அரைப்பைத்தியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 6, 2024
பார்வையிட்டோர்: 1,428 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கடைத்தெரு முனை. பிலாப்பழக்காரி கிழிந்த வாழை இலையை வைத்துக்கொண்டு ஈயை விரட்டிக்கொண் டிருந்தாள். இதெல்லாம் இரண்டணா, அதெல்லாம் ஓரணா’ என்று அடுத்தாற்போல் சாஹிப் சரசமாய் விலை கூறிக்கொண்டிருந்தான். நான் அந்தப்பக்கம் திரும்பிய வினாடியில் அந்தப் பையன் கண்ணில்பட்டான். அழுக் கடைந்த தாமிர பாத்திரத்தைப்போன்ற வர்ணம். மேலே கிழிசல் நிறைந்த சட்டை. இடுப்பில் வாணிய னுடையதுபோன்ற வேஷ்டி, கையில் ஒரு படம். ஆனால் அவன் முகத்தில் மட்டும் ஒரு தீராத பிரமையும் ஏக்கமும் குடிகொண்டிருந்தன-மஜ்னுனைப்போல. அந்த முகம் என்னுள்ளத்தைக் கவ்விவிட்டபோதிலும் நான் அவனை அறிமுகம் செய்து கொள்ளவில்லை. 

மறுநாளும் அந்தப்பக்கம் போனேன். அவன் ஒரு பழக்கடை வாசலில் உட்கார்ந்து தன் கையிலிருந்த படத்தைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான்.கிட்டத் தில் போய் ‘தம்பி! என்னவேண்டும்?’ என்றேன். ‘அம்மா’ என்று சொன்னது எனக்குக் கொஞ்சம் திகைப் பைத்தான் தந்தது. ஏனென்றால் அவன் திருஷ்டியே அரைப் பைத்தியத்தினுடையது. இருந்தாலும் அவன் மீது எனக்கு ஏற்பட்ட அன்புமட்டும் குறைய வில்லை. ‘தம்பி! என்னைப் பார். என்ன வேண்டும்?’ என்று திருப்பிக் கேட்டேன். அவன் என்னை கவனிக்க வில்லை. ஒரு சேர் கொடிமிந்திரிப் பழத்தை வாங்கிக் கொடுத்தேன். அவன் அதை வாங்கிக்கொள்ள பிரயாசைப்படவில்லை. அவன் பாட்டுக்குப் பக்கத் திலிருந்த தகரக்கடைக்காரனிடம் ‘அண்ணே! இந்தப் படத்து ஓரத்தைக் கத்திரிச்சிப்பிடு. கோணலும் மாண லுமாய் இருக்கு’ என்று படத்தை நீட்டினான். கடைக் காரன் அலுப்புப்படாமல் படத்தைக் கத்தரித்துத்தந் தது என் வியப்பை அதிகரித்தது. 

அதற்குப் பிறகும் அந்தப்பக்கத்து வழியாய் ஆயி ரத்தி எட்டு தடவை போயிருக்கிறேன். அவனிடம் கடைக்காரர்கள் காட்டும் அன்பையும் பார்த்திருக்கி றேன். வெகு உருக்கமானது! ஒரு பொழுதாவது ஒருவ ராவது அவனைக் கடிந்ததில்லை. தங்கள் வீட்டுப் பைய னைப்போல் பாவித்தாரேயன்றி வேறெல்ல. எனக்குப் பையனைப்பற்றி அறியவேண்டும் என்ற ஆவல் அதிகப் பட்டாலும் யாரைப்போய் என்னவென்று கேட்பது? என் வாழ்க்கையின் விசித்திரத்தில் இதுவுமொன்று எனத் தள்ளிவிட்டேன். 

பின்னொருநாள் மாலை அந்தப்பக்கம் போயிருந் தேன். பிறவிச் சோம்பேறிக்குத் திரிவதைத் தவிர தொழிலேது? தெருமுனையில் பச்சை குத்துகிறவன் கடை விரித்திருந்தான். பெரிய அட்டையில் பலரகப்பட்ட சித்திரங்கள். அவைகளின் ஓவியத் திறமையைப்பற்றி ரொம்ப நுணுக்கமாகப் பார்ப்பதற்கில்லை. பச்சை குத்திக்கொள்வோரின் மனதை வசியப்படுத்த ஆனால் அவைகள் போதும். தலை மயிர் பறக்க நிற்கும் பெண். தலைக்குமேல் கோபிகளைப்போல் ‘கைகுவித்து நிற்கும் பெண். சேலை கிடையாதென்று சொல்லவேண்டுமா? இப் படி பல தினுசு. தவிர சிங்கத்துடன் குஸ்திபோடும் ஆண் சிங்கங்கள், கத்தி விளையாடும் வீரர்கள், இப்படிப் பட்ட சித்திரங்கள். அந்தக் கடைக்குப் பின்னால் அந்தப் பையன் உட்கார்ந்திருந்தான். பழய படம், பழய பார்வை! 

கடைக்கு யாரோ ஒரு ஆள் வந்து சேர்ந்தான். ஒரு நிமிஷம் படங்களையெல்லாம் பார்த்துவிட்டு ‘ஏனய்யா! அந்தப் பொம்பிள்ளையைக் குத்தரத்துக்கு என்ன கேக் கரே?’ என்றான். 

‘அதிலேயே எழுதியிருக்கு, பாரேன்…ஒரு ரூபாய் எட்டணானுட்டு. 

‘ஏ ஆயா! ரொம்ப ஜாஸ்தி…நானு அடுத்த வாரம் சிங்கப்பூரு போகணும். இல்லாட்டி பச்சை குத்திக்கக் கூட மாட்டேன்…சொல்லு.’ 

‘சரி, ஒரு ரூபாய் குடு.’ 

‘முடியாது…எட்டணா.’ 

‘போய்யா…ஒனக்காக ரெண்டணா குறைச்சுக்கோ. பதினாலணா, ‘ 

‘சரி, பத்தணா.’ 

‘போய்யா,’ 

‘என்ன தொல்லை பண்றே? முக்கால் ரூபாய் குடுத் துடறேன், விட்டூடு.’ 

‘ரொம்ப குறைச்சல்… என்ன செய்யறது?… உக்காரு உக்காரு.’ 

‘ரொம்ப வலிக்குமோ?’ 

‘கையைத்தான் நீட்டிப்பாரேன். சைனாவாலே குத்தரது வலியே இருக்காது. சாமிக்கு அலகு குத்திக்கர மாதிரின்னு நினைச்சிருக்காப்பிலெ இருக்கு.’ 

‘சைனாவாலே இன்னா?’ 

‘அந்தக் கவலை ஒனக்கேன்? இந்த ஊசி சைனாவிலே ருந்து வருது.’ 

பச்சை குத்துகிறவன் குத்த ஆரம்பித்துவிட்டான். ‘இதென்ன, முதல்லே செடியைக் குத்தியிருக்கே… ஸ்ஸ்…’ 

‘அதென்ன வலிக்குதா? ரொம்ப பயப்படறியே… செடி போட்டுக்கிட்டால்தான் அப்பறம் சரியா வரும்… வலிக்குதா?’ 

‘அப்பிடி ஒண்ணும் ரொம்ப இல்லை.’ 

‘வலிக்காது, வலிக்காதுன்னுதான் நான் சொல்றேனே … ஓங்க ஊர் பக்கத்திலெ மூணாம் மாசம் கொலை விழுந்து போயிடுச்சு பாரு, தெரியுமா?’ 

‘கேள்வி; பலபேர் பல தினுசாகத்தான் சொன் னாங்க. தற்கொலை இன்னாங்க. அப்படியெல்லாம் இல்லை இன்னாங்க சில பேரு. பொம்மனாட்டி விசயம்னாங்க; அப் படியில்லே, சூதாட்டம்னாங்க. என்னா தெரியுது?’ 

‘அந்தக் கேஸிலே போன வாரம் தீர்ப்பு சொல்லிப் பிட்டாரு.’ 

‘ஜர்ஜ் என்னா தீர்ப்பு பண்ணினாரு?” 

‘சொல்றேன்.’ 

‘அடெடெ! பொம்பிள்ளை ரவிக்கைக்கு சிவப்புக் குத்தல்லியே! பேச்சுப் பராக்குலே…’ 

‘எனக்குத் தெரியாதா ? …அந்தப் பொன்னி புருச னுக்கு கொத்தன் வேலை, தெரியுமல்ல. தினம் ஒரு ரூவா சம்பாரிச்சுக்கிட்டு வருவான். வருவான்னுட்டு சொல்லப் படாது. வீட்டுக்கு வரது ரெண்டணாவோ’ மூணு அணாவோதான்.’ 

‘பாக்கி கள்ளுக்கடைக்குப் போயிடுங்கிறயா?’ 

‘பின்னே! ஏழைக்கு எமன் கள்ளுதானே. அவனுக்கு ஒரு மவன், பதினாலு பதினஞ்சு வயசிருக்கும். அவன் சித்தாள் வேலை செஞ்சு மூணு நாலு அணா சம்பாரிப் பான். முக்காவாசி ஊட்டுலே சமைக்கிற சோறு பையன் காசுலேதான். அவன் மேலே பொன்னி அஞ்சு பிராண னையும் வச்சுக்கிட்டிருந்தா. புருசன்மேலே அப்படி இல்லே.சில சில சமயம் ஏண்டா இவன் வீட்டுக்கு வரானுகூட இருக்கும். ஏன்னா, வீட்டுக்கு வந்தா ஏதா வது ரகளை. இன்னிக்கு ஏன் மீன்கறி இல்லே. இன் னிக்கு வாய்க்காங் கறையிலெ கிடக்கிற சுள்ளியை ஏன் பொருக்கிக்கிட்டு வல்லே, இப்படி ஏதாவது சண்டை.’ 

‘சண்டைன்னா வாச்சண்டைதானா?’ 

‘கொஞ்சம் கொஞ்சம் எப்பநாச்சும் அடிதடிகூட உண்டு. ‘

‘இந்தப் பொம்பிள்ளைங்களுக்கே மூளை கிடையாது. அப்படின்னா ஓடிப்போய் தொலையறதுதானே.’ 

‘அதுதான் வேடிக்கே. புருஷன் வீட்டுக்கு வர நேரமாயிடுச்சோ இவளுக்கு இருப்புக்கொள்ளாது. வாச லுக்கும் உள்ளுக்குமா குட்டிபோட்ட பூனைமாதிரி அலைவா. அடுத்தாப்போலே தேடிகிட்டுகூட கிளம்பி விடுவா – எங்கெ குடி மயக்கத்திலெ வண்டி காடி ஏறி செத்துப் பூடுவானோ இன்னூட்டு.’ 

‘ரொம்ப வேடிக்கையாயிருக்கு அவ குணம்.’ 

‘அடுத்த விசயத்தைக் கேளு. அவளுக்கு ஒரு சிநேகம் இருந்துச்சு. ஆனா ஒண்ணு. அவளைப்போல நல்லவளே கிடையாது. அக்கம்பக்கத்திலே இருக்கிற பேருக்கு எப்பவும் அவளாலே ஒத்தாசை. அவ தங்க மான குணத்தைப் போத்தாத பேரே கிடையாது. இந்த சிநேக விசயம் ஊரிலே முதல்லே கொஞ்சம் பேச்சா யிருந்தது. அப்பறம் அப்பறம் அவ புருசன் பண்ற ரகளையிலே, இவனுக்கு சோறு போடராளே மகராசி இன்னூட்டு சொல்ல ஆரம்பிச்சூட்டா. அவ புருஷ னுக்கு இது விஷயம் தெரியுமா தெரியாதா ஒண்ணும் நிச்சயமாக சொல்லப்பிடல்லெ. நடந்ததைப் பார்த் தால் தெரியும் போலத்தான் தோணுது. 

‘ஒரு தடவை அவன் வெளியூருக்குப் போரேன்; வர ஒரு வாரம் பிடிக்கும்னு சொல்லிப்பிட்டு போயிட் டான். அதே ஒரு சூதுன்னு பிந்தி தெரிஞ்சுது. முதல் நாள் ஒண்ணும் விசேஷமில்லெ. மறுநாள் ராத்திரி 11மணி இருக்கும். இவா வீட்டு வாசல் கதவை யாரோ தட்டினாப் போலே இருந்தது. 

‘யார் ?’ இன்னு கேட்டாள் உள்ளே இருந்து. ‘நான்தான்’ இன்னான் கொத்தன். 

‘பொன்னிக்குப் பயமாய்ப் போயிடுச்சு. என்ன பண்ற்துன்னு தெரியல்லே. அவன் உள்ளே இருந்தான்.’ 

‘யாரு, பையனா?’ 

‘செ! இன்ஜின் ஓட்டி.’ 

‘இன்ஜின் ஓட்டி ஏது?’ 

‘ஓ! சொல்ல மறந்துட்டேன்போலெ இருக்குது. அவன்தான் அவளுக்கு சிநேகிதம். அவன் உள்ளே இருந் தான். அவனுக்கு ஒதைப்பு. இங்கே வெளியிலே கொத்தனுக்கு ஆத்தரம். மவன் முழிச்சுக்கிண்டுட் டான். அவனுக்கென்ன தெரியும்? அவன் பாட்டுக்குப் போய் கதவைத் திறந்தான். கொத்தன் உள்ளே நுழைஞ்சுப்புட்டான். இன்ஜின் ஓட்டிக்குத் தப்ப வழி யில்லே; அவ்வளவுதான். மின்னல் தோணி மறையறத் துக்குள்ளே ஒரு கொலையும், ஒரு கொலைக்காயமும் விழுந்துபோச்சு. பையன் அப்பிடியே பிரமிச்சு தூண் மாதிரி நின்னுகிட்டிருந்தான். 

கொத்தன் கிர்ருன்னு நேரே போலீஸ் ஸ்டேஷ னுக்குப் போய் செஞ்சதை ஒப்புக்கிட்டானாம். அப் பறம் போலீஸ் கீலீஸ் எல்லாம் இவா வீட்டுக்கு வந் தாங்க. பையன் அப்பவும் அப்பிடியே நின்னுகிட்டிருந் தானாம்.’ 

‘பாவம் !… இந்தப் பொம்பிள்ளைக்கு ரவிக்கை போடறியா என்ன?’

‘நீ என்னப்பா வெறும் நாட்டுப்புறமா இருக்கே! சித்தெ நாழிக்கு முன்னாலே ரவிக்கைக்கு செவப்பு குத்தல் லியேனூட்டுக் கேட்டே; இப்பொ ரவிக்கை போடல் லேன்னு கேக்கற. எனக்கென்ன ? வேனும்னா ரவிக்கை போட்டூடறேன்.’ 

‘வாண்டாம், வாண்டாம்; கோடு என்னவோ அப்பிடி போட்டியேன்னு கேட்டேன்.’ 

‘அது கடயம் கறேன்.’ 

‘சரிதான், சரிதான்.. அப்பறம் என்ன ஆச்சு? 

‘பொன்னியைக் கொண்டுபோய் ஆஸ்பத்திரியிலெ சேத்தாங்க. மரண வாக்குமூலம் வாங்கினாக. அப் பொத்தான் இவ்வளவு சமாசாரத்தையும் சொல்லிப் பிட்டு ‘புருஷனைக் கொஞ்சம் அழைச்சாங்க’ ஒரு வார்த்தை சொல்லணும்’ இன்னாளாம். கொத்தனை அழைச்சுகிட்டு வந்தாங்க போலீஸ்காரர். பொன்னிக்கு மனசுலே ரொம்ப கோபம் போலெ இருக்கு. ஆனா மூஞ்சியிலே ஒண்ணும் தெரியல்லெ. இப்பிடி பண்ணிப் பிட்டியே, என்னா புண்யத்தைக் கண்டே’ இன்னு கேட்டா. அவன் பதில் சொல்லல்லே. ‘இத்தனை நாளா என் மவனையும் கூட்டிக்கிட்டு அவனோடெ ஓடாமெ ஒனக்கு சோறு சமைச்சுப் போட்டேனே, அது ஒண் ணே போதாதா-ஒன் குணத்துக்கு. நான் இல்லாட்டி செத்து மண்ணாப் போயிருப்பே, அப்பொவே’ இன்னாள். ‘பாக்கி உசிர் போகணுமா கழுதை. ஒன் மவன், என்ன ஒன் மவன்?’ இன்னு கொத்தன் பாஞ்சான், நல்லவேளை! போலீஸ்காரன் தடுத்திட்டான். பொன்னி என்னமோ ஒரு நிமிஷம் யோசிச்சா. ‘இனிமே உசுர் இருந்தா என்ன போனா என்ன? ஆனா மவன் மாத்திரம் என் மவன் தான்… ஒனக்குப் பொறக்கல்லே’ அப்பிடீன்னா. 

அவ்வளவுதான். தடார்னு நிலைப்படி நம்ம தலை யிலெ இடிச்சூட்டா நம்ப மூஞ்சி ஆவுது பாரு, அது மாதிரி ஆயிடுச்சு கொத்தன் மூஞ்சி. போலீஸ்காரன் அவனைத் திருப்பி அழைக்சுகிட்டு போனான். அறை வாசலுக்குப் போனப்பொ கொத்தன் திரும்பிப் பார்த்து ‘ஒனக்கு எப்படித் தெரியும் ? கோபத்திலே பொய் சொல்லாதே’ இன்னான். 

‘அட பைத்தியம்! சாகப்போரவ, நான் ஏன் பொய் சொல்றேன்?’ இன்னாள். 

‘அப்பொ அந்தப் பையன் எங்கே இருந்தான்?’ 

‘ஆஸ்பத்திரியிலே அவகூடத்தான். கொஞ்ச நேரம் கழிச்சு அவ கண்ணை மூடிட்டா. 

‘அப்பறம் கேஸ்தான், விசாரணைதான். செஷன் சுக்கு அனுப்பிச்சூட்டாங்க. ஒண்ணு சொல்ல மறந் தூட்டேன். தெருவிலே இருக்கிறபேருக் கெல்லாம் கொத்தன் மேலெ ரொம்ப இரக்கம் வந்துட்டுது. பைய னோ கவர்ன்மெண்டு சாச்சி ஆய்விட்டான். அப்பனுக்கு கொஞ்ச நாளா பயித்தியம் வந்திருச்சின்னு சாக்கு சொல்லிப்பிடுன்னு சொன்னாங்க. ‘இப்பிடி அக்ரமமா எனக்கு அம்மா இல்லாமெ செஞ்சுப்புட்டானே, அதுக் காகவா?’ இன்னான். ‘ஏண்டா! அதுக்காக அப்பாவும் இல்லாமெ போயிடணுமான்னு தெருவார்கள் கேட்டார்கள். 

‘அப்பிடி இல்லெ இன்னாளெ எங்க அம்மா’ இன் னான் பையன். 

‘இல்லெடா அது கோபத்திலே சொன்ன வார்த்தை.’ 

‘இப்பிடி தெருவாரெல்லாம் அவனுக்குச் சொன்னா. போலீஸ்காரனுங்க நடந்ததைச் சொல்லு இன்னாங்க. பையன் தானே? முந்தியே குழம்பிக்கிடந்த மனசு இன் னும் குழம்பிப் போச்சு. 

‘நாள் ஆக ஆக பையனுக்கு ஒண்ணும் புரியல்லே. அம்மா, அம்மா இன்னு கிடந்தான். இவனைப் பொட்டி யிலே ஏத்தி குறுக்கும் நெடுக்குமா கேள்வி கேட்டப்பொ நெஜத்தை ஒளரிப்பிட்டான். இப்பிடியெல்லாம் விசாரணை நடந்துகிண்டிருக்கறப்பொ ஜர்ஜுக்கு ஒரு சந்தேகம் வந்தூட்டுது. கொத்தன் நடவடிக்கையைப் பார்த்தால் பித்துமாதிரி இருந்துச்சு.’ 

‘ஆனா அவனுக்கு நிஜமா பைத்யமா?’ 

‘ஜர்ஜு அப்பிடி நினைச்சுத்தான் கேஸை ஒத்திப் போட்டாரு. டாக்டரை வச்சு கொத்தனைப் பரீச்சிச் சாங்க. டாக்டரு பைத்யம்னு சொல்லப்படாதுன்னுட்டாங்க.’ 

‘வேஷம் போடறான்னு நினைச்சுப்பிட்டாங்கபோலெ இருக்கு.’ 

‘அப்பிடித்தான் நினைச்சூட்டாங்க. அது தப்பு, ஏன்னா பதினஞ்சு வருசமா ஒரு பிள்ளை தன்னுதுன்னு ஒருத்தன் நெனச்சுக்கிண்டிருக்கிறப்பொ, ஒன் பிள்ளை இல்லேன்னு அவன் பொண்சாதி சொன்னா பைத்யம் பிடிக்காமெ என்ன செய்யும்?’ 

‘கச்சேரியிலெ தான் பொய் நெஜமாயிடறது, நெஜம் பொய்யாயிடறது.’ 

‘வாஸ்தவம்தான் – அப்பறம் மறுபடி விசாரணை முடிவுலெ கொத்தனுக்கு அந்தமான் தீவு. 

‘பையன்?’ 

‘அன்னிக்கே பிடிச்சு அரைப்பைத்யமா விளங்கறான். அப்பொ அப்பொ அம்மா ஜபம். கையிலெ ஏதாவது கந்தல் சேலை, ஒரு படம்-பொம்மனாட்டி படம். இப்பிடி தெரு சுத்திக்கிட்டு கிடப்பான். அவனைப் பார்த்தால் கண்ராவியா இருக்கு-இந்த ஒலகத்திலே நம்மை இப் பிடியெல்லாம் படைக்க கடவுள் என்னவோ வேடிக்கை பாக்கறாரு. நமக்கு என்னா தெரியுது சொல்லுங்க?ஹூம் ஆச்சு. எடுங்க காசை. 

‘அடெ! ஆயிடுச்சா?’ 

‘பொம்பிள்ளை ஜோக்கா அமைஞ்சிபூட்டாள்! அதி ருஷ்டம் அடிக்கப்போவுது சிங்கப்பூரிலே. 

அந்த ஆசாமி எழுந்திருந்து இடுப்பிலிருந்த நாடாப் பையைக் கழற்றி சில்லரை எடுத்துக்கொண்டிருந்தான். அதுவரையில் கடைக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த பையன் முன்னே நகர்ந்து வந்து ‘அண்ணே! இந்தா, எங்கம்மா படத்தைப்போலெ கையிலெ ஒண்ணுகுத் தேன்’ என்று கேட்டான். 

எனக்கு ஏற்கனவே ஆவலா? கிட்டப்போய் படத் தைப் பார்த்தேன். அகமதாபாத் வேஷ்டிகளில் ஒட்டி வருகின்றனவே அந்த பொம்மைகளில் ஒன்று. 

‘இதா ஒங்க அம்மா?’ என்றேன். 

பையன் என்னைக் கவனிக்கவில்லை. ‘நீ குத்தப் போறியா இல்லையா?’ என்று கடைக்காரனைப் பார்த்துக் கெஞ்சினான். கடைக்காரன் என்னைப் பார்த்து ‘என் னமோ, இந்த மாதிரி படங்களைப் பார்த்தாலே அவன் அம்மா ஞாபகம். இந்தமாதிரி படங்கள் அவன் கையிலெ இல்லாமெ நாங்க பார்த்ததே கிடையாது’ என்றான். 

‘நரம்பு அதிர்ச்சியிலெ மனசு குழம்பி ஒரே நினைப்பு போலிருக்கு’ என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதெ ‘ஏன் கடைக்கார அய்யா! எனக்குக் குத்தப் போறியா இல்லியா?’ என்று பையன் கண்டித்துக் கேட்டான். 

கடைக்காரன் பதில் சொல்லவில்லை. பையனுடைய கையில் குத்த ஆரம்பித்துவிட்டான். ஆனால் பையனுக்கு ஒருவிதமான கதையும் சொல்லத் தேவையில்லைபோலும் குத்தும் வலியை மறைக்க.பழய மஜ்னுன் மாதிரிலயித்த தோற்றத்துடன் உட்கார்ந்திருந்தான். நான் அந்தத் தமாஷையும் பார்த்துக்கொண்டிருந்தேன். பச்சை குத்தி முடிந்தது. பையன் பொம்மையைக் கீழே போட்டுவிட்டு ஓட்டமெடுத்தான். 

இப்பால் அப்பையனைப் பலதடவை பார்த்திருக்கிறேன். ஆனால் ஒருபொழுதும் படத்துடனல்ல. அவனுடைய திருஷ்டி பச்சை குத்திய கையில் இருக்கிறது. ஆ! அந்தி நேரத்தின் துயரத்தைப்போன்ற அந்தப் பார்வை!

– பதினெட்டாம் பெருக்கு (சிறுகதைகள்), முதல் பதிப்பு: 1944, ஹிமாலயப் பிரசுரம். இரண்டாம் பதிப்பு: ஜூன் 1964, எழுத்து பிரசுரம், சென்னை. இந்த கதைகள் சுதேசமித்திரன், மணிக்கொடி, கலைமகள் முதலிய பத்திரிகையில் வெளியானவை.

ந.பிச்சமூர்த்தி வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *