கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 12, 2024
பார்வையிட்டோர்: 1,139 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வாசல் திரைச் சீலையைத் தள்ளியதும் கூடத்தில் கட்டிலில் படுத்திருந்த உருவத்தைக் கண்டதும் என் விலாசம் தேடல் முடிந்தது. உடனே தெளிந்துவிட்டது. அப்போது தான் எதிர் அறையிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்- பதினாறு. பதினேழு – என்னைக் கண்டதும் அவள் கண்கள் பூத்தன! 

“அம்மா! அவர் வந்துட்டார்!” என்று சொல்லிக் கொண்டே நேரே என்னிடம் வந்து கைப்பெட்டியை வாங்கிக் கொண்டாள் 

“நீதான் வைதேஹியா?” 

சந்தோஷ வெட்கத்தில் முகம் லேசாய்க் குழம்பிற்று. மாநிறம்; குறு குறு. 

“என்னை எப்படித் தெரிந்தது உனக்கு?’ 

முன்றானையால் முகத்தைத் துடைத்த வண்ணம் அடுக்குளிலிருந்து அவள் தாய் வந்தாள். 

“வாங்கோ! இதோ காப்பி கலந்துண்டு வரேன். வைதேஹி, மாமாவைக் கவனிச்சுக்கோ. வைதேஹி இன்னொரு அறைக்கு என்னை முன்னிட்டாள். 

“என்னை எப்படித் தெரிந்தது உனக்கு?” 

“கோமதி கடிதம் போட்டிருந்தாள்.” 

“உன் அண்ணா எங்கே?’ 

“உங்களை அழைத்துவர ஸ்டேஷனுக்குப் போயிருக்கான்.” 

என் குரலில் லேசாய்ப் பொறுமையிழந்தேன். “அதெல்லாம் வேண்டாம்னு உன் அக்காளிடம் மெனக்கெட்டுச் சொல்லியிருந்தேனே!” 

“ஏன் தப்பா?” 

“இல்லை.ஏன் அந்த சிரமம்? வயதானவர்கள் எங்களுக் கெல்லாம் ஒரு அசட்டு ரோசம் உண்டு தெரியுமோன்னோ?” 

புன்னகை புரிந்தாள். “என்னவோ அண்ணாவுக்கு- ஏன் எங்கள் எல்லாருக்குமே அதில் ஒரு சந்தோஷம். 

“என்னை முன்னே பின்னே பார்த்திராமல் அந்த நெரிசலில் என்னை எப்படி அடையாளம் கண்டுகொள்ள முடியும்? ‘லா.ச.ரா!’ என்று கத்துவானா?” 

சிரித்தாள். ”புத்ர’ ஜாக்கெட்டில் உங்கள்முகம்…”

“டேயப்பா! அந்த போட்டோ பத்து வருஷமாச்சு. அப்போதைக்கிப்போ எவ்வளவு மாறிட்டேன்! எனக்கே தெரியறதே!” 

“மாறினால்? முகத்தின் கோடுகள் வாகு மறைஞ்சுடுமா? அந்தப் புலிக் கண் அப்படியேதான் இருக்கு.” 

சரிதான். நான் என் இடத்துக்குத்தான் வந்திருக்கிறேன். 

சமையலறை வாசற்படியில் நின்றேன். “உள்ளே வரலாமா?” 

“தாராளமா வாங்கோ.வரணும்.” 

இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிக்க இது நான் பயன்படுத்தும் பாணி! ஆனால் எல்லா இடங்களிலும் உபயோகிக்க முடியுமா? இடம் பார்த்து, எனக்கும் மனம் பிடித்த இடத்தில்தான் இந்த உரிமை கொண்டாடத் தோன்றும், கற்பனை ஸ்வரம் எழுவதுபோல். 

ஒரு அடுப்பில் உருளைக்கிழங்கு கறி வாணலியில் மொறு மொறுக்கிறது. அப்பளத்தைப் பொரித்து வடிகட்டியில் கூடு கட்டியிருக்கிறது. மாமி, பாயஸத்துக்கு அப்போத்தான் முந்திரிப் பருப்பை வறுத்துக் கொட்டிக் கொண்டிருக்கிறாள். கட்டை குட்டையான உடல்வாகு. மறுதீயில் இன்னொரு எவர்சில்வர் இலுப்பைச் சட்டியில் எண்ணெய் காய்கிறது. அடுக்கில் வடை மாவு.அதன் மேல் உருவி உதிர்த்த கறி வேப்பிலை. 

“என்ன மாமியிது?” 

“நான் மாமியில்லே. அகிலா. பிறந்தாம் ஆனைக்கா. உங்கள் ஊர் லால்குடியில், இடறி விழுந்தால் சப்தரிஷியும் சீமதியும் போல், எங்களூரில் வீட்டுக்கு வீடு ஒரு அகிலாண்டம்.” 

“என் தகப்பனார் பேர் சப்தரிஷி. என் அம்மா ஸ்ரீமதி.

“பார்த்தேளா, நான் சொன்னது சரியாப் போச்சு!’

“சரி, என்ன இது அகிலா? மதுரையிலிருந்து ஊருக்குத் திரும்பற வழியில், கோமதியின் கட்டாயத்தில் இறங்கி ஒரு வேளை தங்கப்போறதுக்கு ஒரேயடியா அமர்க்களம் பண்ணிண்டிருக்கேள்!” 

“வந்த விருந்தாளிக்கு ஒரு பாயஸத்தை வெச்சுட்டா விருந்தாயிடுமா? என்னவோ எங்கள் சந்தோஷம். இதோ என் பிள்ளையும் வந்துட்டான். கோபாலா ! நீ அந்தண்டை போனே,மாமா இந்தண்டை வந்துட்டா.” 

சோகம் பாசி பூத்த அந்த முகத்தில் புன்னகை அரும்பு கட்டுகையில் ஏதோ மருட்சி. மழை காலத்தில் அருணோதயம். முப்பது இருக்குமா? கூடக் காட்டுகிறது. உடல் சிறு கூடு. முதுகு லேசாக வளைந்திருக்கிறது. 

என் நெஞ்சைப் படித்தாற்போல். அவன் தாய், பின்னே வேறெப்படியிருக்க முடியும்? அவர் மாபாரதமாப் படுத்துவிட்டபின் ரெண்டு உடன் பிறந்தாளுக்குக் கலியாணம் நடந்திருக்கு. வைதேஹி காத்திண்டிருக்கா, உடனே அவசரமில்லாவிட்டாலும், தம்பிமார்கள் மூணு பேரும் வெவ்வேறு ஊரிலே அவாளவால் படிப்பில் இ கட்டான கட்டத்தில் இருக்கா யானைத் தீனி தின்னும் படிப்புகள். எல்லாம் ஆசைதான், எப்படியேனும் தலை யெடுக்க மாட்டோமா? ஆரம்பிச்சதை நடுவிலும் விட முடியாது! பிராம்மணன் கரடியைக் கண்டிண்ட கதை தான்.” 

“என்னம்மா, அவர் ஏதோ வந்த இடத்தில் அவரையும் நம் முறையீடுக்கு ஆளாக்கணுமா?” 

பையனுக்கு லேசாய்க் கேலி. நிறைய ரோசம். 

“அதுக்கில்லேடா. மூத்ததாய்ப் பிறக்கக் கூடாதுன்னு.” 

பையன் வாய்விட்டுச் சிரித்துவிட்டான். “அதெல்லாம் உன் இஷ்டமா என் இஷ்டமா? பிறக்கணும்னு இருந்தால் எங்கானும் ஜனிச்சுத்தானே ஆகணும்! எல்லாம் நரியூருக்குப் பயந்து புலியூருக்குப் போன சமாச்சாரம்…” 

“அதுக்கில்லேடா.” 

“வேண்டாம்மா, விட்டுத் தள்ளு. நீ பேசறது வேதாந்தமா, யதார்த்தமா? இதில் ஏதேனும் பலனுண்டா?” 

“மாமாவுக்குத் தெரியாதது இல்லை. கட்டுத் தறி போல, கோபாலனின் ஊணின தைரியம் இல்லாட்டா, எங்கள்மேல் எப்பவோ புல் முளைச்சிருக்கும்…” 

“சரி அம்மா,விடேன்.” 

சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் இதெல் லாம் எங்கே கொண்டுபோய் விடப்போகிறதோ என்று ஒரு திகைப்பு. தீர்ப்பு ஆனவன், தீர்ப்பு நிறைவேறக் காத் திருக்கும் ஒரு விரக்தி,கூடவே குழப்பம். 

அந்தக் கண்களில் நாட்டம் இல்லை. விட்டத்தில் அல்ல எங்கேயோவிற்கு அப்பால் பதிந்திருந்தது. லக்ஷணமான முகம் – உதடுகள் காய்ந்திருக்கின்றன. உதடுகள் அசைகின்றன. குனிந்து ஒட்டுக்கேட்க முயல்கிறேன். 

ஏதோ ஸ்லோகம். 

“அப்பா வால்மீகி ராமாயணத்தில் அத்தாரிட்டி கட்டுரைகள் கூட எழுதியிருக்கிறார். உங்களிடம் காட்டணும். திடீரென்று இப்படித்தான் மத்தாப்பூ மாதிரி ஸ்லோகங்கள் கொட்டும். இன்னும் உரக்கவே கூடச் சொல்வார். வந்தமாதிரியே அடங்கிவிடும். திடீர்னு சுய நினைவுகூட அபூர்வமா, கண்ணில் தெரியும். ஆனால் அதை யொட்டிப் பேச்சைக் கூட்டுமுன் சாளரம் மூடிவிடும்.” 

“இவருக்குத் தென்பு எப்படி?” 

மாமி, “உப்பில்லாமல் சாதத்தில் மோர்விட்டு மையாக் கரைச்சு, திப்பியை எறிஞ்சுட்டு அந்த அமிர்தத்தைக் குழந் தைக்குச் செலுத்தறமாதிரிப் புகட்டணும். ஒருநாள் தொட்டுக்க ரஸத்தெளிவு ஒரே ஒரு சொட்டு… நாங்கள் பட்டபாடு, புரைக்கேறி இழுத்துண்டு போன மூச்சு திரும்பி வரதுக்குள் எங்கள் உசிர் போய்ப் போய்த் திரும்பி வந்தது.” 

அவன், வேடிக்கையாக்கூட இருக்கு. படுக்கையை, அரைத் துணியை மாத்த அஞ்சு நிமிஷம் உக்காத்தி வெச் சாலே B.P. தேரையாத் தாவறது. ஆபீஸில் திடீர்னு மயக்கம் போட்டு மடேர்னு விழுந்தவரை காரில் போட் டுண்டு வந்து கட்டிலில் விட்டா. ஆச்சு,வருஷம் மூணு ஆறது. இதே ஸ்டேஜ். இதே ஸ்டேட்டுத்தான். அல்லோ பத்திக், ஆயுர்வேதா, சித்தா- காட்டாத ஸ்பெஷலிஸ்ட் இல்லை. ஸ்ட்ரோக், மூளையில் தாக்கி, லக்ஷேப லக்ஷோப ஸல்களில் எதையோ ஒண்ணை அழுத்திண்டிருக்காம். எக்ஸ்ரேக்குப் பிடிபடல்ல. சிகிச்சையும் பண்ணமுடியாது.” 

“.விமோசனமேயில்லையா?” 

“சொல்லமுடியாது. அழுந்தியிருக்கும் ஸெல் தானாவே தற்செயலா விடுபட்டால், கோமா தெளிந்து, நினைவு உடலில் செயல் எல்லாமே, உடனே திரும்பிவிடலாமாம் இல்லை இப்படியே…” 

உதட்டைப் பிதுக்கிக் கையை விரித்தான். 

“இந்த மூணு வருஷமா என்ன நடந்துண்டிருக்கு? உயிரோடுதானிருக்கேன்’னு அவரும் இருக்கார். நாங்களும் இருக்கோம்னு வளைய வரோம். எந்தக் காரியம் நிக்கறது. நிறுத்தமுடியறது?” 

“என் உடம்பிலே ஆயிரம் கோளாறு இருக்கு. சர்க்கரை, B.P. அல்ஸர் – அதெல்லாம் சொல்லிக்கற சமாச் சாரமில்லை. விறகு வெட்டிக்கு வைத்யம் விறகுக் கட்டை யாலேயேதான் – நல்லதாப் பேசுவோம். இடை யிலே கோபாலனுக்குக் கலியாணமாகி. நாட்டுப்பொண்ணுக்கு நேத்து வளைகாப்பு. நல்ல சம்பந்தமா வந்தது. விட முடியல்லே. இடையில் அவன் ஆபீசில் மூணு மாதம் ஏதோ ட்ரெயினிங்குக்கு அமெரிக்காவுக்கு அனுப்பி வெச்சா.” 

அம்மா ஒண்ணு விடமாட்டாள். 

“ஏன் விடணும்? இத்தனை கஷ்டத்தில் இருக்கிற ஒண்ணு ரெண்டு தென்பைச் சொல்லிப் பலத்தை வரவழைச் சுக்கத்தான். இந்த மூணு வருஷத்தில் எங்கள் எல்லோ ருக்கும் கண்ணீரே வறண்டுபோச்சு” என்று மாமி சொல்லும் போதே மாமிக்குக் கண் துளும்பிற்று. 

நான் ஊர் திரும்பி ஒரு மாதமாகியிருக்கும். மஞ்சள் தடவி, திருச்சியிலிருந்து கடிதம். 

சௌ.பிரேமாவுக்கு வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குப் பெண் பிறந்தது. தாயும் குழந்தையும் சௌக்யம். (தேதி- நினைவு இப்போ இல்லை) அன்று புண்ய வசனம் – 

பி.கு: குழந்தைக்கு அகிலாண்டம் என்று பெயரிடப் போகிறோம். 

நள்ளிரவில் இன்று பௌர்ணமி – கனவுள் தந்தி வாத்யத் தின் தேம்பல் கேட்டு விழித்துக்கொண்டேன். அல்லது விழித் துக்கொண்டேனா? மண்டை மயிர் விறைத்துக்கொண்டது. இடம் தாண்டி, காலம் தாண்டி, வையம் பூரா வியாபித்த ஓசையலைகளின் விதிர் விதிர்ப்பில்- இப்படித்தான் என்னால் விடுபிரி காண முடிகிறது- மிதந்து வந்த ஸாரங்கியின் ஸ்ருதி மீட்டலில், நினைவோட்டின் எதிரொலிப்பில், நான் உடனே அடையாளம் கண்டுகொண்ட குரலில், சொல்பாகு நேர்த்தியாகச் சுழன்றது. 

-மனிதனுக்கு ஒரு வருடம் தேவர்க்கொரு நாள், தேவர்க்கொரு வருடம் பிரம்மனுக்கொரு நாள். இந்தக் கணி தத்தில் ஏணியின் உச்சிப்படி ஈசுவரனை அடையும்போது காலம் எவ்வளவு பெரிய பிதற்றல்! ஏணியில், ஹே ராமா! உன்னிடம் எத்தனாம்படி? 

காம்பவுண்டில் எங்கோ தென்னை மட்டை விழுந்தது. மரத்தின் மூச்சேபோல் அந்த ஓசையில்தான் எவ்வளவு சோகம்! 

  • கல்லோ, உடலோ, தேன்கூட்டைப் பன்முறை பழிக் கும் மூளையின் லக்ஷோப லக்ஷ அறைக் கண்களோ – அங்கு திக்குத் தப்பித் திரியும் ப்ரக்ஞைக்கு எல்லாமே சிறைதான். காத்திருக்கும் நேரம் அனைத்தும் சிறை நேரம்தான். விடுதலையும் ஒரு தோலுரிப்புத்தான். எத்தனை தோல் முழுச் சூன்யத்துக்கு உரிக்கணுமோ? முழுமை என்று ஒன்றே உண்டோ? ராமா! 

மறுநாள், கறுப்புத் தடவி ஒரு கடிதம் வந்தது. விடு தலை கிடைத்துவிட்டது போலும்! 

  • நிகழும் காளயுக்தி வருஷம்.. 

விழியை மறைத்தது. கண்ணாடியைத் தேடினேன் மூக்கில்தான் இருந்தது. இத்தனைக்கும் அங்கு தங்கினது ஒரு இரவுதான். அதற்கே இவ்வளவு சதையாட்டமா? 

இந்த வயதில் எங்களுக்கு வேண்டியதென்ன? இனம் தெரிந்த. அன்பும், ஆதரவும்தான். ஒரு துளி கிடைத்தாலும் நினைவு சேமித்து வைத்துக்கொள்ளும் அமுத தாரை. 

கோபாலா, சுமைதாங்கிக்குத் தனி நன்றி செலுத்தும் வழிப்போக்கன் இருக்கானோ? வழியில் கண்டதும் பொதியை இறக்கு… அவ்வளவுதான் யாருக்கும் தெரிந்தது. 

யாருமில்லாத சமயத்தில்தான் யாருக்கு உண்டோ அவர்க்கு மட்டும் ஆண்டவன் தரிசனம் கிட்டும். 

ஆபீஸ் போக வேண்டியவாள் எப்பவோ போயாச்சு. 

மன்னி கிணற்றடியில் துணி துவைத்துக்கொண்டிருந் தாள். ஐயோ, ஜலத்தின் பிசுக்கு! சோப்பும் நுரைக்காது. பருப்பும் வேகாது. 

வைதேஹி, பள்ளிக்குப் புறப்பட ஆயத்தமாகிக் கொண் டிருந்தாள். புத்தகப் பையுள் இந்த டிபன் டப்பா போகாமல் ஏன் மக்கர் பண்றது? 

பின்னாலிருந்து விவரிக்க முடியாத ஒரு சக்தி உந்த, முகம் திரும்பினாள்.அப்பா கட்டிலில் எழுந்து உட்கார்ந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தார்! 

பூமி, தான் சுழலும் அச்சில் இன்னும் ஒரு பின்னம் சாய்ந்தது. 

“அப்பா!” அலறிக்கொண்டு அணைக்க ஓடி வந்தவள் சட்டென அச்சங் கண்டு கட்டிலண்டை நின்றுவிட்டாள். எப்படியும் நாலு வருடத் தூக்கத்திலிருந்து விழித்த இந்த மனுஷன் புது மனுஷன் தானே! அவர் பார்வை சூழ் நிலையைக் கொஞ்சம் கொஞ்சமாக நோட்டமெடுத்துக் கொண்டிருந்தது. அது சென்றவிடமெல்லாம் அவர் நாட்டமும் தொடர்ந்தது. திகிலில் கையைப் பிசைந்து கொண்டு நின்றாள். 

ஹும் – இது வைதேஹிதான்.ஆனால் திடீரென நேத் திக்கு இன்னிக்கு எப்படி இவ்வளவு வளர்த்தி! எல்லாமே ஏதேதோ மாறியிருக்கு. கோபாலன், கலியாணம், கோமதி, சீனு இவாள்ளாம் எங்கே? வீடே ஏதோ வெறிச்சோன்னு -இது யாரோ பெண், புடவையைப் பிழிஞ்சு முறுக்கித் தோளில் போட்டுண்டு ஸ்வாதீனமா உள்ளேயிருந்து வரா. பார்த்த முகமாயில்லே – வாசற்படியில் கொழ, கொழன்னு ஒரு குழந்தை எச்சிலைக் கொப்புளிச்சு விளையாடிண் டிருக்கு! அகிலாவைக் கேட்டால்தான் தெரியும். அகிலா எங்கே? ”ஏ அகிலா! அகிலா!” 

பூஜையறையில், இரண்டு வெள்ளி அகல்களுக்கிடையே, மாலையிட்ட ஒரு பெரிய போட்டோவிலிருந்து அகிலா அவரைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தாள்.

– உத்தராயணம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஜூலை 1992, வானதி பதிப்பகம், சென்னை.

லா.ச.ரா லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *