கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 29, 2026
பார்வையிட்டோர்: 344 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(2026ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“டேய் மாதவா! கொஞ்சம் எந்திரி டா! என் ராசால்ல.. கிடையில ஆடுங்க எல்லாம் கத்திட்டு கிடக்கு. கொஞ்சம் அதுகளுக்கு இலை தழையை எடுத்துப் போடுடா!” என்றார் மாதவனின் அம்மா.

அவனுக்கு அம்மாவின் சத்தம் எங்கேயோ கேட்டது. அடுத்த பத்து நிமிடம் கழித்து அலுப்புடன் வெளியே வந்து குவிந்து கிடந்த இலைதழைகளை அள்ளிப் போட்டுவிட்டு திரும்பவும் வந்து படுத்துக்கொண்டான்.

எப்போதும் மாலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துப்போகும் அவன் அம்மா அன்று “மாதவா இன்னைக்கு அம்மாக்கு குதுகுதுன்னு வருதுடா. மந்தையை மேய்ச்சலுக்கு கூட்டிட்டுப் போய்ட்டு வாடான்னு” கெஞ்சினாள்.

அம்மாவைப் பார்க்கப் பாவமாக இருந்ததால் ஆடுகளை ஓட்டிக்கொண்டு பக்கத்தில் உள்ள மலைப்பகுதிக்கு ஓட்டிப் போனான். அடுத்த 2 நாள்களும் அவனே கூட்டிப் போய் வந்தான்.

ஆட்டை மேய விட்டுவிட்டு மரத்தடியில் படுத்துக் கிடந்த மாதவனை கவனித்து வந்த திருடன் தினமும் ஓர் ஆட்டை களவாடிப் போனான்.

அன்று மேய்ச்சல் முடித்து பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு சாப்பிட உட்கார்ந்தான். அவனுக்கு சாப்பாடு வைத்துவிட்டு காய்ச்சல் சற்று குறைந்திருக்கவே பட்டியில் ஆடுகளைப் பார்க்கப் போன அம்மா பதறியபடி வீட்டிற்குள் ஓடி வந்தார். “டேய் மாதவா, 3 குட்டிகளைக் காணோமேடான்னு” பதறவும் தனக்குத் தெரியாது என மாதவன் திருதிருவென முழித்தான்.

“தினமும் ஆடுகளைப் பட்டியில் அடைக்கும் போது எல்லாம் இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்க மாட்டாயா?” என்று அம்மா கேட்கவும்

“எனக்கு எங்க எண்ணத் தெரியும்?” என்று சலித்தான்.

தன் மகனுக்கு கணக்குப் பார்க்க சொல்லித் தராத தவறை உணர்ந்த அவன் அம்மா அன்று முதல் சிறுசிறு கணக்குகளைக் கற்றுக்கொடுத்து மூடியிருந்த அவனது கல்விக் கண்ணைத் திறந்தார்.

– செப்டம்பர் 2026, அன்புப் பாலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *