அதுக்கப்புறம்
கதையாசிரியர்: சு.அப்துல் கரீம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: July 11, 2026
பார்வையிட்டோர்: 168

மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முன் சிக்னல் சிவப்பில் நின்றிருந்தது.
வாகனங்கள் வரிசையாகக் காத்திருந்தன.
ஒரு இளைஞன் பைக்கில் அமர்ந்திருந்தான்.
கழுத்தில் தொங்கியிருந்த நிறுவன அடையாள அட்டையின் பட்டை மட்டும் வெளியே தெரிந்தது.
பைக்கின் டேங்க் மீது லேப்டாப் பை சாய்ந்திருந்தது.
அவனுக்குப் பக்கத்தில், பருத்தி சேலையும் முதுகில் துணிப்பையுமாக ஒரு நடுத்தர வயது பெண் ஸ்கூட்டியில் நின்றிருந்தாள்.
திடீரென்று அவள் மொபைலை உயர்த்தினாள்.
ஒரு படம் எடுத்தாள்.
திரையைப் பார்த்தாள்.
விரல்களால் பெரிதாக்கினாள்.
இன்னும் பெரிதாக்கினாள்.
மீண்டும் அதே திசையில் மொபைலை உயர்த்தினாள்.
அப்போதுதான் இளைஞன் அவளை கவனித்தான்.
அவன் பைக்கிலிருந்து இறங்கி இரண்டு அடிகள் முன்னே வந்தான்.
“எக்ஸ்க்யூஸ் மீ… ஏன் போட்டோ எடுக்கிறீங்க?”
அவள் திடுக்கிட்டுத் தலைநிமிர்ந்தாள்.
ஒரு நொடி அவனைப் பார்த்தாள்.
பிறகு சிரித்தாள்.
“உங்களை இல்லை.”
மொபைலை அவன் பக்கம் நீட்டினாள்.
திரையில் அவன் இல்லை.
அவன் ஹெல்மெட்டின் மேல் அமர்ந்திருந்த ஒரு நீல நிற பட்டாம்பூச்சி.
வெயிலில் அதன் இறக்கைகள் மின்னின.
அவன் சங்கடமாகச் சிரித்தான்.
“ஓ…”
அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்:
“இந்த மாதிரி சின்னப்பிள்ளைல பார்த்தது.
மறுபடியும் இப்பத்தான் பார்க்கிறேன்.”
அவள் ஒரு நொடி பட்டாம்பூச்சியையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
“எங்க ஊர்ல கண்மாய்க் கரையில இதுங்க நிறைய இருக்கும்…”
என்றவள் அவனை உற்றுப் பார்த்தாள்.
அவளுடைய புருவம் மெதுவாகச் சுருங்கியது.
“நீங்க… பரளி பக்கமா?”
அவன் திகைத்தான்.
“ஆமா…”
“உங்க அப்பா பேரு… சின்னசாமியா?”
“ஆமா… எப்படி கரெக்ட்டா…”
அவள் ஒரு நொடி பதில் சொல்லவில்லை. பார்வை அவன் முகத்திலேயே நின்றது.
“ஒரு நிமிஷம்…”
என்று சொல்லிவிட்டு கேலரியைத் திறந்தாள்.
ஒரு புகைப்படத்தின் மீது அவள் விரல் நின்றது.
அதை சில நொடிகள் பார்த்தாள்.
பிறகு திரையை அவன் பக்கம் திருப்பினாள்.
பழைய, மங்கிய புகைப்படம்.
ஒரு வயல்வெளி.
நடுவில் பத்து வயது சிறுமி.
அவள் வலது கையில் அதே வகையான நீல பட்டாம்பூச்சி.
சுற்றிலும் கிராமத்துக் குழந்தைகள்.
அவர்களுக்கிடையே ஒரு சட்டையில்லாத சிறுவன்.
பேருந்து நிலைய ஒலிபெருக்கியில் ஏதோ அறிவிப்பு ஒலித்தது.
அவன் புகைப்படத்தை உற்றுப் பார்த்தான்.
“இந்தப் பையன்…”
அவன் குரல் பாதியில் நின்றது.
“இது… நான்தானே?”
சிரிக்க முயன்றான்.
சிரிப்பு வரவில்லை.
அவள் அவனையும் புகைப்படத்தையும் மாறி மாறிப் பார்த்தாள்.
பிறகு மெதுவாக விரலை அந்தச் சிறுவனின் முகத்தில் வைத்தாள்.
“ஆமா…”
“இந்த இரண்டு மச்சம்…”
“இடது கண்ணுக்குக் கீழே…”
அவன் தன்னிச்சையாகத் தன் கன்னத்தைத் தொட்டான்.
அவள் புன்னகைத்தாள்.
“வீரபாண்டி…”
அவள் தனது வலது புருவத்தைத் தொட்டாள் — பழைய பழக்கம்போல.
புருவத்தின் நடுவே மெலிதான ஒரு தழும்பு.
அப்போதுதான் அவன் கவனித்தான்.
அவளுடைய வலது கண், இடது கண்ணைவிடச் சற்றுக் குறுகியிருந்தது.
அவன் அந்தத் தழும்பைப் பார்த்தான்.
“இது ஞாபகம் இருக்கா?”
அவன் தலையசைத்தான்.
“இல்ல.”
“சொட்டாங்கல்லு விளையாடறப்ப ஒரு கல்லைத் தூக்கி எரிஞ்சிட்டே…”
“அது இங்க வந்து பட்டு…”
அவள் புருவத்தை மீண்டும் தொட்டாள்.
வலது கண் லேசாகச் சுருங்கியது.
“ரத்தம் வந்துடிடுச்சு.”
“அதுக்கப்புறம் நம்ம அம்மாக்கள் சண்டை.”
“அப்புறம் அப்பாக்கள்.”
“அப்புறம் உங்காளுங்களுக்கும் எங்காளுங்களுக்கும்…”
…
“கடைசில போலீஸ் வரைக்கும் போயிடுச்சு.”
…
“ஒரு சொட்டாங்கல்லுக்காக ஊரே ரெண்டாயிடுச்சு…”
அவள் சிரித்தாள்.
“அடுத்த மாசமே நாங்க மதுரைக்கு வந்துட்டோம். அதுக்கப்புறம் அந்தப் பக்கமே தலைவச்சுப் படுக்கல.”
அவன் மறுபடியும் புகைப்படத்தைப் பார்த்தான். அதிலிருந்த எல்லோரும் அந்நியர்களாகத் தெரிந்தார்கள். அந்தச் சிறுவனையும் சேர்த்து.
சிக்னலில் ஆரஞ்சு விளக்கு மினுக்கத் தொடங்கியது.
பின்னால் ஹாரன்கள் அதிகரித்தன.
“எனக்கு… எதுவுமே ஞாபகத்துல இல்ல.” என்றான் அவன் மெதுவாக.
அவள் சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.
மொபைல் திரையில் அந்த வயல்வெளி உறைந்தபடியே இருந்தது. மொபைலை வாங்கிக்கொண்டாள்.
“பரவாயில்ல…”
ஒரு நொடி நின்றாள்.
“உனக்கு அந்த சொட்டாங்கல்லு கூட ஞாபகத்துல இல்ல…”
“ஆனா எங்களுக்கு…”
அவள் சிரித்தாள்.
அந்தச் சிரிப்பு முகத்தில் முழுவதும் வரவில்லை.
“அதுக்கப்புறம் நடந்ததுதான் ஞாபகம்.”
பின்னால் ஒரு பேருந்து நீண்ட ஹாரன் அடித்தது.
![]() |
சு.அப்துல் கரீம் (மே 1979) மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் கணிதம் படித்து, பின்னர் கணினி பயன்பாடுகளில் முதுநிலை பெற்றார். தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் மென்பொருள் நிபுணராகப் பணியாற்றி வருகிறார். தொழில், வாசிப்பு, எழுத்து என அனைத்தையும் ஒருங்கே இணைத்து மதுரையில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். சிறுவயதிலிருந்தே புத்தக வாசிப்பில் ஆர்வம் கொண்ட இவருக்கு, அந்த வாசிப்பு தமிழின் மீதான காதலாகவும், பின்னர் எழுத்தின் மீதான…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அம்மான்
எஸ்.மதுரகவி
July 11, 2026
வறுமையில் பூத்த மலர்
பிரியதர்ஷினி மாதவன்
July 11, 2026
