கருப்பசாமி தர்மத்தின் சலங்கை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: September 27, 2026
பார்வையிட்டோர்: 8,067 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம் 10: திரும்பிய மகன்

சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராகப் பணிபுரிந்து கொண்டிருந்தான் தமிழரசன் — பழனி தாத்தாவின் அண்ணன் மகன். செல்போன் ஸ்கிரீனில் “அப்பா” என்ற பெயர் மின்னியது.

“அப்பா, சொல்லுங்க.”

“தமிழரசு… பழனி மாமா… பழனி மாமாவைக்கொன்னுட்டாங்கடா!” அப்பாவின் குரல் அழுகையில் இடறியது.

“என்ன அப்பா சொல்றீங்க? யாரு கொன்னாங்க?” தமிழரசனின் கை நடுங்கியது.

“அந்தப்பண்ணையார் ரத்னவேலோட ஆளுங்கடா. நிலம் தரமாட்டேங்குச் சொன்னதுக்கு வெட்டிட்டாங்க. காவல்துறைகூட வர மாட்டேங்குது. ஊரே பயத்துல உறைஞ்சு போச்சு…”

“நான் இப்போவே கிளம்புளேன் அப்பா. கவலைப்படாதீங்க.”

அன்றைய இரவே பேருந்தில் ஏறினான் தமிழரசன். கண்மாய்க் கரையை அடைந்த அவன், புதிதாக மூடப்பட்ட மண் குவியலின் முன் நின்று கொண்டிருந்த தன் தந்தையைக் கண்டான். “மாமா…” அவனது குரல் தழுதழுத்தது.

பக்கத்தில் நின்ற சுடலை பூசாரி மெல்லக் கூறினார்: “தம்பி… சாமியே கண்ணைமூடிடுச்சு. இனிமேல் இந்த ஊருக்கு யாரு துணை?”

“போலீஸ்ல புகார் கொடுக்கலையா?” என்று கேட்டான் தமிழரசன்.

“போலீஸே ரத்னவேலோட பாக்கெட்லதான் இருக்குடா தம்பி,” என்று ஒருவர் சோர்வாகச் சொன்னார்.

அன்று இரவு, தமிழரசன் தன் அப்பாவிடம் ஒரு முடிவைத் தெரிவித்தான். “நான் திரும்பிப் போகல அப்பா. இந்த ஊருக்கு நியாயம் வேணும். எப்படியாவது வாங்கித் தருவேன்.”

“தம்பி… அவன் ரொம்ப ஆபத்தானவன். உன்னையும் ஏதாவது பண்ணிடுவானே…”

“பயப்படாதீங்க அப்பா. நான் தனியா இல்ல. இந்த ஊரு முழுசும் என்கூட இருக்கு,” என்றான் தமிழரசன் உறுதியாக.

அவனுக்குத் தெரியாது, அன்று இரவே அந்தச்சாமியின் மூலஸ்தானத்தில் ஒரு மெல்லிய சத்தம் — “ஜல்…” — பிறக்கத் தொடங்கியிருந்தது.

பாகம் 3 | தர்மத்தின் விழிப்பு

அத்தியாயம் 11: மூலஸ்தானத்து மரணம்

பழனியின் அடக்கத்திற்குப் பின், தமிழரசனுக்கு தூக்கம் வரவில்லை. அந்த அமாவாசை நள்ளிரவில், அவன் மட்டும் தனியாக எழுந்து கருப்பசாமி கோவிலை நோக்கி நடந்தான். “என்னைக் காக்க முடியாட்டியும் பரவால்ல சாமி… ஆனா இந்த ஊரு மக்களுக்கு ஏதாவது வழி காட்டு,” என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டு சன்னதிக்குமுன் கைகூப்பி நின்றான்.

அதே நேரம், வானத்தில் எந்த மேகமும் இல்லாத நிலையில், ஒரு பலத்த சூறாவளிக் காற்று ஊரை நோக்கி வீசத் தொடங்கியது. கோவில் மரத்தில் கட்டப்பட்டிருந்த பித்தளை மணிகள் “டங்… டங்…” என்று வெறித்தனமாக அடித்துக் கொண்டன. அந்தச் சூறாவளிக் காற்றில், ஒரு அடர்த்தியான சுருட்டு வாசம் ஊர் முழுவதும் பரவத்தொடங்கியது.

“நம்ம சாமிக்குக் கோபம் வந்துருச்சுடா… அந்த மாரநாடு கருப்பன் கண்ணுவிழிச்சுட்டான்டா!” என்று ஊர் மக்கள் மனதிற்குள் நினைத்துப் பயபக்தியோடு கைகூப்பினார்கள்.

சாமியின் சிலைக்குக் கீழே, இருண்ட மூலஸ்தானத்தில்… அந்தப் பிரம்மாண்டமான பித்தளைச் சலங்கை அமைதியாகக் கிடந்தது. நிசப்தமான அந்த இரவில், சூறாவளிக் காற்றின் இரைச்சலையும் மீறி, ஒரு மிக மெல்லிய சத்தம் பிறந்தது… “ஜல்…”

அத்தியாயம் 12: கட்டறுத்த பித்தளைச் சலங்கை

தமிழரசன் திடுக்கிட்டு நிமிர்ந்தான். “யாரு அது?” என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டான். மூலஸ்தானத்தில் யாரும் இல்லை. மீண்டும் அந்தச் சத்தம்… “ஜல்… ஜல்…”

யாருமற்ற அந்த இருண்ட மூலஸ்தானத்தில் இருந்து, சாமியின் காலடியில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பிரம்மாண்டமான பித்தளைச் சலங்கை, தானாகத் துள்ளிக் குதிக்கத் தொடங்கியது. அந்தச் சலங்கையின் நாதம் இடிமுழக்கம் போல் கோவில் முழுவதும் அதிர்ந்தது.

தமிழரசனுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. “இது பிரமையா… இல்ல உண்மையா?” என்று அவன் மனது கேள்வி எழுப்பினாலும், அவனது கால்கள் பின்வாங்கவில்லை. சலங்கையின் ஒவ்வொரு அதிர்விற்கும், பைரவன் புதைத்திருந்த மாந்திரீகக் கருப்புக் கயிறுகள் தானாகத் தீப்பிடித்து அறுபட்டு விழுந்தன.

சத்தம் கேட்டு ஓடி வந்த ரத்னவேலின் காவல் அடியாள் ஒருவன், “என்ன இது!” என்று திடுக்கிட்டான். “தம்பி, நீ இங்க என்ன பண்ற?” என்று தமிழரசனைப் பார்த்துக் கத்தினான்.

“எனக்கே தெரியல,” என்றான் தமிழரசன், தன் கண்களை நம்ப முடியாமல்.

– தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *