அவளின் அவன்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 7, 2026
பார்வையிட்டோர்: 9,741 
வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்

கீழ் வானில் மெதுவாய் சூரியன் தனது பயணத்தைத் தொடங்கிய காலை. நகரம் இன்னும் முழுவதும் விழித்தெழவில்லை; ஆனால் அதன் சுவாசம் மெல்ல ஒலிக்கத் தொடங்கியிருந்தது. சூரிய ஒளியில் தொலைவில் தெரியும் கட்டிடங்கள் தங்கத் துகள்களால் பூசப்பட்டதுபோல் ஜொலித்தன. சாலையில் வாகனங்களின் கலந்த ஒலி, தேநீர் கடைகளில் கூடியிருந்த மக்கள், பேருந்து நிறுத்தங்களில் தொடங்கிய கூட்டம்—நகரம் தனது நாளைத் தொடங்கிக் கொண்டிருந்தது. கைகளில் சூடான தேநீர்க்  கோப்பைகளுடன், அந்த நாளின் தொடக்கத்தை அனுபவித்துக் கொண்டு இருந்தவர்கள் ஏதோ ஒரு  வகையில் கொடுத்து வைத்தவர்கள் தானே.. அன்றாட பணிகளை தொடங்க வேண்டிய அவசர மனிதர்கள் கால்களை சக்கரங்களாய் பாவித்து ஓடிக் கொண்டிருந்தனர். 

நேற்று நள்ளிரவு சென்னையின் மண்ணை மிதித்த நிமிடத்தில் இருந்தே அவளுக்குள் இனம் விளங்கா பரபரப்பும் , உடலில் ஓர் பரவசமும் , மனதினுள் எண்ணங்களின் ஊர்வலமும் நிரம்பி இருந்தன . உன்னில் தானே என் வாழ்வை ஆரம்பித்தேன்..நீ அள்ளித் தந்த அனுபவங்கள் எத்தனை..அன்றுவரை எனக்கு என்னதான் வெளி உலகமென்று தெரிந்திருந்தது.. முட்டையிலிருந்து வெளி வந்த குஞ்சுப் பறவையைப் போல் தானே இருந்தேன்.. உன்னில் தானே பறந்து பழகினேன்..சென்னையின்  வான்வெளிகளிடம் மானசீகமாய் உரையாடினாள்.

சென்னையில் அவளது அலுவலகத்தின் புதிய கிளை ஒன்றை நிறுவுவதற்கும்  அதன் செயல்பாடுகளை கட்டமைக்கவும் அவளது தலைமையில் ஒரு குழு இங்கே அனுப்பப்பட்டிருந்தது. “குறைந்தது 6  மாதங்கள் நீங்கள் அங்கே இருந்து பணியாற்ற வேண்டி இருக்கும் . உங்களுக்கு சம்மதமா..” என்று அவளது உயரதிகாரி அவளிடம் கேட்ட போது ‘சம்மதம்.. சம்மதம்..’ என்று சிறு பிள்ளை போல குதித்தாட தோன்றிய ஆசையை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டு ஒப்பதல் அளித்தாள்.

விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் முகத்தில் வந்து அறைந்த வெப்பம் சுமந்த காற்றை ரசித்து அனுபவித்தவளுக்கு ஏனோ அழுகையும் சேர்ந்து வந்தது. அது தாய் மடி சேர்ந்த குழந்தையின் அழுகை..  அத்தனை வருட பிரிவையும் ஈடு செய்யும் ஆனந்தக்கண்ணீர்.. விமான நிலையத்தில் இருந்து அலுவலகத்தின் விருந்தினர் இல்லத்துக்கு வரும் வழியெல்லாம் சிறு பிள்ளை போல ஆர்வமாய் வெளியில் வேடிக்கை பார்த்தபடி வந்தாள். மகாபாரத்தில் ஓரிடத்தில் மன்னன் திருதராஷ்டிரனுடைய மனநிலையை வியாசர் வெகு அழகான வர்ணித்திருப்பார். ஆழமான மடுவில் நிறைந்திருக்கும் நீர் உள்ளே ஆழத்தில் குளிச்சியாகவும், மேலே கதகதப்பாகவும் இருப்பதாக எழுதியிருப்பார். துக்கமும் ஏதோ சொல்லவொணாத இதமுமாய் இருக்கும் இந்த மனநிலையை இதை விடத் தெளிவாக சொல்வதெப்படி.. கிண்டி கத்திப்பாரா பாலத்தில் வண்டி சுழன்று  இறங்கிய போது சிறுபிள்ளை போல காரின் ஜன்னல்களைத்  திறந்து முகம் நீட்டிப் பார்த்தாள்..

“ரோலர்கோஸ்டர் ரைடு போலாமா…அம்மாவுக்கு பயம் காட்டுவோமா…”

“ம்ம்ம்..போலாம்.. போலாம்..”   கிளுகிளுத்துச் சிரித்த குழந்தையின் குரலோடு இணைந்து சிரித்த கம்பீரமும் மென்மையும் விரவிய குரலொன்று காதுகளுக்குள் ஒலித்து அடங்கியது.

வண்டி அடையாறு பாலம் கடந்து கொண்டிருந்தது .. நெஞ்சின் பாரம் தலைக்கு இடம் பெயர்ந்தது போல உணர்ந்தவள், ஓட்டுனரிடம்,

“அண்ணா..ஒரு காபி குடிச்சிட்டு போலாம்..எங்காவது  டீஸ்டால் திறந்திருக்கா-னு பாருங்க ..” என்றாள்.

“சரிம்மா..இங்க பாலத்துக்கு கீழ ஒரு கடை எப்போதும் லேட் நைட் வரைக்கும் கூட  இருக்கும்..இப்போ திறந்திருக்கா-னு பார்க்கிறேன்..” என்று சொல்லியபடியே தேடியவர்,

“இதோ இருக்குதேம்மா..கொஞ்சம் பொறுங்க.. வண்டிய நிறுத்தரேன்..” என்றபடி கடையின் அருகில் நிறுத்தினார்.. சூடும் சுவையுமாய் இருந்த காபி என்றோ குடித்த காபியை நினைவு படுத்த, முழுதும் அருந்த முடியாமல் மீதமிருந்த காபியுடன் காகித டம்ளரை குப்பை தொட்டியில் போட்டவள்,   “போலாம் அண்ணா..” என்றபடி வண்டியில் ஏறி அமர்ந்தாள். அலுவலகத்தின் விருந்தினர் இல்லத்தில் இறங்கியவள், ஓட்டுனருக்கு விடை கொடுத்து அனுப்பி வைத்தாள்.

“திங்கள் காலைல சரியாய் 9 க்கு எல்லாம் வந்துருவேன்மா ..இது தான் என்னோட நம்பர்.. வேற ஏதும் வேணுமானாலும் போன் பண்ணுங்க” என்றவாறு விடை பெற்றார் .

பிராயணக் களைப்பு தீர குளித்து முடித்தவளுக்கு தூக்கம் வரவில்லை .பால்கனியில் அமர்ந்து இரவின் பிடியில் அமைதியாய் இருந்த நகரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் .நகரத்தின் விளக்குகள் தொலைவில் மின்ன, அவள் பார்வை தொடுவானத்தில் தொலைந்து போயிருந்தது. அந்த அமைதிக்குள், அவள் மனம் அவனைத் தேடிக் கொண்டே இருந்தது..அவனை மட்டுமே தேடிக்கொண்டிருந்தது… அவளது ‘அனைத்துமாய்’ இருந்தவனைக் காண மனம் துடித்தது . பேசிப் போன நிமிடங்கள் , சிறிது மகிழ்ந்த கணங்களின் நினைவுகள் சுனாமி பேரலையாய் அவளை சுழற்றியது . முகம் பார்த்து கண் விழித்ததும், சுவையறிந்து  பரிமாறியதும் , அருகமர்ந்து பசியாறியதும், சொற்களன்றி  மனமறிந்ததும் , சப்தங்களின்றியே அவன்  வரவுணர்ந்ததும் , களைப்பறிந்து உணவளித்ததும்  என அவளது அடிமனதில் ரகசிய பெட்டகத்தில் புதைக்கப்பட்டிருந்த அத்தனை நினைவுகளும்  அந்த இரவில் மீண்டும் உயிர்த்தெழுந்தன.

இந்த நொடியில், இந்த நகரத்தில் எங்கோ ஓரிடத்தில் நிச்சலனமாய் அவன் உறக்கத்தில் ஆழ்ந்திருப்பான் என்று நினைத்துக் கொண்டாள். நெற்றியில் முடி கலைந்து பரவ பிடிவாதக்கார குழந்தை போல கைகளுக்குள் முகம் மறைத்து தூங்குவான்.. அவன் எங்கோ அருகில் இருப்பான் என்ற எண்ணமே சொற்களில் வடிக்க இயலாத ஒருவித பரவச உணர்வில் அவளை அமிழச் செய்தது .லட்சத்தில் ஒரு  வாய்ப்பாக இந்த நிமிடம் அவனும் அவளைப்  பற்றி நினைத்துக்  கொண்டிருப்பானா… ஒருவேளை  அவனும்  கூட  தொலைவானத்தில்  அவளின்  நினைவுகளைத்  தேடிக் கொண்டிருப்பானோ.. வெட்கம்  கெட்ட  மனமே.. ஆசைக்கும்  ஒரு  அளவில்லையா… அறிவு எப்போதும்  போல  கடிவாளமிட்டு அடக்கியது. அந்த இரவில் அவள் தனியாக இல்லை.. அவனது  நினைவுகளும்,  அவை தந்த  பரவச உணர்வுகளும் அவளுடன் இருந்தன.

பொழுது விடிய ஆரம்பித்து விட்டது..எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின் தாய் மண்ணில் முதல் விடியல்..பரவசமாய் எழுந்தவள், அன்று முடிக்க வேண்டிய வேலைகளை  பட்டியலிட்டுக் கொண்டாள். முதலில் இந்த ஆறு மாதங்கள் தங்குவதற்கு வீடு ஒன்றை முடிவு செய்ய வேண்டும்.. அங்கே இருந்து கிளம்பும் போதே சில பல வலைத் தளங்களில் தேடி சில வீடுகளை தன் விருப்பப் பட்டியலில் வைத்தது எத்தனை வசதியாகிப் போனது. அன்றாட வேலைகளின் நினைவுகளில் தன்னை பிணைத்துக் கொண்டவள், பரபரவெனக் கிளம்பினாள்.

முதலில் கோவில்..அப்புறமாய் காலை உணவு. சொந்த நாட்டில் நாளைத் துவங்கும் உற்சாகம் அவளையும் மெதுவாகப் பற்றிக் கொண்டது. அறுபடை வீடு முருகன் கோவில்..உள்ளே நுழையும் போதே உள்ளுக்குள் அதிர்ந்தது.பலவருடம் முன்பு கிருத்திகை நாளில் அவன் கை பற்றியபடி இதே செந்திலாண்டவன் சன்னதியில் நின்றது நினைவில் ஆடியது..

“பிள்ளையைத் தனியா விடாதே..”

“அதெல்லாம் பத்திரமா வருவா..நான் பாத்துக்கறேன்..” நினைவுகள்..நினைவுகள்..இந்த பிறவியில் மன அமைதி என்பதை அசாத்தியமாக்கிய நினைவுகள்..

“அதோ பிள்ளையை தோள்-ல வச்சிட்டு நிக்கறார் பாருங்க ..அவர்தான் எங்க டிபார்ட்மெண்ட் ஹெட்..”

“அவருக்கு இவ்வளவு சின்ன பொண்ணு இருக்கா..வீட்டுல கூட்டிட்டு வரல போல..”

இவள் தள்ளி நிற்பதை கவனிக்காமல் அவனை அறிந்தவர்கள் பேசிக் கொண்டிருக்க, இதே இடத்தில் பிள்ளையைத் தோளில் சுமந்து கொண்டு நின்றவனைப் பெருமிதமாக பார்த்துக் கொண்டு நின்ற நாள் நினைவில் ஆடியது… அத்தனையும் இந்த பிறவியில் தானா…கண்களில் நீர் குளம் கட்ட முருகனைப்  பார்த்தாள். அவன் எப்போதும் போல ‘யாமிருக்க பயமேன்’ எனச் சிரித்தான்.

காலை உணவை 2 இட்லிகளுடன் முடித்துக் கொண்டவளுக்கு அறைக்குத் திரும்ப மனம் வரவில்லை. வெயில் இல்லாத கடற்கரை மெர்குரி விளக்குகளின் உபயத்தால் ஒளிர்ந்து கொண்டிருந்தது.அலை தொடும் தூரம் வரை நடந்து செல்லும் ஆசை உந்த நடக்க ஆரம்பித்தாள். முந்தைய இரவில் உழைத்த களைப்பில் உப்பு மாங்காய் கடைகளும், பலூன் கடைகளும் தார்பாயின் அடியில் உறங்கிக் கொண்டிருந்தன.சில பூக்கடைகள் மாத்திரம் முந்தைய இரவில் மீதமான மல்லிகைப் பந்துக்கு நீர் தெளித்து புதியதாக்கி தம் பணியைத் துவங்கி இருந்தன. 

“பூ வச்சுக்கோமா..” பூக்காரம்மாவின் குரலில் தேங்கி நின்றாள்.

“வேண்டாம் மா ..” என்றவளிடம், ” காலைல முதல் போனி நீதான் கண்ணு .. வேணாம்னு சொல்லாதே .. பொண்ணுக்கு பூவு தான் அழகு… “என்று நைச்சியம் பண்ணி பூ வாங்க வைத்து விட்டாள்..  இருபுறமும் வழிய வைத்த பூச்சரம் மணந்து மயக்கியது..

“ஒரு முழம் பூ வாங்கி தர மாட்டியா…கஞ்சகுட்டிடா நீ ..” விளையாட்டாகச் சீண்டியதும் ,                “மறந்துட்டேன் டா.. தெருமுனைலதான் கடை இருக்கு..அப்பவே சொல்ல மாட்டியா நீ …” என்று சமாளித்தவனிடம், “எல்லாம் நானே தான் சொல்லனுமா..உனக்கா எப்போதான் தோணும்..” என்று ஊடல் கொண்டதும்…நினைவுகளைத் தடுக்க போராடுவதை விட அலைமோதும் நினைவுகளை அனுபவித்து அசைபோடுவதும் சுகம் தானே என்று தோன்ற, மனதை அதன் போக்கில் விட்டுவிட்டாள்.. மூடப்பட்டிருந்த கடையில் முதுகை சாய்த்து, அலை துள்ளும் கடலை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்..

“இத படிச்சு பாரேன்..”

“என்னது..”

“படிச்சு பார்த்துட்டு சொல்லு…”

‘உன்னுடன் கை கோர்த்து ரசிக்கும் போது
நிலவுக்கும் கடலுக்கும் அழகு அதிகம் என நான் மயங்க,
உன்னை விட ஒன்றும் அழகில்லை என்று நீ உரைக்க
பொய்யனடா நீ என நான் விலக, 
கண்டு பிடித்து விட்டாயா என நீ சிரிக்க,
ஊடலற்ற ஊடலிலும் அதை தொடரும் கூடலற்ற
கூடலிலும் இன்னும் உயிர்த்து வாழ்கிறது நம் காதல்…’

“என்ன..சிச்சுவேஷன் கவிதையா ..ஆனா நல்லா இருக்கு…உனக்கு நல்லா எழுத வருது…”

“உனக்கு நல்லா சமாளிக்க வருது…சொதப்பல் திலகம் டா நீ..இன்னும் எவ்வளவு தான் சொதப்புவ..நானும் பார்க்கறேன்..”

ஒருமுறை இதே கடற்கரையில் அவனிடம் கவிதை சொல்லி சிரித்தது நினைவில் ஆடியது.. 

“அந்த பலூன் சுடுற கேம், ரிங் போடுற கேம் எல்லாம் விளையாடனும்..”

“சரிடா குட்டிம்மா”..

குழந்தையின் ஆசைகளுக்கெல்லாம் தலை ஆட்டும் அவனை பொய் கோபத்துடன் முறைக்கும் அவளை, கண்களால் அதட்டும் அவன்..கிளியை பார்க்கும் ஆசையில் கிளி ஜோசியம் பார்க்கப் போக, பலன் சொல்பவர் சொல்லும் வார்த்தைகள் பலதும் பொருந்திப் போக , ஆச்சர்யத்தில் விழி விரிக்கும் அவளை புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் அவன்.. கிளி தந்த சீட்டில் அவளது இஷ்ட தெய்வமான முருகன் சிரிப்பதைக் கண்டு வியந்த அவளை அர்த்தத்துடன் பார்த்து சிரிக்கும் அவன்…

அவளது நாட்கள் அவனது நினைவுகளால் நெய்யப்பட்டவை . வெற்றிகளின் போது மானசீகமாய் அவனிடம் பகிர்ந்து கொண்டு அவன் மார்பில் முகம் புதைப்பாள்… தோல்விகளின் போதும் கடினமான நாட்களின் போதும் மௌனமாய் அவன் தோள்களில் சாய்ந்து கொள்வாள்..அவளறியாமலே அவளது மனது அடுத்து செய்ய வேண்டியது என்ன என்று அவளுக்குள் உணர்த்திச் செல்லும் .  அவள் சோர்வில் அமிழும் போதெல்லாம் மீண்டும் எழுந்து வா’ என்று கட்டளையிட்டுச் செல்லும் அவன் குரல் அவள் காதுகளில்  ஒலிக்கும் ..  அவளது நாட்கள் அவனது நினைவுகளால் மட்டுமே நெய்யப்பட்டவை..வெளியில் கடினமானவளாகவும் தெளிவானவளாகவும் மனதிற்குள் அவனைத் தேடும் குழந்தையாகவும்  இரட்டை வாழ்வு வாழ்பவள் அவள்.அவனுக்கான அவளது நியாங்கள் எந்த கட்டுக்குள்ளும் அடங்காதவை.. அவள் அவனோடு வாழாமல் வாழ்பவள்..அவன் அவளது தாய்மடி ..அவன் அவளது தந்தை கை கதகதப்பு.. அவன் அவளது ஆசான்..அவன் அவளது தோழன் ..  அவன் அவளது காதலன் .. அவன் அவளது சண்டைக்காரன் .. அவன் அவளது குழந்தை.. அவன் அவள் சுமக்கும் நேசம்.. அவன் அவளது சுவாசம்..அவன் அவளது உடல் தாண்டிய இன்னொரு உயிர் .. அவன் அவளது கண்ணீர்.. அவன் அவளது புன்னகை.. அவன் அவளது பயம்.. அவன் அவளது தைரியம்.. அவன் அவளது பலம்.. அவன் அவளது பலவீனம்..  அவன் அவளது முரண்களின் மொத்தம்..

நினைவுகளுக்குள் புதைந்திருந்தவளை தொலைப்பேசியின் அழைப்பொலி  கலைத்தது. வாடகைக்கு வீடு தரும் நிறுவனத்திலிருந்து  அழைத்திருந்தார்கள். அவளது விருப்பட்டியலில் இருந்த வீடுகளை அழைத்துச் சென்று காட்டுவதற்காக  அவர்களது  பிரதிநிதி ஒருவர்  வரும் விபரம் சொன்னவர்கள் அவரது தொலைபேசி எண்ணையும்  தந்தார்கள் .

“குட் மார்னிங் மேடம் ..நான் கீர்த்தனா ..ஸ்வீட் ஹோம் ரெண்ட்டெர்ஸ்-ல இருந்து வரேன்..நீங்க ஷார்ட்லிஸ்ட் பண்ணின ப்ராபர்டிஸ் எல்லாம் இன்னிக்கு பார்த்துரலாமா மேடம் ..என்னோட டூவீலர்லயே போலாமா மேடம்..” மெல்லிய சிரிப்புடன் சொன்னவளை அவளுக்குப் பிடித்திருந்தது .அந்த இளம்பெண் ஏனோ அவளது மகளை நினைவு படுத்தினாள்
“கண்டிப்பா..” சிரிப்புடன் சொன்னவள் ஆவலுடன் வண்டியில் ஏறிக் கொண்டாள். எதிர்க்காற்று முகத்தில் அறைய இருசக்கர வாகனப்பயணம்அவளுக்கு எப்போதுமே பிடிக்கும்.

“மேடம்..நல்லா பிடிச்சிக்கோங்க..” சொன்னபடி சாலையில் கலந்தாள்.வண்டியின் வேகத்தில் தன்னை அறியாமல் அந்த சிறுபெண்ணை இறுகப் பற்றிக் கொண்டாள்.

பல வருடங்களுக்கு முன்னரும் இதே சாலை வழியே இதே போல பயம் கலந்த ஆர்வத்துடன் வண்டியில் பயணம் செய்திருக்கிறாள்.

“அம்மாவ பயந்து கத்த வைப்போமா…”

“ஐயோ.. வேணாம் பா ..மெதுவா போ… பயமாயிருக்கு..”

“சின்ன பிள்ளை…பேசாம வருது…அம்மா நீ…பயப்படலாமா ..நல்ல பிடிச்சுக்கோ…”

இன்னும் வேகம் கூட்டியவனை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு, “எனக்கொண்ணும் பயமில்லை…” என்று பேச்சளவில் மட்டுமே தைரியம் காட்டி நடித்த  நாட்கள்.. 

“நீ பிடிக்கறதுலயே உன் தைரியம் நல்லா  தெரியுது ..” அவனது சிரிப்பு அவளுக்குள் எதிரொலித்து அடங்கியது.. 

அந்தப் பயணம் அப்படியே முடிவின்றி தொடர்ந்திருக்கக் கூடாதா..கண்களில் சுறுசுறுவென கண்ணீர் சுரந்ததை மெதுவாய் துடைத்துக் கொண்டாள் .

“மேடம்..” கீர்த்தனாவின் குரல் அவளை நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது.

“நீங்க லிஸ்ட் பண்ணி இருக்கற ப்ரோபர்ட்டிஸ்  எல்லாமே பக்கம் பக்கம் தான். இன்னிக்குள்ள கவர் பண்ணிடலாம்..உங்களுக்கு எப்போ இருந்து ரெண்ட் ஸ்டார்ட் பண்ணனும் மேடம் ..?” 

“சீக்கிரமே..முடிஞ்சா நெஸ்ட் வீக்-ல இருந்தே ஸ்டார்ட் பண்ணிடலாம்..நீ இங்க எவ்வளவு நாளா வேலை பார்க்கற? ரொம்ப சின்ன பொண்ண தெரியற..படிக்கலயா ..”

“இது பார்ட் டைம் ஜாப் தான்  மேடம்..நான்  காலேஜ்  செகண்ட் இயர் இன்ஜினியரிங் பண்ணறேன்..” ஏதேதோ பேசிக் கொண்டே வந்தாள் . 

இரண்டொரு வீடுகளை பார்த்து முடித்தவர்களுக்கு தொண்டை வறண்டது . இவளது களைப்பை  உணர்ந்தவள் போல்  கீர்த்தனா, “ஏதாவது ஜூஸ் குடிக்கறீங்களா மேடம்..ரொம்ப சோர்வா தெரியரிங்க..”என்றாள் .

“சரிம்மா..பக்கத்துல ஏதாவது ஜூஸ் ஸ்டால் போலாம்.”

“இங்க  பக்கத்துல கரும்பு ஜூஸ் நல்லா இருக்கும் ..வாங்க கூட்டிட்டு போறேன்..உங்களுக்கு கரும்பு ஜூஸ் பிடிக்காதுன்னா சொல்லுங்க வேற ஜூஸ் பாக்கலாம்..”இவளென்ன யட்சிணியா.. என் கடந்த கால நினைவுகளை அவளால் ஆன மட்டும் தட்டி எழுப்ப வந்தவளா..
“எனக்கு பிடிக்கும் மா..அங்கேயே போலாம்..”

அவள் அழைத்துச் சென்ற கடையைப் பார்த்தவள் மெலிதாய் அதிர்ந்தாள் ..அவள் அந்தகடைக்கு வந்திருக்கிறாள். ஒருமுறை இருமுறை அல்ல… பலமுறை.. அவனுடன்.. குழந்தையுடன் .. ஒன்று மட்டும் அவளுக்கு தெளிவாகப் புரிந்தது .அவனது நினைவுகள் இன்றி அவளது வாழ்வில் ஏதும் அசையாது.. அவளாய்  தேடுவது பாதி ..அதுவாய் அமைவது மீதி..கீர்த்தனாவின் தொலைப்பேசி மெலிதாக இசைத்தது .

“ஆபீஸ்ல இருந்து கூப்பிடறாங்க மேடம்..ஒரு நிமிஷம் இருங்க..  இதோ வந்திடறேன்..”  சற்று தள்ளி நின்று பேச தொடங்கினாள் .இவள் மெதுவாக சுற்றுப் புறத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்..கால இடைவெளி சில மாற்றங்களைக் கொண்டு வந்திருந்தாலும், பழைய தெருக்களின் அடையாளம் தெரிந்தது..கீர்த்தனாவுடன் வேறு வழியில் வந்திருந்ததால் முதலில் தெரியாத அடையாளம் இப்போது புரிந்தது..இங்கே தானே அவன் குடி இருந்தான். இந்த வழிதான் அவன் வழக்கமாய் செல்லும் வழி. தற்செயலாகவேனும் கண்ணில் படுவானா.. பைத்தியகாரத் தனமாய் கடந்து சென்ற கார்களில் அவனைத் தேடி ஏமாந்தாள். என்னோடு பயணித்த வழிகளில் தனியாகப் பயணம் செய்கையில் என்னை நினைப்பானா.. இப்போது அவன் எதிரில் போய் நின்றால் என்ன சொல்வான்..என்னை அடையாளம் கண்டு கொள்வானா..

‘நான் எங்கே போனாலும் என்ன செய்தாலும் உன் நினைவுகள் முழுமையாக ஆக்கிரமிக்கப்படுகிறேன்.நான் எத்தனை வெற்றிகளை அடைந்தாலும் மனதளவில் தோற்றுப் போனவளாகவே உணர்கிறேன்..என் வாழ்வில் எதனை மனிதர்களை கடந்து சென்றாலும் உன்னால் மட்டுமே நிரப்ப முடிந்த வெற்றிடம் இன்னும் எனக்குள் ஆழமாகிக் கொண்டே தான் போகிறது.. இப்போதெல்லாம் என் வலிகளையும் ரசிக்கப் பழகிக் கொண்டேன்.. உனக்கும் எனக்குமான உறவில் இன்று எஞ்சி இருப்பது அவை மட்டும் தானே..உன் நினைவுகள்..கலைந்து போகும் மேகங்கள் அல்ல..அவை என் தலை மேல் கவிந்திருக்கும் வானம்!!எங்கே சென்றாலும் தொடர்ந்து வரும் வானத்தை ‘விலகி இரு’ என்று சொல்வதெப்படி.. பேசியறியாதவனாய் வாழ்ந்தேன் என்றாய் ..பேச்சிழந்தவளாய் வாழ்பவளின் வலியை என்றேனும் புரிந்து கொள்வாயா?

நீ இன்றி வாழும் வாழ்வு வெறுமை மட்டுமல்ல.. அது ஒரு நீண்ட மௌனம்..கண்களை மூடிக் கொண்டு இருள் வழி நடக்கும் ஓர் நடை பயணம்..விழி திறந்தே தேடினாலும் வழியறியா நரகம்..உன்னோடு “வாழ்ந்த” காலங்களிலேயே உறைந்து விட்ட என்னைப் போலவே உன் மீதான என் கரை காணா காதலையும் உறைய வைத்து சேமித்து வைக்கிறேன் .. என்னைக் காலம் கவர்ந்து சென்ற பின்னும்,உன் கால் சுற்றி வரும் நாய்க்குட்டி போல் உன்னைக் காத்து நிற்கட்டும் என்று…உனக்கும் எனக்குமான ஊடல்கள் , என் கோபங்களால் அன்றி உன் மீதான என் தேடல்களாலும் , அதில் பிறந்த என் ஆதங்கத்தினாலும் நிரப்பப்பட்டவை என்று அறிவாயா என்னவனே..வாழ்ந்து சலித்திருந்தால் கூட பரவாயில்லை.. வாழாமலே சலித்து விட்டது.. அறியாமல் தொலைத்தேன் உன்னை..அறிந்தே தொலைக்கிறேன் என்னை… மௌனமாய் ஏற்றுக் கொள்கிறேன்.. எனக்கான உன் சரிகளையும்..உனக்கான என் தவறுகளையும்.. கண்ணீரோ புன்னகையோ..தருபவன் நீ அல்லவா..’ மனதுக்குள் அவனோடு பேசினாள்.

அவனைப் பார்க்க வேண்டும் போல இருந்தது.. அவனுடன் கை  கோர்த்துக் கொண்டு வார்த்தைகளின்றி அவனது இருப்பை மட்டுமே மனதுக்குள் நிறைத்துக் கொள்ளும் மணித்துளிகள் வேண்டும் போல இருந்தது..

கீர்த்தனாவின் வரவில் கலைந்தாள். ” மேடம்..இங்க பக்கத்துல ஒரு ப்ராபர்டி 2 நாளுக்கு முன்னாடி தான் காலி பண்ணி இருக்காங்க..இனிஷியல் இன்ஸ்பெக்ஷன்க்கு போக முடியுமான்னு கேக்கறாங்க..இதே தெரு தான் மேடம்..உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லனா ஒரு 15 நிமிஷம் ..அத மட்டும் பார்த்துட்டு போயிறலாமா மேடம்..இல்லனா நாளைக்கு இதுக்காக மறுபடி வரணும்.எக்ஸாம் வேற வருது மேடம்..நிறைய படிக்கணும் ..” இவள் தவறாக நினைத்துக்  கொள்வாளோ என தயங்கியபடியே கேட்டவளை புன்னகையுடன் பார்த்தாள்.
கிட்டத்தட்ட அவளது மகளின் வயதே ஆன சிறு பெண். படிப்பையும் வேலையையும் சரிசமமாக சுமந்து கொண்டிருக்கிறாள்.

“எனக்கு ஒன்னும் அவசரம் இல்ல…கண்டிப்பா பார்த்துட்டே போலாம்.”

“தேங்க்யூ மேடம்..சீக்கிரமாவே முடிச்சிரலாம் ..” சந்தோசமாக கிளம்பினாள்.

“நிறைய கஸ்டமர்ஸ்  இப்படி ஹெல்ப் கேட்டா கோபப்படுவாங்க மேடம் ..சிலர் கம்பளைண்ட் கூட  பண்ணுவாங்க. அதான்  கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு..ரொம்ப தேங்க்ஸ் மேடம்..”, நன்றியுடன்  சொன்னவளை ஆதரவாய் தோளில் தட்டிக் கொடுத்தாள்.

“இங்கே தான் மேடம்..பக்கத்துல தான்..இந்த அபார்ட்மெண்ட் தான் “சொல்லிக் கொண்டே கீர்த்தனா அழைத்து வந்த இடத்தை பார்த்தவளுக்குள் சத்தமின்றி ஒரு பிரளயமே நடந்தது. சுற்றுப்புறம் நிறையவே மாறி இருந்தாலும், கட்டிடத்துக்கு வேறு வர்ணம் பூசி இருந்தாலும் அவளது உணர்வில் உயிரில் கலந்த இடத்தை அவளறிய மாட்டாளா என்ன.. 

“இங்க எந்த வீடும்மா..” இந்த 3 வார்த்தைகளை உச்சரித்து முடிப்பதற்குள், தொண்டை எல்லாம் உலர்ந்து போனது..

“ஃபோர்த் பிளோர் மேடம்..நல்ல வேளை லிப்ட் இருக்கு..நீங்களும் வாங்க மேடம் ..தனியா ஏன் கீழ வெயிட் பண்ணனும்..”சொல்லிக் கொண்டே கீர்த்தனா முன்னே நடந்தாள்.படபடத்த மனதை அடக்கியபடி கூட நடந்தவள், “இங்க இருந்தவங்க ஏன் காலி பண்ணிட்டாங்களாம்..” என்றாள்.. “இங்க கடைசியா இருந்தது ஒரு ப்ரோஃபஸ்ஸர் மேடம்..அவர் பக்கத்துல வீடு வாங்கி மூவ் ஆயிட்டார்னு ஆபீஸ்ல சொன்னாங்க..”  இவள் சொல்லும் பேராசிரியர் அவன்தானா .. அத்தனை வருடங்களும் அவன் அங்கே தான் இருந்தானா.. கடைசியில் அங்கே இங்கே அலைக்கழித்து விதி அவளை கொணர்ந்து சேர்த்தது அவன் இருந்த இடத்தில் தானா ..முருகா .. இதுவும் உன் விளையாட்டா…

“இந்த வீடு தான் மேடம்..” சுவாதீனமாக கீர்த்தனா உள்ளே நுழைந்து மறைந்தாள் ..அந்த வீட்டின் கதவை நடுங்கும் கரங்களால் வருடிப் பார்த்தாள்.. மெதுவாக உள்ளே வந்தவளுக்கு அவன் கையை பற்றியபடி வந்த நாள் நினைவுக்கு வந்தது..

அந்த வீட்டின் ஹால், கிட்சன் , பெட்ரூம் ,டைனிங் ஹால் பூஜையறை என எல்லா இடங்களிலும் ஆசையாசையாய் சுற்றி வந்தாள்.. அவனில்லாத வெறுமையைப் பூசிக் கொண்டிருந்த வீடு அவளது மனதின் வெறுமையை பிரதிபலித்தது. ஒருகாலத்தில் அவன் சிரிப்பால் நிரம்பிய அந்த சுவர்கள் இப்போது மௌனமாக அவளை நோக்கிக் கொண்டிருந்தன.அந்த சோபாவில் அவன் சாய்ந்து பேசிக் கொண்டிருந்த தருணங்கள் அவளது நினைவில் தெளிவாக மிதந்தன… அவள் அருகில் அமர்ந்தபோது அவன் கண்களில் தெரிந்த அந்த நெருக்கம், இப்போது வெறும் நினைவாகவே இருந்தது.வெறும் பார்வையில் அவளை பெண் என உணர வைத்தவன் அவன்..

பால்கனிக்குச் சென்றாள்…அவனது துணிகளை துவைத்து உலர்த்திய பின் சற்று நேரம் அங்கே நின்று பார்த்துக் கொண்டிருப்பாள்… காற்றில் ஆடும் துணிகள்அவளோடு கதை பேசும். அவனது படுக்கையறையின் நடுவில் நின்று ஆழமாக ஸ்வாசித்தாள். அவனது வாசத்தை இன்னமும் நுகர முடிந்தது.. அவனுக்காக பார்த்து பார்த்து சமைத்த சமையலறை.. அருகிலிருந்து  பரிமாறி , உடனமர்ந்து பசியாறிய உணவு மேஜை..அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் அவன் தடங்கள் இருந்தன… ஆனால் அவன் மட்டும் இல்லை.

அவள் மெதுவாக அந்த அறைக்குள் நுழைந்தாள்…ஒருகாலத்தில் அவன் பொருட்கள் நிறைந்திருந்த இடம் இப்போது வெறுமையாக காட்சி தந்தது. அலமாரி கதவைத் திறந்தாள்… உள்ளே ஒன்றும் இல்லை… “இங்கே தான் அவன் சட்டைகள் இருந்தது…” அவள் விரலால் அந்த வெற்றிடத்தை வருடினாள்… அவள் தேர்ந்தெடுக்கும் உடைகளை அணிந்து கொண்டு வரும் அவனது கம்பீரமான தோற்றம் கண்ணில் தோன்றி மறைந்தது.

தரையில் மெதுவாக அமர்ந்தாள்… அந்த வீட்டின் அமைதியில்  அவன் குரலை தேடினாள்…

“நான் இங்கேயே இருக்கிறேன்…” என்று எங்கோ இருந்து அவன் சொல்வது போல தோன்றியது. கண்ணீரை வழிந்தோடியது … அது அவளுக்கு வலியல்ல… அவனுடன் இருந்த நினைவுகளின் சான்று. படிக்கத் தெரியாதவனின் கையில் அகப்பட்டுக் கொண்ட புத்தகம் போல காலத்தின் கையில் நானா … மனம் கேள்விகளில் விழுந்து அழுதது.. இன்னாருக்கு இன்னார் என்று எதைக் கொண்டு முடிவெடுக்கிறாய் இறைவா..

‘காதல் ஒருவனை கைப்பிடித்தே அவன் காரியம் யாவிலும் கை  கொடுத்தே’ என்று வாழும் வரம் வாங்கிப் பிறக்கவில்லை நான்… ஆனால் அவனை காதலித்து வாழ்வதற்கு யாருடைய ஒப்புதலும் தேவை இல்லை தானே.. அவள் முடிவெடுத்து விட்டாள்..

“வீடு ஓகே தான் மாம்..டீப் கிளீனிங்க்கு லிஸ்ட் பண்ணிட்டா நம்ம வேலை முடிஞ்சது” உற்சாகமாக சொல்லியபடி வந்த கீர்த்தனாவை ஏறிட்டவள்,

“நானே இந்த வீட்டை ரெண்ட் பண்ணறத முடிவு பண்ணிட்டேன் மா..டீப் கிளீனிங் கூட தேவை இல்லை..வீடு ஓகேவா தான் இருக்கு..” தன் மனதை மறைத்தபடி சொல்லி முடித்தாள்..

ஆச்சர்யத்தில் விழி விரித்த சின்னவள் ” ஆனா மேம் ..இது உங்க பட்ஜெட் விட அதிகம்..உங்களுக்கு ஓகே வா ” என்றாள்..அவளால் இன்னும் நம்ப முடியவில்லை. அதிக வாடகை அவளது கமிஷனையும் அதிகமாக்குமே..

சில விஷயங்கள், பணக் கணக்குகளுக்கு அப்பாற்பட்டவை.. உயிரை விட மதிப்பு வாய்ந்தவை.. அதை இந்த சின்ன பெண்ணிற்கு எப்படி புரிய வைப்பது … புன்னகையுடன், ” ஓகே தான் மா.. “என்றாள். 
 “டீப் கிளீனிங் வேண்டாம்னா  நம்ம ரெண்ட் கூட  கொஞ்சம் கம்மியா கேட்டுப்பாக்கலாம்..நான் ஆபீஸ்ல பேசறேன் மேம் ..”
புன்னகையுடன், ” சரிம்மா.. ” என்றாள்.

அவளின் அவனோடு வாழப் போகும் நிறைவோடு கண்களை மூடி ஆழமாய் சுவாசித்தவள் தலை சரித்து வெளியே வான் வெளியை நோக்கினாள்.. நிர்மலமான நீல வானில், மேக கூட்டத்தின் இடையில் ” யாமிருக்க பயமேன் ” என முருகன் சிரித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *