சரசுவின் சௌந்தர்ய லஹரி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 24, 2026
பார்வையிட்டோர்: 9,162 
வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்

(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

4. நாதநாமக்கிரியை

”கிருஷ்ண! கிருஷ்ண!” என்று வெளியிலே ஓடி வந்தாள் சரசு. 

”பாமா! பாமா!” என்று கத்தினாள். 

கலவி இன்பத்தின் களைப்பில் தூங்கிக் கொண்டிருந்த பாமாவும், ராஜேந்திரனும் ஓடி வந்தார்கள்.

உள்ளே படுத்துக் கிடத்தவனை மெதுவாகத் தூக்கினார்கள். 

“எங்கே போக வேண்டும்?’ என்று கேட்டார்கள்.

அவனால் பேச முடியவில்லை; பாட்டுப் பாடினான். 

மது சில குழப்பங்களைத் தீர்க்கலாம். கவலைகளை மறக்கடிக்கலாம். ஆனால் பல நேரங்களில் அது மனிதத் தன்மைகளை வென்றுவிடுகிறது. சில நேரங்களில் தெய்வத் தன்மைக்கும் கொண்டு போய்ச் சேர்க்கிறது. 

உள்ளே வந்து விழுந்தவன் தவறானவனாகத் தோன்ற வில்லை. ஆனால் ஏதோ ஒரு பெரிய இடத்துப் பிள்ளை போலக் காட்சியளித்தான். 

அவன் காட்டியபடி அவனைக் காரில் ஏற்றிவிட்ட போது, அந்தக் கார் விலையுயர்ந்ததாக இருந்தது. 

பணக்காரர்களுக்குப் பொழுதை எப்படிப் போக்குவது என்பது பிரசனை, உழைக்கும் வர்க்கத்திற்குப் பொழுது போதவில்லையே என்பது பிரச்னை. 

அவனைக் காரில் ஏற்றிவிட்டு, டிரைவருக்காக ஹாரன் அடித்தபோது. “டிரைவர் கிடையாது, கிடையாது” என்று அவனே கத்தினான். 

”ஓகோ! சொந்தக்காரரே ஓட்டி வந்திருப்பார் போலிருக்கிறது” என்று எண்ணிய ராஜேந்திரனுக்கு ஒன்றும் புரியவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தபோது அங்கே யாரையும் காணவுமில்லை. 

ஒரே பனி மூட்டம். விர்ரென்று காற்றின் சப்தம். 

“சரி, நானே கொண்டு போய் விட்டு வருகிறேன்” என்று ராஜேந்திரனே காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். 

வழி காட்டக்கூடிய நிலையில்கூட அந்தக் குடிகாரன் இல்லை. 

“ஓட்டல்” என்று மட்டும் சொன்னான். 

ஓட்டலுக்குக் காரை விட்டால் “இங்கல்ல; அங்கே” என்றான். 

இப்படி அலை மோதிவிட்டு கடைசியில் ஒரு பங்களாவுக்கு வழி காட்டினான் அவன். 

பங்களா வாசலில் கார் போய் நின்றபோது, “எப்படி நீங்களே வந்து சேர்ந்தீர்கள்?” என்று கேட்டபடி கதவைத் திறந்து கொண்டு வந்தாள் ஒரு பெண். 

அதுவரையில் அந்தப் பாவப்பட்டவள் வாசல் அறையிலேயே காத்துக் கொண்டிருந்திருப்பாள் போவிருக்கிறது. 

தன் கணவர் காரை ஒட்டி வரவில்லை என்பதையும், வேறு யாரோ ஓட்டி வந்திருக்கிறார்கள் என்பதையும் கண்டு கொண்ட அவள் ராஜேந்திரனுக்கு நன்றி தெரிவித்தாள். தன் கணவனைக் கைத் தாங்கலாக உள்ளே அழைத்துச்சென்றாள். 

ராஜேந்திரனையும் உள்ளே அழைத்தாள். 

“பரவாயில்லே” என்று சொன்ன ராஜேந்திரன் கார்ச் சாவியை அவளிடம் கொடுக்கச் சென்ற போது, “நீங்க ளென்ன நடந்தா செல்வீர்கள்? காரை எடுத்துக்கொண்டு செல்லுங்கள். காலையில் தெளிந்ததும் அவரை வரச் சொல்லுகிறேன்” என்றாள். 

வேறு வழி? அதைச் செய்யத்தானே ராஜேந்திரன் விரும்பினான்? 


காலை சுமார் ஒன்பது மணிக்கு அந்தக் கணவனும் மனைவியும் புதுப்பட்டி பங்களாவுக்கு வந்தார்கள்.

அப்போது சரசு, பாமா, ராஜேந்திரன் மூவரும் காலை உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். 

வந்தவர்களுக்கு வணக்கம் சொல்லிக்கொண்டு எழுந்தார்கள். இரவு நடந்த நிகழ்ச்சிகள் பரிமாறிக் கொள்ளப் பட்டன. வழக்கம்போல் மன்னிப்புக் கோரல், ‘பரவாயில்லே’ என்ற பதில். 

வந்தவன் பெயர் பாஸ்கரன், மனைவி பெயர் தாமரை. 

“கொடைக்கானலில் பொழுதே போகவில்லை. எவ்வளவு நேரம் தான் ரேடியோ கேட்பது? நல்ல சிநேகிதிகள் நாலு பேர் நாளைக்குத்தான் புறப்பட்டு வருகிறார்கள். யாரோடாவது பேசிக்கொண்டிருக்க வேண்டும் போலத் தோன்றிற்று. அவர் செய்த விபத்தின் காரணமாக நீங்கள் கிடைத்தீர்கள்!” என்றாள் தாமரை, சரசுவிடம். 

”வாங்கள்! பேசிக்கொண்டிருப்போம்” என்று அவளைத் தன் அறைக்கு அழைத்தாள் சரசு. 

ராஜேந்திரனும், பாஸ்கரனும் ஓர் அறையில் உட்கார்ந்து விட்டார்கள். பாமாவும் சரசுவின் அறைக்கு வந்து விட்டாள். 

”எங்களுக்குக் கொடைக்கானலிலே ஒரு பெரிய எஸ்டேட் இருக்கிறது. பல வகையான பொருள்களும் அங்கே விளைகின்றன. வருஷ வருமானம் மூன்று லட்சத்திற்கு மேல்! வருஷத்தில் மூன்று மாதங்கள் இங்கே வந்து தங்கி அதைச் செலவு செய்துவிட்டுப் போவோம்” என்றாள் தாமரை. 

‘”நாங்கள் நடுத்தரக் குடும்பம்தான். சொந்த ஊர். மூலங்குடி. தங்கைக்கு இப்போதுதான் திருமணமாயிற்று. இப்போதுதான் முதன் முதலாகக் கொடைக்கானலுக்கு வருகிறோம்” என்றாள் சரசு. 

“உங்கள் கணவர் என்ன செய்கிறார்?” என்று கேட்டாள் தாமரை. 

“மன்னிக்க வேண்டும். எனக்குக் கல்யாணமாக வில்லை” என்றாள் சரசு. 

“நீங்கள் அதிருஷ்டக்காரர்” என்று பெருமூச்சு விட்டாள் தாமரை. 

“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? கல்யாணம் செய்து கொள்ளாமலிருப்பது அதிருஷ்டமா?” என்று கேட்டாள் பாமா. 

“பின்னென்ன? ஆனவர்கள் எல்லாம் என்ன சுகத்தைக் கண்டு விட்டார்கள்? ஒரு பெண் தாலிக்குக் கழுத்தை நீட்டுவதே தாயாவதற்கும், அழுவதற்கும் தான்? எத்தனை பெண்களுக்கு லட்சியக் கணவன்மார்கள் கிடைத்து விட்டார்கள்? கண்ணீர் விடாத காரிகை ஒருத்தி உலகில் இருத்தால் அவள் கல்லாக இருக்க வேண்டும். அல்லது அவள் கணவன் ஒரு கல்லாக இருக்கு வேண்டும். கண்ணகியும், சீதையும் படாத கவலை, என்னையும் உங்களையுமா விடப் போகிறது” என்றாள் தாமரை, 

”உலகமே இப்படித்தான். ஆகாதவர்கள் ஆகவில்லையே என்று அழுகிறார்கள்: ஆனவர்கள் எதற்கு மாட்டிக் கொண்டோம் என்று அழுகிறார்கள்” என்றாள் பாமா.

“பிறந்தவுடன் குழந்தை அழும் நோக்கமே அதுதான். இன்னும் பல காலம் அழப் போகிறோமே என்று அது பாடும் பல்லவிதான் முதல் அழுகை. ஆனால் ஒன்று. கல்யாணம் ஆகாதவர்கள் கண்ணீர் விடக்கூடிய சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு!” என்றாள் சரசு. 

அது பூஜை அறை என்பதை அப்போதுதான் உற்றுப் பார்த்த தாமரை, ”உங்களுக்குத் தினசரி பூஜை செய்தால் தான் நிம்மதியா? தினசரி படுக்கையே பூஜை அறையில் தானோ? எனக்கும் இப்படி வாழத்தான் ஆசை. ஆனால் துரதிருஷ்டவசமாக என் கணவர் ஒரு நாஸ்திகர். அவர் ஒரு சுயமரியாதைக்காரர், வேறு ஒரு மரியாதையும் இல்லாதவர்கள் சுயமாகந்தானே மரியாதைதேடி கொள்ள வேண்டும். நான் ஏதாவது பக்திப் பாட்டுப் பாட ஆரம்பித்தால், ‘மடையர்களும் பாடிடுவார் கடவுட் பாட்டு’ என்கிறார்” என்றாள் நாமரை.

“ஆமாம். உன் கணவரில் கருத்துப்படி மாணிக்க வாசகர் ஒரு மடையன்; திருஞான சம்பந்தர், திருநாவுக் கரசர், கம்பன், ராமலிங்க சுவாமிகள் எல்லாரும் மடையர்கள். போன தலைமுறைவரை கடவுள் பாட்டுப் பாடாதவர்கள் யார்? ஆகவே நேற்று வரை இங்கு வாழ்ந்தவர்கள் எல்லோருமே மடையர்கள்தான்!” என்றாள் சரசு. 

“என்னவோ இந்தத் தலைமுறை நம்முடைய பாரம்பரியப் பண்பாடுகளையெல்லாம் மதிக்காமல் போய் விட்டது. அது மதித்தால் என்ன. மதிக்காவிட்டாலென்ன? அந்தக் கூட்டத்துக்குள் நம்மைப் போன்றவர்கள் சிக்கிக்கொண்டு விடுகிறார்களே. அதுதான் அவஸ்தை!” என்றாள் தாமரை. 

ஓரளவுக்குத் தாமரையின் நிலைமை சரசுவுக்குப் புரிந்தது. கணவன் குடிகாரன், நாஸ்திகன். பண்பாடில்லாதவன். மனைவியைச் சந்தோஷப்படுத்தாதவன். பணம் மட்டும் இருக்கிறது. இதைவிட சந்நியாசினிக் கோலம் மேலல்லவா? 

ஆண்களை வெறுக்கும் தன் முடிவுக்கு சரசு ஒரு நியாயம் கற்பித்துக் கொண்டாள்.

அங்கே ராஜேந்திரனும், பாஸ்கரனும் ஹிட்லரி லிருந்து இடி அமீன் வரையிலும், சாஸர் காலத்து ஆங்கிலத்திலிருந்து சர்ச்சில் காலத்து ஆங்கிலம் வரைலும் பேசித் தீர்த்தார்கள். 

கொடைக்கானலுக்குப் போகிறவர்கள் சிலர் சீட்டாடுவார்கள். சிலர் கார் வலம் வருவார்கள். சிலர் பேசித் தீர்ப்பார்கள். வேளாவேளைக்கு நிறையச் சாப்பிடுவார்கள். 

குளிர் பிரதேசத்தில் பசி எடுக்கிற மாதிரி வேறு எங்கும் எடுக்காது. 

சாப்பாட்டு வேளை வந்தது. தாமரையும் பாஸ்கரனும் விடை பெற்றுக் கொண்டார்கள். அதுவரையில் பாமாவும், ராஜேந்திரனும் பிரிந்திருந்தது ஆச்சரியம்! ஜமீன் பங்களா சமையற்காரன் முழுக் கோழியையே வறுத்து வைத்திருந்தான். அதைப் பார்த்து “கர்மம்! கர்மம்!” என்றாள் சரசு. 

அக்காள் மாமிசத்தைக் கண்டாலே வெறுப்பாள். தங்கை உயிருள்ள கோழியையே விழுங்குவாள்! 

எல்லோரும் சாப்பிட்டுத்தூங்கி எழுந்த போது, ஜமீன் பங்களா மாடி, கலகலப்பாக ஆகிவிடப் போவதைப்போல் தோன்றிற்று, ஏராளமான கூட்டங்கள் உள்ளே நுழைந்து கொண்டிந்தன. 

“கிருஷ்ணா! இன்றைக்கு என்ன நடக்குமோ?” என்று கலங்கினாள் சரசு 

மாடியில் கூத்தும், கும்மாளமும் ஆரம்பமாயின.

“போலீசுக்குச் சொல்லியனுப்புவோமா?” என்று கேட்டான் ராஜேந்திரன். 

“என்ன பிரயோசனம்? வந்திருப்பவர்களில் சிலர் போலீஸ்காரர்களாகவே இருக்கலாம்!” என்றாள் சரசு. 

“என்ன செய்யலாம்?” என்று கேட்டாள் பாமா.

“நீங்கள் போய்ப் படுங்கள். நான் பூஜை செய்கிறேன். யாருடைய பங்களாவிலோ தங்கியிருக்கிறோம். அதில் நாம் என்ன செய்ய முடியும்?” என்றாள் சரசு. 

பாமாவும் ராஜேந்திரனும் தங்கள் அறைக்குள் நுழைந்தார்கள். 

பூஜை அறைக்குள் நுழைந்தாள் சரசு. 

“ஹே கிருஷ்ணா! ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையான துன்பத்தைப் படைத்திருக்கிறாய். நிம்மதி எங்கே இருக்கிறது என்ற ஜாடையையாவது காட்டி இருக்கிறாயா” என்றபடி மீண்டும் சௌந்தரிய லஹரிக்குள் அடைக்கலம் புகுந்தாள்.

“ஸ்மித ஸ்யோத்ஸ்னா ஜாலம் தவவ நசைந்த்ரஸ்ய பிபதாம். 
சகோராணாம் ஆஸீததி ரஸத்ய, சஞ்சுஜடிமா
அகஸ்தே சிதாம்சோர் அம்ருத லஹரீம் அம்வருசய
பிபந்தி ஸ்வச்சந்தம் நிசி நிசி ப்ருசம் காஞ்சி கதியா” 

உன் முகம் சந்திரனையும் பழிக்கும் எழில் நிறைந்தது. அம்முகத்தில் தோன்றும் முறுவல் சந்திரனின் ஒளியைப் போல் பிரகாசிக்கின்றது. அதனை உண்டு. பசியாறுகின்றன, சகோரப் பட்சிகள்.

அந்தத் தித்திப்பால் திகட்டிப் போகாமல் இருப்பதற்காக மாற்றுச்சுவை தேடி கஞ்சி எங்கே இருக்கின்றது என்று தேடுகின்றன. ஆனால் கஞ்சியும் மதி ஒளியும் ஒரே நிதம் பூண்டிருப்பதால் அந்தப் பறவைகள் மதி மயங்கி மீண்டும் மீண்டும் ஒவ்வொரு இரவும் (கஞ்சி என்று எண்ணி) நிலவின் அமுத ஒளியை உண்டு திளைக்கின்றன. 

“நாகநாம் உத்தயோதைர்
நவ தனினராகம் விஹன தாம்: 
சுராணாம் தே காத்திம் சுதய கதாயாம: கதம் உமே;
கயாசித் வா ஸாம்யம் பறது சலயா ஹந்த சுமலம்
யதி க்ரீடல் லக்ஷ்மீ சரணதல வாா குணதலம்!” 

உமா மகேஸ்வரி! நின் கை விரல் நகங்களின் காந்தி, அன்றலர்ந்த செந்தாமரைப் பூவின் புது வண்ணத்தையும் தோற்கடிக்கக் கூடியது. 

ஆகவே உன் கைவிரல்களை எப்படி வர்ணிப்பது என்றே எனக்குப் புரியவில்லை. 

அருள் கூர்ந்து உரைப்பாயாக. 

அந்தத் தாமரைக்கு மட்டும் எப்படி அத்தகைய சிவப்பு நிறம் வந்தது தெரியுமா? 

மகாலட்சுமியின் செம்பஞ்சுக் குழம்பு தடவிய பாதங்கள் அந்தத் தாமரை மலர் மீது நடமாடுவதால், மகாலட்சுமியின் திருவடிகளிலிருந்து தாமரை தன் செந்நிறத்தைப் பெற்றிருக்கக் கூடும். 

அதனால்தான் தாமரை உன் கை விரல்களைப் போல் காந்தியுடன் பிரகாசிக்கிறது. 

வழக்கம் போலவே அவள் படிப்பதை முடிக்கும் முன் ஓர் இளம் பெண் அவள் அறைக்குள் ஓடிவந்து தடாலென்று விக்கிரகங்களுக்கு நடுவே விழுந்தாள்.

அவள் கன்னங்களிலும் உதடுகளிலும் மார்பகங்களிலும் ஏராளமான பற்கள் பதிந்த காயம் இருந்தது. 

சரசு திடுக்கிட்டாள் 

5. அமிர்த வர்ஷணி

‘தடம் தெரியாத பாவிகள் குடிப்பதற்கும் ஒரு வரை முறை இல்லையா? சனியன் இங்கே வந்து ஏன் புகுந்தோம்? ஐமின் பங்களாவாம், ஐமீன் பங்களா?’ என்று தலையிலடித்துக்கொண்டே அவளைத் தூக்கி உட்கார வைத்தாள் சரசு. 

பின்னாலேயே ஓர் ஆடவன் நல்ல போதையில் உள்ளே நுழைந்தான். அவனும் என்ன ஏது என்று கேட்கவில்லை. சரசுவிடமும் பேசவில்லை. 

அந்தப் பெண்ணின் முடியைப் பற்றி இழுத்துக் கொண்டு போனான். அவள் கத்தினாள். அவளை ஒரு காருக்குள் தள்ளி. அவனும் பின்னால் ஏறிக்கொண்டான். கார் புறப்பட்டு விட்டது. 

அந்தச் சப்தத்தைக் கேட்டு பாமாவும் ராஜேந்திரனும் வெளியே எழுந்து வந்தார்கள். “என்ன? என்ன?” என்றார்கள்.

”வேறென்ன; இன்னும் ஒரு நாடகம்” என்று அலுத்துக் கொண்டாள் சரசு.

“வேறு எங்கேயாவது போய் விடலாமா?” என்று கேட்டாள் பாமா. 

“காலையில் உன் மைத்துனன் வந்ததும் சொல்லி விடு. மரியாதையாக வேறு எங்காவது போய்த்தான் ஆக வேண்டும். வாழ்க்கையில் ஒரு லட்சியமுமில்லாத மிருகங்கள் என்ன ஆர்ப்பாட்டம் செய்கின்றன….?” என்றாள் சரசு. 

“இங்கே பணக்காரர்கள் தங்குகின்ற கிளப் ஒன்றிருக்கிறது. அங்கே போகலாம். ஆனால் அங்கேயும் பகலில் சீட்டாடுவார்கள். இரவில் குடிப்பார்கள்” என்றான் ராஜேந்திரன்.

“சரிதான். கரடிக்குத் தப்பி புலியின் வாயிலா?” என்றாள் சரசு, வேறு பக்கம் திரும்பிக் கொண்டு. 

“என்ன செய்வது, இது போன்ற மலை வாசங்களுக்கு வருகிறவர்கள், வாழ்க்கையை அனுபவிக்கத்தானே வருகிறார்கள்?” என்றான் ராஜேந்திரன், வேறு பக்கம் திரும்பிக் கொண்டு. 

“இந்த நரகத்திற்குப் பெயர் அனுபவிப்பதா? நல்ல கதை!” என்றாள் சரசு. 

மறுநாள் காலையில் ஜெயச்சந்திரன் வந்தபோது, பாமா கிண்டலாக, ”கொழுந்தனார் எங்களை நல்ல இடத்தில்தான் குடியேற்றி இருக்கிறார்!” என்றாள் சிரித்துக் கொண்டே. 

நடந்தவற்றைக் கேட்டுக்கொண்டு ஜெயச்சந்திரன், “நாகரிகத்தில் இந்த விவகாரம் தவிர்க்க முடியாததாகி விட்டது. என்ன செய்வது? நல்ல குடும்பங்கள் உள்ள வீடுகளும் ஏராளமாக இருக்கின்றன. ஏதாவதொன்று ஏற்பாடு செய்யட்டுமா?” என்றான்.

“செய்துதானே ஆக வேண்டும். இன்றிரவு இங்கே இருக்கச் சொன்னால் அக்கா பஸ்ஸில் ஏறியாவது ஊருக்குப் போய்விடுவாள் போலிருக்கிறது” என்றாள் பாமா.

ஒரு சிறு குன்றின் மீது இருந்த பங்களா ஒன்றை ஏற்பாடு செய்துவிட்டான் ஜெயச்சந்திரன். அவன் பாங்கிலே வேலை பார்த்ததால், அவன் சொன்னதைக் கேட்கக்கூடியவர்கள் நிறைய அங்கே இருந்தார்கள்.

அந்த வீடு, சரசுவுக்குப் பிடித்துவிட்டது. கொஞ்சம் விக்கிரகங்கள்தான் வாங்க வேண்டியிருந்தது. சரசுவே போய் அதையும் வாங்கிக் கொண்டு வந்து விட்டாள். 

குடித்துக் கூத்தடிக்கும் இடத்தை விட்டு வந்ததில் அவளுக்கொரு நிம்மதி.

நல்ல காய்கறிகள் எல்லாம் சரசு வாங்கி வந்தாள். சமையலுக்கு வேண்டிய பாத்திரங்களெல்லாம் அங்கே இருந்தன; சமையல்காரன்தான் இல்லை. 

சரசுவின் கைபட்டால் சாப்பாடு மணக்குமே!

சரசுவே சமையல் செய்தாள். 

“இரவு நீங்களும் எங்களோடு சாப்பிடவேண்டும்” என்று ஜெயச்சந்திரனைக் கேட்டுக் கொண்டாள் பாமா.

“ஓ!” என்றான், ஜெயச்சந்திரன். 

பாமா இப்போது ஜெயச்சந்திரனைக் கேலி செய்யவே கற்றுக்கொண்டு விட்டாள். 

மைத்துனனையோ மைத்துனியையோ கேலி செய்வதில் ஒரு விதமான மகிழ்ச்சி உண்டு. இந்துக்களுக்கு அது ஒரு பண்பாட்டுச் சங்கீதம்.

அவர்கள் என்னனென்னவோ பேசினார்கள். ஆனால் சரசு எதுவும் பேசவில்லை.

“ஏனண்ணா, அவர்கள் எதுவும் போசவில்லை?” என்று மெதுவாகக் கேட்டான் ஜெயச்சந்திரன். 

“சாமியார்கள் அதிகம் மௌனமாகந்தான் இருப்பார்கள்” என்று மெதுவாகச் சொன்னான் ராஜேந்திரன். 

சாப்பிட்டுவிட்டு எல்லோரும் கணப்பு அறைக்கு அருகிலே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது, சரசு மட்டும் ரெக்கார்டு பிளேயரை எடுத்துக்கொண்டு தன் அறைக்குப் போய்விட்டாள். 

அவர்கள் கொண்டுபோயிருந்த ரெக்கார்டுகளில் அவளுக்குப் பிடித்தமானது இரண்டே ரெக்கார்டு. பாக்கி அனைத்தும் சிற்றின்பத் திரைப்பாடல்கள். 

முருகன் பாட்டு ஒரு ரெக்கார்டும், நாதஸ்வரம் ஒரு ரெக்கார்டும் அவளுக்காகவே எடுத்துவரப்பட்டிருந்தது.

திரும்பத் திரும்ப அவள் அதையே போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது, எல்லோருக்குமே அலுப்பாக இருந்தது.

ஜெயச்சந்திரன் எழுந்துபோய்விடுவான் போலிருந்தது.

பாமா எழுந்து மனமளவென்று சரசுவின் அறைக்குள் நுழைத்தாள். 

“அக்கா. கோவில்களிலேகூட மூன்று காலம்தான் பூஜை. உனக்கென்ன இருபத்து நாலுமணி நேரமுமா?” என்றாள் பாமா. 

“ஏண்டி, உனக்குக்கூட நாஸ்திகம் வந்துவிட்டதா? உங்களுக்கெல்லாம் கடவுள் பக்தி என்பது வயதாகும் போதுதான் வரும். கை கால்கள் ஓய்ந்துபோன பிற்பாடு தான் கடவுள் ஞாபகம் வரும். நான் கொஞ்சம் வித்தியாசமான பிறப்பு. உங்களுக்குச் சங்கடமாக இருந்தால் நான் காலை பஸ்ஸிலேயே ஊருக்குப் போய்விடுகிறேன்” என்றாள் சரசு. 

“இதுதான் அக்கா உன்னிடம். எடுத்த எடுப்பிலேயே அறுத்துவிட்ட மாதிரி பேசுவாய்! உன் இஷ்டம்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள் பாமா. 

எல்லோருடனும் பேசிக்கொண்டிருக்கலாம் என்று வந்திருந்த ஜெயச்சந்திரனுக்கு, இது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது. 

அவன் எங்கே போய்விடுவானோ என்று பாமாவுக்கு வருத்தமாக இருந்தது.

“அக்காள் பாட்டுக்கு ரெக்கார்டு போட்டுக் கொண்டிருக்கட்டும். நாம் பேசிக் கொண்டிருப்போம்” என்றாள் பாமா.

“பரவாயில்லை…நான் நாளை வருகிறேன்” என்று கூறி விட்டு எழுந்தான் ஜெயச்சந்திரன். 

“உஸ்!…வேண்டாம். நீங்கள் இங்கிருந்தபடியே சௌந்தரிய லஹரி பாடுங்கள். அவள் மயங்கிப் போய் இங்கே வந்து விடுவாள்” என்றாள் பாமா. 

“ஆமாம். அதுதான் சரி” என்று ஆமோதித்தான் ராஜேந்திரன். 

உடனே ஜெயச்சந்திரன் சௌந்தரியலஹரியில் இருந்து இரண்டொரு சுலோகங்களைச் சப்தம் போட்டுப் பாட ஆரம்பித்தான். 

அங்கே ரெக்கார்டு நிறுத்தப்பட்டது. 

மூடி இருந்த கதவு, சற்று திறந்து ஒதுக்கப்பட்டது.

ஜெயச்சந்திரனுக்கு எடுப்பான குரல், அவன் பாடப் பாட, சரசு கொஞ்சம் மெதுவாக எட்டிப் பார்த்தாள். 

”அக்கா? பாட்டுப் போதுமா, இன்னும் கொஞ்சம் பாடச் சொல்லட்டுமா?” என்று சப்தம் போட்டுக் கேட்டாள் பாமா. 

“முடிந்தவரை பாடச் சொல்லேன்!” என்றாள் சரசு.

”விடியும்வரை வேண்டுமானாலும் பாடுகிறேன்” என்றான் ஜெயச்சந்திரன்.

மத்யமாவதி ராகத்தில் ஒரு சுலோகத்தையும், சிந்து பைரவியில் ஒரு சுலோகத்தையும் அவன் பாடி முடித்ததும், “பாரதூரமான இரண்டு ராகங்களை பக்கம் பக்கமாகப் பாடலாமா…?” என்று இருந்தபடியே கேட்டாள் சரசு. 

“பாடக்கூடாது என்று சாஸ்திரம் ஒன்றுமில்லை; பாடாமலிருப்பது மரபு!” என்றான் ஜெயச்சந்திரன்.

நள்ளிரவு வரை அவன் பாட்டைக் கேட்டுவிட்டு, அயர்ந்து தூங்கிவிட்டாள் சரசு. 

நள்ளிரவுக்குப் பிறகு யாரோ அவனை எழுப்புவது போலிருந்தது. எழுந்து உட்கார்ந்தாள் சரசு. அழகான இளம் பெண்ணொருத்தி அருகிலே உட்கார்ந்திருந்தாள். 

”ஏம்மா. இந்தப் பூமியில் நாம் எதற்காகப் பிறந்தோம்! குடும்ப வாழ்க்கையே வாழாமல் சந்நியாசினி ஆவதற்கா? அப்படி யாரும் யாரையும் வற்புறுத்த வில்லையே? உடம்பு கொதிக்க ஆரம்பித்தால் உடம்பு எவ்வளவு நாளைக்குப் பக்குவமாக இருக்கும்? திருமண வாழ்த்கையை நம்முடைய தர்மங்கள் மறுத்ததில்லையே? அம்பிகையின் சௌந்தரிய லஹரி என்றால், நீ உயிரை விடுகிறாய், அவ்வளவு சௌந்தரியமும் உனக்கிருக்கிறதே? மானிடப் பிறவிக்குக் காதல் தேவை என்பதால்தானே இந்து தர்மத்தில் தெய்வங்களையும், தேவர்களையும் குடும்பங்களாகச் சிந்திரித்தார்கள். நல்ல கற்பனையும், ரசனையும் உள்ள ஓர் இளைஞனாகப் பார்த்து நீ திருமணம் செய்து கொண்டால், அவன் உன் மீதே ஒரு செனந்தரிய லஹரி பாடுவானே?” என்றாள் வந்திருந்த பெண். 

அவள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாள். சௌந்தரிய லஹரியில் வர்ணிக்கின்ற மாதிரியே அவள் உருவம் இருந்தது. ஆனால், கழுத்திலே ஒரு காசு மாலை இருந்தது. கை நிறைய வளையல் போட்டிருந்தாள். தங்க வளையல்களுக்கு நடுவே பவளங்களாலும், முத்துக்களாலும் செய்யப் பட்ட இரண்டு வளையல்களும் இருந்தன. 

“நீ யாரம்மா..?” என்று கேட்டாள் சரசு. 

“என்னைத் தெரியாதா உனக்கு?…” என்றாள், அந்தப் பெண் 

“தெரியவில்லையே….” என்றாள் சரசு. 

”வா! காட்டுகிறேன்!” என்று அந்தப் பெண் வெளியே போனாள். 

 பின்னாலேயே போன சரசுளின் கண்களுக்கு அவள் மறைந்து விட்டாள். 

நன்றாகக் கண்களைத் தேய்த்து விட்டுக் கொண்டு பார்த்த சரசு, தான் தன் அறையை விட்டு எழுந்து வந்து நடுஹாலில் நிற்பதை உணர்ந்தாள்.

6. தேவமனோஹரி

மறுநாள் காலை முழுதும் தன் உடம்பில் ஏதோ சோர்வும், அதிர்ச்சியும். அசதியும் இருப்பதுபோல உணர்ந்தாள் சரசு. 

இரவிலே தான் கனவு கண்டது அவளது நினைவிலிருந்தது. நடுஹால் வரை தூக்கத்திலேயே நடந்து போனதும், திரும்ப வந்து படுத்ததும் அவளுக்குத் தெளிவாகவே தெரிந்தன. ஆனால் கண்டது கனவுதானா அல்லது உண்மையா என்பதில் அவளுக்கு ஒரு சந்தேகம் இருந்தது.

அவ்வளவு இயற்கையாக அந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது. 

அதைப்பற்றி அவள் பாமாவிடம்கூடப் பேசவில்லை.

திருமணம் செய்து கொள்ளும்படி தன்னை வற்புறுத்த அம்பிகையே வந்திருந்தது போன்ற ஒரு ஒரு பிரமை; மயக்கம். 

‘அம்பிகை என்ன ஆதி பராசக்தியே நேரில் தோன்றித் தன்னைத் திருமணம் செய்து கொள்ளச் சொன்னாலும், தான் ஒப்புக் கொள்ளப் போவதில்லை’ என்பதுபோல் அவள் பிடிவாதமாக இருந்தாள். 

தெய்வ ஆவேசம் வந்தவர்களுக்கும், கனவில் தெய்வத்தோடு பேசியவர்களுக்கும் காலையில் ஒருவித மயக்கம் இருக்கும் என்று கூறுவார்கள். 

நாலுபேர் சேர்ந்து உடம்பை அமுக்குவதுபோது இருக்குமாம். 

அந்த நிலைதான் சரசுவுக்கு இருந்தது. அப்போதும் அவள் கீழே விழுந்து படுக்கவில்லை. 

தனக்கு வேண்டிய உணவைத் தானே அவள் சமைத்துக் கொள்வது வழக்கம். அத்தகைய உணவை அவள் தயாரித்துக் கொண்டிருந்தபோது, “நீங்கள் இங்கேயே வந்து விட்டீர்கள்?” என்று கேட்டபடி உள்ளே நுழைத்தாள் தாமரை. 

“ஆமாம். உங்கள் வீடும் பக்கத்தில்தான் சொன்னார்கள்” என்றாள் சரசு. 

”என் தோழிகளெல்லாம் வந்து விட்டார்கள். இப்பொழுது பொழுது நன்றாகப் போகிறது” என்றாள் தாமரை. 

“நல்லது, எனக்கு அம்பிகையோடும் பகவானோடும். பேசிக் கொண்டிருப்பதிலேயே பொழுது போய்விடுகிறது” என்றாள் சரசு. 

“ஆ! மறந்து விட்டேன். ஒன்று சொல்லத்தான் வந்தேன். இங்கு ஒரு தோப்புக்குள்ளே பூவாத்தம்மன் கோவில் இருக்கிறது. கோவில் மிகவும் சிறியதுதான், முப்பதுக்கு முப்பதுதான் சுட்டடம் இருக்கும். ஆனால் அங்கே ஓர் அம்மையார் பூஜை செய்து கொண்டிருக்கிறாள் அவர்களைப் பார்த்து வணங்கி, விபூதி வாங்கிக் கொண்டு வந்தால் அன்று முழுவதும் மனசுக்கே ஒரு தெம்பும், தைரியமும் இருக்கின்றன. அம்மன் வழிபாட்டிலே தான் உங்களுக்கு ஆட்சேபனை இல்லையே? இன்று மாலை எல்லோரும் போய் வரலாமா?” என்று கேட்டாள் தாமரை. 

“அப்படி அதிசயமான பெரியவர்கள் சில பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். தெய்வீக சக்தி உடையவர்களைப் பார்ப்பது நல்லதுதானே…” என்றாள் சரசு.

இருவரும் பாமாவைக் கேட்டார்கள். 

“ஓ! போகலாமே? இங்கேயே அடைந்து கிடப்பது எனக்கும் கஷ்டமாகத்தானிருக்கிறது. பண்ணைக்காடு போகும் வழியில் அத்த அம்மன் கோவில் இருப்பதாக அவர் கூடச் சொன்னார்” என்றாள் பாமா. 

மாலையிலே தாமரை தன் தோழிகளோடு வந்தாள்.

பாமா, அவள் கணவன், ஜெயச்சந்திரன், சரசு ஆகியோரும் சேர்ந்து கொண்டார்கள். 

பூலாத்தம்மன் கோவில் இருக்க இடம் சுற்றிலும் வாழைத் தோப்புகள். விசித்திரமான வேறு சில மரங்கள்! குறிஞ்சிப் பூக்கள் அங்கேதான் அதிகம் பூப்பதாகக் சொன்னார்கள். 

காரை, சாலை ஓரம் நிறுத்திவிட்டுத் தோப்புக்குள்ளே சுமார் முன்னூறடி தூரம் நடக்க வேண்டும். 

கோவில் சிறியதுதான் என்றாலும் யாரோ அதை அழகாகக் கட்டியிருந்தார்கள். 

கோவிலுக்கு முன்புறத்தில் சிமெண்ட் தரை போடப் பட்டு, சிவப்புச் சாயம் பூசப்பட்டிருந்தது. 

கோவியின் இரும்புக் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. அது சிறைச்சாலைக் கதவு போன்றிருந்ததால் உள்ளே இருந்த அம்மன் சிலையைப் பார்க்க முடிந்தது. 

ஆனால் சரசுவும் மற்றவர்களும் வந்தபோது பூஜை செய்கின்ற அந்த அம்மையாரைக் காண முடியவில்லை. 

“ஒரு குறிப்பிட்ட நேரத்தில்தான் அந்த அம்மையார் இருப்பார்களோ?” என்று கேட்டாள் சரசு. 

”இல்லை, அவர்கள் தங்குவதே இங்கேதாள். எங்க வது பக்கத்தில் போயிருப்பார்கள்” என்றால் தாமரை. 

அப்போது “யாரது?” என்று கேட்டபடியே கோவிலுக்குப் பின்பக்கமிருந்து ஓர் உருவம் வந்தது. 

அந்த உருவத்தின் கையில் ஒரு கட்டு அருகம் புல்லும், இலை, தழைகளும், புஷ்பங்களும் இருந்தன. 

அந்த அம்மையாரின் காலில் விழுந்து வணங்கினாள் தாமரை, அதுபோலவே எல்லோரும் வணங்கினார்கள். ஆனால் சரசு மட்டும் திகைத்துப் போய் சிலையாக நின்று விட்டாள். 

இரவில் அவள் எந்த உருவத்தைப் பார்த்தாளோ, அதே உருவம்! அதே புடவைக் கட்டு! அதே வளையல்கள்!

அவளுக்கு உடம்பெல்லாம் வியர்த்தது.

“என்னம்மா? சௌக்கியமா? எப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாய்?” என்று கேட்டார் அந்த அம்மையார். 

சரசு பேசாமல் அப்படியே நின்றாள். 

“இந்த சாரதாம்பாளைப் புரியவில்லையா, உனக்கு கோடைக்கானலுக்கு யார், யார் வருகிறார்கள் என்பதை இங்கே உட்கார்ந்தபடியே நான் தெரிந்து கொள்கிறேன்!” என்று சொன்னபடி சிரித்துக்கொண்டே கோவில் கதவைத் திறந்துவிட்டார் அந்த சாரதா அம்மையார். 

கதவைத் திறந்ததுதான் தாமதம் உள்ளே இருந்து ஏதோ ஓர் ஒலி வருவதுபோல் சரசுவுக்குத் தோன்றிற்று. 

அம்மன் கதைப் பிரதிமைதான். கருங்கல்லாலேகூடத் செய்யப்படவில்லை. அம்மன் என்றால் ஓர் ஆவேசத் தோற்றம் இருக்குமே. அதுவும் இல்லை. கழுத்திலே பாசி மாலைகளே போடப்பட்டிருந்தன, கையில் ஒரு திரிசூலம் இருந்தது. ஒரு பக்கத்தில் நாகத்தின் சிலை. மறு பக்கம் மறுபக்கம் சிங்கத்தின் சிலை. அந்த அம்மனே புதுமையாகத் தோன்றிற்று அவளுக்கு. 

சாரதா அம்மையார் அந்தச் சிமெண்ட் தரையில் அனைவரையும் உட்காரச் சொன்னார். தானும் உட்கார்ந்தார். 

உடனே பாடத் தொடங்கினார். அதுவும் சௌந்தரிய லஹரியில் இருந்தே இரண்டு சுலோகங்கள்! 

சரசுவுக்கு மீண்டும் உடம்பு வியர்த்தது. அவன் அந்த திகிலில் இருந்து மீளவே முடியவில்லை. 

சுலோகத்தை முடித்த அம்மையார் மேலும் சில வரிகள் பேசினார். இரவு கனவிலே என்ன பேசினாரோ, அதையே பேசினார். 

சரசுவும் ஆவேசம் வந்தவள் போல் உட்கார்த்திருந்தாள். 

அம்மையார். மௌனமாக தியானத்தில் ஆழ்ந்தார்.

மூடிய கண்களோடு எல்லோருக்கும் விபூதி கொடுத்தார், ‘இனி அவர் பேச மாட்டார்’ என்பது போல் ஜாடை காட்டினாள் தாமரை. 

எல்லோரும் புறப்பட்டார்கள். 

தன் கனவில் இதே சாரதா அம்மையார் வந்தது பற்றி சரசு யாரிடமும் எதுவும் கூறவில்லை. 

ஆனால் அன்றைய இரவு, அவளுக்குத் தூக்கமில்லாத இரவாகிவிட்டது. அதிகாலை நான்கு மணிக்குத்தான் அவள் தூங்கத் தொடங்கினாள். 

மீண்டும் அதே கனவு! அதே அம்மையார்! 

“வாழ்க்கை என்பது பருவத்தை வீணாக்குவதல்ல மகளே! நீ திருமணம் செய்து கொள்” என்றார் அந்த அம்மையார்! 

இப்போது சரசு எழுந்து நடக்கலில்லை. இந்த இரண்டு வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அம்மையார் போய்விட்டதாகவே அவளுக்குத் தோன்றிற்று. 

‘அதே பெண்மணிதான் உண்மையிலேயே வந்தாரோ…’ என்று கூட யோசித்தாள்.

மறுநாள் தனியாகப் போய் அந்த அம்மையாளரத் தரிசிப்பது என்று முடிவு கட்டினாள். 

காலை பத்துமணிக்கு உத்தியோகஸ்தர்களைப்போல் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு பாமாவை அழைத்தாள். 

“அடி அம்மா! நேற்றுப் போன அம்மன் கோலிலுக்கு தான் போய்வரப் போகிறேன்; காரை எடுத்துக்கொண்டு போகிறேன்” என்றாள். 

“ஏனக்கா, நாங்களும் வருகிறோமே…….!” என்றாள் பாமா. 

“இல்லை! தனியாக அந்த அம்மையாரைச் சந்தித்து ஏதோ பேச வேண்டும் போல் எனக்குத் தோன்றுகிறது!” என்று சொன்ன சரசு காரில் புறப்பட்டு, கடைக்குப் போய் தேங்காய், பழங்கள் எல்லாம் வாங்கிக்கொண்டு நேரே தோப்புக்குப் போனாள். 

வழக்கம்போலவே கோவில் பூட்டி இருந்தது. கோவிலுக்குள் எப்பொழுதும் போல விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. 

“அம்மா! அம்மா!” என்று அழைத்துப் பார்த்தாள் சரசு, பதிலில்லை. 

அதற்குப் பதிலாக ஒரு வேலைக்காரி ஒரு கையில் பால் சொம்பும் ஒரு கையில் பூக்கூடையுமாக சரசுவின் எதிரே தோன்றினாள். 

“என்னம்மா, யாரைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்டாள் வேலைக்காரி. 

“சாரதா அம்மையார். இல்லையா?” என்று கேட்டாள் சரசு. 

“அட்டா! உங்களுக்கு விஷயம் தெரியாதா? நேற்று இரவுதான் அவர்கள் சமாதியாகிவிட்டார்கள்! இங்குள்ள பெரியவர்களெல்லாம் வந்திருந்தார்கள்! அவர்களது உடலை அவரது சொந்த ஊாரான குருவத்தூருக்கு அனுப்பி விட்டார்கள்” என்றாள் அவள். 

திடுக்கிட்ட சரசு, “குருவத்தூர் எங்கிருக்கிறது?” என்று கேட்டாள். 

“திண்டுக்கல்லுக்குப் பக்கத்தில்” என்று சொன்ன வேலைக்காரி. “உங்கள் பெயரென்ன?“எனக் கேட்டாள்

தன் பெயரைச் சொன்னாள் சரசு.  

“அப்படியா? நில்லுங்கள்! அம்மா சமாதி அடைவதற்கு நாழிகைகளுக்கு முன்னால் என்னைக் கூப்பிட்டார்கள். என் கையில் வாழை இலையில் மடிக்கப் பட்ட ஒரு பொட்டலத்தைக் கொடுத்து, ‘நாளைக்கு சரசு என்றொரு பெண் வருவாள். அவளிடம் கொடு’ என்று சொன்னார்கள்” என்றாள் வேலைக்காரி. 

சரசு என்ன பொட்டலமோ என்று ஏங்கி நின்றாள். வேலைக்காரி கொடுத்ததை ஆவவோடு பிரித்துப் பார்த்தாள். 

உள்ளே மஞ்சள், குங்குமம், ஒரு மலர் மாலை, நடுவிலே ஒரு பவுன் எடையுள்ள ஒரு மாங்கல்யம்! 

சரசுவுக்கு அதை என்று செய்யதென்று தெரியவில்லை. அதைக் கண்களில் ஒற்றிக் கொண்டு திரும்பி நடந்தபோது வேலைக்காரியின் குரல் கேட்டது. 

“அந்த மாங்கல்யத்தை சீக்கிரம் பயன்படுத்தும்படி அம்மா சொன்னார்கள்” என்றாள் அவள். 

ஒன்றும் பேசாமல் சரசு நடந்தாள். 

அவள் வீட்டுக்குள் நுழைந்தபோது, பாமா எதிரே வந்து, “என்ன அக்கா கையிலே பொட்டலம்?” என்றாள். 

“சாரதா அம்மையார் கொடுத்துவிட்டுப் போயிருக் கிறார்கள்!” என்றாள் சரசு. 

“போயிருக்கிறார்களா?… எங்கே போயிருக்கிறார்க?” 

“இறைவனிடம்!” 

“அக்கா!…என்ன இது? சுய நினைவோடுதான் பேசுகிறாயா?” 

“எனக்கு இன்னும் நினைவு தப்பாததுதான் ஆச்சரியம்!” 

“என்னக்கா. இது! என் நெற்றியைப் பார். என்ன இருக்கிறது?”.

“புது வண்ணக் குங்குமம்!” 

உடனே பாமா ஓடிப் போய் ஒரு குங்குமச் சிமியை எடுத்து வத்தாள். அது தங்கத்தால் ஆனது. 

“இந்தக் குங்குமத்தை இப்பொழுதுதான் அதே அம்மையார் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனார்கள்!” என்றாள் பாமா. 

சரசுவுக்கு நினைவு தப்பிவிடும் போலத்தான் தோன்றிற்று.

– தொடரும்…

– 1978 – 1979, தினமணி கதிர் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.

– சரசுவின் சௌந்தர்ய லஹரி, முதற்பதிப்பு: பிப்ரவரி 1980, வானதி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *