ஷாக்




எல்லாரையும் போல காலையில் தன் உள்ளங்கை பார்த்துதான் கண்விழித்தான் விக்னேஷ்.
அப்போது தான் சட்டென்று நினைவுக்கு வந்தது நேற்று நிகழ்ந்த சம்பவம்.
அவனது வளர்ப்பு மாமாவின் சட்டென்ற மனநிலை மாற்றம்.
மனைவியை இழந்து பிள்ளையில்லாத அவருக்கு எல்லாமாக இருந்து அனைத்தையும் கவனித்துக் கொண்ட விக்னேஷை சட்டென்று எங்கோ அதள பாதாளத்தில் தள்ளிவிட்டு என்றைக்கோ எவளுடனோ செய்த தவறுக்கு பிள்ளையாய்ப் பிறந்த 23 வயது கட்டழகிக்கு தன் சொத்துகளை உயில் எழுதிவைக்கப்போகும் அந்த மாமாவை எப்படி கொல்லலாம் என்று நேற்றிரவெல்லாம் யோசித்து தலைசுற்றலுடன் உறங்கியது நினைவுக்கு வந்தது.
இத்தனைக்கும் மாமா விக்னேஷை தன் மகனுக்கும் மேலாகப் பார்த்துக்கொண்டவர்தான். தனது 200 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊட்டி தேயிலைத்தோட்டத்தையும் அதில் அமைந்திருந்த வனப்புமிகு மாளிகையையும் இவனுடைய பெயருக்குதான் முன்பு எழுதி இருந்தார்.
அப்பா அம்மா இல்லாத விக்னேஷுக்கு எல்லாமாய் அவர் இருந்ததும் அன்பைப்பொழிந்ததும் சென்ற மாதம் வரைதான்.
தன் இறப்புக்குமுன் தாய் எழுதிக்கொடுத்த கடிதத்தையும் தன் தாயின் இளம் வயது புகைப்படத்துடனும் வந்த அந்த இளம் ஐஸ்வர்யா ராயைக் கண்டதும் விக்னேஷ் முதலில் மகிழ்ந்தான். ஆனால் தன் மாமா நேற்று இரவு அவனை அழைத்து தன் சொத்தை அவள்பெயருக்கு மாற்றி எழுதப்போவதாகக் கூறி இவன் முகத்தை கூர்ந்து பார்த்தபோது மிகவும் சிரமப்பட்டு தன் உணர்வுகளை அடக்கிக்கொண்டு புன்னகைத்தான். மனதுக்குள் அப்போதே அவரைக் கொன்றுவிடும் தீர்மானம் விதையூன்றியது.
பரபரவென்று எழுந்த விக்னேஷ் குளித்து முடித்தபின் பாத்ரூமில் ஹீட்டர் ஸ்விட்சில் சில வேலைகளைச் செய்துவிட்டு அவரை எழுப்பச்சென்றான்.
அவர் எழுந்து குளித்துவிட்டு அவனையும் அவரது புதிய மகளையும் ரிஜிஸ்டரார் ஆபீசுக்கு அழைத்துச் செல்வதாக முன்னரே பேசிவைக்கப்பட்டு இருந்தது,
அந்த தேவை இனி இருக்காது என்று மனதில் நினைத்துக் கொண்டான் விக்னேஷ்.
ஹீட்டரை ஆஃப் செய்துவிட்டு குளிப்பது அவரது வழக்கம். ஏனெனில் சிலசமயம் கீசர் எர்த் ஆனால் தண்ணீரில் கரண்ட் பாயும் அபாயம் என்பதால் அவரது முன்னேற்பாடான வழக்கம் அது,
அங்கேதான் விக்னேஷ் தனது மூளையை உபயோகித்திருந்தான். அவர் ஸ்விட்சைத்தொட்டதும் 440 வோல்ட் மின்சாரம் அவர் மீது பாய்ந்து குளியறையில் கருகி இருப்பார் சற்று நேரத்தில். விபத்து சகஜம் அல்லவா..?
எழுந்து விக்னேஷ் தந்த காபியைக் குடித்துவிட்டு துவாலை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழையும் முன் விக்னேஷின் முகத்தைப் பார்த்து முறுவலித்தார்.
‘’ புதுமாப்பிளைக் களை உனக்கு வந்துடுத்துடா.. ‘’ என்று கண்ணடித்தார்.
விக்னேஷ் புரியாமல் விழித்தான்.
‘’ என்னடா படவா முழிக்கிறே..? லதாவை கட்டிக்க உனக்கு கசக்குதா..? சொத்துடன் வரும் பூலோக ரம்பையை உதறுவியா ..? ‘’ என்று குறும்புடன் பார்த்துவிட்டு பாத்ரூமுக்குள் நுழைந்தார்.
சட்டென்று மின்னல் போல அவன் மூளை எல்லாவற்றையும் கிரகித்துக்கொண்டு உடனே ஓடி மெயின் ஸ்விட் ச்சை ஆஃப் செய்தான் விக்னேஷ்..
![]() |
கலைவேந்தன் என்னும் பெயரில் கதைகள் கவிதைகள் எழுதி வரும் என் இயற்பெயர் எஸ் ராமஸ்வாமி. நான் புதுதில்லியில் ஆங்கில ஆசிரியனாக கடந்த 24 வருடங்களாகப் பணியாற்றி வருகிறேன். தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப்பட்டமும் கல்வியியல் இளங்கலைப்பட்டமும் பெற்றுள்ள நான் எழுதிய சில கதைகள் விகடனிலும் விகடன் பவளவிழா சிறப்புக் கவிதைப்போட்டியில் 7000 ரூபாய்கள் பரிசுபெற்று முதலிடத்தில் வந்த எனது கவிதையும் எனது சிறு சாதனைகளாகக் குறிப்பிடலாம். மூன்று நான்கு புத்தகத்தொகுப்புக்கு ஏற்ற…மேலும் படிக்க... |