உசத்தியான புட்டுவம்
கதையாசிரியர்: டி.ஜெனார்த்தனன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 11, 2025
பார்வையிட்டோர்: 161
(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வாகனத்தின் ரயரில் அகப்பட்டு, பின்னங்கால்கள் இரண்டும் நசிபட்டுச் சப்பையாகி, அறுந்தும், அறுபடாத நிலையில் தோற்புரையில் றப்பராய் இழுபடுகின்ற கால்களோடு அவலப்பட்டு நகர்கின்ற தவளையைப்போல்…. பறாட்டா அவலப்பட்டான். முழங்காலோடு தனது இரண்டு கால்களையும் இழந்தவன் பறாட்டா.
மழையில் நனைந்து சகதியாகிவிட்ட நிலத்தில், உழுந்து வடையளவு பருமனான அவனது வண்டிற் சில்லுகள், உருளமறுக்கின்றன. பறாட்டா மிகவும் ஓர்மமானவன். வண்டிற் சில்லுகளை நகர்த்திவிட கடைசிவரை முயற்சி செய்து, தோற்றுப் போய்… வண்டிலால் இறங்கி, கால்வைக்கவே அருவருப்பான அந்த நிலத்தில் தவ்விதவ்வி நகர்ந்து மண்டபத்தின் படிக்கட்டுவரை எப்படியோ வந்துவிட்டான், இரண்டு படிக்கட்டு களைத்தாண்டினால் மண்டபத்துள் வந்து விடலாம்…. ஒரு கையில் சோற்றுப்பார்சல், அதை மார்போடணைத்து மழையில் நனையாதவாறு வைத்திருக்கின்றான். அதையும் அவனால் விடமுடியவில்லை…. ஒருகையின் உதவியோடு படிக்கட்டிலும் ஏறமுடியவில்லை.
மழையும் ஓய்வாக இல்லை… ஈச்சம்பழமளவு அடர்த்தியான துளிகள்… பாவம் பறாட்டா முழுமையாக நனைந்துவிட்டான். மண்டபத்துள் மழைக்காக ஒதுங்கி நிற்பவர்களைப் பரிதாபமாகப் பார்க்கின்றான். யாரவது வந்து எனக்கு உதவி செய்யுங்களென்று அவனது பார்வைக் கோடுகள் யாசிக்கின்றன! பெண்களும் ஆண்களுமாக இருபத்துக்கும் அதிகமானோர் அங்கு நிற்கின்றனர். அவர்களில் ஒருவராவது அவனுக்கு உதவ முன்வரவில்லை.
பறாட்டா சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒரு பிச்சைக்காரன். அங்கு நிற்பவர்களில் பெரும்பாலானவர்கள் பறாட்டாவின் இனத்தைச் சார்ந்தவர்கள்…!
பறாட்டா மீண்டும், மீண்டும் அவர்களைப் பார்க்கின்றான்… பார்வைக்கோடுகள் யாசிக்கின்றன… அவனது யாசகப்பார்வையை அங்கு நிற்போர் உணராமலுமில்லை… ஆனால் உணர்ந்தும் உணராதவர்களாக அவர்கள் நிற்கின்றனர்.!
அந்த மண்டபத்தின் இடதுபக்கமாக அமைந்திருந்த மேல் வீட்டுக்குச் செல்லும் படிக்கட்டில் அமர்ந்திருந்த கிருட்டி ஓடிப்போய் பறாட்டாவைத் தூக்குகின்றான். கிருட்டி மெலிந்த உள்வளைந்த மிகவும் பலவீனமான உடலமைப்பைக் கொண்டவன். எப்படியோ முக்கித்தக்கி பறாட்டாவைத் தூக்கி மண்டபத்துள் இருத்தி விட்டு, அவனது வண்டிலையும் தூக்கி உள்ளே வைக்கிறான்.
கிருட்டி…. இவனும் பிச்சைக்காரன். தமிழன்
இனத்தால் வேறுபட்டு, தொழிலால் ஒன்றுபட்ட இரண்டு மனித உணர்வுகளின் சங்கமம். அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பால் துடிக்கின்ற ஓர் உறவின் விளைவு!
கிருட்டியும் ஓரளவு நனைந்துவிட்டான்.
முழுமையாக நனைந்து, மார்போடு சோற்றுப் பார்சலை அணைத்தபடி இருந்த பறாட்டாவிடமிருந்து, சோற்றுப்பார்சலை வாங்கிய கிருட்டி அதைப் பாதுகாப்பான ஓரிடத்தில் வைக்கின்றான். ஒரு பிடி சோற்றுக்காக கைநீட்டுகின்ற அவர்களுக்கு சோற்றுப் பார்சலின் அருமை புரியாமல் போகுமா?
பறாட்டாவின் உடலால் நீர்வடிகின்றது. அவனது உடலை எப்படித்துடைப்பது?… பேப்பர் துண்டுகூட இல்லை!… கோவணத்தோடு படுத்திருப்பவனால் இழுத்துப் போக்க முடியுமா?…
கிருட்டியிடம் மேலதிகமாக ஒரு பழைய துவாய் ஒன்றுண்டு. படுக்கும் போது நிலத்தைக் கூட்டும் தும்புக்கட்டாகவும், படுக்கும் போது பெட்சீட்டாகவும், குளிக்கும்போது மாற்றுடுப்பாகவும்… இப்படிப் பல வடிவங்கள் கொண்ட துவாய்… அந்தத் துவாயை எடுத்துவந்த கிருட்டி, பெற்றவள் பிள்ளைக்குத் தலை துவட்டுவது போல்… பறாட்டா தலை குனிந்திருக்க… கிருட்டி அவனது தலையைத் துவட்டுகிறான்.
கால்முறிந்த தவளைபோன்ற பறாட்டா தலைகுனிந்திருப்பதும், மெலிந்து உள்வளைந்த கிருட்டி குனிந்துநின்று தலை துவட்டுவதும்…. அந்தக்காட்சி…
பஞ்சப்பட்ட பாத்திரங்கள்…
பஞ்சப்படாத உணர்வுகள்…
பஞ்சப்பட்ட இதயங்கள்… மனிதத்தின் குடிநிலங்களா?..
அங்கு நின்றவர்களின் பார்வையில் ஏதோ ஒருவித உணர்வு கசிவதை அவர்களது முகங்கள் பிரதிபலிக்கின்றன!
தலைதுவட்டும் வரை தலைகுனிந்திருந்த பறாட்டா தலைதுவட்டி முடிந்ததும், தலையை நிமிர்த்தி, முன்னோக்கிப்படிந்திருந்த தலைமயிரை கைவிரல்களால் கோதி, பின்நகர்த்தி விட்டு, கிருட்டியைப் பார்க்கின்றான். அந்தப் பார்வையில் கனிவோடு, நன்றியுணர்வும் கலந்திருக்கின்றது.
கிருட்டியின் முகத்தில்…? கனிவுமற்ற, கடுமையுமற்ற ஒருவித உணர்வு பளிச்சிடுகின்றது. பறாட்டாவின் மனதில் கசிந்த நன்றியுணர்வு எரிந்து, அவனது மனத்தில் ஒரு கேள்விக்குறி ஜனனிக்கின்றது…!
கிருட்டி சிங்கள இனத்தை வெறுக்கிறான்…! அந்த அடிப்படை யில்தான் பறாட்டாவின் நன்றியையும் உதாசீனப்படுத்துகிறான்.
பறாட்டா மழையில் நனைந்து அவலப்பட்டபோது, அவனுக்குக் கிருட்டி செய்த உதவிகள்…? அதையும் கிருட்டியால் விளங்கிக் கொள்ளமுடியவில்லை…. அனைத்தையும் மேவிய ஒரு உணர்வு…?
கிருட்டியும், பறாட்டாவும் தொழிலால் ஒன்றுபட்டவர்களே தவிர அவர்களிடம் வேறெந்த தொடர்புகளும் இருக்கவில்லை. இருவரும் பல தடவைகள் சந்தித்திருக்கின்றனர். ஆளையாள் ஓரளவு புரிந்துவைத்தி ருக்கின்றனர்….! ஒருநாள்கூட இருவரும் பேசியதில்லை… அவ்வளவுதான்!
கிருட்டி தனது கையில்கிடந்த துவாயை முறுக்கி, உதறி தோளில் போட்டுக்கொண்டு, பறாட்டாவிடமிருந்து எந்தப் பதிலையும் எதிர்பாராமல் திரும்பவும் அந்தப் படிக்கட்டில் வந்தமர்கிறான்.
கிருட்டியின் செயல், பறாட்டாவின் மனதை அரிக்கின்றது… சகோதரனாக நின்று உதவியவன்… அடுத்த விநாடி ஒட்டுறவற்ற ஒரு அன்னிய மனிதனின் பார்வையும், நடைமுறையும்!
பறாட்டாவால் கிருட்டியை அன்னியப்படுத்த முடியவில்லை. மௌனமாக இருக்கின்றான்.
பறாட்டா.
இவனது உண்மைப் பெயர் லியனகே. பாணந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவன். ‘பறாட்டா’ என்ற பட்டப் பெயர் யாரால் வைக்கப்பட்டது. ஏன் வைக்கப்பட்டது. என்பன போன்ற விபரங்கள் அவன் மனத்தளத்தில் இல்லை! அவனைப் பொறுத்தவரை லியனகே என்றொரு வாலிபன் ‘கோமா’ நிலையில் இன்னும் அவனது இதயத்துள் கிடக்கின்றான் ‘பறாட்டா’ என்றொரு பரதேசி வாழ்ந்து கொண்டிருக்கின்றான்…
லியனகே பாணந்துறையில் ‘இராசநடை’ நடந்தவன்.. அதே லியனகே இன்று பறாட்டாவாகி… தவளைபோல் தத்துகின்றான்.
லியனகே பாணந்துறையில் மிகப்பிரபல்யமானவன். அவனது நாற்பத்தைந்தாவது வயதுவரை கெம்பீரமாகவே நடந்தான். கருமையிலும், விஷேசமான கருமைநிறம், உருண்டைத்தலை, கட்டையாக வெட்டப்படட தலைமயிர், கம்பளி மயிர்க்கொட்டி போன்ற தடித்தமீசை, அதேபோன்று தடித்தபுருவங்கள், சிறியதொரு தாடி, கழுத்தில் ‘சிறியமட்டத் தெகிள்’ அளவிலானதொரு வெள்ளிச் சங்கிலி, ஜீன்ஸ், ரீசேட்…. ஐவானைப்போல் இருப்பான்.
தேசியத்தேரின் வடக்கயிற்றைப் பிடித்திருக்கும் பெரியமனிதர்களின் மெய்ப்பாதுகாவலன்… ‘பொடிக்காட்’… இதுதான் லியனகேயின் பதவி! ஏறத்தாழ பதினைந்து வருஷங்கள் இதே பதவியில் இருந்தவன்.
தேர்தல் வரும்… தேர்தலோடு தெய்வமும் மாறும்.. ஆனால் லியனகே புதிய தெய்வத்தோடு எப்படியோ ஒட்டிக்கொள்வான்.
லியனகேயிடம் ஒரு தனிச்சிறப்புண்டு, தனது தாய் மொழியில் ஒரு எழுத்துக்கூட அவனால் வாசிக்கவோ, எழுதவோ தெரியாது. ஆனால், சிங்களத்தோடு, ஆங்கிலத்தையும், தமிழையும் போதுமானளவு பேசுவான்.
இவனது முப்பதாவது வயதில் திருமணம் என்றறொரு சம்பவம் நடந்து ஒருத்தி மனைவியாக வந்தாள். ஆறுமாதங்களின் பின்பு மனைவியாக வந்த அந்தப்பெண் இன்னொருவனோடு ஓடிப்போய் விட்டாள். அவனது இல்லற வாழ்க்கை வரலாற்றில் முகவுரையும், முடிவுரையும் மட்டுமே இருந்தது!
பத்து வருடங்களுக்கு முன்பு… ஒருநாள் இரவு… முகந் தெரியாதவர்களால் இவனது கால்கள் இரண்டும் முழங்காலோடு தறிக்கப்பட்டன!… இந்தச் சம்பவத்தை ஒட்டி பல விடயங்கள் பேசப்பட்டன… ‘பகவானின் தீர்ப்பு’இப்படியும் பேசப்பட்டது!
இராசநடை நடந்த லியனகே… இப்போது பறாட்டாவாகித் தத்துகிறான்!
வெட்டி எறியப்பட்ட வாழக்குலைத் தண்டு வெயிலில் வதங்கிக் கறுத்து சுருங்கியிருப்பதுபோல்… வெட்டப்பட்ட அவனது கால்களின் முனைகள் கறுத்துச் சுருங்கி… மிகவும் அசிங்கமாகி… அந்த அருவெருப்பை மறைக்க இரண்டு கால்மேசுகளை அந்தக் கால் முனைகளில் கொழுவியிருந்தான். அவைகளும் இப்போது மழையில் நனைந்துவிட்டன!
இரண்டடி நீள அகலமானதொரு தடித்தபலகை, அந்தப் பலகையின் நான்கு மூலைகளிலும், வடையளவு பருமனிலான நான்கு சில்லுகள் பொருத்தப்பட்டு, வண்டிலாக்கப்பட்டுள்ளது. கால்களுக்குப் போடுகின்ற இரண்டு பாட்டா செருப்புகளை கைவிரல்களுக்கிடையில், கொழுவி, கைகளை நிலத்திலூன்றி உன்னி உன்னி வண்டிலை நகர்த்துவான்.
துவாரங்களுக்குள் மறைந்திருக்கும் தவளைகள் மழை காலத்தில் வெளியே வந்து, பின்னங்கால்கள் இரண்டையும் மடித்து முன்னங்கால்கள் இரண்டையும் நிமிர்த்தி, நிமிர்ந்திருப்பபோல்… அந்த வண்டியில் பறாட்டா இருப்பான்.
மரணத்திற்குப் பயந்து, வாழ்க்கை முழுவதும் அவலப்பட்டு… இறுதியில்… அந்த மரணக்குளிக்குள்ளேயே அழிந்துபோகும் மனிதர்கள்!
பறாட்டாவின் வாழ்க்கை…?
நீண்டுபோயிருக்கும் காலிவீதியில், ஸ்ரேசன் றோட்டும், கில் றோட்டும் சந்திக்கும் நாற்சந்தி -‘தெகிவளைச்சந்தி’ இந்தச் சந்தியில் பாதசாரிகள் வீதியைக் கடப்பதற்காகப்போடப்பட்டிருக்கும் மஞ்சள் கோடுகள். இந்த மஞ்சள் கோட்டிற்கும், பூக்கடைக்கும் இடையில் பறாட்டாவைத் தினசரி காணலாம்.
இன்று பிற்பகல் ஐந்து மணியளவில் வானங்கறுத்து, குளிர்காற்று வீசியபோது, மழைவரும் என்பதை ஊகித்துக் கொண்ட பறாட்டா சிறுகச் சிறுக நகர்ந்து இந்த மண்டபத்தை நோக்கி வந்துகொண்டிருந்தான். மண்டபத்தை அடைய முன் மழை வந்து நனைத்துவிட்டது.
கிருட்டி இல்லாவிட்டால் பறாட்டா எவ்வளவோ கஷ்டப் பட்டிருப்பான்.
பறாட்டா அதே இடத்தில் ஈரக்களிசானுடன் இருக்கின்றான். ஈரமாகிவிட்ட களிசான்.. குளிர்… குண்டித்தசைகள் விறைக்கின்றன… நகர்ந்து, நகர்ந்து இடத்தை மாற்றிப் பார்க்கின்றான்… நத்தை நகர்கின்றபோது, அது நகர்ந்த பாதையில் ஒருவித நீர்ப்பதார்த்தம் வழிந்திருப்பதுபோல், பறாட்டா நகர்ந்த இடமெல்லாம் நீராகி… நிலம் தெப்பலாகி… அந்தத் தெப்பலுக்குள் அவன் இருக்கின்றான். பறாட்டாவால் எதுவும் செய்யமுடியவில்லை.
படிக்கட்டிலிருந்து கிருட்டி தலையைத் திருப்பி, பார்க்காதது போல, பறாட்டாவைப் பார்க்கின்றான்…
தானாடாவிட்டாலும், தசை ஆடும் என்பார்கள்…!
நீர் படர்ந்த தெம்பலாகிவிட்ட நிலத்தில் பறாட்டா குறாவிப் போய் இருப்பது… கிருட்டியின் மனத்தில் இலேசான உளைச்சலை ஏற்படுத்துகின்றது.
இனி எந்த உதவியும் செய்வதில்லை என்ற மன வைராக்கியத்தோடு முகத்தைத் திருப்பிக் கொள்கிறான் கிருட்டி!
மரத்தைச் சுற்றிவரவுள்ள மண்ணை அகழ்ந்தெடுத்து, ஆணிவேரின் முனையிலுள்ள வேர்முடியோடு மரத்தைப் பிடிங்கி எறிவது போல்…. கிருட்டியின் குடும்பத்தை ஆணிவேரோடு பிடிங்கி எறிந்தது சிங்களவர்கள்தான் என்பது கிருட்டியின் முடிவு!… அதனால்த்தான் சிங்கள இனத்தையே அவன் வெறுக்கின்றான்.
அதனால்தான் கிருட்டி பறாட்டாவையும் வெறுக்கிறான்.
கிருட்டி ஒரு அப்பாவி… சிந்தனைப் பலமற்றவன்.
திருகோணமலையில் சிவன்கோவிலடியைச் சேர்ந்தவன் கிருட்டி. சிவன்கோயிலடி ஆயுள்வேத வைத்தியர் சுந்தரம் அவர்களின் நிரந்தர ஊழியன் கிருட்டி வைத்தியருக்குச் சொந்தமானதொரு வீட்டில்தான் கிருட்டி. குடும்பத்தோடு தங்கியிருந்தான். மூலிகைகள் பிடுங்குவது, வறுப்பது, அரைத்துக் குளிகையாக்குவது, எண்ணைய் காய்ச்சுவது, வைத்தியரின் வீட்டுவேலைகள் செய்வது… இவ்வளவுதான் அவனுக்குத் தெரியும்.
இவனது பதினைந்தவாது வயதில், இவனைப் பெற்றவன் இங்குகொண்டு வந்து சேர்த்தான்… திருமணமாகி, ஒரு பிள்ளைக்குத் தகப்பனாகி… இன்னும் அதே வைத்தியசாலைதான்…
அப்போது கிருட்டியின் மகனுக்குப் பதின்மூன்று வயது… எருக்கலந்த மண்ணில், கோதுவெடித்து, மண்ணைத் துளைத்து நிமிர்ந்து நிற்கும் குருத்துப்போல் அவனது மகன் வறுமையிலும் செம்மையாக மதாளித்து நின்றான்… படிப்பில் சூரன்!
இனக்கலவரம்… திருகோணமலை அரசியல் வரலாற்றில் அடிக்கடி காணப்படும் சம்பவம்..!..?
மீன்வெட்டும் கத்திகளினால் மனித உடல்கள் வெட்டிப் பிளக்கப்பட்டன!… எங்கும் அக்கினிச்சுவாலை…!
இக்கலவரத்தில்… கிருட்டியின் மனைவியும், மகனும் பலியாகினர்!
சுந்தரம் வைத்தியரின் வைத்தியசாலை சாம்பல்மேடையானது… எப்படியோ அவர்கள் உயிர்தப்பி கொழும்புக்கு வந்தனர். அவர்களோடு கிருட்டியும் வந்தான். சில மாதங்களின் பின்பு சுந்தரம் குடும்பத்தினர் வெளிநாடு சென்று விட… கிருட்டி தனிமையானான்.
முற்சை அறுந்த பட்டம், வானத்தில் சுழன்றடித்து… நிலத்தைக் குத்தி முறிவதுபோல்… கிருட்டியின் அரைகுறை வாழ்க்கையும் முறிந்தது!
கொழும்பில் தண்ணீர்கூட இலவசமாக இல்லையே!… கண்ணீர்தான் விடமுடிந்தது! வயிறு… அதன் ஊமைக்குரல்… அவனுக்கு மட்டுந்தான் கேட்கும்… வயிறு சுருங்கச் சுருங்க… கைகள் நீண்டன… பிச்சை… அதுவே தொழிலாகிவிட்டது.
தனது குடும்பத்தை அழித்து, தன்னை நடுத்தெருவில் பிச்சைக்காரனாக நிறுத்தியது சிங்கள இனந்தான் என்பது கிருட்டியின் முடிவு… அதனால்தான் பறாட்டாவோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள அவன் மறுக்கின்றான்.
பறாட்டா ஈரமான களிசானோடு இருப்பது கிருட்டிக்கு உள்ளூர ஒரு மாதிரியாக இருக்கின்றது. படிக்கட்டில் இருந்த கிருட்டி தலையைத் திருப்பிப் பறாட்டாவைப் பார்க்கின்றான்… பறட்டா கிருட்டியைப் பார்த்தபடியே இருக்கின்றான்… பரிதாபமான பார்வை…
ஆறரை மணியைத் தாண்டிய நேரம்… மழை குறைந்ததைத் தொடர்ந்து அங்கு நின்றவர்கள் கலைய ஆரம்பிக்கின் றனர்.
சில வினாடிகள் பறாட்டாவைத் பார்த்துக் கொண்டிருந்த கிருட்டி, எழும்பி வந்து, பறாட்டாவைத் தூக்கி, களிசானை களட்டி, தன்னிடமிருந்த துவாயைப் பறாட்டாவுக்கு உடுத்தி காய்ந்த நிலத்தில் இருத்துகிறான்.
துவாயும், ஈரந்தான்… உடற்சூட்டில் காயக்கூடிய ஈரம். திரும்பவும் வந்து படிக்கட்டில் அமர்ந்து கொண்டு முகத்தைத் திருப்பிக்கொள்கிறான் கிருட்டி…
கல்லுக்குள் ஈரம் என்பார்களே… அதுதானா?…
இரண்டாவது தடவை கிருட்டி உதவி செய்தபோதும் பறாட்டா அவனது முகத்தை அவதானிக்கத் தவறவில்லை. பறாட்டா பழுத்த அனுபவசாலி… கிருட்டியின் வெறுப்புணர்வை பறாட்டாவின் மனம் ஒட்டுத்தாளாகி ஒட்டிக் கொள்கிறது.. காரணத்தை மட்டும் அவனால் புரிந்து கொள்ளமுடியவில்லை… கிருட்டியின் செயல் குண்டூசியாய் பறாட்டாவின் இதயத்தைக் குத்துகின்றது..!
பறாட்டா கைகள் இரண்டையும் பின்புறமாக ஊன்றி தவ்வித் தவ்வி கிருட்டிக்கருகே வருகின்றான். அவனது மடியில் சோற்றுப் பார்சல் கிடக்கின்றது.
“ஒன்ரை பேரு என்னா…” பறாட்டா தமிழிலேயே கேட்கிறான்
“கிருட்டி….”
“வா சாப்பிட்டுக்கலாம்”
கிருட்டி மறுத்தும், பறாட்டா விடவில்லை… பறாட்டா சாப்பாட்டுப் பார்சலைப் பிரித்து, அதே தாளில் உணவை இரண்டாகப் பங்கிட்டு… கிருட்டியைச் சாப்பிடவைக்கின்றான்.
ஒரு பார்சல் சோற்றை, ஒரே தாளில் இருவரும் சாப்பிடுகின்றனர். என்னைய ஒனக்குப் பிடிக்கலியா” சாப்பிட்டபடி பறாட்டா கேட்கிறான்.
“உங்கடை ஆக்களை எனக்குப் பிடிக்கிறதில்லை” கிருட்டி அப்பாவித்தனமானவன் நேரடியாகவே கூறிவிடுகிறான்
“ஏன்” பறாட்டாவின் முகத்தில் பெரும் கேள்விக்குறி!
தலை குனிந்திருந்த கிருட்டி சில விநாடிகளின் பின் தலையை நிமிர்த்திப் பறாட்டாவைப் பார்க்கின்றான். அவனது கண்களில் சோகம் படர்ந்திருப்பதையும், வேதனையில் அவனது உதடுகள் துடிப்பதையும் பறாட்டா அவதானிக்கின்றான்.
தனது மனைவிக்கும், மகனுக்கும் ஏற்பட்ட அவல மரணத்தையும், தனக்கு ஏற்பட்ட நிர்க்கதி நிலைபற்றியும் விக்கி விக்கிக் கூறி முடிக்கின்றான் கிருட்டி.
பறாட்டா எதுவுமே பேசவில்லை. ஆனால் அவனது மனச் சக்கரம் மிக வேகமாகச் சுழல்வதை அவனது முகம் பிரதிபலிக்கின்றது.
இருவரும் சாப்பிட்டுமுடிந்து அதே சீமந்து நிலத்தில் அருகருகே படுத்துக் கொள்கின்றனர்.
இருவராலும் தூங்கமுடியவில்லை. பேசிக்கொள்ளவுமில்லை நடுச்சாமம் தாண்டி… மூன்றுமணியிருக்கும்…
பறாட்டா எழும்பி அமர்கிறான்… சில விநாடிகளின் பின் இருட்டியும் எழும்பி அமர்கிறான்.
‘கிருட்டி…’ தேவாலயத்துள் பாதிரியாரின் செபஓசையில் தொனிக்கின்ற உணர்வு பறாட்டாவின் அழைப்பில் தொனிக்கிறது.
“என்ன…”
”நம்ம பெரிய மனிசங்களைப் பத்தி எனக்கு மிச்சம் தெரியும். பதினைஞ்சு வருஷமா அவங்களுக்கு ‘பொடிக்காட்டா’ இருந்து மிச்சம் பழகியிருக்கேன்…
ஒனக்கு ஏற்பட்டுக்கிட்ட துன்பத்துக்கெல்லாம் நம்ம ஆளுங் கதான் காரணமெண்ணு… நீ கோபப்பட்டுக்கிறதிலை தப்பில்லை..
நம்ம ஆளுங்க ஆக்களுக்கு மிச்சம் கெடுதி செஞ்சிருக் கிறானுங்க… இந்தப் பெரிய மனிசனுங்க இருக்கிறாங்களே…
இவனுகளெல்லாம் ஒரு வீடிக்கட்டிலை இருக்கிற வீடியள் மாதிரி… மிச்சம் வித்தியாசம் இருந்துக்காது…
“….தாம… உசத்தியான புட்டுவத்திலை குந்திக்கிறதுக்காக நம்ம மனிசனுங்களை துருப்புச் சீட்டா பாவிச்சுக்கிறானுங்க” பறாட்டாவின் அனுபவக்குரல்… தனித்துவமாய் ஒலிக்கின்றது.
கிருட்டி மௌனமாக இருக்கின்றான்!
(பரிசுச் சான்றிதழ் பெறும் சிறுகதை)
யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்ட இருபதுவயது நிரம்பிய டி. ஜெனார்த்தனனிடம் சிறுவயதிலிருந்தே வாசிப்பும் பழக்கத்தையும் இலக்கிய ஆர்வத்தையும் காண முடிந்தது. கல்விப்புலம் சார்ந்த குடும்பப்பின்னணியில் வாழ்ந்த இவர் எழுதவேண்டுமென்ற உத்வேகத்தை நாட்டுப் பிரச்சனை ஏற்படுத்தியது. போர்ச் சூழலில் வாழ்ந்து அனுபவித்த நிகழ்வுகளைக் கருப்பொருளாக வைத்து எழுத ஆரம்பித்துள்ள டி. ஜெனார்த்தனன் தனது உள்ளக் குமுறல்களை ஆக்கங்கள் மூலம் வெளிக்கொணர்ந் துள்ளார். சமுதாயப் பிரச்சினைபற்றி ஆழமாகச் சிந்தித்து அல்லல்பட்ட மக்களின் அவலங்களை, அனுபவித்த கொடுமைகளை படைப்புகளின் அடிநாதமாகக் கொண்டு எழுதிவருகின்றார். வருங்காலத்தில் எழுத்துத்துறையில் சாதனை படைக்கவேண்டும் என்ற துடிப்புடன் இருந்து குறிக்கோளுடன் செயற்பட்டும் வருகின்றார்.
– கொக்கிளாய் மாமி (சிறுகதைகள்), தொகுப்பாசிரியர்: தி.ஞானசேகரன், முதற்பதிப்பு: செப்டெம்பர் 2005, ஞானம் பதிப்பகம், கொழும்பு.