பாரம்!
கதையாசிரியர்: கல்பனா ராஜகோபால்
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: September 3, 2026
பார்வையிட்டோர்: 22

நர்மதாவிற்கு அண்ணன் மனோஜ் வீட்டிலிருந்து வந்ததிலிருந்தே மனதில் ஒரே குழப்பமாக இருந்தது.
சனி, ஞாயிறுகளில் சாயந்திர நேரங்களில் வாக்கிங் செல்வது போல, இரண்டு தெரு தள்ளி உள்ள அண்ணன் வீட்டிற்கு வாரம் ஒருமுறை விசிட் அடிப்பது நர்மதாவின் பழக்கம். வழக்கம் போல நேற்று முன்தினம் அங்கே சென்ற போது, அங்கே நடந்த நிகழ்வுகள்தான் அவளின் குழப்பத்துக்கு காரணம்.
மனோஜின் மகனுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் முடிந்து விட்டன.திருமணச் சேவைகளை முன்பதிவுசெய்க
சென்னையைச் சேர்ந்த மருமகள் பூர்ணா நல்ல படிப்பும் அழகும் கொண்டவள்.
IT கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை செய்யும் பெண்.
நர்மதா எப்போது அங்கு சென்றாலும் அவள் அன்பாக பேசுவாள். ஆனால் வீட்டு வேலைகளில் பவி அண்ணிக்கு உதவுவதை பார்த்தது இல்லை. ஆனால் அண்ணி பவித்ரா, மகனையும் மருமகளையும் நன்றாக பார்த்துக் கொள்வார். காலை முதல் இரவு வரை எல்லா வேலைகளையும் சளைக்காமல் செய்பவர்.
ஒரு பெரிய அலுவலகத்தில் மேனேஜராக இருந்தவர், மகனின் திருமணத்திற்கு பிறகு விருப்ப ஓய்வு பெற்றார். அதே சமயம் வீட்டில் வேலை, வேலை என்று ஓடிக்கொண்டே இருப்பார்.
நர்மதா கூட சில சமயங்களில், “அண்ணி, அதான் மருமக வந்தாச்சு இல்ல… விட்டுட்டு வாங்க. நம்ம வீட்டுக்கு நாம ரெண்டு பேரும் எங்காவது போயிட்டு வரலாம்” என்பாள்.
ஆனால் பவி, “இல்லை நர்மதா, உங்க அண்ணனைப் பற்றி உனக்கு தெரியுமில்ல. அதுவும் இல்லாம இங்க நான் இல்லைனா இவங்க கஷ்டப்படுவாங்க,” என்று மறுத்து விடுவாள்.
அண்ணன் மனோஜ் கொஞ்சம் கறார் பேர்வழி; கோபக்காரரும் கூட.
அதனால் திருமணமான புதிதில் பவித்ரா நிறைய சங்கடங்களை சந்தித்தாள். அப்பொழுதெல்லாம் நர்மதாதான் அவளுக்கு வடிகால்.
பூர்ணா, பவித்ரா இடையே உள்ள இடைவெளியை கடந்த இரு முறை சென்ற போதும் கூட நர்மதா கவனித்தாள். பவித்ராவிடம் ஏதும் விசாரிக்கவில்லை.
நேற்று முன்தினம் அங்கு சென்ற போது வீட்டில் யாரும் இல்லை.
“எங்க அண்ணி, அண்ணனைக் காணோம்?”
“அதுவா நர்மதா, அவர் ஆபிஸ் வேலைக்காக பெங்களூர் போயிருக்கார். ரெண்டு நாள் ஆகும் வர,” என்றாள் பவித்ரா.
கையில் காபியுடன், தட்டில் பக்கோடாவுடன் வந்து சோபாவில் அமர்ந்தாள்.
நர்மதா பக்கோடாவை கொறித்துக் கொண்டே, “அட, அங்கே உங்க அண்ணனும் மருமகனும் வெளியே போயிருக்காங்க. நைட் வர லேட்டாகும். அதனால்தான் நான் இங்க வந்தேன் அண்ணி. வரும்போது அப்படியே என்னை பிக் பண்ணிக்கிறேன்னு சொன்னா உங்க மருமகன்,” என்றாள்.
“நல்லதாப் போச்சு நர்மி. நானும் உங்கிட்ட கொஞ்சம் பேசணும்,” என்றாள் பவித்ரா.
“ஆமாம், பூர்ணா எங்க? ஆளே தட்டுப்படல,” என்று நர்மதா கேட்டதும் பவித்ராவின் முகம் மாறியது.
“ஊருக்கு போயிட்டாங்க,” என்றாள் அமைதியாக.
அதைக் கண்ட நர்மதா புரிந்து கொண்டு, ‘அவளே சொல்லட்டும்’ என்று “அப்படியா” என்று தலை அசைத்து விட்டு மெளனமாக டி.வி பார்த்துக் கொண்டே காபி குடித்தாள். பின்னர் சமையலறைக்கு சென்றாள்.
அங்கு அவளுக்கு நம்ப முடியவில்லை. சிங்கில் பாத்திரங்கள் நிறைந்து வழிந்துகொண்டிருந்தன. சமையலறையில் ஆங்காங்கே பாத்திரங்கள், தட்டுகள் எல்லாம் இருந்தன.
அண்ணி பவித்ராவைப் பற்றி நர்மதா, திருமணமான ஒரு வாரத்திலேயே ‘சுத்தம் என்பது அவளுடன் பிறந்தது’ என்று நன்றாக புரிந்து கொண்டாள். வேலைக்கு போன காலத்திலும் வீட்டை கண்ணாடி போல வைத்திருப்பார். எந்த வேலையையும் ‘பிறகு செய்யலாம்’ என்று நினைக்க மாட்டார். ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக இருந்தது.
ஹாலுக்கு வந்து நர்மதா, பவித்ராவின் அருகில் உட்கார்ந்து அவள் கைகளைப் பிடித்தாள்.
கொஞ்ச நேரம் கழித்து அமைதியாக,
“சொல்லுங்க அண்ணி, என்னாச்சு?” என்றாள்.
“ஒண்ணுமில்ல நர்மதா,” என்றாள் சுவற்றைப் பார்த்துக் கொண்டே.
“அண்ணி, என்னைப் பாருங்க,” என்று அவள் முகத்தை திருப்பினாள் நர்மதா.
பவித்ராவின் கண்கள் கலங்கி விட்டன.
ஒரு நிமிடம் மௌனத்துக்குப் பிறகு,
“என்னால தாங்க முடியல நர்மதா,” என்று கதறினாள்.
“நர்மி, உனக்கே தெரியும் நான் பூர்ணாவை எப்படி பார்த்துக்கறேன்னு. நான் அவளுக்கு எந்த சிரமத்தையும் குடுக்கல.
நான் வேலைக்கு போயிட்டு வந்து வீட்டு வேலைகளை எல்லாம் செஞ்சு இவனை படிக்க வச்சு ஆளாக்கி இருக்கேன். அப்பல்லாம் யாராவது ஹெல்ப் பண்ண மாட்டாங்களான்னு நினைப்பேன். ஆனா அப்படியே வேலை செஞ்சே என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு.
அதனால்தான் பூர்ணா வேலைக்கு போயிட்டு வந்து சிரமப்பட வேண்டாம்னு நான் என்னால முடிஞ்ச அளவுக்கு எல்லா வேலைகளையும் செஞ்சுடுவேன்.
பூர்ணா வீட்டில் செல்லமா வளர்ந்தாலும், நம்ம வீட்டுக்கு வந்து ரெண்டு வருஷம் ஆச்சு. இனியும் நம்ம பழக்கங்களை கற்றுக்கொள்ள மாட்டேங்கறா.
கோவிலுக்கு கூப்பிட்டா கூட வர மாட்டா. வீட்டுக்கு வர்றவங்க கிட்ட பேச யோசிக்கறாப்ல… இனியும் எத்தனையோ இருக்கு நர்மி…”
அவள் பெருமூச்சு விட்டாள்.
“சில சின்ன வேலைகளை கத்துக்க சொன்னாலும், ஏதாவது தவறாக எடுத்துக்கிட்டு எங்களுக்குள் பிரச்னை வர்ற மாதிரி நடக்குது. அதனால நான் அவளிடம் பேசறதையே குறைத்துட்டேன். வீட்டில நடக்கற எல்லா விஷயத்தையும் உங்க அண்ணன்கிட்ட சொல்ல முடியாது. அவர் கோபப்பட்டா பிரச்னை பெருசாகிடும். குடும்பம் பிரிஞ்சுடுமோன்னு பயந்து எல்லாத்தையும் மனசுக்குள்ளே வைத்துக்கிட்டு இருக்கேன் நர்மி…
நான் அவளை வேலைக்காரி மாதிரி நடத்தணும்னு ஒருநாளும் நினைக்கல. இந்த வீடு அவளோட வீடுன்னு அவளே உணரணும்னுதான் ஆசை. நான் சோர்ந்து உட்கார்ந்திருக்கும்போதாவது, ‘அத்தை நீங்க உட்காருங்க, நான் பார்த்துக்கறேன்’ன்னு ஒரு வார்த்தை சொன்னாலே போதும். அந்த அக்கறைதான் எனக்கு தேவை…” என்று பவித்ரா மெதுவாக சொன்னாள்.
“இப்போதெல்லாம் எல்லாரும் பசங்களையும் பொண்ணுங்கையும் ரொம்ப பாதுகாப்பாக வளர்க்கறாங்க நர்மி. அது தப்பில்லை. ஆனா வாழ்க்கையில இருக்கிற சின்னச் சின்ன பொறுப்புகளைக் கூட அனுபவிக்க விடாம வளர்த்தா, நாளைக்கு குடும்பம் என்ற இடத்தில் எப்படி பொருந்திப் போகணும்னு தெரியாம தவிக்கிறாங்க…” என்று கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
“ஏன் அண்ணி, அவங்க அப்பா அம்மா கிட்ட இதப்பத்தி பேசினீங்களா?”
“சொன்னேன் நர்மி. ஆனா அவங்க ‘நம்ம காலம் வேற அக்கா’ன்னு ஒரு வார்த்தையில் முடிச்சுட்டாங்க.
எனக்கும் ரெண்டு நாளா காய்ச்சல். ஆனா எல்லா வேலைகளையும் நானே பார்த்தேன். இன்னைக்கு முடியல. ஆனா அவங்களுக்கு நான் ஒரு பொருட்டே இல்லை.”
“என்ன அண்ணி இப்படி இருக்காங்க? பொண்ணுங்க படிச்சு சம்பாதிச்சா மட்டும் போதாது. குடும்பத்தை நிர்வகிக்கவும் கற்றுக்கொடுக்கணும்,” என்றாள் நர்மதா.
பேசிக்கொண்டே பாத்திரங்களை கழுவி, சமையலறையை சுத்தம் செய்து வைத்தாள். மிக்ஸியில் தேங்காய் சட்னி அரைத்து, இட்லி ஊற்றி வைத்து விட்டு பவியிடம் வந்து அமர்ந்தாள்.
“அண்ணி, உங்களுக்கு ஞாபகம் இருக்கா உங்க கல்யாணத்தப்ப நான் பத்தாவது படிக்கிறேன். அப்ப இருந்து எனக்கு நீங்க எத்தனை வேலைகளை சொல்லிக் குடுத்து இருக்கீங்க.
அப்ப அண்ணா, அப்பா எல்லாம் ‘இப்ப எதுக்கு? தேவைப்படும் போது பார்த்துக்கலாம்’ன்னு சொன்னப்ப…
‘தம்பி, நீ சும்மா இருடா. ஆம்பள டெல்லிக்கே ராஜாவானாலும் பள்ளிக்குப் பிள்ளைதான். ஒரு பொண்ணு பார்லிமெண்டுக்கே போனாலும் குடும்பத்தை நிர்வாகம் பண்ண தெரிஞ்சா மட்டும் அந்த வீட்டுக்கு அவ மகாராணி. அம்மா வீட்டில் இளவரசியா இருக்கலாம். ஆனா புகுந்த வீட்டில் பொறுப்பா குடும்பம் நடத்த தெரிஞ்சா தான் மகாராணியா வாழ முடியும்’ன்னு அம்மா சொல்வாங்க இல்ல அண்ணி?”
பவித்ரா அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள்.
“நீங்க கவலைப்படாதீங்க. நீங்க ஆரோக்கியமா இருந்தாத்தான் இந்தக் குடும்பத்துக்கு நல்லது. சாப்பிடுங்க,” என்று இட்லியை தட்டில் வைத்து கொடுத்தாள்.
“எப்பவும் போல நீங்க இருங்க. அதிகமாக அலைய வேண்டாம்.”
சாப்பிட்டு முடித்ததும் அவளது கணவனும் மகனும் வந்து விட, நர்மதா வீட்டிற்கு கிளம்பினாள். ஆனால் அந்தக் குழப்பம் மட்டும் அவள் மனதை விட்டு அகலவில்லை.
இது நடந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஓடி விட்டன.
ஒருநாள் பவித்ரா போன் செய்து, “நர்மி, பூர்ணாவோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. ஒரு வாரம் ஹாஸ்பிடல்ல இருந்துட்டு இப்பத்தான் வீடு திரும்பி இருக்காங்க. வா, நாம போய் பார்த்துட்டு வரலாம்,” என்று அழைத்தாள்.
அங்கே சென்றபோது, பூர்ணாவும் அவளது தங்கையும் தாயை கவனிப்பதா, வீட்டை பார்த்துக்கொள்வதா என்று திணறிக் கொண்டிருந்தனர்.
நர்மதாவும் பவியும் வீட்டை சுத்தம் செய்து, தேவையான உணவை சமைத்து கொடுத்தனர். பூர்ணாவை அங்கேயே தங்கி இருக்கச் சொல்லிவிட்டு கிளம்பினர்.
அதன்பிறகு ஒரு வாரம் ஹோட்டல் சாப்பாட்டில் சமாளித்தார்கள். அதுவும் ஒத்துக்கொள்ளாமல் போக, பூர்ணாவின் தூரத்து உறவு பாட்டியை வரவழைத்து பார்த்துக் கொண்டனர்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பூர்ணா அம்மாவையும் அப்பாவையும் அழைத்துக் கொண்டு பவித்ரா வீட்டிற்கு வந்தாள்.
கிளம்பும் முன், பூர்ணாவின் அம்மா பவித்ராவின் கைகளை பிடித்துக் கொண்டு மெதுவாக சொன்னார்:
“அக்கா… வாழ்க்கைக்கு படிப்பு மட்டும் போதாதுன்னு இப்பத்தான் நாங்க உணர்ந்தோம். குடும்பத்தை நடத்தற பொறுப்பையும், அடுத்தவரை கவனிக்கற மனசையும் குழந்தைகளுக்கு சொல்லித் தரணும். நாங்கள் அதை தவற விட்டோம். இந்த சில மாதங்கள்ல எவ்வளவு கஷ்டம் இருக்குன்னு பூர்ணாவும் புரிஞ்சுக்கிட்டா… நாங்களும் புரிஞ்சுக்கிட்டோம்.”
அதைக் கேட்ட பவி எதுவும் பேசாமல் அமைதியாக சிரித்தாள்.
பூர்ணா அமைதியாக தலை குனிந்தாள்.
நர்மதா மனதில் இருந்த குழப்பம் தீர்ந்து நிம்மதியாக பூர்ணாவை தோளோடு அணைத்துக் கொண்டிருந்தாள்.
அந்தக் கணம்…
பவித்ராவின் மனதில் இருந்த பாரம் மெதுவாக இறங்கியது.
– மே 2026, மங்கையர் மலர்.
![]() |
பெயர்: கல்பனா ராஜகோபால்வயது: 56எழுதிய சிறுகதைகள்: 25பிரசுரமானவை: 12 கல்கி/மங்கையர் மலர் ஆன் லைன்: 11 சிறுகதைகள் தளம்: இங்கே படிக்கலாம் ஆரம்ப எழுத்தாளரான நான் கடந்து ஒரு வருட காலமாக கட்டுரைகள் மற்றும் கதைகளை கல்கிக்கு எழுதி வருகிறேன்.மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
பாசத்தின் நிழலில்!
கல்பனா ராஜகோபால்
August 22, 2026
ஒரு ஆணின் மௌனம்!
கல்பனா ராஜகோபால்
August 19, 2026
கல்யாண டைரி!
கல்பனா ராஜகோபால்
July 8, 2026
