உணர்வின் முடிச்சு
கதையாசிரியர்: சிங்கை மா.இளங்கண்ணன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 16, 2026
பார்வையிட்டோர்: 63
(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மஞ்சள் வெயில்.
வீட்டு வாசலில் ‘சிஞ் – சு’ கூந்தலை உலர்த்திக் கொண்டு நின்றாள்.
அவள் முகம் வாடி இருந்தது.
கவலையோடு நின்ற அவள் மனமும் அவளிடம் இல்லை; பார்வை மட்டும் குவாட்டர்சை ஒட்டிச் செல்லும் சாலையில் இருந்தது.
சாலையில் இருந்து தொழிலாளர் குவாட்டர்சுக்குப் பிரிந்து செல்லும் சிறிய மண் சாலையில் வண்டி திரும்பியது. பிள்ளைகள் நடைபழகும் வண்டியைப் போல் உள்ள முச்சக்கர வண்டியை கரடு முரடான வாழ்க்கைப் பாதையில் நடந்து. நடந்து நடை தளர்ந்துவிட்ட சியோக்-குவா தள்ளிக்கொண்டு வந்தாள்.
அதே வண்டியில் சிறு ‘லக்சா மீ’க் கடையே இருந்தது, லக்சா மீ உள்ள வெங்கலப்பானை, கிண்ணங்கள், நீருள்ள வாளி, உணவு உண்ணப் பயன்படுத்தப்படும் குச்சிகள் இருந்தன.
“லக்சா மீ …” என்று சிறுவன் ஒருவன் குரல் கொடுத்தான்.
சியோக் குவா வண்டியை நிறுத்தினாள். நீருக்குள் கிடந்த கிண்ணங்களுள் ஒன்றை எடுத்தாள். கரண்டியால் இடியாப்பம் போல் இருந்த மீயை எடுத்துக் கிண்ணத்தில் போட்டு மீ சூப் ஊற்றினாள். இறால்மீன் பொடி, சிறிது உறைப்பு, கீச்சாப் என்று அழைக்கப்படும் உப்புச்சுவைநீர் ஆகியவற்றைக் கலந்து சிறுவனிடம் கொடுத்தாள்.
சிறுவன் காசைக் கொடுத்ததும் அவள் அணிந்திருந்த கறுப்புநிற ‘சங் ஃபூ’ ரவிக்கைப் பைக்குள் போட்டுக் கொண்டு சிறிது நேரம் நின்றாள். வியாபாரம் நடந்ததைப் போலவும் இளைப்பாறியதைப் போலவும் இருந்தது.
சிறுவன் லக்சா மீ சாப்பிட்டுவிட்டுக் கிண்ணத்தைக் கொடுத்ததும் வண்டி ‘கட கட’ என்று ஒலி எழுப்பிக் கொண்டு நகர்ந்தது.
சிஞ் சுவின் வீட்டு வாசலில் போய் நின்றது.
சிஞ் சு பார்த்துக் கொண்டுதான் நின்றாள். ஆனால் அவள் மனம் மட்டும் விடுபடவில்லை.
தான் பிறந்த கம்பத்திலேயே மூன்றாண்டுக்கு முன்பே பிறந்துவிட்ட சியோக் குவா, “லக்சா மீ வேண்டுமா?” என்று கேட்டாள்.
“ம்… வேண்டாம்! இன்று வெள்ளிக்கிழமை!” என்றாள் சிஞ்சு.
முருக பக்தையான அவள் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் விரதம் இருப்பது வழக்கம்.
“என்ன யோசனை? ஏன் முகம் வாடி இருக்கிறது?” சியோக் குவா வினவினாள்.
“படுத்த படுக்கையாகக் கிடக்கும் என் மாமியாரை என் கணவர் பார்க்கப் போகிறார். மாமியார் நிலையை நினைக்கும் போதும், என் கணவரைக் கொஞ்ச நாளைக்குப்பிரிந்திருக்க வேண்டுமே என்பதை நினைக்கும்போதும் எனக்குக் கவலையாக இருக்கிறது!” என்றாள் சிஞ் சு.
சியோக் குவாவின் சுருக்கம் விழுந்த முகத்தில் குறும்புப் புன்னகை! “அதற்குத்தான் கவலைப்படுகிறாயா?” என்றாள்.
சிஞ் சு நெஞ்சம் ‘திக் திக்’ என்று அடித்தது.
நெஞ்சைப் பிடித்துக்கொண்டு வேலிச்செடி ஓரமாக ஓடினாள். தன்னைக் காத்துக்கொள்ள!
முத்துவின் வீட்டு வாசலை அடைந்ததும், ‘தோளோங்!’ என்று குரல் கொடுத்தாள்.
தாழ்வாரத்தில் சிறு அறை தடுத்திருந்தது. அந்த அறையில் முத்து நின்றான்.
‘உதவி!’ என்னும் குரல் கேட்டதும் முத்து சட்டென்று திரும்பினான்.
பூப்போட்ட ‘சங் ஃபூ’ சட்டையும், காற்சட்டையும் கிழிந்திருந்தன; சேரும் படிந்திருந்தது; முகத்தில் கரி ஒட்டியிருந்தது; தலைமுடி அலங்கோலமாகக் கிடந்தது; உதடுகள் வறண்டிருந்தன; அழுதழுது சிவந்து விட்டிருந்த கன்னங்கள் வீங்கியிருந்தன- சிஞ் சு ‘சீத் பூத்’ தென்று இறைக்கப் பதறிப்போய் நின்றாள்.
தன் உயிரையும், மானத்தையும் காத்துக்கொள்ள வேண்டும் எனும் எண்ணத்தில் ஓடிவந்த சிஞ் சு முன்- பின் அறிமுகம் இல்லாத முத்துவிடம், “என்னை உங்கள் மனைவியென்று சொல்லுங்கள்!” என்று அழுகை கலந்த குரலில் கைகூப்பிக் கெஞ்சினாள். நேரமும் காலமும் அவளை அப்படிச் சொல்லச் சொல்லியது.
இதற்கு முன் பெண்கள் பலர் இப்படிக் காப்பாற்றப் பட்டிருந்ததால் முத்து நிலைமையைப் புரிந்து கொண்டான். தனக்கும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறதே என்று அவன் மனத்தில் மின்னல் போல் தோன்றி மறைந்தது.
“தயங்காதீர்கள்! தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள்!” என்றாள் சிஞ் சு.
“குராவ்!” என்று ஜப்பானிய ராணுவ வீரர்களும் வீட்டை நெருங்கி விட்டனர். எண்ணற்ற தலைகளை வாழைக் காயைப் போல் சீவிக் குவித்த ‘சமூரா’ வாளின் பிடியில் அவர்களின் கைகள் இருந்தன. துப்பாக்கிகள் வேறு தோள்களில் கிடந்தன.
முத்துவின் வீட்டை நெருங்கியதும் பிரேக் பிடித்த ராணுவ லோரியைப் போல் திடீர் என்று நின்றனர். ‘சல்யூட்’ அடித்து வணக்கம் தெரிவித்தனர்.
பலி உணர்ச்சியோடு ஓடிவந்தவர்கள் முத்துவைக் கண்டு பணிவன்பு காட்டவில்லை. அவனுடைய வீட்டு வாசலில் மாட்டியிருந்த காந்தியார், நேதாஜி, நேரு மூவரும் ஒருங்கே இருந்த படத்தைப் பார்த்து விட்டுத்தான் அவர்கள் ‘சல்யூட்’ அடித்தனர்.
முத்து ஜப்பானிய முறையில் தலைகுனிந்து வீரர்களுக்கு வணக்கம் தெரிவித்தான்.
சிஞ் சு வெதிர் வெதிர்த்துப் போய் நின்றாள்.
ராணுவ வீரர்களுள் ஒருவர் அவனை வெறித்துப் பார்த்தார்; மற்றொருவர் அரைகுறை மலாயில் ஜப்பானிய மொழியைக் கலந்தும், கைச்சைகை செய்தும், “இவள் யார்?” என்று வினவினார்.
சீனர்கள் மேலுள்ள பழங்காலப் பகையுணர்ச்சி அவர் கேள்வியில் இழையோடியது.
ஆபத்திற்குப் பாவம் இல்லை என்று நினைத்த முத்து, நெஞ்சில் கையை வைத்துச் சைகை காட்டி, “என் மனைவி!” என்றாள்.
வீரர்களின் முகம் அடுத்த நொடியே மலர்ந்தன.
“அப்படியா? நல்லது நாங்கள் வருகிறோம்!” என்று சொல்லிவிட்டு நடந்தனர்.
முத்து, வாசலில் தொங்கிய படத்தைப் பார்த்தான்.
காந்தியார் அவனைப் பார்த்துப் பொக்கை வாய் திறந்து சிரித்தார்.
சிஞ்சு நெஞ்சத்துடிப்புச் சற்று தணிந்திருந்தது. கையெடுத்து முத்துவைக் கும்பிட்டாள்.
“அது இருக்கட்டும்! நடந்தது என்ன?” முத்து வினவினான்.
“குண்டு வீச்சில் எங்கள் குடும்பமும், வீடும் அழிந்து விட்டன: கீழே பாசாப் பக்கம் போயிருந்த இந்தப் பாவி மட்டுந்தான் உயிர் தப்பினேன். அநாதையான நான் கால்கள் போன போக்கில் நடந்தேன். இந்தப் பக்கம் வரும் போது ஜப்பானிய வீரர்கள் பார்த்து விட்டனர். அவர்களிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க ஓடிவந்தேன். வாசலில் தொங்கிய படத்தைப் பார்த்ததும் உதவி என்றேன். தக்க சமயத்தில் நீங்கள் கைகொடுத்து உதவி விட்டீர்கள்! இல்லை என்றால்..” வாயில் கைக்குட்டையை வைத்துக் கொண்டு விம்மினாள்.
முத்து ஆறுதல் கூறினான். அவித்து வைத்திருந்த மரவள்ளிக்கிழங்கில் ஒரு துண்டு எடுத்துக் கொடுத்தான்.
அவள் கிழங்கைத் தின்றுவிட்டு நீர் பருகினாள்.
களைப்புத் தீர்ந்து விட்டிருந்தாலும் அவள் முகத்தில் ஓடிய கவலை ரேகைகள் மட்டும் மறையவில்லை.
“நான் போகிறேன்! என்னை உங்கள் மனைவி என்று சொல்ல வைத்ததற்காக என்னை மன்னித்து விடுங்கள்!”
“அது இருக்கட்டும்! இப்போது நீ எங்கே போகப் போகிறாய்?”
“அதுதான் எனக்கும்… தெரியவில்லை!”
‘தெரியவில்லை என்ற கடைசிச் சொல்லை அபாயச் சங்கொலி அமுக்கியது. அடுத்து சற்று நேரத்தில் விமான இரைச்சல்; குண்டுமாரி! ‘நொய்ங்…. நொய்ங்….’ என்று குண்டுகளின் சில் பறந்தன.
இருவரும் வீட்டிற்கு அருகில் உள்ள குழிக்குள் பதுங்கிக் கொண்டனர்.
“இந்த நிலையில் போகவேண்டுமா?”
சிஞ் சு அழுதாள்.
“நீ இங்கேயே தங்கி இரு! நான் இந்தியன் என்பதால் ஜப்பானியர்களிடம் இருந்து உனக்கு எந்த ஆபத்தும் வராது. என்னையும் நம்பு!” என்றான்.
சிஞ் சு அவன் முகத்தை இரக்கத்தோடு பார்த்தாள். அவன் மேல் அவளுக்கு நம்பிக்கை பிறந்தது. ஒண்ட இடம் கிடைத்துவிட்டது எனும் எண்ணத்தில் ‘சரி’ ‘சரி’ என்று தலையாட்டினாள்.
இருவரும் அதே வீட்டில் இருந்தனர்.
சிஞ்சு வீட்டு வேலைகளை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
இருவரும் சாப்பிடும்போதுதான் பேசிக் கொண்டனர். மரவள்ளிக் கிழங்கும் குறுநொய்யும் போட்டுக் காய்ச்சிய கஞ்சிதான்; அதுதான் அப்போது எல்லாருக்கும் பாலும் பழமும்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோசைப் பற்றி முத்து புகழ்ந்து பேசாத நாளே இல்லை.
அவன் இந்திய விடுதலைப் படையில் சேர்ந்திருந்தான். படை போர்க்களத்திற்குச் செல்லும்போது கடுமையான காய்ச்சலாக இருந்ததால் அவனால் போக முடியவில்லை. அதைச் சொல்லிச் சொல்லி வருந்திக் கொண்டிருந்தான்.
காந்தியாரைப் பற்றியும், நேதாஜியைப் பற்றியும் அவளிடம் நன்கு எடுத்துச் சொன்னான்.
ஆனால், காந்தியார் வழியில் சுதந்திரம் வாங்குவது மயிலிடம் இறகு கேட்ட நிலைதான் என்பது அவனுடைய தீர்க்கமான முடிவு.
சிஞ் சுவுக்குக் காந்தியார் வழியே சிறந்ததாகத்தோன்றியது. அவர் வழியைப் பின்பற்றினால் உயிர்ப்பலியும், பொருட் சேதமும் தவிர்க்கப் படலாம் என்றாள்.
இருவரும் தங்களுக்குத் தெரிந்த அரசியலை வைத்துக் கொண்டு வாதம் செய்தனர்.
குண்டு வீச்சிற்கு இறையான தம் பெற்றோரைப் பற்றிய கவலையைச் சிஞ் சு சிறிது மறந்திருந்தாள்.
இந்தியாவும், பிற நாடுகளும் சுதந்திரம் அடைய வேண்டும். என்பதில் மட்டும் இருவருக்கும் கருத்தொற்றுமை இருந்தது.
சீனப் பெண் ஒருத்திக்கு இந்தியா விடுதலை அடைய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதை நினைக்கும்பொழுது முத்துவின் மனம் இனித்தது. நெருங்கிப் பழகினான். அவளும் நெருங்கினாள்.
ஒருபக்கம் தீ பற்றி எரிந்தது; எண்ணெய்க் கிடங்குகளில்!
தலைக்கு மேல் உள்ள குண்டு எந்த நேரத்தில் எந்தெந்த உயிரைக் குடிக்குமோ என்று யாருக்கும் தெரியாத அந்த நிலையில் இளம் உள்ளங்களில் காதல் மலர்ந்தது.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தாய் தந்தையராக இருந்து அவர்களின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர்.
அங்குள்ள மாரியம்மன் கோவிலில் முத்துவிற்கும் சிஞ் சுவுக்கும் திருமணம் நடந்து கொண்டிருந்தது.
ஐயர், “கெட்டி மேளம் கெட்டி மேளம்” என்றார். உடனே அபாயச் சங்கு “ஊ…” என்று ஊளையிட்டது. அட்சதை தூவக்கூட அங்கு ஆள் இல்லை. திருமணத்திற்கு வந்திருந்த கொஞ்சப் பேரும் விழுந்தடித்து ஆளுக்கொரு பக்கமாக ஓடினர். பள்ளம் படுகுழி என்று பார்க்காமல் மறைந்து கொண்டனர்.
அவசர அவசரமாகத் தாலி கட்டிய முத்து தன் மனைவியை இழுத்துக் கொண்டு ஓடினான்.
கெட்டி மேளத்திற்குப் பதில் குண்டு முழங்கியது. வாழ்த்தொலிக்குப் பகரமாக அழுகுரலும், அபயக்குரலும் ஒலித்தன. பிணக் குவியல்! எங்கும் செந்தீ!
அந்தச் செய்தி அடங்குவதற்குள்ளாகவே அன்று மாலை இந்தியர்களின் நெஞ்சங்களில் ‘ஈரோசிமா’ வில் விழுந்த அணுகுண்டு விழுந்து விட்டது.
முத்து வாய்விட்டு “ஓ!” வென்று அழுதான்.
அவன் தந்தை இறந்த செய்தி அறிந்துகூட அவன் அப்படித் துயருற்று அழவில்லை.
சிஞ் சுவும் அதில் சரிபாதி பங்கு கொண்டாள்.
இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கு வெளிநாடுகளிலிருந்து போர் முரசு கொட்டிய வங்கத்துச் சிங்கம் சென்ற விமானம் விழுந்துவிட்ட செய்தி கேட்டுத்தான் இந்தியர்கள் துடித்தனர்.
அதன்பின் ‘ஐ என் ஏ’ வீழ்ச்சிக்கு மேல் வீழ்ச்சி கண்டது! சோணந்தோ, என்னும் பெயர் மீண்டும் சிங்கப்பூர் என்று மாறியது!
குண்டுகளை இடுப்பில் கட்டிக் கொண்டு விமானத்திலிருந்து “குயின்ஸ் மேரி” எனும் கப்பலில் குதித்தவர் பெயரை ஜப்பானியர்கள் சிங்கப்பூருக்குச் சூட்டியிருந்தனர்.
இந்தியா விடுதலை பெற்றுப் பல ஆண்டுகள் ஆகியும். முத்துவின் பாதங்கள் தாயக மண்ணில் படவில்லை.
சுதந்திரத் தந்தையைப் பாரதம் இழந்துவிட்டதால் ஏன் போகவேண்டும் என்று அவன் இருந்துவிடவுமில்லை, மனைவி, மக்களின் அன்பு எனும் எனும் பாச அறையில் அடைபட்டுக் கிடந்தான்; குடும்பச் செலவுக்கே வருவாய் சரியாக இருந்தது.
தமிழகத்தில் உள்ள தாய்க்குச் சிறுதொகை அனுப்புவதே பெரும்பாடாக இருந்தது.
இந்த நிலையிலும், “இந்திய மண்ணின் மணத்தை நுகர வேண்டும், அன்புத் தாய் முகத்தைப் பார்க்க வேண்டும்!” என்று சிஞ் சுவிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டுதான் இருந்தான்.
அவள் ஒரு வீட்டில் துணி துவைக்கும் வருவாயில் சிரமப் பட்டுச் சிறிது சேர்த்து வைத்திருந்தாள்.
இன்றோ நாளையோ என்று கிடக்கும் மாமியாரைப் பார்க்கக் குடும்பத்தோடு போக முடியவில்லை என்றாலும் கணவன் போய்ப் பார்த்துவிட்டு வரட்டும் என்று சிஞ் சு முத்துவின் பயணத்திற்கு ஏற்பாடும் செய்திருந்தாள்.
தன் உழைப்பால் சேர்த்த பணத்தில் முத்துவிற்கு டிக்கெட் எடுத்துக்கொடுப்பதில் அவளுக்கு ஒரே மகிழ்ச்சி!
ஆனால், பிரிவை மட்டும் அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அதை நினைக்கும்போதுதான் அவள் முகம் வாடியது; கூந்தலை உலர்த்திக்கொண்டு கவலையோடு நின்றாள்.
“உன் கணவர், பெற்ற தாயைத்தானே பார்க்கப் போகிறார்; போய்ப் பார்த்துவிட்டுவரட்டுமே! நீ ஏன் கவலைப் படுகிறாய்?” என்றாள் சியோக் குவா,
“எப்படி கவலைப்படாமல் இருக்க முடியும்?” சிஞ் சு.
“என்னை உங்கள் மனைவியென்று சொல்லுங்கள் என்று நீ முத்துவிடம் சொன்னாயே அதைப்போல் எவளாகிலும் சொல்லிவிடுவாள் எனப் பயப்படுகிறாயா?” – சியோக் குவா சிரித்தபடி சொல்லிவிட்டு ‘லக்சா மீ’ கேட்டு வந்தவர்க்கு மீ கொடுத்தாள்.
சிஞ் சுவும் சிரித்துவிட்டாள்.
ஆனால் அவள் மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
முத்து கவலை தோய்ந்த முகத்தோடு வருவதைப் பார்த்ததுமே அவள் முகத்தில் இருள் பரவியது.
அருகில் வந்ததும், “என்ன நடந்தது?” என்று சிஞ் சு பதறிப் போய் கேட்டாள்.
காரணத்தைச் சொல்ல முத்துவின் நா எழவில்லை. தான் பிறந்த மண்ணில் இருந்து வந்திருந்த தந்தியைச் சிஞ் சுவிடம் கொடுத்தான்.
– தூண்டில் மீன், முதல் பதிப்பு: சூலை 2001, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
![]() |
1938இல் சிங்கப்பூரில் பிறந்தார். இவருடைய தாயார் சிங்கப்பூரில் பிறந்தவர். தந்தை தமிழ் நாட்டில் பிறந்தவர். கலைமகள் தொடக்கப் பள்ளியில் கல்வியைத் தொடங்கிய இவர் இண்டர்மீடியட் வரை படித்தார். பின்னர் தகவல் கலை அமைச்சில் தமிழ்ச் தட்டச்சராக அரசுப் பணியில் சேர்ந்து 30 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஓய்வு பெற்றார். இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் பாலகிருட்டிணன். பரிதிமாற்கலைஞர் (சூரியநாராயண சாஸ்திரி) மறைமலையடிகளைப் பின்பற்றி இளங்கண்ணன் என்று பெயரை தமிழ்ப் படுத்தி…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
1 நிமிட கதைகள் 2
ராமன் செல்வராஜ்
October 24, 2026
நீ இல்லாத உலகத்திலே….!
வளர்கவி
October 21, 2026
அஞ்சல் நிலைய அதிகாரி
பூ.சோமசுந்தரம்
October 21, 2026
