மாதுரியம்
கதையாசிரியர்: சந்திரா மனோகரன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 31, 2026
பார்வையிட்டோர்: 138

நேதாஜி வீதி வெறிச்சோடிக் கிடந்தது.
பஞ்சாபகேசனுக்கு வியப்பாக இருந்தது.பெரும்பாலும் எல்லோரும் டூர் போயிருப்பார்கள். தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் விடுமுறை. ஊட்டி, கொடைக்கானல், கொல்லிமலை, ஏற்காடு, மூணாறு…
அனுபவி ராஜா அனுபவி…!
நாங்கதான் வயசான கழுதைக …ம்ம்.. நானுந்தான் இருக்கேனே ஊட்டுக்காரியோட அல்லாடிட்டு… ஒரே ஒரு பிள்ளை. அவனும் ஊர் பேரு தெரியாத ஒருத்தியோட ஆஸ்திரேலியாவிலே இருக்கான்.. நல்லாவே ஜீவிக்கிறாங்க.. நீடூழி வாழட்டும்… பிள்ளை வருத்தம் பெத்தவங்களுக்குத்தானே தெரியும்…
குவளை நிறைய தண்ணீரை ஒரு மிடக்கு குடித்துவிட்டு, குடையை எடுத்த பஞ்சாபகேசன் லொட் லொட்டென்று தரையில் ஊன்றியவாறு வாசலுக்கு வந்தார்.
படுக்கையறையிலிருந்து நான்கு முறை லொக் லொக் கென்று இருமல் ஒலி கேட்டது.
கெழவி ரொம்பப் போராடுகிறாள். பொட்டுன்னு போய்ட்டாள்னா என்ன பண்றது.. பக்கத்திலே யாரு இருக்காங்க.. வெறுப்புடன் திரும்பினார்.
பின்னால் யாரோ அவர் பிடரியைத் தொட்டார்கள்.
வெடுக்கென்று திரும்பியவர் “அட….நீ எப்ப வந்தே!” என்று வியந்தார்.
எதிரே கங்கா நின்றுகொண்டிருந்தாள்.
“நேத்து தாத்தா..கௌரி பாட்டி எப்படியிருக்காங்க..?”
“அவதா படுக்கையே கதின்னு கெடக்குறா..முக்குல இருக்குற மெடிக்கல்ஸ்க்கு போய்ட்டிருக்கறேன் கங்கா”
“மருந்துதானே.. அப்புறம் வேறென்ன வேணும்..முதல்லே பாட்டியை பாத்துட்டு.. நானே போயி வேணுங்கறதை வாங்கிட்டு வர்றேன்” என்றாள் கங்கா.
கங்கா இதே வீதியில் கோடி வீட்டில் இருக்கிறாள். அவளுடைய அப்பாவும் அம்மாவும் கொஞ்சம் ரிஸர்வ்ட் டைப். இவள் அப்படியில்லை. வருவாள் போவாள் பேருதவியாய் இருப்பாள்.
ஆறு மாதங்களுக்கு முன்புதான் அவளுக்கு திருமணம் ஆயிற்று.
டாக்சி வைத்து பஞ்சாபகேசனையும் கௌரி பாட்டியையும் கல்யாணத்துக்கு கங்கா அழைத்துக் கொண்டு போனாள்.
இருவருக்கும் தன் சொந்த மகளை புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கிற உணர்வு. வேறென்ன செய்ய முடியும்? பெண்ணென்று பிறந்த போதே புருஷனும் பிறந்திருப்பானே!
பஞ்சாபகேசனுக்கு கேட்கலாமென்று தோன்றியது.கேட்டும் விட்டார்.
“ஏம்மா..தம்பி வந்திருக்குதா?”
“இல்லை தாத்தா..”
சிறிது நேரங் கழித்து-
“தம்பியும் வரமாட்டார். நானும் போகமாட்டேன்!” என்றாள் கங்கா பூடகமாக.
‘அப்ப..நீயும் வாழாவெட்டிதானா?’ மனதில் நினைத்துக் கொண்டார்.
ஏன் அப்படி?
கங்கா வீட்டுக்கு எதிர்ப்புறம் அப்படியொரு கேஸ்.. போன மாதம் தான் வந்து செட்டில் ஆகியிருந்தது! பிரச்சனை நீதிமன்றம் வரை போயிருப்பதாகக் கேள்வி.
ஆக மொத்தம் இந்தத் தெருவே….
பஞ்சாபகேசன் குலுங்கினார்.
ஒரே மகன் மோகனை நினைத்து நினைத்து வெதும்பினார். கௌரி படுக்கையில் விழுந்ததற்கு ஒருவிதத்தில் அவனும் காரணம். அவனுக்குஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்தது.
பஞ்சாபகேசன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்.
“இங்கயே ஒரு வேலையைப் பாரேன்..அப்புறம் எங்களை யாரு பார்ப்பா… நல்லா யோசிச்சு ஒரு நல்ல முடிவெடு…”
ஊகூம்.கேட்கவில்லை.
“இப்போ நல்லாத்தானே இருக்கறீங்க..கொஞ்ச நாள் சம்பாதிச்சுட்டு அப்புறம் வந்தர்றேன்”
அவன் ஆஸ்திரேலியாவில் சிட்னிக்குப் போய் இரண்டு வருடம் ஆகிவிட்டது. ஒரு வெள்ளைக்காரியுடன் மோதிரம் மாற்றிக் கொண்ட விபரத்தை அவன் கைப்பேசியில் சொன்னதை இருவரும் முதலில் விளையாட்டாக எடுத்துக் கொண்டார்கள். அதற்கு சாட்சி அவனுடன் பணிபுரியும் இரண்டு இந்தியர்கள். அப்புறம் அதை ஏற்றுக் கொள்ளாத கௌரியை நொய்மை பற்றிக்கொண்டது.
ஆனால் காலத்தை விட சிறந்த மருந்து வேறொன்றுமில்லை.
மோகன் இந்தியா திரும்புகிறான்.கௌரி மெல்ல எழுந்து நடமாட ஆரம்பித்து விட்டாள்! கங்காவுக்கு ஒரே ஆச்சரியம்.
அயல்நாட்டு மனைவியுடன் மோகனை வரவேற்பதற்கு அந்த வீதியே ஆயத்தமாயிருந்தது.
ஆனால் நடந்தது…? அதுவும் காலத்தின் விளையாட்டுதான்!
மோகன் மட்டும் தனியாக சூட்கேசுடன் வந்து சேர்ந்தான்.
இரவு அவன் சொன்னது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
“அவ வர மாட்டா … என்னை விட்டுட்டு போயி மூணு மாசம் ஆகுது…இனி நானும் அங்கே போக மாட்டேன்.. அவ இல்லாம எனக்கு அங்கு வேலை செய்யப் பிடிக்கலே.. சென்னைலே அதே ஆபீஸ் இருக்கு…இங்க சேரப் போறேன்…இனிமேல் உங்களோட தான் இருப்பேன்!”
மாதுரியமான நாட்கள்!
மோகனும் கஙகாவும்பழகுவதும்..சிரித்து மகிழ்வதும் கரங்கோர்த்துத் திரிவதும்…
பஞ்சாபகேசனுக்கு மெல்லப் புரியத் தொடங்கியது.
இனிமேல் கங்கா மகள் இல்லை!
![]() |
சந்திரா மனோகரன், M.A.,M.Th.,Dip.in JMC, ஈரோடு. கண்காணிப்பாளர் (வேளாண்மை பொறியியல் துறை) பணி நிறைவு. இதுவரை: 45 நூல்கள் (சிறுகதை/கவிதை/கட்டுரை/புதினம்/மொழிபெயர்ப்பு உட்பட) பல்வேறு சிற்றிதழ்களில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தது - சிகரம் இதழ் உட்பட. தற்போது அருளமுது இதழ் ஆசிரியர். அருளமுது பதிப்பக வெளியீட்டாளர். குறிப்பிடத்தக்க சில விருதுகள்: தமிழ் நாடு அரசு - நற்றமிழ் பாவலர் விருது - 'அசையும் இருள் 'கவிதை நூலுக்கு. பாரத ஸ்டேட் வங்கி…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கனவுகளை விதைத்தல்
திசேரா
August 31, 2026
காற்றில் கரைந்தாயே என் தேவதையே…
காஞ்சி.தங்கமணி
August 31, 2026
எனக்கெனவே… நீ… கிடைத்தாய்!
ஆர்.மணிமாலா
August 31, 2026
