அவளே மருந்து
கதையாசிரியர்: தெ.பொ.மீனாட்சிசுந்தரம்
கதைத்தொகுப்பு:
குடும்பம் நாடகம்
கதைப்பதிவு: November 9, 2025
பார்வையிட்டோர்: 74
(1954ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவன்: என்ன! இவ்வளவு இருட்டில் புறப்பட்டு- விட்டீர்கள்? வெள்ளி முளைத்ததும் வெளியேறவேண்டுமா! எங்குப் பயணம்?
தோழி: இரவெல்லாமா இங்கு அலைகிறீர்? உங்க ளுக்கு இரவும் பகலும் ஒன்றுதானோ? எங்களை வழி மடக்கி வம்பளப்பது தான் நீங்கள் வாழக் கற்ற வழி போலும்!
அவன் : மனம் உருகும் என்பார்கள்; அது குளிரில் உறைந்துவிடுகிறதா! மனமிரங்காதா உங்களுக்கு?வன்- மனமாய்விட்டதா பெண்மனம்? காதல்…
தோழி : காசா, பணமா, கைப்பிடி சோறா, காதல் என்பது கேட்டதும் எடுத்து வழங்க? கண்டவர்க்கு எல். லாம் வழங்கவா, மனம் இரங்கவேண்டும்? ஒத்த இருவர் ஒருமைப்பா டன்றோ காதல்?
அவன்: ஆம்! கண்டதும் காதல்! கடவுள் இயற்கை அஃது. ஒத்த இருவர் ஒன்றாகியது உங்கள் உள்ளம் அறி- யும். அவள் மனத்தில் காதல் தளிர்ப்பதாலேயே என்- மனத்தும் காதல் தழைக்கின்றது.
தோழி: இந்தக் கல்வி எல்லாம் ஏழை இளம் பெண். ணின் மூளையில் ஏறவில்லை. பொழுதாகிறது. விடிவதன்- முன்னர்த் தைந்நீ ராடவேண்டும்.
அவன் : அவளுந்தானே!
தோழி: தோழிமார் எல்லாருந்தாம். நேரம் ஆய்- விட்டது. இதோ, மாடு மேய்க்கும் ஊரிளஞ் சிறுவர்களும் உறக்கம்விட்டு எழுந்து வந்துவிட்டார்கள்; வீட்டு மன். றத்திலிருந்து, எங்கள் செல்வமாம் எருமைக் கறவலை ஓட்- டிக்கொண்டு போகிறார்கள்,சிறுவீடு மேய !
அவன்: கன்றைத் தொழுவத்திலேயே கட்டிவிட்டு ? பாவம்! அம்மா அம்மா என்று கதறுகிறது கன்று! எ மையும் திரும்பித் திரும்பிப் பார்க்கிறது; அத் தாயின் முக மெலாம் அன்பாக மலர்கிறது. அதனைக் காணும் – கண், இந்த ஊருக்கு ஏது? அந்த எருமையை வற்புறுத்- திப் பிரிப்பதோடு அதன்மேல் ஏறி வேறு போகின்றனர். பேரன்புடையாரைப் பிரிப்பதே பேரூரின் பெரும் பெருமை
தோழி: எருமையின்மேல் எமன் போலப் பேரவதே, எருமையூரில், எருமை மக்களின் ஏற்றம் என்று பாடுங்கள்! உங்கள் பல்லவி அது ! பனி நிறைந்த புல்லைக் காலாற மேய்ந்தால், நன்றாகப் பால் கறக்கும் என்பது உங்களுக் குத் தெரியாதா? கன்றுக்கும் பால் இனியாதா!
அவன் : கன்றுக்கு என்றுதான் கனிவு! ஏடும் தயிரும், வெண்ணெயும் நெய்யும, கன்றுதான்
உண்டு மகிழ்கிறது ! நோன்பு முடிந்ததும், முழங்கை வழியே நெய் வழிய உண்பது கன்றுதான் ! சிறுவீடு மேய்வது கற். வைக்கும் கன்றுக்கும் களிக்கூத்து!
தோழி: கருங்கூத்து என்கிறீர்களா? சிவ சிவா ! நோன்பு என்றால் நோவாது நுங்குவதா? உங்கள் என்ன நல்ல பாம்பா இவ்வாறு நஞ்சினைக் கக்க ? உருப்- போடும் மந்திரம் அன்பு ! உடைப்பது எம் நெஞ்சு!
அவன்: கல்லா உடைய? (முகத்தை நெரிக்கிறான்.) தவறு தவறு ! காண்கின்றேன் உண்மையை! கன்றுக் காகத்தான் வாழ்கின்றீர்கள். கன்றின் அன்பும் கறவை அன்பு மன்றோ பாலாய்ப் பொழியும்? ஊரென்றால் உங்கள் ஊரே ; அன்புடையர், உங்கள் அருளால், உங்கள் காவலில் ஒன்றாகுவர்: ஊர் எல்லாம் இன்பம் பொங்கும்.
தோழி: இவ்வளவு உருக்கமாகப் பேசவேண்டுமா. இந்த ஏச்சுரையை?
அவன்: ஏச்சா? இஃது என் மூச்சு; உயிர்ப் பேச்சு. முன்னே வற்புறுத்திப் பிரிப்பதெல்லாம் பின்னே பிரித்துக் கூட்டவே. ஊடல் இருந்தா லன்றோ கூடல் சிறக்கும்? அதுதான் நோன்பு. நானும் நோற்கிறேன்.
தோழி : எங்களைச் சிறு பிள்ளைகள் என்றீரே! அந்தமட்டும் மாடு மேய்க்கும் சிறுபிள்ளைகள் என்றீர்! நீங்களுமா சிறுபிள்ளை, நோன்பு நோற்க!
அவன்: கள்ளமில்லாச் சிறுபிள்ளை தான் கடவுளின் வடிவம்! சிறுவீடு மேய்தல், உங்கள் நிலையை மின்னல் வெட்டின் வெளிச்சம் போலத் திடீர் என விளக்கியது.
தோழி: கன்றும் கறவையுமே காதலர்: சிறுவரே தோழிமார்; பிரிப்பதே காவல் ; கன்று விடுவதே ஒருங்கு- கூட்டல்; பாலே இன்பம் – கற்றுக்கொண்டேனா? நான் நல்ல மாணவி தானே?
அவன்: கிளிபோலச் சொல்வதைச் சொல்லி என் பயன்? சிரிப்பாகத்தான் முடியும்! காதற் கருத்தைக்- காணவேண்டும்.
தோழி: கண்ணா கருத்தைக் காணும்?
அவன்: நோன்பு நோற்க நோற்க அந்தக் கண் திறக்கும்.
தோழி: அப்படியானால் நோன்பு நோற்றுவரு-கிறேன். வழி விடுங்கள்.
அவன்: காயா, பழமா?
தோழி: “கிட்டாதாயின் வெட்டென மற” என்பது தெரியாதா? நீங்கள் சொன்னதுபோல நாங்கள் சிறுவர்கள். அவளோ எங்கள் குடியின் தலைப் பெண் ; குறுமகள்; பச்சைக் குழந்தை ; உங்கள் வேதாந்தமும் தெரியாள் ; காதற் கதையும் அறியாள்.
அவன்: அவள் அறிவாள் என நீங்கள் அறியீரோ! இளையவள், என்றும் இளையவளாய் வாழ்க ! அன்பு பெருகப் பெருக வளர்ந் தணைத்த பெருந்தோள்கள் பேரின்பம் பேரின்பம்!
தோழி: என்ன பழி ! என்ன பழி! வாய் கூசாதோ! கள்ளமறியாக் கன்னிப் பெண் ! கன்னி நோன்பு நோற்-கின்றாள்; எங்களோடு, தைந் நோன்புக்காகக் கதிரவன் எழுவதன் முன்னர்ச் சில் என்ற திருக்குளத்தில் குளிக்க- வேண்டும். தோழியர் காத்துக்கொண்டிருப்பர்.
அவன் : நான் காத்துக்கொண் டிருக்கவில்லையா? கணவனுக்காகத்தானே தைந் நோன்பு!
தோழி: கணவன் என்றால் நீர் தாம்போலும்! மலை- மேல் ஏறி மணாளனைப் பிடிக்கவேண்டுமா? எங்கள் ஊரில் செல்வப் பிள்ளைகள், கண்ணுக்கினிய காதற் பிள்ளைகள் இல்லையா?
அவன்: இனியா தேடவேண்டும்? முன்னரே முடிந்த முடிபு!
தோழி: நீர் முடித்த முடிபா?
அவன்: கடவுளும் என் கண்ணும் கண்ட முடிபு.
தோழி: உம்கண் காணாதா !
அவன் : என் கண், என் உயிர், உங்கள் உயிர்த் தோழி!
தோழி: கணவனை முன்னரே கண்டிருந்தால், கன்னி நோன்பு நோற்பாளா? “அன்பான கணவனார் அமைந்திடுதல் வேண்டுமம்மா! இன்பம் அதுவன்றோ அருளேலோர் எம்பாவாய்!” என மணலாலே நாங்கள் வகுத்து வழிபடும் தாய்க்கடவுளிடம் வேண்டிக்கொள்வது, காதற் கணவனை எதிர் காலத்தில் அருளவே அன்றோ? ‘இனி அருளாய்” எனப் பாடுவாளா? வேறொரு கணவனை வேண்டுவதாக முடியாதா? கடவுளையுமா ஏமாற்றுவாள்?
அவன்: கடவுள் அறியாத கருத்தா? காதலுக்குத் தான் கள்ளம் ஏது?
தோழி: உம்முடைய கள்ளப் பேச்சுத்தான் ஒன்றும் ளங்கவில்லை.
அவன் : கள்ளம் என்ன? கவடு என்ன? நாணத்து தால் அவள் ஒன்றும் கூறுவதற்கு இல்லை.
தோழி : எங்களுக்கும் மறைவர்?
அவன் : நீங்கள், அவளிருந்தால் உயிர் பெற்ற உடல்போல் தளிர்த்து, அவள் பிரிந்தால் உயிரிழந்த உடல்போல் வாடும் இயல்பினர்! அவளே உங்கள் பொலிவு! அவள் எதிர், உணர்ச்சி மிக்குப் புத்துயிர் பெறுகின்றீர்கள்! இழை யணிந்து சிறப்பதுபோல, இலங்கிப் பொலிகின்றீர்கள். அவளே உயிராக, அவளே ஒளியாக, அவளே அணியாக ஒன்றுபட்டது உங்கள் ஆயமாம் தோழிமார் கூட்டம். இதனை நான் அறிந்திருக்க அவளறியாளா?
தோழி: அதனால் என்ன?
அவன் : உங்களோடு சேர்ந்தால் நீங்களாகவே ஆகிவிடுகின்றாள்; நீங்கள் விரும்புவதனை விரும்புகிறாள்; நீங்கள் செய்வதனைச் செய்கிறாள். ஆதலின், நீங்கள் தைந் நீர் ஆடினால் அவளும் ஆடுகின்றாள். அஃது அவள் பெருமை ! பரிவு ! அன்பு ! உலகம் முழுதும் விளையாட்டுக்- குடும்பமாய் இன்ப அன்பறிவொளியை வளர்க்க- வேண்டும். அந்த எதிர்காலச் சமுதாயத்தை இவ்வாறு படைக்கின்றாள்; தன்னைத் தானறப் பெறத் தவஞ் செய்- கிறாள் ; உங்கள் அன்புக் கூட்டத்தை அவள் வளர்த்துப் பழகுகிறாள்.
தோழி: புகழ்வதுபோலப் பழிக்கின்றீரா? நெஞ்- சொன்று நினைப்பது; வாயொன்று று பேசுவது; உட-லொன்று செய்வது. என்ன காட்சி! என்ன உயர்வு! நெஞ்சில் நீர்; செயலில் நாங்கள்; வாயில் பாவைப் பாட்டு: எதிர்காலச் சமுதாயம் வாழும் வழி இதுதானே!
அவன் : தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராம் பெரியோர், தாம் அழிய மாறியும் பிறருக்கென வாழ்வர். அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்பது தெரியாதர்?
தோழி: உயிரையும் விடுவர்; ஆனால் நீர் சொல்லும் நாணத்தை மட்டும் விடமாட்டார் போலும் !
அவன்: உயிரினும் சிறந்தது நாண். அதனை- விட்டுப் பேசினால் பிறர் மனம் நோகும்; மானம் கெடப் பேசுவதாய் முடியும். பேச்சுக் கெட்டாததனை எவ்வாறு பேசுவது? கடவுட் காதலைக் கதையாகச் சொன்னால், நாயின் கதையாகவே முடியும். பேசாப் பெரு மௌனமே நாணம்; அதுவே பெண்ணின் பெருமை. நாண- மில்லாப் பெண், பெட்டை நாயும் பேழ்வாய்ப் பேயுமே! பெண்ணுக்குத் தக்கது, பேசாத பெரு நாணம். அவளும் நீங்களும் ஒன்றானால், அவள் உணர்வு உங்கள் உணர்வு ஆகாதா? நீங்கள் உய்த்துணர மாட்டீர்களா? பிறந்த குழந்தையின் பேச்சைக் கேட்டா, தாய் அதனை அறி – கிறாள்? பேச்சா விளக்கும்? அஃது உண்மையில் உண்மையை மறைக்கும் திரை. பேசாத பெரு- மௌனம் பேசுவதுபோல் பேச வல்லார் யார்? பேசாத பெரு நாணின் பெரும் பேச்சைப் பெண்ணொடு பெண்ணாய், அன்பொடு அன்பாய், உயிரோடு உயிராய் இயைந்த நீங்கள் அறியவில்லையானால், யார் அறிவர்?
தோழி: (தனக்குள்) ஆனால், நாங்கள்மட்டும் நாணம் விட்டு, “வாருங்கள்;வந்து எங்கள் தலைவியைத் தழுவுங்கள்” என்று வேண்டவேண்டும். (வெளிப்படை) நாணினும் சிறந்தது கற்பன்றோ ? தைந் நீராடி வழிபடும் பாவைக் கடவுளையுமா பழம்பாட்டுப் பாடி ஏமாற்றுவாள்? எங்கள் தலைவியை நாங்கள் அறியோமா? அவ்வாறு வஞ்சனை செய்யாள்.
அவன்: யான் என்ன, “இறைவியையும் “வஞ்சிக்-கிறாள் என்றா சொன்னேன்?
தோழி : “நல்ல கணவனை நாளைநீ தாராயோ
எல்லாமுன் அன்பன்றோ அருளேலோ ரெம்பாவாய்”
என்று பாடுவாளா?
அவன் : உங்கள் பாட்டு வேறு; அவள் பாடுவது வேறு.
விரும்பிப்போத் தந்திவன் தழையுந்தா ருந்தந்தான்
வருவதெலாம் நின்னருளே வாழியேலோ ரெம்பாவாய்”
என்று பாடியே முழுகுகின்றாள்.
தோழி: ” தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”
என்பதன்றோ கற்பு நெறி? கணவனை அறிந்தபின் கடவு ளைத் தொழுவது கற்பு நெறியோ?
அவன்: கடவுளைத் தொழுவதும் கற்பு நெறியே. கணவனை விட்டுத் தனியே வேண்டுகோள் விடுத்துத் தொழுவதே வேண்டாதது. கணவனோடு கூடி வேண்டு- வது, தவறன்று. இங்கே, வேண்டுகோள் இல்லை(உள்ளது நன்றி யறிவே; அதிலும், வியப்புடன் எழும் நன்றி யறிவு.
தோழி: வியப் பொன்றோ !
அவன்: “தாயே! உன் தாய்மை அன்பு என்னே ! என்னே!! நோன்பு நோற்றுக் கணவனைப் பெறுவார் பிறர். எனக்கோ, இந்த நோன்புக்கு முன்னரே, எளிதில் அருள் செய்தாய்: அவரே விரும்பி வந்தார். உனக்குத் தழையும் தாரும் சாத்த வருவதுபோல் அவர் என்முன் வந்த நிலையை உன் வழிபாடு செய்யும் போதன்றோ அறிகின்றேன்! என்னே வியப்பு ? என்னை அணிசெய்து- காண அன்புறையாய்க் காதலுறையாய்ப் பூப் பாவாடை- யும் பூமாலையும் கொண்டுவந்து, கடவுளன்பு நிறைந்த தூய உள்ளத்தோடு மனமொத்து வாழத் தந்தாரே! என்னே உன் அருள்?”என்று பாடுகிறது,காதல் கனிந்த அவளது அருள் உள்ளம். இது வேண்டும், அது வேண்டும் எனக் கடவுளை வேண்டுவதன்று இது. நிறையுள்ளத்தில் குறை- யேது? ஆதலால், கடவுளைப் பாடுவதில் வஞ்சமேது? கற்பு நெறியைக் கடத்தல் ஏது?
தோழி: களவும் கற்புமாக இவ்வாறு முடிந்தபின், என்ன செய்ய விஞ்சிக் கிடக்கிறது? எங்களுக்குப் பொழு- தாகிறது. (போகிறாள்; திரும்பிப் பார்த்துத் தனக்குள்) ஐயோ பாவம்!என்ன தூய அன்பு! என்ன உயர்ந்த குறிக்- கோள்! தைத்திங்கள் பாவை நோன்பு இவ் விருவரையும் ஒன்றாக்கும்.
அவன் : அந்தோ ! என்ன, இவள் மனம் இரங் – காதா? காதலொத்தால் போதாதா? சடங்குகள்-வீடு- விட்டு வீடு போதல் என்ன என்ன இடையீடுகள்! பெற்றோர், பெரியோர், ஊரோர் ஒன்றாதல் வேண்டும், காதலர் ஒன்றாகாமற் போனாலும்! என்னே உலகு? எவ்- வாறு இவற்றை எல்லாம் ஒன்று கூட்டுவது? அவளது உயிர்த்தோழி இவள். இவள் வழிக்கு வந்தால் எல்லாம் எளிதாகும். என் உயிரே போய்விட்டதுபோலப் போய்- விட்டாள் இவள். இனித் தலைவியே தஞ்சம். அவள் செய்த இந்தக் காதல் நோய்க்கு அவளே மருந்து; வேறு யார் அறிவர்? வேறு வழி இல்லை.
“பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து’
“மன்ற எருமை மலர்தலைக் கார்ஆன்
இன்தீம் பால்பயன் கொண்மார் கன்றுவிட்டு
ஊர்க்குறு மாக்கள் மேற்கொண்டு கழியும்
பெரும்புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து
தழையும் தாரும் தந்தனன் இவன் என
இழையணி ஆயமொடு தகுநாண் தடைஇத்
தைஇத் திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோள் குறுமகள் அல்லது
மருந்துபிறிது இல்லையான் உற்ற நோய்க்கே ”
-நற்றிணை 80.
(கார் – கருமை ; போத்தந்து-வந்து.)
– நற்றிணை நாடகங்கள், முதற் பதிப்பு: டிசம்பர் 1954, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.
![]() |
தெ.பொ.மீனாட்சிசுந்தரம் (08 சனவரி 1901 – 27 ஆகத்து 1980) 20-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற தமிழறிஞர்களுள் ஒருவர். இறந்த ஆண்டு: ஆகஸ்ட் 27 – 1980. பிறந்த ஊர்: சிந்தாதிரிப்பேட்டை (சென்னை). மொழிப்புலமை : தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பிரெஞ்சு, ஜெர்மன். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலக்கியம், இலக்கணம், வரலாறு, சமயம், ஒப்பிலக்கியம், மொழியியல் குறித்த பல கட்டுரைகளையும், நூல்களையும், திறனாய்வுகளையும் எழுதியுள்ளார். சிறப்பு பெயர்கள்: பன்மொழிப்புலவர்,…மேலும் படிக்க... |
