தான் பிறந்த ஊர்
கதையாசிரியர்: பம்மல் சம்பந்த முதலியார்
கதைத்தொகுப்பு:
குடும்பம் நாடகம்
கதைப்பதிவு: July 22, 2026
பார்வையிட்டோர்: 74
(1956ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாடக பாத்திரங்கள்:
ஹரிபக்தன், பரமநாதன், ஒரு சிறுபெண், ஞானபாசன், மாரியம்மாள்.
முதற் காட்சி
இடம் – தோப்புகளால் சூழப்பட்ட ஒரு சிற்றூர்.
ஹரிபக்தனும் பரமநாதனும் வருகிறார்கள்.
ஹ. இடம்தான் – இந்த பசும் புற்றரையில்தான் எனது சிறிய நண்பர்களுடன் நான் பலநாள் விளையாடினேன். அதோ, அந்த மரங்கள் மீது எத்தனை முறை நான் அவைகளிலிருக்கும் பட்சிகளின் கூடுகளுக்காக, ஏறியிருக்கிறேன்! கொட்டாங்குச்சிக் கப்பல்களை நான் விட்டு விளையாடிய குட்டை அதோ அங்கிருக்கிறது; என்னென்ன ஞாபகங்கள் எல்லாம் என் மனதிற்கு வருகின்றன! சில வருத்தத்தைத் தருகின்றன, சில சந்தோஷத்தைத் தருகின்றன.ஆம் – இவ்வுலகில், மற்ற இடங்களில் காணும் காட்சிகளை விட நாம் பிறந்த இடத்தில் தோற்றும் காட்சிகள், ஒரு தனிமையான வழியில் நமது மனதில் உறுத்துகின்றன.
ப. அப்படியானால் இந்த இடம் தான் நீர் நாடிவந்த இடம். அநேக வருஷங்களுக்கு முன் நீர் இதை விட்டுப் பிரிந்த படியால், நீர் பட்சம் வைக்கத்தக்க உறவினர், சிநேகிதர்கள், ஒருவரும் இங்கு இருப்பதற்கில்லை.
ஹ. இல்லைதான் – எனக்கு உறவினர் ஒருவருமில்லை – எப்பொழுதும் இருந்ததில்லை யென்றே சொல்ல வேண்டும். நீ அறிந்தபடி, என் தாய் தந்தையர் மடிந்தவுடன் என்னைக் காப்பாற்றுவார் ஒருவருமில்லை. என்னுடன் பிறந்தவர்களெல்லாம் பல இடங்களில் பிரிந்து போயினர், எங்கள் குடும்பத்திற்கிருந்த கொஞ்சம் சொத்தும் விற்கப்பட்டது. பிறகு என் செவிலித்தாயும் அவள் புருஷனும் என்னைப் பாதுகாத்து வந்தனர். என் சவரட்சணைக்காக கொடுக்கப்பட்ட சிறிது பணமும் சில வருடங்களில் நின்றுவிட்டது.
ப. பிறகு நீர் எப்படி சவரட்சணை செய்யப்பட்டீர்?
ஹ. என்னை வளர்த்து வந்த புருஷனும் பெண்சாதியும் என்னை அதிக அன்போடு வளர்த்தனர். அவர்களிருவரும் மிகவும் ஏழைகளாயிருந்த போதிலும், தங்கள் சொந்த குழந்தைகளுடன் என்னையும் ஒருவனாக வளர்த்து வந்தார்கள்; அன்றியும் நான் அனாதையான போதிலும் என் குடிப்பிறப்பிற்குத் தக்க செல்வாக்குடன் வளர்த்தனர். இங்கிருந்த மடத்துத் தம்பிரான் ஒருவர் உதவியைக் கொண்டு, ஒரு தெருப்பள்ளிக்கூடத்திற்கு என்னை அனுப்பினர்; எனக்கு வேண்டிய உண்டி உடைகளையும் உதவினர். அன்றியும் அவர்களிருவரும் குடி முதலிய துர்க்குணங்களில்லாத, தெய்வபக்தியுடை யவர்களா யிருந்தபடியால், என்னை நல்லபடி வளர்த்து வந்தனர். என் கோரிக்கை யெல்லாம் அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமையை என்றும் நான் மறக்கக்கூடா தென்பதாம். அவர்களை எப்படியாவது காணவேண்டுமென்றே நான் உன்னை அழைத்துக் கொண்டு இவ்வளவு தூரம் வந்தது.
ப. எத்தனை வயது வரையில் அவர்களுடன் இருந்தீர் நீர்?
ஹ. எனது பதின்மூன்றாம் வயது வரையில். பிறகு என் தேசத்தின் சுயராஜ்யத்தின் பொருட்டு நான் சண்டை போட வேண்டுமென்று அடக்கப்படாதபடி உந்தப் பட்டேன். அகஸ்மாத்தாய், எனது தூரபந்து ஒருவர் என்று ஒரு போர்க்கப்பலின் தலைவராக இருந்தார். கேள்விப்பட்டு, என்னைப் பாதுகாத்த உத்தமர்களிட மிருந்து விடைபெற்று, அவர் இருந்த துறைமுகம் போய்ச் சேர்ந்தேன். பிரயாணத்திற்கு வேண்டியவைகளை யெல்லாம் அவர்கள் தங்களாலியன்ற அளவுக்கு எனக்கு உதவினர் ; அவர்களை நான் விட்டுப் பிரிந்த பொழுது, என்ன அன்புடன் எனக்கு ஆசிகூறி அனுப்பினர், என்பதை நான் என்றும் மறவேன், என் சொந்தத்தாய் தந்தையர்களும் அவ்வளவு பரிவுடன் என்னை விட்டுப் பிரிந்திருக்க மாட்டார்கள். அக்கப்பலில் நான் சிறு ஆளாய்ச் சேர்ந்தது முதல், ‘பாரதமாதா” எனும் கப்பலுக்கு நான் தலைவனான வரையில், என் விர்த்தாந்த மெல்லாம் உனக்குத் தான் தெரியுமே. இந்த புண்யாத் மாக்களை விட்டுப் பிரிந்து பதினைந்து வருடங்களான போதிலும், எனக்கு அவர்கள் மீதிருக்கும் அன்பானது அதிகரித்திருக்கிறதே யொழிய குறைந்த பாடில்லை. ஆகவே இப்பிரதேசத்தில் அடியெடுத்து வைத்தவுடன் முதலில் அவர்களைப் பார்க்க வேண்டுமென்று தீர்மானித்தேன். அதுவரையில் என் மனம் நிம்மதி யடையாது.
ப. அவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்களோ என்னவோ, அதுவே சந்தேகம்.
ஹ. இந்த சிற்றூரான் ஒருவனை கொஞ்ச காலத்திற்குமுன் சந்தித்தேன், அவன் அவர்கள் இன்னும் உயிருடன் இருப்பதாகத் தெரிவித்தான், ஆயினும் அவர்கள், அதிக ஏழைகளாயினர் என்றும் சொன்னான்.
ப. அவர்கள் எங்கே வசித்துக்கொண்டிருந்தார்கள்?
ஹ. இந்தத் தெருவின் திருப்பத்தில் – என்ன இது? அந்த வீட்டையே காணோமே! அது இருந்த இடம் எனக்கு நன்றாய் ஞாபகம் இருக்கிறது; ஒருவேளை அதை இடித்து விட்டார்களோ என்னவோ? – ஐயோ! சிறுவயதில் எனக்குபகாரம் செய்தவர்களே! உங்கள் கதி என்ன வாயிற்றோ?
தூரத்தில் ஒரு பெண் வருகிறாள்.
ப. அதோ அந்த சின்ன பெண்ணைக் கேட்டுப்பாருங்கள்.
ஹ. இந்தம்மா, குழந்தை! – இங்கே ஞானபாசன் என்று ஒருவர் இருந்தாரே தெரியுமா அவரை, உனக்கு?
பெ. யாரு? தாதா ஞானபாசரையா? ஓ! நண்ணா தெரியுமே எனக்கு – அவர் பொஞ்சாதி மாரியம்மாளெகூடத் தெரியும்.
ஹ. அவர்கள் எங்கே வசிக்கிறார்கள்?
பெ. இந்த சந்துலே கொஞ்சதூரம் போனா அவுங்க வூடு இருக்குது.
ஹ. இந்த மூலையில் அவர்கள் முன்பு வாழ்ந்திருக்கவில்லையா?
பெ. ஆமா, அந்த ஜமீன்தார் ஏஜெண்டு, ஒரு வெத்திலே தோட்டம் போடணும் இண்ணு அந்த வூட்டே இடிச்சுட்டாரு.
ஹ. வா அம்மா, எங்களோடேவா அந்த வீட்டைக் காட்டு, உனக்கு காலணா தருகிறேன்.
பெ. அப்படியே ஆவட்டும்.
[கொஞ்சதூரம் அழைத்துக்கொண்டு போகிறாள்.]
அதோ — அந்த வெழல்கூரே போட்டிருக்கிற வூடு தான் அவங்குளுது – அதோ பாருங்க, மாரியம்மா கைராட்டினம் வைச்சிகினு நூல் நூத்துகினு இருக்கராங்க.
ஹ. இந்தாம்மா,
[ஒரு பைசா கொடுக்க, அதை வாங்கிக்கொண்டு போகிறாள்.]
என்னிருதயம் எப்படி அடித்துக்கொள்ளுகிறது! – அதுவா என்னை வளர்த்த செவிலித்தாய்? – ஆம் ஆம், இப்பொழுது ஞாபகம் வருகிறது! எவ்வளவு கிழவியாகி விட்டாள்! – ஏதோ வியாதியால் மிகவும் மெலிந்து போயிருப்பது போல் காண்கிறது.
ப. பதினைந்து வருஷங்களாயினவே நீங்கள் பார்த்து அன்றியும் ஏதோ கஷ்ட நிஷ்டூரங்களெல்லாம் அனுபவித்திருக்கிறார் போலிருக்கிறது, அதுதான் இப்படி மெலிவடையச் செய்திருக்க வேண்டும்.
மாரியம்மாள் வெளியே வருகிறாள்.
ஹ. [குடிசையின் கதவண்டைப் போய்] அம்மா, நமஸ்காரம் – எனக்கும் என் தோழனுக்கும் ஏதாவது தாகத்திற்குக் கொடுக்க முடியுமா? – எங்களுக்கு மிகவும் தாகவிடாயா யிருக்கிறது – இந்த வெயிலில் துலைதூரம் நடந்தபடியால்.
மா. ஐயா, எங்களிடம் ஜலம்தான் இருக்கிறது. அதைக் குடிப்பதானால் கொண்டு வருகிறேன்.
ப. சந்தோஷம் – கொஞ்சம் தயவுசெய்து கொண்டு வாருங்கள்.
மா. ஐயா, வெயிலில் நிற்கிறீர்களே – இங்கே உள்ளே வாருங்கள் கொஞ்சம், வெயில்படாதபடி. இது எங்கள் வீடு – இதோ இவ்வாசனத்தில் உட்காருங்கள் – நான் போய் தண்ணீர் மொண்டு கொண்டு வருகிறேன். [போகிறாள்.]
ஹு. [ஒருபுறமாக] அதோ வயோதிகன்! – உள்ளே போகலாம் வா.
[உள்ளே போகின்றனர்.]
காட்சி முடிகிறது.
இரண்டாம் காட்சி
குடிசையன் உட்புறம் வயோதிகனான ஞானபாசன் உட்கார்ந்திருக்கிறான். ஹரிபக்தனும், பரமநாதனும் நின்று கொண்டிருக்கின்றனர்.
ப. ஐயா, நாங்கள் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரும்படி உங்கள் மனைவிக்குக் கஷ்டம் கொடுத்திருக்கிறோம்.
ஞா. உட்காருங்கள் – ஐயா – உட்காருங்கள் – நான் உட்கார்ந்திருக்கும் நாற்காலியை நீங்கள் உட்கார உங்களுக்குக் கொடுத்திருப்பேன் – என் துர் அதிர்ஷ்டத்தால் எழுந்திருக்க முடியாதவனாயிருக்கிறேன் – முடமாய்; என் கண்களும் நன்றாய்த் தெரியவில்லை.
ஹ. [ஒரு புறமாக] ஐயோ பாபம்! முடமும் குருடுமா!
ஞா. ஆமாங்க – எப்படியும் வயசாகி பலஹீனப்பட வேண்டி யது தானே! – அதைத் தடுக்க யாரால் முடியும்! எல்லாம் ஈசன் செயல்.
ப. ஐயோ! நீங்கள் இன்னும் வேலை செய்துதானா ஜீவிக்க வேண்டும்?
ஞா. எங்களால் ஆனமட்டும் வேலை செய்து பிழைத்து வந்தோம் – தற்காலம் என்னால் ஒரு வேலையும் செய்யச் சக்தியில்லை – என் பெண்சாதியோ, பாவம்! அவளும் கிழவியாகி விட்டாள் நூல் நூற்று என்ன சம்பாதிக்க முடியும்? ஆகவே அன்னதான சமாஜத்தார் தர்மத்தில் காலட்சேபம் செய்து வருகிறோம்.
ஹ. அன்னதான் சமாஜமா! நீங்கள் ஒருகால் நன்றாய் வாழ்ந்தவர்கள் என்பதைக் கவனித்து, அவர்கள், உங்களுக்குப் போதுமான உதவி செய்கிறார்களா?
ஞா. அவர்கள் மீது நான் குறை கூறவில்லை ஐயா, ஒரு வாரத்திற்கு எட்டணா கொடுக்கிறார்கள், இந்த கஷ்ட காலத்தில் அது எவ்வளவிற்கு?
ஹ. வாஸ்தவமே – அது எவ்வளவிற்கு! – இவ்வளவுதானா அவர்கள் உதவுகிறார்கள்!
ஞா. ஆமா மையா, அதுகூட இனிமேல் கொடுக்க முடியாது, நீங்கள் சமாஜத்தின் தொழிற்சாலைக்கு வரவேண்டும், என்று சொல்லி யனுப்பியிருக்கிறார்கள்.
மாரியம்மாள் ஒரு பாத்திரத்தில் ஜலம் கொண்டு வருகிறாள்.
மா. இந்தாங்கள் ஐயா,இப்பாத்திரம் சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. அப்படியே நீங்கள் சாப்பிடலாம்.
ஹ. சமாஜத்தின் தொழிற்சாலைக்கா வரும்படி சொன்னார்கள் என்று கூறினீர்?
மா. ஆமாம் ஐயா, அதைக்கேட்டது முதல் என் புருஷன் மிகவும் கவலையுடனிருக்கிறார். சாகிற காலத்தில் நாங்கள் தொழிற்சாலையில் சாகவேண்டுமா என்று! நாங்கள் இதைவிட கொஞ்சம் நல்ல ஸ்திதியில் வாழ்ந்தவர்கள் – வாஸ்தவமாய் – நாங்கள் கொஞ்சம் நிலம் வைத்துக் கொண்டு பயிர்செய்து கொண்டிருந்தோம்; அவ்விட மிருந்த, அந்தக் கோயில் பக்கத்தில் வசிக்கும் ஜமீன்தார் ஏஜெண்டு, எங்களைத் துரத்தி விட்டான். அது முதல் நாங்கள் வரவர ஏழைகளாகி, பலஹீனப்பட்டவர்களாகி வருகிறோம், இப்பொழுது எங்கள் கையில் ஒரு சொத்துமில்லை.
ஞா. [கண்ணீர்விட்டு] ஈஸ்வரா! ஈஸ்வரா! அன்னதான சமாஜத்தின் தொழிற்சாலையிலா சாகவேண்டும்! அதை நினைக்கவும் என் மனம் தாளவில்லை. ஆயினும் மேலே இருக்கிறாரே, அவருக்குத் தெரியும் எது எங்களுக்கு நல்லதென்று! அவர் இச்சைப்படி யாகட்டும்! அதற்கு நாங்கள் கீழ்ப்படிய வேண்டியவர்களே!
ஹ. ஐயோ! உங்களுக்கு குழந்தைகள் இல்லையா? சிநேகிதர்களில்லையா உங்களுக்கு இக்கதியில் உதவிசெய்ய?
ஞா.ஐயா, எங்கள் குழந்தைகளெல்லாம் காலமாய் விட்டார் கள் – ஒருவன் தவிர – அவனும் தூரதேசத்தில் வாழ்ந்து வருகிறான் – எங்களைப் போல் ஏழையாக.
ப. நண்பர்களே, உங்களைப்போன்ற உத்தம ஜனங்களைப் பாதுகாக்க ஒருவருமில்லாமலா போயிற்று?
மா.இல்லையுங்கள்! எங்கள் அக்கம் பக்கத்திலிருப்பவர்களைத் தான் நாங்கள் அறிவோம். அவர்கள் நாங்கள் தொழிற் சாலைக்குத்தான் போகவேண்டுமென்று சொல்லுகிறார்கள்.
ஹ. ஏனையா,முன் நாளில் ஹரிபக்தர் குடும்பம் என்று ஒரு குடும்பம் இவ்வூரிலில்லையா?
ஞா. இருந்ததுங்கள், அது நிரம்ப காலத்திற்கு முன்னால்- அக்குடும்பத்தாரெல்லாம் செத்துப் போய் விட்டார்கள் என்று நினைக்கிறேன். அல்லது தூரதேசம் போயிருக்க வேண்டும்.
மா. ஆம், அந்த குடும்பத்தின் கடைசி குழந்தை, எல்லோரை யும்விட நிரம்ப அழகு, அவன் எங்கள் வீட்டில்தான் வளர்ந்து வந்தான்; நாங்கள் அந்தக் கழனியருகிலுள்ள வீட்டில் வாழ்ந்தபொழுது. பதின்மூன்று வருடம் எங்களுடன் வளர்ந்து வந்தான்; நிரம்ப நல்லபிள்ளை,என் சொந்த குழந்தையைப் போல் நான் அவனை வளர்த்து வந்தேன்.
ஹ, அவன் பிறகு என்னவானான்?
ஞா. அவன் நிரம்ப குணசாலியாயிருந்தபோதிலும், மிகுந்த தைரியமும் வீரமும் வாய்ந்தவன்; ஆகவே, கடைசி யுத்தம் வந்தபொழுது, கப்பல் படையைச் சேர்ந்து, யவனர்களுடனும் சுவர்ண பூமியார்களுடனும் சண்டை போட வேண்டுமென்று,புறப்பட்டுப் போய்விட்டான்- நாங்கள் எவ்வளவு தடுத்தும் பிரயோஜனப்படாதபடி. அதற்கப்புறம் அவன் செய்தி நாங்கள் ஒன்றும் கேள்விப்படவில்லை இதுவரையில்.
மா.உம்!- அவன் இறந்து போயாவது இருக்கவேண்டும். அல்லது யுத்தத்தில் மடிந்தாவது இருக்கவேண்டும்- ஏனென்றால், அவன் இந்நாட்டில் உயிரோடிருந்தால், எப்படியாவது இதுவரையில், அவன் எங்களைக் கூப்பிடுகிற வழக்கப்படி – தன் அப்பாவும் அம்மாவுமான – எங்களைப் பார்க்க வந்திருப்பான். அவன் என்னவாயினானோ வென்று எத்தனை ராத்திரி நான் கவலைப்பட்டு தூக்கம் வராமல் கஷ்டப்பட்டேன்.
[கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறாள்.]
ஹ.[பரமநாதனிடம் ஒருபுறமாக] இனி என்னால் பொறுக்கமுடியாது.
ப. [அவனிடம் ஒருபுறமாக] கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் இன்னும் – ஐயா, நீங்களிருவரும் எங்களுக்குக் காட்டிய அன்பிற்காக, உங்களுக்கு சந்தோஷத்தைத் தரத்தக்க ஒரு சமாசாரம் சொல்கிறேன் – இந்த ஹரி பக்த வம்சத்திலுதித்த, கடைசி பிள்ளை – ஹரிபக்தனை- அவனை ஹரி, என்று சுருக்கிக் கூப்பிடுவார்கள் –
மா. ஆம் ஆம் அதுதான் அவன் பெயர் – என் சின்ன ஹரி! – அவனைப்பற்றி என்ன சமாசாரம் ஐயா?- அவன் உயிரோடிருக்கிறானா?
ஞா. அந்த பெரிய மனுஷ்யர் பேசட்டும் மாரி.
ப. ஹரிபக்தர் உயிருடனிருக்கிறார். இப்போது ராஜாங்கத்தில் கடற்படையில் உத்தியோகம் செய்கிறார் – அவரை விட சிறந்த போர்வீரன் அப்படையிலே கிடையாது.
ஞா. நீங்கள் எங்களுக்கு வேடிக்கையாகச் சொல்கிறீர்களா என்ன?
ப. அப்படி யொன்றுமில்லை, சத்தியமாக.
மா. ஹா? ஈசன் கருணை! ஈசன் கருணை – அவனை நான் ஒரு முறை பார்க்கக் கூடுமாயின்!
ஞா. ஆம், அவனை – நான் இறப்பதற்குமுன் ஒரு முறையாவது பார்க்க வேண்டுமென்பதுதான் என் கோரிக்கை.
ஹ. இதோ இருக்கிறான் அவன்! இதோ இருக்கிறான் அவன்! என்னைக் காத்து ரட்சித்த புண்யாத்மாக்களே!- இதோ நான்தான் அவன்! நீங்கள் செய்த நன்றிக்கெல்லாம் ஏதாவது பிரதியுபகாரம் செய்ய வந்திருக்கிறேன்.
[மாரியம்மாள் பாதத்தில் பணிகிறான்.]
மா. [அவனை வாரி எடுத்து] ஹா! – இந்த பெரிய மனுஷ்யரா- என் ஹரி? – ஆம் ஆம்! சந்தேகமில்லை ! – எனக்குத் தெரிகிறது நன்றாய் – இப்பொழுது!
ஞா.ஐயோ! என் பாழுங்கண்கள்! – ஆயினும் அக்குரல் எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது.
[தன் கையை நீட்ட, ஹரிபக்தன் அதனைக்கெட்டியாகப் பற்றுகிறான்.]
ஹ. அப்பா! — நான் உங்களைப் பார்ப்பதுபோல் — நீங்கள் என்னைப் பார்க்கக் கூடுமாயின்!
ஞா.பெரிதல்ல! – இதுவே போதும் – நீர்தான் அவன்? – என் மனம் பரிபூரணமாகி விட்டது.
மா. இன்றைக்கு நான் எழுந்தவேளை நல்லவேளை! நல்ல வேளை!
ஹ. உங்களை நான் எப்பொழுதாவது மறந்து போவேன் என்று நினைத்தீர்களா?
ஞா. இல்லை இல்லை! உன் சுபாவம் எனக்கு நன்றாய்த் தெரியுமே! ஆயினும் நீ எங்களை வீட்டுப்பிரிந்து எத்தனை காலமாச்சுது?
மா. இந்தப் பெரும் பொங்கல் வந்தால் பதினைந்து வருஷமாகும்.
ஹ. அன்று உங்களை விட்டுப் பிரிந்தபிறகு, இந்நாட்டில் முதன்முறை நான் கால் எடுத்துவைத்தது மூன்று தினங்களுக்கு முன்பாக!
ஞா. இதற்குள்ளாக நீ எங்களைப் பார்க்கவந்தது எங்கள் அதிர்ஷ்டம்.
மா. ஏனப்பா! நீ யெவ்வளவு பெரியவனாய் வளந்துவிட்டாய்! இருந்தாலும் சிறுவயதி லிருந்த புன்சிரிப்பு, உன் முகத்தைவிட்டு அகலவில்லை இன்னும்!
ஞா. ஐயோ! நான் நன்றாய்ப் பார்க்க முடியவில்லையே! – ஆயி னும் அது பெரிதல்ல – இதோ இருக்கிறான் நமது குழந்தை – அவனது கையை நான் பிடித்துக் கொண்டிருக்கிறேன். இது போதுமெனக்கு – யாரோ உன்னுடன் ஒருவர் வந்தாரே – அவர் எங்கே?
ப. இதோ இருக்கிறேன் – நீங்கள் எல்லாம் இப்படி சந்தோஷமாய்ச் சந்தித்ததைக்கண்டு அடங்காத சந்தோஷ முடையவனாய்.
ஹ. பல வருஷங்களாக என்னைவிட்டுப் பிரியாத ஆப்தன் இவர்; உங்களிருவருக்கும் நான் எவ்வளவு கடமைப்பட் டிருக்கிறேனோ அப்படியே இவருக்கும் கடமைப்பட் டிருக்கிறேன்.
மா.அப்படியா – மிகவும் சந்தோஷம். அவருக்கு ஸ்வாமி எல்லாச் செல்வங்களும் கொடுத்து ரட்சிப்பாராக!
ஹ. நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டீர்களென்று கேள்விப் பட்டு நான் மிகவும் துக்கப்பட்டேன்; ஆயினும் அதெல்லாம் இனி போச்சுது. இனி நீங்கள் தொழிற்சாலைக்குப் போவதைப் பற்றி கனவிலும் கருதவேண்டாம்.
ஞா. ஸ்வாமி உன்னை ரட்சிப்பாராக! – இனி எனக்கு துக்க மென்பதில்லை- ஆயினும் நாங்கள் உனக்குப் பாரமா யிருக்கலாகாது.
ஹ. அதெல்லாம் ஒன்றுமில்லை, அதைப்பற்றி கவலை வேண்டாம். என்னிடத்தில் ஒரே ஒரு ரூபாய் இருந்தாலும், உங்களுக்கு நான் அதில் பாதி கொடுக்க வேண்டியவன். உலகத்தில் எனக்கு உதவ ஒருவரும் இல்லாதபொழுது, நீங்களிருவரும் என்னைக் காப்பாற்றவில்லையா! என் தாய் தந்தையர்கள் மடிந்தபோது, நீங்கள் என்னை உங்கள் குழந்தைகளில் ஒருவனாகப் பாவிக்கவில்லையா? பொழுது உங்கள் முதிர் வயதில் உங்களுக்கு உதவாமற் போவேனா நான்! ஒரு போதும் இல்லை.
மா. ஆம் ஆம் – இளவயது முதல் உனக்கு இந்த நல்ல சுபாவம் இருந்தது. எப்பொழுதாவது நம்முடைய சின்ன ஹரி நமக்கு உதவுவான் என்று நான் அப்போதே நினைத்ததுண்டு.
ஹ. வெயிலும் மழையும் உள்ளே நுழையக்கூடிய இக்குடிசையை விட்டு நீங்கள் உடனே புறப்படவேண்டும். இந்த ஊரிலாவது அல்லது வேறெங்காவது, உங்களுக்கு நான் ஒரு நல்ல வீடு சம்பாதித்துக் கொடுக்கிறேன்.
ஞா. அப்பா, நான் இந்த ஊரிலேயே என் காலத்தைக் கழிக்க விரும்புகிறேன். இதிலேதான் நான் பிறந்து வளர்ந்தேன், இதிலேயே நான் என் பிராணனை விடவேண்டும். வேறு வீடு பார்ப்பதென்றால், இந்த ஊரில் பழய தச்சன் இருந்து வீடு காலியாயிருக்கிறதாம் அது ஒரு வேளை கொஞ்சம் விலையதிகமாயிருக்குமோ என்னவோ?
ஹ. அதைப்பற்றி உங்களுக்கு கவலை வேண்டாம் – எந்த வீட்டைச் சொல்கிறீர்கள்? அந்த களத்து மேட்டின் பக்கத்திலே யிருக்கிறதே அதுதானே? அது தான் உங்களுக்குச் சரியான இடம்- அது எனக்கு நன்றாய் ஞாபக மிருக்கிறது; நாளைக்கே நீங்கள் அங்குபோக ஏற்பாடு செய்கிறேன் நான்.
மா. நான் கோரியதற்கும் – பிரார்த்தித்ததற்கும் – மேலாக இருக்கிறது.
ஹ. அதன் பக்கத்தில் ஒரு சிறு மனை வாங்கித்தருகிறேன். அதில் நீங்கள் ஒரு பசுவை மேயவிட்டு வளர்க்கலாம். ஒரு சின்ன வேலையாள் பெண்ணை ஏற்படுத்துகிறேன்/ அவள் அதன் பாலைக்கறக்கவும்; உங்களுக்கு வேலை செய்யவும் உதவுவாள். அந்நிலத்தில் ஒரு புறம், கீழ் பயிர் ஏதாவது போட்டு, உங்களுக்கு வேண்டிய காய் கறிகளை நீங்கள் உண்டாக்கிக் கொள்ளலாம். வீட்டின் பின்புறம், கோழி முதலியவைகளை நீங்கள் வளர்க்கலாம் அந்த வீட்டிற்கு சில தட்டுமுட்டு சாமான்களையும் வாங்கித் தருகிறேன்.
ஞா. ஹா! நீங்கள் செய்வது நிரம்ப அதிகம் நிரம்ப அதிகம்!
மா. இதென்ன இது! இவ்வளவு நன்மையையும் எங்களுக்கு வரும்பொழுது நான் ஏன் கண்ணீர் விடுகிறேன்!
ஹ. அந்த வீட்டுக்குச் சொந்தக்காரன் யார்?
ஞா. இதோ எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் – நெல்வேலி யப்பர்.
ஹ. அவரை எனக்கு ஞாபகமிருக்கிறது. அவரிடம் இதோ போய் பேசி முடிவு செய்துகொண்டு வருகிறேன் எல்லா வற்றையும். வா, அப்பா பரமநாதா – நான் வருகிறேன் – அப்பா! அம்மா!
[இருவரும் போகிறார்கள்.]
ஞா. அப்பா! ஸ்வாமிதான் உனக்கு கைம்மாறு செய்யவேண்டும்?
மா. நான் எழுந்தவேளை நல்லவேளை! நல்லவேளை! நாம் ஈசனைத் துதிப்போம்!
காட்சி முடிகிறது.
நாடகம் முற்றிற்று.
– ஒன்பது குட்டி நாடகங்கள், முதற்பதிப்பு: 1956, நாடகப் பேராசிரியர் ப.சம்பந்த முதலியார், பி.ஏ. பி. எல் அவர்களால் இயற்றப்பட்டது.
தொடர்புள்ள சிறுகதைகள்
முள்
ஜே.எம்.சாலி
August 1, 2026
கடவுள் போட்ட முடிச்சு!
கல்பனா ராஜகோபால்
August 1, 2026
பூசைக்குள் வரும் பூக்கள்
காரை ஆடலரசன்
August 1, 2026