடுகிறார்….’ தேவியின் சினத் தெறிப்பு.
‘லிங்கம் முதலிய இடங்களில் தயிரில் நெய் போலவும், மற்றைய இடங்களிலெல்லாம் பாலில் நெய் போலவும் வெளிப்படாது நிற்பன் யான் என்பதை மறந்தாயா?… ஓகோ, பக்கத்தில் நாரதன் நிற்பதை மறந்தேன்….’ என்றான் ஈசன்,
‘ஊமத்தஞ்சாறு குடித்தும், சுடலைப் பொடி பூசியும் நீங்கள் பித்தனாய் ஆடித்திரியுங்கள். பூலோகத்தில் யார் உங்களை மதிக்கின்றான்? படைத்தல்-காத்தல்-அழித்தல் – மறைத்தல் – அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் இயற்றுவதாகக் கூறினாற் போதுமா?…. பூலோகத்தில் நடப்பவற்றைக் கேட்டீர்களா?’ எனத் தேவி சீறினாள்.
‘யான் சருவஞ்ஞரும்! அறிந்தேன்; மகிழ்ந்தேன்’ என்றான் ஈசன்,
நாரதன் திகைத்தான். தேவி பார்த்தாள். ஈசன் சொன்னான்.
‘யான் மனிதனுக்கு உடலை உவந்தனன் என்னைச் சேவிப் பதற்காக….அவன் தன்னையே மறந்ததினால், என்னை மறந்த னன். வெள்ளை- கறுப்பு-மஞ்சள் எனத் தோலின் நிறத்தை வைத்து உயர்வுதாழ்வு! பொருள் தேட்டத்தைப் பொறுத்து உயர்வுதாழ்வு! பேசும் மொழியை வைத்து உயர்வுதாழ்வு! வர்ணாசிரமத்தை வைத்து உயர்வுதாழ்வு!…. இந்த உயர்வு தாழ்வுகளை நிலைநாட்டவும், எதிர்க்கவும் நடந்தேறிய சண்டை கள் அனந்தம்…இன்று ‘எஜமான’ வெள்ளையனின் உடலிலே, கறுப்பு அடிமையின் இதயம் துடிக்கிறது. நாளை இந்தி பேசும் பிராமணனின் உடலிலே துளுபேசும் தோட்டியின் இதயம் துடிக்கப் போகிறது… உறுப்புகளுக்கிடையில் வேறுபாடு இல்லா விட்டால், அவற்றின் முழுத் தொகுதியிலே எவ்வாறு வேறுபாடு ஏற்படும்?….ஒன்றே குலமாகும் காலம் அண்மிக்கின்றது…. யானும் ஏகனே!….மனிதன் இவற்றைத் தனது அறிவின் சாதனை எனப் போற்றலாம்: ஆனால், அந்த அறிவைப் படைத்தவன்யானே!’
ஈசனைக் காணவில்லை.
சுடலையிலே வீரபத்திர நடனத்தில் ஏற்பாடு!
– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.
![]() |
எஸ்பொ என அறியப்படும் ச.பொன்னுத்துரை (24 மே 1932 - 26 நவம்பர் 2014) ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1989 முதல் புலம் பெயர்ந்து ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் வாழ்ந்து வந்தார். சென்னையில் மித்ர என்ற பதிப்பகத்தை நிறுவி அதன் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டிருந்தார். பொன்னுத்துரையின்…மேலும் படிக்க... |