அன்பு மலர்கள்…
கதையாசிரியர்: இரஜகை நிலவன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2025
பார்வையிட்டோர்: 376
(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கணேசனும் சாவித்திரியும் இரண்டு பையன்களையும் கூட்டிக் கொண்டு நேராக வக்கில் ஆபீஸிற்கு வந்தனர். வக்கீல் ராஜையா இன்னும் வந்திருக்கவில்லை. குமாஸ்தா ராஜேந்திரன் அவர்கள் அமரச் சொல்லி டீ வாங்கித் தந்தான்.
பையன்கள் இருவரும் அலுவலக வாசலில் நின்று விளையாடிக் கொண்டிருந்தனர். சாவித்திரி வெளியே வந்து குழந்தைகளை அதட்டினாள்.
அப்போது தான் உள்ளே வந்த வக்கீல் ராஜையா, “ஸாரி கணேசன் கொஞ்சம் லேட்டாகி விட்டது. ரொம்ப நேரமாகக் காத்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்.
“இல்லை ராஜையா இப்போது தான் வந்தோம்” என்றான் கணேசன்.
“ஒரு நண்பனாக நான் சொன்ன விஷயங்களை யோசித்துப் பார்த்தாயா கணேஷ்” வக்கீல் பேப்பர் பார்த்துக் கொண்டே கேட்டார்.
“ராஜையா இது பற்றி உன்னிடம் நான் நிறையப் பேசி விட் டேன். சாவித்திரியும் கூட ஓரிரு முறை சொல்லியிருக்கிறாள் என்று நினைக்கிறேன். இருவரும் விரும்பி விவாகரத்து வாங்கிக் கொள்ள விரும்பும் போது, திரும்பத் திரும்ப அறிவுரை சொல்லி என்னாகப் போகிறது” என்றான் கணேசன் ஜன்னலைப் பார்த்துக் கொண்டே.
வெளியே விளையாடிக் கொண்டிருந்த பையன்கள் உள்ளே ஓடி வர, ‘அப்பா அண்ணன் அடிக்கிறான்’ என்று சின்னவன் புகார் சொல்ல பிடிப்பில்லாமல் ஏதோ ‘டேய் வீணாகச் சண்டையிடக்கூடாது போய் வெளியே நில்லுங்கள்’ என்றாள் சாவித்திரி.
மூத்த பையன் கணேசனிடம் வந்து, “அப்பா ஐஸ்க்ரீம் வாங்க காசு கொடு” என்றான்.
கணேசன் பையிலிருந்து பணம் எடுத்துக் கொடுக்க இருவரும் ஐஸ்க்ரீம் வாங்க ஓடினார்கள்.
‘நான் இருவரிடமும் தனித்தனியாக கொஞ்சம் பேசலாமா?’ என்று கேட்டார் வக்கீல் ராஜையா.
‘நீங்கள் பலமுறை இவ்வாறு பேசியாகி விட்டது வக்கீல் சார். முறைப்படி விவாகரத்திற்கான வழியைப் பாருங்கள்’ என்றாள் சாவித்திரி.
‘இல்லை சிஸ்டர். ஒரு குடும்பம் சிதைந்து போவதைப் பற்றி நினைக்கும்போது, அதுவும் என் நண்பன் தனித்து நிற்பதைப் குடும்பம் பார்க்க மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் தான்…’ என்று வக்கீல் ராஜையா சொல்லி முடிப்பதற்குள், ‘ஏ ராஜையா வீணாகப் போட்டு உன்னையே குழப்பிக் கொள்ளாதே. ஒரு வக்கீலாக இருந்து எங்களுக்கு விவாகரத்திற்கான முடிவைக் கவனித்து கோர்ட் மூலம் ஒரு நல்ல தீர்ப்பை வாங்கி கொடு போதும்’ என்றான் கணேசன்.
‘இதற்கு காரணம் தான் என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா? என்று கேட்டார் ராஜையா. ‘எத்தனை முறை தான் இதைக் கேட்பீர்கள். இருவரும் வேலை செய்கிறோம். நல்ல முறையில் சம்பாதிக்கிறோம். வாழ்க்கையில் இருவருக்குமே பிடிப்பில்லாமல் ஏதோ கடமைக்காக வாழ்கிறோம். இதிலே எதற்காக ஒருவரை எதிர்பார்த்து ஒருவர் உட்கார்ந்து கொண்டு. திடீரென்று பிந்தி வந்தால் ஒருவருக்கொருவர் சந்தேகப்பட்டும் கொண்டு எதற்காக ஜீவனில்லாமல் ஒரு வாழ்க்கை வாழ வேண்டும்’.
‘ராஜையா சார். உங்களால் முடியாது என்றால் தெளிவாகச் சொல்லி விடுங்கள். நாங்கள் வேறு யாராவது நல்ல வக்கீலாகப் பார்த்துக் கொள்கிறோம்’ என்றாள் சாவித்திரி.
அப்போது தான் ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு உள்ளே வந்த பையன்களை கவனித்த வக்கீல் ‘ஆமாம் இவர்களப் பற்றி நினைத்துப் பார்த்தீர்களா?’ என்று கேட்டார்.
‘அதெல்லாம் தீர்க்கமாக முடிவு செய்தாகி விட்டது. மூத்தவன் என்னிடமும், இளையவன் சாவித்திரியிடமும் வளர வேண்டும் என முடிவாகி விட்டது’ என்றான் கணேசன்.
‘இந்த குழந்தைகளுக்கு உங்கள் விவாகரத்தைப் பற்றித் தெரியுமா?’
‘அது அவசியமானதாகத் தெரியவில்லை’ என்றாள் சாவித்திரி.
‘வளரக் கூடிய குழந்தைகளுக்கு இது கண்டிப்பாக தெரிய வேண்டும். நான் வேண்டுமானால் கேட்கட்டுமா?’
‘வக்கீல் சார், திரும்பத் திரும்ப நீங்கள் விவாகரத்து வேண்டாம் என்பதைத்தான் பேசுகிறீர்கள். இனி நாங்கள் வேறு வக்கீல் பார்த்துக் கொள்வது தான் நல்லது என்று தோன்றுகிறது’ எழுந்தாள் சாவித்திரி.
‘கொஞ்சம் பொறுமையாக இருங்கள்’ என்று வக்கீல் சொல்ல ஐஸ்கிரீம் தின்று முடித்த மூத்த பையன் ‘அம்மா துடைத்து விடு’ என்று ஓடி வந்தான். அவனுக்கு துடைத்து விடவும் பின்னால் வந்த இளைய பையன் ‘அம்மா எனக்கும் ஐஸ்கிரீம் ஒட்டி யிருக்கிறது துடைத்து விடுங்கள்’ என்றான்.
சாவித்திரி அவனுக்கும் துடைத்து விட திரும்பவும் இருவரும் ஓடி விளையாட ஆரம்பித்தார்கள்.
‘இந்த சந்தோஷம் இந்த மகிழ்ச்சியை நீங்கள் பிரித்துக் கொண்டு போகப் பார்க்கிறீர்களா?’ என்று கேட்டார் வக்கீல் ராஜையா.
‘அது- வந்து- இதைப் பற்றி நான் ஒரு நாளும் யோசித்துப் பார்க்கவில்லை’ என்றான் கணேசன்.
‘என்ன சாவித்திரி நீங்கள் சொல்லுங்கள். இந்த இளம் பிஞ்சுகளுடைய மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் பாழாக்கித்தான் நீங்கள் விவாகரத்து வாங்கிக் கொள்ள வேண்டுமா? இவர்களுக்காகவாவது சேர்ந்து வாழக்கூடாதா?’ என்றார் வக்கீல்.
‘ஸாரி வக்கீல் சார். இந்தக் கோணத்தில் நான் யோசித்துப் பார்க்கவில்லை. எனக்கு கணேசன் மேல் எழுந்த வெறுப்பில் விவாகரத்து கிடைத்தால் போதும் என்று எண்ணியிருந்தேன். இனி விவாகரத்தைப் பற்றி யோசித்துப் பார்க்க வேண்டும். நாங்கள் வருகிறோம். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் கணேசன்’.
‘நீ சொன்னால் சரிதான்’ என்று சொன்ன கணேசன் அவளோடு கிளம்பினான்.
வக்கீல் ராஜையா நிறைவோடு புன்னகைத்துக் கொண்டார்.
– தினபூமி – ஞாயிறுபூமி, 28.12.2003.
![]() |
பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க... |
