கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 26, 2026
பார்வையிட்டோர்: 143 
வாசிப்பு நேரம்: 14 நிமிடங்கள்

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம் – 1

கல்லூரி வளாகம் முழுக்க மாணவர்களின் ஆர்ப்பரிப்பு. இறுதி ஆண்டு மாணவர்கள் தேர்வை முடித்துவிட்டு மகிழ்ச்சியில் பண்டிகைபோல் கொண்டாடிக்கொண்டிருந்தனர். நண்பர்களுடன் புகைப்படம் எடுப்பதும், பேராசிரியர்களிடம் விடை பெறுவதுமாக அங்கங்கே கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள்.

படிப்பை முடித்து வீட்டுக்குச் செல்லும் ஆர்வம், நண்பர்களைப் பிரியும் சோகம், புது வேலைக்குச் செல்லும் உற்சாகம், அதே வேலையைப் பற்றிக் கலக்கம், எதிர்காலத்தைப் பற்றிய பயம் என்று பல உணர்வுகள் அங்கே காணப்பட்டன. ஆனால் திவ்யா முகத்தில் இருப்பதை யாராலும் உணர முடியவில்லை. தோழிகள் கூடக் கேலி செய்தார்கள். “என்ன திவ்யா? பரீட்சை சரியாக எழுதவில்லையா? முகத்தைப் பார்த்தால் என்னவோ போல் இருக்கிறது”.

“வாய்ப்பே இல்லை. இன்றைய வினாத்தாள் மிகவும் எளிமையாகவே இருந்தது. திவ்யா தோல்வியடையும் வண்ணம் பரீட்சை எழுதியிருக்க மாட்டாள்! ஆனால் சில நாட்களாகவே திவ்யா ஒரு மாதிரிதான் இருக்கிறாள்.”

“ஒருவேளை, வருங்காலத்தைப் பற்றிப் பயமா?”

“அப்படி என்ன பயம்? திவ்யாவுக்கு. வீட்டுக்குச் சென்றதும் திருமணம் என்று ஏற்பாடு செய்திருக்கிறார்களா?”

“அதற்குப் பயப்படுவானேன்! சந்தோசமாகச் செய்துகொள்ள வேண்டியதுதானே! என் வீட்டில் அப்படிச் சொன்னால் பரவாயில்லை, முதுகலை படிப்பு முடிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்!”

இப்படியாக ஒவ்வொருவரும் அவரவர்க்குத் தோன்றியதைப் பேசிக்கொண்டிருக்க, அவர்களுடன் நடந்தபடி மௌனமாக இருந்தாள் திவ்யா. கல்லூரியின் இறுதி நாள் சம்பிரதாயங்களை எல்லாம் முடித்துவிட்டு, விடுதிக்கு வந்தாள். ஏற்கனவே கட்டி வைக்கப்பட்டிருந்த பழைய புத்தகங்களையும் குறிப்புகளையும் பெற வந்த ஜூனியர் மாணவிகளிடம் அவர்களுக்கு வேண்டியதைக் கொடுத்துவிட்டு பெட்டிகளைக் கட்டினாள். மாலையில் தோழிகளை அழைத்துச் செல்ல ஒவ்வொருவர் வீட்டில் இருந்தும் ஆட்கள் வரத் தொடங்கினர். திவ்யா அவள் பெட்டியை எடுத்துக்கொண்டு விடுதியை விட்டு வெளியே வர, பெரும் கூட்டம். மாணவிகள், அவர்களின் உறவினர்கள், கார்கள், ஆட்டோக்கள் என்று வாகன நெரிசல் அதிகமாகவே இருந்தது. அவளை அழைத்துச்செல்ல யாரும் வரவில்லை என்பது அவளுக்கு நிச்சயமாகத் தெரியும். முதல் நாள் வீட்டிலிருந்து தொலைபேசியில் அழைத்து, அவளாக வீட்டுக்கு வரும்படி சொன்னார்கள் அவளுடைய பெற்றோர்கள். இதுவரை அவள் கல்லூரிக்கு ஒருமுறை கூட அவர்கள் வந்ததில்லை. இன்று மட்டும் வருவார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். நெரிசலைத் தாண்டிச் செல்கையில் தோழி ஒருத்தி, “திவ்யா! உன் வீட்டிலிருந்து வந்துவிட்டார்களா? உன் அம்மா அப்பாவை நான் பார்த்ததே இல்லை.” என்று ஆர்வமாகத் தேடினாள்.

பலமுறை தோழிகள் கேட்டிருக்கிறார்கள். கல்லூரி விடுதியில் ஒரே அறையில் மூன்று வருடங்கள் இருந்தபோது, குடும்பத்தைப் பற்றிக் கேட்காமல் இருப்பார்களா? மேலோட்டமாகச் சொல்லி இருக்கிறாள். அவள் முழுக் கதையையும் சொல்ல அவளுக்கே மனம் இல்லை.

‘என்னை அழைத்துச் செல்ல யாரும் வரமாட்டார்கள். என்னைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. மூன்று ஆண்டுகள் கல்லூரிக்கு வராதவர்கள் இன்று மட்டும் வருவார்களா?’ என்று சொல்லிவிட வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவள் வீட்டாரைக் குறைக் கூறக் கூடாது என்று பலமுறை திவ்யாவே, ‘வெளியூரில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நிறைய வேலை. யாரையும் சாராமல் வாழ எனக்குக் கற்றுத் தந்திருக்கிறார்கள்’ என்று சொல்லி வைத்திருக்கிறாள். இப்போது அதை ஏன் மாற்றிச் சொல்ல வேண்டும்.

“வர முடியவில்லை என்று சொன்னார்கள். அதனால் தான் கிளம்பிவிட்டேன்!” என்றாள் திவ்யா.

“ஓ! எப்படிச் செல்வாய்?”

தோழி அக்கறையில் கேட்டாலும், அவளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்றால், இங்கேயே நிற்கவேண்டி வரும். இந்தத் தோழி போல் இன்னும் இருவர் வருவார்கள். ஒவ்வொருவருக்காகவும் விளக்கம் தர வேண்டும்.

“நேரம் ஆகிறது. இன்னும் கொஞ்ச நேரத்தில் கூட்டம் அதிகரித்தால், இங்கே ஆட்டோ கூடக் கிடைக்காது. நான் புறப்பட வேண்டும்! ஊருக்குச் சென்று போன் செய்கிறேன்.” என்று வேகமாகப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு நடந்தாள். பெட்டியின் கனம் அதிகம் என்பதால் அவள் நினைத்த வேகத்துக்கு நடக்க முடியவில்லைதான். நல்ல வேளையாக ஒரு ஆட்டோ ஓட்டுநர் கிடைத்தார்.

“எங்கே செல்ல வேண்டும் அம்மா?”

“பஸ் ஸ்டாண்ட் போக வேண்டும்.”

“மீட்டருக்கு மேல் முப்பது ரூபாய் கொடுங்கள்.”

முப்பது ரூபாய் அதிகம் தான். ஆனால் தோழிகளிடையே சங்கடம் நேராமல் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைத்து ஆட்டோவில் ஏறினாள்.

விடுதியின் முன் இருந்த கூட்டம் சாலையில் இல்லை. பதினைந்து நிமிடத்தில் பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து விட்டார் அந்த ஆட்டோக்காரர். அவர் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு, காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தாள். அவள் செல்லவேண்டிய பேருந்து வர இன்னும் பத்து நிமிடம் இருப்பதாகச் சொன்னார்கள். குடிப்பதற்குத் தண்ணீர் பாட்டிலையும், இரவு உணவுக்கென்று ஒரு பொட்டலத்தையும் வாங்கிக் கொண்டு வரும்போது, பேருந்து வந்து விட்டது.

பேருந்து புறப்படக் குறைந்தது அரைமணி நேரம் ஆகும். கொஞ்சம் சீக்கிரமாகக் கிளம்பி இருந்தால், மாமா வீட்டுக்கு ஒருமுறை

சென்று பார்த்துவிட்டு வந்திருக்கலாம் என்று திவ்யாவுக்குத் தோன்றியது. ஆனால் எதற்கு? அங்கே அவளுக்குப் பெரிய வரவேற்பு இருக்காது. சென்ற முறை மாமா மகேந்திரன் அவளைப் பார்க்க கல்லூரி விடுதிக்கு வந்தபோது பேசியது ஞாபகம் வந்தது.

“திவ்யா குட்டி! உன் இறுதிப் பரீட்சை என்று வருகிறது?” அவர் உயரமாக வளர்ந்துவிட்டாலும், திவ்யாவை அவர் அப்படித் தான் அழைப்பார்.

“இன்னும் நாற்பது நாளில் மாமா!”

“உனக்கு விடுதியை எப்போது காலி செய்ய வேண்டும்?”

“கடைசி பரீட்சை மே மாதம் பத்தாம் தேதி. அடுத்த நாள் மாலை வரை விடுதியில் தங்கலாம். நான் பத்தாம் தேதி இரவே கிளம்பி வந்து விடுகிறேன் மாமா!”

லேசாக இருமி தொண்டையைச் சரி செய்து கொண்டவர், “நீ பெங்களூரு சென்று விடு திவ்யா!”

“ஏன் மாமா? நீங்கள் எல்லோரும் எங்காவது சுற்றுலா செல்கிறீர்களா? நான் வீட்டில் தனியாக இருந்துகொள்வேன். பக்கத்து வீட்டில் ஆட்கள் இருப்பார்கள் தானே!” என்று அப்பாவியாய் திவ்யா கேட்டாள்.

“நீ அந்த வீட்டுக்கு வருவது சரி வராது! நீ அங்கே வந்தால், அத்தை ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பாள். எல்லோருக்கும் கஷ்டம். நீ உன் அம்மா அப்பாவிடம் சென்றுவிடு.”

திவ்யாவுக்கு மாமா சொல்வது புரிந்தது. “கவலைப்படாதீர்கள் மாமா! அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தான். பிறகு நான் சென்னைக்குச் சென்று விடுவேன். எனக்கும், இன்னும் இரண்டு தோழிகளுக்கும் ஒரே நிறுவனத்தில் வேலை உறுதியாகி விட்டது. சென்னையில் விடுதி பற்றிக் கூட விசாரித்து வைத்துவிட்டேன். அதிக நாட்கள் உங்கள் வீட்டில் இருக்க மாட்டேன்.”

‘உங்கள் வீடு’ என்று சொல்லும்போது திவ்யாவின் தொண்டை கூட லேசாக அடைத்தது.

“சென்னை வேலையா? இதுபற்றி நீ ஒன்றும் சொல்லவில்லையே!”

“இரண்டு நாட்களுக்கு முன் தான் உறுதி ஆனது மாமா! தோழியின் அக்கா கூடச் சென்னையில் வேலை செய்கிறாள். அவர்கள் இருக்கும் விடுதியில் நாங்கள் தங்க ஏற்பாடு செய்துவிடுவதாகச் சொன்னார்கள்.”

“உன் அம்மா அப்பாவிடம் சொன்னாயா!”

“அவர்களிடம் ஏன் சொல்ல வேண்டும்?” வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டு பதில் சொன்னாள் திவ்யா.

திவ்யாவைக் கோபத்துடன் ஒரு பார்வை பார்த்தவர், மறுகணம் ஒரு பெருமூச்சுடன், “இனி நீ அவர்களைக் கேட்டுத்தான் எல்லாம் செய்ய வேண்டும். நேற்று உன் அப்பா கூடக் கடைசி தேர்வன்று உன்னை அழைத்துச் செல்ல வருவதாகச் சொன்னார். நீ முதலில் அவர்களிடம் விவரம் சொல். உன் பரீட்சை விவரங்கள் கூட அவர்தான் கேட்டார். நீ அவர்களுடன் பேசுவதே இல்லையாம்! இப்படி இருக்காதே திவ்யா!” என்று பெற்றோருக்கு அவள் மேல் அக்கறை இருப்பதாக சொல்லாமல் சொன்னார். வெகுநேரம் பேசிய மாமா கடைசியாகச் சொன்னது, அவர் வீட்டுக்கு வர வேண்டாம் என்பதுதான்.

அவளின் பெரிய பெட்டியைப் பேருந்தின் வெளிப்புறம் இருந்த பெரிய பொந்திற்குள் திணிக்கச் சொன்னார்கள். அங்கே ஏற்கனவே சில பெட்டிகளும் மூட்டைகளும் இருந்தன. கிளீனர் அவளுக்கு உதவ அந்தப் பெட்டியை எடுத்து உள்ளே வைத்தான். இல்லை என்றால் திவ்யாவுக்கு அது சிரமமே. அவனுக்கு ஒரு நன்றியைச் சொல்லிவிட்டு, ஒரு பத்து ரூபாயைக் கொடுத்துவிட்டு பேருந்தில் ஏற, சில இருக்கைகளில் ஏற்கனவே ஆட்கள் இருந்தார்கள். அவள் இருக்கையில் அமர்ந்து வெகுநேரத்திற்கு பிறகே, பேருந்து புறப்பட்டது.

இந்தப் பயணம் தடைப்படக் கூடாதா என்று எண்ணினாள். அவள் வீட்டுக்குச் செல்ல அவளுக்கு இத்தனை வெறுப்பா? உண்மையில் அது அவள் வீடுதானா? அங்கே அவளை ஏற்பார்களா? எப்போதும் விருந்தாளியாக மட்டும் இருந்துவிட்டு வந்த வீடு. இனிமேல் அவள் தினமும் அங்கே தான் இருக்க வேண்டும். மாமா சொன்னதற்காகப் பெற்றோருடன் சென்னை வேலையைப் பற்றிச் சொல்ல, வேலையை ஏற்கக் கூடாது என்று கூறிவிட்டார்கள். “படிப்பை முடித்துக்கொண்டு இங்கே வந்து விடு” என்று தந்தை சொன்னது, ‘உன்னை வந்து அழைத்து வருகிறேன்’ என்று கூடச் சொல்லவில்லை. இதுவரை எத்தனை முறை அவளுக்காக அவர் வந்தார்? ஒருமுறை கூட இல்லை. அவள் ஏன் அவ்வளவு வேண்டாதவளானாள்?

இறைவன் அருளால் இதுவரை தாத்தா பாட்டி அவளுக்கு எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள். தாத்தா, பாட்டி காலமானதும் அவளுக்கு யாரும் இல்லை என்று தெளிவாகவே தெரிந்துவிட்டது.

இனி தனியே வாழ வேண்டும் என்று, படிப்பை முடிக்கும் முன்பே ஒரு வேலையைத் தேடிக்கொண்டாள். ஆனால் சென்னையில் தனியே சென்று இருக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார் தந்தை.

திவ்யா இனி பெற்றோர் வீட்டில் இருக்க வேண்டும் என்று மாமாவும் சொல்லிவிட்டார். பாவம் அவரும்தான் என்ன செய்வார். அத்தை வேணிக்கு, திவ்யாவுக்குக் கிடைக்கும் சலுகைகள் எல்லாம் அவள் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டியவற்றிலிருந்து பறிக்கப்பட்டவை என்று ஆற்றாமை.

திவ்யாவின் உடன் பிறந்த இருவர் பெற்றோருடன் இனிமையாக நாட்களைக் கடத்தியபோது, திவ்யாவுக்கு மட்டும் எத்தனை மன வேதனைகள். இப்போது பெற்றோருடன் சென்று இருக்கலாம் என்ற சந்தோஷம் அவள் மனதில் துளியும் இல்லை. மாறாக வேறு எங்கேனும் சென்று விடலாமா என்று தோன்றியது.

அந்தச் சொகுசு பேருந்தில், திரையில் ஏதோ படம் ஓடிக்கொண்டிருந்தது. அவள் கவனம் அதில் இல்லை. இனி அவள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற யோசனை அவளை எதிலும் கவனம் செலுத்த விடவில்லை. வந்த அழுகையைக் கூட அடக்கிக்கொண்டு ஜன்னல் வழியே இருளில் வேகமாகப் பின்னே செல்லும் மரங்களைப் பார்த்தவண்ணம் வெகுநேரம் கழித்தாள். ஆழ்ந்த உறக்கம் பயணம் முழுவதும் வரவில்லை. அவ்வப்போது விழித்து மணியைப் பார்த்தாள். ஒவ்வொரு முறையும் அதிகபட்சம் அரை மணிதான் நகர்ந்திருந்தது.

ஒரு வழியாக இருண்டிருந்த வானம் மெல்ல நீல வண்ணத்தைக் காட்டத் தொடங்கியது. விடியல் வந்துவிட்டது என்று எண்ணும் நேரம் இறங்க வேண்டிய இடமும் வந்துவிட்டது என்ற கவலையும் வந்தது. இலக்கைச் சென்றடையாத விமானங்கள் பல இருக்கின்றன. மாயமாய் மறைந்துவிட்ட கப்பல்கள் வரலாற்றில் இருக்கின்றன. விண்ணிலோ கடலிலோ மாயமாய் மறந்தவை பல. இந்தப் பேருந்தும் அந்தப் பட்டியலில் சேருமா? என்று ஒரு கணம் தோன்றியது. அவள் முட்டாள்தனமான ஆசைக்கு உடன் வரும் பயணிகள் எல்லோரும் குடும்பத்தை விட்டுப் பிரியவேண்டுமா? என்று உடனே அந்தக் கற்பனையை நிறுத்தினாள். அப்படி ஒன்றும் சிங்கமும் புலியும் திரியும் காடல்ல அவள் வீடு. அவள் வீடு என்று சொல்வதை விட அவள் செல்லவிருக்கும் வீடு என்பதே இங்கே பொருந்தும்.

பெங்களூரு கலாசிபாளையம் பேருந்து நிறுத்தத்திலிருந்து அவள் எங்கே செல்ல வேண்டும் என்று ஓரளவு தெரியும் தான். ஆனால் இங்கே பேருந்து நிலையத்துக்குக் கூட வந்து அழைத்துச் செல்ல முடியாதா அவள் வீட்டினருக்கு? என்று எண்ணிக்கொண்டு அவள் பெட்டியை எடுக்கச் சென்றபோது, அவள் பெயரை யாரோ அழைக்கத் திரும்பிப்பார்த்தாள். பரவாயில்லை! அவளை வரவேற்க ஒருவர் வந்திருந்தார். கணபதி. அவள் தந்தை. பெற்ற மூன்று பிள்ளைகளில் திவ்யாவை மட்டும் பார்த்துக்கொள்ள விரும்பாத தந்தை.

“வாம்மா! எப்படி இருக்கிறாய்?” என்றார்.

“நன்றாக இருக்கிறேன்! வீட்டில் எல்லோரும் நலமா?”

“எல்லோரும் நலம்” என்று சொன்னபடியே அவள் கையிலிருந்த பெட்டியை வாங்கக் கையை நீட்டினார்.

“வேண்டாம்! நான் பார்த்துக்கொள்வேன்!” என்று கணபதியின் முக மாற்றத்தைக் கவனிக்காமல் நடக்கத் தொடங்கினாள்.

அத்தியாயம் – 2

காலையிலிருந்து கொஞ்சம் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த உமா, பிள்ளைகள் இருவரும் இன்னும் உறங்குகிறார்களே என்று இருவரையும் எழுப்பச் சமையல் அறையிலிருந்து உரக்க அழைத்தாள். “காவ்யா, சங்கர் எழுந்திருங்கள். மணி ஏழாகிவிட்டது.” என்றாள்.

இருவரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. “ரெண்டு பேரையும் ….” என்று சொல்லிக்கொண்டே அடுப்பை அணைத்துவிட்டு மகள் காவ்யாவின் அறைக்குச் சென்றாள்.

“காவ்யா! எழுந்திரு. அப்பா திவ்யாவை அழைக்கச் சென்று அரைமணி நேரம் ஆகிறது. சீக்கிரம் வந்து விடுவார்கள்.” என்று அறையின் திரைச்சீலையை விலக்கினாள். மங்கலாக இருந்த அறை இப்போது பிரகாசமானது.

“அம்மா! இன்று விடுமுறை. கொஞ்ச நேரம் தூங்குகிறேன்!” என்றாள் காவ்யா.

“அப்பா வரும்போது நீ தூங்கிக்கொண்டிருந்தால் கோபப்படுவார். எழுந்திரு!” என்று உரைத்துவிட்டு மகனின் அறைக்குச் செல்ல இரண்டடி எடுத்து வைத்தவள், “அப்படியே சங்கரையும் எழுப்பிவிடு! எனக்கு இன்னும் நிறைய வேலை இருக்கிறது!” என்று மீண்டும் சமையல் அறைக்குச் சென்றாள்.

மெல்ல எழுந்த காவ்யா, சங்கர் அறைக்குச் சென்றாள். அறையின் கதவைத் திறந்தபோது அறை கொஞ்சம் வேறு மாதிரி இருந்தது. அப்போதுதான் காவ்யாவுக்கு நினைவு வந்தது. தம்பியின் அறையைத் திவ்யாவுக்குத் தர, அன்னை உமா முன்தினம் மாற்றங்களைச் செய்துவிட்டாள். மேல்தளத்திலிருந்து அறையைத் தம்பிக்குக் கொடுத்திருந்தார்கள்.

அப்படியே மேல் அறைக்குச் சென்றாள் காவ்யா. சங்கர் இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் தான் இருந்தான். தம்பியை எழுப்ப, “கொஞ்ச நேரம் தூங்கறேன்! புது அறை. வெகுநேரம் இரவு உறக்கம் வரவில்லை” என்று திரும்பிப் படுத்தான்.

“அப்பா வருவதற்குள் தயாராகும் படி அம்மா சொன்னார்கள். அவள் முன் அப்பாவிடம் வாங்கிக்கட்டிக்கொள்ள ஆசை என்றால் படுத்துத் தூங்கு!” என்றாள் காவ்யா.

“அவள் ஏன் இங்கே வருகிறாள்? இம்சை! ரெண்டு நாளாக ஒரே அறிவுரை. அவளிடம் இப்படி நடந்துகொள். இப்படி பேசு என்று! பெரிய மஹாராணியா அவள். என் அறையை எடுத்துக்கொண்டாள். இன்னும் என்ன என்ன செய்வாளோ?” என்று எழுந்து அமர்ந்தான்.

“அவளுக்கு அப்படித்தான் எண்ணம் என்று உனக்கு தெரியாதா? அவள் கிடக்கிறாள்! போய் சீக்கிரம் குளி!” என்று காவ்யாவும் நகர்ந்தாள். வெறுப்புடன் எழுந்து சென்ற சங்கர் உடைகளைத் தேடினான். கீழ் அறையிலிருந்து பைகளில் அடுக்கிக் கொண்டு வந்தபோது, எதில் எதை வைத்தோம் என்று அவனுக்கு மறந்துவிட்டது. இரண்டு பைகளை முழுவதுமாக அலசியும் அவனுக்குப் பிடித்த உடை எதுவும் தட்டுப்படவில்லை. அன்னையிடம் கேட்கலாம் என்று கீழே இறங்கி வரவும் தந்தை உள்ளே வரவும் சரியாக இருந்தது. உடன் திவ்யாவும்.

“என்னடா, இப்போதான் எழுந்தாயா?” என்றார்.

“ஆமாம்!” என்று நடந்தவனைத் தடுத்து, “திவ்யா வந்திருக்கிறாள்!” என்றார். அவர் இருவரும் அளவளாவக்கூடும் என்று எதிர்பார்த்தார். ஆனால் இருவரும் அப்படி ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை.

“ஹாய்!” என்றான் சங்கர்.

பதிலுக்கு ஒரு புன்னகை செய்துவிட்டு, அவள் பெட்டியை எடுத்தாள். அதற்குள் உமா வந்துவிட்டாள். “வா திவ்யா! இப்போதான் வந்தாயா? பெட்டியை எடுத்து அவள் அறையில் வை சங்கர்!” என்று மகனைப் பணித்தாள்.

அவன் அன்னையின் பேச்சில் எரிச்சலுடன் ஒரு பார்வை பார்க்க, “நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று திவ்யா பெட்டியுடன் உள்ளே வந்தாள். அவனுக்கு அதற்கு மேல் அங்கே நிற்க ஒன்றும் இல்லை என்பது போல் சங்கர் வேகமாக மாடியேறினான்.

மகள் கையிலிருந்த கைப்பையை வலுக்கட்டாயமாக வாங்கிக்கொண்டு திவ்யாவுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையைக் காட்டினாள் உமா. அது சங்கரின் அறை என்று திவ்யாவுக்குத் தெரியும். அவள் இந்த வீட்டுக்கு வருவது முதல் முறை அல்லவே. சில நாட்கள் இந்த வீட்டில் கழித்திருக்கிறாள். திரைச் சேலைகள், சுவரில் சில புகைப்படங்கள் மற்றும் அங்கங்கே அலங்காரப் பொருட்கள். இவற்றில் சிலது மாறி இருந்தது.

ஒருமுறை அன்னையைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “இது சங்கரின் அறை!” என்றாள்.

“புதிதாக மேலே ஒரு அறை எழுப்பியிருக்கிறோம். அதை அவன் எடுத்துக்கொண்டான்.”

“வேண்டுமானால் நான் அங்கே தங்கிக் கொள்கிறேன். எனக்காகப் பழைய ஏற்பாடுகளை மாற்ற வேண்டாம்.”

“மேல் அறை உனக்கு வேண்டாம்! தனியே இருப்பதுபோல் இருக்கும்! அதனால் தான் உனக்கு இந்த அறை. சங்கர் மேல் அறையைப் பயன்படுத்தட்டும். உன் பெட்டியைப் பிறகு எடுத்து வைக்கலாம். ஊரிலிருந்து கொண்டுவந்த உன் உடைகள் எல்லாம் அலமாரியில் அடுக்கி வைத்திருக்கிறேன். சீக்கிரம் குளித்து விட்டு வா! எல்லோரும் சாப்பிடலாம்.” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, “காவ்யா எங்கே?” என்றார் கணபதி. “இப்போது தான் குளிக்கச் சென்றாள்.” என்று கணவனுக்கு பதில் சொல்லிவிட்டு நகர்ந்தாள் உமா.

திவ்யா அறையைப் பார்வையிட்டாள். புதிய வண்ணம் தீட்டப் பட்டிருந்தது. லேசாக பெயிண்ட் வாசம் கூட காற்றில் கலந்திருந்தது. எப்போதும் சுவற்றில் குடும்ப புகைப்படங்கள், பிள்ளைகளின் தனி தனி படங்கள் என்று தொங்கவிடப்பட்டிருக்கும். அதில் திவ்யாவின் படமும் இருக்கும் தான். ஆனால் வெகு குறைவாக ஒன்று அல்லது இரண்டு! இப்போது அதன் எண்ணிக்கை கூடியது போல் இருந்தது. அவள் வருகிறாள் என்று ஏற்பாடுகள் நடந்தனவா?

வேண்டாம் இதுபோல் எதிர்பார்ப்புகள் எல்லாம் வைத்துக்கொள்ளக் கூடாது என்று திவ்யா குளிக்கச்சென்றாள்.

சிவாஜி நகர்ப் பகுதியில் வீடு. வீட்டில் பெரிய மாற்றங்கள் இல்லை. இருக்கும் அரை கிரௌண்ட் நிலத்தில் சுற்றி நடக்கச் சிறிய இடைவெளி மட்டும் விட்டுக் கட்டப்பட்ட வீடு. அளவான வீடு. ஹாலைச் சுற்றி இரு புறங்களிலும் இரண்டு இரண்டு அறைகள். மூன்று படுக்கை அறைகள். ஒன்று சமையல் அறை. கொஞ்சம் பெரியது. அதிலேயே உணவு மேசையும் போடப்பட்டு இருந்தது.

மேல் தளத்துக்குச் செல்லப் படி வீட்டின் பின்பகுதியில் உட்புறமாகவே அமைந்திருக்கும். முன்பு விடுமுறையில் இங்கே வரும்போது, அக்காவுக்கும் சங்கருக்கும் தனி அறைகள் இருப்பதைப் பார்த்துப் புரிந்துகொண்டாள், அவளுக்கு ஒருபோதும் இங்கே இடம் இல்லை. விருந்தாளியாக மட்டுமே அவளுக்கு இங்கே அனுமதி இருக்கும் என்று.

இத்தனை வருடங்களுக்குப் பிறகு அவளுக்கென்று ஒரு அறை. இப்போது அவளுக்கு யாரும் இல்லை என்ற நிலை வந்ததும் இந்த ஏற்பாடு! பாட்டி உயிரோடு இருந்தால் அவளை இங்கே அழைத்திருக்கக் கூட மாட்டார்கள்.

அதை நினைத்ததும், ‘இங்கே இன்னும் எத்தனை நாள் இருக்க வேண்டுமோ?’ என்ற சோர்வு முதல் சில நிமிடங்களிலேயே திவ்யாவுக்கு எட்டிப்பார்த்தது.

காலை உணவு எல்லோரும் ஒன்றாகவே அமர்ந்து உண்டார்கள். ஆனால் திவ்யாவிடம் அதிகம் பேசியது தாய் தந்தையர் மட்டும். காவ்யாவும் சங்கரும் எதுவும் பேசாமல் சாப்பாட்டில் கவனம் செலுத்தினார்கள். அவர்கள் இருவரும் எத்தனை ஒற்றுமையாக இருக்கிறார்கள். இவளை ஏன் எதிலும் சேர்த்துக்கொள்வதில்லை? திவ்யாவுக்கு அவ்வப்போது தோன்றும் கேள்விதான் இது.

“உனக்கு இங்கே எல்லாம் புதிதாகத் தான் இருக்கும். காவ்யாவுடன் இரண்டு நாள் வெளியே சென்று வந்தால் எல்லாம் பழகிவிடும்” என்றார் தந்தை.

திவ்யா ஒரு சின்னப் புன்னகையுடன் காவ்யாவின் முகத்தைப் பார்த்ததும், காவ்யா ஒரு ஏளனப் பார்வை பார்த்தாள். ‘என்னிடம் அதையெல்லாம் எதிர்பார்க்காதே!’ என்று சொல்லாமல் சொன்னது அந்தப் பார்வை.

“இன்று எனக்கு அலுவலகம் செல்ல வேண்டும். நாளை எல்லோருமாகச் சேர்ந்து வெளியே செல்லலாம்” என்று சொல்லிவிட்டு கணபதி அலுவலகத்திற்குப் புறப்பட்டார்.

தந்தை சென்ற மறுநிமிடம் சங்கர் அவன் வண்டியைக் கிளப்பினான். இளைஞர்களுக்கென பிரத்தியேக தயாரிப்பு. விலை கூட லட்சத்தைத் தொடலாம். வண்டி கிளம்பும் முன், “நானும் வருகிறேன்!” என்றாள் காவ்யா.

“ஏய்! நீயேனும் திவ்யாவுடன் சிறிது நேரம் இருக்கலாம் தானே. அவளுடன் கொஞ்ச நேரம் பேசு. உனக்கு வெளியே என்ன வேலை?” என்றாள் உமா.

“அம்மா! அவள் இங்கே தானே இருக்கப்போகிறாள். பிறகு என்ன? நான் பரீட்சைக்குத் தயாராக வேண்டும். குரூப் ஸ்டடி செய்யப் போகிறேன். நேற்றே சொன்னேனே” என்றாள்.

“நான் மதியத்துக்குப் பிறகு தான் போகச்சொன்னேன்!” என்ற உமாவின் வார்த்தை அவர்களுக்குக் கேட்டிருக்க வாய்ப்பில்லை. அதற்குள் சங்கர் வண்டியை முறுக்கிக்கொண்டு கிளப்பினான்.

பிள்ளைகளின் நடவடிக்கை உமாவுக்குப் பிடிக்கவில்லை என்பது திவ்யாவுக்குத் தெரிந்தது. பல நாட்களுக்குப் பிறகு வரும் தங்கையைப் பொருட்படுத்தாமல் இருவரும் சென்றது உமாவுக்கு அவர்கள்மேல் கோபத்தை வர வைத்தது. எல்லாவற்றிற்கும் மேல் திவ்யா இதை எப்படி எடுத்துக்கொள்வாள் என்று அவள் இருக்குமிடம் சென்றாள். எல்லோரும் சாப்பிட்டுவிட்டு வைத்துச் சென்ற தட்டுகளை எல்லாம் சுத்தம் செய்துகொண்டிருந்தாள். மீதம் இருந்த உணவுப் பாத்திரங்களிலிருந்து கரண்டிகளை நீக்கிவிட்டுச் சரியாய் மூடியிருந்தது. உணவு மேஜையும் சுத்தம் செய்யப்பட்டிருந்தது.

குழாயில் தண்ணீர் முழு வேகத்தில் இல்லாமல், அளவாகத் திறந்துவிட்டு தண்ணீர் எங்கும் தெறிக்காத வண்ணம் நேர்த்தியாகச் சுத்தம் செய்து கொண்டிருந்த மகளைப் பார்க்கப் பெருமையாகவே இருந்தது. இதைக் காவ்யாவிடம் எதிர்பார்க்க முடியாது.

“இதை நான் பார்த்துக்கொள்கிறேன்! நீ ஏன் இதெல்லாம் செய்கிறாய்?” என்று மகளிடம் இருந்த பாத்திரத்தை வாங்க நினைத்தாள்.

“நானே செய்கிறேன்! நீங்கள் வேறெதுவும் வேலை இருந்தால் செய்யுங்கள்” என்றாள்.

“காவ்யாவுக்கு இன்னும் பரீட்சை முடியவில்லை. ஏதோ படிக்க வேண்டுமாம். சங்கர் வீட்டில் இருக்கவே மாட்டான். எப்போதும் வெளியே சுற்றிக்கொண்டுதான் இருப்பான். அப்பாவைப் பார்த்தால் கொஞ்சம் பயப்படுவான். தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டான். என் பேச்சை எல்லாம் எங்கே கேட்பான்?” என்று ஒரு பெரு மூச்சை விட்டாள்.

“மதியம் நாம் இருவர் மட்டும்தான். உனக்கு எண்ணெய் கத்தரிக்காய் பிடிக்கும் என்று அம்மா சொல்வார்கள். அம்மா அளவுக்கு எனக்குப் பக்குவம் வராது. இங்கே செய்யும் கோசம்பரி என்ற ஒரு கூட்டு எண்ணெய் கத்திரிக்காய்க்கு நன்றாக இருக்கும். உனக்கு இனிப்பு வகைகள் கூடப் பிடிக்கும் தானே. கடையில் வாங்கியதுதான். ஃப்ரிட்ஜில் வைத்திருக்கிறேன். வேண்டியபோது எடுத்துக்கொள்.”

உமா பேசிக்கொண்டிருக்கும்போதே திவ்யா அவள் செய்து கொண்டிருந்ததை முடித்துவிட்டாள். “என் பெட்டிகளை எடுத்து வைக்க வேண்டும்” என்று நகர்ந்தாள்.

பின்னோடு வந்து உமா, “நானும் கொஞ்சம் உதவுகிறேன். உனக்காகச் சில புது உடைகள் கூட எடுத்து வைத்திருக்கிறேன். அதையும் உன் அறையில் வைத்துக்கொள்” என்று வேகமாகச் சென்று சில பைகளை எடுத்துவந்தாள்.

“உனக்குப் பிடித்திருக்கிறதா என்று பார்! இல்லை மாற்றிக்கொள்ளலாம்” என்று ஆடைகளை எடுத்துக் காட்டினாள்.

எதுவும் பேசாமல் வாங்கிக்கொண்டாள் திவ்யா.

திவ்யாவின் அறைக்கு இருவருமாய் சென்று பேசியபடியே ஒழுங்குபடுத்தினார்கள். பேசியபடி என்றால் உமா மட்டும்தான் பேசிக்கொண்டிருந்தாள். திவ்யா மௌனமாக அவள் வேலைகளைச் செய்துகொண்டிருக்க, “என்ன திவ்யா? நான் பேசிக்கொண்டே இருக்கிறேன்! நீ எதுவும் பேசமாட்டேன் என்கிறாயே?”

சிறு மௌனத்திற்குப் பிறகு, “நீங்கள் இன்று வேலைக்குச் செல்லவில்லையா?” என்றாள்.

“நீ வந்திருக்கிறாய் என்று விடுப்பு எடுத்துக்கொண்டேன். அடுத்த வாரம் கூட இரண்டு நாள் உன்னுடன் வீட்டில் தான் இருப்பேன். உனக்கு இங்கே எல்லாம் பழகும் வரை அம்மா உன்னுடன் இருப்பேன்!”

“நீங்கள் எனக்காக இதெல்லாம் செய்யத் தேவையில்லை. என்னைப் பார்த்துக்கொள்ளும் பக்குவம் எனக்கு வந்துவிட்டது. என்னால் உங்கள் வேலை கெட வேண்டாம்.”

“அதெல்லாம் இல்லை! எத்தனை வருடம் கழித்து இங்கே வந்திருக்கிறாய்? உன்னுடன் இருப்பதை விட வேறென்ன முக்கியம்! நாளை நாம் எல்லோரும் சேர்ந்து வெளியே செல்லலாம். நாளை மறுநாள் நாம் இருவரும் இங்கே ஒரு கோவிலில்…” என்று சொல்லிக்கொண்டிருந்தபோது, “இதெல்லாம் எதற்குச் செய்கிறீர்கள்? இருபது வருடம் செய்யாததை இந்த இரண்டு நாளில் செய்து கழித்துவிடலாம் என்றா?” திவ்யா கேட்டதும் உமாவின் முகம் வாடிவிட்டது. வந்த முதல் நாளே இப்படிப் பேசிவிட்டோமே என்ற உணர்வு கொஞ்சம் மனதை நெருடவும், “மன்னித்துக் கொள்ளுங்கள், இந்த அதிகப்படியான கவனம், அக்கறை இதெல்லாம் வேண்டாம். முடிந்தால் அக்காவிடம் நடப்பதுபோல் என்னிடம் இருக்க முயற்சியுங்கள். இப்போது நீங்கள் செய்வது, இந்த வீட்டில் நான் விருந்தாளி என்றே நினைக்க வைக்கிறது.” என்றவள் தொடர்ந்தாள்.

”அக்கா, சங்கர் இருவரிடமும் எனக்காகப் பேச வேண்டாம்! அவர்களாகப் பேசினால் சரி. இல்லை என்றாலும் எனக்குப் பரவாயில்லை!”

”அவர்களுக்குக் கொஞ்சம் அவகாசம் வேண்டும். அவர்கள் இருவருக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும். இந்த உடை கூட காவ்யா உனக்காக …” என்று உமா சொல்லும்போதே, “நான் இன்னும் சின்னக் குழந்தை இல்லை. அவர்களிடம் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அவர்களுக்காக என்னிடம் பேசாதீர்கள்.” திவ்யா கோவமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

பிள்ளைகளிடையே இணக்கம் இல்லாததைக் கண்டு எந்தத் தாயால் நிம்மதியாக இருக்க முடியும்?

காவ்யா சில மாத குழந்தையாக இருக்கும்போதே, உமா இரண்டாவது முறை கருவுற்றாள். முதலில் மகள் என்பதால் இரண்டாவது மகனாக இருக்க வேண்டும் என்று கணவனும் மனைவியும் வெகுவாக எதிர்பார்த்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தது

போலவே சங்கர் பிறந்தான். உடன் திவ்யாவும். ஒரு மகனும் ஒரு மகளும் இரட்டையர்களாகப் பிறந்தது முதலில் ஆனந்தமாக இருந்தாலும், வளர்ப்பதில் பல சிரமங்கள் இருந்தன. அப்போதே நடக்கத் தொடங்கிய காவ்யாவுக்குப் பின்னால் ஓட ஒருவர் எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும். மேலும் இரு கைக்குழந்தைகள். முதலில் உமா திருச்சியில் அவள் பெற்றோர் வீட்டில் தான் இருந்தாள். கணபதி பெங்களூரில் வேலையில் இருந்தார். மூன்று பிள்ளைகளையும் தனியாகச் சமாளிக்க முடியுமா என்ற சந்தேகம் கணபதி, உமா இருவருக்கும் இருந்தது. சில மாதங்கள் உமாவின் அன்னையும் பெங்களூரில் வந்து தங்கி உதவி செய்தார்.

ஆனால் சில நாட்களுக்கு மேல் திருச்சியைத் தாண்டாத உமாவின் அம்மாவால் பெங்களூர் குளிரைச் சமாளிக்க முடியவில்லை. கருவுற்ற ஆறு மாதத்தில் இருந்து பிள்ளைகள் பிறந்த சில மாதங்கள் கணபதி தனியே சமாளித்து விட்டார். இனியும் கணவனைத் தனியே விட்டுவிட்டுச் செல்ல உமாவுக்கு மனம் இல்லை. மூன்று பிள்ளைகளையும் வளர்க்கவும் சிரமம். வெகுவாக யோசித்து ஒரு பிள்ளையை தாயுடன் அனுப்பி விடலாம் என்று முடிவுக்கு வந்தாள் உமா. முதலில் ஒன்றரை வயதான காவ்யாவை அனுப்ப எண்ணினாள்.

தம்பி, தங்கை என்று வந்ததிலிருந்து பாதுகாப்பின்மையின் காரணமாக காவ்யா வெகுவாக அடம் பிடிக்கத் தொடங்கி இருந்தாள். அன்னையை விட்டுச் சிறிதும் விலகாத காவ்யாவைக் கட்டாயப்படுத்தி அழைத்துச்செல்ல உமாவின் பெற்றோருக்கு மனம் இல்லை. அதனால் திவ்யா, சங்கர் இருவரில் ஒருவரைப் பெரியவர்களுடன் அனுப்பத் தீர்மானித்தார்கள். அப்படித் தான் திவ்யா திருச்சியில் வளரத் தொடங்கினாள்.

பெரும்பாலும் தாத்தா பாட்டியிடம் வளர்ந்த திவ்யா மிகவும் சுட்டி. அவளுக்கு வேண்டியது அவளுக்குக் கிடைக்க வேண்டும். அதற்கு யாரும் தடை சொன்னதும் இல்லை. அது பெற்றோராகட்டும், தாத்தா பாட்டியாகட்டும். பெற்றோர் உடன் இல்லை என்று திவ்யாவுக்குப் பல சலுகைகள் கிடைத்தன. உடைகள், பொம்மைகள் எல்லாம் திவ்யாவுக்கு அதிகம் கிடைத்தன.

பெரியவர்களின் செல்லமும் திவ்யாவுக்கு அதிகம் தான். எப்போதும் கண்டிப்புடன் இருக்கும் கணபதி, திவ்யாவிடம் மட்டும் எந்தக் கண்டிப்பும் காட்டியதில்லை. கண்டிப்பு காட்டும் அளவுக்கு அவர் திவ்யாவுடன் நேரம் செலவிடவில்லை என்பதை அறியாத வயதில் காவ்யாவுக்கும், சங்கருக்கும் தோன்றிய வெறுப்பு, சிறு வயதில் இருந்தே திவ்யாவை காவ்யாவும் சங்கரனும் ஒதுக்கியே வைத்தார்கள்.

கணபதிக்கு பிள்ளைகளை நல்ல பள்ளியில் சேர்க்க முடிந்தது. மற்ற செலவுகளை சமாளிக்கப் பல சிக்கன நடவடிக்கைகள் வீட்டில் கடைப்பிடித்தார்கள். கணபதியின் அரசாங்க வேலையும், உமாவின் தனியார் வேலையும் பெங்களூரில் அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை. அதனால் கேளிக்கை, விதவிதமான தின்பண்டம் என்று எல்லாவற்றுக்கும் சிக்கனம் தான். ஆனால் திருச்சியில் வளரும் திவ்யாவுக்குக் கேட்டது கிடைக்கிறது. கண்டிப்பு என்பது கிடையாது. எல்லோரும் அவளைத் தாங்குகிறார்கள். இதுவே காவ்யாவுக்கும் சங்கருக்கும் அவளைப் பிடிக்காமல் செய்தது. அறியாப் பருவத்தில் வந்த வெறுப்பு அவர்களுடன் சேர்ந்து வளர்ந்தது.

உமாவின் பெற்றோர் திவ்யாவை மிகச் சிறப்பாகவே வளர்த்தனர். ஆனால் பெற்றோரின் அருகாமை மிகக் குறைவாகவே திவ்யாவுக்குக் கிடைத்தது. திவ்யாவுக்கு அந்தக் குறை மனதில் இருக்க, உடன் பிறந்தவர்களின் பிரியமும் சிறிதும் கிடைக்கவில்லை.

அத்தியாயம் – 3

இரு சக்கர வாகனத்தை வாசலில் நிறுத்திவிட்டு, இரண்டடி எடுத்துவைத்தவன், காலணிகள் கழற்றிவிடும் இடத்தில் மேலும் ஒரு காலணி ஜோடி இருப்பதைக் பார்த்து ஒரு கணம் நின்றான் கிருபாகரன். வந்திருப்பது தங்கை கீர்த்திதான். காதுகளைச் சற்று கூர்மையாக்கிக் கேட்டான். அழுகை கலந்த இரு பெண்களின் பேச்சுக் குரல் கேட்டது. அடிக்கடி நடப்பதுதான். ஆனால் பல

வருடங்கள் முன்பு நடந்த ஒன்றுக்காக வருடக் கணக்கில் அழுவது கிருபாகரனுக்கு எரிச்சலை மூட்டியது. அதுவும் பிறந்த வீட்டுக்கு வரும் போதெல்லாம் பழைய கதைகளைக் கிளறி அவள் அழுவது மட்டுமில்லாமல் அன்னையையும் அழவைப்பது கீர்த்தியின் வழக்கமாகிவிட்டது.

மகன் கோவமாக அவன் அறைக்குள் நுழைவதைப் பார்த்த வசந்தி மகனிடம் வந்தாள்.

“சாப்பிடுகிறாயா கிருபா?”

மகன் எதுவும் பேசாமல் முறைப்பதைப் பார்த்து, “ஏன் அப்படிப் பார்க்கிறாய்? ஏதோ எங்கள் கஷ்டங்களைச் சொல்லிக்கொண்டு கொஞ்ச நேரம் கண்ணீர் விட்டோம். போய்க் குளி. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.” என்றாள்.

அறையின் வெளியே தங்கை நிற்பதைப் பார்த்து, “இங்கே வரும் போதெல்லாம், இது ஒரு பழக்கம். அம்மாவையும் சேர்த்து அழவைக்கிறாய்! நீங்கள் அழுவதால் மட்டும் எல்லாம் சரியாகிவிடுமா?”

“ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அண்ணா! நாம் இந்த வீட்டில் இருக்க வேண்டிய நிலை வரும் என்று நினைக்கவில்லை. அம்மாவுக்கு எவ்வளவு கஷ்டம்.” என்று மீண்டும் கண்ணீர் விட்டாள் தங்கை.

“நீ எப்போது வந்தாய்?”

“வந்து கொஞ்ச நேரம் ஆகிறது!”

“சாப்பிட்டாயா?”

“நீ வந்ததும் சாப்பிடலாம் என்று சாப்பிடவில்லை!”

“அப்பா எங்கே?” என்று சுற்றும் முற்றும் பார்த்தான். “அவரும், அப்பாவும் தோப்பு வரை சென்றார்கள். இப்போது வந்து விடுவார்கள்!” என்று சொல்லும் போதே வாசலில் வண்டிச் சத்தம்

கேட்டது. அவர் என்று கீர்த்தி குறிப்பிட்டது, அவள் கணவன் கதிரை. விடுமுறை தினம் என்பதால் மனைவியை அவள் அம்மா வீட்டுக்கு அழைத்துக்கொண்டு கதிர் வந்திருந்தான்.

வாசலுக்குச் சென்று தங்கை கணவனை வரவேற்றான் கிருபாகரன்.

எல்லோரும் அமர்ந்து உணவருந்த, கீர்த்தி பேச்சை ஆரம்பித்தாள்.

“துரை மாமா வீட்டில் என்ன சொல்கிறார்கள்?” என்று கேட்டாள்.

“சாப்பிடும்போது வேறேதும் பேச வேண்டாம். முதலில் சாப்பிடுங்கள்” என்று கண்டித்தார் தங்கவேலு. கீர்த்தி, கிருபாகரனின் தந்தை.

உணவருந்தும் வரை அமைதியாகவே இருந்தார்கள். அதன் பின் ஆரம்பித்தது சந்தியாவின் கணவன் கதிர்.

“மாமா! உங்கள் நண்பர் வீட்டில் என்ன சொல்கிறார்கள்?”

“அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை.”

“இப்படி இருந்தால் எப்படி மாமா? அவர்களுக்குக் கஷ்டம் தான்! ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அவர் செய்த குளறுபடியால் நாமும் வீட்டை இழந்துவிட்டு நிற்கிறோம்.”

“துரை மேல் தப்பு இல்லை. மற்ற கூட்டாளிகள் தான் அரசாங்க உரிமம் சரியாக பெறாமல் தொழிலை நஷ்டப்படுத்திவிட்டார்கள்.”

“நம்பிக்கை இல்லாத ஆட்களிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டு, இப்போது நம் வீடு போலீஸ், வழக்கு என்று சிக்கிக்கொண்டதே! அது அவர் தவறால் தானே!”

இடையில் தடுத்தது கிருபாகரன் தான்.

அவர் கடனைத் திருப்பித் தரும் நிலைமையிலும் இல்லை.

ஈரோடு அருகே பவானி பகுதியில் வயல், தோட்டம் என்று வசதியுடன் இருந்த குடும்பம் தங்கவேலுவுடையது. குடும்ப சொத்துக்கள் நிறையவே இருந்தன. உழைக்க வேண்டிய அவசியம்

அவருக்கு இருக்கவில்லை. வெறும் விவசாயம் என்பதைத் தாண்டி ஒரு தொழில் செய்ய ஆசை கொண்ட தங்கவேலு முதலீடு செய்யும் கூட்டாளியாக அந்த தொழிலில் இணைந்தார். மேலும் இரு கூட்டாளிகளை அறிமுகம் செய்து வைத்த துரை, தொழிலை விரிவுபடுத்தினார். நகர்ப்புறத்துக்கு அருகே இருந்த நிலங்கள், அதாவது விவசாய நிலமாக இருந்து, நீர் வரத்து குறைவான காரணத்தால் தரிசாக மாறிய நிலங்களில் வீட்டுமனை அமைத்து விற்பது.

தொழில் நன்றாகவே வளர்ந்தது. பல மனைகள் விற்பனை ஆகிவிட்ட நேரம் கூட்டாளிகள் விலகிச் சென்றனர். அவர்கள் ஒப்பந்தமும் அதுதான். குறிப்பிட்ட மனைகள் விற்பனை ஆகும் வரை உடன் இருந்து லாபத்தில் பங்கு வாங்கிக்கொள்வார்கள். அதன்படி விலகியும் சென்றார்கள். நண்பர்கள் இருவரும் தொழிலை தொடர்ந்து நடத்தினார்கள்.

ஆனால் சில நாட்களில் அரசு அதிகாரிகள் விற்பனை எதுவும் செல்லாது என்றும், விவசாய நிலத்தை மனைகளாக்கி விற்கக் கூடாது என்றும் சொன்னார்கள். ஏற்கனவே மனைகளை வாங்கியவர்களுக்கு பணத்தை திரும்பத் தர வேண்டி இருந்தது. நிலத்தை வாங்க, அதை விற்பனைக்கு தயார்படுத்த என்று பல லட்சங்கள் ஏற்கனவே செலவு செய்தாயிற்று. வந்த கொஞ்ச லாபத்தில் இதே போல் வேறு ஒரு இடத்தில் மனைகளை அமைக்கலாம் என்று நிலத்தை வாங்கிப் போட்டுவிட்டார்கள். மனைகள் பிரிக்க, அதற்கு அரசாங்க அனுமதி, சாலை வசதி, தண்ணீர் வசதி என்று தங்கவேலுவின் கையிருப்பு மொத்தம் கரைந்திருந்தது. இனி வாங்கியவர்களுக்கு பணத்தை அப்படியே திரும்பத் தருவது என்றால்? துரையிடம் அதிக பின்புலம் இல்லாததால் மொத்த பணமும் தங்கவேலு கொடுக்க வேண்டிதாயிற்று. குடும்ப சொத்துக்களை அடமானம் வைக்க வேண்டி வந்தது. பிறகு அவர்கள் மேல் பொது நல வழக்கு வேறு. அரசாங்க விஷயங்கள் எல்லாம் கூட்டாளிகள் இருவர் தான் பார்த்துக்கொண்டார்கள்.

“கொஞ்சம் பணம் கொடுத்தால் எல்லா உரிமமும் பெற்றுவிடலாம்!” என்று அவ்வப்போது பணம் வாங்கியது மட்டுமில்லாமல், உரிமம்

வாங்கும் விஷயத்தில் நிறைய குழப்பங்கள் செய்ததால் இப்போது எல்லாம் தங்கவேலு, துரை இருவர் தலையில் விழுந்தது. கூட்டாளிகளுடன் ஒவ்வொரு முறையும் உடன் சென்ற துரைக்கு எதிலும் தெளிவு இல்லை. நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்! என்று அவர்கள் சொன்னதில் அவர்கள் மேல் முழு நம்பிக்கை வைத்திருந்தார் துரை.

வேறொருவர் என்றால் துரை தொடர்பைத் துண்டித்து இருப்பார்கள். ஆனால் நண்பன் ஏமாற்றவில்லை, ஏமாற்றப்பட்டான் என்று உணர்ந்த தங்கவேலு உடமையை இழக்க முழு காரணம் துரைதான் என்று ஒதுங்கிக்கொள்ள விரும்பவில்லை.

அவர் தலைமுறைக்கு இருக்கும் பெருந்தன்மை இந்தத் தலைமுறையிடமும் எதிர்பார்க்க முடியாதே. அவ்வப்போது மருமகன் வந்து நிலைமையில் ஏதும் முன்னேற்றம் இருக்கிறதா என்று கேட்கத் தவறுவதில்லை. அதற்காகக் கதிரைத் தவறாகச் சொல்லிவிட முடியாது. மனைவியின் குடும்பம் யாரோ செய்த தவறுக்காகக் கஷ்டப்படுவது பொறுக்காமல் கேட்பதுதான். அதற்குக் கீர்த்தியும் முக்கிய காரணம். எப்போதும் அம்மா, அப்பா, அண்ணன் இப்படிக் கஷ்டப்படுகிறார்கள் என்று அழுது புலம்புவாள்.

இரண்டு தினம் பிறந்த வீட்டில் இருக்க, கீர்த்தியின் கணவன் அவளை விட்டுவிட்டுக் கிளம்பினான். வழியனுப்ப வந்த கிருபாகரனுடன் மீண்டும் கடனில் இருக்கும் வீடுபற்றிப் பேசினான்.

“மாமா சொல்வது போல் அப்படியே விட்டுவிட முடியாது! நீயாவது ஏதாவது செய்ய வேண்டும் கிருபா!” என்றான்.

“அப்பா சொன்னார் அல்லவா! துரை மாமாவிடம் கேட்க முடியாது. அவர் நிலைமை கூடச் சரியில்லை.”

“என்ன கிருபா? நீயும் இப்படிப் பேசுகிறாய்? நம் சொத்துக்கள் இப்போது நம்மிடம் இல்லை. துரை மாமா கஷ்டப்படுகிறார் என்றால், நாம் என்ன செய்ய முடியும்?”

“போலீசில் ஏற்கனவே வழக்குகள் இருக்கின்றன. இப்போது நாம் ஏதேனும் அழுத்தம் கொடுத்தால் மீண்டும் துரை

மாமாவிற்குத்தான் சிக்கல். பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் அவர் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறார். அவரை மீண்டும் தொல்லை செய்ய வேண்டாம்.”

“ஆமாம்! நிம்மதியாகத்தான் இருப்பார். போனது நம் சொத்துக்கள் தானே! பெரிய பின்புலம் இல்லை என்று மொத்த பணமும் நம்மிடம் இருந்து வாங்கிக் கொடுத்துவிட்டார். அவருக்கு என்ன?”

“அப்படிச் சொல்லாதீர்கள். நான் ஒரு பேச்சுக்கு நிம்மதி என்று வார்த்தை சொன்னேன். அவர் வீட்டைக் கூட விற்று தான் வழக்கை நடத்துகிறார். நமக்குக் கடன் பட்டிருக்கிறோம் என்ற குற்ற உணர்வுடன் தான் ஒவ்வொரு நாளையும் கடத்துகிறார். நாம் சும்மா பார்க்கச் சென்றால் கூட ஒவ்வொரு முறையும் மன்னிப்பு கேட்கிறார். ‘பணம் இன்னும் வரவில்லை. வந்ததும் சொத்துக்களை மீட்டுவிடலாம்’ என்று என்னிடம் மன்னிப்பு கேட்கிறார். மிகவும் சங்கடமாக இருந்தது. நம்மை ஏமாற்றி அவர் சந்தோஷமாக இருந்தால் அவர் சட்டையைப் பிடித்துக் கேட்கலாம். ஆனால் துரை மாமா அப்படி இல்லை!”

ஒரு சிறிய இடைவெளி விட்டு, “எது எப்படியோ? நாம் யாரையும் ஏமாற்றவில்லை. சீக்கிரம் எல்லாம் நல்லது நடக்கும்” என்றான் கிருபா.

“நீயும் மாமா போலவே பேசுகிறாய்? உன் திருமணம்பற்றிக் கொஞ்சமாவது கவலை இருக்கிறதா உனக்கு. பெண் வீட்டில் நம் நிலைமையைப் பற்றி விமர்சனம் செய்கிறார்கள்.”

“நம் நிலைமை இப்போது என்ன மோசம் மாமா! வீடு இருக்கிறது. விவசாயம் இருக்கிறது. மோட்டார், பம்ப் வேலைகள் செய்கிறேன்! விவசாயத்துக்குத் தேவையான வண்டிகள் வைத்திருக்கிறோம். மூன்று வேளை உணவுக்கு ஒரு குறையும் இல்லை. இது போதாது என்று நினைப்பவர்கள்தான் விமர்சிப்பார்கள்.”

கிருபாகரனை ஒரு கணம் பார்த்துவிட்டு, “சரி! விவசாயம் எல்லாம் எப்படிப் போகிறது? தோப்பைகூடப் பார்த்தேன். இம்முறை கொஞ்சம் மரங்கள் நன்றாகவே இருக்கின்றன.”

“ஆமாம் மாமா! இரண்டு வருடங்களாகக் கொஞ்சம் விளைச்சல்கூடக் குறைவு. நல்ல விலையும் கிடைக்கவில்லை. இம்முறை விலை நன்றாக இருக்கிறது. லாபமும் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்! அது நடந்தால் வீட்டைக் கூட மீட்கப் பழைய நிலுவையைச் செலுத்தினால் நாம் நம் வீட்டுக்கே சென்று விடலாம்.”

“நான் சொல்கிறேன் என்று தப்பாக எடுத்துக்கொள்ளாதே கிருபா! இதுவரை நாம் செலவு செய்ததில் சிறியதாக ஒரு புது வீடே கட்டியிருக்கலாம். இனி வரும் தொகையை வைத்துப் புது வீடு கட்டத் திட்டம் போடு. அந்த வீட்டிற்கே பணத்தைக் கொட்ட வேண்டாம். வேறொருவர் வீட்டில் இருக்க மாட்டேன், இந்த வீட்டில் தான் இருப்பேன் என்று அத்தையும் பிடிவாதம் பிடிக்கிறார். இந்த வீட்டில் என்ன வசதி இருக்கிறது?”

கதிர் சொல்வதை அப்படியே ஏற்க முடியாது என்று தோன்ற, “அம்மாவுக்கு அந்த வீட்டின் மேல் பற்று அதிகம். திடீரென்று கடன் கொடுத்தவன் வீட்டை விட்டுப் போ எனும்போது, அம்மாவுக்கு வேறு எங்கும் செல்லப் பிரியமில்லை. அதனால் தான் தோட்டத்தில் இருக்கும் வீட்டுக்கே சென்று விடலாம் என்று வந்துவிட்டோம். வருத்தம்தான். ஆனால் நீங்கள் சொல்வதையும் யோசிக்கலாம். இங்கேயே வேறொரு வீடு கட்டலாம் தான். அம்மா அப்பாவிடம் பேசிவிட்டு முடிவெடுக்கலாம்.”

வீட்டின் நிலைமையைப் பேசிக்கொண்டிருந்துவிட்டு, கதிர் கிளம்பினான். வீட்டுக்குள் செல்ல மனம் இல்லாமல், மெதுவாக நடந்தபடியே, கதிர் சொன்னது பற்றி யோசித்தான். கிருபாகரனின் திருமண விஷயம். அவனுக்கு இப்போது அதைப் பற்றி யோசிக்க அவகாசம் இல்லை என்றாலும், அன்னைக்கு அவன் திருமணத்தை விரைவில் செய்துவிட வேண்டும் என்ற ஆசை.

அதற்கு முக்கியமான காரணம், தங்கவேலுவின் உடல் நிலை. தொழில் முடங்கியது, சொத்துக்கள் கைவிட்டுப் போனது, எல்லாவற்றுக்கும் மேல் கிருபாகரனின் ஓயாத உழைப்பு அவருக்குப் பெரும் கவலையாக மாறி சில உடல் உபாதைகளைத்

தந்தது. கீர்த்தியின் திருமணத்திற்குப் பிறகு அவருக்கு இதய அறுவை சிகிச்சை வேறு செய்தாயிற்று.

கிருபா இருந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தான். சுற்றிலும் விவசாய நிலம். அங்கங்கே சிறு வீடுகளும் கண் சிமிட்டும் மின்விளக்குகளும் தெரியத்தான் செய்தன. ஆனால் யாரும் அங்கே வசிப்பதில்லை. அவற்றில் பல வீடுகள் விவசாயம் செய்யத் தேவையானவை அல்லது விளைச்சலை அடுக்கி வைக்க ஒரு கட்டிடமாகவே பலர் பயன்படுத்தினர். ஒன்றிரண்டில் நிலங்களில் வேலை செய்பவர்கள் தங்குவார்கள். கிருபாகரனும் இப்போது இருக்கும் வீடு கூட சில வருடங்களுக்கு முன் அப்படித் தான் பயன்படுத்தி வந்தார்கள். அந்தத் தோட்ட வீடு அவன் தந்தை சிறு பிள்ளையாக இருக்கும்போது கட்டியது தான். ஆனால் பெரும்பாலும் அதைக் கிடங்காகவே பயன்படுத்தினார்கள். வெகுசில சமயங்களில் ஓரிரு இரவுகள் மட்டும் அங்கே தங்குவார்கள்.

அவர்கள் விளை நிலத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஊரில் தான் அவர்கள் வீடு இருந்தது. பெரிய வீடு. நான்கு தலைமுறையைப் பார்த்த வீடு. முறையான பராமரிப்பால் இன்றும் கம்பீரமாக நிற்கும் மச்சு வீடு. சிலமுறை திரைப்படங்களுக்காகக் கூடச் சில நாள் படம்பிடிக்க அனுமதி கேட்டார்கள். ஆனால் தங்கவேலுக்கு அதில் விருப்பம் இல்லை. யார் யாரோ வந்து வீட்டின் அமைப்பைக் காட்சியாக்குகிறேன் என்று வீட்டில் அலைவது அவருக்குப் பிடிக்கவில்லை. வசந்திக்கும் அப்படியே. இப்போது அந்த வீடு பூட்டி கிடக்கிறது. சரியாக வட்டி செலுத்தவில்லை என்று வந்து சீல் வைத்து சென்று விட்டார்கள் கடன் கொடுத்த வங்கியினர். அந்த வீடு மட்டும் இப்போது அவர்களிடமே இருந்திருந்தால், சில நாட்களாகச் சந்தித்த அவமானங்கள் எல்லாம் நேர்ந்திருக்காதோ!

– தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *