இரவு
கதையாசிரியர்: சிவாணி
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 1, 2026
பார்வையிட்டோர்: 3,773
(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

செல்வீசிவாணி ஸ்ரீஸ்கந்தராஜா நல்லூரைச் சேர்ந்தவர். 13- 12-1975ல் பிறந்தவர். தற்பொழுது யாழ் பல்கலைக்கழகத்தில் வணிகத்துறை இறுதியாண்டு மாணவியான இவர் சிறுகதைணு, கவிதை, நாடகம், ஓவியம் அறிவிப்புத்துறை என்பவற்றில் ஈடுபாடுள்ளவர்.வீரகேசரி, தினகரன், மல்லிகை, மறுமலர்ச்சி, சஞ்சீவி, சுடரொளி ஆகியவற்றில் எழுதியவர் பல்வேறு பரிசில்கள் பெற்றவர். பெண்மையை முன்னிலைப்படுத்தி பலதரப்பட்ட பிரச்சினைகளை அலசுவதை இவரது கதைகளில் காணலாம்.
சூரியன் தன் வேலையை முடித்துக் கொண்டு திரும்புகிற பொழுது. காலப்பெண், தன்னாடையை மாற்றிக்கொண்டு நிலவு நாயகனுக்காய் தவமிருக்கிற காட்சி. பொத்தல் விழுந்த வானம் தன் மினுக்கங்களைத் தட்டி விளையாடி ரசித்துக் கொண்டிருக்கின்றது.
“இரவின் நிறம் கறுப்பு”
அம்மா நான்காம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சொல்லிக் கொடுத்திருக்கிறாள். தன்னுடைய நீண்ட விரல்களால் புத்தகப் பக்கங்களைத் தட்டிக்கொண்டு சொற்களைக் கூட்டி வாசிக்கும் விசித்திரம். அம்மாவின் அந்த நளினத் தன்மையை எப்படி மறக்க முடியும். அவளுக்கு இரவு என்றால் மிகவும் பிடிக்கும். அப்பாவுக்குப் பக்கத்தில் இருந்து கொண்டு என்னையையும் தங்கையையும் அணைத்தபடி நிலவுக்குள் இருக்கிற ஔவைப் பாட்டியைப் பற்றி எத்தனை அழகாகக் கதைப்பார்.
“இந்தப் பனிக்குளிருக்க சின்னதுகளையும் வைச்சுக்கொண்டு அப்பிடி நேரம் போறது தெரியாமல் என்ன ஆராய்ச்சி?”
குசினிக்குள்ளே இருந்து கத்துகிற அம்மம்மாவையும் பொருட் படுத்தாமல், அம்மா அந்த இரவுகளை இரசித்திருக்கிறாள். அம்மா வுக்கு வட்டக் கண்கள். அவை எப்போதும் சிரித்தபடி தான் இருக் கும். முட்டைக் கண்கள் என்று அப்பா சொல்லியிருக்கிறார். அம்மா வுக்கு அப்பா என்றால் உயிர். அப்பாவும் அவளை விட்டு பிரிந்து வாழ விரும்பாதவர்.
“தம்பி நீ படிச்சு பெரிய டொக்டரா வரவேணும். தங்கச்சி யைக் கண்கலங்காமப் பார்க்க வேணும்”
அம்மா ஒரு இரவில் இதைச் சொல்லியிருந்தாள். பனிக் குளிருக்குள்ளும், மழை நடுக்கத்திற்குள்ளும் அம்மாவின் மடியின் கதகதப்பு அப்படியொரு இன்பம் கொடுக்கும். நானாக எழுந்து போகும்வரை அவள் என்னை விரட்டியதே இல்லை.
அம்மா மிகவும் நல்லவள். அவள் தன் குடும்பத்தின் எதிர் காலம் பற்றியே நிறையச் சிந்தித்தாள். ஒவ்வொரு இரவிலும் இவள் இதுபற்றித்தான் அப்பாவுடன் விவாதிப்பாள்.
“சைக்கிள் கடை வச்சிருந்து எத்தின நாளைக்கு இப்படி உழைக்க முடியும். நீங்கள் சின்ன வியாபார மெண்டாலும் செய்தா கொஞ்சம் சேமிக்கலாம்” (சாடிக்கேற்ற மூடிதான் அப்பா. அம்மா சொல்லும் எதற்கும் மறுத்துப் பேசியது கிடையாது. தனக்குப் பிடிக்காத செயல்தான் என்றாலும் ஒரு சிறிய புன்னகையால் அதற்குப் பதில் கொடுத்துவிட்டு அமைதியாக இருந்துவிடுவார்.
“இரவு” என்றால் அப்படியொரு மகிழ்வு. பகல் முழுவதும் கதைத்து சந்தோசப்படமுடியாத வேலைச்சுமையை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வருகிற அப்பா. அப்பாவின் அருகாமைதான் அம்மாவுக்கு இன்பம். மார்பு மீது தூக்கி வைத்திருக்கும் தங்கச்சியின் மழலை மொழியைக் கேட்டு இருவரும் சந்தோஸப்படுவது என்றைக்கும் பெற்றுவிட முடியாத ஆனந்தம்.
அந்தக் கரிய இருளில் அம்மாவின் கறுப்பு முகத்தில் ஜொலிக்கின்ற மூக்குத்தியின் ஒளி எனக்குப் பிடிக்கும். அம்மாவுக்கு அந்த மூக்குத்தி கொள்ளை வடிவு. அடிக்கடி சுட்டுவிரலால் அதை அழுத்திவிடும்போது ஏற்படும் அந்த நளினம் அம்மாவின் அழகைப் பல மடங்காக்கும். அந்த மூக்குத்திதான் பின்பு அம்மாவை எமக்கு அடையாளம் காட்டப் பயன்பட்டது. அது பெரிய கதை…….!
சில நேரங்களில் கண்டிப்பாகவும் இருக்கும் அவள் வீண் பொழுது போக்காமல் படிக்கும்படி சொல்வாள். அம்மாவின் அன்புக்குக் கட்டுப்பட்டு ஒருபோதும் அவளது சொல்லை மீறியதில்லை.
இரவைப்பற்றி சொல்லும் போதெல்லாம் அம்மாவின் கண்களில் மின்னல் அடிக்கும். சந்தோஷம் பீறிடும். கறுப்பு நிறத்திற்கு சோகம் குறியீடு என்பதை அவள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லை. கறுப்பில் கலந்திருக்கும் உணர்வை தனக்குள்ளே ஒரு அமைதியான கோணத்தில் ரசிப்பாள். அமைதியான இரவுகள் தான் அவளுக்கு அதிகம் பிடிக்கும். ஏனென்றால், அவள் பிறர்மனம் நோகும்படி நடந்துகொள்ளாதவள்.
ஆனால் அம்மாவை எங்களிடம் இருந்து பிரித்துக்கொண்டு போனதும் அந்த இரவுதான். அம்மா ரசித்து மகிழும் இரவு அவளுக்கு எதிரியாகப் போய்விடும் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. கூட்டுக்குள் முட்டை பொரித்து அடைகாத்த சிட்டுக்குருவி போல அம்மாவின் நிலை. அவளுக்கு எங்களை விட்டுப் போக மனமில்லை. அப்பாவும் மென்மையான குணம் கொண்ட அம்மாவும் இணைந்து போனபோது நான் வெகுவாகச் சிந்தித்தேன். அப்போது இந்தத் துயர நேரத்தில் அழுகை வரவில்லை. சாதாரணமாக அம்மா எங்கேயும் போகும்போது கூறுவது போலத்தான் கூறினாள்.
“போட்டு வாறன் தம்பி. தங்கச்சியைப் பார்த்துக்கொள்”
விடிந்ததும் வருவார்கள் எனத்தான் பக்கத்து வீட்டு தர்மா அன்ரியும் சொல்லிச் சென்றாள். ஆனால் இன்றுவரை எத்தனையோ காலைப்பொழுது வந்துவிட்டது. அம்மாவும் அப்பாவும் வரவேயில்லை.
அப்போது சிந்திக்கவும் முடியாத அழவும் முடியாத வயது. அம்மம்மாவின் அரவணைப்பில் வாழவந்தபோது எல்லாம் வித்தி யாசமாக இருந்தது.
“குஞ்சு ஒண்டையும் யோசிக்கப்படாதப்பன். படிக்க வேணும். படிச்சு முன்னுக்கு வரவேணும்…..! அம்மா வருவாதானே? வரேக்க நீங்கள் படிச்சு கெட்டிக்காரப் பிள்ளையளா இருக்கவேணும்”
அம்மம்மாவின் ஓலைக்குடிசை ஒரு பெருங் ளேவிக்குறியை ஏற்படுத்தும். அவள் தருகிற கஞ்சியும் கூழும் அம்மா தருகிறதைப் போல இல்லாவிட்டாலும் இரத்தத்தில் கலந்து ஒட்டுறவாக அவளோடு நன்றாக ஒட்டிப்போய், இப்போது எல்லாம் அவளாகவே ஆகிப்போனது.
அந்த இரவு ஏன் வந்தது?
இரவை இரசிப்பதற்காக நேரம் போவதைக் கூட பொருட்படுத் தாத அம்மா இரவு உணவைக் கூட வயிற்றில் நிரப்பாமல் வெறும் வயிற்றோடு போனாளே….?
அப்பாவோடு இணைபிரியக்கூடாது என்பதில் அவளுக்கு அப்படியொரு பேரவா. அதைப் போலவே அவர் பின்னால் போய்விட்டாள். அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்றவர்கள் பற்றி எதுவும் தெரிந்திருக்காவிட்டாலும் முகத்தில் தெரிந்த கொடூரம் மனதை என்னவோ செய்தது. அப்பாவும், அம்மாவும் என்ன பிழை செய்தார்கள்.
குழந்தைகள் எங்கள் இருவரையும் வைத்துக்கொண்டு தாங்களும் குழந்தைகளாகி விடும் இவர்கள் என்ன பிழை செய்திருப்பார்கள்? அம்மம்மாவிடம் இது பற்றிக் கேட்கும் போதெல்லாம் மூக்கைச் சிந்தி அழுவதைத் தவிர வேறு எதுவுமே அவளால் செய்யமுடிவதில்லை. அடிக்கடி பத்திரிகையை எடுத்துப் பார்த்துக் கொள்வாள்.
“உங்களுக்கொண்டும் தெரியாதப்பன். நீங்கள் சின்னப்பிள்ளையள், கொம்மாவும், கொப்பாவும் கெதியில வருவினம். நீங்கள் கவனமாகப் படிக்கோணும்.” சிரித்தபடி சொல்லிவிட்டு பின் விக்கி விக்கி அழுவாள். இந்த நிலைபற்றி என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. கூடப்படிக்கும் சங்குவிடம் கேட்டபோது.
“உங்கட அப்பாவும் அம்மாவும் சாமியிட்டப் போயிற்றினம்’ எனக்கு சங்கு சொன்ன பதில் நம்பிக்கையைத்தருவதாக இல்லை. இதை எப்படி ஏற்றுக்கொள்வது? சாமியிடம் போவெதென்றால் படுக்க வைத்து மாலை போட்டு, மேளம் அடித்து…..! இப்படி எதுவும் இல்லாமல் நடந்து போன அப்பாவும் அம்மாவும் எப்படி சாமியிடம் போக முடியும் என்பது என் மனதில் அழியாமல் இன்றைக்கும் நிலைத்திருக்கும் வினா? ஆனால் திடீரென்று ஒருநாள் அம்மம்மாவின் அலறல் கேட்டு படித்துக் கொண்டிருந்த நான் குசினிக்குள் ஓடினேன்.
காலையில் எங்கோ போய் வந்தவள், தர்மா அன்ரியிடம் இரகசியமாக எதையோ சொல்லிவிட்டுப் போனாள். இப்போது அழுது கொண்டிருக்கும் அவளைப் பார்க்க கவலையாக இருந்தது.
அம்மாவின் கறுப்பு உட்பாவாடையும், இரவு நிலவில் அப்பாவின் தோள் மீது சாய்ந்திருக்கும் போது ஜொலித்த மூக்குத்தியும் அம்மம்மாவின் கைகளில் கிடந்தன.
அம்மாவின் மூக்குத்தியை எப்படி மறக்க முடியும். இது இவளுக்கு எப்படிக் கிடைத்தது என்பது பெரிய கேள்வியாக இருந்தது. நான் தொட்டுப்பார்த்துக் கொண்ட போது அம்மம்மாவின் வேதனை கதறலாக வெடித்தது.
“என்ர பெட்டையை பொத்தி பொத்தி வளர்த்தேனே….! இப்படிக் காவு கொண்டு போறதுக்கோ நான் பெத்தனான். என்ர தங்கத்தை எந்தப் பிறப்பில காணப்போறன்?” அநாதைப் பிணங்களா செத்துப் போனியளே?”
அம்மம்மாவின் கதறலில் ஓரளவு உண்மை புலப்பட ஆரம்பித்தபோதும் சாமியிடம் இவர்கள் போய்விட்டார்கள் என்பதை என் அடி மனதுநம்பத் தயாராயில்லை.சோறு ஊட்டித் தூங்க வைக்கிற அம்மா இனி வரமாட்டாளா? இவன் வளர்ந்து பெரிதாய் வருவதை விரும்புகிற அம்மா இல்லாமல் இவனுக்கு எது இருந்து என்ன? இப்படியெல்லாம் என் மனம் நினைக்க ஆரம்பித்த போது தங்கச்சி திண்ணையில் வந்து நிற்பது தெரிந்தது.
இவள் அம்மா, அப்பா என்று அழைத்துக் கொள்ளும் பருவம் வரும்போது அம்மாவும் அப்பாவும் அருகில் இல்லை. எதைச் சொல்லிக் கொண்டாலும் இவளுக்கு எதுவும் விளங்கப் போவதில்லை அம்மம்மாவை முழுதாக பெற்றவராக எண்ணிக் கொண்டிருக்கிறாள். இவளுக்கு அந்த இரவு கூட ஞாபகத்தில் இருக்கும் என்பதில்லை. ஆக! என்மனதில் இந்த வேதனையை எப்படி அழித்துக் கொள்ள முடியும்.
இப்போது நானும் தங்கையும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறோம். அம்மா அன்றைக்கு சொன்ன ஆசைகளை வைத்துக் கொண்டு எங்கள் குறிக்கோள் நகருகிறது. ஓலைக்குடிசை, அம்மம்மாவின் கூலி உழைப்பில் நகரும் வாழ்க்கை. வறுமை நிறைந்த வாழ்வுக்கு நடுவே அம்மாவினதும், அப்பாவினதும் நினைவுகள் ஒவ்வொரு இரவுகளிலும் வந்துவிடும்.
கருகிய இருள் சூழ்ந்த இரவு. ஒரு அரக்கனுக்கு ஒப்பான உருவாக வந்து எம்மைப் பெற்றவர்களை விழுங்குவது போலவும் அவர்கள் ஒடிக்கொண்டு நடுங்கி பூமிக்குள்ளே புதைந்தது போலவும் இரவில் கெட்ட கனா வரும். திடுக்குற்று விழிக்கும் போது அம்மாவின் புன் சிரிப்பு ஞாபகத்திற்கு வந்து கண்மூடுவதும் பின் கனவுமாக இந்த இரவுகள் இப்போது பயமுறுத்துகின்றன. மாலை மங்கி, இருள் கவிந்து மகிழ்வோடு வரும் இரவுகளுக்காக காத்திருந்த அதே மனம் பயந்து நடுங்கி ஒவ்வொரு இரவிலும் பயங்கரத்தை எண்ணிக் கலங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு மாலை நேரம் எங்கிருந்தோ இருவர் வந்தார்கள் தொடர்ந்து பல வினாக்கள் தொடுத்தார்கள்.
“பெரிய பள்ளிக்கூடத்தில் படிக்க விருப்பமா? அம்மம்மாவை விட்டுவிட்டு தனிய இருப்பீங்களா…? பல கேள்விகள். என் குழந்தை மனதுக்குள்ளே அழுகிப்போய் கிடக்கும் ஆயிரமாயிரம் ஆசைகள் பற்றி அறிந்து கொள்ளாமல் வெறும் வார்த்தைகளாகவே இருந்தன இவர்களின் வேண்டுதல்கள்.
என் பிஞ்சு மனம் “ஒவென்று அழுகிறது மெல்ல மெல்ல காலம் நகர்ந்துவரும்போது கருத்துக்களும் வெளிவருகின்றன. அப்பாவும், அம்மாவும் இல்லாமற் போனதற்கான அனுதாபங்களா இவை? இவர்களால் இழந்துபோன எமது பழைய இரவுகளை மீட்டுத்தர முடியுமா?
பிஞ்சு மனம் ஆசைப்பட்டு வளர ஆரம்பிக்கும் போதே குருத்தில் கிள்ளுப்பட்டு நெருப்புக்குள் எறிந்த குருத்தாகி நிற்கிற எங்கள் நிலை. முடிந்தவைக்கு பிராயச்சித்தம் தேடிக்கொள்வதால் எமது அன்பின் கதறல்களுக்கு அணைகட்ட முடியுமா? நெஞ்சப் பிசைவுகளுக்கு நீருற்ற முடியுமா?
“உங்களுக்கு என்ன தம்பி வேணும்…? நாங்கள் எல்லாம் செய்யிறம் பிஸ்கட், டொபி, பெரிய ஸ்கூல்ல படிக்கலாமா?”
எனக்குச் சிரிப்பு வருகிறது. இவ
நான் கேட்க வேண்டியதைச் கேட்க வேண்டும். என்னைத் திருப்திப் படுத்துவதாய் என் குழந்தை மனதுக்கு தேவைப்பட்டதைக் கேட்கிறேன்.
“அம்மாவும் அப்பாவும் சாய்ந்து கொண்டு இருக்கும் போது அவையின்ர வெளிச்சத்தில் சோறு தின்னும் இரவுகள் வேணும்” தரமுடியுமா இவர்களால்…?
– 26-03-2000, வீரகேசரி.
– இங்கிருந்து… பன்னிரண்டு சிறுகதைகள், முதற் பதிப்பு: 2001, நண்பர்கள் வெளியீடுபதிப்பகம், நல்லூர்.
தொடர்புள்ள சிறுகதைகள்
என்னுயிர் நின்னதன்றோ!
அனந்த் ரவி
October 21, 2026
விளக்கேற்ற வந்தவள்
காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்
October 21, 2026
தெய்வசிகாமணி
மு.வீ.சங்கமுத்துப்பிள்ளை
October 21, 2026