இரத்தத்தில் இல்லையே
கதையாசிரியர்: இரா.துரைமாணிக்கம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 19, 2026
பார்வையிட்டோர்: 420
(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மதுமதியின் தந்தை அதிகம் கற்றவர் இல்லை. அதனால் அவருடைய வருமானம் குடும்பத்தை நடத்தப் போதவில்லை. விளைவு நன்றாகப் படித்து வந்த அவளின் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தொழிற்சாலை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தாள். நோயால் வாடிக் கொண்டிருக்கும் அவளின் தாயின் மருத்துவச் செலவுக்கும் அவளின் தங்கைகள் இருவரின் படிப்புக்கும் அவள் பெற்ற நானூறு வெள்ளி சம்பளம் பயன்பட்டதை எண்ணி மகிழ்ந்தாள்.
மதுமதி பார்ப்பதற்கு கருப்புதான். ஆனால் அளவான உயரம். பருமன், மொழுமொழுப்பு, திட்டமான கை கால் விரல்கள், உறுதியாய் நீண்டு வளர்ந்த நகங்கள். வரிசையாய் வெள்ளை பற்கள். ஒளிவிடும் கண்கள், ஒரு தரம் பார்த்தால் இன்னும் என்னைப் பார் என்று வசீகரிக்கும் உடம்பும் முகமும் உடையவள். அதனால்தான் அவளின் வீட்டிற்கு அடுத்த வீட்டில் இருந்த கதிர்வேலின் கண்கள் அவளின் மேல் படர்ந்தன.
கதிர்வேல் பெரும் பணக்காரன் இல்லை. ஆனால் வசதி நிறைந்தவன். பல்கலைக்கழகம் வரை சென்று பட்டம் பெற்றவன். அவன் பணிபுரியும் இடத்தில் பல பெண்கள் இருந்தும் ஏனோ? அவன் உள்ளம் மதுமதியைத்தான் தேடி அலைந்தது.
மதுமதியைத் தனியே சந்தித்து தன்னுடைய எண்ணத்தை அவளிடம் கூற காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அதற்காக அவன் ஓர் ஏற்பாடு செய்தான். தன்னுடைய பிறந்த நாள் விழாவிற்கு மதுமதியின் குடும்பத்தினரையும் அழைத்திருந்தான். இதுவரையில் மதுமதி தனியே எந்த நிகழ்ச்சியிலுமே கலந்து கொண்டதே இல்லை. கதிர்வேலின் அதிர்ஷ்டம் மதுமதியின் அப்பாவுக்கு அன்று இரவு வேலை. அம்மாவுக்கும் உடல் நலமில்லை. சகோதரிகளாலும் முடியவில்லை. கொடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டவர்கள் ஏற்றுக் கொண்டவர்கள் நிகழ்ச்சிக்குப் போகாமல் இருப்பது மரியாதையாகாது அல்லவா?
மதுமதி அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டியதாயிற்று. தன் தந்தை வாங்கி வைத்திருந்த பரிசு பொருளைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டாள். சிங்காரத்தேர் ஒன்று அசைந்து வருவதுபோல் வந்த மதுமதியைக் கண்ட கதிர்வேலின் முகம் சூரியனைக் கண்ட தாமரை போல் மலர்ந்தது. மேய்ச்சலுக்குச் சென்று திரும்பி வரும் தாய்ப்பசுவை நோக்கி ஓடும் கன்றுபோல், மதுமதியை நோக்கி கதிர்வேல் சென்றான்.
அவன் நோக்கினான். அவளும் நோக்கினாள். கண்ணோடு கண் நோக்கில் கதைகள் ஆயிரம் பேசிடாதோ?
“வாங்க மிஸ் மது”
“உங்களுக்கு என் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், மிஸ்டர்….”
“கதிர்வேல். பெயர் தெரியாதா? அல்லது சொல்ல வெட்கமா?”
“இந்தாங்க” பரிசு பொருளை அவனிடம் நீட்டினாள்.
“நன்றி”
“வாங்க இங்கே உட்காருங்க, இன்னும் கொஞ்ச நேரத்தில விழா தொடங்கிடும்” என்று சொல்லிக் கொண்டே கதிர்வேல் மதுமதியை உட்காரச் சொன்னான். தானே போய் குளிர்பானம் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான்.
விழா முடிந்து எல்லோரும் வீடு திரும்பினார்கள். மதுமதியும் விடைபெறச் சென்றாள்.
”இது உங்களுக்கு. வேறு யாருக்கும் இல்லை. வீட்டில் போய் பாருங்கள்” என்று சொல்லி அவளிடம் ஓர் உறையைக் கொடுத்தான் கதிர்வேல்.
என்ன சொல்வது என்று தெரியாத மதுமதி அதை வாங்கிக் கொண்டு, விடைபெற்றாள்.
“யாருக்கும் எதுவும் கொடுக்காத கதிர்வேல், தன்னிடம் மட்டும் இந்த உறையைக் கொடுத்து, இது உங்களுக்குரியது” என்று சொன்னாரே, இதில் என்ன இருக்கும்? என்று எண்ணிக் கொண்டே வீடு போய்ச் சேர்ந்தாள். தான் திரும்பி விட்டதைத் தன் தாயிடம் சொல்லி விட்டு நேரே தன்னுடைய அறைக்குப் போய் தாழிட்டுக் கொண்டு. கதிர்வேல் கொடுத்த உறையைப் பிரித்தாள்.
“நான் உன்னைத் தனியே சந்திக்க விரும்புகிறேன். சம்மதம் என்றால் இதிலுள்ள எண்களில் நாளை என்னுடன் தொடர்பு கொள்ளவும்”
என்னை ஏன் இவர் தனியே சந்திக்க விரும்புகிறார்? சந்திக்கலாமா? கூடாதா? ஒரே குழப்பம். முடிவு எடுக்க முடியாமல் போனதால் அன்று தூக்கம் கெட்டது.
சிவந்த கண்களுடன் வந்த மகளைக் காலையில் பார்த்த தாய், “நீ ராத்திரி தூங்கலையா? ஏன் கண்கள் இப்படி சிவந்து இருக்கு?” என்று கேட்டார்.
‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது எவ்வளவு உண்மையாய்ப் போயிற்று என்று எண்ணிய மதுமதி, “அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை அம்மா. நான் நன்றாகத்தானே தூங்கினேன்” என்றாள்.
மேசையில் இருந்த பலகாரங்களைத் தொடாமல் கதிர்வேலின் கடிதத்தைப் பற்றியே அசை போட்டுக் கொண்டிருந்தாள் மதுமதி.
தன் தாய் அழைத்தச் சத்தத்தைக் கேட்ட பின்தான் மதுமதி சுய நினைவுக்கு வந்தாள். போன் செய்வோமா? வேண்டாமா? ஏன் என்னைச் சந்திக்க விரும்புகிறார்? என்று அடுக்கடுக்காக அவள் உள்ளத்தில் கேள்வி அலைகள் எழுந்தவண்ணமாக இருந்தன.
“சந்தித்துத்தான் பார்ப்போமே” என்ற முடிவுக்கு வந்த மதுமதி, கடைக்குப் போய்விட்டு வருவதாகத் தன் தாயிடம் கூறி விட்டு, வெளியில் போய், அங்கிருந்த பொதுத் தொலைபேசியை எடுத்தாள். அப்போது அவள் கைகள் நடுங்கின. மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு. தாளில் இருந்த எண்களைச் சுழற்றினாள். கிரீங் கிரீங் என்ற சத்தம், மறுமுனையில் போன் கையில் எடுக்கும் சத்தம் ‘ஹலோ’ கதிர்வேல்.
“நான் கதிர்வேல்தான், பேசுவது?”
“நான்… நான்… மது… “முடிக்கவில்லை.
”மதுவா! என்னைச் சந்திக்க உனக்கு விருப்பமா? எப்போ? எங்கே சந்திக்கலாம்? என்று சொல்.”
“நீங்க என்னைச் சந்திக்கச் சொல்லிவிட்டு என்னிடம் எப்போ? எங்கே? என்று கேட்டால்.”
”உனக்கு எப்போ முடியும்? சொல். நான் இடத்தைச் சொல்லுகிறேன்.”
”வரும் சனிக்கிழமை”
“எத்தனை மணி?”
“ஐந்து”
“சரி”
“இடம்?”
“பூமலை”
சனிக்கிழமை நான்கு மணிக்கெல்லாம் மதுமதி வீட்டை விட்டுப் புறப்பட்டாள். அவள் புறப்படுவதைப் பார்ததுக் கொண்டு இருந்த கதிர்வேல். தன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான். மதுமதி பேருந்து ஏறும் இடத்தில் நின்று கொண்டிருந்தாள். கதிர்வேல் அவளைக் கூப்பிட்டான். தன் பக்கத்தில் இருந்த இருக்கையில் உட்காருவதற்காகக் கதவைத் திறந்துவிட்டான். ஆனால் அவள் அக்கம் பக்கம் பார்த்துவிட்டு. காரின் பின் கதவைத் திறந்து கொண்டு பின்னால் போய் உட்கார்ந்தாள். அவன் எதுவும் சொல்லாமல் காரைக் கிளப்பினான். காரில் இருவரும் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை.
கதிர்வேல் தன் காரை பூமலைக்கு வெளியில் கார் நிறுத்துமிடத் தில் நிறுத்தினான். இருவரும் ஒருவர் பின் ஒருவராக மெதுவாக நடந்து சென்றார்கள்.
”அங்கே, அந்தக் குளக்கரையில் இருக்கும் இருக்கைகள் காலியாக இருக்கின்றன. உட்காருவோமா?” என்று கதிர்வேல் கேட்டான்.
மௌனம் கலைந்தது. கதிர்வேல் உட்கார்ந்தான். “ஏன் நிற்கிறாய்? நீயும் உட்காரலாமே”
மதுமதி இதுவரையில் எந்த ஆணிடமும் நெருங்கி பேசியதே இல்லை. எப்படி நெருங்கி உட்கார்வது? யோசித்தாள்.
“இவ்வளவு தூரம் வந்துவிட்டாய். இந்தக் காலத்தில் இது எல்லாம் சர்வசாதாரணம் பயப்படாமல் உட்கார்” என்றான்.
உட்கார்ந்தாள். முகத்தைக் கீழே குனிந்து கொண்டாள்.
“இதென்ன முகத்தைக் கீழே வைத்துக் கொண்டிருக்கிறாய்? என்னைப் பார். ஏதாவது பேசேன்” என்றான் கதிர்வேல்.
மதுமதி எதுவும் பேசவில்லை.
“நீ என்ன திடீர் என்று ஊமையாகி விட்டாய்? பேசவே மாட்டாயா? அப்புறம் ஏன் வந்தாய்?”
“என்னை ஏன் தனியே சந்திக்க வேண்டும்?”
”அப்பாடா! முத்துக்கள் சிதறிவிட்டன.”
“சீக்கிரம் காரணத்தைச் சொல்லுங்கள். நான் நான் வீட்டுக்குப் போகணும்.”
“வீட்டுக்குத்தானே போவோம். என்னைப் பார்த்து உனக்குப் பயமாக இருக்கா?”
”இல்லையே”
“பின் ஏன் இந்தத் தயக்கம். நடுக்கம்?”
“அப்படி எல்லாம் ஒன்றுமில்லை… நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க.”
“என்னைப் போன்ற ஒரு ஆண், உன்னைப் போன்ற ஒரு பெண்ணை எதற்கு சந்திப்பான்?”
“தெரியலையே”
“நீ தமிழ்ச் சினிமா பார்ப்பதில்லையா?” ‘சந்திப்போமா? சந்திப்போமா? தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா?’ என்ற பாட்டைக் கேட்டதில்லையா?”
“நீங்க என்னென்னமோ சொல்றீங்க. எனக்கு எதுவுமே புரியலேயே.”
“உண்மையிலேயே புரியலையா? அல்லது புரியாதது போல நடிக்கிறாயா?”
“ஒன்னும் தெரியாத பாப்பா போட்டுக் கொண்டாலாம் தாழ்ப்பாள்.”
”ஒன்றுமே புரியாத நீ எப்படி தனிமையில் என்னைச் சந்திக்க வந்தாய்?”
“என்னை தனியே வரச்சொன்னது இப்படி எல்லாம் பேசவா? நான் போகிறேன்’
“எங்கே புறப்பட்டுவிட்டே?” உட்கார் என்று அவளின் கைகளைப் பற்றி உட்கார வைத்தான் கதிர்வேல்.
அவனின் கை அவளின் கையில் பட்டதும் ஏதோ ஓர் உணர்ச்சி அவள் உடலெல்லாம் பாய்ந்தது. அவள் அதைத் தாங்க முடியாமல் தவித்தாள். உடம்பு குப்பென்று வியர்த்தது.
“மது நான் உன்னைக் காதலிக்கிறேன். காதலிப்பது மட்டுமல்ல உன்னைத் திருமுணம் செய்து கொள்ளவும் ஆசைப்படுகிறேன். இதை உன்னிடம் சொல்லத்தான் உன்னைத் தனியாக அழைத்தேன்” என்றான் கதிர்வேல்.
அதைக் கேட்ட மதுமதிக்கு வெளியில் சொல்ல முடியாத ஓர் உணர்வு உள்ளத்தில் எழுந்தது. அவள் எதுவும் பேசாமல் இருந்தாள்.
”நான் சொன்னதற்கு எந்தப் பதிலையும் காணோமே! நீ இப்போவே பதில் கூற வேண்டாம். உனக்கு என் மீது விருப்பம் என்றால் பிறகு ஒருநாள் சொல்லு. விருப்பம் இல்லை என்றால் நான் சொன்னதை மறந்து விடு. ஆனால் என் உள்ளத்தில் நீதான் குடியிருக்கிறாய் என்பதை மட்டும் மறந்து விட வேண்டாம்.” என்றான் கதிர்வேல்.
அழகு, படிப்பு, பதவி, வசதியுள்ள கதிர்வேலைத் திருமணம் செய்து கொள்ள எத்தனையோ பெண்கள் நான் நீ என்று வருவார்கள். இவர் ஏன் என்னைப் போய் விரும்புகிறார்? இந்தக் காதல் கைகூடுமா? அவருடைய பெற்றோர்கள் என்னை மருமகளாக ஏற்றுக் கொள்வார்களா? என்று பலவாறு எண்ணிக் குழம்பிக் கொண்டிருந்தாள் மதுமதி.
இதைப்பற்றி அம்மாவிடம் சொல்லலாமா? அவருக்கும் நமக்கும் ஒத்துவராது என்று விட்டுவிடலாமா? அல்லது தானே வரும் சீதேவியை ஏற்றுக் கொள்ளலாமா? அவளால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. தனது சிந்தனை ஓட்டம் பல திசைகளில் ஓடியதால் அவள் தன் நினைவு இல்லாமல் இருந்தாள். கடைசியாக அவரிடம் ஒரே ஒரு கேள்வி கேட்டுவிட்டு பிறகு முடிவு செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தாள்.
கதிர்வேலை மீண்டும் சந்திக்க விரும்பினாள். மெரினா பூங்காவில் இருவரும் சந்தித்தார்கள்.
“உங்களைப் போன்ற வசதியும், அழகும் நிறைந்த பெண்கள் பலர் உங்களை விரும்புவார்கள். அவர்களை விட்டு விட்டு எந்த விதத்திலும் உங்களுக்கு பொருந்தாத நிலையில் உள்ள என்னை நீங்கள் ஏன் விரும்புகிறீர்கள்?”
“நீ சொல்வது உண்மைதான். ஆனால் அவர்களிடம் இருக்க முடியாத சில தன்மைகள் உன்னிடம் இருக்கின்றன. அதனால்தான்” என்றான் கதிர்வேல்.
“எனக்குத் தெரியாமல் அப்படி என்னிடம் இருப்பது தான் என்ன?”
”உன் குணம். அமைதியான நடை, சுபாவம், அதிராமல் பேசும் தினுசு. அம்மாவுக்கு உதவும் பெண்ணாக நீ இருப்பது. வீட்டு காரியங்களைப் பாங்காகச் செய்வது எல்லாம் எனக்குப் பிடிக்குது. அந்தக் குணங்கள்தான் உன்னைத் தேர்ந்தெடுக்க வச்சது. அழகிலே என்ன இருக்கு? மனசு, குணம் இதுதானே முக்கியம்” என்றான் கதிர்வேல்.
“காந்தலும் ருசி, கறுப்பும் அழகு என்பார்களே! அது என்னைப் பொறுத்தவரையில் உண்மைதானா?”
அதன் பிறகு அவர்கள் இருவரும் அடிக்கடிச் சந்தித்தார்கள். காதல் சிட்டுக்களாய் பாடித் திரிந்தனர். தங்களின் எதிர்காலத்தைப் பற்றி கற்பனைக் கோட்டைகள் கட்டினர்.
ஒரு நாள் வேலையிலிருந்து வீடு திரும்பிய மதுமதி தன் தாயிடம் போய், “பக்கத்து வீட்டில் என்னம்மா பெருங்கூட்டமாக இருக்குது?” என்று கேட்டாள்.
”நேரமாகி விட்டது. நானும் தான் அங்கே போகணும்” என்றாள் தாய்.
“அங்கே என்னம்மா? நீ ஏன் அங்கே போக வேண்டும்?”
“அந்த வீட்டு கதிர்வேல் தம்பிக்கு பெண் பார்த்து பரிசம் போடுறாங்க. அதுக்கு தான் என்னைக் கூப்பிட்டாங்க.”
“பரிசமா?”
“ஆமாம்”
“நீங்க சொல்வது உண்மைதானா?”
“உண்மைதான்”
“பெண்ணு”
“அங்கே போனாதான் தெரியும். நீ ஏன் இதையெல்லாம் கேட்டுக் கொண்டு இருக்கிறாய்? போய் குளிச்சிட்டுச் சாப்பிடு” என்று தாயார் கூறிக் கொண்டு, பக்கத்து வீட்டுக்குப் போக தயாரானாள். வாழ்ந்தால் உன்னோடுதான் வாழ்வேன் என்று கதிர்வேல் சொன்னாரே?
நான் ஏமாற்றப்பட்டு விட்டேனே? படுக்கையில் விழுந்து கேவி கேவி அழுதாள். அழுவதை விட அவளால் என்ன செய்ய முடியும்? யாரிடம் சொல்வது? எப்படி சொல்வது? என்னவென்று சொல்வது?
இந்த மாதிரி பணக்கார கயவர்கள் காதல் விளையாட்டுக்கு என்னைப் போன்ற ஏழைகள்தான் பொம்மைகள் என்பதை கதிர்வேல் காட்டி விட்டான். நல்ல வேளை நம்பி மோசம் போகவில்லை. இவனைக் கணநேரம் நினைத்தால் கூட அது என் பெண்மைக்கே இழுக்காகி விடும் என்று எண்ணினாள் மதுமதி. கதிர்வேல் தன்னை விட்டு விட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள காரணம் தான் ஓர் ஏழை என்று எண்ணிக் கொண்டு இருந்தாள். ஆனால், அவன் தன்னைவிட ஏழையான, படிப்புக் குறைந்த, அழகில்லாத ஒரு பெண்ணைதான் மணக்க இருக்கிறான் என்று தன் தாயார் கூறியதைக் கேட்டு அதிர்ச்சிக்கு உள்ளானாள். அப்படி என்றால் அவன் என்னை வெறுக்க என்னிடம் என்ன குறை கண்டான்? அதை தெரிந்து கொள்ள வேண்டுமே! எப்படி தெரிந்து கொள்வது என்று அனலில் விழுந்த புழுவாய் துடித்தாள்.
அன்று வேலை முடிந்து தொழிற்சாலையை விட்டு வெளியில் வந்தாள் மது. எதிரே காரில் காத்துக் கொண்டிருந்தான் கதிர்வேல்.
”மது நான் உன்னிடம் கொஞ்ச நேரம் பேச வேண்டும். வருகிறாயா?” என்றான்.
எதுவுமே பேசாமல் மது காரில் ஏறிக் கொண்டாள்.
கிழக்குக்கரைப் பூங்காவிற்குச் சென்று, கடற்கரையோரமாக இருந்த இருக்கையில் உட்கார்ந்தார்கள்.
”உன் அம்மா மூலம் செய்தியை அறிந்திருப்பாய் என்று நம்பு கின்றேன். ஆனாலும் உன்னை என்னால் மணந்து கொள்ள முடியாதற்கு காரணம் என்ன என்பது மட்டும் உனக்குத் தெரியாது என்று நம்புகின்றேன்” என்றான் கதிர்வேல்
“கடைக்குப் போகும் குழந்தை தன்னிடம் இருக்கும் பொம்மை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, புது பொம்மையைக் கேட்கும். அதுபோல உங்களைப் போன்றவர்களுக்கு குணமாவது, மனமாவது? உடம்புதான் முக்கியம். அதன் தளதளப்பும், வாளிப்பும், செழுமையும் வளைவுகளும், இளமையும்தான் முக்கியம். அதான் என்னை விட வேறு ஒன்று கிடைத்ததால் என்னை விட்டு விட்டீர்கள்.”
“என்ன வார்த்தையால் கொல்லாதே மது. நீ நினைப்பது போல் நான் அப்படிப்பட்டவன் அல்ல.”
”அப்படி என்றால், வாழ்ந்தால் உன்னோடுதான் வாழ்வேன் என்று சொன்ன நீங்கள் ஏன் என்னைக் கைவிட்டீர்கள்?”
“அதற்கான காரணத்தை நீ சொல்ல விடவில்லையே”
”என்ன காரணம்? சொல்லுங்க. அதைத் தெரிந்து கொள்ளத்தான் நானும் உங்களோடு வந்திருக்கிறேன்”.
“எங்களுக்கு வயதாகிக் கொண்டு வருகின்றது. எங்களுக்கு இருப்பது நீ மட்டும்தான். அதனால் உனக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறோம்” என்றார்கள் என் பெற்றோர்கள். அதுமட்டுமல்ல, “நீ இந்தக் காலத்துப் பிள்ளை, நீயே பெண்ணைப் பார்த்துக் கொள்கிறாயா அல்லது நாங்கள் பார்க்கலாமா” என்றும் கேட்டார்கள். பெண் பார்ப்பதில் எனக்குப் பச்சைக்கொடி காட்டி விட்டதால், நானே பெண் பார்த்து வைத்திருக்கிறேன் என்றேன்.
“இது இக்காலத்து கோலம். எங்களுக்கு அந்தச் சிரமத்தைக் கொடுக்காமல் நீயே பார்த்துக் கொண்டவரைக்கும் நாங்கள் புண்ணியம் செய்தவர்கள். பெண்ணை எப்போது போய் பார்க்கலாம் என்று கேட்டு வந்து சொல்” என்றார்கள்.
”பெண் உங்களுக்கு நன்றாகத் தெரிந்தவள்தான்” என்றேன். “எங்களுக்குத் தெரிந்த பெண்ணா? யார்?”
“நம் வீட்டுக்குப் பக்கத்து வீட்டு பெண்தான். மதுமதி” என்றேன். மகிழ்ச்சி அடைய வேண்டியவர்கள் வருத்தப்பட்டார்கள். ”ஏன் ஏழை என்பதாலா அல்லது அதிகம் படிக்காததாலா?” என்றேன்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை. ஒரு பெண்ணுடன் வாழப் போகிறவன் நீ. அவள் ஏழை, படிக்காதவள் என்பது உனக்குத் தெரிந்ததுதான். அவளுடன் உன் வாழ்வு எந்த முறையில் அமையும் என்பதை அறிந்து கொண்டுதானே நீ அவளை விரும்பி இருக்கிறாய்? அதில் நான் எதுவும் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால் என்னுடைய மரியாதையை நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். அதனால்தான் அந்தப் பெண் வேண்டாம் என்கிறேன்” என்று கூறினார் என் அப்பா.
“உங்களுடைய மரியாதைக்கு மதுமதியால் எப்படி பங்கம் ஏற்படும்?” என்றேன்.
“ஏற்படும்”
“அதுதான் எப்படி?”
“அன்பானந்தமும் லெட்சுமியும் அந்தப் பெண்ணுடைய உண்மையான அப்பா, அம்மா இல்லை. மதுமதி அவர்களுடைய வளர்ப்பு பெண். அந்தப் பெண்ணின் குலம். கோத்திரம் என்ன என்பது எல்லாம் தெரியாது.”
“அதனால் என்னப்பா? அவள் செம்புலத்து நீராக இருக்கிறாளே”
“இருக்கலாம். ஆனால் அந்த நீர் இந்த வீட்டுக்கு வேண்டாம் என்கிறேன். இது என்னுடைய இறுதியான உறுதியான முடிவு. உன் விருப்பப்படி படிப்பறிவு குறைந்த, அழகற்ற பெண்ணை உனக்குத் தேர்ந்து எடுத்துத் தருகிறேன்” என்று கூறிவிட்டார்.
“வளர்த்தகிடா மார்பில் பாய்வது போல என் பெற்றோர்களைப் புறக்கணித்து விட்டு வாழ நான் விரும்பவில்லை. என்னை மன்னித்து விடு.” என்றான் கதிர்வேல்.
”என்னுடைய வாழ்க்கையில் இப்படி ஒரு மர்மம் இருப்பதே இப்போதுதான் எனக்கே தெரிகிறது. அதைச் சொன்னதற்கு மிகவும் நன்றி. நீங்க. என்னை நினைத்து வருந்த வேண்டாம்” என்றாள் மதுமதி.
அன்பானந்தமும் லெட்சுமியும் திருமணம் செய்து கொண்டு நீண்ட நாட்களாக பிள்ளை செல்வம் பெறாததால் மதுமதியைத் தத்து எடுத்து, தங்கள் தன் பிள்ளையாக வளர்த்து வருகிறார்கள் என்ற உண்மையை அறிந்து கொண்டாள். தன்னைத்தானே தேற்றிக் கொண்டாள்.
கதிர்வேல் திருமணத்திற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. விடிந்தால் திருமணம். ஏதோ வேலையாக வெளியில் சென்ற கதிர்வேல் கார் விபத்துக்கு உள்ளானான். தலையில் அடிபட்டு அதிக இரத்தம் வெளியாகி விட்டது. அந்த இரத்தத்தை ஈடுகட்ட இரத்த வங்கியில் போதுமான இரத்தம் இல்லை. உடனடியாக இரத்தம் செலுத்தாவிட்டால், உயிருக்கே ஆபத்து என்று டாக்டர்கள் கூறிவிட்டார்கள். கதிர்வேலின் அப்பா இரத்தத்திற்காக தனது உற்றார், உறவினர், நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று எல்லாரிடமும் தொடர்பு கொண்டு பார்த்தார். ஆனால் கதிர்வேல் இரத்தப் பிரிவு கிடைக்கவே இல்லை.
வேலை முடிந்து வீடு திரும்பிய மதுமதிக்கு அந்தச் செய்தி தெரிய வந்தது. துடிதுடித்துப் போனாள். உடனே மருத்துவமனைக்குப் புறப் பட்டாள். கதிர்வேலைப் பார்த்து கண்ணீர் வடித்தாள். அங்கிருந்த டாக்டரிடம், தன்னுடைய ரத்தத்தைப் பரிசோதனைச் செய்து பார்க்குமாறு கேட்டுக் கொண்டாள்.
பரிசோதனை முடிவில், கதிர்வேல் இரத்தமும், அவளின் இரத்தமும் ஒரே பிரிவைச் சேர்ந்ததுதான் என்று தெரிய வந்தது. உடனே தன்னுடலிருந்து தேவையான இரத்தத்தை எடுத்துக் கொள்ளுமாறு கூறினாள் மதுமதி.
மருத்துவர் உடனே அவள் உடலிலிருந்து இரத்தம் எடுத்து, கதிர்வேலுவுக்குச் செலுத்தினார். இரத்தம் செலுத்தப்பட்ட பின் கதிர்வேல் இலேசாகக் கண்விழித்தான். அதைப் பார்த்த மது பெரு மகிழ்ச்சி அடைந்தாள். அந்த நேரத்தில் கதிர்வேலின் உற்றார் உறவினர் கூட்டம் அங்கே வந்தது. மதுமதி அக்கூட்டத்திற்குத் தெரியாமல் அங்கிருந்து நழுவி விட்டாள்.
கதிர்வேல் கண்விழித்து இருப்பதைக் கண்ட அவர்கள் அனைவரும் ஆனந்தமடைந்தார்கள். ஆச்சரியப்பட்டார்கள். அவன் உடலில் பாய்ந்து கொண்டிருக்கும் இரத்தம் ஏது? எப்படி கிடைத்தது? கதிர்வேலின் அப்பா அங்கிருந்த தாதியிடம் கேட்டார்.
அந்தத் தாதி நடந்ததைச் சொன்னாள். கதிர்வேலின் தந்தையும் தாயும் அப்போதுதான் மனிதர்கள் ஆனார்கள். பெற்றவர்கள் யார் என்பது தெரியாததால் தனக்கு மருமகளாக வரக்கூடாதுஎன்று சொன்னவளுடைய இரத்தம் தன் மகனுடைய உடலில் பாய்ந்து அவனைக் காப்பாற்றி விட்டது. இரத்தத்திலே இல்லையே குலமும் கோத்திரமும். அப்புறம் என்ன சாதி, குலம் வேண்டி கிடக்கிறது? எல்லாரும் மனிதர்கள்தான். இருப்பவன் பணக்காரன். இல்லாதவன் ஏழை என்ற வேறுபாட்டைத் தவிர வேறு என்ன வித்தியாசம் இருக்கிறது? என்ற உண்மைகளை உணர்ந்து கொண்டார்கள். உடனே மதுமதியைப் பார்த்து. தன் மகனுக்கு மறுவாழ்வு அளித்ததற்கு நன்றி கூறினார்கள். அவளின் வாழ்வைக் கெடுத்ததற்காக தங்களை மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டார்கள்.
இந்த உலகில் பிறந்தவர்கள் ஒருவருக்கொருவர் ஏதாவது ஒரு வகையில் உதவுபவர்களாக வாழ வேண்டியது அவசியம் என்று நினைப்பவள் நான். அத்துடன் யார் யாருக்கு எப்படி எப்படி நடக்க வேண்டுமோ அது நடந்துதான் தீரும் என்ற நம்பிக்கையும் எனக் குண்டு. எனவே உங்களை நான் மன்னிக்க வேண்டியதில்லை. ஓர் உயிரைக் காப்பாற்றும் பேறு பெற்றதற்காக நான் அந்த இறைவனுக்கு நன்றி கூறிக் கொள்ளுகின்றேன். நீங்கள் போய் வாருங்கள் என்றாள் மதுமதி.
எல்லாவற்றையும் அறிந்த கதிர்வேல் மதுமதியின் உயர்ந்த பண்பை எண்ணி உள்ளம் பூரித்தான்.
தனக்கு முதல் பிள்ளை பெண்ணாக பிறக்க வேண்டும். அதற்கு மதுமதி என்று பெயரிட்டு, மதுமதியை என்றென்றும் மறக்காமல் அழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.
– காலம் கடந்து விட்டது, முதற் பதிப்பு: ஏப்ரல் 1990, 25வது ஆண்டு நிறைவு விழா, இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு வெளியீடு, சிங்கப்பூர்.
![]() |
இரா.துரைமாணிக்கம் (பிறப்பு: அக்டோபர் 15 1945) இவர் ஒரு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளராவார். தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம் வேப்பக்குளம் எனுமிடத்தில் பிறந்த இவர் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து அங்கு விவேகானந்தர் தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியையும், உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றார். தமிழ், ஆங்கிலம், மலாய் போன்ற மொழிகளில் தேர்ச்சிமிக்க இவர் தமிழாசிரியராகப் பணியாற்றிவந்தார். அத்துடன் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் 1999ல் சிங்கப்பூர்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
எனக்கெனவே… நீ… கிடைத்தாய்!
ஆர்.மணிமாலா
August 19, 2026
இரட்டைப் பின்னல் இந்திரா
இரா.கலைச்செல்வி
August 19, 2026
ஒரு ஆணின் மௌனம்!
கல்பனா ராஜகோபால்
August 19, 2026
