அகம் + தை = அகந்தை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 9, 2026
பார்வையிட்டோர்: 153 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘இந்தக் குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆவது? என்று எண்ணி இருந்தால் அவள் இங்கிருந்து செல்வாளா? சென்றிருப்பாளா? மூன்று குழந்தைகளுக்குத் தாயான பின் அவளுக்கு என்ன வேண்டிக் கிடக்கு முன் கோபத்திற்கு? மாதம் மூவாயிரம் வெள்ளி வாங்குகிறோம் எனும் சம்பள தைரியமா? இல்லை, தான் எனும் அகந்தையா?’ விசாலியைப் பற்றிய சிந்தனையுடன் ஸ்ரீதரன் எழுந்து உட்கார்ந்து விளக்கின் சுவிட்சைப் போட்டான். அவள் எதிரே சிரித்துக் கொண்டு பார்த்தாள், ஆம்! அவளுடைய புகைப்படத்தில். தன்னை மறந்த ஏகாந்தத்தில் உறங்கினார்கள் அவளது பிள்ளைகள் மூவரும்.”

இன்று ஞாயிற்றுக் கிழமை ஆகையால் ஒரு நிம்மதிப் பெருமூச்சு. சன்னல் பக்கமா வந்து உள்ளே விழுந்தது அலட்சியமாகக் காலை பேப்பர். எத்தனை அறிஞர்களின் முயற்சி, சிந்தனைகள் அதில் இடம் பெற்றிருக்கின்றன. பேப்பர்காரனும் ஒருவகையில் விசாலியைப் போன்றவன் தானா? ஸ்ரீதரனுக்கு அங்கு நிகழும் எந்தவொரு நிகழ்விலும் அகந்தையின் நெளிவே தெரிந்தது. பெரியவனுக்கு ஹார்லிக்ஸ் தான் வேண்டுமென்று அடம்பிடிக்கும் குணம். சின்னவன் மைலோ விரும்பி. கடைக்குட்டி தேவன் ஒருவனே அப்பாவைப் போன்றவன். அது டீயோ காபியோ என்று கூட ஆராய்ச்சி பண்ணாத குணம். அம்மாவைப்போல் இரண்டு. அப்பாவைப் போல் ஒன்றுதானா? நல்லவேளை அந்த ஒன்றாவது தேர்ந்ததே! இனி அடுப்படி…. தீனி தாயாரிக்கும் பஹீரத முயற்சி! சே… வாழ்க்கையா இது? பிரம்மச்சாரியாகவே இருந்திருக்கலாம்.

‘அப்பா….!” பெரியவன் அழைத்தான்.

‘என்னடாப்பா?”

“ஹார்லிக்ஸ்….!”

“எழுப்பித் தர்றேன் சிவனேன்னு தூங்கு” – ஒரு விதத்தில் கடுப்பு அவனுக்குள்.

“டாடீ…!” வெறுப்புடன் பார்த்தான் ஸ்ரீதரன். அது ரண்டாவது கேஸ்!”

‘என்ன டாடிக்கு?”

“மைலோ…!”

“நல்ல டிரைனிங் குடுத்து வெச்சிருக்கா! இப்ப என் எதிர்லே வந்தான்னா அவளை…”

“அப்பா…!”

“டேய்! என்னங்கடா வரிசையா கொல்றீங்க?” கடைக்குட்டி விரலைச் சூப்பிக் கொண்டே தூங்கிவிட்டான்.

இன்னிக்குப் பார்த்துச் சனியன் பிடிச்ச பால்காரி வேற வரலை… சே… அவளுக்கும் அகந்தை! எழுந்துபோய் வாசல் கதவைத் திறந்தான்! போச்சு! பால்பாக்கெட்டைக் கடித்துக் குதறிப் பாலை நாக்கால் சுவைத்து நக்கிக் கொண்டிருந்தது நாயொன்று!

“அடக்கடவுளே! இந்தப்பால் கொண்டு வந்து கொடுக்கிறவனுக்கு இத்தனை அலட்சியமா? என்ன திமிர் இருந்தா? அலட்சியமாய்ப் பாலை வெளியே வைச்சிட்டுப் போயிருப்பான். விசாலியை மிஞ்சிட்டான் இந்தப் படுபாவி! வரட்டும்! சாயந்திரம் காசுக்கு வருவான்லே… குடுக்கிறேன்…!” உள்ளே வந்தான். சர்ட்டை எடுத்துப் போட்டுக் கொண்டு வேகமாகக் கையில் செம்பு ஒன்றுடன் பால் கடைக்குச் செல்லப் புறப்படும் சமயம்தான் அவனது ஆபீஸ் டைப்பிஸ்ட் ஸ்ரீமதி வாசலில் வந்து நின்றாள்.

”சார்!”

திரும்பிப் பார்த்தான்.

“அடே… ஸ்ரீமதியா… வாங்க! என்ன திடீர்னு?’

”சும்மாதான் சார். இன்னிக்கு ஹாலிடே ஆச்சே அதுதான் உங்களைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்.”

“எஸ்… எஸ்… உட்காருங்க மேடம்! போயி பால் வாங்கிட்டுச் சீக்கிரமா வந்துடறேன்!” இப்படிச் சொல்லிவிட்டு ஸ்ரீதர் சேர் ஒன்றை எடுத்தப் போட்டான். அதில் ஒய்யாரமாக ஸ்ரீமதி அமர்ந்தாள்.

“என்ன… இவ… ஸ்கர்ட்டைப் போட்டுக்கிட்டு வந்து இப்படி ஆபாசமா உட்கார்றா? கூலிங்கிளாஸ் வேறே!

தெரிஞ்சவுங்க வீட்டுக்கு இப்படியா அசிங்கமா வருவா. எல்லாம் நம்ம விதி! நல்லவேளை இந்த நேரம் விசாலி வேறே, இல்லே! இருந்தா நமக்குப் பாட்டும் அர்ச்சனையுந்தான் போ!’ என்று எண்ணிக் கொண்டு செம்புடன் புறப்பட்டான்.

”சார்!”

“என்ன ஸ்ரீமதி?”

“பாலை அப்புறம் வாங்கிக் கொள்ளலாம் ஸார்!”

“பசங்க எழுந்துட்டா?”

“ஏன் விசாலி இல்லையா?”

“அவதான் கோவிச்சுக்கிட்டுப் போயிருக்காளே!”

“கோபமா… ஏன் ஸ்ரீதர் ஸார்?

“எல்லாம் தான் என்கிற அகந்தைதான்!”

“ரொம்பத் திமிராப் பேசுவாங்களா?”

“ம்…”

“நைட்லே கூடவா?”

இப்படி அவள் கேட்டதும், அவளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துப் பின் பேசினான் ஸ்ரீதர்.

“அப்படீன்னா?”

“உங்க ரெண்டு பேருக்கும் பகல்லே சண்டை வருமா? நைட்ல சண்டை வருமான்னு கேட்கிறேன்?” வர்ற நேரத்தை அஷ்டமி நவமி பார்த்தா வெச்சிக்கிறோம்? அது எந்த நேரம்னு சொல்ல முடியாது!”

“பசங்க எழுந்திருக்கிலியா இன்னும்?”

“அதுங்களுக்கு என்ன… எல்லாம் அம்மா மாதிரி!”

“சண்டை அது இதுங்கிறீங்க… இந்த விஷயத்தில் ரொம்ப ஒண்ணாச் செயல்பட்டிருக்கீங்க… அது எப்படி?’

அவன் இதற்குப் பதிலேதும் கூறாமல் சிறிது நேரம் மௌனமாக நின்றான்.

“என்ன ஸ்ரீதர்! நான் கேட்டது!”

“அர்த்தமில்லாத கேள்வி!” என்று அவன் கூறினான்.

“அர்த்தம் புரிஞ்சும், புரியாதது மாதிரி நீங்க நடிக்கிற கேள்வி!”

“மே…பீ…!”

“மனம் திறந்து பேசலாமே!”

“அதனாலே என்ன பயன் மிஸ் ஸ்ரீமதி?”

“எதுக்கும் ஒரு லாபம் இருந்தா தான் பேசனுமா.” “ஐ… மீன்… லாபம் வேறே… பயன் வேறே!”

“ஐ… நோ… வெரிவெல்!”

“பிறகு என்ன மனந்திறந்து?”

“மிஸ்டர் ஸ்ரீதர்! வாலிப காலங்கிறது ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம்! அதைச்சரியான முறையிலே கட்டிக்காப்பாத்தி அனுபவிச்சிக்கணும்! நீங்க அனுபவசாலி… உங்களுக்கு அதிகமா விளக்க வேண்டாம்னு நினைக்கிறேன்!”

“நான் அதை முழுமையாக அனுபவிச்சதாலே தான் இன்னிக்கு உங்கக் கண்களுக்கு முன்னாலேயே சாட்சிகளா மூன்று குழந்தை இருக்காங்க!” என்று ஸ்ரீதர் கூறினான்.

“சமார்த்தியமாகப் பேசுறீங்க!”

அவள் ‘கலகலவென்று’ சிரித்தாள்!

“நீங்க சுற்றி வளைச்சி… ஐ…மீன் சுற்றி… நோநோ… சுற்றி வளைச்சி எஸ்… சுற்றி வளைச்சிப் பேசுறீங்க! சார்.”

“ஏன் இந்தத் தடுமாற்றம்?”

“இது தடுமாற்றமில்லே… சரியான கற்புத்தனம் மிஸ் ஸ்ரீமதி!”

‘வாட்?”

“நீங்க சொல்ல வந்ததைச் சுற்றி வளைக்காமச் சொல்லலாம்!”

“மிஸ்டர் ஸ்ரீதர்! மனைவி இல்லாத உங்க சிரமம் எனக்குப் புரியுது! அது எவ்வளவு கஷ்டமானதுன்னும் எனக்குத் தெரியும்… மே… ஐ… ஹெல்ப்… யூ?”

‘எந்த விதத்திலே?”

“எந்த விதத்திலேயுந்தான்!”

“வாட்… டூ…யூ…மீன்?”

“ஐ…மீன்… இம்பார்ட்டெண்ட்… யுவர் பெட்ரூம்!”

“மைகாட்! வெளியிலே போடி… போடி வெளியிலே… என் மனைவிக்கு என்னடி குறைவு வந்தது? இந்த அழகான மூணு மணிகளை எனக்குத் தந்த என் மனைவிக்குத் துரோகம் பண்ணச் சொல்றியா? மொதல்ல போடி வெளியே நாயே!”

“ஸ்ரீதர்! கொஞ்சம் அடக்கமாகவே பேசுங்க…நான்சென்ஸ்!”

“ஏய்…! நான் சென்ஸா தாண்டீ இருக்கேன்! என் மனைவிகிட்ட இல்லாத என்ன அதிசயம் என்னடி உங்கிட்டே இருக்கு? மரியாதையா வெளியிலே போ…!”

அவள் அதற்குமேல் அங்கு நிற்கவில்லை. வாசல் பக்கம் வெளியேற விரைந்தபோது, அங்கே விசாலியும் அவளது அப்பாவும் நின்று கொணடிருந்தார்கள்.

“மாமா…! ஏன் அங்கேயே நிக்கிறீங்க? உள்ளே வாங்க!” என்று பரிவோடு அழைத்தான் ஸ்ரீதர்.

விசாலியின் கண்களில் கண்ணீர் கசிந்தபடி விசாலி உள்ளே வந்தாள். ஸ்ரீதரின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தாள். “இவ்வளவு நல்ல மனசு உள்ள உன் கணவர்கிட்டே உனக்கென்னம்மா கோபம்?” என்றார் விசாலியின் அப்பா.

”விசாலி… எழுந்திரு! நீ உரிமையோட என் மேலேதான கோபப்பட முடியும்!” என்றான் ஸ்ரீதர்.

“என்னை மன்னிச்சிடுங்க! உங்க நல்ல மனச நான் புரிஞ்சுக்கிலேங்க!”

“இப்பப் புரிஞ்சுக்கிட்டேயில்லே… அடுத்து என்ன செய்யனுமோ அதைச் செய்! இந்த அடுப்படிய எங்கிட்ட விட்டுட்டு மட்டும் போகாதே! அது எனக்கு ரொம்பத் தொல்லை கொடுக்குது!’

“சுட்டுடுச்சாங்க?”

அப்பா தன் பக்கத்தில் நிற்பதைக் கூட அவள் அந்த நேரத்தில் மறந்து அவனை அணைத்தாள்.

(1985-ஆம ஆண்டு)

– விண்ணில் ஒரு மணல் வீடு (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: பிப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

ஆசிரியரின் பிற நூல்கள் கதைத் தொகுதிகள் மரபுத்தொடர்க் கதைகள் (1990) ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு (1995) மனதில் உறுதி வேண்டும் (1995) தியாகப் பிறவி (1995) கட்டுரைத் தொகுதிகள் ஊன்றுகோல் (1989) கட்டுரை மலர்கள் (1990) என்னுரை - விண்ணில் ஒரு மணல் வீடு - பிப்ரவரி 2011 சிறுகதை எழுதுவது என்பது ஒரு கலை. அத்தகைய கலையை ஆர்வத்தோடு படைப்பவனும் படிப்பவனும் கலைஞன். இத்தகைய சிறுகதைகளை ஆர்வத்தோடு வாசகர்கள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *