ஆனந்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 1, 2026
பார்வையிட்டோர்: 1,696 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரத்தினசிங்கம் கோகுலராகவன் பளை, புலோப்பளை மேற்கைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 05 – 11 -1972 இல் பிறந்தவர். பல சிறுகதைகளையும் பல கவிதைகளையும் எழுதிய இவரின் ஆக்கங்கள் சஞ்சீவீ, சரிநிகர், தாயகம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. ஆசிரியராகக் கடமையாற்றுகின்றார். மனிதமனங்களில் உறங்கி இருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்து வதை இவரது கதைகளில் காணலாம்.


ராயாண்ணைக்கு ஆயிரம் வலையை ஒருங்கு சேர இழுத்த களையாக, உடம்பு எந்த வழிக்கும் வராமலிருந்தது. ஏன் இப்படி களைக்கின்றது என்று புரிபடாமல், மனம் களைத்துப் போயிருந்தால் உடம்பும் களைத்துவிடும் என்பது உண்மை போலப்பட்டது. 

மாரிகால குளம் போல நிரம்பி இருந்த மனம் இன்று கோடை யில் வெடித்த தரவை போல வரண்டு போய்க்கிடக்கின்றது. ஐம்பது வயதில் எழுபது வயது மூப்பு. 

ஏன்? ஏனாயிற்று இப்படி? 

வாங்கிலால் எழுந்து வெளியே வந்து குசினிப் பக்கம் போய் தண்ணீர் எடுத்துக் குடித்தார். பசி இல்லை. மனைவியைக் காணோம். தமக்கை வீட்டுப் நண்பர்கள் வெளியீடு பக்கம் போயிருப்பாள். அவளுமென்ன கிழவிக்கோலம். யாருக்கு யார் ஆறுதல் சொல்ல? சொல்லு முன் வெடித்துக் கிளம்பும் அழுகை புயல் போல. துயரநதி பெருக்கெடுத்து மன ஊர் அழிந்து போய்க் கிடக்கின்றது. 

இரவு மெளன நிலவில் சலங்கை மாட்டு வண்டி ‘ஜல்….. ஜல்…..’ என்று ஓடுவதுபோல ஓடிச் சென்ற வாழ்க்கை இன்று தடம்புரண்டு பாலை வெளியில் துவண்டு கிடக்கின்றது. 

ராயாண்ணை ஓட்டி அந்த வண்டிக்குள் மனைவி, அவள், மடியில் பச்சைத் துவாய்க்குள் சுற்றி, பிறந்து பத்து நாளான முத்துக்குட்டி. முத்துவே போதும் பிறகென்ன முத்துக்குட்டி? எவ்வளவு ஆசை. அம்மன் தந்த பிரசாதம், அருட்பொங்கல், தவம் இயற்றிய பின் கிடைத்த மாவரம். 

பனிக்கும் நினைவுகள் தந்தவனே; போனாயா? திரும்பி வராத்திசைக்கு! 

குலம் காக்கவென வந்தான். மடியில் தவழ்ந்தான். நெஞ்சு மயிர் பிடித்திழுத்தான். 

ராயாண்ணைக்கு நல்ல ஞாபகம். பரவைக் கடலில் வலைபடுத்தியிருந்தார். பின்னரே மீன் இழுத்து, இழுத்து ஒதுக்கி கூடைக்குள் போட்டுக் கொண்டிருந்தார். 

“ராயாண்ணை கெதியா…..வா…” 

கரையில் இருந்து தேவு கூப்பிட்டான். 

“என்னடா….. கொஞ்சம் பொறு வாறேன்….’ ‘இவன் பாவி கள்ளுக்கு போக கூப்பிடுவான்’ “உனக்கு பொடியன் பிறந்திருக்கிறான்” 

ராயாண்ணைக்கு தான் நிற்பது பரவைக் கடலா? ஆனந்தக் கடலா? என்று புரியவில்லை. மீன் கூடையுடன் கரைக்கு வந்தார். தேவு சந்தைக்கு போனான். 

ராயாண்ணை ஆஸ்பத்திரிக்கு வந்தபோது தாய்க்குப் பக்கத்தில் முத்துக்குட்டி. கண்கள் மூடி, இளம் சூட்டில், மாநிறத்தில் – முரல் குஞ்சுபோல், வைத்த கண் வாங்காமல் பார்த்தார். இவ்வளவு கால கவலை தீர்ந்தது, அந்தப் பெயர் போயிற்று. இனி தானும் அறுகரிசி போடலாம். நாள்ப்பச்சை கொடுக்கலாம். முழுவியத்துக்கு வரலாம் கைவிசேடம் கொடுக்கலாம். 

கண்கள் கலங்கியது எண்ணங்களினால். “முத்துக்குட்டி எங்கையப்பன போய்விட்டாய்?” 

வருவது போல வருகின்றன ஆனால் வருவது இல்லை. ஒரு மாயை காட்டி மறைந்துவிடுகின்றன. ஆனால் கற்பனைகள் சும்மா விடுமா? எவ்வளவு பாசத்தை வைத்து வளர்த்த பிள்ளை. ஒரே பொழுதில் போய்விட்டான். 

அம்மன் கோயில் திருவிழா என்றால் போதும் முத்துக் குட்டிக்கு ஒரே கொண்டாட்டம்தான். பதினைந்து நாளும் குதூகலம். ஊரே குதூகலம், முத்துக்குட்டிக்கு ஆகக் குறைந்தது மூன்று, நாலு சோடி உடுப்பு எடுபடும். 

முத்துக்குட்டி பிறந்த பின்னர் ராயாண்ணைக்கு தொழில் சிறப்பாயிற்று. நாலு புதுவலை வாங்கியிருந்தார். நாளுக்கு ஐநூறு ஆயிரம் என்று மீன் விற்கும். முத்துக்குட்டி ஒரு செல்வம். 

திருவிழாக் காலங்களில் தொழில் இல்லை. மாலை நேரங்க ளில் ஏதாவது கலைநிகழ்ச்சி நடைபெறும். முத்துக்குட்டியைத் தோளில் தூக்கி இருத்திக்கொண்டு வெண் மணலுக்குள்ளால் நடக்கையில் கடற்காற்று இதமாய் வருடிவிடும். மனதில் ஆனந்தம் பொங்கும். திரும்பிவர பத்து மணியாய்விடும். முத்துக்குட்டி நித்திரையாய் விடுவான். தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு வீட்டை நோக்கி கச்சானும் வாங்கிக்கொண்டு நடப்பார்கள். 

விடிய எழும்பியவுடன் முத்து “கச்சான்” முதல் வேலையாய்க் கேட்பான். 

நடந்து வரும்போது மனைவி சொல்வாள். 

“முத்துவுக்கு ஊருக்கதான் கல்யாணம் செய்யவேணும்.’ ராயண்ணைக்கு தெரியும் மனைவியின் எண்ணம். தமையனின் மகளை நினைத்துக் கொண்டு மனைவி சொல்கிறாள். அவருக்கும் அது நல்ல விருப்பம். ஆனால் காலத்துக்கு எதுவுமே விருப்பமில்லையா? 

அவருக்கு தன்னூர் சொர்க்காபுரி. சாகினும் இந்த மண்ணில் கிடந்துதான் சாகவேண்டும். என்ன அழகான ஊர்! ஊருக்குள் நுழைய, வரவேற்று அம்மன் கோயில். இப்படி எங்காவது ஊர் இருக்குமா? கொஞ்சம் யாழ்ப்பாணத்தை விட்டுத் தூரம்தான். கடற் பயணமும் உண்டு. அம்மன் கோயில் கோபுரம் படகில் வரத் தெரியத் தொடங்குகையிலேயே மனதின் களை பறந்தோடிவிடும். 

கோயிலை கும்பிட்டுக்கொண்டு வீட்டுக்கு நடக்கத் தொடங்கு கையிலேயே யாரோ தூக்கிக்கொண்டு வந்துவிட்டது மாதிரி இருக்கும். 

இந்த முறையும் திருவிழா பெரிதாக நடந்தது. ஏராளம் சனம் வந்து போனார்கள். இடம்பெயர்வுக்கு பிறகு நடந்த திருவிழா. தேருக்கு மாத்திரம் லட்சம் சனமாம். 

ராயாண்ணை போகவில்லை. முத்து இல்லாத திருவிழா ஒரு திருவிழாவா? 

இத்தனை ஆயிரம் பேருக்கு அருள் செய்த நீ எனக்கேனம்மா இப்படிச் செய்தாய்? கேட்டதும் தந்தாய். அதற்காட்டிலும் தராமல் விட்டிருக்கலாம். கண்களைத் துடைத்துக்கொண்டார். 

திருவிழாவுக்கு முத்து, முதல் முதல் வேட்டி உடுத்தது ஞாபகம் வந்தது; சுத்தி சுத்தி தடக்குப்பட்டு விழுந்தது; பின் இவர் முழங்காலை மடித்து வேட்டியை ஈயப் பண்ணி நடக்கக் காட்டிக் கொடுத்தது; புது மாப்பிள்ளை போல முத்து கோயிலுக்குப் போனது, எல்லாம் உயிரைப் பிடுங்கித் தின்றன. தான் உழைத்து எடுத்த ஆந்திரா பச்சைக்கரை வேட்டி அவனுக்கு பச்சை என்றால் கொள்ளை ஆசை. அதுதான் பச்சையாகவே போய்விட்டனவா? 

உழைப்பில் முத்து கெட்டிக்காரன். எல்லாத் தொழில்முறை யும் தெரியும். நல்ல பிரயாசி. இவரிடம் ஐந்து கட்டுவலை இருந்தன. அவனும் தொழிலுக்கு வர இன்னும் சில வலைகள் வாங்கினார்கள். நல்ல வியாபாரம். கஷ்டம் எதுவும் இல்லை. மோட்டார் சைக்கிள் ஒன்றும் வாங்கி ஓடினான். மச்சினி வீட்டுப் பக்கம் ஹோர்ன் அடித்தான். ராயாண்ணை சிரித்தார். ‘பொறு பொறு அடுத்த ஆவணிக்கு அவளையே ஏத்திக் கொண்டு போ’ 

ஆவணி வந்தது. 
முகூர்த்தம் வந்தது. 
மச்சினியும் காத்திருந்தாள். 
முத்துதான் இல்லை 
முத்துவும் மாமனும் குடாவுக்குள்ளே வலை கட்டி இருந்தார் கள். நல்ல முரல் படும். வெள்ளாப்பில் போனால்தான் முழு மீனையும் எடுத்து முடிக்கலாம். கருக்கலில் எழுந்து போய்விட்டார்கள். 

ராயாண்ணைக்குக் கொஞ்சம் காய்ச்சல் குணம். பேசாமல் படுத்துவிட்டார். 

அவர்கள் போய் அரைமணி நேரம் இருக்கும். 

குடாப்பக்கம் படபடவென வெடி கேட்டது. திடுக்கிட்டு எழும்பினார். ‘தாயே அவர்களைப் பார்த்துக் கொள்ளம்மா’ 

ஆனால் தாய் அவர்களைப் பார்த்துக்கொள்ளவில்லை. ரோந்து வந்த நேவிப் படகில் இருந்து கிளம்பியவெடிகள் மாமனை யும் முத்துவையும் சரித்தன. முத்துவுக்கு பழுவெடி. துடித்திருப்பானா? 

எல்லாம் முடிந்து போயிற்று. ராயாண்ணையின் கனவு கலைந்தது. இனியென்ன? 

மன்னிப்புக் கேட்டார்கள். கவலையாகக் காட்டிக்கொண்டார் கள். மன்னித்தென்ன? மன்னிக்காமல் விட்டென்ன? 

முத்துக்குட்டி வரமாட்டானே, மையத்தைதக் கூடத் தர வில்லை. ராயாண்ணைக்கு எல்லாம் இருண்டது. ஒரு கணம். கதறி அழுதார்; புரண்டார்; தவித்தார். 


எல்லாம் முடிந்த கதை. 
கனவாகிக் கலந்த கதை. 
கண்ணீரில் தொலைந்த கதை. 
ஆசைக்கு ஒரு பிள்ளை. இழந்தாயிற்று. இனி வாழ்ந்தென்ன? விட்டென்ன? 

இதழ் சுமந்த மென் புன்னகையோடு முத்துக்குட்டி ஓர் அதிகாலை அகாலமாய் போய்விட்டான். 

அவன் போனபிறகு தொழில் பட்டுப்போயிற்று. வலையைக் கையில் எடுக்க மனம் வராது. வேண்டாம். எதுவுமே வேண்டாம். ஆசை வேண்டாம். இருந்துவிட்டுப் பேசாமல் செத்துப் போய்விடலாம். இனி சாவதற்குத்தான் வாழ்வு. 

வலைகளை பூச்சிகள் தின்றன. தேவு வந்து ஒரு வலையை எடுத்துப் போனான். 

அவன் தான் கறிக்கு மீன் கொண்டுவந்து கொடுப்பான். அரிசி, புளி வாங்கி வருவான். சமையல் மனைவி ஒரு நேரம் சமைப்பாள். இருவரும் ஏதோ உயிர் வாழச் சாப்பிடுவார்கள். முத்துக் குட்டி செத்தபின்பு நாக்குச் செத்துப்போயிற்று. 

மாலை மனைவி அரிசி இல்லை என்றாள். பெருமூச்சுடன் கையில் இருந்த காசுக்கு அரிசி வாங்கி சோறாக்கி கொஞ்சம், கொஞ்சம் சாப்பிட்டனர். முத்து பக்கத்தில் இல்லாத சாப்பாடு சாப்பாடா? 

ஏழு மணிக்கு கருக்கலில் படலைப் பக்கம் “ஐயா” என்ற குரல். 

படலையைத் திறந்தபடி இரண்டு சின்னப் பையன்கள் வந்தனர்.

“ஆர் தம்பியவை நீங்கள்”? 

“நாங்களையா பக்கத்து ஊர்” 

“என்ன அலுவல் பிள்ளைகள்?” 

“இந்த ஊர் பள்ளிக்கூடக் கட்டடத்துக்கை நிறையப் புறாக்கள் இருந்து எச்சம் போடுதுகள். பிடிக்க வந்தம்.” 

“பிடிச்சியளோ?” 

“இரண்டு பிடிச்சமய்யா. ரொம்பக் களை. பசிக்குது. இரண்டு நாளாக சாப்பாடு சரியில்லை.’ 

ராயாண்ணைக்கு திக்கென்றது. வீட்டில் ஒரு மணி சோறும் இல்லை. அவர் வீட்டில் சாப்பாடு கேட்டு யாருக்கும் இல்லையென்றது கிடையாது. மனதுக்கு கனமாக இருந்தது. 

எழுந்து தேவு வீட்டுக்கு ஓடினார். அவனிடம் கொஞ்சம் சோறும் கறியும் இருந்தது. 

எடுத்து வந்து இரண்டு பையன்களுக்கும் கொடுத்தார். அவக் அவக்கென்று சாப்பிட்டார்கள். மீசை கூட அரும்பவில்லை. 

“தம்பியவை சின்ன வயதில ஏனிந்தக் கஷ்டம்?” 

“என்னையா கஷ்டம். இந்தப் புறாக்கள் கேட்டுக் கேள்வி யில்லாமல் வந்து இருக்குதுகள் பிடிக்காமல் விடமாட்டம்” 

குரல் தொனியில் உறுதி தெரிந்தது. எழுந்தார்கள். 

“இனி போகலாமோ? 

‘ஒழுங்கை வழிய போயிடுவம்” 

தன்கையால் சாப்பாடு கொடுக்காதது ராயாண்ணைக்குக் கவலையாய் இருந்தது. 

சில நாட்கள் கழிந்தன. இதனை மறந்துவிட்டார். ஒரு மாலைக் கருக்கலில்… 

“ஐயா” அதே குரல்.

“வாங்கோ தம்பியவை’

அதே பையன்கள்.

“பசிக்குது ஐயா” 

ஒரு மாதிரி வீட்டில் இருந்த சோறும் இறால் கறியும் போட்டுக் கொடுத்தார். 

“நன்றி ஐயா. இண்டைக்கும் இரண்டு புறா பிடிச்சம். பள்ளி முழுக்க எச்சம். ஒரே மணம். ஊரே நாறுது. விடமாட்டம் பார்ப்பம்” 

போய்விட்டார்கள். 

இப்ப தேவுவின் உதவியும் பெரிதாகக் கிடைப்பதில்லை. அவனும் பிள்ளை குட்டிகாரன். 

தொழில் பாடு வாய்ப்பதில்லை. ஆனாலும் இவைக்கென்ன? சும்மா முத்திரை அரிசி போதும். 

ஆனால் இந்தப் புறாப் பிடிக்கும் பையன்கள் திடீரென சொல்லாமல் கொள்ளாமல் சாப்பிட வந்து விடுவார்கள். ஒருநாள் எதுவுமில்லாமல் திருப்பி அனுப்பிவிட்டார். அழுகை வந்தது. 

நாளைக்கு சிலவேளை கருக்கலில் வந்தாலும் வருவார்கள். சாப்பாடு கொடுக்க வேண்டும். என்ன செய்வது? தேவுவிடம் கடன் கேட்பமா? அவனிடம் கேட்டுப் பயனில்லை. அவனுக்குச் சரியான கஷ்டம் என்ன செய்யலாம்? 

நேரம் நாலு மணி போலப்பட்டது. எழுந்து போய் வீச்சு வலையை ஏத்தில் இருந்து இழுத்து எடுத்துப் பார்த்தார். 

ஓட்டை எதுவுமில்லை. தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு கடலை நோக்கி நடந்தார். மூன்று வருடங்களுக்குப் பின் கடலுக்குப் போகின்றார் புறாப் பிடிக்கும் பையன்களுக்காக. 

வலையை வீசினார். முதல் வீச்சிலேயே பாலை மீன் ஒரு கிலோ வரும் பட்டது. பிறகும், பிறகும் மொத்தம் ஏழு கிலோ வரும். பட்டது கணக்குப் பார்த்தார். முந்நூறுக்குக் குறையாமல் வரும். போதும் அவர்களுக்கு வயிறாற சாப்பாடு கொடுக்க இவ்வளவும் போதும். 

ராயாண்ணை மீன் கூடையைத் தூக்கிக்கொண்டு சந்தையை நோக்கி நடக்கத் தொடங்கினார். 

– இங்கிருந்து… பன்னிரண்டு சிறுகதைகள், முதற் பதிப்பு: 2001, நண்பர்கள் வெளியீடுபதிப்பகம், நல்லூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *