விளம்பரத்தில் வாங்கிய கதை
கதையாசிரியர்: இந்திரா பார்த்தசாரதி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: August 6, 2026
பார்வையிட்டோர்: 64
(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ராஜுவை நான் இவ்வளவு சீக்கிரமாக எதிர் பார்க்கவில்லை. டிஃபன்ஸ் காலனியை எட்டு மணிக்கு அடைய வேண்டுமென்றால், அவன் கரோல்பாகிலிருந்து ஏழு மணிக்குப் புறப்பட்டிருக்க வேண்டும்.
நான் படுக்கையிலிருந்தவாறு பேப்பர் படித்துக் கொண் டிருந்தேன்.
“மை காட்…இன்னுமா எழுந்திருக்கலே…?” என்று கேட்டுக் கொண்டே வந்தான் ராஜு.
“என்னடா காலங் காத்தாலே வந்து நிக்கறே?” என்று வினவியவாறு நான் கட்டிலில் உட்கார்ந்தேன்.
ராஜு ஒரு நாற்காலியில் அமர்ந்தான். நிதானமாக ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டான்.
“எழுந்திர்றா, லோடஸ் ஈட்டர்…உலகத்தைப் பாரு எவ்வளவு பிரகாசமா இருக்கு…” அவன் நாற்காலியில் பின் புறமாகச் சாய்ந்து கொண்டான்.
பத்மா வந்து என் கால்களைக் கட்டிக் கொண்டாள்.
“அவர் ஏற்கனவே சுறுசுறுப்பு. நீ வேற வந்து கொஞ்சு… ” என்று சொல்லிக்கொண்டே ராஜுவிடம் காப்பி தம்ளரை நீட்டினாள் அம்புஜம்.
“எல்லாம் நீங்க கொடுக்கிற இடம். என் மனைவிக்கு நான்தான் தினம் காப்பி போட்டுக் கொடுக்கிற வழக்கம்” என்றான் ராஜு.
“நிஜமாவா?” என்று கேட்டாள் அம்புஜம். ராஜுவை எரிச்சலுடன் நான் பார்த்தேன். அவன் எப்பொழுதுமே இப்படித்தான். என்னுடைய பால்ய நண்பன் அவன். பள்ளிக்கூடத்தில் ஒன்றாய் படித்தோம். அவன் வேலை காரணமாக பம்பாய் போனான். பள்ளிக்கூடத்திலிருந்த போதுகூட என் அம்மாவிடம் வந்து, தான் தன்னுடைய அம்மாவுக்குச் செய்த வீட்டு வேலைகளைப் பற்றியெல்லாம் அளப்பான். பம்பாயில் இருபது வருஷங்களாக வேலை பார்த்து வந்த அவனை டில்லிக்கு மாற்றி விட்டார்கள்.
கரோல்பாக்கில் வீடு பார்த்துக் கொடுத்தேன். இன்னும் அவன் மனைவி பம்பாயிலிருந்து வரவில்லை. அதற்குள் என்னுடைய மனைவியிடம் அளக்க ஆரம்பித்து விட்டான்!
“ஏண்டா என்னை பஸ்பமாக்கப் போற மாதிரி பார்க்கறே?” என்று கேட்டான் ராஜு.
“இந்த மாதிரி சமையலறையிலே பிரபலமாயிருக்கணுங்கிற ஆசை இன்னுமா உன்னை விடல்லே? அப்போதெல்லாம் எங்க அம்மாகிட்ட வந்து ஏதாவது சொல்லிண்டு என் கழுத்தை அறுப்பே. இப்போ…ஏற்கனவே இவளும் பைத்தியம்…”
“ஆமாம்… பைத்தியமா இருக்கிறதினாலேதான் நீங்க ஓட ஓட விரட்டறேள். இல்லாட்டா…” என்று அவள் நிறுத்தினாள்.
“இல்லாட்டா?…சொல்லேன்.”
நான் கொடியில் உலர்த்தியிருந்த டவலை எடுத்துக் கொண்டே கேட்டேன்.
“எதிர் வீட்டுப் பஞ்சாபிக்காரி மாதிரி ‘டைவோர்ஸ்’ பண்ணியிருப்பேன்…” என்று சொல்லிவிட்டு சிரித்தாள் அம்புஜம்.
“எதிர்த்த வீட்டுப் பஞ்சாபிக்காரி கணவனை ‘டைவோர்ஸ்’ பண்ணப் போறேன்னு சொல்லிண்டே சிரிச்சாளா? பண்ணிட்டுச் சிரிச்சாள். சொல்றபோதே நீ சிரிக்கிறே. எனக்கு ஒண்ணும் நம்பிக்கையில்லே நீ பண்ணுவேன்னு…”
“பார்த்தேளா உங்க சிநேகிதரை…நம்பிக்கை இல்லையாம்!… ஆறு வயசிலே குழந்தையாச்சு, இன்னும் பேசற பேச்சைப் பாருங்கோ…”
அம்புஜம், ராஜு குடித்துக் கீழே வைத்த தம்ளரை எடுத்துக் கொண்டே அவனிடம் சொன்னாள்.
“நீங்க கொடுக்கிற இடம்’னு அவன் ஆரம்பிப்பான். பேச்சு இப்படியே கீறல் விழுந்த கிராமபோன் மாதிரி போயிண்டே யிருக்கும். முடிவு இருக்காது” என்றேன்.
பத்மா என் தோள்களில் ஏறிக்கொண்டாள். “அப்பா உப்பு மூட்டை…”
“கீழே இறங்குடி… ஆறு வயசாறது. பாப்பாவோ நீ உப்பு மூட்டை தூக்கிண்டு போக” என்று அதட்டினாள் அம்புஜம்.
“இன்னிப் பேப்பர்லே ஒண்ணு பார்த்தியாடா?” என்று கேட்டான் ராஜு.
“என்ன?” குழந்தை பத்மா என் தோள்களை அழுத்தினாள். நான் கீழே குனிந்து கொண்டேன்.
“உங்க டிஃபன்ஸ் காலனியில்தான் ஏ-337லே சோபா செட், இன்னும் நிறையஃபர்னிச்சர் விலைக்குத் தராளாம்.அதுக்குத்தான் இவ்வளவு சீக்கிரம் கிளம்பி வந்திருக்கேன் நான்…”
ராஜு பம்பாயிலிருந்து புறப்பட்ட போது எல்லாச் சாமான்களையும் விற்று விட்டு வந்திருக்கிறான். டில்லியில் எல்லாம் புதிதாக வாங்கியாக வேண்டும்.
“சரி, போய்ப் பார்ப்போம்” என்றேன் நான்.
“வேறே என்ன சாமான் இருக்காம்?” என்று கேட்டாள் அம்புஜம்.
நான் கீழே விட்டெறிந்த பேப்பரை எடுத்து விளம்பரம் வந்த பக்கத்தைத் தேடிக் கண்டுபிடித்து. வாசிக்க ஆரம்பித்தான் ராஜு
“நவீன சோபா செட், திவான், நாற்காலிகள், டைனிங்டேபிள், டபிள் காட், ட்ரெஸ்ஸிங் டேபிள், ஆயில் பெயிண்டிங்குகள், ரேடியோகிராம்…’
“சைக்கிள்?” என்று கேட்டாள் பத்மா.
‘ஆறு வயசுக்குள்ளேயே உன் பொண்ணுக்கு சைக்கிள் வேணுமாம்…அதுவும் ‘இம்போர்டட்’ வேணுமாம்மா?…” என்று கேட்டான் ராஜு.
“ஆமாம்…” என்று தலையசைத்தாள் பத்மா. ராஜு சிரித்தான்.
”இம்போர்டட், இம்போர்டட்னு போகிற மவுசைப் பார்த்தால், இன்னும் கொஞ்ச நாள்லே குழந்தைகள், ‘இம்போர்டட் மம்மி’ வேணும்ணு கேட்க ஆரம்பிச்சுடும்…” என்றேன் நான்.
“சரி சமர்த்தாப் பேசினது போதும். அவரோட சீக்கிரம் கிளம்புங்கோ…” என்றாள் அம்புஜம்.
பத்மா என் தோள்களுக்கு விடுதலை அளித்தாள். நான் பல்லை விளக்கிவிட்டு திரும்பினேன். ராஜு என் புஸ்தக அலமாரி அருகே சென்று நின்று கொண்டிருந்தான். அவன் குறிப்பாக எதுவும் பார்த்ததாகத் தெரியவில்லை. புஸ்தக அலமாரிக்கு மேல், சுவரில் இரண்டு பல்லிகள் ஒன்றோடொன்று சண்டையிடலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டு வெறும் முஸ்தீபுகளுடன் நின்றன. ஒருவேளை அதைப் பார்த்துக் கொண்டு அவன் நின்றிருக்கலாம். வாழ்க்கையில் வெற்றியடைந்த மனிதன் அவன். புஸ்தகங்களைப் பற்றி அவனுக்கு என்ன கவலை?…
“நீ புஸ்தகம் படிக்கிறதுண்டா?” என்று கேட்டவாறு நான் அவனோடு புறப்படுவதற்கு ஆயத்தமாக சட்டையை மாட்டிக் கொண்டேன்.
“உண்டு… சில சமயம் தூக்கம் வரல்லேன்னா…”
“ஏன், நல்லமெத்தையா வாங்கிண்டாத் தூக்கம் வரது! புஸ்தகம் எதுக்கு?”
“என்னதான் எம். எம். ஃபோம் மெத்தையாயிருந்தாலும், சில நாவல் படிக்கிறபோது வர்ற தூக்கம், மெத்தை தராது” என்று சொல்லிவிட்டு சிரித்தான் ராஜு
“அங்கே ஒரு புத்தக அலமாரி இருக்கான்னு பார்க்கணும்” என்றேன் நான்.
“ஆமாம், ஒரே புத்தக அலமாரிகளாக, வாங்கி அடுக்குங்கோ. வேறே வேலை என்ன? ஒரு நல்ல டிரஸ்ஸிங் டேபிள் கிடையாது” என்றாள் அம்புஜம்.
நான் ‘பாண்டை’ எடுத்துப் போட்டுக் கொண்டேன் பத்மா ஷுவைத்தேடிக் கொண்டு வந்தாள்.
“சரி, போகலாமா?” என்று ராஜுவைக் கேட்டேன். அவன் அம்புஜத்திடம் சொன்னான்; “நான் நல்ல டிரஸ்ஸிங்டேபிள் இருந்தால் பார்க்கிறேன்…”
“நீங்க பாருங்கோ அவர் பார்க்க மாட்டார்…”
பத்மா வாசலுக்கு ஓடி வந்து, ‘டாட்டா’ சொன்னாள்: “என்ன நம்பர் சொன்னே!” என்று ராஜுவைக் கேட்டேன்.
“ஏ-337”
“மைதானத்துக்கு அந்தப்புறம் இருக்கு. மைதானத்து வழியாகப் போயிடலாம், வா…”
மைதானத்தில் ஒரு பெண்மணி கார்ஓட்ட கற்றுக் கொண் டிருந்தாள்.ஓர் அல்சேஷியன் கோபத்துடன் துரத்துவதுபோல் கார் எங்களை நோக்கி வேகமாக வந்தது.
அவள் பக்கத்திலிருந்த கணவர் கண நேரத்தில் பாய்ந்து அந்தப் பெண்மணிக்கு ஏற்படவிருந்த பாவத்தினின்றும் அவளைக் காப்பாற்றினார்.
“மன்னிக்கவும்… என் மனைவி கார்விடகற்றுக் கொள்ளு கிறாள்…” அவர் காரினின்றும் தலையை நீட்டி அசட்டுச் சிரிப்பு சிரித்தார். அவள் காருக்குள் மிரள மிரள உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
“டில்லியில் இருக்க வேண்டும்னா இன்ஷ்யூரன்ஸ் இன்னும் கூடக் கட்டணும் போலிருக்கே…?” என்றான் ராஜு.
“இப்போ எவ்வளவுக்குக் கட்டறே?”
‘நாற்பதினாயிரம். ஆக்ஸிடெண்ட் பெனிஃபிட்டு முண்டு.” ”அட, கடவுளே! எண்பதினாயிரமாச்சேடா… முன்னாலே சொல்லியிருந்தியானால் அந்தக் கார்லே உன்னைப் பிடிச்சுத் தள்ளியிருப்பேனே!”
“எண்பதினாயிரம் ஒரு பெரிய பணமா? போறபோது, ‘சம்பாதிச்சான் நாலு லட்சம் வச்சுட்டுப் போனான்’னு எல்லாரும் சொல்ல வேண்டாமா?”
”பணம், பணம்னு ஏன் அடிச்சுக்கறே? எங்கப்பா வயத்தை ஒடுக்கி இராக் கண் முழிச்சு பைசா பைசாவா சேர்த்தார். என்ன பிரயோசனம்?”
“எல்லாம் உனக்காகத்தான்…”
“எனக்காக மட்டுமல்ல. மனுஷனுடைய அடிப்படையான பாதுகாப்பு உணர்ச்சி. ‘எதிர்காலம், மரணம்’ங்கிறவற்றையெல்லாம் ஒண்ணோட ஒண்ணு சம்பந்தப்படுத்திப் பார்க்கிறதினாலே ஏற்படற பயம்.”
ராஜுகாதுகளைப் பொத்திக் கொண்டான். “ஆரம்பிச்சுட்டியா, உன்னோட பிலாஸபி-மாங்கரிங்கு?”
மைதானத்தைக் கடந்து வீதிக்கு வந்தோம். மூலை வீடு ஏ-337. சிரிப்பினாலும் குறும்பினாலும் செய்யப்பட்ட சின்னக் கண்கள். அந்தக் குழந்தையை அப்படியே தூக்கிக் கொஞ்ச வேண்டும் போலிருந்தது. ஞாயிற்றுக் கிழமையாதலால் வீட்டின் முன்புறத்தி லிருந்த தோட்டத்து முகப்பில் பேப்பரைப் போட்டுக்கொண்டு வாட்டசாட்டமான ஒருவன் கூடை நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். அவன் மீசையைப் பார்த்தால் நான் அந்தக் குழந்தையைக் கொஞ்சுவது அவனுக்குப் பிடிக்காதுபோல் தோன்றியது.
“எவ்வளவு அழகான குழந்தை!” என்றான் ராஜு.
நான் அவனை மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தேன்.
“எதுக்குடா அப்படிப் பார்க்கிறே?”
“இந்த ரசனையை எந்த ‘பாங்கி’லும் போட முடியாதேன்னு பார்க்கிறேன். என்ன பண்ணப்போறே?”
ராஜு சிரித்தான். “நீதான் அழகை ரசிப்பதற்குப் பொறந் தவன்னு உன் அபிப்பிராயம்…’
ஏ-337. மொட்டைமாடியுடன் கூடிய ஓர் அழகிய வீடு இந்த வீட்டில் சனிக்கிழமை இரவுகளெல்லாம் கோலாகலமாக இருக்கும். நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். மென்மையான உள்ளடங்கிய ஐரோப்பிய இசை. இளமையையும் உற்சாகத்தையும் தோளிலும் பாவனையிலும் சுமந்த ஆண்களும், பெண்களும் அந்தர்யாமியாக நிலவிய பல்வகை வண்ண வெளிச்சத்தில் நடனமாடும் காட்சி… கையிலிருந்த பையில் வெண்டைக்காயும் வெங்காயமும் கனக்க, நான் இதை எவ்வளவு தடவை கண்டிருக்கிறேன்…. ! ஃபர்னிச்சர்களை விற்கும்படியாக என்ன ஏற்பட்டுவிட்டது இந்த வீட்டில் உள்ளவர் களுக்கு?
வாசலிலிருந்த ‘காலிங் பெல்லை’ அழுத்தினோம். உள்ளே சங்கீத ஸ்வரங்கள் சிதறின.
சிறிது நேரத்துக்குப் பிறகு ஒருவர் வந்து கதவைத் திறந்தார். அவருக்கு நாற்பது வயதிருக்கலாம். தலையில் அங்குமிங்கும் மினுமினுப் பூச்சிகள். மீசை ஒரேயடியாக நரைத்திருந்தது. ‘ஸ்லீப்பிங் சூட்’ அணிந்திருந்தார்.
“எஸ்…?”-அவர் புருவத்தை உயர்த்தினார்.
“இங்கு…பர்னிச்சர்ஸ்..” என்று சொல்லி விட்டு என்னைப் பார்த்தான் ராஜு.
”உள்ளே வாருங்கள்…”
‘டிராயிங்- டைனிங் ஹால்’…பெரிதாக இருந்தது ஏராளமான சாமான்கள் அங்கு இருந்தன.
அந்த சோபா செட்டின் வண்ணம் நமக்குக் கனவில் தான் தோன்றும்.ஓர் இனிய சொப்பணத்தை நூலில் இழைத்திருந்தான் கலைஞன். அதைப் பார்த்துக் கொண்டே நான் நின்றேன்.
“என்ன விலை?” என்று கேட்டான் ராஜு. அவன் கேள்வி அப்பொழுது அபஸ்வரமாக ஒலித்தது எனக்கு.
அவர் விலையைச் சொன்னார். ராஜு ஆதாரத்துக்காக என் கையைப் பற்றிக் கொண்டான்.
“என் தம்பி இவை அனைத்தையும் ‘டிஸைன்’ செய்தான். மூன்றுவகையான திவான்…இதன் வடிவத்தைப் பார்த்தீர்களா? உட்கார்ந்து பாருங்கள். குட்…எல்லாருமே இப்படித்தான் சொன்னார்கள். சொர்க்கத்தை இவ்வுலகத்திலேயே அமைத்துக் காட்ட விரும்பினான் என் தம்பி. அதோ பாருங்கள். ‘டாய்லெட்’ வைக்கும் ஸ்டாண்ட். அந்தக் கண்ணாடி பெல்ஜியத்திலிருந்து வந்தது. அதில் வரையப்பட்டிருக்கும் படங்களைப் பார்த்தீர்களா? என் தம்பி பாரீஸில் ஓவியம் படித்தவன். அதற்கு என்ன விலை என்னால் சொல்ல முடியும்?”
ஆவேசம் வந்தவர்போல் அவர் சொல்லிக்கொண்டே போனார். “இப்படி உள்ளே வாருங்கள்…” அவரைப் பின் தொடர்ந்தோம். ‘ஸீலிங்’கிலிருந்து ஒரு பிரும்மாண்டமான கோவில் விளக்குத் தொங்கியது. பல்வகையான நிறங்களுடன்கூடிய கண்ணாடி ஸ்லைடுகளாலாகிய கூண்டுக்குள் வைக்கப்பட்டிருந்தது. அவர் ஒரு ‘ஸ்விச்சை’த் தட்டினார். வானவில் அறைக்குள் சிதறியது.
“என் தம்பி அடிக்கடி சொல்லுவான், மெடீவல் காலங்களில் ரோமன் காத்தலிக் பாதிரிகளுக்கு ஏற்பட்ட ‘மிஸ்டிக்’ அனுபவங் களுக்குக் காரணம் இந்த வண்ண விளக்குகள் தாமென்று. உங்களை வேறு உலகத்துக்கு அழைத்துச் செல்லவில்லை? இப்பொழுது பாருங்கள், என் தம்பியின் ‘ஆயில் பெயிண்டிங்’களை…”
எனக்கு என்னவோ செய்தது. என்னவென்றுதான் புரியவில்லை. திடீரென்று நடைமுறை உலகம், என் பார்வையினின்றும் மறைந்தது. துன்பம் என்பதை எதிர்மறையாகக் கொள்ளாத, தன்னளவில் தானே ஆதியாகவும் எல்லையாகவும் நின்று, குணம் என்றும் வரையறுக்கப்பட முடியாத இன்பமே பிரக்ஞையாக மாறினேன்… அந்த நிலையில் எத்தனை நேரம் அப்படியே செயலற்று நின்றேன் என்று எனக்குத் தெரியாது.
ராஜுவின் குரல் என்னை மீண்டும் இவ்வுலகுக்குக் கொண்டு வந்தது.
“இந்த விளக்கு என்ன விலை?”
ராஜுவை அடித்து நொறுக்கி விடலாம் போலத் தோன்றியது. ஆனால்…ஆனால்…ராஜுவைச் சொல்லி என்ன பிரயோசனம்? உலகத்தில் பொருள்களின் மதிப்பை வேறு எந்த பாஷையில் சொல்ல முடியும்?
“அவரைக் கேளுங்கள்” என்னை சுட்டிக் காட்டிவிட்டு அவர் புன்னகை செய்தார்.
“எனக்குப் பணம் என்ற பாஷையில் சொல்லத் தெரியாது…” “எனக்குப் புரிந்தது” என்றார் அவர்.
“நான் வாங்கறாப்பலே ஒரு சாமான்கூட இல்லையே…” என்றான் ராஜு என்னிடம்.
“டைனிங் டேபிளைப் பாரேன்…”
‘ஃபார்மிகா டாப்’புடன் கூடிய நல்ல கருங்காலி மரத்தால் செய்யப்பட்டது மேஜை. ஆறு நாற்காலிகள்.
அவர் விலையை கூறினார். ராஜு என்னைப் பார்த்தான்.
“நல்ல டேபிள்தான்…விலை ஒண்ணும் அதிகமில்லை…” என்றேன் நான்.
எல்லாச் சாமான்களையும் ஏன் விற்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. தம்பியைப் பற்றி அவர் இறந்த காலத்தில் சொல்லிக்கொண்டே வந்தார். அப்படியென்றால் எனக்குக் கேட்பதற்குக் கூச்சமாக இருந்தது.
“போன மாசம்தான் இந்த டேபிள் வாங்கினான் என் தம்பி. சொல்லப் போனால் வாங்கி இருபது நாட்கள்தான் ஆகிறது…” “உங்கள் தம்பி மாற்றலாகிப் போகிறாரா?” என்று கேட்டான் ராஜு.
அங்கிருந்து தெரிந்த மற்றோர் அறையை சுட்டிக் காட்டினார் அவர். அங்கே ஒரு பெரிய புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. தீட்சண்யமான கண்களோடு குறுந்தாடியுடன் காணப்பட்ட ஓர் இளைஞரின் படம். அதற்குப் பூ மாலை போட்டிருந்தார்கள்.
“ஐ ஆம் ஸாரி…” என்றான் ராஜு.
“தாங்க்யூ…அவன் போகும்போது அவனுக்கு வயது முப்பத்திரண்டு. அவன் அப்படிப்போனதுதான் நல்லது என்று நினைக்கிறேன். ஏனென்றால், உலகத்தில் அழகைத் தவிர வேறு எதையும் பார்க்கக் கூடாது என்ற தீர்மானத்தோடு இளமை என்ற நிரந்தரத்வத்தில் மலர்களோடும் மணத்தோடும் வாழ விரும்பினான். வயோதிகம், காலம் மனிதனுக்கெதிராகச் செய்யும் சதி. இயற்கை,
மனிதனுடைய இலட்சிய நினைவுகளுக்குச் செய்யும் வஞ்சம், மூப்பு. என் தம்பி காலத்தையும், இயற்கையையும் ஏமாற்றி விட்டான்…”
நான் அந்தப் படத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். அந்தக் கண்களில் தெரிந்த ஒளி அந்த வீடு முழுதும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது போலிருந்தது. அவன் இதழ்க்கடையில் பூத்திருந்த புன்னகையின் நிழலை அவன் தூரிகைதான் சிறை செய்ய முடியும். இளமையிலேயே போய்விடுவோமோ என்ற நினைவு அவனுக்கு இருந்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. முகத்தில் அப்படியொரு பாவம், உலகத்தை அளந்து, நிர்ணயம் செய்து, தன் புன்னகை மூலம் அதற்கு அர்த்தம் கற்பித்துவிட்ட மாதிரி…
“எனக்கு இந்த டைனிங் டேபிளும், டபிள் காட்டும் வேண்டும்…” என்றான் ராஜு
“சரி… தயவுசெய்து விலையைக் குறைத்துக் கேட்காதீர்கள்…” எனக்கு அப்பொழுதுதான் தோன்றியது. எதற்காக இந்த அரிய கருவூலங்களை விற்கிறார்கள்? அவர் தம்பிக்குக் குடும்பம் கிடையாதா? இல்லாவிட்டாலும் தம்பியைப் பற்றி கண்களில் நீர் கசியப் பேசுகிற இவருக்குத் தம்பியின் கலை ஆர்வத்திலும், திறமையிலும் வியாபார ரீதியான ஈடுபாடுதானா?…
“கேட்கிறேன் என்று கோபித்துக் கொள்ளாதீர்கள். இவற்றை நீங்கள் எதற்காக விற்கவேண்டும்?” என்று கேட்டேன் நான்.
அவர் புன்னகை செய்தார். “நீங்கள் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். உட்காருங்கள், தேநீர் சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்…”
ராஜு என்னைப் பார்த்தான். செக் புஸ்தகத்தை எடுக்கப் போன கை பையிலேயே இருந்தது.
“எஸ்… தாங்க் யூ…” என்று சொல்லிக்கொண்டே ‘திவா’னில் உட்கார்ந்தேன். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். அந்த வீட்டில் அவரைத் தவிர வேறு யாரும் அப்பொழுது இருந்ததாகத் தெரியவில்லை. யார் தேநீர் போட்டுக் கொடுப்பார்கள்?…
அவர் உள்ளே போனார்.
“என்னடா,சாமானை வாங்கிண்டு போகலாம்னா, ‘டீ’ குடிக்க உட்கார்ந்துட்டியே…?” என்றான் ராஜு
“இந்தச் சூழ்நிலையிலே, வாழ்க்கையிலே ஒரு தரத்துக்கு மேலே இரண்டாந்தரம் இருக்க முடியாது. இன்னும் கொஞ்ச நாழிதான் இருப்போமே?” என்றேன் நான்.
‘இவர் தம்பி பேரென்ன என்று சொல்லலியே உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான் ராஜு.
”வாசல்லே, ‘விஜய்குமார் மேஹரா’ன்னு பேர் போட்டிருக்கு. ஒருவேளை அது இவர் தம்பி பேர்தானோ என்னவோ!…
ராஜுகேட்டான்: “செக் யார் பேருக்குக் கொடுக்கணும்?”
அப்போது என் இரத்தம் உறைந்துவிட்டாற் போன்ற உணர்வு – அறையின் மூலையில் ஒரு கருப்புப் பூனை எங்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தது. இறந்து போன அவர் தம்பி பூனையாக மாறிவிட்டானோ என்ற விசித்திரமான எண்ணம் அந்தப் பூனை கண் கொட்டாமல் பார்த்தது.
“என்னடா பார்க்கிறே?” என்று கேட்டான் ராஜு. அவனுக்கு சுட்டிக் காட்டினேன்.
“பூனை…”
“அதுதான் அவர் தம்பியோ?”
“டோன்ட் பி ஸில்லி…” என்றான் ராஜு. அவன் குரலில் இலேசாக பயம் தெரிந்தது.
நாயைக் கூப்பிடுவதுபோல் ராஜு மெதுவாக விசில் அடித்தான். பூனை கண்களை மூடிக் கொண்டது. ஆனால் அது எங்களைக் கண்டு பயப்படாமல் இருந்தது, எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
“அவர் எங்கே?… டீ அவர்தான் போட வேண்டும் போலிருக்கு. போடா உன்னாலே பாவம் அவருக்கு வீண்சிரமம்…” என்று சொல்லிக் கொண்டே எழுந்தான் ராஜு
”உள்ளே போய் நாங்க போறோம்னு சொல்லிவிட்டு வாயேன்…” என்றேன்.
அவர் அச்சமயம் தேநீர்க் கோப்பைகளுடன் வந்தார்.
ராஜு மறுபடியும் உட்கார்ந்தான். தேநீர் அருமையாக தயாரித்திருந்தார். “தேநீர் அருமையாக இருக்கிறது” என்றேன் நான். அவர் புன்னகையுடன்தலையசைத்து நன்றி கூறினார்.
”நான் செக்’காகத் தரலமா?” என்று கேட்டான் ராஜு.
“என் தம்பி உயிரோடு இருந்திருந்தால்…” என்று அவர் நிறுத்தினார்.
”நீங்கள் இவற்றையெல்லாம் விற்றிருக்க முடியாது…” என்றேன் நான்.
“எஸ்…நான் தான் அவனை கொலை செய்தேன்.”
எங்களுக்குத் தூக்கி வாரிப் போட்டது. ராஜு கை நடுங்கிக் கோப்பையை மேஜையின் மீது வைக்கும் சத்தம் பலமாகக் கேட்டது.
பூனை ‘மியாவ், மியாவ்…, என்று கத்திற்று. அது எழுந்து நின்று சோம்பல் முறிக்க உடம்பை நீட்டிக் கொண்டது.
“புஸ்ஸி சொல்ல வேண்டாம் என்கிறது” என்று சொல்லிக் கொண்டே அவர் அதைப் பார்த்தார்.
“எதை?” என்று நான் கேட்டேன்.
“என் தம்பியை நான்தான் கொலை செய்தேன் என்பதை. என் தம்பி இறந்த பிறகு எனக்கு எதற்கு இந்தப் பொருள்கள்? பார்த்தீர்களா? உங்கள் கண்ணெதிரிலேயே எல்லாப் பொருள் களையும் உடைக்கிறேன் ஆயில் பெயிண்டிங்களுக்கு தீ வைக்கிறேன். என் தம்பி செத்துப் போய்விட்டான், என் தம்பி செத்துப் போய்விட்டான்…”
அவர் அழ ஆரம்பித்துவிட்டார்.
எங்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ராஜு மெதுவாகக் கிசு கிசுத்தான்! “போகலாமா?”
அவர் கண்களை மூடிக் கொண்டார்.
”வா, போயிடலாம்…” என்றான் ராஜு. அவன் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது.
சூழ்நிலையில் ஏற்பட்ட மாறுதல் என்னை திகைக்க வைத்தது. இவருக்கு என்ன வந்து விட்டது ?… பைத்தியமா, அல்லது குடித்திருக்கிறாரா?…
கறுப்புப் பூனை வந்த அவர்காலை உராய்ந்து கொண்டு நின்றது. அவர் கண்களைத் திறக்கவில்லை.
நானும் போவதற்காக எழுந்தேன்.
அப்பொழுது வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. ஒரு வயதான பெண்மணி-அறுபது வயதிருக்கலாம்-காரிலிருந்து இறங்கி உள்ளே வந்தாள்.
பார்த்தாலே ராஜ வம்சம் என்று சொல்லும்படியான கம்பீரத் தோற்றம். தலை பளிச்சென்று வெளுத்திருந்தாலும் முகத்தில் முப்பது வயதுதானிருக்கும் என்று சொல்லும்படியான இளமை.
எங்கள் இருவரையும் ஒன்றும் புரியாமல் அவள் பார்த்தாள். கேள்விக்குறி புருவத்தில் ஏறியது.
“ஃபர்னிச்சர் வாங்க வந்தோம் …” என்றான் ராஜு
அந்தப் பெண்மணி அவர் அருகில் போய் உட்கார்ந்தாள். அவர் தலையை பரிவுடன் தடவினாள். “விஜய்… விஜய்….”
இவர்தான் விஜய் குமார் மெஹராவா?…
அவர் கண்களைத் திறந்து அவளைப் பார்த்தார். ”உள்ளே போய்ப் படுத்துக்கொள்.”
நாங்கள் அங்கு இன்னும் இருக்கிறோம் என்பதை அவர் மறந்துவிட்டார். எழுந்து உள்ளே சென்றார்.
‘பணம் கொடுத்து விட்டீர்களா?’
“இன்னும் இல்லை …” ராஜுவின் கை மறுபடியும் பையை நோக்கிச் சென்றது. நான் ராஜுவைப் பார்த்தேன். அவன் என்னைப் பார்த்தான். யார் இந்தப் பெண்மணி?
“நான் ஃபர்னிச்சர் வாங்க முடியவில்லையே என்று வருந்த வில்லை. ஆனால் ஒரு மேதையின் ஆற்றலைக் கண் குளிரப்பார்த்தோ மென்ற திருப்தி எனக்கு இருக்கிறது. இவருடைய தம்பியைப் போன்ற கலைஞர்கள் நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை தோன்றினால் போதும். மனித நாகரிகம் இதைப் பற்றிப் பெருமைப் படலாம்” என்றேன் நான்.
அவள் புன்னகை செய்தாள் “நீங்கள் ஓர் எழுத்தாளரா?” என்று கேட்டாள்.
“ஆமாம் …” என்றான் ராஜு.
“தயவு செய்து உட்காருங்கள். விஜய் குமார் என்னுடைய ஒரே பிள்ளை. அவனுக்குத் தம்பி கிடையாது.”
ஒரே நாளில் ஒரே சமயத்தில் இரண்டு மூன்று அதிர்ச்சிகளை ஜீர்ணம் செய்வது சாதாரணமான விஷயமல்ல.
“நீங்கள் எழுத்தாளர். ஓரளவு மனோதத்துவமும் தெரிந் திருக்கலாம். என் மகனை உங்களால் புரிந்து கொள்ள முடியுமென்று நினைக்கிறேன்…” என்று அவள் தொடர்ந்து கூறினாள்.
“உள்ளே தன்னுடைய தம்பி என்று சொல்லி அவர் காட்டிய படம் யாருடையது?” என்று கேட்டான் ராஜு.
”உயிரோடு இருக்கிற யாருடைய படமுமல்ல அது. விஜய் தானாக வரைந்து எடுத்த புகைப்படம் அது.’
“விஜய்தான் கலைஞரா? அப்படியென்றால் ….” – எனக்கு மேலே என்ன சொல்வது என்று விளங்கவில்லை. அப்படியே நிறுத்தினேன்.
“அப்படியென்றால், அவனுடைய தம்பியைப் பற்றிச் சொன்ன செய்தியெல்லாம் அவனுடைய கற்பனை. ஆனால் இதில் வருந்தத் தக்கது என்னவென்றால், தான் சொல்வதை அவன் நம்புகிறான்” என்று பெருமூச்செறிந்தாள் அந்தப் பெண்மணி.
“மன்னிக்கவும்… உங்கள் சொந்தக் குடும்பப் பிரச்னையில் குறுக்கிட நாங்கள் விரும்பவில்லை …” என்றான் ராஜு.
அந்த இடத்தை விட்டு ஓட அவன் எவ்வளவு அவசரப்படு கிறான் என்பதை நான் உணர்ந்தேன். ஆனால் என் ஆவலை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவனை கோபத்துடன் பார்த்தேன்.
“நீங்கள் தொழில் முறையில் ஆர்வம் காட்டுகிறீர்கள் என்பதை என்னால்புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் இதைப் பயன்படுத்திக் கொள்வதில் எனக்கு ஆட்சேபணையில்லை இதுவே நீங்கள் இங்கு வந்ததற்குப் பலனாக இருக்கட்டும்” என்று என்னைப் பார்த்துக் கூறினாள் மேஹராவின் அன்னை.
வேண்டாவெறுப்புடன் ராஜுஉட்கார்ந்தான். சிறிது நேரம் மெளனம் நிலவியது.
“விஜய் தூங்க ஆரம்பித்து விட்டான். இன்னும் இரண்டு மணி நேரத்துக்கு எழுந்திருக்க மாட்டான். மன்னிக்கவும், உங்களை உபசரிக்க மறந்துவிட்டேன். டீ சாப்பிடுகிறீர்களா?”
“வேண்டாம் இப்பொழுதுதான் விஜய் கொடுத்தார்” என்றேன் நான்.
“ஓ… ஐ ஸீ….” அங்கு வைக்கப் பட்டிருந்த கோப்பைகளின் மீது அவள் பார்வை சென்றது.
மறுபடியும் சிறிது நேரம் மௌனம். அவள் விரலில் அணிந் திருந்த மோதிரத்தை சில விநாடிகள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். பார்த்தாலே கண்ணிலும் செம்மை படரும் சிவப்புக்கல் மோதிரம்.
அவள் மேலே பேச ஆரம்பித்தாள்;
“விஜய் என்னுடைய ஒரே பிள்ளை என்று சொன்னேன் அல்லவா? அது ஒரு விதத்தில் தவறு. எனக்கு இன்னொரு குழந்தை இருந்தது. விஜய் தன் தம்பி மீது உயிராக இருந்தான். அது இறந்து போகும்போது வயது ஒன்று. விஜய்க்கு அப்பொழுது ஆறு அல்லது ஏழு வயதிருக்கும். அது செத்துப் போனதற்குத் தான்தான் காரணமென்று விஜய் நினைக்கிறான்.”
இதைச் சொல்லும்போது அவள் கண்களில் நீர் கசிந்தது. தொண்டை அடைத்துக் கொண்டது.
“அது ஒரு பயங்கரமான சம்பவம். நானும் என் கணவரும் கொஞ்சம் மார்க்கெட் வரை போகவேண்டியிருந்தது. அன்று வேலைக்காரன் வரவில்லை. குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்படி விஜயிடத்தில் சொல்லிவிட்டுப் போனோம். திரும்பி வந்தபோது …” அவள் சிறிது நிறுத்தினாள். மறுபடியும் தொடர்ந்தாள்: ‘வாசலில் விஜய் பந்து விளையாடிக் கொண்டிருந்தான். உள்ளே குழந்தை தண்ணீர்த் தொட்டியில்….”
அவள் கண்களை மூடிக் கொண்டாள்.
இப்பொழுது அந்தக் கறுப்புப் பூனை உரிமையுடன் அவள் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டது. அவள் கைகள் அதன் பட்டு உடலை மெதுவாக வருடின.
அவள் கண்களைத் திறந்தாள். உடம்பை ஒரு தடவை சிலிர்த்துக் கொண்டாள்.
“அவ்வளவுத்தான்; குழந்தையின் கதை முடிந்தது. என் கணவர் குழந்தை செத்துப்போனதற்கு விஜய் அஜாக்கிரதையாக இருந்தது தான் காரணம் என்று அவனை அடித்து நொறுக்கி விட்டார். விஜய் அழவேயில்லை. பல நாட்கள் யாருடனும் பேசவேயில்லை. பிறகுதான் சொல்ல ஆரம்பித்தான். ‘என் தம்பி சாகவில்லை. உயிருடன் இருக்கிறான்’ என்று. ‘எங்கே?’ என்று கேட்டால் சீறி விழுவான். ஒரு தம்பியை மானசீகமாகக் கற்பித்துக் கொண்டு, தான் செய்கிற பாராட்டுக்குரிய காரியங்களையெல்லாம் தம்பி செய்ததாகச் சொல்லுவான். தந்தை, இடமாறுதல் ஒருவேளை பயனளிக்கலா மென்று நினைத்து அவனை பாரிசுக்கு அனுப்பினார். ஓவிய விற்பன்னனாகத் திரும்பி வந்தான். ஆனால் தான் வரைந்த படங்களெல்லாம் தம்பி வரைந்தவை என்று எல்லோரிடத்திலும் கூறிக் கொண்டிருக்கிறான்… இந்நிலையில் என் கணவரும் மறைந்தார்.
“வாழ்க்கையில் பிடிப்பற்று இருந்தான். அவனை வாழ்க் கையில் ஈடுபடுத்துவதற்காக விருந்துகளுக்கும் கேளிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்தேன். திடீரென்று அவன் மனப்போக்கு மாறியது. ‘என் தம்பியால் இவ்வுலகிலேயே சொர்க்கத்தை உருவாக்க முடியு’மென்று ஒரு நாள் சவால் விடுத்து, இராப் பகல் வேலை செய்து இவற்றை யெல்லாம் படைத்தான் அதோ அந்த அறை இருக்கிறதே, அங்குதான் அவன் வரைந்த படங்கள் எல்லாம் இருக்கின்றன. பார்க்கிறீர்களா?’,
“பார்த்தோம் …” என்றேன் நான்.
“அந்த அறையைவிட்டு அவன் வெளியே வருவதேயில்லை. ‘சீலிங்’ கைப் பார்த்துக் கொண்டே கிடப்பான். பத்து நாட்கள் முன்பு திடீரென்று என்னிடம் வந்து சொன்னான்: ‘என் தம்பிக்கு உலக வாழ்வு வெறுத்துவிட்டது. இன்றிரவு சாகப்போகிறான்’ என்று. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் பேப்பரில் விளம்பரம் கொடுத்து சாமான்களை வாங்க வருகிறவர்களிடம், ‘என் தம்பி செத்துவிட்டான்…. நான் கொன்று விட்டேன்’ என்று சொல்லத் தொடங்கியது தான் எனக்கு தர்மசங்கடமான நிலைமையை உண்டாக்கியிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் சமாதானம் சொல்லி அனுப்பியாக வேண்டிய நிர்ப்பந்தம். மூன்று நாட்களாக மற்றொரு சிக்கல். தூங்க ஆரம்பித்தானானால் எழுப்பவே முடியவில்லை. இப்பொழுதுதான் ஒரு பெரிய மனோதத்துவ டாக்டரை பூஸா ரோட்டில் பார்த்துவிட்டு வருகிறேன். வியன்னாவுக்குப் போவதுதான் நல்லது என்று அவர் கூறுகிறார்.’
“நீங்கள் இப்படிப் போய்விட்டீர்களே, வீட்டில் வேலைக் காரர்கள்கூட இல்லாமல் … ” என்றான் ராஜு.
“சில சமயம் இவன் கட்டுக்கடங்காமல் போய் விடுகிறான். வருகிற வேலைக்காரர்கள் யாரும் இரண்டு நாட்களுக்கு மேலே இருப்பதில்லை. நேற்றுத்தான் ஒருவன் வேலைக்கு வராமல் நின்றான்.”
பக்கத்து அறையில் அப்பொழுது சப்தம் கேட்டது.
“அவன் எழுந்து விட்டான் போலிருக்கிறது. நீங்கள் போய் வாருங்கள்” என்றாள் அந்தப் பெண்மணி.
இருவரும் அவளிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தோம்.
”நல்ல இடத்தில் போய் மாட்டிக் கொண்டோம்” என்றான் ராஜு.
நான் ஒன்றும் பேசாமல் நடந்தேன். அந்த நேப்பாளக் குழந்தை தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. அதைப்பார்க்க ஆறுதலாக இருந்தது.
வீட்டுக்குச் சென்றதும் அம்புஜம் கேட்டாள்; ‘என்ன வாங்கிண்டு வந்தேள்?…”
“ஒரு கதை….” என்றேன் நான்.
என்னை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டே உள்ளே போனாள் அம்புஜம். ஒரு பழகிவிட்ட பைத்தியத்தை நோக்குவது போலிருந்தது அந்தப் பார்வை.
– இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2010, கிழக்கு பதிப்பகம், சென்னை.
| இந்திரா பார்த்தசாரதி (பிறப்பு: சூலை 10, 1930) தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இவர் 40 ஆண்டு காலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியாவர். இது தவிர போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும் பண்பாடும்’ கற்பிக்கும் ஆசிரியராகவும் இருந்தார். 17 புதினங்கள்,…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அலைபேசியும் அழுக்கு வேஷ்டி தாத்தாவும்
முனைவர் வெங்கடேஷ் கணபதி
August 16, 2026
கமலாவின் தோழிகள்!
ரகுராமன் சீனிவாசன்
August 13, 2026
துன்னல்
நாஞ்சில்நாடன்
August 13, 2026