அம்மான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 11, 2026
பார்வையிட்டோர்: 97 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

1940 ஆம் ஆண்டு. ஐப்பசி மாதம் . திங்கட் கிழமை. பிற்பகல் வேளை . மழை அடாத மழையாக விடாமல் பொழிந்து கொண்டிருந்தது. பகற் பொழுதே இரவுப் பொழுது போல் இருண்டு இருந்தது. உளுந்தூர்ப்பேட்டையிலிருந்து அனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பெரிய வில் வண்டி , மைய சாலையில் அரசூர் அருகே ஒரு பெரிய சத்திரத்தின் வாசலில் நின்றது. அந்த வில் வண்டியிலிருந்து அனந்தபுரம் ஜமீன்தாரின் மகள் அழகான , எளிய நீல நிற சேலையும் முழுக் கை சோளியும் அணிந்து இருந்த இளம்பெண் வசுதா இறங்கினாள். . அவளைத் தொடரந்து வண்டியிலிருந்து இறங்கிய , பளிச்சென்று துடைத்து வைத்த குத்து விளக்கு போல் இருந்த சிவப்பு பாவாடை தாவணி அணிந்திருந்த பதின்பருவ பணிப் பெண் சொர்ணம் , தன்னுடைய எஜமானிக்காக குடையை விரித்தாள்.

அடை மழை நின்றபாடில்லை. சத்திரத்தின் இரண்டு பக்க திண்ணைகளிலும் ஆடவரும் மகளிருமாக மழைக்கு ஒதுங்கியவர்களின் கண்கள் எல்லாம் வசுதாவைப் பார்த்தன. உள்ளிருந்து வேட்டி உடுத்தி , அங்கவஸ்திரத்தால் மேல் உடலைப் போர்த்திக் கொண்டிருந்த ஒல்லியான , உயரமான நபரான அந்த சத்திரத்தின் காரியஸ்தர் கந்தசாமி , வசுதாவை வரவேற்றார். இரண்டு பெண்மணிகளையும் உள்ளே அழைத்துச் சென்று அவர்கள் இளைப்பாற ஓர் அறையை ஒதுக்கித் தந்தார். அவர்கள் அந்த அறைக்குள் சென்றனர். அந்த அறையில் ஒளி தருவதற்கான நான்கு மூலைகளிலும் லாந்தர் விளக்குகள் வைக்கப்பட்டிருந்தன. சொர்ணம் , வசுதா அமர்வதற்காக அங்கிருந்த பாயை விரித்தாள். வசுதா பாயில் அமர்ந்தாள். சொர்ணம் , அவள் அருகே புத்தகங்கள் அடங்கிய பையை வைத்தாள். கூஜாவிலிருந்து வெந்நீரை குவளையில் ஊற்றி வசுதாவிடம் கொடுத்தாள். வசுதா அதனைப் பருகிக் கொண்டிருக்கும் போது சத்திரத்தின் காரியஸ்தர் கந்தசாமி வந்து நின்றார்.

“ஜமீன்தார் அம்மா அவர்களே…” என்று இழுத்தார்.

வசுதா, “சொல்லுங்கள் ஐயா..” என்றாள்.

கந்தசாமி, தயக்கத்துடன் “நமது ஜமீன் வண்டியைப் பார்த்த போலீஸ் அதிகாரி கார்மேகம் தங்களைச் சந்திக்க விரும்புகிறார். வாசலில் நிற்கிறார். தாங்கள் பேட்டி தர இயலுமா…?“

வசுதா புன்னகை பூத்தாள்.

“நமது ஜமீனை விட ஜமீன் வண்டிக்கு கீர்த்தி அதிகம் போலும் . ராஜாங்க அதிகாரியைப் பார்க்க முடியாது என்று சொல்ல முடியுமா? சந்திக்கத் தயாராக இருக்கிறேன்” என்றாள் வசுதா. கந்தசாமி, சத்திரத்தின் வாசலை நோக்கிச் சென்றார்.

சில நிமிடங்களில் ஆஜானுபாகுவான , பெரிய மீசை முகம் கொண்ட சீருடை அணியாமல் பேண்ட் சட்டை அணிந்த காவல் அதிகாரி கார்மேகம் அந்த அறையின் கதவு அருகே வந்து நின்றார்.

“வாருங்கள் ஐயா நமஸ்காரம் ” என்றாள் வசுதா.

சொர்ணம் , மற்றொரு அறையிலிருந்து இரண்டு சிறிய நாற்காலிகளை எடுத்து வந்து அந்த அறையில் வைத்தாள். கார்மேகம் அமர்ந்ததும் வசுதா அமர்ந்தாள்.

“பயணத்தின் நடுவே தாங்கள் இளைப்பாறும் தருணத்தில் தங்களை தொந்தரவு செய்வதற்கு மன்னிக்க வேண்டும்”

“அடியாளிடம் ஏதேனும் விசாரிக்க வேண்டி இருக்கும் அதனால்தானே என்னை நாடி வந்துள்ளீர்கள் ஐயா…”

“ஆமாம் ஜமீன் ராணி சரியாக கணித்து விட்டீர்கள்… எங்கே இருந்து வருகிறீர்கள்…”

“உளுந்தூர்ப்பேட்டை அருகில் வெங்கடேசபுரத்து ஜமீன்தார் புத்திரி திருமணத்தில் கலந்து கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தோம். மழை விடாமல் பொழிந்து கொண்டிருக்கவே மழைக்கு இங்கு ஒதுங்கினோம்…”

“தாங்கள் தான் ஜமீனை பார்த்து வருகிறீர்களா?“

“செஞ்சி அருகில் உள்ள அனந்தபுரம் ஜமீன் எங்களுடையது. புருஷோத்தம பூபதி மகாலட்சுமி தம்பதியான எங்கள் பெற்றோருக்கு நான் ஒரே வாரிசு. அவர்களுக்கு புருஷ குழந்தை இல்லை அதாவது ஆண் பிள்ளை இல்லை . அவர்கள் மறைவுக்குப் பின் பட்டினத்தில் இருக்கும் என் சிற்றப்பா விஜயகுமார் பூபதி வழிகாட்டுதலிலும் திவான் பொன்னுரங்க முதலியார் துணையுடன் அடியாள் ஜமீனை பார்த்துக் கொண்டு வருகிறேன். இதோ இந்த சொர்ணம் போன்ற விசுவாசமானவர்கள் என் உடன் இருக்கிறார்கள்”

நின்று கொண்டிருந்த சொர்ணம் புன்னகை பூத்து தலை கவிழ்ந்தாள்.

“தங்கள் இடத்திற்கே வந்து பேசி இருக்க வேண்டும். வழியில் பார்த்து பேசுவது எனக்கே சங்கடமாக தான் இருக்கிறது.“

“அதனால் பராவாயில்லை . எங்கள் பகுதிக்கு வந்திருந்தால் எங்கள் பெருமாள் சிங்கவரம் அரங்கநாதரை நீங்கள் தரிசித்திருக்கலாம். தேசிங்கு ராஜா வழிபட்ட பெருமாள் இவர்”

“பாலகோபாலன் உங்களுடைய உறவினரா?“

“அவரைப் பற்றி சொல்லவில்லையே … அவர்தான் அடியாளின் வாழ்வில் முக்கியமான நபர் … எனக்கு நல்லது தீயது கற்றுக் கொடுத்து ஆளாக்கியவர் . அவர் என்னுடைய அம்மான்…. அதாவது தாய்மாமன் பட்டினத்தில் இருந்து சிறுவர் விரும்பும் கரும்பு என்று சிறுவர் பத்திரிகை நடத்தி வருகிறார்.“

“அப்படியா… போலீசிடம் உள்ள மிகவும் தீவிரமான சுயராஜ்ய கிளர்ச்சியாளர்கள் பட்டியலில் அவருடைய பெயர் உள்ளது. அவருடைய பத்திரிகைக்கு நீங்கள் உங்கள் ஜமீனிலிருந்து பண உதவி செய்கிறீர்களா?“

“குழந்தை பத்திரிகை நடத்துபவர் அவர். சுயராஜ்ய பத்திரிகை நடத்தவில்லையே என்னிடம் நிதி கேட்கும் நிலையில் எங்கள் மாமா இல்லை”

“எந்த பத்திரிகையும் அவர்களுக்கு ஆயுதம் என்பது அனைவரும் அறிந்தது தான். அது ஒரு புறம் இருக்கட்டும்”

“தங்கள் உள்ளக்கிடக்கையைக் கூறி விடுங்கள் . அதற்காகத்தானே நமது சந்திப்பு…”

“ஆமாம் அதாவது …. செங்கல்பட்டு அருகில் உள்ள விஜயபுரி இளைய ஜமீன்தாருக்கு தங்களைப் பெண் கேட்டு தங்கள் சித்தப்பா மூலம் பேசி இருக்கிறார்கள் . உடன்பாடு எட்டப்படவில்லையாமே …. நீங்கள் இளைய ஜமீன் ராஜசேகரனை திருமணம் செய்து கொண்டால் உங்கள் ஜமீனையும் அவர்கள் குடும்பம் நிர்வகித்துக் கொள்ளப் போகிறது. நீங்கள் உங்களுடன் இருக்க கூடிய மாப்பிள்ளையை கேட்கிறீர்களாமே யார் வருவார்கள் அப்படி?… நீங்கள் என்ன பிரிட்டிஷ் ராணியா என்ன?“

“ நம் நாடு உட்பட பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தின் ராணியுடன் நான் என்னை ஒப்பிட்டுக் கொள்வேனா என்ன ? பிறந்த இடத்தை கட்டிக் காக்க அந்த இடத்திலேயே இருந்த பெண் ராணிகள் பலர் நம் நாட்டில் இருந்திருக்கிறார்கள் அவகாசம் கிட்டும் போது சரித்திர புத்தகங்களை வாசித்துப் பாருங்கள் . இது பற்றி எல்லாம் தாங்கள் பிரஸ்தாபிக்கும் போது போலீஸ் பணியில் கல்யாண தரகு பணியும் அடக்கமோ என்று தோன்றுகிறதே … “

“என்னைப் பற்றி ஏளனப் பேச்சு வேண்டாம். உங்கள் மனம் போல் உங்கள் ஜமீனில் உங்களோடு இருந்து கூஜா தூக்கும் இணை கிடைக்க மாட்டான் மனப் பால் குடிக்காதீர்கள். விஜயபுரி இளைய ஜமீனை மணக்க சம்மதிப்பது தான் உங்களுக்கு நல்லது. எச்சரிக்கையாகவே சொல்கிறேன். உங்கள் மாமா மீது வழக்கு பதியப்படவில்லை . நீங்கள் இந்த சம்பந்தத்திற்கு ஒத்துழைக்கா விட்டால் உங்கள் மாமா , சிற்றப்பா எல்லாரும் இன்னல்களுக்கு உள்ளாவர்கள்… உங்களுக்கும்…”

வசுதாவின் முகம் மாறியது.

“மிரட்டி என்னை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து விட முடியமா ? துன்பங்களைக் கண்டு என் மாமனும் சிற்றப்பாவும் கலங்க மாட்டார்கள் . நானும் கலங்க மாட்டேன். என் பிறந்த இடமான ஜமீனில் தான் நான் இருப்பேன். சீதனமாக என் ஜமீன் இன்னொருவரிடம் சேருமளவுக்கு நான் பார்த்துக் கொண்டும் இருக்க மாட்டேன். தங்கள் அறிவுரைக்கு நன்றி நம்முடைய சம்பாஷணையை முடித்துக் கொள்வோம்.“ வசுதா எழுந்து நின்றாள்.

“இது தான் இறுதி முடிவா ? யோசித்துக் கொள்ளுங்கள் … பிறகு வருந்த நேரிடும்”

“ஐயா நான் நம்முடைய சம்பாஷணை முடிந்து விட்டது என்று பேசினேன் என்று நினைக்கிறேன்…“

கார்மேகம் எழுந்து நின்றார். அறையிலிருந்து வெளியேறி வேகமாக சத்திரத்தின் வாசலை நோக்கிச் சென்றார்.

வசுதா அறையின் ஜன்னலைத் திறந்து பார்த்தாள். மழையின் சாரல் அறையை நனைத்தது.

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *