நான் படித்துக் கிழித்த கதை
கதையாசிரியர்: பொ.சண்முகநாதன்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: September 4, 2026
பார்வையிட்டோர்: 17
(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அந்த ஆசிரியர் அடிக்கமாட்டார். மாணவர் களுக்குத் தொல்லை கொடுக்கமாட்டார். பிட்டு, சோறு, பாண் என்று திரும்பத் திரும்ப ஒரே சுவையையே சுவைத்து அலுத்த நாவுக்கு இடைவேளையின் போது நல்ல சுவையான கடலை வடை கிடைக்கும்”
இவைதான் என்னைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவதற்குத் துணை நின்றவை. இல்லாவிட்டால் ஏடு தொடக்கிய அன்றே ‘ஏட்டுப் படிப்பு வாழ்க் கைக்கு உதவாது’ என்ற முடிவுக்கு வந்திருப்பேன். மழைக்குக்கூட பாடசாலையில் ஒதுங்கியிருக்க மாட் டேன். அரிச்சுவடிகூடப் படித்திருக்கமாட்டேன். இது போன்ற கதை எழுதி உங்களது பொறுமையையும் எனது மையையும் வீணடித்திருக்கவும் மாட்டேன்.
‘அவ்வாறு பாடசாலைக்குப் போகாமலும் படிக் காமலும் இருக்கப் பெற்றோர்கள் சும்மா இருந்துவிடு வார்களா? முதுகில் மூன்று போட்டு அனுப்பமாட்டார்களா?’ என்று கேட்கப்படலாம். ஆனால் உண்மை யைச் சொல்லுகிறேன், அப்படி எனது பெற்றோர்கள் ஒன்றுமே செய்திருக்கமாட்டார்கள். எனது விருப்பமே அவர்களது விருப்பமும். நான் மறுத்தால் அவர்கள் அதற்கு மறுவார்த்தையே பேசமாட்டார்கள். அவர்க ளுக்கு நான் அவ்வளவு செல்லம். அத்துடன் அவர்க களுக்குப் ‘பரணி’யில் பிறந்த நான் தரணி ஆழ்வேன் என்றும், அதற்குப் படித்துத்தான் ஆகவேண்டும் என்ற நியதியில்லையென்றும் மிக நன்றாகத் தெரியும்.
படித்துக் கிழித்தேன்
ஏடு தொடக்கிய தமிழ்ப் பாடசாலையிலேயே நாலாம் வகுப்புவரை படித்துக் கிழித்தேன். கிழிக்கிற தென்றால் புரியவில்லையா? சின்ன வகுப்புப் பிள்ளை. களைப் பாருங்கள், புரியும். அவர்கள் ஒரு வகுப்பில் ஒரே புத்தகத்தை எத்தனை முறைகள் வாங்குகிறார்கள் தெரியுமா? படிக்கிறதும் கிழிக்கிறதும், படிக்கிறதும் கிழிக்கிறதுமாக இருப்பார்கள். அப்படித்தான் நானும் படித்துக் கிழித்தேன். வடையிலுள்ள எண்ணெயை அகற்றவா? புத்தகத்திலேதான் பேப்பர் கிழிப்பேன். மாங்காய் சாப்பிட மிளகாய்த் தூளும் உப்பும் கொண்டு போகவா? புத்தகத்திலேதான் பேப்பர் கிழிப்பேன். வாங்கிலேயுள்ள காக்கை எச்சத்தை துடைக்கவேண் டுமா? புத்தகத்திலேதான் பேப்பர் கிழிப்பேன்.
இந்த நாலாம் வகுப்புவரை எப்படித் தங்கு தடையின்றிப் போனேன் என்பது எனக்கு அப்பொ ழுது எட்டாவது அதிசயமாகத்தான் இருந்தது. படிப் பிலோ மிகவும் குறைவு. பாடசாலை நாட்களில் மூன்றில் ஒரு பகுதி நாட்களையோ மாங்காய், புளியங்காய், மிளகாய்த்தூள், உப்புச் சாப்பிட்டு வந்த வியாதி காரணமாக வீட்டிலே கழித்திருப்பேன். அப்படி இருந் துமா இப்படி? பிறகுதான் உண்மை தெரிந்தது. எனது அப்பா மாமா முதலியோர் பெரிய பெரிய பதவிகளில் இருக்கிறார்கள். அவர்களது உதவி அந்தப் பாடசாலை ஆசிரியர்களுக்கு இடையிடை அதிகமாகத் தேவைப்படு வதுண்டாம். அதனால்தான் அந்த ஆசிரியர்கள் என் னையும் கவனித்திருக்கிறார்கள். எப்படியென்றாலும் அவர்கள் உண்டவீட்டுக்கு இரண்டகம் செய்வார்களா, என்ன?
சுத்தம் சுகம் தரும்
ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில்தான் ஐந்தாம் வகுப்புத் தொடக்கம் எஸ். எஸ்.சி. வரை படித்து முடித்தேன். ஆங்கிலப் பள்ளிக்கூடம் சென்ற என்னை மிகவும் கவர்ந்த பாடம் ‘சுத்தம் துப்புரவு எல்லாருக்கும் எதிலும் அவசியம்’ என்று ஆசிரியர் ஒருவர் சொல்லிக் கொடுத்த பாடமேயாகும்!
ஒவ்வொரு ஆண்டு தொடங்கியதும் முதல் வாரத்தில் ஆசிரியர்கள் புத்தகங்கள் கொப்பிகளின் பட்டியலைத் தருவதும் போதனைகள் சொல்லுவதிலும் தானே ஈடுபடுவார்கள். அடுத்த இரண்டு வாரங்களி லும் புத்தகங்கள் கொப்பிகளைத் தேடித் தேடி வாங்கு வதற்காக அவர்கள் பாடங்களைத் தொடங்காமலேயே இருப்பார்கள், அதற்கு அடுத்த வாரத்தில் பாடங்கள் தொடங்கப்பட்டு விட்டாலும்கூட நான் வீட்டிலே படிக்கமாட்டேன். எனது புத்தகங்கள் கொப்பிகளுக்கு அழகான விலையுயர்ந்த தாள் வாங்கி உறை போடு வதிலும், உறையிலே எனது பெயர், வகுப்பு, பாடங்கள் முதலியன அழகாக எழுதப்பட்ட தாளை ஒட்டுவதிலு மாகச் செலவிடுவேன். தண்ணீர்ப் படங்களுக்கும் வண்ண வேலைப்பாடுகளுக்கும்கூட இவைகளில் தகுந்த இடமளிப்பேன்.
பாடசாலையில் கொடுக்கப்படும் எல்லாப் பாடக் குறிப்புகளையும் ஒரு கொப்பியிலேயே எழுதுவேன். பின் வீட்டிலேதான் அந்தக் குறிப்புகளை அந்தந்தப் பாடங்களுக்குரிய கொப்பிகளில் அழகாக அச்செழுத் துப்போல் — அவசியமான இடங்களில் சிவப்பு நீலக் கோடுகளும் போட்டு எழுதுவேன்.
இந்தத் துப்புரவான வேலைகள் எனது பெற் றோர்களை மட்டுமல்ல ஆசிரியர்களையும் மிக மிகக் கவர்ந்துவிடும். இது ஒன்றிற்காகவே நான் என்ன தவறுகள் செய்தாலும் அவர்கள் என்னை மன்னிக்கத் தயாராக இருந்தார்கள்.
இப்படியான வேலைகளால் எனக்குப் படிக்கவே நேரமில்லாமல் இருந்தது, விடுதலை காலங்களில் படிக் கும்படி பெற்றோர்கள் வற்புறுத்துவார்கள். உடனே நான் ‘விடுதலையில் படிப்பதா? அப்படியானால் எதற் காக விடுதலை விடுவான்? எந்த உழைப்புக்கும் ஓய்வு அவசியம். படிப்புக்கும் அவ்வாறே. இல்லாவிட் டால்……’ என்று தொடங்கினேனோ பெற்றோர்கள் ‘கப்சிப்’ ஆகிவிடுவார்கள். “பொடியன் சொல்லுவதும் சரிதான். அவனுக்கு எவ்வளவு ஆராய்ச்சி மனப் பான்மையுள்ள புத்தி” என்று தங்களுக்குள் பெரு மைப்பட்டுக் கொள்வார்கள்.
திரு விளையாடல்
விளையாட்டுப் பாடமும் எனக்குப் பிடிக்கா த பாடங்களில் ஒன்று. ‘தேவையின்றி அனாவசியமாக எதற்காகக் கையைக் காலை ஆட்டி எமது சக்தியை வீணாக்குவான், ஆடைகளை அழுக்காக்குவான்’ என்பது எனது கொள்கை. ஆனால் இதை விளையாட்டுப்பாட ஆசிரியர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. எனவே. எனக்குத் தோன்றிய ஒரே வழியும் ஒப்பற்ற வழியு மான வெறுங்காலில் மஞ்சள் தண்ணீர் நனைத்த பஞ்சு வைத்து ‘பாண்டேச்’ துணி சுற்றிக் கட்டும் வழியைக் கடைப்பிடித்து, விளையாட்டுப் பாடங்களுக்குக் கள்ளம் செய்வேன். ஒரு நாள் என்ன மாதிரியோ தெரிய வில்லை உண்மையை அறிந்துவிட்ட விளையாட்டுப்பாட ஆசிரியர், கட்டை அவிழ்த்துக் காட்டச் சொல்லிவிட் டார். இதன்பிறகு இந்தத் திருவிளையாட்டை நடத்த நான் துணிந்ததில்லை.
வருடாந்த விளையாட்டுப் போட்டிகளிலும் நான் பங்குபற்றுவதில்லை. அப்படிப் பங்குபற்றி ஓடினாலும்- அது ‘சிலோ றேஸ்’ என்று எண்ணாமலேகூட ஓடினா லும், கடைசியாகத்தான் வருவேன்.ஆனால் பாண் சாப்பிடும் ஓட்டத்தில் மட்டும் நான் கட்டாயம் கலந்து கொள்வது மட்டுமல்லாது அதில் முதலாவதாகவும் நான்தான் வருவதுண்டு,
அடிக்கடி இறந்த ஆச்சி அப்பு
இப்படியே படிக்காமல் பள்ளிக்கூடத்தில் காலம் தள்ளுவதென்றால் கொஞ்சம் வில்லங்கம்தானே! இதற் காக இடையிடையும் ஆசிரியர் மறந்துவிடுவார்தானே என்ற காரணத்தால் பல தடவைகளும்கூட ‘அப்பு இறந்துவிட்டார்’ ‘ஆச்சி மாண்டுவிட்டார்’ ‘அண்ண னுக்குத் திருமணம்’ ‘அக்காவுக்குக் கலியாணம்’ என் றெல்லாம் பள்ளிக்கூடத்துக்கு லீவுக் கடிதங்களும் எழுதவேண்டி வந்தது. இதெல்லாம் பொய்க் கடிதங் களே! உண்மையில் இவைகளெல்லாம் நடந்தது எனது பள்ளி வாழ்க்கை பூரணமாகக் கழிந்த பின்னரே என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாளில் ஒரு பாடம் இரண்டு பாடங்களுக்கு வகை தெரியாவிட்டால் தலை வலிக்கிறதென்று மேசை யில் தலை வைத்துப் படுத்துவிடுவேன் (தலைவலி இருக் கிறதா இல்லையா என்பதை எந்த ஆசிரியரும் கண்டு பிடிக்க முடியாதென்பதை நினைவில் வைத்திருக்கவும்.) இப்படி நான் அடிக்கடி தலைவலியென்று படுப்பதால் பல ஆசிரியர்கள் என்மீது மிகவும் அநுதாபப் படுவ துண்டு. ‘இந்த வயதிலேயே பாவம் பெடியனுக்கு ‘பிறெசர்” குணம் வந்துவிட்டதே’ என்று அவர்கள் மிகவும் கவலைப்படுவார்கள்.
பரீட்சை நெருங்கினால்கூடப் படிப்புக் கிடை யாது. பரீட்சைக்கு வேண்டிய இடுக்கிகள் (கிளிப்) மடக்கிகள் (பைல்) தேடுவதிலும், பென்சில் பேப்பர் அடிமட்டம் பேனைகள் வாங்குவதிலும், பென்சிலை அழகாகத் தீட்டுவது, பேப்பரில் அழகாகக் கோடு கிழிப்பது, பேனைகளை கழுவி மை நிரப்புவது போன்ற வேலைகளிலுமாக இருப்பேன்.
கடவுளை நம்பினோர்…
இப்படியெல்லாம் இருந்தும்கூட பரீட்சையில் அரும்பொட்டாக என்றாலும் சித்தியடைந்தேன் என்றால், அதற்கு நான் அல்ல காரணம். அந்த மரு தடிப் பிள்ளையாருக்கு பரீட்சைக்கு முன்பும் பரீட்சை யின்போதும் அடித்த தேங்காய்களும் கொழுத்திய கற் பூரங்களும் கும்பிட்ட கும்பிடுதல்களும் வீண்போக வில்லை என்றுதான் பொருள். கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ அல்லவா? ஆனால் இந்தக் கடவு ளுக்கேகூடத் தெரியாது போலும் நான் பின்பு இவ ரையே திட்ட இருக்கிறேன் என்ற சங்கதி!
துப்பறியும் ஆர்வம்
எஸ். எஸ்.சி. வகுப்புக்குள் நுழைந்ததும் பழைய சுத்தம் துப்புரவு எல்லாம் வீண் வேலை என்ற ஞானோதயம் எனக்குப் பிறந்தது. அதற்குச் செலவு செய்யும் நேரத்திலெல்லாம் ஏதாவது துப்பறியும் நாவல் களையாவது வாசித்தால் வருங்காலத்தில் போலீஸ் இலாகாவில் புகுந்து துப்பறியும் தொழிலாவது பார்க்கலாம் என்ற ‘பிசினஸ்’ மூளை எனக்கு வந்தது. இதன் பயன், அந்த ஆண்டு நடந்த எஸ். எஸ். சி. பரீட்சைக் கும் நான் அனுப்பப்படவில்லை. ‘துப்பறியும் தொழில் தான் உமக்கு இலாயக்கு’ என்று சொல்லாமல் சொல்லி விட்டது எஸ். எஸ். சி. பரீட்சைக்கு அனுப்புவதற் காக நடத்தப்பட்ட தகுதிப் பரீட்சை!
வயது வந்தவர்களுக்கு மட்டும்
ஒரே வகுப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்டு கள் படிக்க நேர்ந்தாலும் வயது அதிகமாகச் சென்று விட்டாலும் ‘ஏ’ பிரிவுக்கு அனுப்பப்படுவது அக்கால வழக்கம். அதன்படி நான் எஸ். எஸ். சி. ‘ஏ’ வகுப் புக்குச் சென்றேன். ‘ஏ’ வகுப்பு மாணவர்களுக்குச் சற்று அதிகமான சுதந்திரம் உண்டு. அதிலும் எஸ். எஸ்.சி. ‘ஏ’ வகுப்பு மாணவர்களுக்கோ மிக மிக அதிகமான சுதந்திரம் உண்டு. தலைக்கு மிஞ்சிய பிள்ளை களும் இருப்பதால் ஆசிரியர்கள் எமக்கு எதையும் வற் புறுத்தவும் மாட்டார்கள். எம்மைத் தண்டிக்கவும் மாட்டார்கள்.
தினசரி இரண்டு முப்பது!
இந்த வகுப்பிலேதான் சினிமா என்பது வாழ்க் கைக்கு மிக மிக அவசியம் என்றும், சினிமா பார்க்காதவன் வாழ்வு ‘விடியப் பனிபோல் கெடும்’ என்றும், எவ்வளவு அதிகமதிகமாகச் சினிமா பார்க்கிறோமோ அவ்வளவு அதிகமதிகமாக அறிவு வளரும் என்றும் உணரலானேன். இதை உணர்ந்த சில தியேட்டர் முதலாளிமார்களும் தினசரி இரண்டு முப்பது காட்சி களை ஆரம்பித்தனர். பள்ளிக்கூடத்தில் கட்டுப்பாடு கிடையாது. வீட்டிலோ ‘பொடியன் பள்ளிக்கூடத்தில்’ என்று நினைத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் நானோ தியேட்டருக்குள் இருப்பேன்.
காலை வகுப்பிலும் படம் பார்க்கப் படம் இல்லாத காலத்திலுள்ள மாலை வகுப்பிலும் நான் சினிமா நட்சத் திரங்களின் வாழ்க்கை வரலாறுகளை ஆராய்வதிலும், திரைக்கதை வசனம் வாசிப்பதிலும், சிவாஜி எம்.ஜி. ஆரில் யார் சிறந்த நடிகர்? பத்மினி பானுமதியில் யார் சிறந்த நடிகை? தங்கவேலு சந்திரபாபுவில் யார் சிறந்த நகைச்சுவை நடிகர்? வீரப்பா நம்பியாரில் யார் சிறந்த வில்லன்? போன்ற விவாதங்களில் ஏனைய மாணவர் களுடன் ஈடுபடுவதிலுமாக இருப்பேன். இந்தச் சங்கதிகள் ஒரு பக்கத்தில் நடைபெற்றுக்கொண்டிருக் கும். ஆனால் பாடங்களும் நடந்துகொண்டுதான் இருக் கும். அதையும் சில துரோகக் கூட்டங்கள் (இது நான் அப்பொழுது சில புத்தகப் பூச்சிகளுக்கு வைத்த பட்டம்) கவனித்துக்கொண்டுதான் இருக்கும். சினிமா மோகம் என்னை அகோரமாகப் பற்றிக்கொண்டதும் துப்பறியும் தொழிலில் எனக்கிருந்த ஆசை சிறிது சிறி தாகக் குறைந்து வந்தது.
இனித் தெய்வமே!
அந்த ஆண்டு நடைபெற்ற தெரிவும் பரீட்சை யில் ஏதோ ஒரு விதமாகத் தேறியதும்தான் நான் ஏதோ சிறிது படிக்க எண்ணினேன், அதுவரை எழு தாமல் இருந்த பாடக்குறிப்புகளை சக மாணவர்களது கொப்பிகளை வாங்கிப் பார்த்தெழுத ஆரம்பித் தால்……? பரீட்சை தொடங்கியதும்கூட குறிப்புகளைப் பார்த்தெழுதும் வேலை முடியவில்லை. எழுதவேண்டிய குறிப்புகளே மலைபோல் குவிந்திருக்கும்போது அதைப் படிக்கவும் வேண்டுமானால் எப்படி முடியும்? “என் செயலால் ஆவதொன்றுமில்லை இனித் தெய்வமே…” என்ற பாடலைப் பாடியவாறே பரீட்சைக்குப் போனேன். பாடியவாறே பரீட்சையும் எழுதினேன். ஆனால் முடிவு என்னவோ தோல்விதான். அப்பொ ழுது எனக்கு ஏற்பட்ட ஆத்திரத்துக்கு அளவேயில்லை. “கடவுளாவது மண்ணாங்கட்டியாவது! கடவுள் என் பதே கிடையாது! அப்படி இருந்தாலும் அவருக்குக் கண்ணுமில்லை, காதுமில்லை, கையுமில்லை, காலுமில்லை, மூக்குமில்லை, முழியுமில்லை” என்று திட்டத் தொடங் கினேன்.
“தேறாவிட்டால் என்ன குடியா முழுகிப் போய் விடும். ‘பாஸ்’ பண்ணினால் மட்டும் அரசாங்கம் உடனே வேலை தந்துவிடவா போகிறது? கவலைப்படு வதற்கு இதிலை என்ன இருக்கிறது?” என்ற பெற் றோர்களது ஆறுதல் வார்த்தையைப் பக்கத் துணையா கவைத்து மீண்டும் அதே வகுப்பில் அதே பிரிவில் பழைய கதையைத் தொடர்ந்தேன். தகுதிப் பரீட்சை யில் தேறி கடைசிப் பரீட்சையும் எழுதினேன்.
1958 ம் ஆண்டு சித்திரை மாதம் கடவுள் கருணையினால் (ஆம் மீண்டும் கடவுள் நம்பிக்கை வந்துவிட்டது) எனது விடைத்தாள்களைப் புதிதாகத் திருமணம் செய்து மனைவியோடு மகிழ்ச்சியோடிருந்த ஒருவர் பார்த்தோ என்னவோ (இல்லாவிட்டால் எப்படி முடியும்?) தேறிவிட்டேன்’ என்ற செய்தி வந்தது. இத்துடன் எனது பாடசாலை – படிப்பு ஆகிய கதையும் மங்களகரமாக முற்றுப்பெற்றது.
– கொழும்புப் பெண் (நகைச்சுவைக் கட்டுரைகள்), முதற் பதிப்பு: செப் 1965, கலைச்செல்வி பதிப்பகம், சுன்னாகம்.
![]() |
எழுத்தாளர் பொ.சண்முகநாதன் (போனாச்சானா) இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளரும், நகைச்சுவை இலக்கிய முன்னோடிகளில் ஒருவரும் ஆவார். 'போனாச்சானா' என்ற பெயரிலும் எழுதியுள்ளார். வீரகேசரி' மூலம் 1961ல் எழுத்துலகில் நுழைந்த நகைச்சுவை எழுத்தாளர் திரு.பொ.சண்முகநாதன் அவர்கள் ஏனைய ஈழத்துப் பத்திரிகைகளான 'ஈழநாடு', 'கலைச்செல்வி', 'கலைவாணி, 'சங்கப்பலகை', 'சுதந்திரன்', 'செய்தி', 'தமிழ்முரசு', தினகரன்', 'புதினம்', 'விடுதலைப் பரணி, விவேகி', 'ராதா' ஆகியவைகளிலும் எழுதியுள்ளார். இவர் நகைச் சுவைக்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
தின பலன்
எம்.பாலமுரளி
September 6, 2026
கொழும்புப் பெண்
பொ.சண்முகநாதன்
September 4, 2026
கொழும்புப் பெண் வேண்டாம்!
பொ.சண்முகநாதன்
September 4, 2026
