உணர்வும் உறவும்
கதையாசிரியர்: மு.வரதராசன்
கதைத்தொகுப்பு:
குடும்பம் தமிழ் முரசு (ம.பொ.சி)
கதைப்பதிவு: July 11, 2026
பார்வையிட்டோர்: 153
(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிறு பெண்கள் சிலர் கூடி மணலில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு நாள் புன்னைக் கொட்டைகளை வைத்துக்கொண்டு விளையாடினார்கள். காசு முதலியவை களை மணலில் அழுத்தி மறைத்துப் பிறகு மணலைத் தோண்டி எடுத்துப் பார்ப்பதில் சிறுவர்களுக்குத் தனி இன்பம் உண்டு. அழித்தல். ஆக்கல் என்னும் ஆற்றல் தங்களிடம் இருப்பதை அப்போது அவர்கள் உணர்கிறார்கள் அல்லவா? அதுதான் இன்பத்துக்குக் காரணம். பொய்ம் மைகளை வைத்து விளையாடுவதில் காக்கும் ஆற்றல் இருப் பதை உணர்ந்து மகிழ்கிறார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலில்தான் குழந்தைகளும் இன்பம் காண்கின்றன.
இப்படி விளையாடி வந்த புன்னைக் கொட்டைகளில் ஒன்றை மறந்துவிட்டார்கள். அந்தக் கொட்டை மணலி லேயே அழுந்திச் சில நாள் கிடந்தது. அதனுள் கிடந்த உயிர் வாளா இருக்குமா? அது வெளிப்பட்டது. புன்னைக் கொட்டை புன்னைச் செடியாகித் தோன்றியது.
விளையாடிய சிறுமியர் பலருள் ஒருத்தி அந்த விந்தை யைக் கண்டு வியந்தாள். படைத்தலும் மறைத்தலும் ஆகிய விளையாட்டுக்கு உரிய புன்னைக் கொட்டை, இப்போது த்தல் தொழிலுக்கு உரிய இளஞ் செடியாக விளங்கியது. சிறுமியோ இளந் தாயாகி விட்டாள் ; அந்தச் செடியின்மேல் கொண்ட அன்புதான் அவள் மனத்தைத் தாய்மனம் ஆக்கி விட்டது.
சிறு செடி வளர்ந்து ஓங்கும் என்று கனவு கண்டாள்; வளர்க்க முனைந்தாள்; அன்பு சொரிந்தாள்!
அந்தப் புன்னைச் செடிக்குத் தண்ணீர் மட்டும் ஊற்றினால் போதும். ஆனால் அது யார் செய்யும் செயல்? அதைச் செடி என்று அறிந்த மூளை உடையவர் செயல். சிறுமியோ தன் அன்பை முன்னே செலுத்தி உணர்ந்து வளர்த்தாள். தன் தாய் தன்னை வளர்த்த முறை – நெய்யும் பாலும் ஊட்டித் தன்னை வளர்த்த முறைதான் சிறுமியின் உணர்வில் நின் றது. தானும் அந்த இளஞ் செடியை அவ்வாறு வளர்க்க முனைந்தாள்.
இளம் புன்னைச் செடிக்கு நாள்தோறும் நெய்யும் பாலும் கிடைத்து வந்தன ; தண்ணீரும் ஒவ்வொரு வேளை கிடைத்திருக்கும்.
பல ஆண்டுகள் கழிந்தன செடி மரமாக ஓங்கியது. சிறுமி மங்கையாகப் பொலிந்தாள். திருமணம் நடந்தது. இல் வாழ்க்கை அமைந்தது. குழந்தைச் செல்வமும் வாய்த்தது. இந்தக் குழந்தை ஒரு பெண் குழந்தைதான்.
இந்தக் குழந்தை வளர்ந்து சிறு பெண் ஆனது. பெற்ற தாய்க்கு இந்தச் சிறு பெண் முதல் குழந்தையா? இரண்டாம் குழந்தையா ? உணர்வு உலகம் கண்டவர்கள் உண்மையைச் சொல்லுவார்கள். இந்தச் சிறு பெண் அவளுக்கு இரண்டாம் குழந்தைதான். அவள் மனம்- அன்பு நெஞ்சம்-வளர்த்த முதல் குழந்தை புன்னை மரம் தானே!
இதை அந்தத் தாயே ஒருநாள் சொல்லிவிட்டாள்.
ஒருநாள் அவளுடைய சிறு பெண் அழுதாள்; நெய்ச் சோறும் பாலும் உண்ணாமல் தொல்லை கொடுத்தாள். அப்போது தான் சொன்னாள். “அம்மா! நீ இப்படிப் பாலும் நெய்ச்சோறும் உண்ணாமல் அழுகின்றாயே! உன்னால் எனக்கு எ எவ்வளவு தொல்லை! உன் அக்கா ஒருநாளும் அப்படிச் செய்தது இல்லையே” என்றாள்.
“யாரம்மா அக்கா?” என்று மகள் கேட்டாள். “இதோ இருக்கின்றதே இந்தப் புன்னை மரம்தான். இதுதான் நான் முதலில் வளர்த்த குழந்தை. நாள்தோறும் என் கையால் நெய்யும் பாலும் ஊட்டினேன். ஒரு நாளும் மறுக்கவில்லை; அழவில்லை; கோபம் வரவில்லை. எனக்கு ஒருநாளும் தொல்லை கொடுக்காமல் உண்டு வந்தது. நீமட்டும் இப்படிச் செய்கின்றாயே” என்றாள் தாய்.
மகளின் மனத்தில் அரைகுறையாக இந்தச் செய்தி பதிந்தது. இன்னும் சில ஆண்டுகள் கழிந்தன. அவளுடைய அறிவு வளர்ந்தது. அப்போது புன்னை குழந்தையாகப் பிறந்த கதையையும் வளர்ந்த வரலாற்றையும் தாய் விளக்கினாள். மகளுக்கு உண்மை விளங்கிவிட்டது.
மகளும் உற்ற வயது அடைந்தாள். வாழ்க்கை தொடங்கினாள்.
ஒரு நாள் தன் காதலனோடு அந்தப் புன்னை மரத்து நிழலில் இருந்து பேசிக்கொண்டிருந்தாள். பேச்சில் விளையாட்டும் நகைச்சுவையும் பெருகிவிட்டன. காதல் பேச்சு, காதல் விளையாட்டு இவற்றுக்கு இடையே திடீரென்று காதலியின் உள்ளத்தில் ஒரு புத்துணர்ச்சி தடையாக எழுந்தது. பேச்சும் மகிழ்ச்சியும் தடைப்பட்டன.
காரணம் வேறொன்றும் இல்லை. நிழலில் இருந்த அவள் நினைவு நிழல் தந்த புன்னை மரத்தின் மேல் சென்றது. இளமை முதல் தன் உள்ளத்தில் ஊறிவந்த உறவு முறை முன்வந்து நின்றது.
புன்னைமரம் தமக்கை; தான் தங்கை – இதை எப்படித்தான் மறக்க முடியும்? ஒருநாள் பாடமா?
தமக்கையின் எதிரில் காதல் பேச்சும் விளையாட்டும் நிகழ்த்தத் தங்கைக்கு மனம் இல்லை. ‘என்ன செய்தோம்’ என்று நாணம் அடைந்தாள்.
இதைக் காதலனுக்குத் தோழியைக் கொண்டு தெரிவித்தாள்.
இந்தக் கருத்து ஒரு பழம் பாட்டில் உள்ளது. பாடிய புலவர் யார் என்று தெரியவில்லை. தமிழ் நாடு பெயரை மறந்துவிட்டது. ஆனால், நல்ல காலம், அந்தப் பாட்டை மறக்கவில்லை.
“விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய
நெய்பெய் தீம்பால் பெய்து இனிது வளர்த்தது
நும்மினும் சிறந்தது நுவ்வை யாகும்” என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே;
அம்ம நாணுதும் நும்மொடு நகையே…
(நற்றிணை- 172).
– 1 பெப்ரவரி 1947, தமிழ் முரசு (ம.பொ.சி).
![]() |
மு.வரதராசன் (மு.வ. என்று சுருக்கமாக அழைக்கப்படும் மு. வரதராசனார்) இருபதாம் நூற்றாண்டின் மிகவும் புகழ்பெற்ற தமிழ் அறிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர் மற்றும் கல்வியாளர் ஆவார். இவர் ஏப்ரல் 25, 1912 இல் பிறந்து அக்டோபர் 10, 1974 இல் இயற்கை எய்தினார். எளிய தமிழ் நடையில் திருக்குறளுக்கு இவர் எழுதிய தெளிவுரை தமிழக மக்களிடையே இன்று வரை மிகவும் பிரபலமாக உள்ளது. டாக்டர் மு.வ. பற்றிய முக்கியத் தகவல்கள் பின்வருமாறு:…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கருணைக் கொலை
சூசை எட்வேட்
July 11, 2026
வசந்தம் வந்து போய்விட்டது
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
July 11, 2026
புனிதமெனும் பொய்!
மா.சித்திவினாயகம்
July 11, 2026
