உணர்வுகள் கட்டுடைத்தால் …?

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 5, 2025
பார்வையிட்டோர்: 580 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

யோகநாதன் விட்டெறிந்த ஐம்பது சத நாணயம் நிலத்தில் கிடந்த ஒரு கல்லில் மோதி தெறித்தெழும்பி திரும்பவும் நிலத்தில் விழுகிறது. 

யோகநாதனின் கண்கள் சிவந்து போய் விட்டன! அவ்வளவு கோபம். 

கனகம் இப்படியொரு சம்பவம் நடக்குமென்று எதிர்பார்க்க வில்லை. கடந்த நாற்பது வருடங்களுக்குள் நடந்து முடிந்த இப்படியான சம்பவங்களின் தொகுப்பின் வலிமையால் நடந்த சம்பவத்தின் தாக்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக நின்கின்றான். 

அந்த ஐம்பது சதம் கிடைக்கும் மண்ணின் மேற்பரப்பையும் யோகநாதனின் முகத்தையும் மாறி மாறிப் பார்க்கின்றாள், கனகம் என்ன நடந்ததென்பதைச் சரிவர அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

குண்டூசி விழுந்தால் சத்தம் கேட்கின்ற அமைதி என்று கூறுவார்களே அந்த அமைதி நிலவுகின்றது. 

‘வசந்த மாளிகை’ என்று ஊர்மக்களால் சிறப்பாக அழைக்கப்படுகின்ற யோகநாதனின் வீட்டு முன் பிளேற்றின் கீழ் கனகம் நிற்கின்றான். முன் மண்டப வாசலோடு யோகநாதன் நிற்கின்றான். அவருக்குப் பின்னால் அவரது நண்பர்கள் சிலர் நிற்கின்றனர். 

நடந்து முடிந்த சம்பவத்தின் அடித்தளம் புரியாமல் நின்ற கனகம், சூழ்நிலையை அனுசரித்து சம்பவத்தின் விளக்கத்தைக் கேளாமல் குனிந்து அந்த ஐம்பது சத நாணயத்தை எடுத்து படிக்கட்டில் வைத்து விட்டுத் திரும்பவும் தான் நின்ற இடத்தில் வந்து அடக்கமாக நின்றான். 

‘ஒரு ஐம்பது சதக் காசுக்கு என்னைப் பெறுமதி இல்லாதவனாக்கிப் போட்டாய் என்னடி…? நானென்ன ஊரைவிட்டு ஓடப் போறனே… அப்பிடி ஓடினாலும் உன்ரை ஐம்பது சதத்தைக் கொண்டு போய் கோட்டை கட்டிப் போடுவனே… எடி… ஒரு நாளைக்கு இந்தக் கையாலை எவ்வளவு காசு சிலவழிக்கின்றனெண்டு உனக்குத் தெரியுமே? ஒரு ஐம்பது சதத்துக்கு நம்பிக்கையில்லாமல் திருப்பிவிட்டிட்டாய்… அவ்வளவு திமிர்’ யோகநாதன் வாய்க்கு வந்தபடி பேசுகிறார். 

கனகம் மௌனமாகவே நிற்கிறாள். 

‘பிறகேனடி நிக்கிறாய்? எடுத்துக் கொண்டு போவன்’ 

‘ஐயா… இப்ப என்ன நடந்து போச்சு? மாவாங்கக் காசு காணாது. அதுதான் வந்தனான். இல்லாட்டி…’ கனகம் பயத்தில் குழைகிறாள். 

‘என்னடி கனகம் கதைக்கிறாய். இண்டைக்கு இந்த ஐம்பது சதம் இல்லாட்டி உன்ரை சீவன் போகிடுமே’ 

இப்போது நான்கு மணி இன்று காலை எட்டு மணியிலிருந்து இந்த ஐம்பது சத நாணயம் தூக்கி எறியப்படும் வரையில் யோகநாதன் கனகத்திற்குக் கடன்காரன் தான்! 

இன்று காலை, எட்டு மணிக்கு இரண்டு ரூபா பெறுமதியான அப்பத்தைக் கொண்டு வந்து கொடுத்த கனகம், ‘பெரிய இடம்’ என்ற பயத்தில் காசைக் கேட்காமல் போய் விட்டாள். 

அந்தக் காசைக் கேட்க வந்த இடத்தில் ஏற்பட்ட விளைவுதான் இந்த நிலை! 

‘எடி…இந்தக் கிராமத்தையே விலைக்கு வாங்கக் கூடியவன்ரி இந்த யோகநாதன்…’ தனது பணத்தகுதியை மார்பு தட்டிக் கூறுகிறார் யோகநாதன். கனகம் மௌனமாகவே நிற்கிறாள். 

‘அரிட்டைக் க்ேகிறம் எண்ட எண்ணம் வேண்டாமே. ஒரு ஐம்பது சதக் காசுக்கு வழியில்லாதவனாக்கிப் போட்டாய். உனக்குத் தான் மான வெக்கம் இல்லையெண்டால்… எனக்கும் இல்லையே எடுத்துக் கொண்டு போவன்’ 

‘ஐயா… கோபப்படாமல் நான் சொல்லதைக் கொஞ்சம் கேளுங்கோ’ கனகம் கெஞ்சுகிறாள். 

‘என்னடி சொல்லப்போறாய்’ 

‘ஐயா, நீங்கள் பெரிய மனிசன், உங்களிட்டைக் காசு கேக்கக்குடாதெண்டுதான் காலமை நான் பேசாமல் போனான். இப்பமா வாங்கக் காசு காணாது. லீவாய் இருப்பியள் எண்டுதான் வந்தனான். நீங்கள் குடுக்கவேண்டியதைக் குறைச்சுக் கொடுத்திருந்தியள். சிலவேளை கணக்குத் தெரியமால் விட்டிருக்கலாம் எண்டு நினைச்சுத் தான் திருப்பி விட்டனான். நம்பிக்கையீனப்பட்டில்லை’ 

‘எனக்குக் காசுக் கணக்குத் தெரியாதே’ 

‘மறந்திருப்பியள்…’ 

‘இவளவை வெச்சுப் பழகிறன் மறதியில்லை. இந்த ஐம்பது சதத்திலையே மறதி. அப்பிடியெண்டாலும் உடனைத் தீர்க்க வேணுமே. நுளைக்கு வந்து கேட்டிருக்கலாம்’ 

‘என்ரை சீவியமே இதிலை தானே’ 

‘ஐம்பது சதத்திலை என்னடி பெரிய சீவியம்’ 

‘எனக்குத் தர வேண்டிய காசைத் தானே நான் கேட்டன்’ இப்படிக் கனகம் கேட்டுவிடலாம். கேட்கின்ற உரிமையுண்டு, நாக்குமுண்டு. அவள் நாக்குப் புரள மறுக்கின்றது. அந்தக் கேள்வியை அவளால் கேட்டு விட முடியவில்லை. அவள் மெளனமாக நிற்கின்றாள். 

இந்தக் கிராமத்தில் யோகநாதன் பெரிய மனிதர். கிட்டத்தட்ட நாற்பது வயதிருக்கும். பொருளாதாரப் பலம் மிக்கவர். இந்தக் கிராமத்தோடு தொடர்பு வைப்பதென்றால் யோகநாதனோடு தொடர்பு வைத்தால் சரி என்ற சிறப்புப் பெற்றவர். அவ்வளவு செல்வாக்கு. 

கனகமும் இதே ஊரைப் சேர்ந்தவள் தான். ‘அப்பக்காரக் கனகம்’ என்று கூறினால் சகலருக்குந் தெரியும். பலகாரம் சுடுவதில் அவ்வளவு பிரபல்யமானவள். தினசரி பலகாரம் சுட்டு அதைக் கொண்டு திரிந்து விற்று அதில் வருகின்ற வருமானத்தில் வாழ்பவள். 

கால்பரப்பு நிலம் அதில் ஒரு குடிசை. இதுதான் அவளது சொத்து. 

விடியப்புறம் நாலு மணிக்கெல்லாம் எழுந்துவிடுவாள். விடிய ஆறு மணிக்குள் ஏதோ முடிந்தளவு பலகாரம் சுட்டு பெட்டியில் வைத்துக் கொண்டு புறப்பட்டால், விற்று முடிந்த பின்புதான் வீடு திரும்புவாள். 

பழுத்து, காய்ந்து சுருங்கிய பேரீச்சம்பழம் போன்று தசைப் பிடிப்பின்றி எலும்பில் சுருங்கித் தொங்குகின்ற கறுத்த தோல். வயதால் வளைந்து கோள்விக்குறி போலான உடல், கழுத்தில் ஒரு கறுத்தக் கயிறு. பற்களின்றி உள்நோக்கி மடிந்து போயிருக்கும் உதடுகள். இந்த வயதிலும் இந்தக் கோலத்தோடு இவள் சுறுசுறுப்பாகத் திரிவதைக் கண்டு ஆச்சரியப்படாதவர்கள் இருக்க முடியாது! 

இன்று கனகம் அப்பம் சுட்டிருந்தாள். இப்படி அப்பம் சுடும் நாட்களில் யோகநாதன் வீட்டுக்கென்று சிலதொகை அப்பகளைச் சுட்டு புறம்புபடுத்திவைத்துக் கொள்வாள். ஆந்த அப்பங்களில் பால் நிறைந்து போயிருக்கும். 

பெரிய இடத்து வாய்களுக்குள் போகின்ற அப்பமல்லவா. ‘ஆசைப் சாப்பாடு’ சுவை அவசியந்தானே! 

இன்று தன் வழமையான வியாபாரம் முடிந்து. புறம்புபடுத்தி வைத்திருந்து அப்பங்களை எடுத்துக் கொண்டு யோகநாதன் வீட்டுக்கு வந்து விட்டாள். 

என்ன கனகம் இந்த வயதிலை உப்பிடி நெருப்புக்கை கிடந்தால் உடம்பு என்னத்துக்குதவும்’ யோகநாதனின் மனைவி அவள் மேலுள்ள அக்கறையைக் காட்டிக் கொள்வதற்காக இப்படிக் கேட்ட போது, 

‘இந்த நெருப்புக்கை காயாட்டித் தங்கச்சி சுடலை நெருப்பிலை கருக வேண்டி வரும்’ என்று தனது பொறுப்பைச் சிரித்தபடி கூறி முடித்து விட்டாள். 

அங்கு வந்த யோகநாதன் அப்பத்தை எடுத்து கடவாயால் பால் வளியவளியத் தின்று, அந்தச் சுவையில், ‘கனகம் நீ எங்கடை குடும்பத்திலை அக்கறைதான். இனைச்சுத்தான் சுட்டிருக்கிறாள் எனறு கூறிவிட்டார். கனகத்திற்கு உள்ளுரப் பெருமைதான்! இந்த ஊர் பெரிய மனிதன் புகழ் மொழியில் பெருமை இருக்காதா என்ன? 

அப்பத்துக்குரிய காசு… அதை அவள் கேட்கவுமில்லை அவர்கள் கொடுக்கவும் இல்லை. 

இன்று பின்னேரம் நாலு மணியளவில் நாளைய பலகாரத் தேவைக்காக மா வாங்கப் புறப்பட்டு காசு இல்லாததால் இங்கு வந்து விட்டாள். 

எவ்வளவு தான் கனகம் யோகநாதன் வீட்டாரின் அக்கறைக்குரியவளாக இருந்தாலும் என்றும் அவளை குசுனி வாசலோடு, அல்லது முன் பிகளற்றின் கீழ் வைத்துக்தான் கதைப்பார்கள். முன் மண்டபத்திற் கூட ஏற அனுமதிப்பதில்லை. 

காசுக்காக வந்தவள் வழமை போல் பிளேற்றின் கீழ் நின்று வேலைக்காரிடம் காசுக்குச் சொல்லி விட்டிருந்தாள். 

மொத்தமாக இரண்டு ரூபா. 

யோகநாதன் ஒன்றரை ரூபா மட்டும் கொடுத்து விட்டிருந்தார். இன்றைய தேவைக்கு அவ்வளவும் போதாமல் இருந்ததால் மிகுதி ஐம்பது சதத்தையும் தரும்படி வேலைக்காரனிடம் சொல்லி விட்டிருந்தாள் கனகம். அது யோகநாதனுக்குப் பிடிக்கவில்லை. 

நண்பர்கள் மத்தியில் ஒரு ஐம்பது சதம் காசுக்காக, அதுவும் ஒரு அப்பக்காரி எப்படித் திருப்பிவிடலாம், அது தான் யோகநாதனின் கோபம். 

யோகநாதன் அந்த ஐம்பது சதக் காசைக் கொண்டு வந்து தூக்கி வீசி விட்டு நின்கின்றார். 

சிவந்த கண்கள் சிவந்ததுதான்! உணர்ச்சி வசப்பட்டு நின்கிறார் யோகநாதன். 

‘சரி… சரி… யோகநாதன் வாருங்கோ. காகம் திட்டி மாடு சாகிறதே. உதுகளை வெக்க வேண்டிய இடங்களிலை வெக்க வேணும்’ அவருக்குப் பின்னால் நின்ற ஒரு நண்பன் சமாதான முயற்சியில் இறங்குகிறான். 

‘இல்லைப்பாருங்கோ, வீடு தேடிக் கொண்டு வந்திட்டாளே எண்டிட்டு வாங்கினம். ஏனக்கு எத்தினை தொல்லை. அதிலை காசைக் குடுக்க மறந்திட்டன். இப்பவும் நான் உதைப் பற்றி யோசிக்கயில்லை. வேலைக்காரன் வந்து கனகம் இரண்டு ரூபா காசு வாங்கியரட்டாம் எண்டான். எனி இதுக்காக ஒழும்புப்போய் பொட்டி திறக்கிறதே.என்ரை இளையவன் வெச்சு விளையாடிக் கொண்டிருந்த காசை எடுத்துக் குடுத்து விட்டன். ஐம்பது சதம் குறைஞ்சு போச்சு. அதுக்குத் திருப்பி விட்டிருக்கிறாள்’ 

‘இதுகளைப் போலை ஆக்களிட்டைக் கடன் வெச்சால் இப்பிடித்தான். நேரங்காலந் தெரியாமல் வந்து நிக்குங்கள்’ நண்பன் கூறுகிறான். 

‘எடி எனக்கு உயிரை விட மானம் பெரிசடி’ 

‘இப்ப உங்கடை மானத்துக்கு என்னையா வந்திட்டுது’ 

‘எடி உனக்கு நான் கடன் காரனெண்டால் பிறகென்னடி’ 

‘இந்த உலகத்திலை ஆரையா கடனாளியில்லை எல்லாகும் ஏதோ ஒரு விதத்தில் கடனாளியள் தான்’ 

‘எடி நிண்டு கதைச்சு என்ரை மானத்தை வாங்காதை. உந்தக் காசை எடுத்துக் கொண்டு போ. எனிமேல் இஞ்சை வராதை’ 

‘ஐயா… உங்களை அவமானப்படுத்த என்னாலை முடியமா? என்னைப் பாருங்கோ… தினசரி நெருப்பு வெக்கையுக்கை கிடந்து எரிஞ்ச கொள்ளிக்கட்டையாயப் போனன். இண்டைக்கோ நாளைக்கோ கட்டையிலை போக வேண்டியனான். நான் ஏன் உங்களை அவமானப் படுத்தப் போறன்’ கனகம் மிகவும் தாழ்மையாகக் கதைக்கிறாள். 

‘எடி நீ சரிக்குச் சரி கதை சொல்ல வெளிக்கிட்டிட்டாய் என்னடி’ யோகநாதனுக்குக் கோபம் ஆறவில்லை. 

‘ஐயா அதிகம் ஏன் கதைப்பான். ஏனக்குத் தர வேண்டியதைத் தானே கேட்டன்’ இதுவரை கேட்கத் துணிவில்லாமல் இருந்தவள் இப்போது கேட்டு விட்டாள். 

‘அதுதானே இஞ்சை கிடக்கு எடுத்துக் கொண்டு போவன். எனிமேல் இஞ்சை ஒண்டும் கொண்டு வெராதை. இருக்கிற மானமும் போகிடும்’ 

‘என்னையா இப்பிடிச் சொல்லுறியள். குருவி ஒவ்வொரு தும்பாய் எடுத்துக் கூடு கட்டிறது போலை ஒவ்வொரு சதமாய் சேர்க்கின்ற காசிலைதான் சீவியம். உங்களைப் போலை என்னட்டையும் காசிருந்தால் நான் ஏன் இப்படி அலையப்போறன்’ 

‘சரி சரி நடந்தது நடந்து போச்சு, என்ன செய்யிறது. கனகம் நீ ஐயா விட்டை மன்னிப்புக் கேட்டுப் போட்டுப் போ’ 

‘நான் இப்ப என்ன தவறு செய்து போட்டன் மன்னிப்புக் க்ேகிறதுக்கு ‘ கனகத்தின் பேச்சில் ஓரளவு வைரம் செறிந்திருக்கின்றது. 

‘நீ காசு கேட்டது பிழை தானே’ 

‘நீங்கள் என்ன சொல்லுறியள்? ஏனக்குத் தர வேண்டிய காசை நான் கேட்டது பிழையே. இதென்ன ஞாயம்’ கனகம் இறுக்கமாகவே கேட்கிறாள். 

யோகநாதனுக்கும், கனகத்திற்கும் நடுநிலைமை வகித்த அந்த நண்பன் மௌனமாக நிற்கிறான். 

யோகநாதனின் சிவந்த கண்கள் கடுஞ் சிவப்பாகின்றன. 

‘ஐம்பது சதத்துக்கு ஊம்பிற நாய்… ஞாயம் கதைக்கிறாய் என்னடி’ யோகநாதன் திடீரென்று கூறுகின்றார். 

தலையைத் தாழ்த்தியிருந்த கனகம், தலையை நிமிர்த்தி யோகநாதனைப் பார்க்கின்றாள். அவளது முகம் சிவந்து, சில வினாடிகளில் கருஞ் சிவப்பாகின்றது. யோகநாதனின் கண்களைப் போல. 

அவளது பேரீச்சம்பழ உடல் நடுங்குகின்றது. 

கட்டறுபட்ட அவள் சுயமரியாதை உணர்வு பெருங்காளையுருவெடுத்து அவளது இதயத்தைக் குத்திப் பிளக்கின்றது. 

அவளது பார்வை கண் வெட்டாமல் தொடர்கிறது. 

‘என்னடி ஒரு மாதிரிப் பார்க்கிறாய்’ யோகநாதன் அடிப்பது போல் கேட்கின்றார். 

‘இப்ப என்ன சொன்னனீங்கள்’ கனகம் நிதானமாகக் கேட்கின்றாள். 

‘ஐம்பது சதத்துக்கு ஊம் பிற நாய்…’ 

‘ஆர்’ 

‘நீ தான்’ 

‘ஐயா நாக்கும் வாயும் கிடக்கெண்டதுக்காக எதையும் கதைச்சுப் போடக் குடாது. ஐம்பது சதத்தையென்ன\ ஐம்பதினாயிரத்தையும் தூக்கியெறிய தைரியம் உங்களுக்கிருக்கு. ஆனால் நான் அப்படிச் செய்யேலாது இது நான் நெருப்புக் குளிச்சு சேத்த பணம். அது கின்ரை அருமை எனக்குத்தான் தெரியும். இந்த ஐம்பது சதம் இண்டைக்கு எனக்கில்லாட்டிமா வாங்கோலாது. பலகாரம் சுடேலாது. 

நாளைக்கு என்ரை வயிறு கொதிக்கும். அதுக்கு நான் தான் பதில் சொல்ல வேணும். 

‘எடி இப் உன்னைச் சுட்டுத் தள்ளுவன் பேசாமல் போ’. 

‘நீங்கள் குடுக்கிறதை நேரத்தோடை குடுத்திருந்தால் நான் ஏன் வெரப்போறன். உங்களுக்கு கைவைச்சு எடுக்க அலுப்பு. எங்களுக்கு கை நீட்டிக் கொண்டு நிண்ட அலுப்பு’ 

‘உங்களுக்கு மானப்பிரச்சனை, எனக்குப் பசிப் பிரச்சனை’ 

‘நீ போப்போறியா… இல்லையா’ 

‘நான் போகத்தான் போறன் என்னை நீ நாயெண்டு சொல்லிப் போட்டாய். நான் நாய் தான். நன்றியுள்ள நாய், பெட்டை நாய். அதிலையும் கிளட்டு நாய். ஆனால் ரோசங் கெட்ட நாயில்லை. நான் எனக்குச் சேர வேண்டிய காசுக்காக வாதாடுறன்’ 

‘ஆனால் நீ உனக்குச் சேரக் கூடாத காசுக்காக வாதாடுகிறாய்’ 

‘ஐம்பது சதத்துக்கு ஊம்பிற நாய்… நானில்லை நீ தான்!’ ஆத்திரத்தோடு பேசிய கனகம் குனிந்து அந்த ஐம்பது சதத்தை எடுக்கின்றாள். 

‘எடி இவளவும் கதைச்சுப் போட்டு பறகேனடி உந்தக் காசை எடுக்கிறாய்’ 

‘இது எனக்குச் சேர வேண்டிய காசு. இதை எடுக்கிறதிலை எனக்கென்ன வெக்கம்’ நிதானமாகக் கூறிய கனகம் இங்கிருந்து புறப்படுகின்றாள். 

யோகநாதன் மெளனமாக நின்கின்றார். 

– மல்லிகை, யூலை 1977.

– மண்ணின் முனகல் (சிறுகதைகள்), முதலாம் பதிப்பு: செப்டெம்பர் 2012, கு.வி. அச்சகம், கொழும்பு.

கே.ஆர்.டேவிட் கே.ஆர்.டேவிட் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். 1971 ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றுப் பின்னர் சாவகச்சேரி வலய உதவிக் கல்விப்பணிப்பாளராக உயர்வு பெற்றார். கடமையின் நிமித்தமாக 1971 இல் நுவரேலியா சென்றிருந்த இவர், அங்குள்ள மக்களின் அவலங்களால் ஆதங்கப்பட்டு அதனை எழுத்துருவாக 'வரலாறு அவளைத் தோற்றுவிட்டது' என்னும் நாவலைப் படைத்தார். இவர் சிரித்திரன் இதழில் தொடராக எழுதிய 'பாலைவனப் பயணிகள்' என்னும் குறுநாவல் மீரா…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *