அஞ்சல் செல்வனுடன் பேட்டி
கதையாசிரியர்: பொ.சண்முகநாதன்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: September 4, 2026
பார்வையிட்டோர்: 20
(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அஞ்சல் செல்வனை அறியாத தமிழ் மக்கள் இருக்கமுடியாது. எழுத்துத் துறையில் குறுகிய காலத் தில் முன்னேறிய இவர், ஏற்கனவே தான் பத்திரிகை களில் கேட்ட இருநூறு கேள்விகளையும், அதற்கு அளிக்கப்பட்ட பதில்களையும் தொகுத்து நூலாக வெளி யிட்டதை வாசகர்கள் அறிவார்கள். இவர் இப்பொழுதும் நூல் ஒன்று வெளியிடுவதாக அறிந்து அவரிடம் பேட்டிகாணச் சென்றேன். நான் சென்றபோது இவர் அஞ்சலட்டைகளுக்குமுன் கையில் பேனாவுடன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். என்னைக் கண்டதும் அவர் அத்தனை அலுவல்களுக் கிடையிலும் பச்சைத்தண்ணீர் தந்து வரவேற்றுச் சிரமம் பாராது பேட்டி தந்தார். அன்னாரிடம் நான் கேட்ட கேள்விகளும்,அதற்கு அவர் தந்த பதில்களும் அடியில் காணப்படுகின்றன:-
கே:- நீங்கள் ஏதோ நூல் வெளியிடப்போவ தாக அறிந்தேன்; உண்மைதானா?
ப:- ஆம். நான் இதுவரை பல பத்திரிகை களில் எழுதிய நூறு அஞ்சல்களைத் தொகுத்து, நூலாக்கி ளிெயிடப்போகிறேன்!
கே.- இதுவும் ஒரு புது முயற்சிதான் அல்லவா?
ப:- என்ன புது முயற்சி! நேரு இந்திராகாந் திக்கு எழுதிய கடிதங்களும், அண்ணாத்துரை ‘திராவிட நாடு’ பத்திரிகையில் ‘தம்பிக்கு’ எழுதிய கடிதங்களும் நூலாக வந்திருக்கின்றனவே! தெரியாதா உங்களுக்கு?
கே:- அவைகளையெல்லாம் நீங்கள் படித்ததுண்டா?
ப:- படித்ததில்லை; கேள்விப்பட்டதுண்டு!
கே:- உங்களுடைய படைப்புகள் எந்தெந்தப் பத்திரிகைகளில் வெளிவருகின்றன?
ப:- தமிழகத்திலும் ஈழத்திலுமுள்ள சுமார் இருபது பத்திரிகைகளில்!
கே:- இவ்வளவு பத்திரிகைகளையும் நீங்கள் வாங்கிவருகிறீர்களா?
ப:- நண்பர்களிடமிருந்து எனது படைப்புகள் வெளிவந்த ‘பக்கங்’களை வாங்குவேன். நூல் நிலையங் களில் களவாக இப்பகுதிகளை வெட்டி எடுப்பதும் உண்டு!
கே:- நீங்கள் பத்திரிகைகளில் விரும்பிப் படிக் கும் பகுதிகள் எவை?
ப:- கேள்வி -பதில்கள், கடிதங்கள், விளம் பரங்கள்!
கே:- சிறுகதை, நாவல், கட்டுரைகள், கவிதை கள் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?
ப:- சிறுகதை சிறுவர்களையும், நாவல் பெரிய வர்களையும் கெடுத்துவருகிறது. கட்டுரை, கவிதைகள் என்பன ஒருவருக்கும் புரியாதன. கேள்வி பதில், கடிதங்கள், விளம்பரங்கள்தான் மக்களுக்கு நன்மை தருவன !
கே:- நீங்கள் எத்தனை துறைகளில் எழுத்துப் பணி புரிகிறீர்கள்?
ப:- கலை, இலக்கியம், அரசியல் ஆகிய முத்துறைகளிலும்!
கே:- அஞ்சல்துறை வளர என்ன செய்தல் வேண்டும்?
ப:- பத்திரிகைகள் ‘ஆசிரியருக்குக் கடிதம்’ எழுதுபவர்களின் முழு முகவரிகளையும் தெளிவாக வெளியிடவேண்டும், வாசகர்கள் ‘அஞ்சல்களை’ மட் டும் படித்தால் போதாது. அவைகளை எழுதியவர்களை யும் ஒன்றாகக் கவனித்துப் படிக்கவேண்டும். பத்திரி கைகள் பிரசுரமாகும் அஞ்சல்களை எழுதிய ஒவ்வொருவருக்கும் அந்தப் பத்திரிகையின் ஒரு பிரதியை இலவச மாக அனுப்பவேண்டும். அத்துடன் பிரசுரமாகும் அஞ் சல்களுக்குத் தகுதியறிந்து சன்மானங்களும் வழங்கப் படல்வேண்டும்!
கே:- நீங்கள் ‘கலை’ சம்பந்தமாக எழுதிய முதல் அஞ்சல் என்ன?
ப:- கன்னடத்துப் பைங்கிளி சரோசாதேவி யின் கவர்ச்சிப் படங்களை ஒவ்வொரு இதழிலும் வெளி யிடுமாறு மன்றாடி ஒரு சினிமாப் பத்திரிகைக்கு எழுதியது!
கே:- ‘இலக்கியம்’ சம்பந்தமாக எழுதிய முதல் அஞ்சல்?
ப:- ‘சென்ற இதழில் ஏகாம்பரம் எழுதிய மல் லிகைப் பந்தல் என்ற சிறுகதை மிக மிகச் சிறப்பாயிருந் தது. இதுபோன்ற கதைகளைத் தொடர்ந்து வெளி யிட்டு வரவும்’ என்ற ஓர் அஞ்சலாகும்!
கே:- மன்னிக்கவும், நீங்கள் தான் சிறுகதைகள் படிப்பதில்லை என்றீர்களே?
ப:- இப்படியான அஞ்சல் எழுத சிறுகதை யைப் படித்துத்தான் ஆகவேண்டும் என்று உங்களுக்கு யார் சொன்னது?
கே: ‘அரசியல்’ சம்பந்தமான முதல் அஞ்சல்…?
ப:- பொதுமக்களும் தேர்தலும்’ என்னும் ஒரு தினசரியில் பிரசுரமாகிய அஞ்சலாகும்!
கே:- நீங்கள் எழுதிய மிக நீண்ட அஞ்சலைச் சொல்லமுடியுமா?
ப:- ‘பொதுமக்களும் தேர்தலும்’ என்பதே யான் எழுதிய நீண்ட அஞ்சலாகும். மடையன் தொப்பிப் பேப்பரில் (Fool’s cap paper) சுமார் ஒரு பக்கம் அளவுக்கு எழுதியதாகும்.
கே:- உங்களைக் கவர்ந்த எழுத்தாளர்களையும் உங்களது வழிகாட்டிகளையும் கூறமுடியுமா?
ப:- எவருமிலர்; எல்லாம் நானே!
கே:- தங்களது இலட்சியம்…?
ப:- தமிழ்மக்களுக்கு என்னால் முடிந்தவரை எழுத்துப்பணி புரிவது!
கே:- நீங்கள் எழுத்தைமட்டும்தான் நம்பி வாழுகிறீர்களா?
ப:- ஈழத்து எழுத்தாளர்கள் எழுத்தை மட்டும் நம்பி வாழமுடியாது என்பதற்கு நான் மட்டும் விதி விலக்கா?
கே:- நீங்கள் முன்பு வெளியிட்ட கேள்வி – பதில்’ என்ற நூலின் கதியை அறியலாமா?
ப:- அதுபற்றி ஒன்றும் நான் சொல்ல விரும்ப வில்லை. ஆனால் ஒன்றைமட்டும் நீங்கள் நினைவில் வைத் திருங்கள். எனக்கு பணத்திலும் இலட்சியமே (புகழ்) பெரிது. கேவலம் நான் பணத்துக்காக எழுத்துப்பணி புரியும் கூட்டத்தைச் சேர்ந்தவனல்லன்!
இத்துடன் நான் எனது பேட்டியை முடித்துக் கொண்டு அஞ்சல் செல்வனுக்கு நன்றி கூறிவிட்டு வெளியேற எழுந்தேன். அவர் என்னைத் தடுத்து இந் தப் பேட்டி வெளிவரும் பத்திரிகையின் ஒரு பிரதியை தனக்கு அனுப்பிவைக்கும்படியும், தனது படத்தையும் பேட்டியுடன் வெளியிடுமாறும் கூறி தனது புகைப்பட ‘புளக்’ ஒன்றையும் என்னிடம் திணித்தார்.
– கொழும்புப் பெண் (நகைச்சுவைக் கட்டுரைகள்), முதற் பதிப்பு: செப் 1965, கலைச்செல்வி பதிப்பகம், சுன்னாகம்.
![]() |
எழுத்தாளர் பொ.சண்முகநாதன் (போனாச்சானா) இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளரும், நகைச்சுவை இலக்கிய முன்னோடிகளில் ஒருவரும் ஆவார். 'போனாச்சானா' என்ற பெயரிலும் எழுதியுள்ளார். வீரகேசரி' மூலம் 1961ல் எழுத்துலகில் நுழைந்த நகைச்சுவை எழுத்தாளர் திரு.பொ.சண்முகநாதன் அவர்கள் ஏனைய ஈழத்துப் பத்திரிகைகளான 'ஈழநாடு', 'கலைச்செல்வி', 'கலைவாணி, 'சங்கப்பலகை', 'சுதந்திரன்', 'செய்தி', 'தமிழ்முரசு', தினகரன்', 'புதினம்', 'விடுதலைப் பரணி, விவேகி', 'ராதா' ஆகியவைகளிலும் எழுதியுள்ளார். இவர் நகைச் சுவைக்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
தின பலன்
எம்.பாலமுரளி
September 6, 2026
கொழும்புப் பெண்
பொ.சண்முகநாதன்
September 4, 2026
கொழும்புப் பெண் வேண்டாம்!
பொ.சண்முகநாதன்
September 4, 2026
