இலட்சியங்களின் ஊனங்கள்
கதையாசிரியர்: சிங்கை மா.இளங்கண்ணன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 16, 2026
பார்வையிட்டோர்: 65
(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தலைமுடியும், தாடியும் வெள்ளைக்கொடி காட்டி விட்டிருந்தன. பார்வையும் மங்கிவிட்டிருந்தது.
இரண்டாம் உலகப்போரின்போது இடக்காலை இழந்துவிட்டிருந்த பிச்சைமுத்துக் கிழவர் சக்கரநாற்காலியைத் தள்ளிக்கொண்டு சென்றார்.
நேற்று வரவில்லையே! இன்றும் வரக்காணோமே! காரணம் என்னவாக இருக்கும்? என்று அவள் நினைவாகவே சென்றவர் நாற்காலியின் சக்கரத்தைப் பிடித்து நிறுத்தினார். நாற்காலியில் சாத்திவைத்திருந்த ஊன்றுகோலை எடுத்து ஊன்றிக் கொண்டும் இடக்கையால் நாற்காலியைப் பற்றிக்கொண்டும் வலக்காலை எடுத்துவைத்து இறங்கினார்.
போருக்குப் பின் அவர் நிலையே மாறிவிட்டிருந்தது.
அதற்குப் பிறகு அவர் வாழ்க்கையையே வெறுத்து விட்டிருந்தார். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கு ஒப்பத் தமிழகத்தில் இருந்து கடல் கடந்து வந்த அவர் உள்ளத்தில் சுதந்திர உணர்ச்சி கொழுந்துவிட்டு எரிந்தது. நேதாஜி சுபாசந்திரபோஸ் திரட்டிய போர்ப்படையில் சேர்ந்து போருக்குச் சென்றார். இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காகப் போர்க்களத்தில் இடக்காலையே காணிக்கையாக்கினார்.
போர் முடிந்தது.
காலை இழந்த பிச்சை முத்துக்கிழவர் மனமுடைந்தார். தமிழகத்திற்குத் திரும்பிப் போக மனம் இல்லாமல் இங்கேயே தங்கிவிட்டிருந்தார்.
திருமணம் செய்துகொண்டு வாழ வேண்டும் என்ற ஆசையும் அவரைவிட்டுப் போய்விட்டிருந்தது.
வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இல்லாமல் தன் காலத்தை ஒட்டிக்கொண்டிருந்தார்.
இந்தியாவும் சுதந்திரம் அடைந்தது.
அதை நினைக்க நினைக்க நெஞ்சம் குளிர்ந்தது..
சுதந்திர இந்தியாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவர் மனத்தில் எழுந்தது. எப்படிப் போவது? ஒரு காலை இழந்த நிலையில் உறவினர்களை எப்படிப் பார்ப்பது? என்ன வேலை செய்து சம்பாதிப்பது? என்று நினைக்கும் போது மனம் தளர்ந்தது. இடையில் எழுந்த அந்த ஆசையும் அடங்கி ஒடுங்கியது.
இறுதியில் ஐந்தடி மூலையில் முடங்கிக் கிடப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று அந்த இடத்திலேயே இருந்துவிட்டார். அந்த மூலையே அவருக்கு உறைவிடமாகிவிட்டிருந்தது. முப்பதாண்டு காலத்தை ஓட்டிவிட்டிருந்தார்.
சக்கரநாற்காலியில் இருந்து இறங்கியவர் நாற்காலியை ஒரு கையால் இழுத்துச் சுவர் ஓரத்தில் நிறுத்திவிட்டும், ஊன்றுகோலை வண்டியில் சாத்திவைத்துவிட்டும் ஐந்தடியில் அமர்ந்தார்.
கோப்பிக்கடையில் இருந்து வாங்கிவந்த ரொட்டியைத் தின்றுவிட்டுக் கோப்பியை எடுத்து உறிஞ்சிக் குடித்தார்.
வழக்கம்போல் துணியை விரித்துப் போட்டார். அவர் பார்வை ‘குவே’ க் கிழவி வரும் சந்தில் இருந்தது.
பரந்த உலகத்தில் அவர் மேல் பற்றும் பாசமும் உள்ள ஒரே உயிர் அவள்தான். இவர் இந்தியாவில் இருந்து வந்ததைப்போல் அவளும் சீனத்தில் இருந்து வந்தவள்தான். ஜப்பானியர்களால் கணவனை இழந்துவிட்டிருந்தாள். அவளுக்கு யாரும் துணை இல்லை.
எல்லாவற்றையும் இழந்த அவளுக்கு எப்போதும் நாய்தான் துணையாக இருந்தது. அவளுக்கும் பிறந்த மண்ணை மிதித்துவிட வேண்டும் எனற ஆசை இருந்தது. சீனாவிற்கு எப்படிப் போவது? பணம் வேண்டுமே!
மனமுடைந்துவிட்டிருந்த குவே மனத்தில் இருந்த ஆசை படிப்படியாக மறைந்து விட்டிருந்தது.
ஒரு கூடத்தைப் புகலிடமாகக்கொண்டிருந்த குவே த ள்ளுவண்டியில் பழைய அட்டைப் பெட்டிகளையும், பலகைகளையும் பொறுக்கிப் பழைய பொருட்கள் வாங்கும் கடையில் கொண்டுபோய்விற்று வயிற்றைக் கழுவி வந்தாள்.
‘கிரிச் கிரிச் கட கட’ என்று ஒலி கேட்டது.
அந்தப் பகுதியில் உள்ள அனவருக்கும் அந்த ஒலி பழக்கப் பட்ட ஒலிதான். குவே தள்ளுவண்டியைத் தள்ளிக்கொண்டு சென்றாள்.
வண்டியின் கைப்பிடி உயரத்திற்கு உள்ள கூனல் உடம்பை வண்டியில் இருந்த அட்டைப்பெட்டி மறைத்திருந்தது. அவள் குனிந்தபடியே சென்றாள்.
அவளால் நிமிரவும் முடியாது. உலகப்போர் நடக்கும் போது செடி செத்தைகளுக்குள் குனிந்தபடி ஓடியவள் அன்றிலிருந்து இன்றுவரை நிமிரவே இல்லை.
கிரிச் கிரிச் கட கட ஒலி கேட்பதும் நின்றது.
ஐந்தடி ஓரத்தில் நின்ற வண்டி அவள் வாழ்க்கையைப்போல் ஒரு பக்கம் ஒருக்களித்தபடி நின்றது.
கைப்பிடியைவிட்டதும் வண்டி நகர்ந்தது.
மீண்டும் கைப்பிடியைப் பற்றி வண்டியை நிறுத்திவிட்டு சக்கரத்திற்கு அடியில் சிறு துண்டு அட்டையை வைத்தாள். வண்டி நகர்கிறதா என்று நின்று பார்த்தாள். வண்டி உருளவில்லை என்று தெரிந்ததும் நடந்தாள்.
கட்டிடச் சுவர்களில் உள்ள சுண்ணாம்புப் பூச்சுகள் உதிர்ந்திருந்தன. இருபதாண்டுக்கு முன் கட்டும்போது அவள் எடுத்துக்கொடுத்த செங்கல்கள் அவளைப் பார்த்துச் சிரித்தன.
ஒரு மூலையில் சிறிய தகரக் குவளை இருந்தது. அதை எடுத்துக்கொண்டு திரும்பினாள். நான்கு சக்கரங்களிலும் இலவசமாகக் கிடைத்த அந்தப் பழைய மசகு எண்ணெய்யில் சிறிது ஊற்றிவிட்டு அந்தக் குவளையை இருந்த இடத்தில் கொண்டுபோய் வைத்தாள்.
வைத்துவிட்டு கோப்பிக்கடையின் பின் வாசல் வழி கடைக்குள் சென்றாள்.பால்குவளையில் கோப்பியையும், வெண்ணெய் தடவிய ரொட்டியையும் வாங்கிக் கொண்டு குனிந்தபடியே நடந்தாள்.
அவள்கோப்பிக் கடைக்குச் சென்று திரும்பிவரும்போது பிச்சைமுத்துக்கிழவருக்கும் ரொட்டி வாங்கிக்கொண்டு வந்தாள்.
“நீ இந்த வேலை செய்துக்கிட்டு ஒவ்வொரு நாளும் எனக்கு ரொட்டி வாங்கித் தருகிறாயே!”
“பிறகு என்ன செய்யச் சொல்லுறீங்க? ஊருக்குப்போகப் பணம் வேண்டும் என்கிறீங்களா? இல்லை உங்களை என் வீட்டில் வைத்துச் சோறுகொடுக்க வேண்டும் என்று சொல்லுறீங்களா?” என்று சிரித்தாள்.
பிச்சைமுத்துக் கிழவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
‘சரி நான் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று வண்டிக்கு அருகில் ஐந்தடித் திண்டில் போய் அமர்ந்தாள்.
நிலத்தைப் பார்த்துக்கொண்டே நடந்தவள் கண்களுக்கு சுற்றுச்சூழல் தெரிந்தது.
நிற்கக்கூட நேரமில்லாமல் நேரத்தோடு போட்டி போட்டுக்கொண்டு ஓடுபவர்களைப் பார்த்தபடி ரொட்டியை எடுத்துத் தின்றாள்; பால் குவளையில் இருந்த கோப்பியைக். குடித்துவிட்டு வெற்றுக் குவளையைக் குப்பைத் தொட்டியில் போட மனமில்லாமல் வண்டி கைப்பிடியில் அடித்துள்ள ஆணியில் மாட்டினாள், இதோடு இன்னும் இரண்டு மூன்று குவளைகளைச் சேர்த்தால் ஐந்து காசு கிடைக்கும் என்ற எண்ணத்தில்.
பிறகு கைப்பிடியைப் ப ற்றிக்கொண்டு எழுந்தாள்.
அவள் கண்கள் மீண்டும் நிலமகளைப் பார்த்தன. வண்டியைத் தள்ளினாள். கிரிச் கிரிச் என்ற ஒலி கேட்கவில்லை. அவளைப்போல் ஆட்டம் கண்டுவிட்ட பழைய வண்டி கடகட என்று ஆடிக்கொண்டு நகர்ந்தது.
சாலைவிதி, போக்குவரத்து எதையும் அவள் பொருட்படுத்தவில்லை.
தான் விரும்பிய திசையில் வண்டியைத் திருப்பித் தள்ளினாள். போக்குவரத்துத்தான் அவளுக்கு வழிவிட்டு விலகிச் சென்றது. வெளியுலகில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் குவே சாலையையே பார்த்துக்கொண்டு சென்றாள்.
சாலை வரி கட்டாத அந்த வண்டி சாலையின் ஒரு தடத்தைப் பிடித்துக்கொண்டு சென்று ஒரு கடையின் பக்கச் சந்தில் திரும்பியபின் சந்தில் வளைந்து நின்றது.
கழுத்தை வளைத்துத் தலையைத் தூக்கிப் பார்த்தாள்.
அட்டைப் பெட்டிகள் அவள் கண்களில் பட்டன.
குப்பைத் தொட்டியை ஒட்டி, ஓரத்தில் கிடந்த அந்த அட்டைப்பெட்டிகளை எடுத்து அடுக்கிக் கட்டாகக் கட்டி வண்டியில் வைத்துக்கொண்டு தள்ளினாள். வண்டி பழைய பொருட்கள் வாங்கும் கடையை நோக்கிச் சென்றது.
குவே ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்திற்குப் புறப்பட்டுவிடுவாள்.
நாள் தவறாமலும், நல்ல நாள் பெரிய நாள் என்றுகூடப் பார்க்காமலும் அட்டை பொறுக்கிவிற்கும் குவே இரண்டு மூன்று நாளாக வராதது பிச்சைமுத்துக்கிழவருக்கு என்னவோபோல் இருந்தது.
பழைய பொருட்கள் எடுக்கச்சென்ற இடத்தில் இருந்து அவள் தனக்காக எடுத்து வந்து கொடுத்துள்ள சக்கரநாற்காலியைப் பார்த்தார்.
“வயதான காலத்தில் நீங்கள் கோல் ஊன்றி நடப்பதைவிட இதில் இருந்துகொண்டு செல்வது வசதியாக இருக்கும்” என்று அவள் சீனமொழித் தொனியில் மலாயில் சொல்லியது நினைவுக்கு வந்தது. அதுவும் அப்போது சொல்லியதைப் போல் இருந்தது.
அப்போது சிங் சிங்… சிங்…. என்று சேகண்டி ஒலி கேட்டது. ஒலியில் இருந்தே பிண வண்டி வருகிறது என்பதைப் புரிந்து கொண்டதும் அவர் மனம் பதறியது. ஒலிவந்த பக்கம் திரும்பிப் பார்த்தார்.
பிணப்பெட்டி இருந்த லாரியின் முகடு வானமாக மாறிவிட்டிருந்தது. மேகக்கூட்டத்திற்கு மேல் புலி நின்று கொண்டிருந்தது.
புலிப்பொம்மையைப் பார்த்ததும் அந்த வண்டியில் ஆண் பிணம் வருகிறது என்று தெரிந்துகொண்டார். மனத்தில் எழுந்த புயலும் அடங்கிவிட்டிருந்தது.
பிண வண்டி அவரைக் கடந்துசென்றது.
சிங் சிங் என்ற சேகண்டி ஒலியும் தேய்ந்து அடங்கியது.
ஆனால் அவர் மனம் அமைதியடையவில்லை. இப்படி ஏதாகிலும் நடந்துவிட்டிருந்தால்! அவரால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. குவேயைச் சென்று பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
குவளையில் இருந்த சிறிது கோப்பியையும் குடித்துவிட்டு அவள் கொடுத்த சக்கர வண்டியிலேயே அவள் கூடத்தை நோக்கிச் சென்றார்.
சக்கரநாற்காலி குவேயின் குடிலை அடைந்தது.
குவேயின் கூடாரவாசலில் படுத்துக்கிடந்த நாய் அவரைப் பார்த்ததும் வாலை ஆட்டியபடி ஓடிவந்து வரவேற்றது.
பிச்சைமுத்துக்கிழவர் கூடத்திற்குள் சென்றார். சுவரில் மாட்டியிருந்த பழைய புத்தர் படத்திற்கு நேர் கீழாக ஒரு பழைய கட்டிலில், பலநூறு துண்டுத்துணிகளில் ஒட்டுப்போட்டு தைத்திருந்த விரிப்பில் படுத்திருந்த குவேயைப் பார்த்தார்.
“உடம்புக்கு என்ன?”
“ஒண்ணுமில்லை காய்ச்சல்தான்!”
ஏதாகிலும் ஆக்கிச் சாப்பிட்டிருக்கிறாளா என்று அடுப்பைப் பார்த்துவிட்டு, அவள் நெற்றியில் கையை வைத்தார்.
அடுப்பில் இருக்க வேண்டிய தீ அவள் நெற்றியில் இருந்தது.
“என்ன இப்படிச் சுடுகிறது? காய்ச்சல் மாத்திரை வாங்கிச் சாப்பிட்டாயா?” என்றார்.
‘வாங்கிச் சாப்பிட்டேன்!”
“சாப்பாடு?”
“சாப்பிட முடியலே! வாயெல்லாம் கசக்கிறது!”
“சாப்பிடலேனா எப்படி?” என்று சொல்லிவிட்டுச் சக்கரநாற்காலியைத் திருப்பினார்.
“எங்கே போகப்போறீங்க?”
“கோப்பியும் ரொட்டியும் வாங்கிக்கிட்டு வர” பிச்சைமுத்துக்கிழவர் நிற்கவில்லை. கோப்பிக்கடைக்குச் சென்று கோப்பியும் ரொட்டியும் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தார்.
அவள் அதை வாங்கி வைத்துவிட்டு, “நீங்க இந்தியாவுக்கு போக வேண்டிய நேரம் வந்திடுச்சு!”
“அது எப்படி உனக்குத் தெரியும்?”
“நேரம் வரும்போது எது எது நடக்குமோ அது நடந்துதானே தீரும். இனி நானும் பிழைக்கமாட்டேன்!” என்றவாறு சங்பூ ரவிக்கைப் பைக்குள் கையைவிட்டவள் சாவியை எடுத்து அவரிடம் கொடுத்தாள்.
பிச்சைமுத்துக்கிழவர் வாங்கியபடி, “இப்ப இப்ப ஏன் இப்படியெல்லாம் பேசுகிறாய்?” என்றார்.
“இனிமேல் என்னால் பேச முடியாது! நீங்கள் வயதான காலத்தில் அந்த அஞ்சடிக்குளிரில் கிடக்க வேண்டாம். இங்கே வந்திடுங்க!” என்றாள்.
‘இப்ப அதுக்கென்ன?’ என்றார்.
குவேயை எப்படியாகிலும் மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்ட வேண்டும் என எண்ணினார்.
‘இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு மீண்டும் பிச்சை எடுக்கச் சென்றார்.
“ஐயா…. இந்த ஏழைக்கு உதவி செய்யுங்க ஐயா… வீட்டில் ஒரு உயிர் உயிர் காய்ச்சலால் துடிக்குது ஐயா! அவளை மருத்துவரிடம் அழைச்சிட்டுப்போய்க் காட்டக் கையில் ஒரு சல்லிக்காசுகூட இல்லையய்யா”
“இப்படிச் சொல்லிக் காசு வாங்கிக்கிட்டுப் போய் குடிக்கவா?” என்றும், “இப்படித்தான் ஊரையே ஏமாத்துறான்க!” என்றும் சொல்லிவிட்டுச் சிலர் காசு கொடுக்காமல் சென்றனர்.
அவர் கெஞ்சுவதைப் பார்த்த சிலரின் கல்மனம் கரைந்தது. இரக்க மனங்கள் இளகின.
அன்று சாப்பாட்டையும் மறந்துவிட்டு பசித்த வயிற்றில் வரக்கோப்பியை ஊற்றிக் கொண்டு ஒற்றைக்காலில் நின்று பிச்சை கேட்டார்.
பொழுதும் சாய்ந்தது.
ஒற்றைக்காலில் நின்று கெஞ்சிக்கேட்டதால் காசும் சிறிது சேர்ந்துவிட்டிருந்தது. அது போதாது என்றாலும் மருத்துவரிடம் நிலைமையை எடுத்துச்சொல்லி குவேக்கு மருந்துகொடுக்க வேண்டும் என எண்ணிக்கொண்டு குவே குடிலுக்குச் சென்றார்.
காலையில் வாங்கி வைத்துவிட்டுச் சென்ற ரொட்டியும், கோப்பியும் அப்படியே இருந்தன.
அவள் படுத்தபடுக்கையாகக் கிடந்தாள்.
பிச்சை முத்துக்கிழவர் அவளுக்கு அருகில் சென்று பார்த்தவாறு, “ஏன் கோப்பி குடிக்கலே?” என்றார். அவளால் பேசமுடியவில்லை. கண்கலங்கியது.
“ஏன் அழறே?”
அவர் கண்களிலும் நீர் கொட்டியது.
துடித்துக்கொண்டு அவளைப் பார்த்தார். அவளை எப்படி மருத்துவரிடம் அழைத்துச் செல்வதென்று தெரியவில்லை. வெளியே அண்ணாந்து பார்த்தபடி “கடவுளே!” என்றார்.
பக்கத்தில் உள்ள நாலுமாடிக் கட்டிடத்தைப் பார்க்கும்போது நாலாவது மாடியில் சன்னல் அருகில் ஒருவர் நின்று பார்ப்பது தெரிந்தது.
உயரத்தில் இருக்கும் அவர் உதவமாட்டார் என்று எண்ணிக்கொண்டு சக்கரநாற்காலியை தள்ளினார். பக்கத்துக் கூடாரத்திற்குச் சென்று யாராகிலும் இருக்கிறார்களா என்று பார்த்தார்.
அங்கு யாருமில்லை.
மருந்தகத்திற்குச் சென்று மருத்துவரை அழைத்துக்கொண்டு வரலாம் என்றாலும் செலவு இரட்டிப்பாகும் என்று தோன்றியது.
குவேயின் தள்ளுவண்டிக்கு அருகில் சென்றார். சக்கரநாற்காலியில் இருந்தபடியே தள்ளுவண்டியைத் தள்ளிப்பார்த்தார். அதில் வைத்து அழைத்துக் கொண்டு போவதைவிட வேறுவழி இல்லை என்று முடிவுக்கு வரும்போது உணர்ச்சிவயப்பட்டார்.
ஊன்றுகோலை எடுத்துக் கக்கத்தில் வைத்துக்கொண்டு சக்கரநாற்காலியில் இருந்து இறங்கி தள்ளுவண்டியைத் தள்ளினார்.
அவள் படுக்கைக்கு அருகில் சென்றதும் அழுக்கேறியிருந்த தலையணையை எடுத்து வண்டியில் சாய்வாக வைத்தார். அவள் ஏதோ முனகினாள்.
“மருத்துவரைப் பார்க்க வேண்டும்!”
“வேண்டாம்” என்று பொருள்பட கையை அசைத்தாள்.
“பயப்படாதே! மருத்துவரிடம் காட்டினால் சோதித்துப் பார்த்துவிட்டு ஊசிபோட்டு மருந்து கொடுப்பார். உடம்பு நன்றாகிவிடும்!” என்றவாறு ஒருகையால் ஊன்றுகோலைப் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் அவளைத் தூக்கினார். நீர் சுண்டிவிட்டிருந்த அந்தக் கட்டை கனம் இல்லாமல் இருந்தது.
தூக்கி வண்டியில் வைத்தார்.
காலையில் வாங்கிவந்திருந்த ரொட்டியையும், கோப்பியையும் நாயிடம் எடுத்து வைத்துவிட்டு ஒரு கையால் வண்டிக் கைப்பிடியைப் பற்றிக்கொண்டு ஒரு காலின் முழுப் பலத்தையும் ஒன்றுதிரட்டித் தள்ளினார்.
வண்டி நகர்ந்தது.
அந்தச் சந்துகளில் மூன்று நாளாகக் கேட்காத ஒலி கேட்டது; நாலாவது மாடியில் இருந்தவர்களுக்கும் அது எட்டியது.
சந்து வழியாகத் தள்ளிக்கொண்டு சாலையில் வந்து திரும்பினார்.
நாயும் அவரைப் பின்தொடர்ந்தது.
போவோர் வருவோர்க்கு அவர் வண்டியைத் தள்ளிக்கொண்டு செல்வது வேடிக்கையாக இருந்தது. அக்காட்சியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு சென்றனர்.
உதவி செய்யாமல் சிரிக்கும் உலகத்தைப் பார்க்கும்போது பிச்சைமுத்துக் கிழவருக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
வண்டியைத் தள்ளிக்கொண்டு சென்றார்.
வண்டி மருந்தக வாயிலில் போய் நின்றது. பிச்சைமுத்துக்கிழவர் உள்ளே பார்த்தார்.
தாதியைப் பார்த்ததும், “இரண்டு மூன்று நாளாக காய்ச்சலுங்க! காய்ச்சல் மாத்திரை சாப்பிட்டும் காய்ச்சல் நிற்கவில்லை! நீங்கள் தான் உதவி செய்யணும்!” என்றார்.
பணிப்பெண் ஓடிவந்தாள். குவேயின் நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள்.
அதே சுருக்கில் திரும்பி மருத்துவர் இருந்த அறைக்குள் ஓடினாள்.
அவள் சென்று அடுத்த நொடியே மருத்துவர் அறையிலிருந்து விரைந்து வந்தார்.
குவேயின் நாடியைப் பிடித்தபடி முகத்தையும் பார்த்தார். பிறகு கையை மெதுவாக அவள் மடியிலேயே வைத்துவிட்டு நிலைகுத்திவிட்டிருந்த விழிகளை இமையால். மூடி வைத்தார்.
மருத்துவரையே இமைகொட்டாது பார்த்துக்கொண்டிருந்த பிச்சை முத்துக்கிழவர் மனம் பதறியது.
“டாக்டர், குவே பிழைத்துக்கொள்வாளா? அவளுக்கு யாருமே இல்லை டாக்டர்!” பிச்சைமுத்துக் கிழவரை இரக்கத்தோடு பார்த்த மருத்துவர் தலையை ஆட்டிவிட்டு திரும்பித் தன் அறையை நோக்கி நடந்தார்.
பிச்சைமுத்துவுக்கு வானமே இடிந்து விழுவதைப்போல் இருந்தது.
“குவே போய்விட்டாயா? எனக்காக இரக்கப்பட்ட நீயும் இந்த உலகத்தை விட்டே போய்விட்டாயா?” என்று அவர் சொல்லி அழுதது அங்கு வந்திருந்தோர் உள்ளத்தையே உருக்கியது.
வண்டியைத் தள்ளிக்கொண்டு கூடத்திற்குத் திரும்பினார்.
கூடத்தின் வாயிலில் வண்டியை நிறுத்திவிட்டு குவேயின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தார். கண்களில் நீர் அருவியெனக் கொட்டிக்கொண்டிருந்தது.
சிறிது நேரத்திற்குப் பின் முன்பொருநாள் பார்த்த பிண வண்டியின் நினைவு வந்தது.
“குவேயை எப்படி அடக்கம் செய்வது? பிண வண்டிக்குக் காசு கொடுக்க எங்கே போவது?” என்ற கேள்வி எழுந்தது. “யார் உதவியை நாடலாம்?”
அப்போது கூடத்தை நோக்கி மருந்தகத்தில் பார்த்த தாதியும், அவளுக்குப் பின்னால் இருவரும் வந்து கொண்டிருந்தனர்.
அருகில் வந்ததும், “இவர்கள் பிணத்தை எடுத்துக் கொண்டுபோக வந்திருக்கின்றனர்!” என்றாள்.
பிச்சைமுத்துக் கிழவர் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அவளைப் பார்த்தார்.
“குவேயைப் பற்றி மருத்துவருக்குத் தெரியும். அவர்தான் பிணத்தை எடுத்து அடக்கம் செய்ய எல்லா ஏற்பாடும் செய்திருக்கிறார்!” என்றாள் அவள்.
“ம்..செரி” என்று தலையாட்டினார் பிச்சைமுத்து.
தாதிக்குப் பின்னால் வந்து நின்றவர்கள் குவேயின் பிணத்தைத் தூக்கிக்கொண்டு சந்து வழியே நடந்தனர்.
சாலையில் நின்றிருந்த வண்டியில் ஏற்றும்போது பிச்சைமுத்துக்கிழவர் அந்த வண்டியைப் பார்த்தார்.
அந்த வண்டியின் முகட்டில் மேகக்கூட்டமோ, பெண் பிணத்தைக் குறிக்கம் கொக்குப் பொம்மையோ இல்லை. குவேயின் பிணம் அநாதைப் பிணமாகியதை நினைக்கும்போது பிச்சைமுத்துவின் கண்கள் சாங்கிக் கடலாக மாறின.
மறுநாள்.
பிச்சைமுத்துக்கிழவருக்குக் “குவே”க் கிழவியின் நினைவு இருந்துகொண்டே இருந்தது.
நாய்க்குச் சோறு வாங்கிப் போட்டார்.
நாயும் அவரைப்போல் சாப்பிடாமல் நோன்பு இருந்தது. “நீயுமர் சாப்பிடாமல் விரதம் இருக்கிறே?” என்று பிச்சை முத்துக்கிழவர் கவலையோடு காற்சட்டைப் பைக்குள் கையைவிட்டார்.
குவே கொடுத்த சாவி தட்டுப்பட்டது.
சாவியை எடுத்துப்பார்த்தபடி, “இந்த வீட்டிற்குச் சாவிவேறே வேண்டுமா? இங்குள்ள ஒட்டுப்போட்ட துணியும், அழுக்கேறிய தலையணையுமா திருட்டுப்போகப் போகிறது?” என்று முணுமுணுத்தபடி சிரித்தார்.
அவர் கண்கள் கூடத்தை நோட்டமிட்டன.
அடுப்பிருந்த மேசைக்குக் கீழே உள்ள பூட்டப்பட்டிருந்த தகரப்பெட்டி அவர் கண்களில் பட்டது.
பெட்டியை இழுத்து சக்கரநாற்காலியில் தூக்கி வைத்துக் கொண்டு திறந்து பார்த்தார் அவர் கண்களை அவரே நம்பவில்லை.
ஒவ்வொரு வெள்ளித்தாளாகவும், சில்லறையாகவும் பெட்டியில் இருந்தன.
“பணம்! இதை முன்பே பார்த்திருந்தால் உன் பிணத்தை நல்லபடியாக அடக்கம் செய்திருப்பேனே! நீயும் சொல்ல வில்லையே! சொன்னால் செலவழித்து விடுவான் பிறகு ஊருக்குப்போகப்பணம் கிடைக்காது என்று நினைத்துத்தான் சொல்லவில்லையா?”
அந்த நல்ல உள்ளத்தை நினைக்கும்போது அவர் மனம் உருகியது.
நாட்கள் நகர்ந்தன.
நாயின் விரதம் நீடித்தது.
அது சாப்பிடாமல் கிடந்தே உயிர் துறந்தது.
பிச்சைமுத்துக்கிழவர் எல்லாவற்றையும் இழந்தவரைப் போல் காணப்பட்டார்.
இடையில் வந்த உறவும் இடையில் போய்விட்டதை நினைக்கும்போது அவர் மனத்தில் வெறுமை தோன்றியது. ‘இனிச் செத்தாலும் பிறந்த மண்ணில்போய் செத்தால்தான் மோட்சம் கிடைக்கும்; குவேயின் ஆன்மாவும் அமைதியடையும்’ என்று நினைத்தார்..
பிச்சை எடுக்கும் இடத்திற்குச் சென்றார்.
அதே வரிசையில் இருந்த பயண ஏஜென்சியைப் போய்ப்பார்த்தார்.
புகைப்படமும், பணமும் கொண்டு வந்தால் நாங்கள் எல்லா ஏற்பாடும் செய்து தருகிறோம்! என்றார் அவர்.
எல்லாத்துக்கும் எவ்வளவு வரும்?
நானூறு வெள்ளி வரும்! என்றதும் பிச்சைமுத்துக் கிழவரின் முகம் மலர்ந்தது. நானூறு வெள்ளிக்கு மேலேயே இருக்கிறது என்று நினைத்தவர், ‘சரி பணத்தோடு வந்து பார்க்கிறேன்’ என்று சொல்லிவிட்டுக் கூடத்திற்குச் சென்றார்.
அவர் உள்ளம் துள்ளியது.
இந்தப் பிறவியில் கிடைக்காத பேறு கிடைக்கப்போகிறது என எண்ணி மகிழந்தார்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்காக நேதாஜி சுபாசந்திரபோஸின் கைகளை வலுப்படுத்துவதற்காக படையில் சேரும்போது இருந்த உணர்ச்சி அப்போதும் கிளர்ந்தெழுந்து நின்றது.
‘குவே உன் எண்ணப்படி நான் ஊருக்குப்போகப் போகிறேன்! உன்னை உன் பெருமையைப் பற்றி நான் ஊர் ஊராகச் சொல்லப்போகிறேன்!” என்று மனத்திற்குள் சொல்லிக்கொண்டே கூடத்திற்குள் சென்றார்.
குவே குடியிருந்த அந்தக் கூடத்திற்குள் செல்லும்போது கோவிலுக்குள் சென்றதைப்போல் இருந்தது.
உள்ளே சென்றதும் பெட்டியைப் பார்த்தார். அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. பூட்டிவிட்டுச் சென்ற பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டுக் கிடக்கிறதே என்று பரபரப்போடு பெட்டியைத் திறந்து பார்த்தார்.
பெட்டி காலியாகக் கிடந்தது.
தலையில் அடித்துக்கொள்வதைத் தவிர வேறு வழிதெரியவில்லை.
“குவே! நீ ரத்த வியர்வை சிந்தி வாயைக் கட்டி வயிற்றைக் கட்டிச் சேர்த்த பணம் போய்விட்டது குவே! வாழ்க்கையின் பெரும்பகுதியை இழந்துவிட்டானே! தாய்த்திருநாட்டிற்குப் போகட்டும், ஏழைக்கு ஏழைதானே உதவ முடியும் என்று நீ சேர்த்துக்கொடுத்த பணம் பறிபோய்விட்டது குவே!” என்று அழுதார்.
கூடத்தில் இருந்தபடியே அண்ணாந்து பார்த்தார்.
வானத்தில் பருந்து ஒன்று வட்டமிட்டுப் பறந்த சென்றது.
அதைப் பார்த்துவிட்டுப் பார்வையைத் திருப்பினார். நாலாவது மாடியில் சன்னல் அருகே ஒருவர் நின்று கொண்டிருந்தது தெரிந்தது.
பிச்சைமுத்துக்கிழவர் அவரைப் பார்த்ததும் அவர் தம் தலையை இழுத்துக்கொண்டார். பிச்சைமுத்துக் கிழவர்க்கு மேலே பார்க்கவே அருவருப்பாக இருந்தது.
‘இந்த உலகத்தைப் பார்க்காமல் குனிந்துகொண்டே திரிந்த குவே ஒருவகையில் கொடுத்துவைத்தவள்தான்’ என்று அவர் மனத்தில் ஓடியது.
சக்கரநாற்காலியில் இருந்தபடியே பக்கவாட்டில் குனிந்து நிலத்தைப் பார்த்தார்.
கண்களில் இருந்து வடிந்த ரத்தக் கண்ணீர் தரையில் சொட்டியது. சொட்டிய கண்ணீரைச் சுட்டுவிரலால் கோடாக இழுத்தார். அது இந்தியாவாக மாறியது.
– தூண்டில் மீன், முதல் பதிப்பு: சூலை 2001, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
![]() |
1938இல் சிங்கப்பூரில் பிறந்தார். இவருடைய தாயார் சிங்கப்பூரில் பிறந்தவர். தந்தை தமிழ் நாட்டில் பிறந்தவர். கலைமகள் தொடக்கப் பள்ளியில் கல்வியைத் தொடங்கிய இவர் இண்டர்மீடியட் வரை படித்தார். பின்னர் தகவல் கலை அமைச்சில் தமிழ்ச் தட்டச்சராக அரசுப் பணியில் சேர்ந்து 30 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஓய்வு பெற்றார். இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் பாலகிருட்டிணன். பரிதிமாற்கலைஞர் (சூரியநாராயண சாஸ்திரி) மறைமலையடிகளைப் பின்பற்றி இளங்கண்ணன் என்று பெயரை தமிழ்ப் படுத்தி…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
1 நிமிட கதைகள் 2
ராமன் செல்வராஜ்
October 24, 2026
நீ இல்லாத உலகத்திலே….!
வளர்கவி
October 21, 2026
அஞ்சல் நிலைய அதிகாரி
பூ.சோமசுந்தரம்
October 21, 2026
