இருவர்களும் திருடர்களே
கதையாசிரியர்: பம்மல் சம்பந்த முதலியார்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள் நாடகம்
கதைப்பதிவு: July 22, 2026
பார்வையிட்டோர்: 88
(1956ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாடக பாத்திரங்கள்:
சிகந்தர் திருடன், ஓர் அரசன்
முதற் காட்சி
இடம்:- அரசனின் கூடாரத்திற்கெதிர் அரசனுக்கு முன்பாக பயங்கரமான முறட்டுத் திருடன் ஒருவனை கை கால்களில் விலங்கைப் பூட்டி சேவகர்கள் கொண்டுவந்து நிற்க வைக்கின்றனர்.
அ. ஆஹா? உனது தீய தொழில்களைப்பற்றி நான் அதிகமாய் கேள்விபட்டிருக்கிற தேசியத் திருடன் நீ தானா?
தி. நான் ஒரு தேசியன் – ஒரு படைவீரன்!
அ. படைவீரன்! – திருடன்! – கொள்ளையடிப்பவன்! – கொலைக் காரப்பாவி! தேசத்தையெல்லாம் பாழாக்கியவன்! – உன்னுடைய தைரியத்தை நான் மெச்சியபோதிலும் – உனது துர் நடத்தையை வெறுத்து, அதற்காக உன்னை நான் தண்டிக்க வேண்டும்.
தி. நீர் இவ்வாறு குற்றங் கூற, நான் என்ன செய்தேன்?
அ. என்னுடைய ஆக்ஞையை யெல்லாம் நீ அலட்சியம் செய்யவில்லையா? ஜனங்களுடைய அமைதியை அழிக்க வில்லையா? உன்னுடன் வசிக்கும் பிரஜைகளின் உடம்பு களையும் உடமைகளையும் கெடுப்பதில் உன் காலத்தைக் கழிக்கவில்லையா?
தி. அரசனே! நான் உமது கைதி – நீர் சொல்வதையெல்லாம் நான் கேட்கவேண்டியவனே! நீர் விதிக்கும் தண்டனையைப் பொறுக்க வேண்டியவனே! ஆயினும் எனது ஆன்மா உம்மால் ஜெயிக்கப்படவில்லை. ஆகவே நீர் கூறும் கடுமொழிகளுக்கு உத்திரவு சொல்வதென்றால் சர்வ சுதந்திரமுடைய ஒருவனைப்போல் பதில் சொல்ல உத்திரவு கொடுக்கவேண்டும்.
அ. தாராளமாய் பதில் உரை – நான் யாருடன் வார்த்தை யாட இசைகிறேனோ, அவர்களை, என் சக்தியைக் கொண்டு மௌனமாயிருக்கும்படி அடக்க நான் விரும்பேன்.
தி. ஆயின் – உமது கேள்விக்குப்பதில் மற்றொரு கேள்வியால் உரைக்க வேண்டும். தாங்கள் உங்களது ஆயுட் காலத்தை எப்படி கழித்தீர்கள் இதுவரையில்?
அ. பெயர்பெற்ற சுத்த வீரனைப்போல்! – போர்வீரர்களுள் ஒப்புயர்வற்ற போர்வீரன், அரசர்களுள் உத்தமனான அரசன், அயல் நாட்டரசர்களை யெல்லாம் அடக்கியாண் டவர்களுக்குள் அதிபராக்கிரமசாலி! என்று என் புகழ் உலகெங்கும் பரவியிருக்கிறது! கேட்டுப்பார்!
தி. என்னுடைய புகழும் கொஞ்சம் பரவியிருக்கிறது! கேட்டுப்பாரும். தன்னுடைய – சிறு படையை என்னைவிட அதிக தைரியமாய் நடத்திய போர்வீரனை நீர் கண்ட துண்டா? – என்னைவிட – என்னையே நான் புகழ்ந்து கொள்வது நியாயமன்று. நீரே நன்றாயறிவீர், என்னை ஜெயிப்பதற்கு நீர் எவ்வளவு கஷடப்பட்டீரென்று!
அ. எப்படியிருந்த போதிலும் ந் ஒரு கொலைக்கஞ்சா திருடன் தானே! – மானமில்லா நாணயங்கெட்ட, கொள்ளைக்காரன் தானே!
தி. தேசங்களை யெல்லாம் வெல்லும் வெற்றிவீரன் மாத்திரம் என்ன? எங்கணும் கேடுவிளைக்கும் பிசாசுகளைப் போல் உலகெங்கும் திரிந்து, சுகமாய் வாழ்ந்து கொண்டிருந்தவர்களின் அமைதியை அழித்து, அவர்களது விவசாயத்தை யெல்லாம் பாழாக்கி, சட்டமின்றி, நியாயமின்றி, எல்லோரையும் கொள்ளையடித்துக் கொன்று, துவம்சப்படுத்த வில்லையா? இவ்வளவும் எதற்காக? உலகிலுள்ள தேசங்களை யெல்லாம் அடக்கி ஆளவேண்டும் என்னும் அடங்கா உமது பேர் ஆசையின் பொருட்டு! நூறு ஆட்களுடன் நான் சில ஜில்லாக்களுக்கு செய்ததை எல்லாம், நீர் நூறு ஆயிரம் சைனியத்துடன் பல தேசங்களுக்குச் செய்தீர். நான் சில மனிதர்களுடைய சொத்துக்களை அபகரித்தால், நீர் பல அரசர்களையும் அரச குமாரர்களையும் அழித்திருக்கிறீர்.
நான் சில சிற்றூர்களைக் கொளுத்தியிருந்தால், நீர் உலகிலுள்ள அநேகப் பெரிய ராஜ்யங்களையும் பட்டணங்களையும் அக்னிக்கு இரையாக்கிப் பாழாக்கி யிருக்கிறீர். ஆகவே உமக்கும் எனக்கும் வித்தியாசம் என்ன? நீர் ஒரு அரசனாகப் பிறந்தீர், நான் ஒரு பிரஜையாகப் பிறந்தேன் – ஆகையால் என்னைவிட ஆயிர மடங்கு பெரிய கொள்ளைக்காரனாக, உமக்கு அதிர்ஷ்டம் வாய்த்தது!
அ. ஆயினும்,நான் அரசனாக அன்னியர் சொத்தைக் கவர்ந்தால் அவற்றை யெல்லாம் அரசனாக மற்றவர்களுக்கு தானம் வழங்கி யிருக்கிறேன். பல ராஜ்யங்களை அழித்தால் அவற்றிலும் அதிகமாக ராஜ்யங்களை ஸ்தாபித்திருக்கிறேன். நான் எத்தனையோ கலைகளை அபிவிர்த்தி செய்திருக்கிறேன். எவ்வளவோ வியாபாரத்திற்கு உதவி புரிந்திருக்கிறேன்; வேதங்கள் முதலிய சாஸ்திரங்களையும் ஆதரித்திருக்கிறேன்.
தி. நானும், தனவந்தர்களிடமிருந்து பறித்த பொருளை ஏழை ஜனங்களுக்கு உதவியிருக்கிறேன்; காட்டு முறாண்டிகளான என் கூட்டத்தார்களை யெல்லாம் சீர்திருத்தி ஒழுங்குபடுத்தி யிருக்கிறேன். துராக்கிரதமாய்க் கீழ்ப் படுத்தப்பட்டவர்களைக் கைகொடுத்து தூக்கிப் பாதுகாத்திருக்கிறேன். நீர் கூறும் வேதாந்த சாஸ்திரம் எனக்கு ஒன்றும் தெரியாது, ஆயினும் இதை மாத்திரம் நான் உறுதியாய்ச் சொல்லுகிறேன்; நாமிருவரும் உலகினுக்குச் செய்த கெடுதிகளுக்குத் தக்க பிராயச்சித்தம் நம்மால் செய்ய முடியாது.
அ. [சற்று யோசித்து] போங்கள் நீங்கள் எல்லாம் – இவனது விலங்குகளைத் தறித்து விடுங்கள் – அவனுக்கு வேண்டியதைக் கொடுத்து உதவுங்கள்.
(திருடனைச் சேவகர்கள் அழைத்துச் செல்கின்றனர்)
அவன் கூறியபடி, எங்களிருவருக்கும், என்ன வித்யாசமிருக்கிறது! பெரிய அரசனும் பெரிய கொள்ளைக்காரன் தானே? – இது யோசிக்கவேண்டிய விஷயமாகும்.
காட்சி முடிகிறது.
நாடகம் முற்றிற்று.
– ஒன்பது குட்டி நாடகங்கள், முதற்பதிப்பு: 1956, நாடகப் பேராசிரியர் ப.சம்பந்த முதலியார், பி.ஏ. பி. எல் அவர்களால் இயற்றப்பட்டது.
தொடர்புள்ள சிறுகதைகள்
திருந்திய அசோகன்
அந்தனி ஜீவா
August 1, 2026
கானநாதனும் அவனது அமைச்சர்களும்
பம்மல் சம்பந்த முதலியார்
July 22, 2026
பாடலிபுரத்துப் பாடகர்கள்
பம்மல் சம்பந்த முதலியார்
July 22, 2026