கோடுகள் இணைந்தன
கதையாசிரியர்: இரா.துரைமாணிக்கம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 1, 2026
பார்வையிட்டோர்: 206
(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“நேற்று அந்த மழை பெய்திருக்கவே கூடாது” என்றாள் அமுதா.
“ஏன்?” என்றேன்
“ஒரு பெண் எதை இழக்கக் கூடாதோ, அதை இழந்து விட்டேன்” என்றாள்.
“ஆமாம்! அமுதா என்னை மன்னித்துவிடு. நான் அந்தச் சம்பவத்திற்காக மிகவும் வருத்தப்படுகிறேன். இருந்தாலும் என்னிடம் தானே அதை இழந்தாய்” என்றேன்.
”நாம் ஈருடலும் ஓர் உயிராக இருந்தாலும் எது எது எப்போ நடக்க வேண்டுமோ? அது அது அப்ப நடப்பதுதான் சரியாக இருக்கும்” என்றாள் அமுதா.
“நடந்துமுடிந்து விட்ட ஒன்றை நினைத்து ஏன் வீணாக வருத்தப்படுகின்றாய்? என்றைக்கு இருந்தாலும் அதை என்னிடம் இழக்க வேண்டியவள்தானே? அதனால் வீணாக கவலைப்பட வேண்டாம்” என்றேன்.
“என்னைக் கைவிட்டுவிட மாட்டீங்களே?” என்று நா தழுதழுக்கும் குரலில் கேட்டாள் அமுதா.
“என்ன அமுதா? திடீரென்று உனக்கு இந்த சந்தேகம்?” இது என்ன கண்களில் முத்துக்கள்?
அமுதா ஒரு சமயம் என்னை நீ மறந்தாலும், என் உயிர் போனால் கூட உன்னை நான் மறக்கவே மாட்டேன்! என்னை நம்பு” என்றேன்.
“நம்முடைய திருமணத்தை எப்போது வைத்துக் கொள்ள இருக்கிறீர்கள்?”
”அதைச் சொல்லதான் உன்னை இங்கு வரச்சொன்னேன். அதை விட்டுவிட்டு வேறு எதைப்பற்றியோ பேசிக் கொண்டு இருக்கிறோம். அமுதா என் கப்பல் நாளை நியூசிலாந்திற்குப் புறப்படுகின்றது. அது திரும்பி வர ஒரு வருடமாகும். வந்தவுடன் நம்முடைய திருமணம்தான் – ”என்றேன்.
“இதைக் கேட்க எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா?”
“கேட்கும்போதே இவ்வளவு மகிழ்ச்சி அடைகின்றயே! உண்மை- யில் நடக்கும் போது எவ்வாறு இருப்பாய்?” என்றேன்.
“நான் நாளை புறப்படும்போது, நிச்சயம் நீ வந்து என்னை வழி அனுப்பி வைக்க வேண்டும் என்ன?”
“நான் வராமலா? நிச்சயம் வருவேன்.”
மறுநாள் கப்பல் புறப்படும் நேரம் வந்தது. அமுதாவின் வருகைக்காக நான் கப்பல் தளத்திலேயே நின்று கொண்டிருந்தேன். ஏனோ அவளை இன்னும் காணவில்லை.
வீட்டிற்குப் போன் செய்தேன். அவள் இல்லை. அப்படி என்றால் அவள் எங்கே? தவறாமல் வருவதாகக் கூறினாளே? வரும் வழியில் ஏதாவதுவிபத்து? அப்படி எல்லாம் இருக்காது. இருக்கவும் கூடாது என்று என் மனம் பலவாறு அலைமோதிக் கொண்டிருந்தது. வந்துவிடுவாள் என்று என் மனம் ஒரு புறம் கூறிக் கொண்டே இருந்தது.ஆனால் மறுபுறம் நேரம்தான் போய்க் கொண்டே இருந்தது.
“என்ன இங்கேயே நின்று கொண்டு இருக்கின்றாய்? கப்பல் புறப்படப் போகிறது” என்று என் நண்பன் கூறிய பிறகுதான் எனக்கு சுய உணர்வு வந்தது.
“இதோ வந்து விட்டேன்” என்று கூறி நண்பனின் மனைவியிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டேன்.
அமுதாவை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கப்பலின் மேல் தளத்திலேயே நின்று கொண்டு இருந்தேன். கப்பல் நகர நகர கரை மறைந்து கொண்டே வந்தது. என் அமுதாவைக் காணாமல் என் மனம் கனத்துக் கொண்டே வந்தது.
“நான் நியூசிலாந்திலிருந்து கொண்டு பலமுறை தொடர்பு கொண்டேன். ஆனால் அவளின் தொடர்பு கிடைக்கவே இல்லை. காரணம் புரியாமல் வெயிலில் கிடந்து துடிக்கும் புழுவைப் போல துடித்தேன். நாடு திரும்பும் நாளைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தேன். அந்த நாளும் வந்தது. அதைப்பற்றிய விவரத்தை அமுதாவிற்குக் கடிதம் மூலம் தெரிவித்துவிட்டுப் புறப்பட்டேன்.
கப்பலில் இருந்து கரைக்கு வந்தவுடன் அமுதாவை என் கண்கள் தேடின. ஆனால் அவளைக் காணவில்லை.
அமுதாவைப் பார்த்துவிட்டு, வீட்டிற்குப் போகலாம் என்று நேராக அவளின் வீட்டிற்குப் போனேன். வீடு பூட்டிக் கிடந்தது. அவள் பணிபுரியும் மருத்துவமனைக்குப் போன் செய்தேன். அமுதா இல்லை என்றார்கள். அமுதா எங்கே போனாள்?
வீட்டை அடைந்தேன். என் தங்கையிடம் அமுதர்வைப் பற்றி கேட்டேன். அவளும் தனக்கு அவளைப் பற்றி எதுவும் தெரியாது என்றாள். ஆனால், அவள் எதையோ என்னிடம் மறைக்கிறாள் என்பது மட்டும் அவளின் பேச்சிலிருந்து புரிந்தது. ஆனால் அவளிடம் அதைப் பற்றி கேட்க விரும்பாமல் வெளியேறினேன்.
நேராக மருத்துவமனைக்குச் சென்று மேற்கொண்டு அமுதாவைப் பற்றி விசாரித்தேன். அவள் வேலையை விட்டுவிட்டு போய்விட்டதாக அறிந்தேன்.
வேலையை விட்டு விட்டாளா? ஏன் விட்டாள்? வேலையை விட்டுவிட்டு என்ன செய்கிறாள்?
மீண்டும் அவள் வீட்டிற்குப் போனேன். அவள் அந்த வீட்டை விட்டுப் போய் நீண்ட நாட்கள் ஆகிவிட்டன என்றார்கள்.
அமுதா எங்கே போய்விட்டாள்? என்ன ஆயிற்று? என்ற விவரங்கள் எதுவும் தெரியாமல், நீந்த தெரியாதவன் நீரில் தத்தளிப்பது போல் தத்தளித்தேன்.
அமுதாவைப் பற்றிய விவரம் என் தங்கைக்கு நிச்சயம் தெரியும் என்று நம்பினேன். மீண்டும் தங்கையிடம் போய் விபரம் கேட்டேன்.
“நான் சொல்லப்போவதைக் கேட்டு அதிர்ச்சியோ, ஆத்திரமோ அடையக்கூடாது” என்றாள் தங்கை.
”இல்லை எனக்கு எதையும் தாங்கும் இதயம் உண்டு. உண்மையைத் தயங்காமல் சொல்” என்றேன்.
“அமுதாவுக்குத் திருமணம் ஆகி விட்டது. அவள் ஒரு டாக்டரை மணந்து கொண்டு விட்டாள். ஆனால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற விவரம் எனக்குத் தெரியாது” என்றாள் என் தங்கை.
“அமுதா திருமுணம் செய்து கொண்டு விட்டாளா? என்னால் நம்ப முடியாது. இது பொய்” என்று சத்தமிட்டேன்.
“பொய் இல்லை அண்ணா. உண்மைதான். இந்த அவசர திருமணத்திற்கு காரணம் நீதான்” என்றாள் தங்கை.
“நீ என்ன சொல்கிறாய்?”
“ஆமாம் அண்ணா. நீங்க நியூசிலாந்திற்குப் புறப்பட்ட அன்று. உங்களை வழியனுப்ப கப்பல் துறைக்கு வந்தபோது… நீங்க கர்ப்பமாக இருந்த பெண்ணின் கன்னத்தில் முத்தம் கொடுத்து. “நான் திரும்பி வருவதற்குள் ஒரு பையனை பெற்றெடுத் திட வேண்டும். அதுதான் நீ தரும் அன்பு பரிசு என்று கூறினாயா?” என்றாள் தங்கை.
“ஆமாம்”
“என்ன அண்ணா? அமுதாவைத் தானே காதலிப்பதாகவும். திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறியிருந்தாய்.”
“உண்மைதான், இப்போதும் அதைத்தான் கூறுகிறேன்.”
“அப்படி என்றால், அந்தப் பெண் யார்? அவளைப் பற்றி என்னிடம் கூட எதுவும் கூறவில்லையே?” என்று கேட்டாள் தங்கை.
”அந்தப் பெண் உன்னைப் போன்று எனக்கொரு கூடப் பிறவாத தங்கை. என் நண்பன் ரகுவின் மனைவி” என்றேன்.
“இரகுவும் நானும் ஒன்றாக வேலை செய்கிறோம். அன்று அவனை வழியனுப்ப வந்த அவனின் மனைவியின் கன்னத்தில்தான் முத்தம் கொடுத்தேன். அவ்வாறு கூறினேன்.”
“அந்தக் காட்சியை அமுதா தவறாகப் புரிந்து கொண்டு விட்டாள் அண்ணா. அவளை ஏமாற்றி விட்டதாக எண்ணிக் கொண்டு விட்டாள். அதனால்தான் அவள் உங்கள் மீது கோபப்பட்டுக் கொண்டு அந்த டாக்டரை மணந்து கொண்டு விட்டாள்” என்றாள் தங்கை.
“ஐயோ! கடவுளே! இதுஎன்ன அநியாயம்! உனக்கு நான் என்ன தீங்கு செய்தேன்? ஏன் என் வாழ்க்கையில் இப்படி விளையாடிவிட்- டாய்? அமுதா! கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய் என்ற வார்த்தைகளை மறந்து விட்டாயே” என்று புலம்பினேன். உன்னை பிரிந்து என்னால் வாழவே முடியாது என்று அலறினேன். என்னுடைய புலம்பலும், அலறலும் அமுதாவின் காதில் விழுமா? அவள் எங்கே இருக்கிறாளோ? வீணாக சந்தேகப்பட்டு என் வாழ்வை அழித்து விட்டாயே அமுதா!”
”அண்ணா! வருத்தப்படாதீங்க! உண்மையை உணராத அவசரப்- புத்திக்காரி அமுதாவை எண்ணி நீங்கள் ஏன் உங்கள் வாழ்வை அழித்துக் கொள்ள வேண்டும்”
என் தங்கை சொன்னதுபோல் அமுதாவை என்னால் அவ்வளவு எளிதாக மறக்க முடியவில்லை. நினைக்க ஒன்றும் மறக்க ஒன்றும் என எனக்கு இரண்டு மனங்களைத் தரவில்லையே இறைவன். அவளை எப்படி மறப்பேன்? அவளை மறக்க எண்ணி மதுவுக்கு அடிமையானேன். அதுவும் எனக்கு நிம்மதியைத் தரவில்லை. தவறாக என்னைப் புரிந்து கொண்ட அவள் உண்மையை உணர வேண்டும். என்னைப் போல் அவளையும் அவளின் உள்ளம் வாட்டி வதைக்க வேண்டும்” என்று எண்ணினேன். அதற்காக அவளைத் தேடினேன்.
ஒரு நாள் அவள் ஒரு குழந்தையுடன் காரில் ஏறுவதைக் கண்டேன். அவளை நெருங்குவதற்குள் கார் புறப்பட்டு விட்டது.
மற்றொரு நாள் அவளின் தோழி ஒருத்தியை தற்செயலாக கடை ஒன்றில் சந்தித்தேன். அவளிடம் அமுதாவைப் பற்றி விசாரித்தேன்.
அவள். நான் அமுதாவை ஏமாற்றி விட்டதாக என் மீது குற்றம் சுமத்தினாள்.
நான் நடந்ததைக் கூறினேன்.
அவள் என் மீது இரக்கப்பட்டாள். அமுதா யாரிடமும் கொடுக்கக் கூடாது என்று சொன்ன முகவரியை என்னிடம் கொடுத்தாள். அவளுக்கு நன்றி கூறிவிட்டு அமுதாவின் வீட்டை நோக்கி சென்றேன். அங்கே அமுதா தன் மகனுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.
‘அமுதா’ என்றேன்.
திரும்பிப் பார்த்தாள். “நீ… ஏன் இங்கு வந்தாய்? என்னை நிம்மதியாக வாழ விட மாட்டாயா?” என்று என்னைப் பார்த்துக் கேட்டாள்.
“அடி நாயே! துரோகி. நீ அல்லவா என்னை வாழவிடாமல் கொன்று விட்டாய். உன்னை நினைத்து நினைத்து நடைபிணமாக அலைகிறேன்” என்றேன்.
“எனக்கு ஆசை காட்டி மோசம் செய்ததுபோல் அந்தப் பெண்ணையும் விட்டு விட்டாயா?” என்றாள்.
“மரியாதையாகப் பேசு, யாரையடி நான் மோசம் செய்தேன்?”
“அன்று நான் பார்த்தது பொய்யா? அவளுக்கு நீ முத்தம் கொடுத்தது. பேசியது எல்லாம் பொய்யா?” என்றாள்.
“நீ பார்த்தது உண்மைதான். கேட்டதும் மெய்தான். ஆனால் நீ நினைத்துதான் தவறு. ஒரு தங்கைக்கு ஓர் அண்ணன் முத்தம் கொடுப்பது தவறா? தாய்க்குப் பிள்ளை முத்தம் கொடுப்பது தவறா?” என்றேன்.
“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”
”நான் சொல்ல என்ன இருக்கிறது? நீ ஓர் அவசரப் புத்திக்காரி. அவள் என் தங்கை. என் நண்பன் ரகுவின் மனைவி.
“அப்படியா! இது உண்மையா? நான் அவசரப்பட்டு விட்டேனே? பெண் புத்தி பின் புத்தி என்பதை நிரூபித்து விட்டேனே! ஐயோ! இதுஎன்ன கொடுமை?” என்று என்னென்னவோ கூறினாள்.
“என் வாழ்வை அழித்துவிட்டு, நீ மட்டும் நிம்மதியாக இருக்கலாமா? எங்கே உன் கணவன்? அவனைக் கூப்பிடு. நம்முடைய உறவைப் பற்றி அவனிடம் நான் சொல்ல வேண்டும்” என்று ஆவேசமாகக் கத்தினேன்.
“நான் தான் பிழை செய்து விட்டேன். அதே பிழையை நீங்களும் செய்ய வேண்டுமா? இந்தக் குழந்தையைப் பாருங்க. இவன் எதிர்கால வாழ்வை நினைத்தாவது என்னை மன்னித்து விடுங்கள்” என்று கெஞ்சினாள்.
“திருமணத்திற்கு முன்பே கன்னித்தன்மையை இழந்த ஒருத்தியை தன் மனைவி ஆக்கிக் கொண்டு வாழ்கின்ற உன் கணவனை நான் பார்க்க வேண்டும். அவனைக் கூப்பிடு” என்று சத்தமிட்டேன்.
“இதோ! வந்துவிட்டேன். நீங்க பார்க்க விரும்பிய ஆள் நான் தான்” என்று கூறிக் கொண்டு வெளியில் வந்தான் அமுதாவின் கணவன்.
“தயவு செய்து உட்காருங்கள்” என்று என்னைப் பார்த்துக் கூறினான்.
”அமுதா உள்ளே போய் குடிப்பதற்கு ஏதாவது கொண்டுவா” என்று கூறினான்.
“முதலில் உட்காருங்கள். அமைதியாகப் பேசுவோம்” என்று கூறிக் கொண்டே உட்கார்ந்தான். நானும் உட்கார்ந்தேன்.
“என் பெயர் டாக்டர் வேலவன். உங்கள் பெயர்?” என்று என்னைப் பார்த்துக் கேட்டான்.
“என் பெயர் அறிவழகன்?’ என்றேன்.
“நல்ல பெயர். எங்கே பணி புரிகிறீர்கள்?”
வேலவனின் பணிவன்பான பேச்சிலிருந்து உண்மையான டாக்டரிடம் ஒரு நோயாளி நடந்து கொள்ள வேண்டிய அளவுக்கு வந்துவிட்டேன். அதனால். “நான் சிங்கப்பூர் கப்பற்படையில் வேலை செய்கிறேன்” என்றேன்.
“அப்படியா? நாட்டைக் காக்கும் நற்பணியைத் தான் செய்கின்றீர்கள்” என்றார் வேலவன்.
”மக்களுக்குப் பிணி வராமல் காப்பது என் கடமை. நாட்டிற்குப் பகை வராமல் காப்பது உங்களின் கடமை,” என்று நகைத்தபடியே கூறினார்.
அப்போது அமுதா இரண்டு கோப்பைகளில் தேநீருடன் வந்தாள். “முதலில் விருந்தாளிக்குக் கொடு” என்றார்.
அமுதா கை நடுக்கத்துடன் நீட்டினாள். நான் அதைப் பெற்றுக் கொண்டேன்.
அப்போது அமுதாவின் பின்னால் நின்று கொண்டிருந்த சிறுவனைத் தூக்கி, ‘இவன் பெயர் செல்வம்’ என்றார் வேலவன்.
“நல்ல பெயர்” என்றேன்.
“இவன் என் பிள்ளை அல்ல” என்றார்.
”என்ன சொல்கிறீர்கள்?” என்று வியப்புடன் கேட்டேன்.
“பதற்றமடையாதீர்கள். அமுதா என் மனைவிதான். ஆனால் பிள்ளை என் இரத்தம் இல்லை” என்று அமைதியாகக் கூறினார் வேலவன்.
“புரியவில்லையே டாக்டர்” என்றேன்.
அமுதா எதுவும் பேச முடியாமல் நின்றாள்.
“திருவாளர் அறிவழகன் நான் இப்போது சொல்வதை நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள். நான் ஒரு டாக்டர். என்னுடைய மருத்துவமனையில் தலைமை தாதியாக அமுதா பணி புரிந்தாள். அவள் அழகில் நான் மயங்கினேன். நான் அவளிடம் பேசிய போது அவள் காட்டிய புன்னகையைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டேன். நான் அமுதாவை விரும்புவதுபோல் அவளும் என்னை விரும்பியதாக எண்ணினேன். என் விருப்பத்தை டாக்டர் என்ற முறையில் அவளிடம் கூறினால் தவறாக நினைத்துக் கொள்வாள் என்று நினைத்து முறையாக அவள் வீட்டிற்குச் சென்று பெண் கேட்க என் தாயை அனுப்பினேன். ஆனால் அவள் வேறொருவரை விரும்பவதை அறிந்தேன். நான்தான் ஒருதலைக்காதல் கொண்டிருந்தேன் என்பதையும் புரிந்து கொண்டேன். ஆனாலும் அமுதாவை என்னால் மறக்க முடியவில்லை. அவளைப் பார்க்கும் போது எல்லாம் என் ஆசை அதிகமாயிற்றே ஒழிய குறையவில்லை.
ஒரு நாள் அமுதா என்னிடம் வந்து, “டாக்டர்” அன்று உங்கள் அம்மா என்னைப் பெண் கேட்டு வந்தார்கள். நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். ஆனால் இப்போது உங்களைத் திருமணம் செய்துகொள்ள நான் மனப்பூர்வமாக சம்மதிக்கிறேன்” என்றாள். என்னால் நம்பவே முடியவில்லை. நான் உடனே “அமுதா நீ யாரையோ விரும்பியதாக கேள்விப்பட்டேனே” என்றேன்.
”உண்மைதான், ஆனால் அவர் என்னை ஏமாற்றி விட்டார்” என்றாள்.
ஏமாற்றப்பட்டவளுக்கு வாழ்வளிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு புறம் தோன்றியது. என் நீண்டநாள் விருப்பம் நிறைவு அடைய போவதை எண்ணி மறுபுறம் மகிழ்ந்தேன். ஆடம்பரமற்ற முறையில் அமுதாவை மணந்து கொண்டேன்.
முதலிரவு அன்று, அவள் என் அறைக்குள் வந்தபோது மயங்கி விழுந்தாள். அவளைத் தொட்டு தூக்கியபோது, அவள் தாய்மை அடைந்துள்ளாள் என்பதை உணர்ந்து கொண்டேன். ஆனால் அமுதா அவள் வாயால் அதைச் சொல்லட்டும் என்று எதுவும் பேசாமல் இருந்து விட்டேன்.
அவள் வாயிலிருந்து அந்த உண்மை இன்று வரையில் வெளிவரவில்லை. ஆனால் அவளின் வயிற்றிலிருந்து வெளியில் வந்து விட்டது. இப்போது குழந்தை என்னுடையது அல்ல என்பது உங்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன்” என்றார் டாக்டர்.
“என்னை மன்னித்து விடுங்கள்” என்று அவரின் காலில் விழுந்தாள் அமுதா.
அவளைத் தூக்கி, “என்னை நெருங்கிய போது எல்லாம் உன்னை விட்டு விலகி போனதற்கான காரணம் இப்போது உனக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.
என்னைப் பார்த்து. ”அறிவழகன் அமுதாவின் அறியாமையையும் என் தவற்றையும் மன்னித்து அமுதாவை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றார்.
“இல்லை டாக்டர் நீங்கள் அமுதாவை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் முறை. நான் இனிமேல் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிட மாட்டேன்” என்றேன்.
“நான் அமுதாவை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால், அவள் கன்னிகழியாதவளாக இருக்க வேண்டும். இணைக் கோடுகளாக இருக்க வேண்டியவர்கள் நீங்கள் இருவரும். எனவே. இடையில் நடைபெற்ற இந்தத் திருமணத்தை ஒரு கனவாக நினைத்து மறந்துவிட்டு இருவரும் இணைவதே எல்லோருக்கும் நல்லது” என்றார்.
அமுதாவின் கைகளிலிருந்த குழந்தை என்னைப் பார்த்து மாமா என்றது.
“இது மாமா இல்லை அப்பா” என்றார் டாக்டர்.
அவன் ”அப்பா!” என்றான். அவனைத் தூக்கி அணைத்துக் கொண்டேன்.
– காலம் கடந்து விட்டது, முதற் பதிப்பு: ஏப்ரல் 1990, 25வது ஆண்டு நிறைவு விழா, இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பட்டுக் குழு, சிங்கப்பூர்.
![]() |
இரா.துரைமாணிக்கம் (பிறப்பு: அக்டோபர் 15 1945) இவர் ஒரு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளராவார். தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம் வேப்பக்குளம் எனுமிடத்தில் பிறந்த இவர் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து அங்கு விவேகானந்தர் தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியையும், உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றார். தமிழ், ஆங்கிலம், மலாய் போன்ற மொழிகளில் தேர்ச்சிமிக்க இவர் தமிழாசிரியராகப் பணியாற்றிவந்தார். அத்துடன் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் 1999ல் சிங்கப்பூர்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
நேர்நிரை
நாஞ்சில்நாடன்
November 1, 2026
உந்தன் நிழலாய் நானடி தோழி…
காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்
November 1, 2026
சுவர் கடிகாரம்
ரா.நீலமேகம்
November 1, 2026
