உண்மையான வள்ளல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 10, 2026
பார்வையிட்டோர்: 24 
வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்

“என்னடா, ஒண்ணு நாம எல்லா விஷயத்திலேருந்து ஒதுங்கிடணும். இல்லேன்னா தைரியமா முன்னாடி நின்னு ஒரு முடிவு கட்டணும்.” பூமிநாதன் அழுத்தந்திருத்தமாக பேசினான்.

“நானும் யோசனை பண்ணேன்டா பூமி.எல்லாருக்கும் முன்னால் கேட்டுடலாம் அவங்களை, பதில் சொல்லாம போய்டுவாங்களா?” என்று கேட்டான் சேஷகோபாலன்.

“மூணு வருஷமா இதையே நாம் மட்டுமே பேசிட்டிருக்கோம்டா, ஊரையே கூட்டணுன்டா” கோபத்துடன் கூறினான் குமாரவேலு. இந்த உரையாடல்கள் இலந்தைக்காட்டூரில் நடந்து வருகிறது.

இலந்தைக்காட்டூர் களைகட்டியது. அடுத்த பத்து நாட்களுக்கு அந்த ஊரில் உள்ள பெருமாள் கோவில் திருவிழா நடைபெறும். ஒவ்வொரு வைகாசியிலும் இந்த ஸ்ரீலக்ஷ்மி நாராயணன் பெருமாள் கோவிலில் உற்சவங்கள், பெருமாள் புறப்பாடுகள் நடக்கும் கோலாகலங்களைப் பார்க்க அக்கம் பக்கத்தில் உள்ள நிறைய கிராமங்கள், நகரங்களில் இருந்து திரளாக பக்தர்கள் வந்து, ஓரிரு நாட்கள் தங்கி பெருமாள் தரிசனம் செய்து விட்டு போவார்கள். அது மட்டுமல்லாமல், வெளியூர்களில் வசிக்கும் வேத விற்பன்னர்கள் பத்து நாட்களுக்கு முன்பே வருகை தந்து, அறங்காவலர் அவர்களுக்காக ஒதுக்கியிருக்கும் வீட்டில் தங்கி, தினமும் கோவில் கைங்கர்யங்களை செய்து வருவார்கள்.

அக்கோவில் அறங்காவலர் பத்மநாபன், அக்கோவில் இடங்களை சரிவர பராமரிக்கும் ராஜாங்கம், அவ்வூர் பேரூராட்சி தலைவர், கிராம அதிகாரி அனைவரையும் பார்த்து ஐந்து நிமிடங்கள் பேசக்கூட முடியாது.அவ்வளவு மும்முரமாக இருப்பார்கள் இந்த பத்து, பனிரெண்டு நாட்களும். ராஜாங்கத்தை எல்லோரும் ‘ சின்ன தர்மகர்த்தா ‘ என்றே அழைப்பார்கள். அத்தனை ஈடுபாட்டுடன் ஒவ்வொரு செயலையும் சரியாக திட்டமிட்டு செய்வார். பத்மநாபனுக்கு பக்கத்து ஊர் கனகக்குன்றூரில் சொந்தமாக அரிசி ஆலை, தென்னந்தோப்பு இருப்பதால் அங்கே நடக்கும் வேலைகளைக் கண்காணிக்க பெரும்பாலும் அங்கே இருக்கும்படியான சூழ்நிலையால், கோவில் பற்றிய பணிகள் பற்றி ராஜாங்கம் மூலமாக அறிந்து கொள்வார். நேரம் கிடைக்கும்போது அவரும் சேர்ந்து கொள்வார்.

எண்பத்தி மூன்று வயதான பட்டாச்சார்யார் ‘சீமா மாமா’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் சீதாராமன் அவர்கள் கிட்டத்தட்ட அறுபது வருடங்களாக தனியாகவே கோவில் கைங்கர்யங்களை செய்து வருகிறார். அவர் குடும்பத்தின் நான்காம் தலைமுறை நபராக ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் பெருமாளுக்கு ஆன்மீகப் பணிகளைச் செய்பவர். ஊரில் அவருக்கு அனைவரும் மிகுந்த மரியாதையும், அன்பையும் காட்டுவார்கள், ஏனெனில், மிகவும் வெளிப்படையாக பேசுபவர். குடும்ப விஷயங்களில் கோபத்துடனும், கவலைகளுடனும், தன்னிடம் வரும் மனிதர்களுக்கு நல்ல புத்திமதிகளை அன்போடும், அக்கறையோடும் சொல்லி அவர்களின் மனநிலையை சாந்தமடையச் செய்வார். தப்பு செய்த அந்த ஊர்க்காரர்களை உரிமையுடன் கடிந்து விடுவார். அவரும் கடந்த ஒரு வாரமாக கோவில் விழா நன்றாக நடைபெற இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

இலந்தைக்காட்டூர் கடைத்தெருவில் ராஜாங்கத்தின் வணிகவியல் பட்டதாரி மகன், பூமிநாதன் மளிகை, பழம், காய்கறிகள் விற்பனை செய்யும் கடை உரிமையாளராக இருக்கிறான். பத்மநாபனின் மகன் சேஷகோபாலன், எம்.ஃபார்ம் படித்தவன்,மருந்து கடை வியாபாரம் செய்கிறான்.பேரூராட்சி தலைவர் பாலசுந்தரம் மகன், குமாரவேலு, இயற்பியல் பட்டதாரி,இரு சக்கர வாகனங்களின் உறுப்புகள் வணிகம் செய்கிறான். இவர்கள் மூவரும் நல்ல நண்பர்கள்.அந்த ஊரில் நடைபெறும் விழாக்கள், மற்றும் ஊரின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் நல்ல நிகழ்வுகள் அனைத்திலும் பங்கெடுத்து திறம்பட நடக்க உதவுவார்கள்.

இவர்களின் தந்தைகளும் அவ்வாறே பிறருக்கு உதவுவதிலும், பள்ளி நிகழ்ச்சிகளுக்கு, நன்கு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவி, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள குடும்பங்களில் நடக்கும் திருமணம் மற்ற சுபகாரியங்கள் இவைகளுக்கு உதவுவது என்பது போன்ற செயல்களில் முன் நின்று செய்து ஊர் மக்களிடம் மிகவும் நல்ல பெயர் பெற்றுள்ளனர். ஊரில் பலர் இவர்களை ‘வள்ளல்கள்’ என்றே பெயரிட்டனர்.

ஆனாலும், இலந்தைக்காட்டூரில் உள்ள பெருமாள் கோவில், சிவன் கோவில், விநாயகர் கோவில் மற்றும் காவல் தெய்வக் கோவில்களில் எந்த முக்கியமான விழாக்களாக இருந்தாலும், முதலில் மரியாதை அளித்து, கற்பூரம் ஏற்றி இவர்கள் துவக்கி வைப்பதில்லை.

இங்கிருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மதகுமேடு கிராமத்தில் இருக்கும் பரமானந்தம் குடும்பத்தை அழைப்பார்கள். அவர்களுக்கு அர்ச்சகர்கள், பத்மநாபன், ராஜாங்கம், பாலசுந்தரம் மற்றும் உள்ள ஊர் பெரியவர்கள் மரியாதை செய்து கோவிலுக்கு அழைத்துச் செல்வார்கள். பிறகு பரமானந்தம்,

அவர் மனைவி மீனாட்சியம்மாள், அவர் மகன் செல்வராஜ், மகள் சத்யா அனைவரும் பெரிய குத்துவிளக்கு ஏற்றி, அவர்கள் கொண்டு வந்திருக்கும் மூங்கில் தட்டில் வெற்றிலை, பாக்கு, நிறைய பழவகைகள், வெல்லம், தேன், மாலைகள், உதிரிப்பூக்கள் இவைகளை கோவில் கதவின் முன் வைத்து, கற்பூரம் ஏற்றுவார்கள். பிறகு அர்ச்சகர்கள் கதவைத் திறந்து விடுவார்கள். அதன் பின்னர் ஆகம விதிப்படி பூஜைகள் தொடங்கி நடைபெறும். அதைத் தொடர்ந்து உள்ளூரில் இருக்கும் அனைவரும் அவரவர் விருப்பப்படி எடுத்து வந்திருக்கும் பழத்தட்டுகளுடன் உள்ளே செல்வார்கள். இது காலம் காலமாக நடைபெற்று வரும் வழக்கமாக இருக்கிறது.

இது பூமிநாதன், சேஷகோபாலன், குமாரவேலு இவர்களுக்கு பிடிக்கவே இல்லை. ஒவ்வொரு வருடமும் இதைப் பற்றி ஊர் பெரியவர்களிடம் விவாதம் செய்வார்கள். கோபத்துடன் தங்கள் பெற்றோருடன் தர்க்கம் செய்வார்கள். பட்டாச்சார்யார் சீதாராமனிடம் ”இந்த வழக்கத்தை மாத்துங்க.இல்லேன்னா நாங்க ஊரைக் கூட்டி இதை நிறுத்தச் சொல்லி போராடுவோம் ‘ என்பார்கள். அவர்கள் யாரும் இதனை பொருட்படுத்தாமல், ‘ அதெல்லாம் மாத்தவே முடியாது. உங்களுக்கு எல்லாம் உண்மை தெரியாமல் பேசறீங்க, அவங்க குடும்பத்தால்தான் இந்த ஊர் பிழைச்சது. பழங்காலத்தில நடந்ததை நினைச்சா, வழி வழியா நம்ம சந்ததிகள் அவங்க சந்ததிகளுக்கு கடமைப்பட்டிருக்கணும். அதெல்லாம் இல்லாம கோவில் விழா சமயத்தில மரியாதை மட்டுமே தர்ற வைபவமா இப்ப மாறிடுச்சு. அவங்களும் இதையெல்லாம் பத்தி கவலைப் படாமல் நம்ம ஊரு மக்கள் மேல் அன்போடு இருக்காங்க. இந்த ஊர் நல்ல காரியங்களுக்கு பணம், பொருள் தராங்க. அதனால இதை போய் கிளறாதீங்க நீங்க ‘ என்று சொல்லி விடுவார்கள்.

“டேய், குமார், சேஷு, இந்த வருஷம் இதை விடக்கூடாதுடா. நாளைக்கு காலைல மதகுமேட்லேர்ந்து பரமானந்தம் குடும்பத்தை கூட்டி வர்றதுக்குள்ள நம்ம குடும்பத்துக்கு மரியாதை தரணும். நாங்கதான இந்த ஊருக்கு பாடுபடறோம் அப்படீன்னு சொல்லி இன்னிக்கே இந்த ப்ரொடெஸ்டை ஆரம்பிச்சுடுவோம்” பூமிநாதன் கோபத்துடன் பேசினான்.

“ஆமாண்டா பூமி.இந்த தடவை நம்ம பெத்தவங்க ஏதாவது சாக்கு போக்கு சொன்னாலும் கேட்க கூடாது.இன்னிக்கு மத்தியானமே மக்களை கூட்டி பேசலாம்” சேஷகோபாலன் ஆமோதித்தான்.

“இதுக்கு முடிவு கட்டியே ஆகணும்டா. அதென்ன நம்ம ஊரு வளர்ச்சிக்கு நாம உழைக்கிறோம். நம்மளோட அப்பாவெல்லாம் இந்த மக்களுக்காக நிறையாசெஞ்சிருக்காங்க. செய்வாங்க.அப்ப எதுக்கு இவங்களை கூப்ட்டு

வந்து பூஜை ஆரம்பிக்கணும்? அர்த்தமே இல்லை. ஊர் மக்களிடம் பப்ளிக்கா இதையே சொல்லி கேட்போம்டா.” குமாரவேலு படபடவென பேசினான்.

“குமார், நீதான் அந்த பொண்ணு சத்யாவுக்கு ரொம்ப ஃப்ரெண்ட்லியாச்சே, நீயே அவங்க கிட்ட பேசிப் பாரேன் இன்னிக்கு ” என்றான் சேஷகோபாலன்.

“இன்னிக்கு ஈவினிங் அவங்களை பார்க்கப் போவேன். அவங்களுக்கு டூ வீலர் ஸ்பேர் பார்ட்ஸ் சப்ளை பண்ணேன். அந்த பில் செட்டில் பண்றேன்னு வரச்சொல்லி இருக்கா.அப்பவே கேக்கறேன். என்ன காரணமா எங்க ஊர் பெருமாள் கோவிலில் உங்களுக்கு அந்த அளவுக்கு வரவேற்பு அப்டீன்னே கேக்கப் போறேன்.” என்றான் குமாரவேலு.

“ஓ.கே.டா குமார். ஆனால் அங்கே போய் சண்டை போடற மாதிரி எதுவும் செய்யாதே. சும்மா ஒரு சந்தேகத்துக்காக கேட்டேன்னு சொல்லு” பூமிநாதன் அறிவுரை கூறினான்.

மூவரும் பிறகு அவரவர் பணிகளைப் பார்க்க பிரிந்து சென்றனர்.

குமாரவேலு அன்று மாலை மதகுமேட்டை நோக்கி விரைந்தான். அந்த ஊரில் உள்ள ஒரு பெரிய பண்ணைத்தோட்டம் போல் இருக்கும் பரமானந்தம் வீட்டின் நுழைவாயில் வழியே சென்றபின், இருபக்கங்களிலும் பூச்செடிகளுடன் கூடிய ஒரு சிமெண்டால் அமைக்கப்பட்ட சிறிய சாலை வழியே சிறிது தூரம் சென்று, அங்கிருந்து புல்தரைகளுக்கிடையே அழகாக செதுக்கிய சதுரமான கருங்கற்களால் சமதரை போல் அமைக்கப்பட்டிருக்கும் இருபதடி தூரத்து பாதையை கடந்தால், ஒரு பெரிய வெளி வரவேற்பு கூடம். அதில் வெளியிலிருந்து வருபவர்கள் உட்கார்வதற்காக நிறையவே வசதிகள் செய்திருந்தார்கள். ஒரு சிறிய மேசையில் அன்றைய நாளிதழ்கள், மற்றும் வார இதழ் புத்தகங்கள் இருந்தன. ஒரு ஓரத்தில் தேக்குமரத்தால் செய்த பெரிய புத்தக அலமாரி இருந்தது. அதில் ஏராளமான புத்தகங்கள் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சுவற்றில் சில மூதாதையர்களின் படங்களில் பழங்காலத்து முறையில் அரசர் போன்ற உடையணிந்தவாறு இருந்தனர். அப்படங்களின் மேல் இட்டு வைத்துள்ள சந்தன மணி மாலைகள் மெல்லிய சந்தன வாசனையை கூடம் முழுவதும் பரப்பிய வண்ணம் இருந்தது.

அங்கே இருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான் குமாரவேலு. அவனைக் கடந்து சென்ற பணிப்பெண்ணிடம் ” நான், குமாரவேலு, இலந்தைக்காட்டூரிலிருந்து வந்திருக்கறதா சத்யா அம்மா கிட்ட சொல்லுங்க” என்றான். அவள் ‘சரி’ என்று தலையாட்டி உள்ளே சென்றாள்.

மூன்று நிமிடங்களில் சத்யா வெளியே வந்து,” வாங்க, குமாரவேலு, ஏதாவது சாப்பிடுறீங்களா, பில் கொண்டு வந்திருக்கீங்களா?” என்று கேட்டபடி இன்னொரு இருக்கையில் அமர்ந்தாள்.

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாங்க” என்று கூறி எழுந்து ஒரு கவரை அவளிடம் கொடுத்தபடி” உங்களுக்கு ரீடெய்ல் மார்க்கெட் விலையை விட குறைவாத்தான் பில் பண்ணிருக்கேன்.” என்றான்.

“தட்ஸ் ஓகே. எனக்கு உங்க பேர்ல நம்பிக்கை இருக்கு. உக்காருங்க. ஒரு தம்ளர் மோராவது குடிச்சிட்டு போங்க.” என்றவள் ” அஞ்சலை, ஒரு டம்ளர் குடிக்க மோர் கொண்டு வாம்மா” என்று உள் பக்கம் நோக்கி சத்தமாக சொன்னாள்.

பின்னர் குமாரவேலுவைப் பார்த்து ” அப்புறம் சொல்லுங்க, இப்ப எப்படி பிஸினஸ் போகுது? உங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் எப்படி இருக்காங்க? உங்க பேரன்ட்ஸ் நல்லா இருக்காங்களா? ஊர்ல ஒரே திருவிழா கோலமா இருக்கும் இல்லையா, இன்னும் பத்து, பனிரெண்டு நாளைக்கு? உங்களுக்கு நல்லா பொழுது போகும்.அப்படித்தானே?” என்று கேட்டு சிரித்தாள்.

“பிஸினஸ் இன்னிக்கு வரைக்கும் நல்லா இருக்குங்க.திருவிழாவுக்குத்தான் நீங்க வருவீங்களே.அப்போ எல்லோரையும் பாக்கத்தானே போறீங்க? திருவிழா சம்மந்தப்பட்ட ஒரு முக்கியமான கேள்வி உங்க கிட்ட கேக்கணும்னுதான் நேர்ல வந்தேன். ரொம்ப நாளா, ரொம்ப வருஷங்களா எங்களுக்கு மனசுலயே ஓடிட்டு இருக்கற கேள்வி இது.நீங்க தப்பா எடுத்துக்காம பதில் சொன்னா எங்களுக்கு சந்தோஷமா இருக்கும் சத்யாம்மா!” என்றான் குமாரவேலு.

“சத்யா அம்மா எல்லாம் வேண்டாம் குமார், சத்யான்னே கூப்பிட்டா போதும்.” என்று சிரித்தபடி”என்ன பீடிகை பலமா இருக்கே, திருவிழா பத்தி நான் என்ன சொல்லப் போறேன்? என்ன சந்தேகம் உங்களுக்கு?” என்று கேட்டாள்.

அவன் பதில் கூற முற்படும் போது அஞ்சலை மோர் கொண்டு வந்து கொடுத்தாள்.

“அவசரமில்லை குமார், முதல்ல மோர் குடிங்க. அப்புறமா சொல்லுங்க. அதற்குள்ள நான் உள்ளே போய் உங்க பில்லுக்கு பணம் எடுத்து வரேன் ” என்று எழுந்து உள்ளே சென்றாள்.

ஒரு அருமையான மோரை அருந்தி டம்ளரை அஞ்சலையிடம் திரும்பத் தந்து விட்டு குமாரவேலு ‘ இப்போ கேட்கலாமா, வேண்டாமா, இல்லை நாளைக்கு அங்கே வரும்போது எல்லா நண்பர்களும் சேர்ந்து கேட்பது

நல்லதாக இருக்குமோ’ என்று யோசித்த வேளையில் சத்யா பணத்துடன் திரும்ப வந்தாள். அவனிடம் தந்து ” சரியா இருக்கா பாத்துக்கங்க” என்றாள். ” நீங்க எப்படி என் மேல் நம்பிக்கை இருக்குன்னு சொன்னீங்களோ அதே போல் எனக்கும் உங்க பேர்ல நம்பிக்கை இருக்குங்க. சரியாத்தான் இருக்கும் ” என்று புன்னகையுடன் பதிலளித்தான்.

“சரி, இப்ப சொல்லுங்க, திருவிழா சம்மந்தமா ஏதோ கேக்கணும்னு சொன்னீங்களே, அது என்ன?” என்றாள் சத்யா.

“கேக்கலாமா வேண்டாமான்னு ஒரே குழப்பமா இருந்தது. சரி கேட்டுடறேன்.எங்க ஊர் கோவில் திருவிழாக்கள் ஆரம்பம் ஆகறதுக்கு முன்னால உங்க குடும்பத்து நபர்களுக்கு ஏன் அந்த சிறப்பு மரியாதை கொடுக்கறாங்க? இத்தனைக்கும் என் அப்பா மட்டும் இல்லாம, ஊர்ல இருக்கற நிறைய பெரியவங்க எல்லாரும் ஊர் வளர்ச்சிக்காக அவங்க நேரத்தை ஒதுக்கி நல்லா உழைக்கிறாங்க. அப்படி இருக்கறப்போ, இவ்வளவு தூரம் தள்ளி இருந்து வர்ற உங்க குடும்பத்தை அழைச்சு ஏன் இதை செய்றாங்க? எனக்கும் என் நண்பர்களுக்கும் இதுல பொறாமையோ, கோபமோ இல்லை. ஆனால் அதுக்கு என்ன காரணம்னு தெரிஞ்சிக்க விரும்பினோம்.” என்று ஒரே மூச்சில் அவள் முகத்தை பார்த்து, பேசினான்.

“கரெக்ட் குமார் நீங்க சொல்றது. இதை ஏன் உங்க ஊர் பெரிய மனுஷங்க கிட்ட குறிப்பாக பட்டாச்சார்யார் சீமா மாமா கிட்ட கேட்கக்கூடாது? கேட்டீங்களா? அவங்க என்ன சொன்னாங்க?” என்று சத்யா கேட்டாள்.

“எல்லாரையும் கேட்டுட்டோம். ஒண்ணும் சரியா பதில் சொல்லலே சில பேருக்கு ஏன்னு தெரியலே.சில பேர் பழைய வழக்கம், தலைமுறை தலைமுறையா நடந்து வருது, பட்டாச்சார்யார் ராஜரகசியம், ராஜசத்தியம் இதைப் பத்தியெல்லாம் பேசக்கூடாது இப்படி எல்லாம் பதில் சொல்றாங்க. எங்களுக்கு இந்த குழப்பமும், விடையறியாத கேள்வியும் ஒவ்வொரு வருஷமும் நீடிக்கறதால, சம்மந்தப்பட்ட உங்களையே கேட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க.” என்று பணிவான குரலில் குமார் கூறினான்.

“நோ, நோ, குமார், அதெல்லாம் இல்லை. நான் உங்களுக்கு பதில் தர முயற்சிக்கிறேன் ” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது அங்கே பரமானந்தம் வந்தார். பரமானந்தம் எழுபத்தைந்து வயதான மனிதர். ராஜகம்பீரத்துடன் உயரமான உருவம்.நல்ல உள்ளம் படைத்தவர். அந்தப் பகுதிகளில் இருக்கும் பல ஊர்களில் அவர் பெயர் பிரசித்தம். அவரும் ஏராளமான தான தர்மங்கள் எல்லோருக்கும், இலந்தைக்காட்டூர் மக்கள்

உள்பட, மகிழ்ச்சியுடன் செய்து வருபவர். ” என்னம்மா, யார் வந்திருக்கிறது? என்ன விஷயம்?” என்று சத்யாவைப் பார்த்து கேட்டார் பரமானந்தம்.

“அப்பா, இவரு குமாரவேலு. நம்ம வண்டிக்கு வாங்கிய ஸ்பேர் பார்ட்ஸ் பில் கொண்டு வந்தாரு.அதோட இவர் ஒரு சந்தேகத்தை நாம நிவர்த்தி செய்யணும்னு சொல்லி கேட்டாரு.அதைப் பத்திதான் பேசிட்டு இருக்கோம்.” என்று கூறி குமாரவேலு கேட்டவைகளை அப்படியே அவரிடம் கூறினாள் சத்யா.

பரமானந்தம் அதைக் கேட்டவுடன் குமாரவேலுவை பார்த்து சிரித்தபடியே ” நீ பாலசுந்தரம் பையன்தானப்பா? அப்பா நல்லா இருக்காரா? நாளைக்கு நான் வருவேன்னு சொல்லு. உனக்கு இப்ப என்ன அந்த கேள்விக்கு பதில் கிடைக்கணும்.இல்லையா? இப்படி ஒரு நாள் வரும் போது எங்கிட்ட அழைச்சிட்டு வான்னு ஒரு ஜீவன் காத்திட்டு இருக்கு.அவருகிட்டயே போய் தெரிஞ்சுக்கலாம் வா” என்று கூறி சத்யா பக்கம் திரும்பி ” அம்மா, குமாரவேலுவை தாத்தா ரூமுக்கு அழைச்சிட்டு போ, நான் போய் ட்ரெஸ் மாத்திட்டு வரேன்.” என்றார் பரமானந்தம்.

குமாரவேலுவுக்கு ஆச்சரியமும், லேசான அதிர்ச்சியாவும் இருந்தாலும், அவன் கேள்விகளுக்கு இன்னிக்கு விடை கிடைக்கப்போகிறது என்று ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தது.

சத்யாவைத் தொடர்ந்து உள்புறமாக தென்மேற்கில் உள்ள ஒரு அறைக்குள் சென்றான். அங்கே ஒரு சாய்தள இருக்கையில் மெல்லிய உடலுடன் வயதான ஒரு மனிதர் உட்கார்ந்து கண்களை மூடிக் கொண்டிருந்தார்.

“தாத்தா, நான் சத்யா வந்திருக்கேன். அப்பாவும் இப்ப இங்கே வருவாரு.உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் தாத்தா. இங்கே என்னோட இலந்தைக்காட்டூரிலேர்ந்து குமாரவேலு வந்திருக்காரு” என்று கூறி மேலும் ஏதோ கூறுமுன்னே, தாத்தா என்று அவள் அழைத்த, பரமானந்தத்தின் தந்தை நூற்றிரெண்டு வயதானவர், ராஜமாணிக்கம் என்ற பெயர் கொண்டவர்” நான் பதில் சொல்லும் நேரம் வந்துடுச்சு இல்லையா தங்கம், இந்த நாளுக்காகத்தான் என்னை அந்த லக்ஷ்மி நாராயணன் உயிரோட வச்சிருக்கான். இந்த பையன் மூலமா கேட்டு வரச்சொல்லி இருக்கான். உன்னோட கொள்ளு தாத்தா, லோகநாதன், அவரு மறையும்போது எங்கிட்ட சொன்னாரு.’ ராஜா, நீயும் நூறு வயசுக்கு மேல இருப்ப.உன் கடைசி காலத்தில நம்ம வரலாறு பத்தி சொல்லும்படியா வரும்.நேரா உங்கிட்ட வந்து கேட்பான் ஒருத்தன்.அதுவரைக்கும் அதைப் பத்தி யாரும் சொல்ல மாட்டாங்க. நீதான் அந்த கடமைய செய்யணும்னு’ அப்பவே சொல்லிட்டாரு.

சரி, நீங்க ரெண்டு பேரும் உக்காருங்க. பரமன் எங்கே?” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போது, பரமானந்தம் உள்ளே நுழைந்து தன் தந்தையை வணங்கிவிட்டு பக்கத்தில் உட்கார்ந்தார்.

“அப்பா, நீங்க சொன்னபடியே இன்னிக்கு இந்த பையன், நம்ம பாலசுந்தரம் மகன், குமாரவேலு வந்து, அவங்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்துக்கு விடை வேணும்னு சத்யா கிட்ட கேட்டிருக்கான். நீங்க சொல்லுங்க ” என்று ராஜமாணிக்கத்திடம் பரமானந்தம் சொன்னார்.

” இங்கே வாப்பா, குமாரவேலு. உங்கப்பா பாலசுந்தரம், தாத்தா ரெத்தினசாமி எல்லாரும் கட்டிக் காத்து வர்ற ஊரு, கோவில். நீ கேட்டதில் தப்பே இல்லை. பட்டாச்சார்யார் ராஜரகசியம்னு சொல்லிருப்பாரே.”

“ஆமாம் ஐயா, சொன்னாரு. இதெல்லாம் உங்களுக்கு எப்படி ஐயா தெரியும்? நான் கேட்டது தப்பா இருந்தா என்ன மன்னிச்சுக்கோங்க.” என்று கூறி ராஜமாணிக்கம் காலைத் தொட்டு வணங்கி குமாரவேலு அவர் அருகே உட்கார்ந்தான்.

“தாத்தா, குமார் ஒரு பக்கம் அவங்க டவுட்டை கேட்டிருந்தாலும், எனக்கே நிறைய அதைப் பத்தி தெரியாது, இல்லையா? அதனால எனக்கும் நீங்க சொல்லப் போறதை கேட்க ஆர்வமா இருக்கு.” என்றாள் சத்யா.

ராஜமாணிக்கம் அவள் கைகளை வாஞ்சையுடன் பிடித்தபடி கூறினார்.” ஆமாம்மா.உண்மைலேயே இது ஒரு ராஜரகசியம்தான் அம்மா சத்யா. இதை என் வாயால் சொல்லவும் கூடாது.ஆனால் இந்த நேரத்தில் இதை மக்கள் கேக்கும்போது அதை அறியும் வழியை மட்டுமே நான் சொல்ல முடியும். அதுக்கப்புறம் நீங்க தெரிஞ்சுக்கலாம். இந்த வருஷம்தான் அதுக்கு குறிச்ச நேரம். இது ஒரு முன்னூத்தி அம்பது, நானூறு வருஷத்துக்கு முன்னாடி ஏற்பட்ட வரலாறு. ” என்று கூறி

” பரமா, ஒவ்வொரு திருவிழாவிலும் பெருமாள் கோவில்ல வடக்கு பக்கம் இருக்கற ஒரு தேக்கு பீரோவிலேர்ந்து இன்னொரு பெட்டியை எடுத்து பெருமாள் உள் சந்நிதியில் வச்சுட்டு வருவாங்க.இல்லையா?” என்று பரமானந்தத்தை பார்த்து கேட்டார்.

” ஆமாம்ப்பா. அதுக்கப்புறம் பட்டாச்சார்யார் அதை பெருமாள் கண்ணில் படும்படி மட்டுமே திறந்து ஆரத்தி காட்டி, அதற்கு சந்தனம், குங்குமம் பொட்டு இட்டு, திரும்ப மூடி எடுத்துட்டு போய் அதே பீரோக்குள்ள வைக்கச் சொல்வார். எப்பவும் நடக்கற விஷயந்தானே இது? அதை பெருமாள்

கவனத்துக்கு மட்டும் காட்டணும்னு சொல்லி வழி வழியா நடக்கறதுதானே?அதுக்கென்னப்பா இப்போ? ” என்று கேட்டார் பரமானந்தம்.

ராஜமாணிக்கம் மெல்லிய புன்னகையுடன்” நாளைக்கு நான் சொன்னதா பட்டாச்சார்யர் கிட்ட சொல்லு. அந்த பெட்டிக்குள் அடிப்பகுதியில் இருக்கற தங்க முலாம் பூசின இன்னொரு பெட்டியை எடுத்து திறந்து ஊர் மக்கள் கிட்ட படிச்சு காண்பிக்க சொல்லு. எல்லாம் நல்லதா முடியும். இதைப் படிச்சுட்டு முதல் பூஜைய ஆரம்பிக்க சொல்லு. ” என்று சொன்னார். ” சரிப்பா, அப்படியே செய்ய ஏற்பாடு பண்றேன் ” என்று பரமானந்தம் கூற, ராஜமாணிக்கம்” பெருமாளே, நீ தந்த கடமையை நான் முடிச்சுட்டேன். என்னை அழைச்சுக்கோப்பா”என்று மேலே பார்த்து பேசினார்.

ராஜமாணிக்கம் நூறு வயதைக் கடந்த போதும், பேச்சு, செயல்பாடுகள் தெளிவாக இருந்ததைக் கண்டு வியந்த வண்ணம் இருந்தான் குமாரவேலு.

பிறகு அவர்கள் அனைவரிடமும் விடைபெற்று ஊர் திரும்பினான் குமாரவேலு.மதகுமேட்டில் நடந்த விஷயங்களை தன் பெற்றோர்களிடம், நண்பர்களிடம், ஊர் மக்களிடம் பகிர்ந்து கொண்டு எல்லோரையும் காலையில் அவசியம் கோவிலுக்கு தவறாமல் வரச் சொன்னான்.

மறுநாள் காலை ஒன்பது மணியளவில் ஊர் மக்கள், பூமிநாதன், குமாரவேலு, சேஷகோபாலன் மற்றும் அவர்களது பெற்றோர்கள் எல்லோரும் கோவிலில் கூடினர். பரமானந்தம், மீனாட்சியம்மாள், செல்வராஜ், சத்யா அனைவரும் வந்தனர் அடுத்த பதினைந்து நிமிடங்களில். பரமானந்தம் சீதாராமன் பட்டாச்சார்யாரிடம் காதில் ஏதோ கூற, அவர் ‘சரி, அப்படியே செய்றேன் ‘ என்று தலையாட்டி விட்டு, அங்கு இருந்த ஒலிபெருக்கியில் ” பக்தர்களே, அமைதி காக்கவும். இத்தனை வருஷங்களா தீபாராதனை மட்டுமே காண்பித்து வைத்திருந்த பெட்டிக்குள் இருக்கும் ஒரு மிக முக்கியமான ராஜாக்கள் காலத்து ஒப்பந்த எழுத்துகளை இன்று நாம் அறியும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த கடமையை நான் செய்யும்படியாக ஆணை வந்துள்ளது. அதை நான் செய்து முடிக்கும் வரையில் அமைதி காத்து எனக்கு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.” என்று பேசிவிட்டு, பெரிய தேக்கு அலமாரியிலிருந்து, வேறொரு சிறிய பெட்டியை எடுத்து பெருமாளிடம் வைத்து கற்பூரம்,தீம் ஆரத்திகள் காண்பித்து விட்டு, அதனடியில் இருந்த தங்க முலாம் பூசிய பெட்டியை திறந்து அதனுள்ளே நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த, பழங்கால ஓலைச்சுவடி கட்டுகளை எடுத்து படிக்க ஆரம்பித்தார் பட்டாச்சார்யார். “இதனால் மக்களுக்கு அறிவிக்கப்படுவது யாதெனில், வீரமகாதேவராஜா என்னும் இலந்தைக்காடு நாட்டின் மன்னன், கிளுவநதியின் வெள்ளத்தால் நாடு இழந்து வீடு இழந்து தவித்து இந்த

மண்ணில் தஞ்சம் அடைந்திருக்கும் காரிமலை நாட்டின் மன்னன் ஆதிதீரராமராஜா அவர்களை முழுமனதோடு வரவேற்கிறேன். அவரும் அவரது குடும்பமும் மற்றும் அவரது நாட்டின் மக்களும் இனி இங்கே இருந்து அவர்களுடைய நாட்டைப்போல இம்மண்ணில் நிறுவ மனப்பூர்வமாக அனுமதி அளிக்கிறேன். அவர்களுக்கு தொடர்ந்து தொல்லைகள் தந்து, அவர்களின் கடினமான சூழ்நிலைக்கு காரணமாக இருந்து வந்த மேதிரை நாட்டுப்படைகளை நாம் வென்று விட்டோம். அதற்கு காரிமலை நாட்டின் வீரர்களும் ஒத்துழைப்பு கொடுத்ததை பாராட்டுகிறேன். அவர்களுடைய காரிமலை நாடு எதிரிகளால் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டதால், அதை நாம் புனரமைக்க பணிகளை தொடங்குவோம் என்று உறுதி கூறுகிறேன். ஆனால் அது நீண்ட காலம் ஆகும் ஆதலால், காரிமலை நாட்டு மக்கள் இந்த இலந்தை நாட்டில் வசிக்கலாம். அதன் பின்னர் நீங்கள் விரும்பினால் அங்கேயும் புனரமைப்பிற்கு பின்னர் செல்லலாம். அந்த பகுதி நாடுகள் முழுவதும் எங்கள் இலந்தைநாடு வசம்தான் இப்போது உள்ளது. தற்போது நான் நிர்மாணம் செய்து வரும் மதகுமேட்டு நாட்டில் நம் மக்கள் குடியேறலாம்.

என்னுடைய ஒரே வேண்டுகோள் அவர்கள் இங்கே வசிக்கும்போது எங்கள் குலம் நிறுவிய லக்ஷ்மி நாராயணன் பெருமாள் கோவிலை தங்கள் கோவில் போல் பாவித்து பூஜைகள் செய்து, பாதுகாத்து வரவேண்டும். அந்த கோவிலுக்கு வேண்டிய நன்செய், புன்செய் நிலங்களையும் மற்ற மான்யங்களையும் எங்கள் குடும்பம் இன்றுமுதல் இலந்தைநாட்டு பாதுகாவலராக விளங்கப்போகும் ஆதிதீரராமராஜா அவர்களிடம் ஒப்படைத்து விடுகிறோம். இதற்கு பிறகு பெருமாள் கோவில் விழாக்களில் மரியாதை ஏற்க மட்டுமே நானும் என் சந்ததிகளும், அதற்கு பின் வரும் சந்ததிகளும் வருகை புரிவோம். இலந்தை நாட்டில் இக்காடுகளை நீக்கி ஒரு நல்ல நகரை நிறுவ காரிமலை மக்கள் அனைவருக்கும் வேண்டிய அளவுக்கு பொருளுதவி அளிக்க உறுதி கூறுகிறேன்.

இங்ஙனம் வீரமகாதேவராஜா.

இதைப் படித்து நிறுத்தி விட்டு சீதாராமன் இன்னொரு கட்டில் இருக்கும் ஓலைகளை படிக்க ஆரம்பித்தார்.

“காரிமலை மன்னனாகிய ஆதிதீரராமராஜா என்ற நான் இலந்தைநாடு மகாராஜாவிற்கு என்னுடைய, என் குடும்பத்தினருடைய மற்றும் என் மக்களுடைய நன்றிகளை காணிக்கை ஆக்கி உறுதி கூறுகிறேன். எங்களுக்கு, எங்கள் சந்ததிகளுக்கு தாங்களே முன்னோடி. எங்களுடைய பசி, பட்டினியை போக்கி எங்களுக்கு இடமும் அளித்து காத்த நீங்கள் ஒரு மாபெரும் வள்ளல்

மட்டும் அல்ல. எங்களுக்கு தெய்வம் போன்றவர். தாங்கள் வேண்டியபடி பெருமாள் கோவில் நிர்வாகங்களையும் , பாதுகாப்பையும் நல்ல முறையில் கவனிப்பது இனி எங்கள் தலையாய கடமையாகும். இது நான் மட்டும் இல்லாமல் என் சந்ததியினர்களும் செய்வதற்கு கடமைப்பட்டுள்ளார்கள். தங்களுக்கு என் மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறேன். எப்போது எங்கள் ஊரில் கோவில் விழாக்கள் நடைபெற்றாலும், முதல் பூஜை, மரியாதை தங்கள் குடும்பத்தார்க்கு அளிக்கப்படும். நீங்கள் இதைத் தவறாது ஏற்க வேண்டும். இது தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து கடைபிடிக்கப்படும். இந்த தெய்வத்தின் மீது சத்தியம் இட்டு இதைக் கூறுகிறேன். மற்றபடி இந்த கோவிலில் பூஜைகள் கைங்கர்யங்கள் செய்து வருவதற்கு தங்கள் நாட்டின் கிருஷ்ணமாச்சாரியார் குடும்பத்தையே தொடர வேண்டுகிறேன்.

இங்ஙனம் ஆதிதீரராமராஜா.

இந்த ஓலைகளை உள்ளே வைத்து விட்டு சீதாராம பட்டாச்சார்யார் பேச ஆரம்பித்தார். ” மக்களே, இந்த ஒப்பந்தங்களுக்கு சாட்சிகளாக என் மூதாதையர்,அதே போல் ராஜாங்கம், பத்மநாபன்,பாலசுந்தரத்தின் மூதாதையர்கள் கைநாட்டு வைத்துள்ளனர். அப்போது இலந்தைநாட்டூர் என்றழைக்கப்பட்ட இலந்தைக்காட்டூர் மகாராஜாவை எல்லோரும் ‘வள்ளலே வாழ்க, தெய்வமே வாழ்க’ என்று உரத்த குரலில் உச்சரிக்க ஆரம்பித்தனர். மகாராஜா உடனே எல்லோரிடமும் ‘ என்னை புகழாதீர்கள்.இதை ஒரு அண்டை நாட்டு நல்ல மன்னனாக நான் செய்தேன்.என்னை இனி வள்ளல், தெய்வம் என்றெல்லாம் அழைக்க மாட்டோம் என்று சத்தியம் செய்யுங்கள். இனி இது உங்கள் நாடு. நீங்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழ வேண்டும். இந்த ஒப்பந்தம் பற்றி வருங்காலத்தில் உருவாக்கும் சந்ததிகளுக்கு தெரிய வேண்டும் என்ற காலம் ஏற்படும். அப்போது தெரியட்டும்.அதுவரையில் இந்த பேழைக்குள் இருக்கும் சுவடிகள் பெருமாள் பாதுகாப்பிலேயே இருக்கட்டும். மேதிரை நாட்டு மன்னன், ஆதிதீரராமராஜா மன்னரை அடிமைப் படுத்தி விட்டேன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறான்.அது அப்படியே இருக்கட்டும். அவனுடைய சூழ்ச்சியால் மகாராஜாவின் இளையவர் ஆதிதீர ஆனந்தராஜனை கொன்று விட்டு பழியை எங்கள் படைத்தளபதி மீது போட்டு விட்டான். இதை நம்பி மகாராஜா எங்கள் படைத்தளபதியை சிறையில் அடைத்து மரண தண்டனை கொடுத்துவிட்டார். ஆனால் இந்த சூழ்ச்சி பற்றி அறிந்த மங்களநாயகமணியனும், வேதவித்வவீரராகவநாதனும் மன்னரிடம் உண்மையைச் சொன்னதால் படைத்தளபதியை விடுவித்தார். பிறகு எங்களுக்கு நட்பு நாடாக காரிமலை மாறியது.இதன் விவரம் மேதிரை மன்னன் அறியான்.இதனால்தான் நான் காரிமலை நாட்டை புதுப்பிக்கிறேன்

என்று கூறினேன். எங்கள் படை அங்கிருப்பது தெரிந்தால் மேதிரை மன்னன் அந்தப் பக்கம் வரவே மாட்டான்’ என்று கூறி அனைவரையும் சத்தியம் செய்யச் செய்து பின்னர் எல்லோருக்கும் உணவளித்தார்.

“இதைப் பத்தி எனக்கு தெரியும்.ஆனால் நானும் சத்தியத்தை கடைபிடித்த அவங்க வழில போனேன். இதில் மேலே குறிப்பிட்ட இரண்டு பேர்வழிகள் ராஜாங்கம், பத்மநாபன் இவர்களின் மூதாதையர்கள்.இந்த தலைமுறை, இதுக்கு முந்திய தலைமுறை இவங்களுக்கெல்லாம் இந்த வழக்கம் ஏன்னு தெரியாது. பரமானந்தம் குடும்பம் எதனால இங்கே வராங்கன்னும் தெரியாது. ஏதோ பெரிய மனுஷன் குடும்பம், அதனால்தான் அப்படீன்னு நினைச்சு இருந்தாங்க.நீங்களும் இருக்கீங்க. ஆனால் இவர் தந்தையார் ராஜரத்தினம் ஐயா எங்கிட்ட சொன்னாரு, ” சீமா, இன்னும் பத்து வருஷந்தான், அப்புறம் பாரு நீயே ஒரு சத்தியத்தை மீறும்படியா மாறும்.நானே உனக்கு சொல்வேன்.அதனால பாதகம் இருக்காது.மூணுதலைமுறைக்கு மேல் எல்லாமே மாறிடும்.” அது இப்ப எனக்கு நினைவுக்கு வருது. அவங்க ஒரு ராஜ் குடும்பம் மக்களே, கொடுத்த கைகள் அந்த பரம்பரை கைகள் “என்று கூறி பேச்சை நிறுத்தினார்.

மிகவும் வியந்து பார்த்துக் கொண்டிருந்த பூமிநாதன், சேஷகோபாலன்,குமாரவேலு பரமானந்தம் அருகே வந்து கையெடுத்து கும்பிட்டு ” ஐயா, எங்களை மன்னித்து விடுங்கள். இவ்வளவு உண்மைகள் இதுல இருக்குன்னும் நீங்க எங்க மூதாதையர்களுக்கு வாழ்வு கொடுத்த ராஜபரம்பரைன்னும் யாருமே அறியாததால இந்த பிரச்னை ஏற்பட்டிடுச்சு.எங்களை தவறா எடுத்துக்காதீங்க ” என்று ஒரு சேர கூறினார்கள்.

பரமானந்தம் உடனே ” அதெல்லாம் உங்க பேர்ல எந்த தப்பும் இல்லை.எனக்கே நிறைய உண்மைகள் தெரியாது. என் அப்பா யாரிடமும் சொன்னதில்லை. இன்னிக்கு முழுசா தெரிஞ்சுகிட்டேன். இதைத் தெரிஞ்சுக்க நேரமும் வந்துட்டுதுன்னு எங்க ஐயா சொன்னாரு.” என்று அவனுக்கு ஆறுதலாக கூறி ஊர் மக்கள் அனைவரையும் கையை உயர்த்தி வணங்கினார்.சத்யா இதற்கிடையே குமாரவேலுவை பார்த்து கட்டை விரலை மேல் நோக்கி காட்டவே, அவனும் அதற்கு அதே முறையில் செய்து விட்டு சிரித்தான்.

வழக்கம் போல பூஜைகள் அவர் குடும்பத்தின் முதல் மரியாதைகளில் துவங்கி நடைபெற்றது. ஆனால் இம்முறை பூமிநாதன், சேஷகோபாலன், குமாரவேலு அதை ரசித்துப் பார்த்தனர்.

இந்த வருஷம் பெருமாள் கோவில் விழாவில் இலந்தைக்காட்டூர் மக்களின் ஈடுபாடு எப்போதையும் விட அதிக உற்சாகத்துடன் காணப்பட்டது. விழாவின் கடைசி நாளில் ஊர் மக்களின் வற்புறுத்தலுக்கும்,வேண்டுகோளுக்கும் இணங்க, பரமானந்தம் தன் தந்தை ராஜமாணிக்கத்தையும் கூட்டி வந்திருந்தார்.

அனைத்து மக்களுக்கும் இப்போது ‘உண்மையான வள்ளல் ‘ யார் என்பது நன்றாகவே புரிந்தது.

.

ரா.நீலமேகம் பெயர்: நீலமேகம். வயது 71. பூர்வீகம்: திருவாரூர் மாவட்டம், கீழமணலி என்ற கிராமம். தந்தை: ராமஸ்வாமி அய்யங்கார். கிராமத்து கணக்கராக இருந்தவர். தாயார்: ஜானகி படிப்பு: பி.எஸ்சி (இயற்பியல்), திருச்சி தேசியக் கல்லூரி. வேலை தேடி மும்பைக்கு சென்று இருபத்தைந்து ஆண்டுகள் பல தனியார் கப்பல் துறை அலுவலகங்களில் பணிசெய்து கோயம்புத்தூர் இடமாற்றம். உலகின் முதல் பெரிய கப்பல் பணியகமான, 'மெர்ஸ்க் லைன்' (Maersk Line) கோவை அலுவலகத்தில் பொது மேலாளராக…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *