ஆலமரத்துச் சாமியார்
கதையாசிரியர்: கி.வா.ஜகந்நாதன்
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 19, 2026
பார்வையிட்டோர்: 413
(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவர் பெயர் இன்னதென்று தெரியாது. எல்லோரையும் அவரை ஆலமரத்துச் சாமியார் என்று சொல்லி வந்தனர். ஆலமரத்தில் விழுதுகள் இறங்கியிருந்தன. அவருடைய தலையிலிருந்தும் சடைகள் தொங்கின. அவர் அதிகமாகப் பேசுகிறதில்லை. பெரும்பாலும் கண்களை மூடிக்கொண்டே இருப்பார். ஊரில் உள்ளவர்கள் முறை வைத்துக்கொண்டு அவருக்கு அங்கே கொண்டு வந்து சாப்பாடு டோடுவார்கள். அந்த ஊருக்கு வருகிறவர்கள் எல்லாரும் ஒரு முறை ஆலமரத்துச் சாமியாரைப் பார்க்காமல் போவதில்லை .
ஒரு நாள் ஓர் இளைஞன் அங்கே வந்தான். அவனுக்குப் பதினெட்டுப் பிராயம் இருக்கும். அவன் சாமியாரின் அருகில் வந்து தான் கொண் டு வந்திருந்த பழங்களை அவர் முன் வைத்துக் கீழே விழுந்து வணங்கினான். அப்போது சாமியார் அந்த இளைஞனைப் பார்த்தார். சற்று உற்றுக் கவனித்தார். ‘‘நீ ஏன் இங்கே வந்தாய்?”” என்று கேட்டார்.
“தங்களைப் பார்த்து விட்டுப் போகலாம் என்று வந்தேன்” என்றான் இளைஞன்.
“என்னை எதற்காகப் பார்க்க வேண்டும்? நான் தான் எல்லாப் பாசபந்தங்களையும் துறந்து வந்து விட்டேனே! நீ எதற்காக வந்தாய்?”
“இல்லை, ஓர் ஆத்மாவின் கடைசி விருப்பத்தை நிறைவேற்ற இங்கே வந்தேன்”
“தான் உயிர் பிரிவதற்குமுன் ஒரு முறை தங்களைத் தரிசிக்க வேண்டும் என்ற தாபம் அந்த ஆத்மாவுக்கு இருக்கிறது.”
‘நீ என்ன சொல்கிறாய்? எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே? ”
“என்னுடைய தாய் மிகவும் நோய்வாய்ப் பட்டு ஆபத்தான நிலையில் இருக்கிறாள். ஒரு முறை தங்களைத் தரிசனம் செய்து விட்டுச் சாகவேண்டும் என்று அவள் ஆசைப்படுகிறாள்.
“நான்தான், சட்டி சுட்டது, கைவிட்டது என்ற எல்லாவற்றையும் துறந்து வந்துவிட்டேனே; என்னை எதற்காகப் பார்க்க வேண்டும்?”
“தாங்கள் துறவு பூண்டிருக்கலாம். பந்த பாசங்களை விட்டு ஒழித்திருக்கலாம். ஆனால் என் தாய்க்கு அத்தகைய வைராக்கியம் வருமா? அவள் எப்போதும் தங்களையே நினைத்துக் கொண்டிருக்கிறாள். பழைய உறவை எண்ணித் தாங்கள் வர வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஏதோ ஓர் ஆத்மாவின் இறுதிக்கால விருப்பத்தைக் கருணை கொண்டு நிறைவேற்ற வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.”
சாமியார் சற்றே யோசனையில் ஆழ்ந்தார். பழைய கால நிகழ்ச்சியெல்லாம் திரைப் படமாக அவர் உள்ளத்தில் தோன்றின அவர் முன் கோபி. எதற்கெடுத்தாலும், “இப்படியெல்லாம் செய்தால் நான் துறவியாகிவிடுவேன்” என்று சொல்லிக்கொண்
விட்டாள். அதுவே சாக்காக அவர் புறப்பட்டுவிட்டார். அந்த அம்மாள் அழகும் பண்பும் உடையவள். எதிர் வார்த்தை பேசாதவள். அன்று என்னவோ அப்படிச் சொல்லிவிட்டாள். அவளுக்கும் கோபம் வந்து விட்டது. ‘‘இதோ இப்பொதே துறவியாகப் போய்விடுகிறேன்” சொல்லி வந்துவிட்டார்.
முன் கோபத்தால் வீட்டைத் துறந்து வந்து விட்டாலும் அவருக்கு உள்ளத்தில் அவ்வளவாகத் துறவுணர்ச்சி உண்டாக வில்லை. வீட்டில் ஆசார உபசாரங்களுடன் இருந்தவர், இப்போது ஊரார் போடும் சோற்றை உண்ண வேண்டியிருக்கிறதே என்ற எண்ணம் அவ்வப்போது எழும். ஆனாலும் விடாப்பிடியாக ஆலமரத்தடியில் இருந்தார்.
வெயில் காலத்தில் ஆலமரத்தின் நிழல் நன்றாகத்தான், இருந்தது. மழைக் காலத் திலோ மழையில் நனைய வேண்டியிருந்தது. கட்டிக் கொண்டிருந்த வேட்டி நனைந்து விடும். கோவணத்தைக் கட்டிக் கொண்டு மழை நின்ற பிறகு வேட்டியை உலர்த்திக் கட்டிக் கொள்வார். அவ்வாறு செய்வதில் உள்ள சங்கடத்தில் அவர் மிகவும் கஷ்டப்பட்டார். ‘ஏண்டா இந்தச் துறவை மேற்கொண்டோம்?’ என்று அங்கலாய்ப்பார்.
இந்த நிலையில்தான் அந்த இளைஞன் அவரை வந்து பார்த்தான். அவனிடம் பராமுகமாகப் பேசினாலும் உள்ளத்துக்குள் ஒரு பெரும் புயல் வீசிக் கொண்டிருந்தது. “தாங்கள் அங்கே வந்து ஒரு முறை அம்மாவைப் பார்த்து விட்டு வந்தால் போதும்” என்றான் இளைஞன்.
“தம்பி நாராயணா, நான் வந்தால் அவள் பிழைத்து விடுவாளா? போகிற உயிரை யார் தடுத்து நிறுத்த முடியும்?”
தன்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டதைக் கேட்ட இளைஞன் உள்ளம் குளிர்ந்தான்; ‘தம்பி’ என்று செல்லமாகச் சொன்னது வேறு அவனுக்குப் புதிய தைரியத்தை உண்டாக்கியது.
“நான் தங்களை அழைத்துக் கொண்டு வருவதாக உறுதி சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். நான் தனியே போனால் அம்மாவுக்கு இருக்கிற பாதிப் பிராணனும் போய் விடும். அதைவிட நான் இங்கேயே தங்கித் தங்களுக்குச் சுச்ருஷை செய்து கொண்டிருக்கலாம்.”
மறுபடியும் சாமியார் யோசனையில் ஆழ்ந்தார். சற்றுக் கழித்து, “நீ என்னை அங்கே வரச்சொல்கிறாயா?” என்றார்.
“தாங்கள் ஒருமுறை வந்தால் போதும்.” தம் மனைவி மரணத் தறுவாயில் படுத்துக் கிடப்பதாக அவர் உள்ளத்தில் ஒரு காட்சி விரிந்தது’ ‘போய்விட்டுத் தான் வரலாமே!’ என்ற எண்ணமும் தோன்றியது.
“சரி, நாளைக்கு வா; யோசித்துச் சொல்கிறேன்.'”
நாராயணன் போய் விட்டான். மறுநாள் சுவையான சிற்றுண்டியுடன் வந்து அவன் சாமியார்முன் வைத்தான்.
“பெரியவர்களைப் பார்க்கப் போகும் போது வெறும் கையோடு போகக்கூடாது” என்பார்கள். அதனால் இன்றைக்கு இதை வாங்கி வந்தேன்.”
சாமியார் அதை உண்டார். நாவுக்கு ருசியாக இருந்தது. ‘இப்படி நாள்தோறும் வாய்க்கு ருசியாக உண்பதை விட்டு விட்டு இங்கே வந்து உட்கார்ந்து எதைக் கண் விட்டோம்?’ என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் அலைபாய்ந்தது.
“இன்றைக்கு வருவதாகச் சொன்னீர்கள்: புறப்படலாமா? வண்டிக்கு ஏற்பாடு பண்ணட்டுமா?” என்று கேட்டான் நாராயணன்.
“இதோ பார்? நான் அங்கே வந்து சில நிமிஷங்களே இருப்பேன், உடனே வந்து விடுவேன். அங்கேயே இருக்கும்படி வற்புறுத்தக் கூடாது.”
‘”அப்படியெல்லாம் நடக்காது. தங்கள் விருப்பம் ஏதுவோ அதன்படியே நடக்கும், புறப்படலாமா?”
“சரி, வண்டி கொண்டு வா” நாராயணன் வண்டியை அழைத்து வந்தான். சாமியாரும் அவனும் அதில் ஏறிக் கொண்டார்கள்.
வண்டி ஊரை நெருங்க நெருங்க அவருக்குப் பழைய நினைவுகள் எல்லாம் தோன்றின. தம்முடைய வீட்டை நினைத்துப் பார்த்தார். அதில் அவர் தனியே ஓர் அறையில் இருந்து எதையாவது படித்துக் கொண்டிருப்பார். இப்போது அந்த அறை எப்படி இருக்கிறதோ? சிறிது நேரம் தங்கினாலும் அந்த அறையில்தான் தங்கவேண்டும்.
“அப்பா, நாராயணா நான் இருக்கும். அறை இப்போது எப்படி இருக்கிறது?”
“தாங்கள் வந்ததிலேயிருந்து அந்த இடத்துக்கு யாரும் போவதில்லை. அதைச் சுத்தமாக மெழுகிக் கோலம் போட்டு வைத்திருக்கிறோம். சுவரில் தங்கள் படத்தை மாட்டி வைத்திருக்கிறோம், அம்மா மட்டும் அந்தப் படத்துக்கு மாலை போட்டு நமஸ்காரம் பண்ணி விட்டு வருவாள். அதை எல்லாரும் சாமி அறை என்றே சொல்லுகிறார்கள்.”
சாமியார் அந்த அறையை மனக்கண் முன் கொண்டுவந்தார். அது தனியாக வேறு யாரும் புகாத அறையாக இருப்பதை அறிந்ததும், அவருக்கு ஒரு பைத்தியக்கார எண்ணம் தோன்றியது, அந்த அறையிலேயே தங்கிவிடலாம் என்றும், வேளைக்கு வேளை வீட்டில் உள்ளவர்கள் உணவு கொண்டு தர, அங்கேயே சாப்பிட்டுக் கொண்டு இருக்கலாம் என்று கூட எண்ணினார்.
ஊர் வந்துவிட்டது, நாராயணன் இறங்கிச் சாமியாரை அழைத்துக் கொண்டு சென்றான். அவர்கள் வீடு வந்தது: வீடு முன்னைக் காட்டிலும் நன்றாக இருந்தது, முன் பக்கத்தை எடுத்துக் கட்டியிருந்தார்கள்.
அவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்றான் நாராயணன்: கூடத்தில் யாரோ குழந்தைகள் இருந்தனர். ‘தம் மனைவி எங்கே இருக்கிறாள்’ என்று அவர் கண்கள் துழாவின.
“இப்போதே அம்மாவைப் பார்க்கலாமா? இன்னும் சிறிது நேரம் கழித்துப் பார்க்கலாமா?” என்றும் நாராயணன் கேட்டான்.
‘‘என் அறைக்குப் போய் நான் தங்கியிருக்கிறேன். சிறிது நேரம் கழித்துப் பங்கஜத்தைப் பார்க்கலாம்.”
அம்மாவின் பெயரை அவர் சொன்னதைக் கேட்டு அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
“அப்படியே செய்யலாம்” என்று சொல்லி அவன் அந்த அறைக்கு அவரை அழைத்துச் சென்றான். பிறகு பாலும் பழமும் கொண்டு வந்து வைத்தான்.
தம் மனைவியைக் காண வேண்டும் என்ற விருப்பம் அவரிடம் தீவிரமாகியது.
சிறிது நேரம் கழித்துப் பங்கஜம் வந்தாள். வந்தவள் நெடுஞ்சாண் கிடையாகச் சாமியார் முன் விழுந்து, “என் தெய்வமே! இப்படி விட்டு விட்டுப் போகலாமா?” என்று அழுதாள்.
சாமியாருக்கு அவளைப் பார்த்ததுமே பழைய பாச பந்தம் மீண்டும் அவரை இறுகப் பற்றியது.
“சரி, சரி, எழுந்திரு; இப்போதுதான் நான் வந்து விட்டேனே!”
“நாங்களெல்லாம் வாய்க்கும் வயிற்றுக்கும் வேண்டியதை வேளை தவறாமல் உண்டு சுகமாக இருக்கிறோம். நீங்கள் எங்கோ பிச்சைக்காரன் மாதிரி யாரோ கொடுக்கிற சோற்றை உண்டு காலம் கழிக்கலாமா?”
“நீ ஆபத்தான நிலையில் இருப்பதாக நாராயணன் சொன்னானே!”
“ஆமாம், உங்களைப் பிரிந்து வாழுகிறதைவிட வேறு ஆபத்து வேண்டுமா? இரண்டு நாளாக ஜுரமாக இருந்தது. இனி எனக்கு ஒன்றும் வராது, நீங்கள் வந்து விட்டீர்களே!”
சாமியார் சற்றே சிரித்துக் கொண்டார்? “நான் இங்கேயே தங்கிவிடுவேன் என்று நினைக்கிறாயா?” என்று கேட்டார்.
“இந்த அறைதான் உங்களுடையதாயிற்றே! இதிலே தங்கி நீங்கள் யோகமோ, தவமோ பண்ணலாம். நாங்கள் யாரும் உங்கள் வழிக்கு வரமாட்டோம்.”
சாமியாருக்கு என்ன பதில் சொல்வதென்று தோன்றவில்லை. சிறிதே புன்னகை பூத்தார்.
அப்போது பங்கஜம் அவர்முன் விழுந்தாள்; அழுதாள்.
”சே; சே; என்ன இது; எதற்காக அழுகிறாய்?” என்றவர் அவளை மெல்லத் தூக்கி எடுத்தார். அந்தச் சமயத்தில் அவள் அவர் மடியில் விழுந்து தழுவிக் கொண்டாள். சாமியார் தடுக்கவில்லை.
பங்கஜத்தின் பரிசம் பட்டவுடன் அவர் மெய் சிலிர்த்தது: அவர் அவளை இறுகத் தழுவிக் கொண்டார். அவர் வாயிலிருந்து வார்த்தைகள் நழுவின. “பங்கஜம், நான் இனிமேல் பழைய ராமசாமிதான். சாமியார் வேஷத்தை நாளைக்கே கலைத்து விடுகிறேன்” என்றார்.
பிறகு? ஆலமரத்துச் சாமியார் பழைய ராமசாமி ஆகிவிட்டார்.
![]() |
கி. வா. ஜ என்றழைக்கப்பட்ட கி. வா. ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர், இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவர் (1906-1988). இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
இரத்தத்தில் இல்லையே
இரா.துரைமாணிக்கம்
August 19, 2026
எனக்கெனவே… நீ… கிடைத்தாய்!
ஆர்.மணிமாலா
August 19, 2026
இரட்டைப் பின்னல் இந்திரா
இரா.கலைச்செல்வி
August 19, 2026
