அணில் குத்திகள்
கதையாசிரியர்: காஞ்சி.தங்கமணி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: July 26, 2026
பார்வையிட்டோர்: 124

மெதுவாய் நாக்கின் நுனியைக் கொண்டுபோய் வலிக்கும் இடதுபக்க கீழ் வரிசைக் கடை வாய்ப்பல்லின் மீது வைத்து இதமாய்த் தடவி விட்டார் எழுபத்தியிரண்டு வயது ஜானகிமாமி.
கிராம்பை நசுக்கி வைத்துப் பார்த்தாகி விட்டது.கல்லு உப்புபோட்ட வெதுவெதுப்பான வெந்நீரைக் கொப்பளித்துப் பார்த்தாகிவிட்டது.ஆனாலும் வலி குறையவில்லை. கண் காது தலை என்று எல்லா இடமும் விண்விண்னென்று வலித்தது.
வீங்கிப்போயிருந்த இடது கன்னத்தை இதமாய்த் தடவி விட்டார்.ஸ்..ஸ்..ஆ என்று வலியின் தாக்குதலால் மெதுவாய் முனகினார்.
கன்னம் ரொம்ப வீங்கி யிருக்கோ என்று நினைத்தபடி பெட் ரூமிலிருத்த பீரோவில் பதிக்கப் பட்டிருந்த கண்ணாடியில் கன்னத்து வீக்கம் எந்த அளவு உள்ளது என்று பார்க்கும் எண்ணத்தில் பீரோவின் கதவில் பதிக்கப் பட்டிருந்த கண்ணாடியின் முன்போய் நின்றார் மாமி.
வாய்க்குள்.. இடது கன்னத்துப் பகுதியில் வலிக்கும் பல்லருகே ஈறு.. கொட்டைப் பாக்கை அடக்கி வைத்துக் கொண்டது போல்.. பெரிய கோலிக்குண்டு சைஸ்ஸில் வீங்கியிருந்தது. அந்தவீக்கம் வெளிப்புறக் கன்னத்தில் தெரிந்தது.
ஆ வென வாயைத்திறந்து வாய்க்குள் பார்த்தார் மாமி. வலிக்கும் கடைவாய்ப் பல்லின் நடுப்பகுதி குழியாய்க் கருப்பாய் இருந்தது.
பூச்சிபல்லு..பல் டாக்டர்ட்ட போயி பல்ல எடுத்தாதா சரிவரும். வாரம் ஒன்னா பல்வலியால திண்டாடறேன்..
எதுவுமே சாப்ட முடியில..
காபியாவது குடிக்கிலான்னா.. வாயில சூடா எதையும் ஊத்திக்க முடியறதா என்ன?
சுரீர்னுனா பல்ல வலிக்கிறது..
பச்சதண்ணியா ஆத்தி காப்பிய குடிச்சாதா என்ன? குடிக்காட் டாதா என்ன?
சரி.. அப்டியே பல்லு வலிதாங்கலயேன்னு சாப்டாம கொள்ளாம..காபிகூட குடிக்காம நாம கெடந்தா..
ஐயோ பாவம் ஜானகி.. என்னதா இருந்தாலும் நம்ம பொண்டாட்டி..அவுளும் மனுஷி தானே?பல்லுவலின்னு தவிக்கிரா..பச்சதண்ணிகூட குடிக்காம பட்டினி கெடக்க றான்னு இவரென்ன தவிச்சுப்போய்..டாக்டரண்ட அழச்சுண்டு போப்போராறா என்ன?
இத்தனைக்கும் இவரண்ட நேரக்க சொல்லாம.. பல்லுவலி..பல்ல வலியா வலிக்கிறதுன்னு கைய கன்னத்துல கொண்டுபோய் வெச்சுவெச்சுண்டு சொல்லதாஞ் சொல்றேன்.. காதுல விழாமல்லா இருக்காது..ஆனாலும் மனுஷ அசஞ்சு குடுகலியே.. என்னதா இருந்தாலும் இவ நம்ம பொண்டாட்டி அப்பிடீன்னு தோணவே இல்லியே?.. பாவம்னு கொஞ்சங்கூட நெனைக்கிலியே..
நா அழகாத்தான் இல்ல.. இல்லேங்கல..
நா இப்பிடி அழகா இல்லாம இருக்குறதுக்கும்..தேடிவந்து ஒடம்புல அங்க இங்கன்னு ஒட்டிண்ட வெள்ளபுள்ளி வியாதிக்கும்.. நானா காரணம்?
என்னமோ லுகோடெர்மான்னு சொல்றா எனக்கு வந்திருக்குற இந்த வியாதிய..
நா என்ன இப்பிடி அழகில்லாம பொறக்கணும்.. இந்த வியாதி என்னத்தேடி வரணும்னு சாமிண்ட வரமா கேட்டேன்? எல்லாம் நா செஞ்சபாவமோ? எ முன்னோர் செஞ்சபாவமோ?
கல்யாணத்தும்போது நா அழகாமட்டும்தா இல்ல..அப்ப இந்த வெள்ளப்புள்ளி நோயெல்லாம் எனக்கு வல்ல.. இல்ல..
ரெண்டு கொழந்த பொறந்தப் பறம்தா இருவத்தஞ்சு வயசுக்கு வந்துது..நா என்ன செய்யறது?.. நா என்ன வியாதிய வெத்தல பாக்கு வெச்சு அழச்சேனா என்ன? எல்லா எவ்விதி..
சரி இவர்தா இப்பிடி இருக்கார்..பொம்மனாட்டிகளுக்கு நல்ல ஆடைவாக்கிறதும் அன்பான ஆம்படையான் வாக்கிறதும் அவா அவா கொடுப்பின அப்பிடீம்பா.. எனக்கு அன்பான ஆம்படை யான் வாக்கிற கொடுப்பினதா இல்ல..
பெத்த புள்ளையும் பொண்ணும்கூடவா.. நா அவா அம்மான்னு நெனைக் காதுங்க?
பெத்தகொழந்தைங்கங்க தன்னோட அம்மாதா ஒலகத்துலயே மொதல் அழகின்னு நெனைப்பாங்கனு சொல்லமாட்டா?
நெஜமாவே அழகில்லாத அம்மாவா இருந்தாலும்..அம்மா அழகில்லன்னு பெத்த புள்ளைங்களுக்குத் தோணவே தோணாதும்பா..அம்மாவோட வியாதிகூட அம்மாட்டேந்து வெலகிநிக்க வைக்காதுனு சொல்லமாட்டா?ஆனா எனக்கு எல்லாந் தலைகீழ்.
நாம் பெத்த குழந்தைங்கள என்னோட ஒட்டவிடாம செஞ்சு..
எங்கிட்டேந்து பிரிச்சி..என் உடல் வெள்ளைப் புள்ளிகளை குழந்தைகளிடம் காட்டிக்காட்டி அருவறுப்படையச் செஞ்சு..
அதுங்க பாசத்த மழுங்கடையச் செஞ்சு..என்னைத் தனியாக்கி..
கண்களில் கண்ணீர் துளிர்த்தது ஜானகிமாமிக்கு.
நா பெத்த ரெண்டும் அப்பா மாதிரியேன்னா என்ன வெறுத்து ஒதுக்குறா..ப்ச் என்றார் பெருமூச்சுடன்.
போகட்டும். நா அழகால்லன்னு இவுருக்குப் புடிக்கில.. நியாயந்தா..ஆனா பொண்ணு பாக்க குடும்பத்தோட வந்து தானே கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சார்? கல்யாணம் பண்ணிண்ட அப்பறம் புடிக்கில..புடிக்கிலன்னா?..அது என்ன நியாயம்?
எங்கப்பா குடுத்த நகநட்டும் சீர்செனத்தியும் கட்டுகட்டா பணமும் திதிச்சுதா? அந்த நேரம் அழகால்லாத எ உருவம் கண்ணுக்கு பேரழகா தெரிஞ்சிதா?
தாலிகட்டின அஞ்சாவுது நிமிஷமே இவர் அம்மா அதா.. எம்மாமியார் தம் பக்கத்துல நின்ன இன்னோரு மாமிகிட்ட என்ன சொன்னா? என்ன சொன்னா? நன்னா நெனவிருக்கு எனக்கு..
அந்த மாமி எம்மாமியார்ட்ட என்ன கேட்டாளோ? அது எங் காதுல விழல..ஆனா எம்மாமியார் அந்த மாமிட்ட சொன்னதுமட்டும் எங்காதுல தெளிவா விழுந்துது..
அடி பங்கஜம்..வெறகடுப்புல வெறகவெச்சு எரிக்கிறப்ப விழற தணல்ல தண்ணி ஊத்தி அணைச்சா கன்னங் கரேர்னு கெடைக்கிற கரிய குப்பேலயா கொட்டுறோம். வெய்யல்ல காயவெச்சு கூடேல அள்ளி சொவத்து மூலேல வைக்கிற தில்ல?
தேவப்படும்போது குமுட்டி அடுப்புக்கு அந்தக்கரியப் போட்டு தணலாக்கி பால்காச்ச.. காபிபோட.. ரசம் வெக்க.. வெண்ணகாச்ச உபயோகிச்சுக் கிறதில்ல..
அதுமாரி இந்த மூளி அலங்காரிய..கோவில் கருவறேல இருக்குற கருங்கல்லு செலயாட்டம் கன்னங்கரேல்னு இருக்குற இத.. ஆத்துமூலேல வெச்சாப் போச்சு.
இவ அப்பங் கொஞ்சமாவா சீர்செனத்தியும் பணமு குடுத்துருக்கான். ரெண்டு பொண்ணு வெச்சுருக்கேனே?அதுங்கள எப்பிடி கல்யாணம் கார்த்தினு பண்ணி கரையேத்துவே?.. அதுக்குதா எம்புள்ளைக்கு இந்த கருப்பிய கட்டிவெச்சுருக்கேன்.
அவ இவகூட வாழ்ந்தாபாடா? வாழாட்டபாடா?..எம்புள்ள ஆம்பளராஜா..இவ.. பேருக்கு ஆத்துல இருந்துட்டுப்போட்டம்..
என்று சொல்லிவிட்டு குரல் தாழ்த்தி எதோ சொல்ல கிக்கிக்கிக்..இருவரும் சிரித்தார்கள்.
அப்பவே மனம் விண்டுன்னா போச்சு எனக்கு.
கல்யாணம் ஆன ராத்திரி.
காசுக்கு ஆசப்பட்டு எங்கம்மா ஒன்ன எந்தலேல கட்டி வெச்சுட்டா..நா என்ன உன்ன ஆசப்பட்டா கல்யாணம் பண்ணிண்டே..
டின்னுதார வழிச்சி பூசிண்டாப்ல.. அணச்ச கொள்ளிக்கட்டையாட்டம் கன்னங்கறுக்க ஒடம்பும்..
அதுபோறாதுன்னு எண்ணவழியிற மூஞ்சியும்..
தேங்கா துருவியாட்டாம் வாயவிட்டு வெளிய நீட்டிண்ருக்குற நாலு முன்பல்லும்.. உவ்வே.. எவனாச்சும் தொடுவானாடி ஒன்ன?..
கல்யாணம் ஆன அந்த முதல்நாள் சந்திப்பிலேயே கணவனிடமிருந்து அமில வீச்சாய் வார்த்தைகள் வந்துவிழ..
நொறுங்கிப்போனாள் ஜானகி.
அப்பா..ஏம்ப்பா..எனக்கு கல்யாணம் பண்ணிவெச்சேள்?
நா கல்யாணம் வேண்டாம்ப்பா வேண்டாம்ப்பான்னு கெஞ்சினேனே?..
தாயில்லாத பொண்ணு நீ.. எனக்கு அப்புறம் ஒனக்கு ஆதவுன்னு யாருமா இருக்கான்னு?வருத்தப்பட்டு.. இதச்செய்யறேன் அதச் செய்யறேன்னு புரோக்கர்ட்ட சொல்லி வைக்க…
இவர் சொல்றாப்ல இவரோட அம்மா நீங்க குடுக்கறேன்னு சொன்ன அதிகபட்சமான சீர்செனத்திக்கும் பணத்துக்கும் ஆசப்பட்டு என்ன இவர் தலேல கட்டித்தா வெச்சுட்டா..
போ..அன்னண்ட.. என்று சொல்லிவிட்டு.. அன்று ராத்திரி நகர்ந்து சென்ற கணவர் நீலகண்டன்..
சிலநாட்களில் திடீர்னு ஒருநாள் ராத்திரி தானாக அருகில் வந்து ஏய்..என்றார் அதிகாரமாய்..
அப்படி கணவர் திடீரென வந்து ஏய் என்றதும் ஏனோ சடாரென “சொவத்துக்கீரை”க்கதைதான் நினைவுக்கு வந்தது ஜானகிக்கு.
“சுவத்துக்கீரைய வழிச்சுப் போடுடி சொரணகெட்ட..” தொடர்ந்து வரும் கடைசி வார்த்தையை குறிப்பிடாமல்.. அவ்வார்த்தையை மாற்றி “பொண்டாண்டி” என்று எழுதுவதே கௌரவம்.
மேற்கண்ட “சுவத்துக்கீரைய..” வசனத்திற்கான கதையை சின்னவயதில் அக்கம் பக்கத்தாத்து மாமிகள் அவ்வப்போது சொல்லிச் சிரிக்கும் போது கேட்டது.. இப்போதுபார்த்து நினைவுக்கு வந்தது ஜானகிக்கு.
அந்தக் கதையில் வருவது போல்..
கணவனின் தேவையும்.. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாத ஏய் என்ற அதட்டல் அதிகார தோரணையும் ஜானகிக்குப் புரிந்தது.
கதை நினைவில் வந்து கணவனின் வெட்டிவீம்பை வெளிச்சம் போட்டுக்காட்டியது.
அடிக்கடி சண்டைபோட்டுக் கொள்ளும் கணவன் மனைவி கதையின் நாயகனும் நாயகியும்.
இருவருமே விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
கணவன் சோம்பேறி. வாய்க்கு ருசியாய்ச் சாப்பிட ஆசைப் படுபவன்.
வாரம் ரெண்டுநாள் வேலைக்குப்போவதே அதிசயம். வரும் கூலியை சாராயம் குடித்தே செலவு செய்வான். வீட்டுக்குத் தரமாட்டான்.இதில் ரெண்டு குழந்தைகள் வேறு.
வீட்டில் இல்லாமை..வறுமை.
மனைவி கணவனைக் கண்டித்தும் பயனில்லை.
காய்கறி வாங்கிச் சமைக்கவே காசில்லை.அதனால் வீட்டுக் கொல்லையில் தானாய் வளரும் கீரைகளைப் பறித்துக் கடைந்துவைத்து வெறும் சோற்றை ஆக்கிவைப்பாள் மனைவி.
வாய்க்கு ருசியாய் உப்பு உரைப்பாய் கவுச்சி சாப்பிட ஆசைப்படும் கணவனுக்கு..
மனைவி ஆக்கிவைக்கும் வெறும் வெள்ளைச்சோறும் கீரைக்கடைசலும் கோவத்தைத் தூண்டும். கத்துவான்.
மனைவி கவலைப் படமாட்டாள்.
கத்தாத கபோதி..ஏ கத்துற? நீ கொண்டாரபாரு காசு.. நூறும் எறநூறுமா?அதவெச்சு.. ஒடுறது.. பறக்குறது.. நீஞ்சுறது எல்லாத்தியும் வாங்கி ஆக்கிப்போடுறே..நல்லா நாக்க சப்புக்கொட்டிக்கிட்டு சாப்புடு..
கேவலப்படுத்துவாள்.
அவளின் உண்மை குற்றச் சாட்டுக்குப் பதில் சொல்ல முடியாமல் அவன் சாப்பிடாமல் தட்டை நகர்த்திவிட்டு கோவத்தோடு எழுந்து செல்வான்.
அவள் கவலைப்படமாட்டாள்..
பசிச்சா தானாவந்து சோத்த திங்கட்டும் என்று விட்டு விடுவாள்.
அப்படித்தான் அன்றும் ஆனது.
அவனுக்குக் கடும் பசி. சோறும் கீரையும் கிடைத்தால் போதுமென்றிருந்தது.
சாப்பிட அமர்ந்தான். தட்டில் வழக்கம்போல் அரிசிச்சோறும் கீரைக்கடைசலும் வைக்கப்பட்டன.
அரிசிச்சோற்றையும் கீரைக்கடைசலையும் பார்த்தால் தான் வழக்கமாய்க் கத்தும் கத்தலைக் கத்தா விட்டால் தன் தன்மானத்துக்கு இழுக்காகி விடுமோ என்று நினைத்தான்.
பசி வயிற்றைக் கிள்ளியது.
வழக்கமாய்க் கத்துவதுபோல் கத்துவோம்.ஆனால் சாப்பிடாமல் எழுந்து போய் விடக்கூடாது.இதைவிட்டால் சோற்றுக்கு வேறுவழியில்லை.
பசி காதை அடைக்கிறது.
தன்மானமும் காக்கப்பட வேண்டும்..வயிற்றுப்பசியும் அடங்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டான்.
ஏய்..நெதமு இதே சோறும் கீரையும்தானா? நண்டு..மீனு கோழி.. மட்டனுன்னு எதாச்சும் ஆக்கமாட்டியா? நாக்கு செத்துப்போச்சி.. இத்த எவந்திம்பான்?
தன்மானத்தைக் காக்கவேண்டி கத்தினான்.
ஆனால் தட்டைவிட்டு எழுந்திருக்கவில்லை.பசி சோற்றைத் தியாகம் பண்ண மறுத்தது.
கேவலமாய்ச் சிரித்தாள் மனைவி.
அந்தக் கேவலச்சிரிப்பு அவன் தன்மானத்தை வெகுவாய்த் தாக்கியது..
தன்மானம் முந்த.. தட்டைக் கையிவெடுத்தான்.
பசிக்கும் வயிறு கத்தித் தடுத்தது.
ஐயோ..வேண்டாங் கீண்டானு எதையாவது சொல்லி சோத்த எனக்கு இல்லேனு ஆக்கிடாத..
அப்புறம் கொடலப்புடிச்சி கடிச்சித் துண்ணுடுவே கத்தியது பசிக்கும் வயிறு.
ஆமா..தன்மானம் அதுயிதுனு சொல்லி சோத்த தூக்கி வீசிப்பிடாத..மனமும் ஆட்சேபித்தது.
வயிற்றோடும் மனதோடும் சமாதானம் செய்ய மறுத்த தன்மானம்.. வலது கையோடு கூட்டணி அமைத்தது.
வலது கையால் தட்டிலிருந்த கீரையை அப்படியே மொத்தமாய் வழித்தெடுத்தவன் எதிரிலிருந்த சுவற்றை நோக்கி வீசினான்.
கீரை சொத்தென்று சுவரில் பதிந்து கொஞ்சம் கொஞ்சமாய் சுவரின் மீது கோடுபோட்டுக் கொண்டே தரையை நோக்கி இறங்க ஆரம்பித்தது.
மனைவி கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் நடப்பதைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
இப்போது தட்டில் வெறும் வெள்ளைச் சோறு மட்டுமே இருந்தது.
பசி பெருங்குடலை நண்டு கடிப்பதுபோல் இறுக்கிக் கடித்தது.
பசியால் ஏற்பட்ட காதடைப்பும்.. வயிற்றுக்கிள்ளலும்..பொங்கியெழுந்து ஆட்டம் காட்டிய தன்மானத்தை வடியச்செய்தது.
ஆனாலும் தான் ஆண் எனும் எண்ணம் தன் தோல்வியை ஏற்கமறுத்தது.
தோல்வியை வெளிக்காட்டிக் கொள்ள மனமின்றி வெட்டி ஜம்பம் செய்தது.. ஆணென்ற ஆணவம்.
என்ன செய்யலாமென நொடிநேரம் சிந்தித்தான்.
சாப்பாட்டை வேண்டாமெனச் சொல்லி ஜம்பமாய் எழுந்து செல்ல முடியாமல் பசிதடுக்க..
தான் தோற்றதாய் மனைவி யிடம் காட்டிக்கொள்ள விருப்பமின்றித் தன்மானம் தூண்டிவிட.. ஏய்.. என்றான் குரலில் வீராப்பைக்காட்டி.
அவள்..என்ன என்பதுபோல் இவனை அலட்சியமாயப் பார்த்தாள்.
அவள் அலட்சியப்பார்வையை அறிந்து கொள்ளாதவன் போல்..
“சொவத்துக் கீரைய வழிச்சிப்போடுடி சொரண கெட்ட பொண்டாட்டி” என்றான் வீராப்பாய்.
அவள் எழுந்தாள்..அவனால் வழித்துத் தூக்கிவீசப்பட்ட கீரையை சுவரிலிருந்து வழித்தெடுத்து அவன் தட்டில் வைத்தாள்.
தான் அலட்சியமாய்த் தூக்கியெறிந்த கீரைக் கடைசலையே..மீண்டும் தட்டில் வைத்து சோற்றுடன் கலந்து அமைதியாய் சாப்பிட்டுத் தன் வயிற்றுப் பசியை அடக்கினான் அவன்.
சாப்பிட்டு முடித்தவனுக்கு மனைவியின் முகம் பார்க்கக் கூசியது.
இப்போது அதே கதை..
அந்த அவனுக்கு வயிற்றுப்பசி.
அலட்சியம் செய்து தூக்கிவீசிய கீரையையே மீண்டும்..தன் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமலிருப்பதாய்க் காட்டிக்கொண்டு..வெற்று அதிகாரம் செய்து மனைவி யை வழித்துப்போட வைத்துத் தின்று வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொண்டான்..
ஆனால் இவர்?.. நா ஆசப்பட்டா ஒன்னக்கல்யாணம் பண்ணிண்டே? எங்கம்மா ஒன்ன எந்தலேல கட்டிட்டா..தார்பூசினாப்ல கருப்பு..எண்ணவழியிற மூஞ்சி..தேங்கா துருவிமாரி முன்னாடிநீண்ட நாலுபல்லு..
எவனாவது தொடுவானாடி ஒன்ன..போ அன்னண்ட..என்று சொல்லிக் கேவலப்படுத்தி கல்யாணமான அன்றே தள்ளிப்போனவர்..இன்னிக்கி இந்த ராத்திரி நேரத்துல..எ ரூமுக்கு ஏ வரணும்?எதுக்குனு தெரியலயா என்ன?
இதுல தா தோத்ததா காமிச்சுக்கக்கூடாதுன்னு ஏய் னு வேற அதிகார சத்தம். ஆம்பளங்குற ஆணவம்.
திடீர்னு நா அழகாயிட்டேனா?
நெலாமாரி பளிச்சுனு ஆயிட்டேனா?பல்லு முத்துச் சரம்மாரி வரிசையா வாய்க்குள்ள போய் நின்னி டுச்சா?அதே பல்லு..அதே தார்கருப்பு..அதே எண்ணவழியிற மூஞ்சிதா..
ஒன்னும் மாறலியே..
ஆனா நா எப்பிடியிருந்தாலும் இப்ப இவரோட தேவைக்குத் தேவப்படறேன்.அவ்ளதான்.
சொவத்துக்கீரைய வழிச்சுப் போடுடிமாதிரியான வெட்டி பந்தாதான்.
அன்புமில்லை..காதலுமில்லை.எந்திரத்தனமான ஆசையும் அதிகாரமும்..பெண் என்றால் அடங்கிப்போகவேண்டு மென்ற ஆண்டாண்டுகால சிறுமைத் தனமான சிந்தனையும்.. ஆணென்ற அகந்தையும்..
நான்குவருஷத்தில் ஆணும்.. பெண்ணுமாய் இரண்டு குழந்தைக்ளுக்கு ஜானகியைத் தாயாக்க..
ஜானகியின் இருபத்தைந்தாவது வயதில் அவளோடு வந்து ஒட்டிக்கொண்டது வெள்ளைப் புள்ளி நோய்.
முதலில் உதட்டைச் சுற்றியும்.. விரல்கள் நுனியிலும் புள்ளிகள் தெரிய..தேமல் என்று நினைத்தாள்.
ஆனால் அதுதேமல் இல்லை என்று நீலகண்டன் சொல்லி விட்டு மருத்துவரிடம் அழைத்துச்சென்றான்.மனைவி என்ற அன்பினால் மருத்துவரிடம் அழைத்துச் செல்லவில்லை.. மேலும் ஜானகியை வார்த்தையால் வதைக்கக் காரணம் கிடைக்குமென்று.
ஜானகிக்கு வந்திருப்பது
லுகோடெர்மா என்று உறுதிசெய்யப்பட்டது.
இந்நோய்..மெலானின் எனும் நிறமிக் குறைப்பாட்டால் வருவது.ஆட்டோ இம்யூன் சிஸ்டத்தால் வருவது.
இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவாது.
இது கிருமித்தொற்றால் வருவதில்லை.
இந்நோய் உள்ளவரின் எப்பொருளையும் பிறர் தாராளமாகப் பயன் படுத்தலாம்.
இவர் சமைப்பதை பயமோ தயக்கமோ இன்றி சாப்பிடலாம் என்று மருத்துவர் உறுதி சொல்லி அனுப்பினார்.
மருத்துவரின் மொழி செவிடன் காதில் ஊதிய சங்கின் சப்தம்போல் ஆயிற்று.
நீலகண்டன் ஆட்டம் ஆட ஆரம்பித்தார்.ஜானகி தனிமை படுத்தப்பட்டாள்.குழந்தைகளை அவளிடம் அண்டவிடாது பிரித்தார்.குழந்தைகள் தாயை வெறுக்கும்படி ஆக்கினார்.
மனைவி தனக்கு நேரில் வந்து நிற்கக்கூடாதென சட்டம் போட்டார்.ஜானகியை சமையலறைக்குள்ளேயே நுழையவிடவில்லை.
அக்னி வார்த்தைகளைக் கக்கினார்.அழஅழ வார்த்தைகளைப் பிரயோகித்தார்.ஜானகியை
வீட்டில் எல்லா இடத்திலும் நடமாட அனுமதிக்கவில்லை.
மொத்தத்தில் ஜானகி ஓர் அடிமைபோல் ஆனாள்.
தன் அந்தத் தேவைக்காக நீலகண்டன் அவ்வப்போது வெளியில் சென்று வந்தார்.
ஜானகியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாம் திருமணம் செய்யத் தயாராய்தான் இருந்தார். ஆனாலும் ரெண்டுபிள்ளைகள் இருக்கும் அவருக்கு யாரும் பெண்கொடுக்க முன் வரவில்லை.
அடிக்கடி விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்துப் போட வற்புறுத்துவார் ஜானகியை.
தாங்கமுடியாத மனதின் ரணம் ஜானகியை தற்கொலை பற்றி எண்ணவைக்கும்.
தற்கொலை எண்ணம் எழும்போதெல்லாம் சின்னவயதில் கதா காலட் சேபம் கேட்கும் வழக்கத்தில்.. ஒருமுறை..கதாகாலட்சேபம் கேட்டபோது கதை சொன்ன வர்.. வாழ்க்கையில் கஷ்ட்டத் தாலோ..வியாதியாலோ..வேறு எந்தக்காரணத்தாலோ யாரும் அதிலிருந்து தப்ப தற்கொலை செய்துகொள்ள நினைக்கக் கூடாது.தற்கொலை எதர்க்கும் தீர்வாகாது.
நமக்கு விதிக்கப்பட்ட விதியை நம் ஆயுள் எத்தனைநாளென்று ஆண்டவன் நிர்ணயித்திருக் கிறானோ அந்தநாள்வரை
வாழ்ந்து அனுபவிக்க வேண்டும்.
தற்கொலை செய்துகொண்டு தப்பிக்கலாமென்பது இயலாது.
மீண்டும் பிறந்து விதிக்கப் பட்டிருந்த அந்த கஷ்ட்டமோ.. வியாதியோ அதனை விதித்திருக்கும் காலம்வரை அனுபவித்தே ஆகவேண்டும். இது இறைவன் எழுதி வைத்திருக்கும் விதி என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன என்று சொன்ன போது அவரின் வார்த்தைகள் சிறுபெண் ஜானகியின் மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்தது.
அதனால் தற்கொலை என்ற எண்ணம் மனதில் எழும் போதெல்லாம்.. மனதைச் சமாதானம் செய்து கொண்டாள்.
பிள்ளைகள் நீலகண்டனால் வளர்க்கப்பட்டனர்.படித்தனர்.வேலைக்குப் போயினர். கல்யாணம் பண்ணிக் கொண்டனர்.அம்மா என்ற பாசம் ஜானகிமீது அவர்களுக்கு வரவே இல்லை.
ஆயிற்று இதோ ஜானகிக்கு இப்போது எழுபத்தியிரண்டு வயது.இருபத்திஐந்தில் பற்றிய வியாதி எழுபத்தியிரண்டில் நாற்பத்தேழு வருடங்களில் உடலைப் பெரும்பாலும் வெள்ளையாக்கிவிட்டிருந்தது.
அப்பப்பா எவ்வளவு பேச்சு கேட்டாயிற்று கல்யாணம் ஆன நாளிலிருந்து?
அதுவும் இந்த வியாதி வந்தபிறகு வார்த்தைகள் அக்னித் தணலாய்.. அமில வார்த்தைகளாய்..
தார் ரோட்டுல..வெள்ளக்கலர் பெயின்ட்ட பட்டபட்டையா.. விட்டுவிட்டு அடிச்சாப்ல..
ஒட்டகச்சிவிங்கிமாரி கோடுகோடா என்று விதவிதமான வர்ணனைகள்.
எப்போதும் ஏச்சும்.. பேச்சும்.
உடலாலும் உள்ளத்தாலும் நைந்து போனார் ஜானகிமாமி.
எப்பவாவது ஓரிருமுறை கணவரின் எதிரில் எதிர்பாராமல் வந்துவிட நேரிடும அப்போதெல்லாம் நீலகண்டன் வாயிலிருந்து..வில்லிலிருந்து புறப்பட்டு வரும் அம்புச் சரங்களாய் வார்த்தைகள் வெளிவந்து மனதைக்குத்திக் கிழிக்கும்.
பாவி பாவி இப்பிடியா நாக்குல நரம்பில்லாம பேசுவ..மனசுல கொஞ்சம்கூடவா ஈவு இரக்கம் கிடையாது?இதவிட மோசமான நோய் ஒனக்கு வரதுக்கு எத்தன நாழி ஆகும்?
மனது துடித்துத் தவிக்கும். அடிவயிற்றிலிருந்து வெறுப்பு உற்பத்தியாகி நெஞ்சைவந்து அடைக்கும் மாமிக்கு.
இப்போதும்.. பல்வலி என்று தெரிந்திருந்தும் கொஞ்சமும் பாவப்படாமல்..சாப்பாடு தண்ணிகூட இல்லாம இருக்கிறாளே ஒருத்தினுகூட இரக்கப்படாம..எவ்வளவு நெஞ்சழுத்தம்?வயசுல எண்பது வயசாகப்போறது..இப்பவும் அதே திமிர்..ஆணவம்..ஒனக்கு ஒன்னுமே வராதா? நீ என்ன எப்டீல்லாம் படுத்திவெச்ச.. இப்பவும் படுத்திவெக்கிற.. இந்த பாவத்துக்கெல்லாம் ஒனக்கு தண்டனையே ஆண்டவன் குடுக்கமாட்டானா?நியாயம் செத்துப்போச்சா?.. பாவி..புருஷனா நீ..மாமியின் மனம் பொங்கிப்பொங்கி வழிந்தது.கனத்துப் போனது.
கணவர் வெளியில் போயிருக்கும் தைரியத்தில் வாசலுக்கு வந்து வராண்டா வில் நின்றார்.
எதிர்வீட்டு வாசலில் பெரிதாய் வேப்பமரம்.வைகாசி மாதமென்பதால் காயும் பழமுமாய்க்கீழே மண்ணில் கொட்டிக்கிடந்தன.
பழத்துக்காக அணில்களும் காகங்களுமாய் வந்து குவிந்து..அவை எழுப்பும் சப்தத்தால் மரம் அல்லோல கல்லோலப்பட்டது.
தெருக்கோடிவரை மாமியின் பார்வை நீண்டது.
தெருக்கோடியில் நாற்பத்தைந்து ஐம்பது வயதிருக்கும் உடல்மெலிந்த உயரமான ஆள் ஒருவன் தயங்கியபடிநின்றிருந்தான்.
கையில் ஆறடியிருக்கும் மெலிதான சீரான மூங்கில் குச்சி.அதன் முனையில் மாட்டுவண்டி ஓட்டுபவர்கள் வைத்திருக்கும் தார்க்குச்சி யின் நுனியில் அடிக்கபட்டு ஒரு இன்ச் அளவு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் முனைதீட்டிக் கூராக்கப்படிருக்கும் ஆணிபோல் இவன் கையிலிருத்த குச்சியிலும்
கூரான ஆணி அடிக்கப் பட்டிருந்தது.தோளிலிருந்து இடுப்புவரைத் தூளிபோல் தொங்கும் கொஞ்ச பெரிய சைஸ் பை.
அணில் குத்துறவன் போலன்னா இருக்கு இவனப்பாத்தா என்று நினைத்துக் கொண்டார் மாமி.
இந்தகாலத்துலயும் அணில் குத்துறவுங்க இருக்காங்களா என்ன?மனம் அதிசயித்தது.
மெல்லமெல்ல வேப்பமரம் நோக்கி நடந்துவந்தான் அவன்.
இவனைப்பார்த்ததும் மரத்திலிருந்த காகங்கள் விருட்டெனப் பறந்து மறைந்தன.
அணில்கள் ஓடி ஒளிந்தன.
சற்றுமுன் சப்தமாய் இருந்த வேப்பமரம் சட்டென அமைதியாயிற்று.
மரத்திலிருந்து நான்கடி தூரத்தில் சில நிமிடங்கள் அமைதியாய் நின்றான் அவன்.
அணில்களுக்கு அணில் குத்திகளைப் பார்த்தாலே நமக்கு ஆபத்துவரப்போகிறது என்று புரிந்துவிடுமோ என்னவோ?ஒரு அணில்கூட வெளியில் தலைகாட்டாது பதுங்கிவிடும்.
எல்லாம் பத்துநிமிடம்தான்.
அணில்கள் ஆபத்தை மறந்துவிடுங்களோ என்னவோ?மீண்டும் வெளியே வரத் தொடங்கும்.
அந்தநேரம் அணில்குத்திகள் தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பிப்பார்கள்.
நாக்கை மடக்கி உதட்டைச் சுழித்து..விதவிதமாய் ஒலி எழுப்புவார்கள்.ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு அழைப்பு.
விளையாடச்சென்றிருக்கும் குட்டிஅணிலை தாய் அணில் அழைப்பதுபோல் ஓர் ஒலி..
நிஜமெனநம்பி குட்டிஅணில் விளையாட்டைவிட்டுவிட்டு தாயிடம் ஓடிவரும்..சட்டென இடதுகை விரல்களை ஆங்கில எழுத்து “ஓ”பொல் வளைத்து நீண்ட குச்சியை அதற்குள் நுழைத்து குறிபார்த்து குட்டி அணிலை நோக்கி குச்சியை செலுத்த குச்சியின் நுனியிலி ருக்கும் ஆணி அணில் குஞ்சின் உடலுக்குள் நுழையும்..”வ்ரீச்” என்ற மரண ஒலி எழுப்பி குஞ்சுஅணில் செத்துப்போகும்.
கண்ணிமைக்கும் நேரத்தில் அணில்குஞ்சின் செத்த உடலை தோளில் தொங்கும் பைக்குள் ஆணியிலிருந்து உருவித்தள்ளுவான் அணில் குத்தி.
தன் குஞ்சின் மரண ஒலிகேட்டு தாய் தவிப்போடு வெளியே ஓடி வரும்..அது வரும் எனத் தெரிந்திருக்கும் அவனின் அடுத்த இலக்கு தாய்அணில்.
அதன் கதை முடியும்.
அடுத்து காதலன் அணில் காதலியை அழைக்கும் சீழ்கை ஒலி எழுப்புவான்.
இதைத்தேடி அதுவும் அதைத்தேடி இதுவும் வரும்.
ரெண்டின் கதையும் முடியும்.
அரைமணி நேரத்தில் ஏழெட்டு அணில்களாவது அணில் குத்தியின் தோள்பைக்குள் விழும்.
அணில்குத்தி நடத்திய அணில் வேட்டையின் முறைகள் அனைத்தும் மாமிக்கு அத்துப்படி.
கிராமவாழ்க்கை கற்றுத் தந்தபாடம். எட்டு..பத்து வயது சிறுமியாய் இருந்தபோது இந்த அணில்குத்திபோல் நிறைய அணில்குத்திகள் அணில் குத்தவருவார்கள்.
கிராமங்களில் மரங்களுக் கும்..அணில்களுக்கும் குறைச்சலா என்ன?
சிறுவர்களும் சிறுமிகளுமாய்
அணில்குத்திகள் குரலெழுப்பி அணில்களை வெளியே வரவழைத்து அவற்றைக் குத்தி பையில் போட்டுக்கொள்வதை சுற்றி நின்று வேடிக்கைப் பார்ப்பதுண்டு.
அணில்குத்திகள் எழுப்பும் விதவிதமான ஒலிக்கான அர்த்தம் அவர்களைக்கேட்டுத் தெரிந்து கொண்டவர்கள் அக்கால சிறுபிள்ளைகள்.
அப்படித்தான் தெரிந்து கொண்டாள் அப்போதைய சிறுமி ஜானகியும்.
அணில்குத்தி போய்விட்டான்.
பாவம் அணில்கள்.. கூராணி யால் குத்துப்படும்போது ஆது உடலாலும் மனதாலும் என்ன பாடுபடும்?என்று தோன்றியது மாமிக்கு.
க்கும்..அதுங்களாவது குத்துப்படும்போது சில நிமிஷங்களே வதைபட்டுட்டு செத்துப் போயிடுங்க..அப்பறம் அதுங்களுக்கு வலியுந் தெரியாது வாதையும் தெரியாது..
ஆனா நீ..தினம்தினம் கூரான ஆணியவிடக் கூர்மையான நாக்க வெச்சு ஒம்புருஷ எத்தன வருஷமா வார்த்தைங்களால ஒம்மனசப்புண்ணாக்கறான்?
அணில்களாவது சிலநிமிஷம் வதைய அனுபவிச்சிட்டு செத்துப்போயிடுதுங்க..
நீ பதினெட்டு வயசுலேந்து..
தோ..ஒ இந்த எழுவத்ரெண்டு வயசுலயும் ஒம்புருஷனோட குத்திக்கிழிக்கிற வார்த்தைங் கள வாங்கிவாங்கி.. இன்னும் சாகாம..
ஓம் புருஷன விட அணில்குத்தி அணில்களுக்குத் தரும் வலியும் வேதனையும் கொறச்சல்தான்.
ஜானகிமாமியின் மனம் புலம்பித்தவித்துப் பொங்கிப் பொங்கி வேதனையை வெளிப் படுத்தியது.
நீலகண்டன் மேல் வெறுப்பை உமிழ்ந்தது.
தடதடவென ஒலியெழுப்பியபடி ஆத்துவாசலில் வந்துநின்ற ஆட்டோவை பயத்தோடு பார்த்தார்மாமி.இவர்தா ஆட்டோல வராறோ?
நா வராண்டால வந்து நிக்கறதப்பாத்தா..ஏ சனியனே நா வெளீல போய்ட்டேன்னு தைரியமா வாசல்ல வந்து நிக்கறயா?
வெள்ளவெளுக்க சுண்ணாம் புல குளிச்சிட்டு வந்தாப்ல வந்து நிக்கிற ஒன்னப்பாத்தா பயத்துல நாய்கூட செத்துப்போய்டும் என்று இளக்காரமாய்த் திட்ட ஆரம்பிச்சா நிறுத்தவே மாட்டாரே என்று பயந்து போனார் மாமி.
சட்டென உள்ளேபோகத் திரும்பியவரை மாமி என்ற கோடியாத்து நாராயணனின் குரல் அழைக்க சடாரெனத் திரும்பிப் பார்த்தார் மாமி.
கடைத்தெரு போனவர்.. வெயிலின் தாக்கம் தாங்காமல் கீழேவிழுந்து கையும் காலும் வாயும் இழுத்து முடங்கிப் போக..மருத்துவமனையில் பதினைந்துநாள் இருந்துவிட்டு
வந்து அன்று ஆத்தில் கட்டிலில் நிரந்தரமாய்ப்படுத்தாயிற்று.
மருத்துவமனைக்கு புள்ளையும் பெண்ணும் வந்து பார்த்த விட்டுப் போனதோடுசரி.
எவளைக் கரித்துக் கொட்டினாரோ..கேவலப்படுத்தினாரோ..நாய்போல் நடத்தினாரோ..அழகின்மையையும்..நிறபாதிப்பையும் சொல்லிக்காட்டிச் சொல்லிக் காட்டி இழிவு படுத்தினாரோ..
அந்த அவளே இப்போது எல்லாமாகிப்போனாள்.அவள் கையையே இனி எதிர்பார்க்கும் அவலம்.
கண்கள் நன்றாகத் தெரிந்தன. காதுகள் நன்றாகக் கேட்டன.
வாய்பேச்சில்லை..உடல் அசைவு இல்லை. நடப்பதை யெல்லாம் மனது அறிந்து கொண்டது.
ஏய்..ஜானகி இப்ப ஒன் மொற..
இப்ப ஒம்புருஷ ஒங்கைபாத்து..
ஒன்ன இத்தன வருஷமா பாடாப்படுத்தின..கேவலப்படுத்தின..வார்த்தையாலயே வதச்சவன்..இப்ப ஒங்கைய எதிர்பாத்து படுக்கேல..
விடாத விடாத..ஒம் மனசு ஆறுற வர அவன ஒருவழிபண்ணு..
அவுனுக்கு காது நல்லா கேக்குது..ஒன்ன அவ பேசினாபேச்சுக்கு இப்ப வட்டியும் மொதலுமா குடு..
ஜானகிமாமியை அவரின் மனது உசுப்பிவிட்டது.
இல்ல..இல்ல..அவர் எனக்கு செஞ்ச கொடுமைக்கெல்லாம் பதில் கொடும எதுவும் செய்யப் போறதில்ல..எந்த கொடுமை யான வார்த்தைகளையும் குடுக்கப்போறதில்ல..
ஆனா அவரோட காலம் முடியிரவர அவரோட காதுக்கு
மனுஷங்க பேசுர எந்த வார்த்தையும் அவர் காதுல விழாம பாத்துப்பேன். மௌனமே அவர சுத்தி ஆட்சி செய்யும்.
நினைவு உணர்வு இருக்குற யாருக்கும் தன்னைச் சுற்றியிருக்குற கனமான அமைதியே பெருந்தண்டனதா.
வெண்குஷ்ட்டி..வெண்குஷ்ட்டினு என்னைக் கொடும் வார்த்தையால சொல்லிச் சொல்லி கேவலப்படுத்தின..
எந்த வெள்ளையாகிப்போன எங்கை வீட்டுல எதுமீதும் படக்கூடாதுனு சட்டம் போட்டாரோ.. அந்த இவருக்கு நா குடுக்கப்போற ஒரே தண்டன..
சமயலறைக்குள் போனார் ஜானகிமாமி.
நாற்பத்தேழு வருடங்களுக் குப்பின் சமையலறைக்குள் நுழைந்து..தன் வெளுத்துப் போன கையால் புளிகரைத்து ரசம் வைத்து சாதம் வடித்து வைத்ததிலிருந்து..
ஒரு பாத்திரத்தில் சாதத்தைப் போட்டு..ஒரு கிண்ணத்தில் ரசத்தை எடுத்துக்கொண்டு நினைவாய் டம்ளரொன்றை யும் எடுத்துக்கொண்டு சமயலறைவிட்டு வெளியே வந்து கணவன் படுத்துக் கிடக்கும் கட்டிலருகே வந்து அவரின் கண்ணெதிரே அமர்ந்தார் ஜானகிமாமி.
லுகோடெர்மாவால் வெளுத்துப் போன வலதுகையால் பாத்திரத்திரத்திலிருந்த சாதத்தைப் பிசைந்தார்.
பார்த்துக்கொண்டே இருந்தார் நீலகண்டன்.
பிசைந்த சாதத்தில் ரசத்தை ஊற்றினார்.மீண்டும்..வெளுத்த கையைவிட்டுக் கட்டிமுட்டி இல்லாமல் கையால் சாதத்தோடு ரசத்தை நன்றாகக் கலக்குபவர்போல் கலக்கிக் கலக்கிக் கலக்கி..
பார்த்துக்கொண்டே இருந்தார் நீலகண்டன்.
ரசம்விட்ட சாதக்கரைசலை டம்ளரில் ஊற்றி எடுத்துக் கொண்டு கணவர் அருகில்வந்தார் மாமி.
பார்த்துக்கொண்டே இருந்தார் நீலகண்டன்.
வேண்டாம் என்று சொல்ல வாய் முடங்கிவிட்டதால் அவ்வார்த்தையைச் சொல்ல முடியவில்லை.
கையை ஆட்டி மறுக்க கை இயங்கவில்லை.
அருகில் வந்தார் மாமி. வாயத் தொறங்கோ என்று சொல்ல வில்லை.
இடது கை இருவிரல்களால் கணவரின் இருகன்னத்தையும் அழுத்த நீலகண்டனின் வாய் தானாகத் திறந்து கொள்ள ரசம்சாதக் கரைசலை அவர் வாயில் ஊற்றினார் மாமி.
கணவர் கரைசலை விழுங்கும் வரை கைவிரல்களை எடுக்காமல் நின்றார்.
விழுங்கித்தான் ஆகவேண்டிய நிலை. நீலகண்டனின் தொண்டைக்குள் ரசம்சாதக் கரைசல் அவரின் முயற்சியின்றித் தானாக இறங்கியது.
கரைசல் கணவரின் தொண்டைக்குள் இறங்கி விட்டதை உறுதிப்படுத்திக் கொண்ட ஜானகிமாமி விரல்களை எடுத்துக் கொண்டார்.
விரல்களை எடுத்தவர் கணவரின் கண்களுக்கெதிரே தன் வெளுத்துப்போன இரு கைகளையும் இப்படியும் அப்படியும் காண்பித்துக் காண்பித்து ஆட்டினார்.
நிறமிக்குறைப்பாட்டு நோயால எ ஒடம்பு வெளுத்துப்போக.. கொஞ்சம் கூட பச்சாதாபப் படாத.. அதவெச்சே என்னை என்ன சிறுமப்படுத்தினேள்?..
நா தொட்டதக்கூட தொட மாட்டேன்.. நா சமைச்சா சாப்பிடமாட்டேன்னு எப்பிடீல்லாம் எளக்காரமா பேசினேள். இப்ப இதே வெளுத்துப்போன கையால புளியக்கரச்சு வெச்ச ரசம்..சாதம்.
அந்த சாதத்துல ரசத்தவிட்டு இதே கையவிட்டுக் கரச்ச..ரசம் சாதக்கரைசல குடிக்க நேரிட்டதுல்ல?.. குடிச்சேளா? இப்ப என்ன பண்ணப்போறேள்?..
செஞ்ச பாவம் சும்மாவிடாது.. நமக்கே திரும்பிவரும் வேற ரூபத்துல..
இதுக்குப்பேருதா வளரி.. எறிதடி(பூமராங்)..சொல்லிக் கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறினார் ஜானகிமாமி.
தொடர்புள்ள சிறுகதைகள்
குர்பானி
ஜே.எம்.சாலி
July 26, 2026
பூசைக்குள் வரும் பூக்கள்
காரை ஆடலரசன்
July 26, 2026
உயிர் உனதானதே!
லாவண்யா ஸ்ரீராம்
July 26, 2026